விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/செப்டம்பர் 2016/16
"தந்தை பெரியார்", கே. பி. நீலமணி எழுதிய வாழ்க்கை வரலாறு. இது என்ன வரலாற்று உரைநடையா?-ஐயம் வரும்! தென்றல் தவழ்கிறது. தேனருவி வீழ்கிறது. புரட்சிப் புயல் வீச்சும் உண்டு. சின்னஞ்சிறு தொடர். சிங்காரச் சொல்லமைப்பு - செவிக்கு விருந்தாய் தேனிசை போல் உவமைகள்- உருவகங்கள். எழுத்து மன்னன் "நீலமணி" பிடில் வாசித்துப் பழகியவர் என்பது படிக்கும் போதெல்லாம் பலமுறை உணர்ந்தேன். எழுத்தில் ஏற்றம், எண்ணக் குவியல். சிந்தனைச் சிகரங்கள் - இப்படிப் பலப்பல.
அன்பார்ந்த குழந்தைகளே... மாணவ மணிகளே... நீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது. சமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்த்து நின்று; அறிவுப்பூர்வமாகப் போராடிய தந்தை பெரியார் ஓர் பகுத்தறிவுப் பூங்காவாகவே திகழ்ந்தார். அவரது ஒப்பற்ற அறிவுப் பூங்காவில் பூத்த புரட்சிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றிலும், முட்களின் இரக்கமற்ற கீறலைக் காணலாம். தாழ்த்தப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர் தந்தை பெரியார். சாதி, மதம், இனம், மொழி இவற்றின் பேரால், தமிழனை உயர் சாதியினர் இனம் பிரித்தனர். தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஆதி திராவிடர்களைத் தங்கள் அடிமைகள் போல் எண்ணி நடத்தினர். உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த தமிழனரின் நடமாட்டத்திற்குத் தடை விதித்தனர். காலில் செருப்புடனோ, தோளில் துண்டுடனோ, உயர் வகுப்பினர் எதிரில் செல்வதும்; நின்று பேசுவதும் குற்றமாகக் கருதப்பட்டது. மண்ணில் மட்டுமல்ல - நீரிலும் தமிழனுக்கு முழுச் சுதந்திரமில்லை. இயற்கை வழங்கிய, ஆறு, குளம், ஏரி, கிணறு போன்ற நீர்த் தேக்கங்களிலும், தமிழனுக்கென்று தனியாக துறைகள் ஒதுக்கப்பட்டு, விலக்கி வைக்கப் பட்டிருந்தனர். |