விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஆகஸ்டு 2016/18
Jump to navigation
Jump to search
![]() சீவகனின் தந்தை சச்சந்தன் ஆவான்; அவன் ஆண்ட நாடு ஏமாங்கத நாடு ஆகும்; தென்னையும், கமுகும், மாவும், பலாவும், வாழையும் செழித்து வளர்ந்தன. வானம் பொய்க்காததால் தான தருமங்கள் சிறந்து ஓங்கின. கல்வி கற்ற சான்றோர்கள் நாட்டுக்கு அறிவொளி பரப்பினர். செல்வம் ஈட்டிய வணிகர்கள் தாம் ஈட்டிய செல்வத்தைப் பகுத்து அறம் வளர்த்தனர். கலைகளில் வல்ல காரிகையர் ஆடலும் பாடலும் நிகழ்த்தி மக்களை இன்பமுறச் செய்தனர். உழவர்கள் கள்ளுண்டு களித்துப் பள்ளுப் பாட்டுப் பாடி மகிழ்ந்தனர். நெல்லை மேய வந்த புள்ளினத்தை ஒட்டுவதற்கு அவர்கள கல்லைத் தேடவில்லை; காதில் அணிந்திருந்த குழையைக் கழற்றி அவற்றின் மீது வீசினர் என்றால் அவர்கள் செல்வச் சிறப்புக்கு இதைவிட வேறு ஒர் எடுத்துக்காட்டுத் தர இயலாது. |