விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஆகத்து 2018/21
"நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகள்", எம்கே.ஈ. மவ்லானா, முல்லை முத்தையா அவர்கள் இணைந்து எழுதியது. நபி நாயகத்தின் வரலாற்றை பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்நூலை இயற்றியுள்ள திரு. முல்லை முத்தையா அவர்களும், ஜனாப் எம் கே. ஈ. மவ்லானா அவர்களும் வரலாற்றை வேறு புதிய கோணத்திலிருந்து ஆய்ந்துள்ளார்கள். காலக் கண்ணாடியின் அடிப்படையில் வரலாற்றைக் கூறாமல் மாநபி அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு, அவற்றால் மனிதன் பெற வேண்டிய நற்பண்புகள் யாவை, படிப்பினைகள் எவை என்ற அகன்ற அடிப்படையில் ஆய்ந்து இந்நூலை இணைந்து இயற்றியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பொதுவாக தமிழ் நல்லுலகினர் அனைவரும் படித்து இன்புறுவதற்காகவே இந்நூலை புதிய முறையில் எழுதியுள்ளார்கள்.
திரு. முல்லை முத்தையா அவர்கள் தமிழ் நூல்களின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் தம் வாழ்நாட்களை அர்ப்பணித்தவர்கள்; சிறந்த தமிழ் வல்லுநர்; வாழ்க்கைச் சுமைகளிடையே மதிப்பு பொறுப்பு தாங்கொணாத நஷ்டங்களைச் சுமத்திய நிலையில் நபிகள் நாயகத்தின் வரலாற்றை ஆய்ந்து மனம் உருகி, மனம் ஒன்றி, இந்நூலை இயற்றியுள்ளார்கள். தமிழ்த் தென்றல் போல, சுவையான செய்திகளைப் பசுமையாகவே தரத்தக்க ஆற்றல் படைத்த “பசுங்கதிர்" ஆசிரியர், கலாநிதி ஞானக் கவிச்சித்தர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களை இஸ்லாமிய உலகும், பத்திரிகை உலகும் நன்கு அறியும். நல்ல தமிழ் எழுத்தாற்றல் படைத்தவர்கள்; பல நூல்களை எழுதியவர்கள்; அவர்களும் இணைந்து இந்நூலை எழுதியுள்ளார்கள். பெருமானார் அவர்களின் குழந்தைப் பருவம் பாட்டனார் முத்தலிப் அவர்களின் ஆதரிப்பில் இருந்தது. அப்துல் முத்தலிப் அவர்களின் உடல் முதுமையால் நலிந்து, தளர்ந்தது. தாம் உயிரோடிருக்கும் பொழுதே, குழந்தையைத் தக்க பாதுகாப்பில் விட்டுவிடக் கருதினார். அதற்காக தம்முடைய புதல்வர்களை அழைத்து ஆலோசித்தார். அப்பொழுது, முதலாவதாக அபூலஹப், அக்குழந்தையின் பராமரிப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். “நீயோ பணக்காரன், கடின உள்ளம் உடையவன்; தாய் தந்தையற்ற இக்குழந்தையை மகிழ்வோடு வளர்க்க உன்னால் இயலாது” என்று கூறிவிட்டார் அப்துல் முத்தலிப். ஹல்ரத் அப்பாஸ் தாம் வளர்ப்பதாகக் கூறினார். “உனக்குக் குழந்தைகள் அதிகம். அவற்றோடு இக்குழந்தையை எவ்வாறு ஆதரிக்க இயலும்?” என்று கூறிவிட்டார். இறுதியாக, அபூதாலிப் அவர்கள்,” நான் பணக்காரன் அல்லன் எனினும் இக்குழந்தையை வளர்க்கும் நற்காரியத்துக்கு நான் தகுதியானவன் என்று நீங்கள் கருதினால், நான் மனப்பூர்வமாக அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என மிகப் பணிவோடு வேண்டிக்கொண்டார். அதைக்கேட்டதும்,” இதற்கு நீ பொருத்தமானவன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆயினும் அந்தக்குழந்தையே அதைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறி, பெருமானார் அவர்களை அருகில் அழைத்து, “அருமைக்கண்மணியே! எனக்கோ வயதாகிவிட்டது. உடலும் தளர்ந்துவிட்டது. இனி அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டேன். ஆகவே, நம் குடும்பத்தவர்களான, இவர்கள் உம்மைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராயிருக்கின்றனர். இவர்களில் எவருடன் இருக்க நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார் முதியவர். புன்சிரிப்புத் தவழ, அபூதாலிப் அவர்கள் மடியில் போய் உட்கார்ந்தார்கள் பெருமானார்: உடனே அப்துல் முத்தலிப் கண்களில் நீர் தளும்ப, தம் மகனை நோக்கி,” அபூதாலிபே தாய் தந்தையற்ற இக்குழந்தைக்குப் பெற்றோரின் அன்பும், பாசமும் இன்னது என்று தெரியாது. ஆகையால், இக்குழந்தையை, ஒரு குறையும் இன்றி, மகிழ்வோடு வளர்த்து வருவாயாக!” என்றார். அதன்பின் சில நாட்களில் அப்துல் முத்தலிப் மனஅமைதியோடு காலமானார்கள். |