விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஏப்ரல் 2018/02
"எனது நாடக வாழ்க்கை", அவ்வை தி. க. சண்முகம் அவர்கள் எழுதிய தன்வரலாறு நூலாகும்.
1918 முதல் 1972 வரை நாடகத்துறைக்கே வாழ்வைக் காணிக்கையாக்கிய ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பு இது. நான் அறிந்த வரையில் இப்படி ஒரு விரிவான நாடகக் கலைஞனின் குறிப்பு இந்திய மொழிகள் எதிலுமே வந்ததாகத் தெரியவில்லை. புதிய முயற்சி இது. கலைஞனின் கன்னி முயற்சி! ஆசிரியர் திரு பி. எஸ். செட்டியார் அவர்கள் நடத்தி வந்த ‘சினிமா உலகம்’ ஆண்டு மலரில் 1942இல் எங்கள் வாழ்க்கைக் குறிப்பினைச் சுருக்கமாக எழுதினேன், இரண்டாவதாக, என் அருமை நண்பர் திரு பி. மகாலிங்கம் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து வெளியிட்ட ‘தேவி’ என்னும் திங்கள் இதழில் 1943இல் ‘எங்கள் நாடக வாழ்க்கை’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாக எழுதினேன். அதன் பிறகு சகோதரர் கவி. கா. மு. ஷெரீப் அவர்கள் சென்னையிலிருந்து வெளியிட்ட ‘சாட்டை’ வார இதழில் 8-11-59 முதல் 26-3-61 வரை தொடர்ச்சியாக, ‘என் நாடக வாழ்க்கை’ யை மேலும் சற்று விரிவாக வரைந்தேன். எனவே அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போது வெளியிடப் பெற்றுள்ள எனது நாடக வாழ்க்கை அவற்றைவிட விரிவாகவும் தெளிவாகவும் சரியான தேதிக் குறிப்புக்களோடும் தீட்டப் பெற்றிருப்பதாகக் கருதுகிறேன். எனது 54 ஆண்டுகால நாடக வாழ்க்கையில், 30ஆண்டு வாழ்க்கையினைப் பற்றி எனக்கு நினைவிருந்த வரையில் இதில் சொல்ல முயன்றிருக்கிறேன். இன்னும் 24ஆண்டுகால வாழ்வினை இதன் தொடர்பாக வெளிவரும் எனது நாடக வாழ்க்கை இரண்டாவது பாகத்தில் சொல்வேன். ‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடகக்காரரானார்’ என்று நாடகக் கலைஞர்களைப்பற்றி மக்கள் இழித்துரைத்த காலம். கூத்தாடிகள், குடிகாரர்கள் இவை போன்ற பெயர்கள் நாடகக்காரர்களுக்கு அடைமொழிகளாயிருந்து வந்தன. நாடகக்காரன் என்றால் குடியிருக்க வீடும் கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு நல்ல பெயர் நடிகனுக்கு. இளம் பெண்களைக் கடத்திச் சென்று விடுவான் என்று மக்கள் பயப்பட்டார்கள். இந்தப் பயத்தில் ஒரளவு உண்மையும் இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகம் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். நாடகம் பார்த்த இளைனார்கள் அதை நாலு பேருக்கு நடுவில் சொல்லிக்கொள்ள வெட்கப்படுவார்கள். நாடகக் கொட்டகைக்கு எதிரிலேயே ஒரு கள்ளுக் கடையும் இருக்கும். ஆம்; இயல், இசை, நாடகம் என்று தமிழ்மொழியை மூன்றாக வகுத்த நாட்டிலேதான் இந்தக் கேவலநிலை. நாடகத்திற் கென்று தனித்தமிழ் கண்ட நம் நாட்டில், நாடகத்துறை இவ்வாறு அவல நிலையில் இருந்த சமயத்தில் தான் நான் நாடக உலகில் நுழைய நேர்ந்தது. தாயும் தந்தையும் என் தந்தையார் திரு டி. எஸ். கண்ணாசாமிப்பிள்ளை; தாயார் திருமதி சீதையம்மாள். தந்தையாரும் ஒரு நடிகர். பெண் வேடம் தரித்து நடிப்பதில் பிரசித்தி பெற்றவர். அக்காலத்தில் பிரபலமாய் விளங்கிய வள்ளி வைத்தியநாதையர், அல்லி பரமேசுவரய்யர் ஆகியோர் நடத்தி வந்த கம்பெனிகளில் என் தந்தையார் நீண்டகாலம் பணி புரிந்திருக்கிறார். |