விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஜனவரி 2017/22
"மனத்தின் தோற்றம்", பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய இந்நூல் பதினாறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இவற்றுள், முதல் கட்டுரையாகிய ‘மனத்தின் தோற்றம்’ என்பதே நூலுக்குப் பெயராகச் சூட்டப் பெற்றுள்ளது.
சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்டுரைகளை அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது. இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும். கதையல்லாத ஆய்வுச் செய்திகளைப் படிப்பதால், பல்வேறு செய்திகளைப் பற்றி அறிந்து பயன்பெறும் வளமான வாய்ப்பு பெறப்படும். இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 1. மனத்தின் தோற்றம் உயிரின் தோற்றம் போலவே மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி அகங்காரம், சித்தம், என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner Seat of thought, feeling and volition consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப் பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒரு வகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஒர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்க செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஒர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். |