விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/நவம்பர் 2016/08
![]() தாம் கண்டுபிடித்தவைகளை உலகுக்குக் கொடைகளாக வழங்கிவிட்டு மற்ற விஞ்ஞானிகள் மறைந்தார்கள்! ஆனால், நமது நாயுடுதான் தனது கண்டுபிடிப்புகளை, தனது உயிர்வாழ் காலத்திலேயே இயக்கி, மக்களையும் - அதன் மூலமாக வாழவும் வைத்தார். அதற்கு அவர் நிறுவிய பல்துறை தொழிற்சாலைகளே சான்றுகளாகும்.
தென்னை மரத்தில் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தேங்காயை நாம் பார்த்திருக்கிறோம். அதே காய்கள் அங்காடிகளிலே விற்பனையாகும் போதும் நாம் அதனதன் அளவையும் அடிக்கடி கண்டிருக்கிறோம். பத்து தேங்காய் உருவம் அத்தகைய தேங்காய்களைப் போல பத்து தேங்காய்களை ஒன்று சேர்த்து ஒரே காயாக்கினால் எந்த அளவிற்கு அதன் அளவில் அது பெரியதாக இருக்குமோ, அப்படிப்பட்ட அளவில் ஒரு தேங்காயை நீங்கள் தென்னை மரத்தில் இன்றுவரைப் பார்த்திருக்கிறீர்களா? இத்தகைய ஒரு பெரிய தேங்காயை நான் பார்த்திருக்கிறேன். நான் மட்டும் பார்க்கவில்லை. கோவை நகருக்குச் சுற்றுலா வரும் பொது மக்களும், நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும் அந்தக் காய்களைக் கண்டு வியந்து போய் விட்டோம்! கோவையில் எங்கே பார்த்திருக்கிறீர்கள் இந்த அதிசய, அற்புதத் தேங்காயை? என்று கேட்கிறீர்களா? கோவை நகரில், காலம் சென்ற தொழிலியல் விஞ்ஞானி யான industrial Scientist மேதை ஜி.டி. நாயுடுவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் பிரசிடென்சி ஹால் (Presidency Hall) எனப்படும் திரு. ஜி.டி. நாயுடுவினுடைய அறிவியல் பொருட்காட்சி அரங்கில் நாங்கள் அந்தத் தேங்காயின் புகைப் படத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டோம்.
|