உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்ஞானத்தின் கதை/விஞ்ஞானம் என்றால் என்ன ?

விக்கிமூலம் இலிருந்து

விஞ்ஞானத்தின் கதை

->*<-

1. விஞ்ஞானம் என்றால் என்ன ?

ண்பரைத் தேடி அவரது வீடு சென்றேன். எனது வருகைக்கு மதிப்புத் தந்து அங்கொரு நாய் குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. நண்பர் நாய் வளர்க்கிறார், என்ற உண்மை எனக்குத் தெரியாது. தனது எசமானரின் நண்பர் என்று அந்த நாய்க்கு என்னைத் தெரியாது. முன்னே அறிமுகமாகாத இருவர் சந்தித்துக் கொண்டோம். எனக்குப் பயந்து நாய் குரைக்க, அதற்குப் பயந்து நான் நடுங்க ஒரே குழப்பமாகிவிட்டது.

சிறிது இடைவேளைக்குப் பின் வீட்டிற்குள்ளிருந்து நண்பர் வந்தார். "வணக்கம்" என்று அவர் என்னை நோக்கிக் கூறிய மறுகணம் நாய் குரைப்பதை நிறுத்தியது. என்னை மிரட்டுவதை நிறுத்திவிட்டு நண்பரை அது சுற்றிச் சுற்றி வந்தது; வேட்டியைப் பற்றி இழுத்தது; அவரது காலைக் கடித்தது. நண்பர் என்னைப் போல் நடுங்கவில்லை; அமைதியாக என்னோடு உரையாடுவதில் ஈடுபட்டார். எனக்குப் பெருத்த வியப்பு! தனக்காக ஒரு பிராணியை நண்பர் எவ்வாறு பழக்கி உள்ளார்!

அந்த நாளுக்குப் பின் நான் நண்பரை அடிக்கடி அவரது வீட்டில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக நாய் என்னிடம் பழகுவதில் மாற்றம் உணர்ந்தேன். என்னைக் கண்டால் சீறிக் குரைப்பதில்லை; காலால் விந்தி என் கைகளைக் கடிக்க அது முயல்வதில்லை. எனக்கும் அதனிடம் அச்சம் அறவே ஒழிந்து அதன் பெருமை தெரிய வந்தது.

அந்த நாயினால் எனக்கு உலக உண்மை ஒன்று விளங்கியது. எந்த உயிரும் முதலில் தனக்கு அறிமுகமாகாதவற்றைக் காணும்போது அச்சமடைகிறது. அந்த அச்சம் குறையக் குறையத் தெளிவு பிறக்கிறது. உயிரினங்களில் முதன்மையானவன் மனிதன். அவன் எதையும் கண்டு எளிதில் அச்சம் அடைவதில்லை. புதுப்புது வாழ்வை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் மனிதன் அச்சத்தை நீக்கிய தெளிவும், அதனால் வளர்ச்சியும் பெறுகிறான். எங்கே தெளிவு மிளிர்கிறதோ அங்கே அச்சமில்லை அல்லவா? எனவேதான் இயற்கை என்னும் திரையில் வரையப்பட்டிருக்கும் ஓவிய இரகசியங்களை மனிதன் சுவைக்க முற்படுகிறான். இயற்கை நிலை மின்னலையும், ஆற்று வெள்ளத்தையும் கண்டு மருண்டோடிய மனித குலம் எங்கே? "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா !! இறைவா!!!” என்று மகிழ்ச்சிக் கூத்தாடும் இன்றைய மனித குலம் எங்கே? அத்தனையும் கால ஓட்டத்தின் அரிய சாதனை. அச்சம் தொலைந்து இயற்கையின் தன்மையைப் புரிந்து கொண்ட உலகின் முழு இரசிகன் இன்றைய மனிதன்.

மனிதன் பிற பிராணிகளிலிருந்து தனிப்பட்ட அறிவு பெற்றவன். இதை நாம் எவ்வாறு துணிந்து கூற முடியும்? தன் சூழ்நிலையை உணர்ந்து அச் சூழலுக்கு ஏற்ப தன்னை உருவாக்கிக் கொள்ளும் மனிதனைத்தான் நாம் அறிவு பெற்றவனாகக் கருதுகிறோம். இத்தகைய அறிவை முயற்சி, தோல்வி, வெற்றி ஆகியவை உள்ளடங்கிய சோதனைகள் மூலமே அவன் பெறமுடியும். அனுபவங்கள் மனித அறிவை வளர்க்கின்றன. உலகம் பரந்து கிடப்பதால் அனுபவங்கள் பெருகுகின்றன; அனுபவங்கள் பெருகுவதால் அறிவு விரிகிறது; வளர்கிறது. மனிதனின் ஆர்வத் துடிப்பிற்கு இலக்காயுள்ள உலகம் எல்லை இன்றி பரந்து கிடக்கும் காரணத்தால் அறிவியல் துறைக்கு முடிவே இல்லை.

இந்த அறிவியல் துறையைத்தான் நாம் விஞ்ஞானம் என்று அழைக்கிறோம். விஞ்ஞானம் என்ற சொல்லைக் கேட்டாலே மருண்டோடும் தன்மை நம்மில் பலருக்கு இருக்கிறது. அவ்வாறு அஞ்சத் தேவை இல்லை. ஐம்பொறிகளின் உதவியாலும் நாம் பெறும் அனுபவங்களைத் திரட்டுவதே விஞ்ஞானம் என்று சொன்னால் அதுவே விஞ்ஞானம் என்ற சொல்லுக்குத் தரும் தகுந்த விளக்கமாகும்.

நமது வாழ்க்கையில் அம்புலிப் பருவம் ஒரு பகுதி. வானத்துச் சந்திரன் நம் கையில் கிடைக்க வேண்டுமென்று கையை, காலை ஆட்டிய பழைய பருவத்தை என்றேனும் நாம் நினைத்துப் பார்த்தால் நமக்குச் சிரிப்பு வருவதில்லையா? அந்தச் சிரிப்பு அனுபவ முத்திரை பெற்ற சிரிப்பு. அந்த அனுபவ அறிவு இன்று நம்மை முழு மனிதனாக மாற்றியிருக்கிறது.

உலகின் ஆதி மனிதன் இன்றைய மனிதனிலிருந்து மிகவும் வேறுபட்டவன். அந்தக் காலத்து மனிதனுக்கு நிலையானதொரு வாழ்வு கிடையாது. எதைக் கண்டாலும் அச்சம் இணைந்த பரபரப்பு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் திறமில்லாத் தன்மை என்பன அவனிடம் விளங்கின. காட்டில் பிற விலங்குகளோடு தானும் ஒரு விலங்காக அவன் வாழ்ந்து வந்தான். மனிதனின் முதல் தேவை உணவு. அதை அவன் விலங்குகளை வேட்டையாடிப் பெற்றான். வேட்டைக்கு உதவியாகக் கல்லால் ஆன கருவிகளை அவன் உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டான். அனுபவம் பின்னர் அவனை வேறு பாதையில் திருப்பியது. வேட்டையாடி உயிர் வளர்க்கும் தன்மையினின்றும் மாறுபட்டு நிலத்தில் பயிர் செய்து உழவனாக உயிர் வளர்க்கும் புதுமை பெற்றான். ஆக அனுபவங்களும், அவற்றால் ஏற்பட்ட அறிவும் மனித குல வளர்ச்சிப் பாதையை அவ்வப் போது செப்பனிட்டு வந்தன.

அன்றைய மனிதனுக்கும் அனுபவங்கள் எதிர்ப்பட்டன. ஆனால் அவற்றைத் திரட்டி, ஒழுங்குபடுத்தி, பயன்படுத்தி தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள முதலில் அவன் அறிந்தான் அல்லன். அவனுடைய அப்போதைய உணர்ச்சி வேலை செய்யவேண்டும் என்ற ஒரே உணர்ச்சிதான். மனிதன் உழவனாக மாறிய காலத்தில், பயிர் சிற்சில இடங்களில் நன்கு செழிப்புடன் வளர்ந்ததையும், வேறு சில இடங்களில் அவ்வாறு வளராததையும் கண்டான். அத்துடன் அத்தகைய வளர்ச்சி நிலையற்றதாக இருந்ததையும் உணர்ந்தான். ஆனால் அதற்கான காரணம் இன்னதென்று அவன் தெளிந்தானல்லன். தனக்கு ஏற்படும் அனுபவங்களுக்கான காரண காரியங்களை ஒழுங்குபடத் திரட்டிக் கொள்பவனைத் தான் நாம் அறிஞன் என்று பாராட்டுகிறோம். எதற்கும் காரணம் கேட்கும் தன்மை அறிவுக் கோயிலின் உள்ளே செல்ல உதவும் முதல் படிக்கல். உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஓரிருவர் தமக்கு நேரும் அனுபவங்களுக்குக் காரணம் தேட முனைந்தனர். எகிப்து, ஈராக், இந்தியா, சைனா முதலிய இடங்களில் முதலில் இத்தகைய அறிஞர் பெருமக்கள் தோன்றினர். அங்குதான் நாகரிகமும் முதலில் தோன்றி நிலைத்தது. அத்தகைய அறிஞரின் காலம் சரித்திர காலத்திற்கும் முற்பட்டிருந்தமையால் அவர்களுடைய பெயர்களும், அவர்கள் எழுதி வைத்த குறிப்பேடுகளும் கால வெள்ளத்தில் அழிந்து பட்டன.

————