விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-03-15
"இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை" ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
அவர்கள் வார்த்தைகளில் "பெண்ணின் சமுதாய வரலாறு கணிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தவறில்லை. காலம் காலமாக மனிதகுலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களும், வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப்பிறவி என்று ஒப்பி அவளையும் முன்னிறுத்தியே சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன. இந்நாள், இருபத்தொன்றாம் நூற்றாண்டை நாம் எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், பெண் தன் இருப்புக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் கருப்பையிலேயே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இது உண்மை. ஏன் இப்படி? ஆண்-பெண் இருவருமே இவ்வுலகுக்கு இன்றியமை யாதவர்கள். ஒருவரின்றி மற்றவர் தனித்து வாழ முடியாது. அவ்வாறிருக்கையில் பெண்ணுக்கு மனிதப்பிறவிக்குரிய மதிப்புக்களே ஏன் அளிக்கப்பட்டிருக்கவில்லை? மண், பொன் போல், பெண்ணும் அவனுக்கு ஒரு சாதனம். உழைப்புச் சாதனம்; வாரிசு தரும் சாதனம். எட்டும் அறிவினில் ஆற்றலில் ஆணுக்கிங்கே இளைத்தவர்களில்லை என்று நிரூபணமான பின்னரும் அவள் வெறும் சாதனமாகவே கழிக்கப்படுவதற்கும். அழிக்கப்படுவதற்கும் உரியவளாகவே இருக்கிறாளே? இது ஒரு தருமமாகவே பாலிக்கப்பட கதைகள், புராணங்கள், காவியங்கள் எல்லாம், எல்லாம்...ஏன்? இந்தக் கேள்விகளே நான் 'காலந்தோறும் பெண்' என்ற நூலுக்கான கட்டுரைகளை எழுதுவதற்குக் காரணமாக இருந்தன. தொடர்ந்து இன்னும் சிறிது கூர்மையாக ஆழ்ந்த உணர்வுடன் சில கட்டுரைகளை மேலும் எழுதத் துணிந்திருக்கிறேன்." இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மனித சமுதாயம் எப்போது, சமுதாயம் என்ற நாகரிகம் காண மலர்ந்தது? ஆணும் பெண்ணும் எப்படி வாழ்ந்தார்கள்? இறைவன் முதலில் ஆணையே படைத்தான். பின்னர் அவனுக்கு அடங்கிய துணையாக, அவனிலிருந்து ஒரு பகுதியை வைத்தே பெண்ணைப் படைத்தான், என்ற வகையில், சமயங்கள் சார்ந்து பல கருத்துக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. என்றாலும், ஆதிமனிதர் வரலாறு, பெண்ணை அப்படி ஒரு துணைப் பிறவியாக இனம் காட்ட வில்லை என்பதே சரியாகும். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், மனிதர் விலங்குகளைப் போன்றே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தில் கொடிய விலங்குகளுக்கு அஞ்சி, குரங்குகளைப் போல் மரக் கிளைகளில் தங்கியும், கூடி இனம் பெருக்கியும் வாழ்ந்தார்கள். தரைக்கு இறங்கி, நிமிர்ந்து, இரண்டு கைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதும், பின்னர் நெருப்பின் பயன்களைக் கண்டு கொண்டதும் மனித வாழ்க்கையின் அற்புதமான திருப்பங்களாகும். வாழ்வில் அச்சம் நீங்கியது; நடுக்கும் குளிரில் இருந்து மீட்டு வெம்மையாகிய இன்பம் இசைந்தது. சமைத்த ஊன் சுவையாக இருந்தது. எளிதில் சீரணமாயிற்று. |