விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2016/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"உலகத்தமிழ்", டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎ எழுதிய பயண நூல். பாரிசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குத் தமிழக அரசின் பிரதிநிதியாகச் சென்று வந்த சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள், தமது பயண அனுபவங்களையும் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் தமது எண்ணவோட்டங்களுடன் கலந்து சுவையாக அளித்துள்ளார்.

1. விண்ணிலே தமிழ்

வெரெஸ்டைப் பிடித்தேன்; கனவிலல்ல; உண்மையாகவே! சிரிக்காதீர்கள். பம்பாயில் எவரெஸ்டைப் பிடித்தேன். நான் பிடித்தது, இமாலயச் சிகரத்தையன்று எவெரெஸ்ட் ஒட்டலையும் அன்று; ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான விமானம் ஒன்றின் பெயர் தான் எவெரெஸ்ட். அதைப் பிடித்துப் பாரிசிற்குப் புறப்பட்டேன்-மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளத்தான்.

அவ்வானவூர்தி குறிப்பிட்ட நேரத்தில் பம்பாயை விட்டுப் புறப்பட்டது. நம்மாலும் குறித்த நேரப்படி செயலாற்ற முடியுமென்பதை அது காட்டிற்று. திருப்தி யோடும் மகிழ்ச்சியோடும் வானிலே பறந்தேன்.

வானவூர்திக்குள் நுழைந்ததும், "வாங்க, இலண்டன் வருகிறீர்களா?" என்று தமிழிலே வரவேற்றார் விமானத் தொண்டர் ஒருவர். "இப்போது பிராங்போர்ட் வரை; அங்கிருந்து ஜினிவா; பின்னர் பாரிசு; அப்புறம் இலண்டன் வழியாகச் சென்னை" என்று பதில் கூறினேன். எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டினார்.

மண்ணிலும் விண்ணிலும் தேன் தமிழ் ஒலிக்கக் கேட்ட மகிழ்ச்சியோடு இடத்தில் அமர்ந்தேன். இவரைப் போன்று ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் புதுப்புதுப் பணிகளிலே - இக்காலப் பணிகளிலே - நுழைந்து, பண்ணுடைத் தமிழைப் பாரெல்லாம் ஒலிக்கும் நாள் எந்நாளோ? அந் நாள் விரைவதாக!’ என்ற உளத்தால் வழுத்தினேன்.

பறந்துகொண்டிருக்கையில் அந்தத் தமிழ் இளைஞர் என்னிடம் வந்து புன்முறுவலோடு நின்றார். "தங்களைக் கல்வி இயக்குநராகவே அறிவேன். புரசை புனித பால் உயர்நிலைப்பள்ளியில நான் படித்தபோதே தங்களைத் தெரியும். தங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று அன்போடு கேட்டார். இயக்குநரை நினைக்கிறவர்களும் உள்ளார்களே என்று உணர்ந்து மகிழ்ந்தேன். அந்த இளைஞர் பெயர் திருமலை. புரசைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொண்டேன்.

ஊர்தி வானத்தை எட்டியதும், பழச்சாறு வழங்கப்பட்டது. அதைச் சுவைத்துக் குடித்து முடித்ததும், காலைச் சிற்றுண்டி பரிமாறத் தொடங்கினர். சிற்றுண்டி பேருண்டியாகவே இருந்தது. முதலில் பலவகைப் பழக் கலவை; அடுத்து 'சிரயல்ஸ்'- அதாவது, பாலில் ஊற வைத்து உண்ணும் சோளப்பொரி, பிறகு பூரியும் கொண்டைக்கடலைக் கறியும்;

(மேலும் படிக்க...)