விஞ்ஞானத்தின் கதை/மின்சாரம்

விக்கிமூலம் இலிருந்து


10. மின்சாரம்

ரும் பெரும் சாதனைகள் புரிந்த ஒரு மனிதனைப் பற்றி அறிந்து கொள்வதில் நமக்கு எல்லோருக்குமே விருப்பம் அதிகம். அந்த மனிதனுடைய பிறப்பு, வளர்ப்பு முதலியன வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டிகளாக அமைய வல்லன. இதே போலத்தான் மின்சாரத்தின் தன்மையும். இன்று மின்சாரம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தன் திறனைக்காட்டி மின்னிடுகிறது. மின்சாரம் இல்லையென்றால் இன்று உலகம் இருண்டு விடும்; சுருங்கி விடும்; கலை வளராது; காணும் சுறுசுறுப்பு கடுகளவாகிவிடும். இத்திறம் படைத்த மின்சாரத்தின் பிறப்பு, வளர்ப்பை அறிந்து கொள்வோம்.

மின்சாரம் என்னும் திறன் எப்போதும் உலகில் இருந்தது. அத்திறன் வெளிப்படுத்தப்பட்ட தன்மையைத்தான் நாம் மின்சாரத்தின் பிறப்பு என்று சொல் கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க, ரோமநாட்டு விஞ்ஞானிகள் இத்துறையைத் தொடங்கி வைத்தார்கள். ஆம்பர் எனப்படும் கோந்து வகைக் கோல் ஒன்றை கம்பளி ஆடையில் தேய்த்து பறவை இறக்கைகளை அதன் அருகில் கொண்டு சென்றபோது அவை ஈர்க்கப்படுவதை அறிந்தனர். அவ்வாறு முயற்சி செய்ததில் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் தேல்சு என்பவரும் பிளைனி என்பவரும் ஆவர். பிளைனி என்பவர் வெசூவியசு எரிமலையை ஆராயப் புகுந்து அந்த நெருப்பிலேயே வெந்து போனார். மத்திய காலத்து விஞ்ஞானிகள் மின்சாரத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. சில காலத்திற்குப்பின் மின்சாரத்தை ஒரு சாடியில் தேக்கி வைக்கும் முயற்சி நடைபெற்றது. மின்சாரம் என்பது உருவற்ற, எடையற்ற ஏதோ ஒரு பொருள் என்பது அந்நாளையக் கருத்து. கி. பி. 1745-இல் வான் க்ளீச்ட் என்ற குடியானவர் ஒரு சாடி செய்து ஓர் ஆணியைப் பொருத்தி மின்சாரம் உள்ளே உண்டாவதற்கான வகைகள் செய்தார். சாடியை இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் ஆணியைத் தொட்டபோது க்ளீச்ட் ஒரு வகை அதிர்ச்சியை உணர்ந்தார். அதுதான் முதன் முதல் உணரப்பட்ட மின்சார அதிர்ச்சி. சில மாதங்களுக்குப் பின் ஹாலண்டு நாட்டைச் சேர்ந்த முச்சென்புரோக் என்பவர் இதே வகையான சாடியைத் தயாரித்தார். இவர் விஞ்ஞானச் சாதனங்களைத் தயாரித்துக் கொடுத்து பல விஞ்ஞானிகளுக்கு நண்பராக விளங்கியவர். ஹாலண்டு நாட்டில் உள்ள லீடன் நகரில் இம் முயற்சி தொடங்கப்பட்டதால் அந்த சாடிக்கு லீடன் சாடி என்று வழங்கப்பட்டது. இச் சாடி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அந்த சாடியிலிருந்த ஆணியைத் தொட்டுப் பார்த்து அதிர்ச்சி காணுவதில் மகிழ்வடைந்தனர். இத்தகைய விந்தை மிக்க மின்சாரம் அரசவைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விநோதப் பொருள்களில் ஒன்றாகக் கண்காணிக்கப்பட்டது. பிரான்சுநாட்டு மன்னன் தன் அரசாங்க அலுவலர்களை எல்லாம் தன் சபையில் கூட்டிவைத்து லீடன் சாடியில் அவர்களை கை வைக்கச்சொல்லி அவர்கள் அதிர்ச்சி அடைந்த போது அவர்களோடு சேர்ந்து அவனும் களிப்புற்றான். பின்னர் சில நாட்களில் இத்தகைய மின்சாரக் கருவிகள் சில செய்யப்பட்டு அவற்றைக் காண்பதற்கே மக்களிடமிருந்து பணம் வாங்கினர் சில வியாபாரிகள்.

மின்சாரம் எவ்வாறு உணரப்பட்டதென்ற இன்னொரு முறையையும் குறிப்பிடலாம். கி. பி. 1780-இல் லூகி கால்வனி என்பவர் தவளை ஒன்றை அறுத்து உலோக சாதனங்களால் ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஓர் அதிர்ச்சியை அவர் உணர்ந்தார். மேலும் மேலும் ஆராய்ந்து மின்சார அதிர்ச்சியை அவர் உறுதிப் படுத்தினார்.

வானத்தில் தோன்றும் மின்னலும் மின்சாரத்தின் பதிப்பே என்பதை பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவர் தம் காற்றாடியை ஆகாயத்தில் பறக்கவிட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தார். இதை ஆணித்தரமான சோதனைகளால் நிரூபித்தும் சர் சான் பிரிங்கிள் என்பவர் ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதத்துடன் எதிர்த்தார். உண்மை வெற்றி கண்டது. இதன் விளைவாக ப்ரிங்கிள் விஞ்ஞானப் பேரவை (Royal Society) யிலிருந்து விலகிக்கொண்டார்.

கி.பி. 1729-இல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ச்டீபன் கிரே என்பவர் ஒரு புது முயற்சியில் இறங்கினார். மின்சாரத்தை ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் வழி கண்டார். அறைக்குள்ளே அரங்கேறிய மின்சக்தி அம்பலத்திற்கு வந்தது. அவருடைய வீட்டுத் தோட்டத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே மின்சாரம் பாயத்தகுந்த உலோகக் கம்பியை இணைத்து முதலிடத்திலிருந்து ஒலியைக் கிளப்பினார்; அது இரண்டாவது இடத்தில் கேட்டது. இதுவே தந்தியின் பிறப்பு. இத் தந்தியை மனித சமுதாயத்திற்குப் பயன்படும் படியாகச் செய்தவர் சாமுவேல் மோர்சு. அவர் ஒரு சித்திரக்காரர். மின்சாரத்தின் உதவியால் நகருக்கு நகர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைத்துச் செயற்படத் தொடங்கினார். தாம் கண்டு பிடித்த ஒரு மின்சாரக் கருவியையும் நீண்ட செப்புக் கம்பிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு அவர் முயற்சியில் இறங்கியபோது மக்கள் இவரை எள்ளி நகையாடினர். மோர்சு அதைப் பொருட்படுத்தவில்லை. அவருடைய செல்வம் எல்லாம் குறைந்து வறியரானார். அந் நகரிலுள்ள பொருளாதாரக் குழுவினரிடம் சென்று உதவி நாடினார். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அக்குழு பண உதவி செய்தது. பன்னிரண்டாண்டுகளில் கடும் உழைப்பிற்குப் பின் மோர்சு முதல் தந்திப் பாதையை கி.பி.1837-இல் பால்டிமோர் நகருக்கும் வாசிங்டன் நகருக்கும் இடையே அமைத்து வெற்றிகண்டார். ஆனாலும் உடனே பழக்கத்திற்கு வந்துவிடவில்லை. மோர்சு நியூயார்க் கலாசாலையில் தந்தியைப் பற்றி விரிவுரையாற்றினார். அதன் பின்பே கி.பி. 1844-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதியன்று முதல் தந்திப்பாதையில் செய்தி அனுப்பப்பட்டு பின்னர் நாடெங்கிலும் பரவியது. இன்று உலகின் செய்திப் பரிவர்த்தனை தந்தியின் மூலம் ஒரு சில செகண்டுகளுக்குள் முடிவடைந்துவிடும் நிலை வியப்பிற்குரியது. இத்தந்திக்கலை தமிழில் நடைபெற இப்போது முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் புதிய முயற்சியைத் தொடங்கினார். ஊமையரும் செவிடருமான சில மாணவருக்கு அவர் ஆசிரியராக இருந்தார். பள்ளிக்கூடப் பாடங்களைத் தெளிவுறக் கற்றுக் கொடுக்க புதிய உத்திகளைக் கையாண்டதின் விளைவாக தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவரோடு ஒத்துழைத்தவர் இவருடைய நண்பர் வாட்சன். ஒரு நாள் இருவரும் ஓர் உயர்ந்த வீட்டில் நிலப்பகுதியிலிருந்து மாடிவரை கம்பியைப் பொருத்தினார்கள். வாட்சன் கீழே நின்று கொண்டிருந்தார்; கிரகாம் பெல் மாடியில் நின்றிருந்தார். சில விநாடிகள் கழிந்ததும், "வாட்சன், இங்கே வா!” என்று கிரகாம் பெல் கூப்பிட்டது கம்பியின் வழியாக வாட்சனுக்குத் தெளிவாகக் கேட்டது. அன்று பிறந்த தொலைபேசி கடலடி வழியாகக் கூடச் சென்று உலகெங்கிலும் பரவி விட்டது. தந்தியைப் போல் அல்லாமல் இதன் மூலம் எந்த மொழியிலும் பேசிக்கொள்ளலாம்.

செய்திகளைப் பரிமாறிக்கொள்வதில் வியப்புக்குரிய இடம் பெறுகிறது கம்பி-இல்லாத்-தந்தி. இதை கி. பி. 1875-இல் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி என்பவர் கண்டுபிடித்தார். இதனால் கப்பலில் உள்ளோருக்கும், நிலத்தில் உள்ளோருக்கும், ஆகாயவிமானத்தில் உள்ளோருக்கும் செய்தி பரிமாற்றப்பட மிகவும் வசதியாக இருக்கிறது. கம்பி-இல்லாத்-தந்தி மூலம் செய்தி கி.பி.1901-இல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்பு இப் புதிய முறையின் நன்மை தெளிவாகப் புலப்பட்டது. இம் முறையினால் கடலில் கப்பல் விபத்துக்கள் குறைந்திருக்கின்றன. வழி தவறிவிட்ட கப்பல்கள்கூட எளிதில் அருகில் இருக்கும் கரை சேரலாம். எங்கோ தொலைவில் இருக்கக்கூடிய கப்பல்களும் ஆகாய விமானங்களும் மனிதனால் இயக்கப்படாமல் இத் தந்தி முறை மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது சில ஆகாய விமானங்களும் கப்பல்களும் இம்முறையினால் நாசவேலைக்குப் பயன்படுத்தப்பட்டன.

மின்சார விளக்கு, வானொலி, டெலிவிசன்....... இப்படி எத்தனையோ சாதனங்கள் மின்சாரத்தின் விளைவைப் பயன்படுத்தி விந்தை புரிகின்றன.

அணையால் தடுக்கப்பட்ட ஆற்றோட்டங்களாலும், அருவிகளாலும் பெரும் அளவில் உண்டாக்கப்பட்டு இன்று மின்சாரம் மனித இனத்திற்குப் பெரும் பயனைத் தருகின்றது.

மின்சார விந்தை ஈடறியா விந்தை!

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய்—எங்கள் இறைவா! இறைவா ! இறைவா!"



ஆசிரியரின் பிற நூல்கள்

தமிழ் நாடும் மொழியும் ரூ. 4 00
மலைவாழ் மக்கள் ரூ. 2 00
நூலக அமைப்பியல் ரூ. 1 50
இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும் ரூ. 1 50
மறுமலர்ச்சிக் கவிஞர்கள் ரூ. 1 50
யாப்பெருங்கலக் காரிகை ரூ. 1 25
நூல் நிலையம் ரூ. 1 25