விடுதலைப் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

முன்னுரை

ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை 'விடுதலைப் பயணம்' என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இஸ்ரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.


நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இஸ்ரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல்

அ) எகிப்தில் அடிமைத்தனம்
ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும்
இ) மோசேயின் அழைப்பு
ஈ) மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல்
உ) பாஸ்கா - எகிப்தினின்று வெளியேறல்

1:1 - 15:21

1:1-22
2:1-25
3:1 - 4:31
5:1 - 11:10
12:1 - 15:21

84 - 108

84 - 85
85 - 86
86 - 89
89 - 100
100 - 108

2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27 108 - 113
3. பத்துக் கட்டளைகள் - உடன்படிக்கை நூல் 19:1 - 24:18 113 - 122
4. உடன்படிக்கைக் கூடாரம் - வழிபாட்டு ஒழுங்குமுறைகள் 25:1 - 40-38 122 - 151

விடுதலைப் பயணம்[தொகு]

அதிகாரம் 1[தொகு]

எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமை வாழ்க்கை[தொகு]


1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை:
2 ரூபன், சிமியோன், லேவி, யூதா;
3 இசக்கார், செபுலோன், பென்யமின்;
4 தாண், நப்தலி, காத்து, ஆசேர்.[1]
5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.[2] யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தார்.
6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.
7 இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்; ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்; இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.[3]


8 இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.[4]
9 அவன் தன் குடிமக்களை நோக்கி, "இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
10 அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்" என்று கூறினான்.[5]
11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
13 எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்;
14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.


15 எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:
16 "எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்; பெண்மகவு என்றால் வாழட்டும்".
17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, 'ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?' என்று கேட்டான்.
19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, "எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்; ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்; மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது" என்று காரணம் கூறினர்.
20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.
21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, "பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்" என்று அறிவித்தான்.

குறிப்புகள்:[தொகு]


[1] 1:1-4 = தொநூ 46:8-27.
[2] 1:5 ஒரு பழைய மொழிபெயர்ப்பில் 'எழுபத்தைந்து' எனக் காணப்படுகிறது (காண். திப 7:14).
[3] 1:7 = திப 7:17.
[4] 1:8 = திப 7:18.
[5] 1:10 = திப 7:19.

அதிகாரம் 2[தொகு]

மோசேயின் பிறப்பு[தொகு]


1 இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.
2 அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.[1]
3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.
4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.


5 அப்போது பார்வோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது.
6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். "இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று" என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
7 "உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?" என்று கேட்டாள்.
8 பார்வோனின் மகள் அவளை நோக்கி, "சரி. சென்று வா" என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9 பார்வோனின் மகள் அவளை நோக்கி, "இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்" என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.
10 குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள். 'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு 'மோசே'[2] என்று பெயரிட்டாள்.[3]

மோசே மிதியானுக்குத் தப்பியோடல்[தொகு]


11 அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்;[4]
12 சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
13 அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி "உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டார்.
14 அதற்கு அவன், "எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?" என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; "நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே" என்று சொல்லிக் கொண்டார்![5]
15 இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான்.[6]

எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
16 அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.
17 அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.
18 அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், "என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?" என்றார்.
19 அவர்கள், "எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்; ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்" என்றார்கள்.
20 அவர் தம் புதல்வியரிடம், "எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
21 அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம் மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.
22 அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். 'நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்' என்று கூறி மோசே அவனைக் 'கேர்சோம்'[7] என்று பெயரிட்டழைத்தார்.


23 இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான். இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று.
24 அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார். ஆபிரகாமுடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.[8]
25 கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 2:2 = திப 7:20; எபி 11:23.
[2] 2:10 எபிரேயத்தில், 'எடுக்கப்பட்டவன்' என்பது பொருள்.
[3] 2:10 = திப 7:21.
[4] 2:11 = எபி 11:24.
[5] 2:11-14 = திப 7:23-28.
[6] 2:15 = திப 7:29; எபி 11:27.
[7] 2:22 எபிரேயத்தில், 'அன்னியன்' என்பது பொருள்.
[8] 2:24 = தொநூ 15:13-14.

அதிகாரம் 3[தொகு]

மோசேயின் அழைப்பு[தொகு]


1 மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
2 அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
3 "ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார்.
4 அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார்.
5 அவர், "இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார்.
6 மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.


7 அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.
8 எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு - அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.
9 இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.
10 எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.[1]
11 மோசே கடவுளிடம், "பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?" என்றார்.
12 அப்போது கடவுள், "நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே" என்றுரைத்தார்.


13 மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார்.[2]
14 கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.[3]
15 கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
16 போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.
17 எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்" என்று அறிவிப்பாய்.
18 அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, "எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.
19 கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.
20 எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.


21 அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில் விரும்பத்தக்கவர் ஆக்குவேன். நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.
22 ஏனெனில் ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அன்னியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள்.[4]
23 அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்".

குறிப்புகள்:[தொகு]


[1] 3:2-10 = திப 7:30-34.
[2] 3:13 = விப 6:2-3.
[3] 3:14 = திவெ 1:4,8.
[4] 3:21-22 = விப 12:35-36.

அதிகாரம் 4[தொகு]

மோசே பெற்ற வியத்தகு ஆற்றல்[தொகு]


1 மோசே மறுமொழியாக, "இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்; என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில் 'ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை' என்று சொல்வார்கள்" என்று கூறினார்.
2 ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர்.
3 'அதைத் தரையில் விட்டெறி' என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
4 ஆண்டவர் அவரை நோக்கி, "நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு" என்றார். - அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-
5 "இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே".


6 மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையை உன் மடிக்குள் இடு" என்றார். அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
7 பின்னர் ஆண்டவர், "உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு" என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
8 அப்போது ஆண்டவர், "அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
9 அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்" என்றார்.


10 மோசே ஆண்டவரிடம்; "ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்" என்றார்.
11 ஆண்டவர் அவரிடம், "மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
12 ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" என்றார்.
13 அதற்கு அவர், "வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!" என்றுரைத்தார்.
14 இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: "லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
15 நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.
16 உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.
17 இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!"

மோசே எகிப்திற்குத் திரும்புதல்[தொகு]


18 மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, "எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்" என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, "சமாதானமாய்ப் போய்வா" என்றார்.
19 மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, "எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்" என்றுரைத்தார்.
20 எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
21 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.
22 நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், 'ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை.
23 நான் உனக்குக் கூறிவிட்டேன்: என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்' என்று சொல்வாய்".[*]


24 ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.
25 அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, "நீர் எனக்கு இரத்த மணமகன்" என்றாள்.
26 பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், "விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்" என்றாள்.
27 இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, "மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் போ" என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
28 தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப் பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
29 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
30 ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார். அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார். மக்களும் நம்பினர்.
31 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.

குறிப்பு:[தொகு]


[*] 4:23 = விப 12:29.

அதிகாரம் 5[தொகு]

பார்வோன் முன் மோசேயும் ஆரோனும்[தொகு]


1 பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, "பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்" என்று அறிவித்தனர்.
2 அதற்குப் பார்வோன், "யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்; இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்" என்று கூறினான்.
3 அதற்கு அவர்கள், "எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்" என்று கூறினர்.
4 எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, "மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்" என்று கூறினான்.


5 மேலும், பார்வோன், "பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்" என்றான்.
6 அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,
7 "செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.
8 ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், 'நாங்கள் போகவேண்டும்; எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும்' என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
9 அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்" என்றான்.


10 எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, "பார்வோன் கூறுவது இதுவே: நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
11 நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவித்தனர்.
12 எனவே வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.
13 "வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்" என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
14 "முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?" என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்களை அடித்தனர்.


15 இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, "ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?
16 உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே 'செங்கல் அறுங்கள்' என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்" என்று கதறினர்.
17 அதற்கு அவன், "சோம்பேறிகள்; நீங்கள் சோம்பேறிகள்; அதனால்தான் 'நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும்' என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
18 எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறினான்.
19 'அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது' என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
20 பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,
21 "ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்" என்றனர்.

மோசேயின் முறையீடு[தொகு]


22 அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, "என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
23 உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை" என்று கூறினார்.

அதிகாரம் 6[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்; என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்; தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்" என்றார்.

மோசேயின் அழைப்பு[தொகு]


2 கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
3 "நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்குக்கும் 'ஆண்டவர்' என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை எனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே![1]
4 மேலும் அவர்கள் அன்னியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே!
5 மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.
6 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: நானே ஆண்டவர். எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.
7 உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன். அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். நானே ஆண்டவர்!"
9 இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.


10 ஆண்டவர் மோசேயை நோக்கி,
11 "எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்" என்றுரைத்தார்.
12 மோசே ஆண்டவரிடம் பேசி, "இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்" என்று சொன்னார்.
13 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மோசே, ஆரோனின் மூதாதையர் அட்டவணை[தொகு]


14 அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே: இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி. இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.
15 சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
16 தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.
17 கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.
18 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.
19 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.[2]
20 அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.
21 இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.
22 உசியேலின் புதல்வர்: மீசாவேல், எல்சாபான், சித்ரி.
23 அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
24 கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு. இவைகளே கோராகின் குடும்பங்கள்.
25 ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.


26 'தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள்' என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27 இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே!

மோசே, ஆரோனுக்கு ஆண்டவரின் கட்டளை[தொகு]


28 அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.
29 ஆண்டவர் மோசேயுடன் பேசி, "நானே ஆண்டவர். நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு" என்று அறிவித்தபோது,
30 மோசே ஆண்டவரிடம், "பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?" என்றார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 6:2-3 = தொநூ 17:1; 28:3; 35:11; விப 3:13-15.
[2] 6:16-19 = எண் 3:17-20; 26:57-58; 1 குறி 6:16-19.

அதிகாரம் 7[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.
2 நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்.
3 நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்துவதோடு எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் பெருகச் செய்வேன்.[1]
4 பார்வோன் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டான். எனவே நான் எகிப்திற்கு எதிராகக் கை ஓங்குவேன். பெரும் தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றியபின் என் மக்களாகிய இஸ்ரயேல் என்னும் படைத்திரளை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்வேன்.
5 எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போது 'நானே ஆண்டவர்' என எகிப்தியர் அறிந்து கொள்வர்" என்றார்.
6 தங்களுக்கு ஆண்டவர் என்ன கட்டளையிட்டாரோ அதையே மோசேயும் ஆரோனும் செய்தனர்.
7 பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது; ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.

ஆரோனின் கோல்[தொகு]


8 ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,
9 "அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்" என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம், 'உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி. அது பாம்பாக மாறும்' என்று சொல்" என்றார்.
10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.
11 பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.
12 அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.
13 பார்வோனின் மனமோ கடினப்பட்டது. ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

எகிப்தில் பத்துப் பெருந்துன்பங்கள்[தொகு]


14 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.
15 எனவே காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்; பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.
16 நீ அவனிடம் கூற வேண்டியது: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பிவைத்துள்ளார்; அவர் சொல்வது: 'பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு. நீயோ இதுவரை செவிசாய்க்கவில்லை.
17 என் கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன். அது இரத்தமாக மாறும்.[2]
18 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் 'நானே ஆண்டவர்' என நீ அறிந்துகொள்வாய்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்று சொல்.
19 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "நீ ஆரோனை நோக்கி 'உனது கோலை எடு; எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும் என்று சொல்" என்றார்.


20 அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர். ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் நைல்நதி நீரில் அடித்தார். நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.
21 நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது. எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று. எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.
22 இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் செய்து காட்டினர். எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
23 பார்வோன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். அவன் மனம் இதையும் பொருட்படுத்தவில்லை.
24 எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில் குடிநீருக்காகத் தோண்டினர். ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.
25 ஆண்டவர் நைல்நதியை அடித்து நாள்கள் ஏழு கடந்தன.

குறிப்புகள்:[தொகு]


[1] 7:3 = திப 7:36.
[2] 7:17 = திவெ 16:4.

அதிகாரம் 8[தொகு]

தவளைகள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: "நீ பார்வோனிடம் போய் அவனிடம், 'ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு'.
2 அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.
3 தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும், உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும், உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.
4 உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும்' என்று சொல்."
5 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம், 'கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்' என்று சொல்" என்றார்.
6 ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.
7 மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.
8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, "என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்" என்று கூறினான்.
9 மோசே பார்வோனை நோக்கி, "தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்" என்று கூறினார்.
10 அவன், "நாளைக்கு" என்றான். அதற்கு மோசே, "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்;
11 உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்; ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்" என்றார்.
12 மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
13 ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார். ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின.
14 அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்; எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.
15 தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

கொசுக்கள்[தொகு]


16 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ ஆரோனிடம், 'நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்' என்று சொல்" என்றார்.
17 அவ்வாறே அவர்களும் செய்தனர். கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.
18 கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்; ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.
19 மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, "இது கடவுளின் கைவன்மையே" என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.[*]

ஈக்கள்[தொகு]


20 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: 'எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு;
21 என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.
22 அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.
23 மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்'" என்றார்.
24 அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார். ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்து நாடெங்கும் திரளாய்ப் பெருகின. ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.


25 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, "போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்" என்றான்.
26 அதற்கு மோசே, "அது முறையல்ல; அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?
27 பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்" என்றார்.
28 அப்பொழுது பார்வோன், "உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்; மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்" என்றுரைத்தான்.
29 மோசே மறுமொழியாக, "நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என்று ஆண்டவரை மன்றாடுவேன். ஆனால் ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேணடாம்" என்று கூறினார்.


30 மோசே பார்வோனை விட்டு அகன்றார்; ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
31 மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின. ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.
32 இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடவில்லை.

குறிப்பு:[தொகு]

[*] 8:19 = லூக் 11:20


அதிகாரம் 9[தொகு]

கால்நடைகள் சாவு[தொகு]


1 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்; எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு!
2 நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால்,
3 நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.
4 ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார். எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
5 'நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்' என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்."
6 அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன. இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.
7 பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான். இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. மக்களை அவன் போகவிடவில்லை.

கொப்புளங்கள்[தொகு]


8 மேலும் ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, "அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.
9 எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்" என்றார்.
10 அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று.[1]
11 கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.
12 ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.

கல்மழை[தொகு]


13 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கிச் சொல்: எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.
14 இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும் உன் அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன். இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை இதனால் நீ அறிந்து கொள்வாய்.
15 கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன். நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.
16 எனினும், என் வல்லமையைக் காட்டவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.[2]
17 நீயோ, என் மக்களைப் போகவிடாத அளவுக்கு இன்னும் தலைதூக்கி நிற்கின்றாய்.
18 எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.
19 எனவே, உன் கால்நடைகளையும் வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு! வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல் வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும் விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய, எல்லோரும் மடிவர்.
20 பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர் தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும் வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.
21 ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர் தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வயல்வெளியில் விட்டுவிட்டனர்.


22 ஆண்டவர் மோசேயை நோக்கி, "எகிப்து நாடெங்கும் - எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு, வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் - கல்மழை பொழியுமாறு உன் கையை வானோக்கி நீட்டு" என்றார்.
23 மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது. எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர்.
24 கல்மழை பெய்தது. ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.[3]
25 எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது; மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது; வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.
26 இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.

27 பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, "நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.
28 எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்; நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்" என்றான்.
29 மோசே அவனை நோக்கி, "நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும். இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர்.
30 ஆனால் உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில், இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
31 அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின. வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.
32 ஆனால் கோதுமையும், மாக்கோதுமையும் அடிபட்டுப் போகவில்லை; ஏனெனில் அவை பின்னர் கதிர்விடுவன.
33 மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார். தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார். உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன. நாட்டில் மழை பெய்வதும் நின்றது.
34 மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன். ஆயினும் அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்; தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.
35 பார்வோனின் மனம் இறுகிவிட்டதால், மோசே வழியாய் ஆண்டவர் அறிவித்தபடியே அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

குறிப்புகள்:[தொகு]


[1] 9:10 = திவெ 16:2.
[2] 9:16 = உரோ 9:17
[3] 9:24 = திவெ 8:7; 16:21.


அதிகாரம் 10[தொகு]

வெட்டுக்கிளிகள்[தொகு]


1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம்,
2 என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்றார்.


3 மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி, "எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்? எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.
4 ஏனெனில், நீ என் மக்களை அனுப்பிவிட மறுத்தால்,
5 நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகள் வரச்செய்வேன். யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை நாட்டை நிரப்பிவிடும். கல்மழைக்குத் தப்பி உங்களுக்கென எஞ்சி நிற்பதை அவை தின்று தீர்க்கும். வயல்வெளியில், தளிர்விடும் உங்கள் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும்.
6 வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும். இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாகும்" என்றார். பின்னர் மோசே பார்வோனை விட்டகன்றார்.


7 பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, "எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?" என்றனர்.
8 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, "போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர் யார் யார்?" என்று கேட்டான்.
9 அதற்கு மோசே, "எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம். எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும், எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம். ஏனெனில் இது எங்களுக்கு 'ஆண்டவரின் திருவிழா' ஆகும்" என்றார்.
10 பார்வோன் அவர்களை நோக்கி, "உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால், ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்! பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!
11 இதெல்லாம் வேண்டாம். உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விரும்பியதும் இதுவே!" என்றான். இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.
12 ஆண்டவர் மோசேயை நோக்கி, "கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு" என்றார்.
13 மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார். காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
14 மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.
15 அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று. கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.[1]
16 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, "உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.
17 இந்த ஒருமுறையும் என் பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்" என்றான்.
18 மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.
19 அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில்[2] வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.
20 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

காரிருள்[தொகு]


21 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், "எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு" என்றார்.
22 மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார். மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.[3]
23 மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை. மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.
24 பார்வோன் மோசேயை வரவழைத்து, "நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டு மந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்" என்று சொன்னான்.
25 அதற்கு மோசே, "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.
26 எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்; ஒன்றுகூட இங்கே தங்கலாகாது. எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது" என்றார்.
27 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.
28 பார்வோன் மோசேயை நோக்கி, "என்னிடமிருந்து போய்விடு. இனிமேல் நீ என் முகத்தில் விழிக்காதபடி பார்த்துக்கொள். ஏனெனில், என் முகத்தில் விழிக்கும் நாளில் நீ சாவாய்" என்றான்.
29 அதற்கு மோசே, "நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை" என்றார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 10:14-15 = திவெ 9:2-3.
[2] 10:19 எபிரேயத்தில் , 'நாணற்கடல்' என்பது பொருள்.
[3] 10:12 = திபா 105:28; திவெ 16:10.


அதிகாரம் 11[தொகு]

தலைமகன் சாவு முன்னறிவிப்பு[தொகு]


1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார்வோன் மேலும் எகிப்தின்மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டிவிடுவான்.
2 எனவே மக்கள் கேட்கும்படி அறிவியுங்கள். ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவனிடமிருந்தும் ஒவ்வொருத்தியும் தனக்கு அடுத்திருப்பவளிடமிருந்தும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்" என்றார்.
3 எகிப்தியருக்கு இம்மக்கள்மேல் நல்லெண்ணம் உண்டாகச் செய்தார் ஆண்டவர். மேலும் மோசே எகிப்து நாட்டில் பார்வோனின் அலுவலர் முன்பும் குடிமக்களின் முன்பும் மிகப் பெரியவராகத் திகழ்ந்தார்.
4 மோசே பின்வருமாறு அறிவித்தார்: "ஆண்டவர் கூறுவது இதுவே: நள்ளிரவு வேளையில் நானே எகிப்தின் நடுவே புறப்பட்டுச் செல்வேன்.
5 அப்போது எகிப்து நாட்டில், அரியணையில் வீற்றிருக்கும் பார்வோனின் தலைமகன் முதல் மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன்வரை உள்ள முதற்பேறு அனைத்தும் விலங்குகளின் ஆண்பால் தலையீற்று அனைத்தும் இறந்துவிடுவர்.
6 இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்.
7 இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் பொறுத்தமட்டில், அங்குள்ள மனிதர்முதல் விலங்குவரை, எவருக்குமே எதிராக எந்த நாயும் குரைக்காது. இதனால் ஆண்டவர் எகிப்தியரையும் இஸ்ரயேலரையும் வேறுபடுத்திச் செயலாற்றுகிறார் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
8 அப்போது உன் பணியாளர்களாகிய இவர்கள் எல்லோரும் எனக்குப் பணிந்து என்முன் தலைவணங்கி நின்று, 'உம்மைப் பின்பற்றும் மக்கள் அனைவரோடும் நீர் வெளியேறிவிடும்' என்று கூறுவர். அதன்பின் நான் வெளியேறிச் செல்வேன்." இதன்பின் பொங்கிய சினத்தோடு மோசே பார்வோனை விட்டகன்றார்.


9 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்" என்றுரைத்தார்.
10 மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன்முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!


அதிகாரம் 12[தொகு]

பாஸ்கா - கடந்து செல்லல்[தொகு]


1 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:
2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!
3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
4 ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.
5 ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.
6 இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.
7 இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
8 இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
9 அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள்.
10 அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.
11 நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது 'ஆண்டவரின் பாஸ்கா'.
12 ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!
13 இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

புளிப்பற்ற அப்ப விழா[தொகு]


14 இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
15 ஏழு நாள்களுக்குப் புளிப்பற்ற அப்பங்களையே உண்ணுங்கள்! முதல் நாளிலேயே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள். ஏனெனில் முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரை புளித்த அப்பத்தை உண்பவன் இஸ்ரயேலிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
16 முதல் நாளிலும், ஏழாம் நாளிலும் நீங்கள் புனித அவை கூடுவதற்கு அழையுங்கள். இந்நாள்களில் எவ்வேலையும் செய்ய வேண்டாம்; ஒவ்வொருவரும் உண்ணத் தேவையானதை மட்டும் நீங்கள் தயார் செய்யலாம்.
17 புளிப்பற்ற அப்ப விழாவை நீங்கள் கொண்டாடிவர வேண்டும். ஏனெனில் இந்த நாளில்தான் உங்கள் படைத்திரளை நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்தேன். நீங்கள் இந்நாளைத் தலைமுறைதோறும் கொண்டாடி, நிலையான நியமமாகக் கொள்ளுங்கள்.
18 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை தொடங்கி அம்மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரை புளிப்பற்ற அப்பம் உண்ணுங்கள்.
19 ஏழு நாள்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவு காணப்படவே கூடாது. ஏனெனில் புளித்த அப்பத்தை உண்பவன், அன்னியனானாலும் நாட்டின் குடிமகனானாலும், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
20 நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்.

முதல் பாஸ்கா[தொகு]


21 மோசே இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கூறியது: "நீங்கள் போய் உங்கள் குடும்பங்களுக்குத் தேவையானபடி ஓர் ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பாஸ்கா ஆட்டினை அடியுங்கள்.
22 ஈசோப்புக் கொத்தை எடுத்து, கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்து, கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள். காலைவரையிலும் தன் வீட்டின் கதவைத் தாண்டி உங்களில் எவனும் வெளியே போகக் கூடாது.
23 ஆண்டவர் எகிப்தைத் தாக்குமாறு கடந்து செல்கையில், கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் இரத்தத்தைக்கண்டு அக்கதவைக் கடந்து செல்வார். 'அழிப்பவன்' உங்கள் வீடுகளில் புகுந்து தாக்குமாறு அவர் அனுமதிக்கமாட்டார்.
24 இவ்வார்த்தையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிலையான நியமமாகக் கடைப்பிடியுங்கள்.
25 ஆண்டவர் வாக்களித்தபடியே அவர் உங்களுக்குத் தரவிருக்கும் நாட்டிற்குள் நீங்கள் வந்து சேர்ந்தபின், இவ்வழிபாட்டை நீங்கள் நிறைவேற்றி வாருங்கள்.
26 உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்து, 'இவ்வழிபாட்டின் கருத்து என்ன?"' என்று கேட்கும்போது,
27 நீங்கள், 'இது ஆண்டவரின் பாஸ்காப் பலி; அவர் எகிப்தியரைச் சாகடித்தபோது எகிப்திலுள்ள இஸ்ரயேல் மக்களின் வீடுகளைக் கடந்து சென்றார்; இவ்வாறு நம் வீடுகளுக்கு அவர் மீட்பளித்தார்' என்று கூறுங்கள்." மக்களும் தலைவணங்கித் தொழுதனர்.
28 இஸ்ரயேல் மக்கள் போய், மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர்.

தலைமகன் சாவு[தொகு]


29 நள்ளிரவில் அரசனாக இருந்த பார்வோனின் தலைமகன் தொடங்கி சிறையில் கிடந்த கைதியின் தலைமகன்வரை எகிப்து நாட்டின் எல்லா ஆண்பால் தலைப்பிறப்பையும் மற்றும் விலங்குகளின் அனைத்து ஆண்பால் தலையீற்றுகளையும் ஆண்டவர் சாகடித்தார்.
30 பார்வோனும், அவனுடைய அனைத்து பணியாளர்களும், எகிப்தியர் அனைவரும் விழித்தெழுந்தனர். எகிப்தில் பெரும் அழுகுரல் கேட்டது. ஏனெனில் சாவு இல்லாத வீடு எதுவுமே இல்லை!
31 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் இரவிலேயே கூப்பிட்டு அவர்களிடம், "நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து என் மக்களிடமிருந்து வெளியேறிச் செல்லுங்கள். போங்கள், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.
32 நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும் உங்கள் மாட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். போய்விடுங்கள்; எனக்கும் ஆசி கூறுங்கள்" என்றான்.


33 நாட்டிலிருந்து விரைவில் போய்விடுமாறு எகிப்தியர் இஸ்ரயேல் மக்களை அவசரப்படுத்தினர்; 'நாங்கள் எல்லோருமே சாகிறோம்' என்றனர்.
34 மக்கள், பிசைந்த மாவு புளிக்கும் முன்னரே அதை எடுத்து, மாவு பிசையும் பாத்திரங்களில் வைத்து, தங்கள் போர்வைகளில் கட்டித் தோள்கள் மேல் எடுத்துச் சென்றனர்.
35 இஸ்ரயேல் மக்கள் மோசேயின் வார்த்தையின்படி செயல்பட்டனர். அவர்கள் எகிப்தியரிடமிருந்து வெள்ளி அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கினர்.
36 ஆண்டவர் எகிப்தியரின் பார்வையில் இம்மக்களுக்குத் தயவு கிடைக்கச் செய்தமையால் அவர்களும் இவர்கள் கேட்டதைக் கொடுத்தனர். இவ்வாறு எகிப்தியரை இவர்கள் கொள்ளையிட்டனர்.

விடுதலைப் பயணத் தொடக்கம்[தொகு]


37 இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.
38 மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.
39 எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில் மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற்போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை!
40 எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்!
41 நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது.
42 எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.

பாஸ்கா விதிமுறைகள்[தொகு]


43 ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "பாஸ்காவின் ஒழுங்குமுறை இதுவே; அன்னிய மக்கள் எவரும் இதை உண்ணலாகாது.
44 ஆனால் வெள்ளிக் காசுக்கு வாங்கின அடிமை எவனுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்தபின் அவன் இதை உண்ணலாம்.
45 குடியேறியவரும் கூலியாள்களும் இதை உண்ண வேண்டாம்.
46 ஒரே வீட்டிற்குள் இது உண்ணப்படவேண்டும். இறைச்சி எதுவும் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படலாகாது. எந்த எலும்பையும் நீங்கள் முறிக்கக் கூடாது.
47 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுமே இதைக் கொண்டாட வேண்டும்!
48 அன்னியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் விருத்தசேதனம் செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.
49 நாட்டுக் குடிமக்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அன்னியருக்கும் சட்டம் ஒன்றே."
50 மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் இட்ட ஆணைப்படி இஸ்ரயேல் மக்கள் அனைவரும் செயல்பட்டனர்.
51 அதே நாளில், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை அவரவர் அணிவகுப்புகளின்படி எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தார்.

அதிகாரம் 13[தொகு]

தலைமகன் அர்ப்பணம்[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது:
2 "தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை" என்றார்.[1]

புளிப்பற்ற அப்ப விழா[தொகு]


3 மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது.
4 ஆபிபு மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்.
5 கானானியர், இத்தியர், எமோரியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டை ஆண்டவர் உனக்குத் தருவதாக உன் மூதாதையருக்கு வாக்களித்திருந்தார். பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு அவர் உன்னை அழைத்துச் சென்றபின், இதே மாதத்தில் நீ இவ்வழிபாட்டைச் செய்வாயாக.
6 ஏழுநாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும். ஏழாம் நாளை 'ஆண்டவரின் விழா'வாகக் கொண்டாட வேண்டும்.
7 ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும். புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது. உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.
8 அந்நாளில் நீ உன் மகனிடம், 'நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எனக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு' என்று சொல்.
9 ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்.
10 எனவே ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.

தலைப்பேறு அர்ப்பணம்[தொகு]


11 உனக்கும் உன் மூதாதையருக்கும் ஆண்டவர் வாக்களித்தபடியே, அவர் கானானியரின் நாட்டிற்குள் உன்னை அழைத்துச் சென்று அதை உனக்குக் கொடுக்கும்போது,
12 கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கென ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். உன் கால் நடைகளில் ஆண் தலையீற்று அனைத்தும் ஆண்டவருக்கே உரியது.[2]
13 ஓர் ஆட்டைக் கொடுத்துக் கழுதையின் ஆண் தலையீற்றை மீட்பாய்; அதை நீ மீட்கவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் ஆண் பிள்ளைகளுள் எல்லாத் தலைப்பேற்றையும் நீ மீட்க வேண்டும்.
14 'இதன் பொருள் என்ன' என்று பிற்காலத்தில் உன் மகன் உன்னிடம் கேட்டால், நீ அவனை நோக்கி, 'ஆண்டவர் தம் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார்.
15 பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது, எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண் தலைப்பிறப்பு அனைத்கையும் ஆண்டவர் சாகடித்தார். எனவே கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும் நான் ஆண்டவருக்குப் பலியிட்டு என் ஆண்பிள்ளைகளுள் தலைபபேறு அனைத்தையும் மீட்கிறேன்' என்று சொல்.
16 இது உன் கையில் அடையாளமாகவும் உன் கண்களுக்கிடையில் சீட்டுப்பட்டமாகவும் அமையட்டும். ஏனெனில், தம் கைவன்மையால் ஆண்டவர் எம்மை எகிப்திலிருந்து வெளியேற வைத்தார்.

மேகத் தூண், நெருப்புத் தூண்[தொகு]


17 மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், "போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்" என்றார் கடவுள்.
18 கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக செங்கடலுக்குப் போகச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
19 மேலும் யோசேப்பின் எலும்புகளை மோசே தம்மோடு எடுத்துச் சென்றார். ஏனெனில், "கடவுள் உங்களைச் சந்திக்கும்போது இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்" என்று யோசேப்பு இஸ்ரயேல் மக்களிடம் கூறி, அதுபற்றி அவர்களிடம் உறுதிமொழி பெற்றிருந்தார்.[3]
20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணமாகிப் பாலைநிலத்தின் எல்லையோரமாயுள்ள ஏத்தாமில் கூடாரம் அடித்தனர்.
21 ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக அவர் அவர்கள்முன் சென்று கொண்டிருந்தார்.
22 பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களைவிட்டு அகலவேயில்லை.

குறிப்புகள்:[தொகு]


[1] 13:2 = எண் 3:13; லூக் 2:23.
[2] 13:12 = விப 34:19-20; லூக் 2:23.
[3] 13:19 = தொநூ 50:25; யோசு 24:32.

அதிகாரம் 14[தொகு]

செங்கடலைக் கடத்தல்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "இஸ்ரயேல் மக்கள் திரும்பிச் சென்று மிக்தோலுக்கும் பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் பாளையம் இறங்கும்படி அவர்களிடம் சொல்.
3 பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து, பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுவான்.
4 பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்; அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான். அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன். நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்" என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.
5 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. "நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?" என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.
6 எனவே அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
7 தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
8 ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்; அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
9 பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர்.


10 பார்வோன் நெருங்கி வந்து கொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்.
11 அவர்கள் மோசேயை நோக்கி, "எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!
12 'எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்' என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்" என்றனர்.
13 மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.
14 ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்" என்றார்.


15 ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.
16 கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.
17 நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.
18 பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, 'நானே ஆண்டவர்' என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார்.


19 இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.
20 அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.


21 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.
22 வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.[*]
23 எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.
24 பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.
25 அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர்.


26 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார்.
27 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.
28 திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.
29 ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.
30 இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.
31 எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

குறிப்பு:[தொகு]


[*] 14:22 =1 கொரி 10:1-2; எபி 11:29.

அதிகாரம் 15[தொகு]

மோசேயின் வெற்றிப் பாடல்[தொகு]


1 அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:[1] ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
2 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.[2]
3 போரில் வல்லவர் ஆண்டவர்; 'ஆண்டவர்' என்பது அவர் பெயராம்.
4 பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.
5 ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
6 ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.
7 உம் மாபெரும் மாட்சியால் உம் எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்; உமது சீற்றக் கனலைக் கக்கித் தாளடிபோல் அவர்களை எரித்துவிட்டீர்.
8 உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன; பேரலைகள் சுவரென நின்றன; கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.
9 எதிரி சொன்னான்: 'துரத்திச் செல்வேன்; முன் சென்று மடக்குவேன்; கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்; என் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்.'
10 நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக்கொண்டது; ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.
11 ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?
12 நீர் உமது வலக்கையை நீட்டினீர். நிலம் அவர்களை விழுங்கி விட்டது.
13 நீர் மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்; உம் ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்.
14 இதைக் கேள்வியுற்ற மக்களினங்கள் அனைவரும் கதிகலங்கினர்; பெலிஸ்தியாவில் குடியிருப்போரை நடுக்கம் ஆட்கொண்டது.
15 ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்; மோவாபு தலைவர்களும் நடுநடுங்கினர்; கானானில் குடியிருப்போர் நிலை குலைந்தனர்.
16 அச்சமும் திகிலும் அவர்களை ஆட்கொண்டன; ஆண்டவரே, உம் மக்கள் கடந்து செல்லும் வரை, அதாவது நீர் உடைமையாக்கிக் கொண்ட மக்கள் கடந்து செல்லும்வரை, உம் கைவன்மை கண்டு அவர்கள் கல்போன்று மலைத்து நின்றனர்.
17 ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
18 ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.

மிரியாமின் பாடல்[தொகு]


19 பார்வோனின் குதிரைகள், தேர்கள் குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
20 இறைவாக்கினளும் ஆரோனின் தங்கையுமான மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர்.
21 அப்போது மிரியாம், "ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்" என்று பல்லவியாகப் பாடினாள்.

கசப்பு நீர்[தொகு]


22 பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார். அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.
23 பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர். மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை. அது கசப்பாக இருந்தது. இதனால்தான் அவ்விடத்திற்கு [3]மாரா என்ற பெயர் வழங்கியது.
24 'நாங்கள் எதைத்தான் குடிப்போம்' என்று கூறி, மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
25 அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.
26 மேலும் அவர், "உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்" என்றார்.
27 பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.

குறிப்புகள்:[தொகு]


[1] 15:1 = திவெ 15:3.
[2] 15:2 = திபா 118:14; எசா 12:2.
[3] 15:23 எபிரேயத்தில், 'கசப்பு' என்பது பொருள்.

அதிகாரம் 16[தொகு]

மன்னா, காடை[தொகு]


1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.
2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.
3 இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர்.


4 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.[1]
5 ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்" என்றார்.
6 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, "நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.
7 காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள். ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார். இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்" என்றனர்.
8 பின் மோசே, "ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை" என்றார்.


9 மோசே ஆரோனிடம், "நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்" என்றார்.
10 அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
11 ஆண்டவர் மோசேயை நோக்கி,
12 "இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், 'மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்' என்று சொல்" என்றார்.


13 மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.
14 பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.
15 இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி மன்னா [2]என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:[3]
16 மேலும் ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி [4] வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
17 இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு; குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.
18 ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.[5]
19 மோசே அவர்களைப் பார்த்து, "இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது" என்றார்.
20 ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.
21 மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில் வெயில் ஏறஏற அது உருகிவிடும்.


22 ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.
23 அப்போது அவர் அவர்களை நோக்கி, "கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான 'சாபத்து' [6]. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.[7]
24 மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம் வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை.
25 மோசே அவர்களிடம், "இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்; இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.
26 ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது" என்று அறிவித்தார்.


27 ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.
28 ஆண்டவர் மோசேயை நோக்கி, "எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?
29 கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்; ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது" என்றார்.
30 ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.


31 இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை 'மன்னா' என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.[8]
32 ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்: நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி [9]அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.
33 பின்பு மோசே ஆரோனை நோக்கி, "நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்" என்றார்.[10]
34 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார்.
35 இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.[11]
36 இரண்டு படி [12] என்பது ஏப்பா' [13] என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

குறிப்புகள்:[தொகு]


[1] 16:4 = யோவா 6:31.
[2] 16:15 எபிரேயத்தில், 'மான்-கூ' என்பது பாடம்:அதற்கு 'இது என்ன?' என்பது பொருள்.
[3] 16:15 = 1 கொரி 10:3.
[4] 16:16 'ஓர் ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[5] 16:18 = 2 கொரி 8:15.
[6] 16:23 எபிரேயத்தில் 'ஓய்வு' என்பது பொருள்.
[7] 16:23 = விப 20:8-11.
[8] 16:31 = எண் 11:7-8.
[9] 16:32 'ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[10] 16:33 = எபி 9:4.
[11] 16:35 = யோசு 5:12.
[12] 16:36 'ஓமர்' என்பது எபிரேய பாடம்.
[13] 16:36 'ஏப்பா' என்பது இருபது படி ஆகும்.

அதிகாரம் 17[தொகு]

பாறையிலிருந்து தண்ணீர்[தொகு]

(எண் 20:1-13)


1 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை.
2 இதனால் மக்கள் மோசேயிடம் வாதாடி, 'குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்' என்று கேட்டனர். மோசே அவர்களை நோக்கி, "நீங்கள் என்னோடு வாதாடுவது ஏன்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்?" என்றார்.
3 அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, "நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?" என்று கேட்டனர்.
4 மோசே ஆண்டவரிடம், "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" என்று கதறினார்.
5 ஆண்டவர் மோசேயிடம், "இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ.
6 இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்" என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார்.
7 இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் 'மாசா'[1] என்றும் 'மெரிபா'[2] என்றும் பெயரிட்டழைக்கப்பட்டது.

அமலேக்கியரோடு போர்[தொகு]


8 பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.
9 மோசே யோசுவாவை நோக்கி, "நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்" என்றார்.
10 அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர்.
11 மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளரவிட்ட போதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.
12 மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன.
13 யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
14 ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை; "நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்" என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவை" என்றார்.[3]
15 மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு 'யாவே நிசீ'[4] என்று பெயரிட்டழைத்தார்.
16 ஏனெனில், 'ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்' என்றுரைத்தார் அவர்.

குறிப்புகள்:[தொகு]


[1] 17:7 எபிரேயத்தில், 'சோதித்தல்' என்பது பொருள்.
[2] 17:7 எபிரேயத்தில், 'வாதாடுதல்' என்பது பொருள்.
[3] 17:14 = இச 25:17-19; 1 சாமு 15:2-9.'
[4] 17:15 எபிரேயத்தில், 'ஆண்டவர் என் கொடி' என்பது பொருள்.

அதிகாரம் 18[தொகு]

இத்திரோ-மோசே சந்திப்பு[தொகு]


1 மிதியானின் அர்ச்சகரும் மோசேயின் மாமனாருமாகிய இத்திரோ என்பவர் கடவுள் மோசேக்கும் அவர் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் செய்தது அனைத்தையும், ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்தினின்று வெளியேறச் செய்ததையும் கேள்வியுற்றார்.
2 மோசே முன்பு அனுப்பிவைத்திருந்த அவர் மனைவி சிப்போராவையும், இரு புதல்வர்களையும் அவர் மாமனாராகிய இத்திரோ அழைத்துக் கொண்டு வந்தார்.
3 'அயல் நாட்டில் அன்னியனாக உள்ளேன்' என்ற பொருளில் ஒருவனுக்குக் 'கேர்சோம்' என்று மோசே பெயரிட்டிருந்தார்.[1] [2]
4 என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின் 'கடவுளே என் துணை' என்ற பொருளில் 'எலியேசர்' என்று மற்றவனுக்குப் பெயரிட்டிருந்தார்.
5 பாலை நிலத்தில் கடவுளின் மலை அருகில் மோசே பாளையம் இறங்கியிருக்க, அவருடைய மாமனாராகிய இத்திரோ மோசேயின் புதல்வரோடும் மனைவியோடும் அவரிடம் வந்தார்.
6 "உம் மாமன் இத்திரோ என்ற நான் உம் மனைவியோடும் இரு மைந்தரோடும் வந்திருக்கிறேன்" என மோசேக்குச் சொல்லியனுப்பினார்.
7 மோசேயும் தம் மாமனாரைச் சந்திக்க எதிர்கொண்டு வந்தார்; அவர்முன் தாழ்ந்து பணிந்தார்; அவரை முத்தமிட்டார். இருவரும், ஒருவர் ஒருவரிடம் நலம் விசாரித்துக்கொண்டு, பாளையத்தில் புகுந்தனர்.
8 இஸ்ரயேலின் நலனை முன்னிட்டு ஆண்டவர் பார்வோனுக்கும் எகிப்திற்கும் செய்தது அனைத்தைப் பற்றியும், வழியில் தங்களுக்கு நேரிட்ட எல்லாத் தொல்லைகளைப் பற்றியும் ஆண்டவர் தங்களுக்கு விடுதலை அளித்தது பற்றியும் மோசே தம் மாமனாருக்கு விவரித்துச் சொன்னார்.
9 இஸ்ரயேலை எகிப்தின் பிடியினின்று விடுவிக்கையில், ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளைக் குறித்தும் இத்திரோ அகமகிழ்ந்தார்.
10 அப்போது இத்திரோ, "ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! எகிப்தியர் பிடியினின்றும் பார்வோன் பிடியினின்றும் உங்களை விடுவித்தவர் அவரே.
11 அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயாந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன். ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே" என்றுரைத்தார்.
12 மோசேயின் மாமனாராகிய இத்திரோ கடவுளுக்கு எரிபலியையும், பலிகளையும் செலுத்தினார். ஆரோனும் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களும் மோசேயின் மாமனாருடன் கடவுள் திருமுன் உணவருந்தச் சென்றனர்.

நீதிபதிகள் நியமனம்[தொகு]


13 மறுநாள் மோசே மக்களுக்கு நீதிவழங்க அமர்ந்தார். காலை முதல் மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
14 மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். "நீர் மக்களுக்குச் செய்துகொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலைமுதல் மாலைவரை உம்மைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?" என்று அவர் கேட்டார்.
15 மோசே தம் மாமனாரை நோக்கி, "கடவுளின் தீர்ப்பை நாடி மக்கள் என்னிடமே வருகின்றனர்.
16 அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்படும்போது என்னிடம் வர ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் நடுநின்று நானும் நீதி வழங்குகிறேன். கடவுளுடைய நியமங்களையும் அவர் சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறேன்" என்றார்.
17 மோசேயின் மாமனார் அவரை நோக்கி, "நீர் செயல்படும் முறை சரியல்ல.
18 நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது.
19 இப்போது, நான் சொல்வதைக் கேளும். உமக்கோர் அறிவுரை கூறுகிறேன். கடவுள் உம்மோடு இருப்பாராக! கடவுளின் திருமுன் நீர் மக்களின் பதிலாளாக இருந்து அவர்கள் விவகாரங்களைக் கடவுளிடம் எடுத்துச் செல்வீர்.
20 நியமங்களையும் சட்டங்களையும் பற்றி நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியையும், அவர்கள் ஆற்றவேண்டிய பணியையும் நீர் அவர்களுக்கு அறிவிப்பீர்.
21 மேலும், மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர், பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர்.
22 அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் உம்மிடம் கொண்டுவரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக, உமக்கும் சுமை குறையும். அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர்.
23 கடவுள் கட்டளையிடும் இக்காரியத்தை நீர் செய்தால், உம்மால் பளுவைத் தாங்க இயலும்; இம் மக்கள் அனைவரும் தம்தம் இடத்திற்கு மன அமைதியுடன் செல்வர்" என்றார்.


24 மோசே தம் மாமனாரின் சொல்லைக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் செய்தார்.
25 மோசே, இஸ்ரயேல் அனைவரிலும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து மக்களில் ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர், பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக அவர்களை நியமித்தார்.
26 அவர்களும் மக்களுக்கு எப்பொழுதும் நீதி வழங்கி வந்தனர்; கடினமான சிக்கல்களை மோசேயிடம் கொண்டு சென்றனர். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கினர்.
27 மோசே தம் மாமனாரை வழியனுப்பி வைக்க, அவரும் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 18:2-3 = விப 2:21-22.
[2] 18:3 = திப 7:29.

அதிகாரம் 19[தொகு]

சீனாய் மலையருகில் இஸ்ரயேலர்[தொகு]


1 எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர்.
2 இரபிதிமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.
3 ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார். அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, "யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்லவேண்டியது - இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது - இதுவே:
4 "நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
5 நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்.
6 மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை" என்றார்.


7 மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
8 மக்கள் அனைவரும் ஒரே குரலாக, "ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்" என்று மறுமொழி கூறினர். மக்களின் பதிலை மோசே ஆண்டவரிடம் சமர்ப்பித்தார்.
9 ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார் மேகத்தில் உன்னிடம் வருவேன்" என்றார். மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார்.
10 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும்.
11 இவ்வாறு மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கிவருவார்.
12 மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு. உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி.
13 அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாகவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள்[] மலைமேல் ஏறிவரட்டும்" என்றார்.
14 மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார். மக்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள்.
15 அவர் மக்களை நோக்கி, "மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள். மனைவியோடு கூடாதிருங்கள்" என்றார்.


16 மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர்.
17 கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள்.
18 சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19 எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.
20 ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார்.
21 ஆண்டவர் மோசேயை நோக்கி, "இறங்கிச் செல். மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும், அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய்.
22 அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்" என்று சொன்னார்.
23 மோசே ஆண்டவரிடம், "சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள். ஏனெனில், 'மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து' என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்" என்றார்.
24 ஆண்டவர் அவரை நோக்கி, "நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா. குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்; இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்" என்றார்.
25 மோசே கீழே இறங்கி, மக்களிடம் இதுபற்றிக் கூறினார்.

அதிகாரம் 20[தொகு]

கடவுள் தந்த கட்டளைகள்[தொகு]

(இச 5:1-21)


1 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.[1]


6 மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.[2]
7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.[3]
8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.[4]
9 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.
10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.[5]
11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.[6]
12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.[7]
13 கொலை செய்யாதே.[8]
14 விபசாரம் செய்யாதே.[9]
15 களவு செய்யாதே.[10]
16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.[11]
17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.[12]

மக்களின் அச்சம்[தொகு]

(இச 5:22-33)


18 மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும் எக்காள முழக்கத்தையும் புகையையும் மலையையும் கண்டனர்; கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு,
19 மோசேயை நோக்கி, "நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில் நாங்கள் செத்துப் போவோம்" என்றனர்.[13]
20 மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்" என்றார்.
21 மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.

பலி பீடம் பற்றிய சட்டங்கள்[தொகு]


22 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு உரைத்தார்: இவ்வாறு நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்; "நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்பதை நீங்கள் கண்டீர்கள்.
23 எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.
24 எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து, உன் ஆடுகளையும் மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும், நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து. நான் என் பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
25 எனக்காகக் கற்பீடம் அமைத்தால், செதுக்கிய கற்கள் கொண்டு கட்டவேண்டாம். ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய்.[14]
26 உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி, படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.

குறிப்புகள்:[தொகு]


[1] 20:4-5 = விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27:15.
[2] 20:5-6 = விப 34:6-7; எண் 14:18; இச 7:9-10.
[3] 20:7 = லேவி 19:12.
[4] 20:8 = விப 16:23-30; 31:12-14.
[5] 20:9-10 = விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23:3.
[6] 20:11 = தொநூ 2:1-3; விப 31:17.
[7] 20:12 = இச 27:16; மத் 15:4; 19:19; மாற் 7:10; 10:19; லூக் 18:20; எபே 6:2-3.
[8] 20:13 = தொநூ 9:6; லேவி 24:17; மத் 5:21; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11.
[9] 20:14 = லேவி 20:10; மத் 5:27; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11.
[10] 20:15 = லேவி 19:11; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9.
[11] 20:16 = விப 23:1; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20.
[12] 20:17 = உரோ 7:7; 13:9.
[13] 20:18 = எபி 12:18-19.
[14] 20:25 = இச 27:5-7; யோசு 8:31.

அதிகாரம் 21[தொகு]

அடிமைகள்[தொகு]

(இச 15:12-18)
1 அவர்களுக்கு நீ அளிக்க வேண்டிய நீதிச்சட்டங்கள் பின்வருமாறு:
2 நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால், அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான். ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடுதலைபெற்று வெளியேறுவான்.
3 தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்; மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.
4 தலைவன் அவனுக்குப் பெண் கொடுத்திருக்க அவள்வழி அவனுக்குப் புதல்வரோ புதல்வியரோ பிறந்திருந்தால், மனைவியும் பிள்ளைகளும் அவளுடைய தலைவனுக்கே சொந்தமானவர். எனவே அவன் மட்டும் தனித்து வெளியேறுவான்.
5 அந்த அடிமை, "நான் என் தலைவனுக்கும் என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் அன்பு காட்டுகிறேன்; நான் விடுதலை பெற்றவனாய் வெளியேறிச் செல்ல மாட்டேன்" எனக் கூறுமிடத்து,
6 அவனை அவனுடைய தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான். தலைவன் அவனைக் கதவருகில் அல்லது வாயில் நிலைக்கால் மட்டும் கூட்டிவந்து அவனது காதில் தோல் தைக்கும் ஊசியால் துளைபோடுவான். அவன் எக்காலமும் அவனுக்குப் பணிவிடை செய்வான்.[1]
7 ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றிருந்தால், ஆண் அடிமைகள் வெளியேறிச் செல்வதுபோல் அவள் செல்லலாகாது.
8 தலைவன் தனக்காக அவளை வைத்திருக்க, அவள் அவனுக்குப் பிடிக்காதவளாய் நடந்து கொண்டால், அவள் மீட்கப்படுவதை அவன் ஏற்றுக்கொள்ளட்டும்; ஆனால், அன்னியருக்கு அவளை விற்றுவிட அவனுக்கு அதிகாரமில்லை; அது அவளுக்குத் துரோகம் இழைப்பதாகும்.
9 அவன் தன் மகனுக்காக அவளை நிச்சயித்திருந்தால், ஒரு மகளை நடத்தும் முறைப்படி அவன் அவளுக்குச் செய்யவேண்டும்.
10 அவனுடைய மகன் தனக்கென வேறொருத்தியை வைத்துக்கொண்டிருந்தால், உணவு, உடை, மணஉறவின் கடமைகள் இவற்றில் அவளுக்குக் குறை வைக்கலாகாது.
11 இம்மூன்றையும் தலைவன் அவளுக்குச் செய்யவில்லையெனில், அவள் பணம் எதுவும் தராமல் புறப்பட்டுப் போய்விடலாம்.

வன்முறைச் செயல்கள்[தொகு]


12 மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும்.[2]
13 அவர் சாகடிக்கப் பதுங்கி இராதிருந்தும் அவரது கையாலேயே கொல்லப்படக் கடவுள் விட்டிருந்தால், அத்தகையவர் தப்பியோட ஓர் இடத்தை நான் ஏற்பாடு செய்வேன்.[3]
14 ஆனால் பிறர்மேல் வெகுண்டெழுந்து, சதித்திட்டத்தால் அவரைச் சாகடிக்கிற எவரும் என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார்.


15 தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.


16 ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ, அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ, அந்த ஆள் கொல்லப்பட வேண்டும்.[4]


17 தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.[5]


18 இருவர் சண்டையிடுகையில், ஒருவர் மற்றவரைக் கல்லாலோ கை முட்டியாலோ தாக்கியும், தாக்கப்பட்டவர் சாகாமல் படுக்கையில் கிடந்து,
19 பின்னர் எழுந்து, கோல் ஊன்றி வெளியே நடக்கத் தொடங்கினால், தாக்கியவர் குற்றப்பழி அற்றவர் ஆவார். ஆயினும் அவரது வேலையிழப்பை முன்னிட்டு அவருக்கு இழப்பீடு கொடுக்கவும் அவரை முழுமையாகக் குணமாக்கவும் வேண்டும்.


20 ஒருவர் தம் அடிமையை அல்லது அடிமைப்பெண்ணைக் கோலால் அடிக்க, அவர் அங்கேயை இறந்துவிட்டால், அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார்.
21 ஆனால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் இன்னும் உயிரோடிருந்தால், அவர் பழிவாங்கப்படார். ஏனெனில் அடிமை அவரது சொத்து.


22 ஆள்கள் சண்டையிடுகையில், கர்ப்பிணியான பெண்ணுக்கு அடிபட, வேறு யாதொரு கேடும் இன்றிப் பேறுகாலத்துக்குமுன் பிரசவமாகிவிட்டால், அப்பெண்ணின் கணவன் கேட்கிறபடி தண்டம் விதிக்கப்பட்டு, நடுநிலையாளர் வழியாக அது கொடுக்கப்பட வேண்டும்.
23 ஆனால் கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர்;
24 கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்;[6]
25 சூட்டுக்குச் சூடு; காயத்துக்கு காயம்; கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.
26 ஒருவர் தம் அடிமைகளில் ஆணையோ பெண்ணையோ, அடிக்க, அடிபட்டவர்க்குக் கண்கெட்டுப்போனால் கண்ணுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பி விடவேண்டும்.
27 ஒருவர் தம் அடிமைப் பெண்ணின் பல்லை உடைத்துவிட்டால், பல்லுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பிவிடவேண்டும்.

உரிமையாளரின் கடமைகள்[தொகு]


28 மாடு தன் கொம்பினால் குத்தி, ஒருவனோ ஒருத்தியோ இறந்துவிட்டால், அம்மாடு கொல்லப்பட வேண்டும். அதன் இறைச்சி உண்ணப்படலாகாது. மாட்டின் சொந்தக்காரர் குற்றமற்றவராவார்.
29 ஆனால் மாட்டுக்குக் குத்தும் பழக்கம் முன்னரே இருந்திருக்க, அதன் சொந்தக்காரரை எச்சரித்திருந்தும், அவர் ஆவன செய்யாதிருந்த நிலையில், அது ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்று போட்டால், அம்மாடு கல்லால் எறிந்து கொல்லப்படும். அதன் உரிமையாளரும் கொல்லப்படுவார்.
30 மாறாக, தம் உயிரின் மீட்புக்காக விதிக்கப்பட்ட அனைத்தையும் அவர் கொடுப்பார்.
31 மகனாயினும் மகளாயினும் கொம்பினால் குத்திக் கொல்லப்பட்டால், இந்த நீதிச்சட்டத்திற்கேற்ப ஆகட்டும்.
32 அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை மாடொன்று குத்திக்கொன்று போட்டால், அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார் மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.
33 ஒருவர் குழியொன்றைத் திறந்துவிட்டபின்னரோ அல்லது புதிதாகக் குழியொன்றை வெட்டிய பின்னரோ அதனை மூடி வைக்காதிருக்க, மாடோ கழுதையோ அதில் விழுந்துவிட நேரிட்டால்,
34 அதன் உரிமையாளருக்குக் குழியின் சொந்தக்காரர் பணம் ஈடுகட்டி செத்ததை எடுத்துக்கொள்வார்.
35 ஒருவரின் மாடு பிறர் மாட்டைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டால், உயிரோடிருக்கும் மாட்டை விற்றுப் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள். செத்ததையும் அவர்கள் கூறுபோட்டுக் கொள்வார்கள்.
36 ஆனால் மாடு குத்தும் பழக்கமுடையது என முன்னரே தெரிந்திருந்தும், அதன் உரிமையாளர் எதுவும் செய்யாதிருந்தால், அவர் மாட்டுக்கு மாடு என ஈடுகொடுக்கத்தான் வேண்டும். செத்தது அவரைச் சேரும்.

குறிப்புகள்:[தொகு]


[1] 21:2-6 = லேவி 25:39-46.
[2] 21:12 = லேவி 24:17.
[3] 21:13 = எண் 35:10-34; இச 19:1-13; யோசு 20:1-9.
[4] 21:16 = இச 24:7.
[5] 21:17 = லேவி 20:9; மத் 15:4; மாற் 7:18.
[6] 21:24 = லேவி 24:19-20; இச 19:21; மத் 5:38.

அதிகாரம் 22[தொகு]

ஈடுதருதல் பற்றிய சட்டங்கள்[தொகு]


1 ஆட்டையோ மாட்டையோ ஒருவர் திருடி வெட்டி விட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவர்.


2 திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்குண்டு இறந்து போனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை.
3 கதிரவன் உதித்தபின் இது நிகழ்ந்திருந்தால், இரத்தப்பழி உண்டு. அவர் ஈடுகொடுத்தே ஆகவேண்டும். திருட்டுக்கு ஈடாக அவரிடம் எதுவுமே இல்லையெனில் அவர் விற்கப்படுவார்.
4 அவர் திருடின மாடோ கழுதையோ ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் இருமடங்காக ஈடு கொடுப்பார்.


5 ஒருவர் இன்னொருவர் வயலிலோ, திராட்சைத் தோட்டத்திலோ கால்நடைகளை மேயவிட்டால், அல்லது அவிழ்த்து விட்டவை பிறர் வயலில் மேய்ந்துவிட்டால், தம் வயலின் சிறந்த விளைச்சலினின்றும், தம் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த பலனினின்றும் ஈடுசெய்வார்.


6 தீப்பிடித்து, முட்புதர்களில் பரவி, தானியக் குவியலோ விளைந்த பயிரோ வயலோ எரிந்துவிட்டால், தீயை மூட்டியவர் ஈடுகொடுத்தே ஆகவேண்டும்.


7 ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால் திருடர் இருமடங்காக ஈடு செய்ய வேண்டும்.
8 திருடர் கண்டுபிடிக்கப்படாவிடில், பிறர் பொருள்களில் வீட்டுத் தலைவர் கை வைத்தாரா இல்லையா என மெய்ப்பிக்க அவர் கடவுள்முன் நிற்பார்.


9 நம்பிக்கைத் துரோகம் எதிலும் - அது மாடு, கழுதை, ஆடு, உடை அல்லது வேறு எதுபற்றியதானாலும் - 'இது என்னுடையது' என இருவரும் கூறினால் வழக்கு கடவுளிடம் வர வேண்டும். கடவுள் யாரைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடுவாரோ அவர் இருமடங்காகப் பிறருக்கு ஈடுசெய்ய வேண்டும்.


10 ஒருவர் பிறரிடம் கழுதை, மாடு, ஆடு, அல்லது வேறொரு விலங்கைப் பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்கையில் அது இறந்துபோனால், அல்லது காயப்பட்டுவிட்டால், அல்லது யாரும் பார்க்காத வேளையில் ஓட்டிச் செல்லப்பட்டால்,
11 அவர் பிறரது உடைமையில் தாம் கைவைக்கவில்லை என்பதற்கு ஆண்டவர்மேல் இடும் ஆணை அவர்களுடைய வழக்கை முடிவு செய்யும். உரிமையாளர் அதை ஏற்றுக் கொள்வார். மற்றவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை.
12 ஆனால் அவருடன் இருக்கும்போது அது திருடப்பட்டால், அதன் உரிமையாளருக்கு அவர் ஈடு செய்ய வேண்டும்.
13 அது விலங்கினங்களால் பீறித் துண்டாக்கப்பட்டிருந்தால், பீறப்பட்டத்தைச் சான்றாகக் கொண்டுவருவார். அவர் ஈடுசெய்ய வேண்டியதில்லை.


14 ஒருவர் பிறரிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்டது, உரிமையாளர் அதன் அருகில் இல்லாத வேளையில் காயப்பட்டுவிட்டால் அல்லது இறந்துவிட்டால் அவர் அதற்கு ஈடு செய்யத்தான் வேண்டும்.
15 உரிமையாளர் அதன்கூட இருந்திருந்தால், அவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை. அது வாடகைக்கு எடுக்கப்பட்டதென்றால் வாடகை செலுத்தப்பட்டால் போதும்.

ஒழுக்க நெறிகள்[தொகு]


16 திருமண ஒப்பந்தமாகாத கன்னிப்பெண்ணை ஒருவன் வசப்படுத்தி அவளோடு படுத்தால், மனைவிக்குரிய பரியம் கொடுத்து அவளை வைத்துக் கொள்ள வேண்டும்.
17 ஆனால், அவள் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலும் மறுத்தால், கன்னிப் பெண்ணுக்குரிய பரியத்துக்குச் சமமான பணம் அவன் கட்டவேண்டும்.[1]


18 சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே.[2]


19 விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும். [3]


20 ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும். [4]


21 அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள்.
22 விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.[5]
23 நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.
24 மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.


25 உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.[6]
26 பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.
27 ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர். [7]


28 கடவுளை நீ பழிக்காதே. உன் மக்களின் தலைவனைச் சபிக்காதே.[8]
29 உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே. உன் புதல்வருள் தலைப்பேறானவனை எனக்கு அர்ப்பணிப்பாய்.
30 உன் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் நீ அவ்வாறே செய்வாய். குட்டி ஏழு நாள் தன் தாயோடு இருக்கட்டும். எட்டாம் நாளன்று அதை எனக்கு அளிப்பாய்.
31 என் முன்னிலையில் நீங்கள் தூயவராய் இருங்கள். வயல் வெளியில் பீறப்பட்டுக் கிடக்கும் இறைச்சியை நீங்கள் உண்ண வேண்டாம். அதை நாய்களுக்குப் போடுங்கள்.[9]

குறிப்புகள்:[தொகு]


[1] 22:16-17 = இச 22:28-29.
[2] 22:18 = இச 18:10,11.
[3] 22:19 = லேவி 18:23; 20:15-16; இச 27:21.
[4] 22:20 = இச 17:2-7.
[5] 22:21-22 = விப 23:9; லேவி 19:33-34; இச 24:17-18; 27:19.
[6] 22:25 = லேவி 25:35-38; இச 15:7-11; 23:19-20.
[7] 22:26-27 = இச 24:10-13.
[8] 22:28 = திப 23:5.
[9] 22:31 = லேவி 17:15.

அதிகாரம் 23[தொகு]

நீதியும் இரக்கமும்[தொகு]


1 பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்.
2 கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்!
3 எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.


4 உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு.


5 உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.


6 உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே.
7 தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன்.
8 கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.


9 அன்னியரை நீ ஒடுக்காதே. அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராக இருந்தீர்கள்.

ஓய்வு ஆண்டும் ஓய்வு நாளும்[தொகு]


10 ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலைச் சேமித்து வைப்பாய்.
11 ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும் தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய். உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும். அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும். உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவ தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய்.


12 ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்; ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய். இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்; உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அன்னியரும் இளைப்பாறுவர்.
13 நான் உங்களுக்கு சொன்ன யாவற்றையும் கடைபிடியுங்கள். பிற தெய்வங்களின் பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டாம். அது உங்கள் வாயில் ஒலிக்கவும் வேண்டாம். <

முப்பெரும் விழாக்கள்[தொகு]

(விப 34:18-26; இச 16:1-17) br>14 ஆண்டில் மூன்று முறை நீ எனக்கு விழா எடுப்பாய்.
15 புளிப்பற்ற அப்ப விழாவை நீ கொண்டாட வேண்டும். நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபிபு மாதத்தில் குறிக்கபட்ட காலத்தில் ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்பாய். ஏனெனில், அப்போது நீ எகிப்திலிருந்து வெளியேறினாய். எவரும் வெறுங்கையராக என் திருமுன் வரவேண்டாம்.


16 வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, 'அறுவடைவிழா'வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் 'சேகரிப்பு விழா'வும் எடுக்க வேண்டும்.
17 ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும் தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.


18 எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. என் விழாவிலுள்ள கொழுப்பு காலைவரைக்கும் இருக்கக்கூடாது.


19 உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய். குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்காதே.

வாக்குறுதிகள், அறிவுரைகள்[தொகு]


20 வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
21 அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.


22 நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.


23 ஏனெனில், என் தூதர் உனக்குமுன் சென்று உன்னை எமோரியர், இத்தியர், பெரிசியர், கானானியர், இவ்வியர், எபூசியர் இவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது நான் அவர்களை அழித்தொழிப்பேன்.
24 நீ அவர்கள் தெய்வங்களைப் பணிந்து கொள்ளவோ, அவைகளுக்கு வழிபாடு செய்யவோ, அவைகளுக்குரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். மாறாக அவற்றை அழித்தொழித்து அவற்றின் சிலைத்தூண்களை உடைத்துத் தள்ளுவாய்.
25 நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும். அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார். அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார்.
26 குறைகாலப் பிள்ளைப்பேறும் மலடும் உன் நாட்டில் இரா. உன் வாழ்நாள்களின் எண்ணிக்கையை நான் நிறைவு செய்வேன்.
27 'என் பேரச்சத்தை' உனக்கு முன்னர் அனுப்பி, உன்னை எதிர்ப்படும் எல்லா மக்களையும் நான் கதிகலங்கச் செய்வேன். உன் பகைவர் அனைவரும் உனக்குப் புறம்காட்டச் செய்வேன்.
28 உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன். அவை இவ்வியரையும் கானானியரையும் இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.
29 ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.
30 எனவே நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.
31 உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும், பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும், விரிந்து கிடக்கச் செய்வேன். ஏனெனில் அந்நாட்டின் குடிமக்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன். நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திடுவாய்.
32 நீ அவர்களுடனோ அவர்களுடைய தெய்வங்களுடனோ எந்த உடன்படிக்கையும் செய்யாதே!
33 அவர்கள் உன் நாட்டில் குடியிருக்க வேண்டாம். இல்லையெனில் நீ எனக்கு எதிராகப் பாவம் செய்ய அவர்கள் காரணமாவர். நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்.

குறிப்புகள்:[தொகு]


[1] 23:1 = விப 17:16; லேவி 19:11-12; இச 5:20.
[2] 23:3 = லேவி 19:15.
[3] 23:4-5 = இச 22:1-4.
[4] 23:6-8 = லேவி 19:15; இச 16:9.
[5] 23:9 = விப 22:21; லேவி 19:33-34
[6] 23:10-11 = லேவி 25:1-7.
[7] 23:12 = விப 20:9-11; 31:15; 34:21; 35:2; லேவி 23:3; இச 5:13-14.
[8] 23:15 = விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:17-25.
[9] 23:16 = லேவி 23:15-21,39-43; எண் 28:26-31.
[10] 23:19 = விப 34:26; இச 14:21; 26:2.


அதிகாரம் 24[தொகு]

உடன்படிக்கை[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம், "ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்; தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள்.
2 மோசே மட்டும் ஆண்டவர் அருகில் வரலாம்; ஏனையோர் அருகில் வரலாகாது; மக்கள் அவரோடு மலை மேலேறி வரக்கூடாது" என்று கூறினார்.
3 எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக: "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளித்தனர்.
4 மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார்.
5 அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
6 மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார்.
7 அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்" என்றனர்.
8 அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார்.[1]


9 பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று,
10 இஸ்ரயேலின் கடவுளைக் கண்டார்கள். அவர் பாதங்களின் கீழுள்ள தளம் நீல மணிக்கல் இழைத்த வேலைப்பாடு போன்றும், தள்ளிய வான்வெளி போன்றும் இருந்தது.
11 இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை. அவர்கள் கடவுளைக் கண்டனர்; உண்டு குடித்தனர்.

சீனாய் மலைமேல் மோசே[தொகு]


12 ஆண்டவர் மோசேயை நோக்கி, "என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு. அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்" என்றார்.
13 மோசே தம் துணையாளர் யோசுவாவுடன் எழுந்து சென்றார். பின் மோசே கடவுளின் மலையின்மேல் ஏறிச் செல்கையில்,
14 அவர் பெரியோர்களை நோக்கி, "நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இவ்விடத்திலேயே எங்களுக்காகக் காத்திருங்கள். இதோ ஆரோனும், கூரும் உங்களோடு இருக்கிறார்கள். வழக்கு ஏதுமிருப்பவன் அவர்களை அணுகட்டும்" என்றார்.


15 பின்னர் மோசே மலைமேல் ஏறிச்செல்ல, ஒரு மேகம் மலையை மூடிற்று.
16 ஆண்டவரின் மாட்சி சீனாய் மலைமேல் தங்கிற்று. மேகம் மலையை ஆறுநாள்களாக மூடியிருந்தது. ஏழாம் நாள் அவர் மேகத்தின் நடுவினின்று மோசேயை அழைத்தார்.
17 மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது.
18 மோசே மேகத்தின் இடையே புகுந்து, மலைமேல் ஏறிச் சென்றார். மோசே மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.[2]

குறிப்புகள்:[தொகு]


[1] 24:8 = மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20; 1 கொரி 11:25; எபி 9:19-20; 10:29.
[2] 20:18 = இச 9:9.

அதிகாரம் 25[தொகு]

திருத்தலத்திற்கான காணிக்கை[தொகு]

(விப 35:4-9)


1 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
2 இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.
3 நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்;
4 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்; மெல்லிய நார்ப்பட்டு; வெள்ளாட்டு உரோமம்;
5 செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்; சித்திம் மரம்;
6 விளக்குக்கான எண்ணெய்; திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமண வகைகள்;
7 ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.
8 நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்.
9 திருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.


10 சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
11 அதன் மேலெங்கும் பசும்பொன்னால் மூடுவாய். உள்ளும்புறமும் வேய்ந்திடுவாய். அதைச் சுற்றிலும் ஒரு பொன் தோரணம் பொருத்திடுவாய்.
12 நான்கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்.
13 சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றையும் பொன்னால் மூடுவாய்.
14 பேழையைத் தூக்கிச்செல்லும்படி பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளை மாட்டிவைப்பாய்.
15 தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும். அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.
16 நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளைப் பேழையினுள் வைப்பாய்.


17 மேலும் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.[1]
18 இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
19 ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.
20 அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.
21 பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து. பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.
22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.

அப்ப மேசை[தொகு]

(விப 37:10-16)
23 சித்திம் மரத்தால் ஒரு மேசை செய். அதன் நீளம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
24 அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன்தோரணம் செய்து வைப்பாய்.
25 மேலும் நான்கு விரல்கடை[2] அளவில் அதற்குச் சுற்றுச்சட்டம் அமைத்து, சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைப்பாய்.
26 அதற்கு நான்கு பொன் வளையங்கள் செய்து, நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் இணைத்துவிடு.
27 மேசையைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்கும் வளையங்கள் சட்டத்தின் அருகில் கிடக்கட்டும்.
28 சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து, அவற்றையும் பொன்னால் பொதிவாய். இவைகளைக் கொண்டே மேசை தூக்கிச் செல்லப்பட வேண்டும்.
29 அதற்குரிய தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்ம பலிக்கான குவளைகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். பசும் பொன்னால் அவற்றைச் செய்க.
30 என்முன் இம்மேசைமேல் எப்பொழுதும் 'திருமுன்னிலை அப்பம்' வைப்பாயாக![3]

விளக்குத் தண்டு[தொகு]

(விப 37:17-24)
31 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.
32 விளக்குத்தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும், விளக்குத்தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக, அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் செல்லும்.
33 ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் சேர்ந்து அமையும். மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் அமையும். இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.
34 ஆனால், விளக்குத் தண்டுக்கு நேர் மேலே வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் அமையும்.
35 முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளுக்கும் அமையும்.
36 அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தவையாயும் பசும்பொன் அடிப்பு வேலையுடன் அமைந்தவையாயும் இருக்கும்.
37 அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்; முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.
38 அதன் அணைப்பான்களும், நெருப்புத் தட்டுகளும் பசும்பொன்னாலேயே ஆக்கப்படவேண்டும்.
39 அதனையும் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்சொன்னால் செய்து முடிப்பாய்.
40 மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றைச் செய்யுமாறு கவனித்துக் கொள்.[4]

குறிப்புகள்:[தொகு]


[1] 25:17 = எபி 9:5.
[2] 25:25 'தோப்பகு' என்பது எபிரேய பாடம்.
[3] 25:30 = லேவி 24:5-8.

அதிகாரம் 26[தொகு]

சந்திப்புக் கூடாரம்[தொகு]

(விப 36:8-38)
1 மேலும் திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
2 மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம். ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.
3 இவற்றுள் ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் ஏனைய ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் இணைத்து விட வேண்டும்.
4 பின்னர், முதல் தொகுப்பின் கடை ஓரத்தில் நீல வண்ணத்துணி வளையங்களை அமைப்பாய்; அவ்வாறே அடுத்த தொகுப்பின் கடை ஓரத்திலும் வளையங்களை அமைப்பாய்.
5 முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது. வளையங்கள் எதிரெதிரே இருக்க வேண்டும்.
6 பொன்னால் கொக்கிகள் ஐம்பது செய்து, அக்கொக்கிகளால் திரைத்தொகுப்புகளை ஒன்றாய் இணைத்துவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமையும்.


7 திருஉறைவிடத்தின் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு உரோமத்தால் மூடுதிரைகள் செய்வாய். பதினொரு மூடுதிரைகள் செய்யப்பட வேண்டும்.
8 ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழம். அகலம் நான்கு முழம். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றே.
9 இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும் ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்துவிடு. ஆறு மூடுதிரைகளின் தொகுப்பு கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடக்கட்டும்.
10 முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைப்பாய். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த திரைத்தொகுப்பின் ஓரத்திலும் அமைப்பாய்.


11 வெண்கலத்தால் ஐம்பது கொக்கிகள் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டிவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து கூடார மூடுதிரை அமையும்.
12 கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும். திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.
13 கூடார மூடுதிரையின் பக்கங்களில் மீந்திருக்கும்பகுதி, திருஉறைவிடத்தின் ஒருபுறம் ஒரு முழமும், மறுபுறம் ஒரு முழமும் தொங்கி மறைக்கும்.
14 செந்நிறப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும் கூடாரத்திற்கு ஒரு மேல்விரிப்பு செய்வாய்.


15 திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச் சித்திம் மரத்தால் செய்வாய்.
16 ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம். சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.
17 சட்டம் ஒன்றுக்கு இரு கொளுத்துகள் வீதம் சட்டத்தோடு சட்டத்தை இணைத்து விடு. அவ்வாறே திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களும் இணைக்கப்பட வேண்டும்.
18 திருஉறைவிடத்திற்காகச் சட்டங்கள் செய்யுங்கள்; தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி நிற்க வேண்டியவை இருபது சட்டங்கள்.
19 ஒரு சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருத்துகள், அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருள்கள் என்று இருபது சட்டங்களுக்குக் கீழே நாற்பது வெள்ளிப் பொருத்துகள் வேண்டும்.
20 திரு உறைவிடத்தின் இரண்டாவது பக்கமாகிய வடதிசையில் இருபது சட்டங்கள் நிற்கும்.
21 ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு, மறுசட்டத்துக்குக் கீழே இரண்டு என்று அவற்றில் நாற்பது வெள்ளிபாதப் பொருத்துகள் இடம் பெறும்.
22 திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்குப்பக்கத்திற்கான ஆறு சட்டங்கள் செய்வாய்.
23 அதனுடன் திருஉறைவிடத்தின் மூலைகளுக்காக இரண்டு சட்டங்களும் செய்வாய்.
24 அவை ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்படும். இவ்வாறே இரண்டு மூலைகளும் அமையும்.
25 ஒரு சட்டத்தின் அடியில் இரு பாதப்பொருத்துகள், மறுசட்டத்தினடியில் இரு பாதப்பொருத்துகள் என்று எட்டுச் சட்டங்களுக்குப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகள் வேண்டும்.


26 சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்கள் செய்வாய். திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும்,
27 திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும், மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே ஐந்துமாகக் குறுக்குச் சட்டங்கள் பொருத்துவாய்.
28 நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், பலகைகளுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செலுத்தப்படவேண்டும்.
29 சட்டங்களைப் பொன்னால் பொதிவாய்; அவற்றில் குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்காக வளையங்களைப் பொன்னால் செய்; குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிவாய்.
30 இவ்வாறு மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட திட்டப்படி திருஉறைவிடத்தை நிறுவுவாய்.


31 மேலும் ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
32 அதனை நான்கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய். இவை பொன் வளைவாணிகள் கொண்டவை; பசும்பொன்னால் மூடப்பட்டு நான்கு வெள்ளி பாதப்பொருள்களில் நிற்பவை.
33 கொக்கிகளில் அந்தத் திரையைத் தொங்கவிடு; அதற்கு உட்புறமாக உடன்படிக்கைப் பேழையை வைப்பாய். இவ்வாறு தொங்குதிரை தூயகத்தையும் திருத்தூயகத்தையும் பிரிக்கும்.
34 திருத்தூயகத்தில், உடன்படிக்கைப் பேழையின்மேல் இரக்கத்தின் இருக்கையை அமைப்பாய்.
35 தொங்குதிரைக்கு முன்புறம் ஒரு மேசையையும், மேசைக்கு எதிரே, திருஉறைவிடத்தின் தென்புறம், விளக்குத்தண்டையும் வைப்பாய்; மேசையையோ வடபுறம் வைப்பாய்.
36 கூடாரத்தின் நுழைவிடத்திற்காக ஒரு தொங்குதிரை செய்வாய். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், பின்னல்வேலை கொண்டதாகச் செய்யப்பட வேண்டும்.
37 இத்திரையைத் தொங்கவிடுவதற்காக, ஐந்து சித்திம் மரத்தூண்களைச் செய்துவை. இவை பசும்பொன்னால் மூடப்பட்டனவாயும், பசும்பொன் வளைவாணிகள் கொண்டனவாயும், ஐந்து வெண்கலப் பாதப்பொருத்துகளில் நிற்பனவாயும் அமையட்டும்.

குறிப்பு:[தொகு]


[*] 26:33 = எபி 6:19; 9:3-5.

அதிகாரம் 27[தொகு]

பலிபீடம்[தொகு]


1 சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். நீளம் ஐந்து முழம், அகலம் ஐந்து முழமாகப் பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும். அதன் உயரமோ மூன்று முழம்.
2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய். கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும். பின் அதை வெண்கலத்தால் மூடு.
3 பின்னர் அதைச் சார்ந்த சாம்பல் சட்டிகள், அள்ளுகருவிகள், பலிக் கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்வாய்.
4 அதைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து, அத்தோடு இணைப்பாய். நான்கு மூலைகளிலும் நான்கு வளையங்களைப் பொருத்துவாய்.
5 பலிபீடத்தின் பாதிப் பகுதியை எட்டும்படி அதன் விளிம்புக்குக் கீழே வலைப் பின்னலைப் பொருத்து.
6 பலிபீடத்தின் தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து, அவற்றை வெண்கலத்தால் மூடுவாய்.
7 பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் இத்தண்டுகள் வளையங்களில் செலுத்தப்படும்.
8 பலகைகளைச் சேர்த்து உள்கூடாகப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலைமேல் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அது செய்யப்படட்டும்.
9 திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய். தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை நூறுமுழ நீளத்திற்குப் போடவேண்டும்.
10 அதற்கு இருபது தூண்களும், வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.
11 அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும், அவற்றுடன் இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.
12 மேற்குப் பக்கத்தில் முற்றத்தின் அகலப்பகுதி ஐம்பது முழத் தொங்குதிரைகளாலும், அதற்கான பத்துத் தூண்களாலும் பத்துப் பாதப் பொருத்துகளாலும் அமையும்.
13 கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கிய முற்றத்தின் அகலம் ஐம்பது முழம்.
14 அதன் ஒரு பகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும் மூன்று தூண்களாலும், மூன்று பாதப் பொருத்துகளாலும் அமையும்.
15 மறுபகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும், மூன்று தூண்களாலும், மூன்று பாதப்பொருத்துகளாலும் அமைக்கப்படும்.
16 நடுப்பகுதியில், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த இருபது முழத்தொங்குதிரை முற்றத்தின் நுழை வாயிலாக விளங்கும். அதற்காக நான்கு தூண்களும், நான்கு பாதப் பொருத்துகளும் அமைக்கப்படட்டும்.
17 முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தூண்களுமே வெள்ளியால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் கொளுத்துகள் வெள்ளியாலும் பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலும் செய்யப்படும்.
18 முற்றத்தின் நீளம் நூறு முழம். அகலம் ஐம்பது முழம். உயரம் ஐந்து முழம். திரைகள் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலானவை. பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலானவை.
19 திருஉறைவிடத் திருப்பணிகளுக்கான அனைத்துப் பொருள்களும் அங்குள்ள கொளுத்துகளும், முற்றத்திலுள்ள எல்லாக் கொளுத்துகளும் வெண்கலமாய் இருக்கும்.
20 விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டு வரப்பட வேண்டுமென்று இஸ்ரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய்.
21 சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும். ஆரோனும் அவன் புதல்வரும் இரவிலும் பகலிலும் அதைக் கவனித்துக் கொள்ளட்டும். தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்களுக்கிடையில் மாறாமல் நிற்கும் சட்டம் இது.

அதிகாரம் 28[தொகு]

குருக்களின் உடைகள்[தொகு]

(விப 39:1-7)
1 எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும் இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா.
2 உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும், அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய்.
3 திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும் சொல்; எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்கள் திருவுடைகள் செய்வார்கள்.
4 செய்யப்பட வேண்டிய உடைகளாவன: மார்புப்பட்டை, ஏப்போது, அங்கி, கோடிட்ட உள்ளாடை, தலைப்பாகை, இடைக்கச்சை ஆகியவை. இவ்வாறே, எனக்குக் குருத்துவப்பணி புரியும்படி உன் சகோதரன் ஆரோனுக்காகவும் அவன் புதல்வர்களுக்காகவும் திருவுடைகள் செய்யப்படட்டும்.
5 பொன்னையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி,


6 பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.
7 அதற்கு இரு தோள்பட்டைகள் செய்து அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் அதை இணைத்துவிடு.
8 ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப் போலவே பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பெறும்.
9 பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து அவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.
10 அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும் ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.
11 கல்வேலைப்பாடாயும், முத்திரைவெட்டுப்போன்றும், இஸ்ரயேல் புதல்வர் பெயர்களை இரண்டு கற்களிலும் பொறித்து, அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்து வைப்பாய்.
12 இவ்விரு கற்களையும் ஏப்போதின் தோள்பட்டையில் பொருத்திவிடு. இவை இஸ்ரயேல் மக்களின் நினைவுக் கற்களாகும். ஆரோன் அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாகத் தாங்கி நிற்பான்.
13 பொன் வேலைப்பாட்டுடன் பதக்கங்கள் செய்.
14 பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.

மார்புப் பட்டை[தொகு]

(விப 39:8-21)
15 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும். அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.
16 அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண்,[1] அகலம் ஒரு சாண் என்று சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும்.
17 அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
18 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
19 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
20 நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல் - இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.
21 இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், பன்னிரண்டு குலங்கங்களுக்காகப் பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.
22 மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.
23 மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களை செய்து, அந்த இரு வளையங்களையும் மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.
24 இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டிவிடு.
25 சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டுவாய். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.
26 இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில் உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.
27 மேலும் இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில், ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.
28 பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு, நீல நாடாவால் இணைத்துக் கட்டு. இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும் ஏப்போதின் மேல் படிந்தும் நிற்கும்.
29 ஆரோன் திருத்தலத்திற்குள் செல்கையில், தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையின் மேலுள்ள இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைத் தம் நெஞ்சின் மேல் தாங்கி நிற்பான். அவை ஆண்டவர் திருமுன் நீங்காத நினைவுச் சின்னமாகத் திகழும்.
30 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும்[] தும்மிமையும்[] இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான்.

குருக்களின் பிற உடைகள்[தொகு]

(விப 39:22-31)
31 ஏப்போதின் அங்கி முழுவதும் நீல நிறத்தில் செய்வாய்.
32 அதில் தலை நுழைய ஒரு திறப்பும், அதனைச் சுற்றி, மேலாடைகளின் திறப்பில் அமைவது போன்று, நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரையும், அமைந்திருக்கட்டும். ஆக, அது கிழியாதிருக்கும்.
33 அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.
34 ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல், பின்னும் ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று அங்கியின் விளிம்பெங்கும் அமைத்திடு.
35 திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும். இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில் நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும். இல்லையெனில் அவன் சாவான்.


36 பசும் பொன்னால் ஒரு பட்டம் செய்து, அதன் மேல் "ஆண்டவருக்கு அர்ப்பணம்" என்று முத்திரைபோல் பொறித்து வைத்து,
37 அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு; தலைப்பாகையின் முன்புறம் அது நிற்கும்.
38 அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும். இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள், அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும். இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும், அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.


39 மேலும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும். தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய். பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய்.


40 ஆரோனின் புதல்வர்களுக்குத் தேவையான அங்கிகளும், இடைக் கச்சைகளும், தலைப்பாகைகளும் மாண்பும் அழகும் பொருந்தியனவாய் செய்யப்படட்டும்.
41 இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய். அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய். அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.
42 அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில் மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.
43 சந்திப்புக்கூடாரத்திற்குப் போகும்போதும், தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும், ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள். அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.

குறிப்புகள்:[தொகு]


[1] 28:16 'செரத்து' என்பது எபிரேய பாடம்.
[2][3] 28:30 'ஊரிம்', 'தும்மிம்' என்பவை கடவுளின் திருவுளத்தை அறிவதற்குக் குருக்கள் பயன்படுத்தும் இரு பொருள்கள்.
[4] 28:30 = எண் 27:21; இச 33:8; எஸ்ரா 2:63; நெகெ 7:65.

அதிகாரம் 29[தொகு]

ஆரோனையும் அவன் புதல்வர்களையும் திருநிலைப்படுத்தும் முறை[தொகு]

(லேவி 8:1-36)
1 எனக்குக் குருத்துவப் பணி புரிய நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு இவ்வாறுசெய். ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு.
2 சிறந்த கோதுமை மாவினால் புளிப்பற்ற அப்பம், எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம், எண்ணெய் தோய்ந்த புளிப்பற்ற மெல்லிய அடைகள் ஆகியவற்றைச் செய்து,
3 ஒரு கூடையில் இட்டு, கூடையோடு அவற்றை எடுத்துவா. மேலும் அந்தக் காளையையும் இரு செம்மறிக்கிடாய்களையும் கொண்டு வா.
4 சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.
5 உடைகளை எடுத்து வந்து கோடிட்ட உள்ளாடை, ஏப்போதின் அங்கி, ஏப்போது, மார்புப்பட்டை இவற்றை ஆரோனுக்கு அணிவித்து ஏப்போதின் கைவண்ணமிக்க கச்சையால் கட்டுவாய்.
6 அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து அதன் மேல் புனித மணிமுடியையும் வை.
7 திருப்பொழிவு எண்ணெயை எடுத்துவந்து, அவன் தலைமேல் ஊற்றி அவனுக்கு அருள்பொழிவு செய்.
8 அவன் புதல்வரையும் கூட்டி வந்து, அவர்களுக்கும் ஆடைகள் அணிவிப்பாய்.
9 ஆரோனுக்கும், அவன் புதல்வருக்கும் இடைக்கச்சைகள் கட்டி, அவர்களுக்கும் தலைப்பாகைகள் அணிவி. குருத்துவப்பணி என்றுமுள்ள நியமமாக அவர்களோடு இருக்கும். இவ்வாறாக ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்துவாய்.


10 பின்னர் சந்திப்புக் கூடாரத்தின் முன் காளையைக் கொண்டு வருவாய். ஆரோனும் அவன் புதல்வரும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தபின்,
11 அக்காளையைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.
12 காளையின் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு.
13 குடல்களைச் சுற்றி அமைந்த அனைத்துக் கொழுப்பு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்துப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துப் போடுவாய்.
14 காளையின் சதை, அதன் தோல், அதன் சாணம் இவற்றைப் பாளையத்திற்கு வெளியே நெருப்பால் எரித்துவிடு. இது ஒரு பாவம்போக்கும் பலி!


15 பின்னர், செம்மறிக்கிடாய் ஒன்றினைக் கொண்டுவா. ஆரோனும் அவன் புதல்வரும் அந்தச் செம்மறிக் கிடாயின் தலைமேல் தம் கைகளை வைப்பர்.
16 அந்தச் செம்மறிக்கிடாயைகக் கொன்று அதன் இரத்தத்தை எடுத்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளிப்பாய்.
17 செம்மறிக்கிடாயைப் பகுதி பகுதியாக வெட்டு. அதன் குடலையும் அதன் கால்களையும் கழுவு. அவற்றை ஆட்டின் பகுதிகளோடும் தலையோடும் வைத்து,
18 செம்மறியாடு முழுவதையும் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துவிடு. இது ஆண்டவருக்கு எரிபலி ஆகும். இது ஆண்டவருக்கு இனிய நறுமண மிக்க நெருப்புப்பலி ஆகும்.[1]
19 இரண்டாவது செம்மறிக்கிடாயையும் கொண்டுவா. அச்செம்மறியின் தலைமேல் ஆரோனும் அவன் புதல்வரும் கைகளை வைக்கட்டும்.
20 அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு. அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும், அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும் அவர்கள் வலக்கை பெருவிரலிலும், அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின், எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.
21 பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால் அவன் அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள் அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.


22 செம்மறிக்கிடாயின் கொழுப்பு, கொழுப்பு வால், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு, வலப்பக்க முன்னந்தொடை ஆகியவற்றை எடுத்துக்கொள். ஏனெனில் இது திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாய்.
23 மேலும் ஓர் அப்பம், ஒரு நெய்யப்பம், ஒரு மெல்லிய அடை ஆகியவற்றை ஆண்டவர் திருமுன் உள்ள புளிப்பற்ற அப்பக் கூடையிலிருந்து எடுத்து,
24 இவை யாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் புதல்வரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவற்றை ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக உயர்த்துவாய்.
25 பின் அவற்றை அவர்கள் கையிலிருந்து எடுத்து எரிபலியோடு சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாகப் பலிபீடத்தின் மேல் எரித்துவிடு. இது ஆண்டவருக்கு நெருப்புப் பலி.


26 ஆரோனின் திருநிலைப்பாட்டிற்கான செம்மறியின் மார்புக்கண்டத்தை எடுத்து, அதனை ஆரத்திப் பலியாய் ஆண்டவர் திருமுன் உயர்த்துவாய். அது உனக்குரிய பங்காக அமையும்.
27 ஆரோனுடையவும் அவன் புதல்வருடையவும் திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயிலிருந்து எடுக்கப்பட்டு ஆரத்திப் பலியாக்கப்பட்ட மார்புக் கண்டத்தையும், ஆரத்தியாக உயர்த்தி குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கான சந்தையும் நீ புனிதப்படுத்து.
28 இது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் என்றுமுள்ள உரிமைப்பங்காக விளங்கும். ஏனெனில், இது குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கு. இது இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளிலிருந்து குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்காகும். ஏனெனில், இது அவர்கள் அளிக்கும் ஆண்டவருக்கான பங்கு.
29 ஆரோனுக்குப்பின் திருவுடைகள் அவன் புதல்வரைச் சேரும். அவர்கள் அருள்பொழிவு பெறும் போதும் திருநிலைப்படுத்தப்படும் போதும் அவற்றை அணிந்திருக்க வேண்டும்.
30 அவனுக்குப் பதிலாக புதல்வர்களுள் குருவாகிறவன் சந்திப்புக் கூடாரத்தில் உள்ள தூயகத்தில் பணிபுரிய வருகையில் அவற்றை ஏழு நாள்கள் அணிந்திருப்பான்.


31 திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயைக் கொண்டுவந்து, அதன் இறைச்சியை ஒரு புனிதமான இடத்தில் கொதித்து வேகவைப்பாய்.
32 ஆரோனும் அவன் புதல்வர்களும் செம்மறிக்கிடாயின் கறியையும், கூடையிலுள்ள அப்பத்தையும் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின்கண் உண்பார்கள்.
33 அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணம் செய்யும்போது பாவக்கழுவாய்க்காகப் பயன்பட்டவற்றை அவர்கள் உண்பார்கள். அன்னியரோ அவற்றை உண்ணலாகாது. ஏனெனில் அவை புனிதமானவை.
34 திருநிலைப்பாட்டிற்கான கறியோ அப்பமோ காலைவரை எஞ்சியிருந்தால், எஞ்சியுள்ளதை நெருப்பில் சுட்டெரித்துவிடு. அது உண்ணப்படல் ஆகாது. ஏனெனில், அது புனிதமானது.


35 நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் செய். ஏழு நாள்கள் நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவாய்.
36 பாவக் கழுவாய்க்கென்று ஒவ்வொரு நாளும், நீ ஒரு காளையைப் பாவம்போக்கும் பலியாக ஒப்புக்கொடு, இவ்வாறு பாவக்கழுவாய் செய்து பலிபீடத்தைத் தூய்மைப்படுத்துவாய். அதனை அர்ப்பணிப்பதற்காகத் திருப்பொழிவு செய்வாய்.
37 ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும்.

அன்றாட வழிபாடு[தொகு]

(எண் 28:1-8)
38 ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.
39 ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.
40 இரண்டு படி[2] அளவில் பத்தில் ஒரு அளவு மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த கால் கலயம்[3] அளவு எண்ணெயில் கலந்து அதையும், நீர்மப்படையலாகக் கால் கலயம் அளவு திராட்சைப்பழ இரசத்தையும் ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.
41 மாலைமங்கும் வேளையில் மற்றச் செம்மறிக் குட்டியைப் பலியிடுவாய். காலையில் செய்தது போலவே, உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.
42 நான் உங்களைச் சந்தித்து உன்னிடம் பேசுகின்ற சந்திப்புக் கூடார நுழைவாயிலில், அது உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள எரிபலியாக ஆண்டவர் திருமுன் நடந்தேறட்டும்.
43 நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன். அந்த இடம் என் மாட்சியால் புனிதம் பெறும்.
44 நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.
45 நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்.
46 அவர்களிடையே குடியிருப்பதற்காக எகிப்து நாட்டினின்று அவர்களை நடத்திவந்த அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். ஆம், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்.

குறிப்புகள்:[தொகு]


[1] 29:18 எபே 5:2; பிலி 4:18.
[2] 29:40 'இசரேன்' என்பது எபிரேய பாடம்.
[3] 29:40 'கீன்' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 30[தொகு]

தூப பீடம்[தொகு]

(விப 37:25-28)
1 நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.
2 நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்; அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்.
3 அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து, சுற்றிலும், தங்கத் தோரணம் பொருத்து.
4 அந்தத் தோரணத்திற்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் பொருத்து. அதைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளுக்கு அவை பிடிப்பாக விளங்கும்.
5 சித்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து, அவற்றையும் பொன்னால் வேய்ந்திடு.
6 உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால், திருத்தூயகத் திரையின் முன்னிலையில் தூப பீடத்தை வைப்பாய். உடன்படிக்கைப் பேழை மேலுள்ள இரக்கத்தின் இருக்கையில் நான் உன்னைச் சந்திப்பேன்.
7 காலைதோறும் ஆரோன் அதன்மேல் நறுமணப்பொருள் எரிப்பானாக! விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போதும் அவன் நறுமணப்பொருள் எரிப்பானாக!
8 மாலை மங்கும் வேளையில் ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது, உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவர் திருமுன் இடைவிடாமல் நறுமணப்பொருள் எரிப்பானாக!
9 வேற்று நறுமணப் பொருளையோ, மற்றும் எரிபலியையோ, உணவுப் படையலையோ அதன்மேல் படைத்தலாகாது. அதன் மேல் நீர்மப் படையலையும் ஊற்றக்கூடாது.
10 ஆண்டுக்கு ஒருமுறை ஆரோன் அதன் கொம்புகள் மேல் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். ஆண்டுக்கு ஒருமுறை பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பாவக்கழுவாயை உங்கள் தலைமுறைதோறும் நிறைவேற்றுவான். ஏனெனில், அது ஆண்டவருக்குப் புனிதமிக்கதாகும்.

தலைக்கட்டு வரி[தொகு]


11 ஆண்டவர் மோசேயை நோக்கி,
12 "நீ இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்காகக் குடிக்கணக்கு எடுக்கும் போது, எண்ணிக்கைக்குட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்டவேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடையே கொள்ளை நோய் வந்துவிடும்.
13 எண்ணிக்கைக்குட்படும் யாவரும் திருத்தலச் செக்கேலில்[1] அரைச் செக்கேல் வீதம் கட்டவேண்டும். (ஒரு செக்கேல் என்பது இருபது கேரா[2] என்க). அந்த அரைச் செக்கேல் ஆண்டவருக்குரிய காணிக்கையாகும்.[3]
14 எண்ணிக்கைக்கு உட்படும் அனைவரும் - அதாவது இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் யாவரும் - 'ஆண்டவருக்குரிய காணிக்கை' அளிப்பார்கள்.
15 உங்கள் உயிர்களுக்குப் பாவக்கழுவாயாக 'ஆண்டவருக்குரிய காணிக்கை' செலுத்தும்போது பணக்காரன் அரைச் செக்கேலுக்கு அதிகமாகவோ, ஏழை அதற்குக் குறைவாகவோ கொடுக்கவேண்டாம்.
16 இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத் திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்" என்றார்.

வெண்கல நீர்த்தொட்டி[தொகு]


17 பின்னும் ஆண்டவர் மோசேயிடம்,
18 "கழுவுவதற்காக ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல ஆதாரத்தோடு செய். சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் அதனை வைத்து அதில் தண்ணீர் ஊற்றுவாய்.[4]
19 ஆரோனும் அவன் புதல்வரும் இதிலிருந்து தங்கள் கைகளையும் பாதங்களையும் கழுவ வேண்டும்.
20 சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போது அல்லது பலிபீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும்போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள். இல்லையெனில் அவர்கள் செத்துமடிவார்கள்.
21 அவர்கள் சாகாமல் இருக்கும்படி கைகளையும் பாதங்களையும் கழுவிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு அதாவது அவனுக்கும் தலைமுறைதோறும் அவன் வழிமரபினருக்கும் என்றுமுள்ள நியமமாக இருக்கும்" என்றார்.

திருப்பொழிவு எண்ணைய்[தொகு]


22 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம்,
23 "ஐந்நூறு திருத்தல செக்கேல் எடைக்கு உயர்தர வெள்ளைப்போளம், அதன் பாதி நிறையாகிய இருநூறு ஐம்பத்துக்கு மணங்கமழும் கருவாப்பட்டை, இருநூற்று ஐம்பதுக்கு நறுமண வசம்பு,
24 ஐந்நூறுக்கு இலவங்கப்பட்டை ஆகிய தலைசிறந்த நறுமணப் பொருள்களை எடுத்து, ஒரு கலயம் அளவு ஒலிவ எண்ணெயும் சேர்த்து,
25 திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும்.
26 இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பேழை,
27 மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபபீடம்,
28 எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய்.
29 நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும்.
30 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ அருள்பொழிவு செய்து, அவர்களை எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு திருநிலைப்படுத்துவாய்.
31 மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியது: இது என்னுடைய தூய திருப்பொழிவு எண்ணெயாக உங்கள் தலைமுறைதோறும் இருக்க வேண்டும்.
32 சாதாரணத் தேவைக்காக மனித உடலில் அது பூசப்படல் ஆகாது. இந்தக் கலவை விகிதப்படி இதைப்போன்ற எண்ணெய் தயாரிக்கப்படலாகாது. இது புனிதமானது. உங்களுக்கும் இது புனிதமானதாக இருக்கட்டும்.
33 இதைப்போன்று கலவை தயார் செய்பவனும், இதிலிருந்து பிற மக்களுக்குக் கொடுப்பவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்" என்றார்.

நறுமணத் தூபம்[தொகு]


34 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நறுமணப் பொருள்களான வெள்ளைப்போளம், குங்கிலியம், கெல்பான், பிசின் ஆகியவற்றையும், கலப்பில்லாச் சாம்பிராணியையும் சம அளவில் எடுத்துக் கொண்டு,
35 உப்பு சேர்க்கப்பட்ட துப்புரவான புனித நறுமணக்கட்டியை திறமைவாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல நீ தயாரிக்க வேண்டும்.
36 அதில் ஒரு பகுதியை நன்கு பொடியாக்கி, நான் உனக்குக் காட்சிதரும் சந்திப்புக்கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால் வைக்க வேண்டும். அது உங்களிடையே தூய்மை மிக்கதாகத் திகழும்.
37 இந்தக் கலவைக்குரிய விகிதப்படி நறுமணக் கட்டியை நீங்கள் உங்களுக்கென்று செய்து கொள்ள வேண்டாம். ஆண்டவர் பொருட்டு இது உங்களிடையே தூயதாகத் திகழும்.
38 நறுமணம் முகர்வதற்காக இதைப்போன்று செய்பவன் எவனும், தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்" என்றார்.[5]

குறிப்புகள்:[தொகு]


[1] 30:13 ஒரு 'செக்கேல்' என்பது பதினொன்றரை கிராம்.
[2] 30:13 ஒரு 'கேரா' என்பது அறுநூறு மில்லி கிராம்.
[3] 30:13 விப 38:25-26; மத் 17:24.
[4] 30:18 விப 38:8.
[5] 30:22-38 = விப 37:29

அதிகாரம் 31[தொகு]

கூடாரக் கலைஞர்கள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம்,
2 "யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.
3 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.
4-5 இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்யவும், பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.
6 மேலும், தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு என்பவனையும் நான் அவனோடு நியமித்துள்ளேன். ஞானமுள்ளோர் அனைவரின் உள்ளத்திலும் நானே ஞானம் அருளியுள்ளதால், அவர்கள் நான் உனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்வர். அவையாவன:
7 சந்திப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பேழையோடு அதன் மேலமைந்த இரக்கத்தின் இருக்கை, கூடாரத்திலுள்ள அனைத்துத் துணைக்கலன்கள்,
8 அப்ப மேசை, அதன் துணைக்கலன்கள், பழுதற்ற விளக்குத் தண்டு, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், தூபபீடம்,
9 எரிபலிபீடம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
10 அழகுறப் பின்னப்பட்ட ஆடைகள், குருவாகிய ஆரோனுக்குரிய திருவுடைகள், குருத்துவப் பணிபுரிவதற்காக அவன் புதல்வருக்குரிய ஆடைகள்,
11 திருப்பொழிவு எண்ணெய், தூயதலத்திற்கான நறுமணத் தூப வகைகள் ஆகியவை. நான் உனக்குக் கட்டளையிட்டபடி இவை அனைத்தையும் அவர்கள் செய்வர்" என்றார்.

ஏழாம் நாள் - ஓய்வு நாள்[தொகு]


12 ஆண்டவர் மோசேயிடம்,
13 "நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியதாவது: நீங்கள் என் ஓய்வு நாள்களைக் கருத்தாய்க் கடைப்பிடியுங்கள். ஆண்டவராகிய நானே உங்களைப் புனிதமாக்குகிறவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்படி அது எனக்கும் உங்களுக்கும் இடையில் உங்கள் தலைமுறைதோறும் ஓர் அடையாளமாக இருக்கும்.
14 ஓய்வுநா ளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
15 ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய 'சாபாத்து'. ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.[1]
16 இஸ்ரயேல் மக்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்றுமுள்ள உடன்படிக்கையாக விளங்கும்படி தலைமுறைதோறும் ஓய்வு நாளைக் கைக்கொள்ள வேண்டும்.
17 இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம். ஏனெனில் ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்" என்றார்.[2]
18 ஆண்டவர் சீனாய் மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 31:15 = விப 20:8-11; 23:12; 34:21; 35:2; லேவி 23:3; இச 5:12-14.
[2] 31:17 = விப 20:11.

அதிகாரம் 32[தொகு]

பொற்கன்று[தொகு]


1 மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, "எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்" என்றனர்.[1]
2 ஆரோன் அவர்களை நோக்கி, "உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் பொற்காதணிகளைக் கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
3 அவ்வாறே மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,
4 அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், "இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே" என்றனர்.[2]
5 இதனைக் கண்ட ஆரோன் அதற்கு எதிரே ஒரு பலிபீடம் கட்டி, "நாளைய தினம் ஆண்டவரின் விழா" என்று அறிவித்தார்.
6 மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து எரிபலிகள் செலுத்தினர். நல்லுறவுப் பலிகளையும் கொண்டு வந்தனர். பின்னர் மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்; எழுந்து மகிழ்ந்து ஆடினர்.[3]


7 அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.
8 நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, "இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே" என்று கூறிக் கொள்கிறார்கள்" என்றார்.
9 மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
10 இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார்.


11 அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
12 மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.
13 உம் அடியாராகிய ஆபிரகாமையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே" என்று வேண்டிக்கொண்டார்.[4]
14 அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.[5]


15 மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன்பின் இருபுறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன.
16 அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே.
17 அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, "இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்" என்றார்.
18 அதற்கு மோசே, "இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான் எனக்குக் கேட்கிறது" என்றார்.
19 பாளையத்தை அவர் நெருங்கிவந்தபோது கன்றுக் குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார்.
20 அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்.


21 பின்னர் மோசே ஆரோனை நோக்கி, "இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்து விட்டீரே!" என்று கேட்டார்.
22 அதற்கு ஆரோன், "என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!
23 அவர்கள் என்னை நோக்கி, 'எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை' என்றனர்.
24 நானும் அவர்களிடம் 'பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்' என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது" என்றார்.


25 ஆரோன் மக்களைக் கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதால், தங்கள் எதிரிகள் ஏளனம் செய்யும் அளவுக்கு அவர்கள் மனம்போன போக்கில் நடப்பதை மோசே கண்டார்.
26 பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்று கொண்டு, "ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்" என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்துகூடினர்.
27 அவர் அவர்களை நோக்கி: "இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்" என்றார்.
28 மோசேயின் வாக்குக் கிணங்க லேவியர் செயல்பட்டதால், அந்நாளில் மக்களுள் ஏறத்தாழ மூவாயிரம் பேர் மடிந்தனர்.
29 மோசே, 'புதல்வன், சகோதரன் என்று பாராது நீங்கள் செயல்பட்டு, அவருக்காக இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொண்டீர்கள்.[6] இதை முன்னிட்டு ஆண்டவர் உங்கள் மேல் ஆசி பொழிந்துள்ளார்" என்றார்.


30 மறுநாள் மோசே மக்களை நோக்கி, "நீங்கள் பெரும்பாவம் செய்துவிட்டீர்கள்; இப்போது நான் மலைமேலேறி ஆண்டவரிடம் செல்லப்போகிறேன். அங்கே ஒரு வேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்யஇயலும்" என்றார்.
31 அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, "ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.
32 இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்" என்றார்.[7]
33 ஆண்டவரோ மோசேயிடம், "எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கிவிடுவேன்.
34 நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத்தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்" என்றார்.
35 ஆரோன் செய்த கன்றுக்குட்டி மக்களால் உருவாக்கப்பட்டதால் ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளை நோயை அனுப்பினார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 32:1 = திப 7:40.
[1] 32:4 = 1 அர 12:28; திப 7:41.
[2] 32:6 = 1 கொரி 10:7.
[3] 32:13 = தொநூ 22:16-17; 17:18.
[4] 32:11-14 = எண் 14:13-19.
[6] 32:29 "இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள்" என்பது எபிரேய பாடம்.
[7] 32:32 = திபா 69:28; திவெ 3:5.

அதிகாரம் 33[தொகு]

ஆண்டவரின் கட்டளை[தொகு]


1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "எகிப்து நாட்டிலிருந்து நீ நடத்தி வந்த மக்களுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோருடன் அவர்கள் வழிமரபினருக்குத் தருவதாக நான் வாக்களித்த அந்த நாட்டிற்குச் செல்.[1]
2 நான் ஒரு தூதரை உனக்குமுன் அனுப்பிக் கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரைத் துரத்தி விடுவேன்.
3 பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குப் போங்கள். நான் உங்களோடு வரப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், ஆதலால் வழியில் நான் உங்களை அழித்தொழிக்க நேரிடும்" என்றார்.
4 இத்துயரச் செய்தியைக் கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்கள் அணிந்துகொள்ளவில்லை.
5 ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம், "நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து, உங்களை அழித்தொழிக்கப்போகிறேன். உடனடியாக உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவி" என்று கூறியிருந்தார்.
6 அவ்வாறே இஸ்ரயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டுப் புறப்பட்டபின் தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை.

சந்திப்புக் கூடாரம்[தொகு]


7 மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.
8 மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர்.
9 மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார்.
10 கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர்.
11 ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார்.

ஆண்டவரின் வாக்குறுதி[தொகு]


12 மோசே ஆண்டவரிடம், "'இம்மக்களை நடத்திச்செல்' என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. 'பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்' என்றும் 'நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்' என்றும் கூறியுள்ளீர்.
13 இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம் வழிகளை எனக்குக் காட்டியருளும். உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன். மேலும் இந்த இனம் உம் மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்" என்றார்.
14 அதற்கு ஆண்டவர், "எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்" என்று கூற,
15 மோசே அவரிடம், "உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.
16 நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?" என்றார்.


17 அதற்கு ஆண்டவர் மோசேயிடம், "நீ கூறியபடியே நான் செய்வேன். ஏனெனில் நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய். மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்" என்றார்.
18 அப்போது மோசே, "உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்" என்று கூற,
19 அவர், "என் நிறை அழகை உன்முன் கடந்து போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்" என்றார்.[19]
20 மேலும் அவர், "என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது" என்றார்.
21 பின்பு, ஆண்டவர் "இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள்.
22 என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்.
23 பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்" என்றார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 33:1 = தொநூ 12:7; 26:3; 28:13.
[2] 33:19 = உரோ 9:15.

அதிகாரம் 34[தொகு]

திருச்சட்டக் கற்பலகைகள் - இரண்டாம் பிரதி[தொகு]

(இச 10:1-5)
1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன்.
2 முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில்.
3 உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம். மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது. அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது" என்றார்.
4 அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
5 ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, 'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார்.


6 அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்.
7 ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்" என அறிவித்தார்.[1]


8 உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
9 "என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்.

உடன்படிக்கையைப் புதுப்பித்தல்[தொகு]

(விப 23:14-19; இச 7:1-5; 16:1-17)
10 அப்பொழுது ஆண்டவர் கூறியது; "நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத அரும்பெரும் செயல்களை நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன். உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும் ஆண்டவரின் செயல்களைக் காண்பர். ஏனெனில், நான் உன்னோடிருந்து திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.


11 இன்று நான் உனக்குக் கட்டளையிடுவனவற்றைக் கடைப்பிடி. இதோ, நான் உன் முன்னிலையினின்று எமோரியரையும், கானானியரையும், இத்தியரையும் பெரிசியரையும், இவ்வியரையும், எபூசியரையும் துரத்திவிடுவேன்.
12 நீ சென்று சேரப்போகிற நாட்டில் வாழ்வோருடன் உடன்படிக்கை செய்யாதவாறு எச்சரிக்கையாயிரு. ஏனெனில், அது சிக்கவைக்கும் கண்ணியாக உன்னிடையே இருக்கும்.
13 அவர்களின் பலிபீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத் தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள்.[2]
14 நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் 'வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காதவர்' என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் 'வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்'.
15 நீ அந்நாட்டில் வாழ்வாரோடு உடன்படிக்கை செய்யாதே. ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடந்து தங்கள் தெய்வங்களுக்குப் பலியிடுகையில் உன்னை அழைக்க அவர்கள் பலிப்பொருளை நீயும் உண்ண நேரிடலாம்.
16 மேலும் உன் புதல்வருக்கு அவர்களிடமிருந்து பெண்கொள்ள நேரிடலாம். அவர்கள் புதல்வியர் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடப்பர். உன் புதல்வரையும் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடக்கச் செய்வர்.


17 உனக்கெனத் தெய்வங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம்.[3]
18 புளிப்பற்ற அப்ப விழாவைக் கொண்டாட வேண்டும். ஆபிபு மாதத்தில் குறிப்பிட்ட காலத்தில், என் கட்டளைக்கிணங்க ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பத்தையே உண்ண வேண்டும். ஏனெனில் ஆபிபு மாத்தில் நீ எகிப்திலிருந்து வெளியேறி வந்தாய்.[4]
19 கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் என்னுடையன. ஆடு, மாடு, கால்நடைகளின் ஆண் தலையீறு அனைத்தும் எனக்குரியனவே.[5]
20 கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக ஒரு செம்மறிக் குட்டியைக் கொடுத்து அதை மீட்க வேண்டும். அது மீட்கப்படவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் பிள்ளைகளில் ஒவ்வொரு தலைமகனையும் மீட்க வேண்டும. எவருமே என்முன் வெறுங்கையோடு காணப்படல் ஆகாது.[6]


21 ஆறு நாள்கள் நீ வேலை செய். ஏழாம் நாளில் ஓய்வு கொள். உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு.[7]
22 கோதுமை அறுவடை முதற்பலன் போது வாரங்களின் விழாவையும், ஆண்டின் இறுதியில் சேகரிப்பு விழாவையும் கொண்டாட வேண்டும்.[8]
23 உங்களுள் ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டில் மூன்று தடவை தலைவரும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் திருமுன் வர வேண்டும்.
24 ஏனெனில், நான் வேற்றினத்தாரை உன் முன்னிருந்து துரத்திவிட்டு உன் எல்லையை விரிவுபடுத்துவேன். நீ ஆண்டில் மும்முறை உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிற்க வரும்போது, உன் நாட்டை எவனுமே பிடித்துவிடப் போவதில்லை.
25 எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. பாஸ்காவிழாப் பலியில் எதுவும் காலைவரை எஞ்சியிருக்கக் கூடாது.[9]
26 உன் நிலத்தின் முதற் பலன்களில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்கு கொண்டு செல்வாய். குட்டியை அதன் தாய்ப்பாலில் வேக வைக்காதே".[10]


27 ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ இவ்வார்த்தைகளை எழுதிக்கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்" என்றார்.
28 அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிவரல்[தொகு]


29 மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை.
30 ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.
31 ஆனால் மோசே அவர்களைக் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார்.
32 பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.
33 மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக்கொண்டார்.
34 மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப்பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார்.
35 இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாயிருக்கும். மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.[11]

குறிப்புகள்:[தொகு]


[1] 34:6-7 = விப 20:5-6; எண் 14:18; இச 5:9-10; 7:9-10.
[2] 34:13 = இச 16:21.
[3] 34:17 = விப 20:4; லேவி 19:4; இச 5:8; 27:15.
[4] 34:18 = விப 12:14-20; லேவி 23:6-8; எண் 28:16-25.
[5] 34:19 = விப 13:2.
[6] 34:20 = விப 13:20.
[7] 34:21 = விப 20:9-10; 23:12; 35:12; லேவி 23:3; இச 5:13-14.
[8] 34:22 = லேவி 23:15:21; 39:43; எண் 28:26-31.
[9] 34:25 = விப 12:10.
[10] 34:26 = இச 24:21; 26:2.
[11] 34:29-35 = 2 கொரி 3:7-16.


அதிகாரம் 35[தொகு]

ஓய்வுநாள் பற்றிய ஒழுங்கு முறைகள்[தொகு]


1 மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, "நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:
2 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய புனிதமான 'சாபாத்து'; அன்று வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும்.[*]
3 ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும் நெருப்பு மூட்டக் கூடாது" என்றார்.

கூடாரத்திற்கான காணிக்கைகள்[தொகு]

(விப 25:1-9)
4 மீண்டும் மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் பின்வருமாறு கூறினார்: "நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:
5 ஆண்டவருக்காக உங்களிடமிருந்து காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக் கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன: பொன், வெள்ளி, வெண்கலம்,
6 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம்,
7 செந்நிறப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள், சித்திம் மரம்,
8 விளக்குக்கான எண்ணெய், திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமணவகைகள்,
9 ஏப்போதுக்கும், மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிக்கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.

கூடாரத்திற்கான பொருள்கள்[தொகு]

(விப 39:32-43)
10 மேலும் உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும். அவையாவன:
11 திருஉறைவிடம், அதன் கூடாரம், மேல் விரிப்பு, கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்,
12 பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை, அதை மறைக்கும் தொங்கு திரை,
13 மேசை, அதன் தண்டுகள், அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
14 ஒளிவிளக்குத் தண்டு, அதன் துணைக்கலன்கள், அகல்கள், விளக்குக்கான எண்ணெய்,
15 தூபப் பீடம், அதன் தண்டுகள், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார வாயிலிலுள்ள தொங்கு திரை,


16 எரிபலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், தண்டுகள், துணைக் கலன்கள், தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
17 முற்றத்தின் திரைகள், அங்குள்ள தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் வாயிலுக்கான தொங்கு திரை,
18 திரு உறைவிடத்திற்கான முளைகள், முற்றத்திற்கான முளைகள், அவற்றின் கயிறுகள்,
19 திருத்தலப் பணிவிடைக்காக அழகுறப் பின்னப்பட்ட உடைகள், குரு ஆரோனுக்கான திரு உடைகள், குருத்துவப் பணிக்காக அவன் புதல்வருக்குரிய உடைகள் ஆகியவைகளே.

மக்கள் காணிக்கை கொணர்தல்[தொகு]


20 பின்னர் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் மோசே முன்னிருந்து அகன்றது.
21 உள்ளார்வம் உடையோர், உள்ளுணர்வால் உந்தப்பெற்றோர் அனைவரும் முன்வந்து சந்திப்புக் கூடார வேலைக்காகவும், அதிலுள்ள அனைத்துத் திருப்பணிகளுக்காகவும் திருவுடைகளுக்காகவும் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுத்தனர்.
22 ஆண்களும் பெண்களுமாகத் தாராள மனமுடையோர் அனைவரும் காப்புகள், காதணிகள், மோதிரங்கள், அணிகலன்கள் ஆகிய பொன்கலன்கள் அனைத்தையும் கொண்டு வந்தனர். யாவரும் அப்பொன்னை ஆரத்திப்பலியாக ஆண்டவருக்கு உயர்த்தினர்.
23 அவர்கள் தம்மிடம் காணப்பட்ட நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம், செந்நிறமாகப் பதனிடப்பட்ட ஆட்டுக் கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்.
24 வெள்ளியையும் வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொண்டு வர முடிந்தவர் அனைவரும் அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ஏதாவது வேலைக்குப் பயன்படக் கூடிய சித்திம் மரம் யாரிடமாவது காணப்பட்டால், அதையும் அவர்கள் கொண்டு வந்தனர்.
25 திறன் மிக்க பெண்களெல்லாம் தங்கள் கைகளாலேயே நூல் நூற்று, நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை நெய்து கொண்டு வந்தனர்.
26 உள்ளார்வமும் திறனும் உடைய பெண்கள் அனைவரும் வெள்ளாட்டு உரோமத்தால் நெய்தார்கள்.
27 ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் வேண்டிய பன்னிற மணிக்கற்களையும், பதிக்கும் கற்களையும்,
28 திருப்பொழிவு எண்ணெய்க்கும் நறுமணத் தூபத்துக்கும் தேவையான பரிமள வகைகளையும், விளக்குக்கு எண்ணெயையும் தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.
29 ஆண்டவர் மோசே வழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டிருந்த அனைத்துப் பணிகளுக்கும் தேவையானவற்றைக் கொண்டுவருமாறு, ஆண் பெண் அனைவரும் உள்ளார்வத்தால் தூண்டப்பட்டனர். இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை கொண்டு வந்தனர்.

கூடாரக் கலைஞர்கள்[தொகு]

(விப 31:1-11)
30 மோசே இஸ்ரயேல் மக்களை நோக்கி, "ஆண்டவர் தாமே கூர் என்பவரின் மகனான ஊரியின் புதல்வன் பெட்சலேலைப் பெயர் சொல்லி அழைத்திருப்பதைப் பாருங்கள்.
31 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில் திறமை அனைத்தும் உண்டாகுமாறு அவரை இறை ஆவியால் நிரப்பியுள்ளார்.
32 திட்டமிடும் நுட்பத்தால் பொன் வெள்ளி வெண்கல வேலை செய்யவும்,
33 பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், மரத்தைச் செதுக்கவும், மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் அருளியுள்ளார்.
34 கற்பிக்கும் திறமையையும் அவர் உள்ளத்தில் வைத்துள்ளார். அதே திறமையைத் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபுக்கும் அருளியுள்ளார்.
35 உலோக வேலை, கலை வேலை அனைத்தையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலிலும், மெல்லிய நார்ப்பட்டிலும் செய்யும் பூந்தையல் வேலையையும், பின்னல் வேலையையும், அனைத்துத் தொழிலையும் திட்டமிடும் நுட்ப வேலையையும் செய்வதற்குரிய உயர் திறனால் அவர்களை நிரப்பியுள்ளார்" என்றார்.

குறிப்பு:[தொகு]


[*] 35:2 = விப 20:8-11; 23:12; 31:15; 34:21; லேவி 23:3; இச 5:12-14.

அதிகாரம் 36[தொகு]


1 "பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்."

மக்களின் தாராள கணிக்கைகள்[தொகு]


2 அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும், ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும் உள்ளார்வம் உடையவருமான கலைஞர் அனைவரையும் வேலையில் ஈடுபடுமாறு அழைத்தார்.
3 தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.
4 தூயக வேலைகளில் ஈடுபட்டிருக்கிற கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,
5 மோசேயை நோக்கி, "மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது" என்று அறிவித்தனர்.
6 அப்போது மோசே, "ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்" என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.
7 ஏற்கெனவே சேகரித்தது, செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும் தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.

கூடாரம் செய்தல்[தொகு]

(விப 26:1-37)
8 பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர். அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.
9 திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.


10 இவற்றுள் ஐந்து திரைகள் ஒன்றாகவும், ஏனைய ஐந்து திரைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டன.
11 பின்னர் அவர் முதல் தொகுப்பின் விளிம்பில் நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார். அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.
12 முதல் திரைத்தொகுப்பில் அவர் அமைத்த வளையங்களை ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் விளிம்பில் அமைத்த வளையங்கள் ஐம்பது. அவ்வளையங்கள் எதிரெதிரே இருந்தன.
13 பொன்னால் ஐம்பது கொக்கிகள் செய்து, அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை ஒன்றோடொன்று இணைத்தார். இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.


14 திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார். பதினொரு மூடுதிரைகள் செய்தார்.
15 ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றேயாம்.
16 இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்தார்.
17 முதல் மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைத்தார். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்திலும் அமைத்தார்.
18 ஒரே கூடாரமாக ஒன்றிணைத்து அமைக்க ஐம்பது வெண்கல கொக்கிகள் செய்தார்.
19 மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.


20 திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை அவர் சித்திம் மரத்தால் செய்தார்.
21 ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
22 சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.
23 திருஉறைவிடத்திற்காகச் சட்டங்களை அவர் செய்த முறை: தெற்கே தென்திசை நோக்கி நிற்கச் செய்யப்பட்டவை இருபது சட்டங்கள்.
24 ஒரு சட்டத்துக்குக் கீழே, இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள்; அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள். இவ்வாறு இருபது சட்டங்களுக்கும் கீழே அவர் நாற்பது வெள்ளிப் பாதப்பொருத்துகளை அமைத்தார்.
25 திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.
26 ஒரு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள், மறு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள் என்று நாற்பது வெள்ளி பாதப்பொருத்துகள் செய்யப்பட்டன.
27 திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக ஆறு சட்டங்கள் செய்தார்.
28 அத்துடன் திருஉறைவிடத்தின் பின்புற மூலைகளுக்காக இரண்டு சட்டங்களைச் செய்தார்.
29 அவற்றுள் ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்பட்டன. இவ்வாறே இரண்டு மூலைகளும் அமைக்கப்பட்டன.
30 ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும் இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும் அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.


31 சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்களையும் செய்தார்; திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்களின் மேலே பொருத்த ஐந்து;
32 திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து; மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஐந்து.
33 நடுவிலுள்ள குறுக்குச்சட்டம் சட்டங்களுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.
34 அவர் சட்டங்களைப் பொன்னால் பொதிந்தார். அதிலுள்ள குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்கான வளையங்களையும் பொன்னால் செய்தார். குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிந்தார்.
35 மேலும் அவர் ஒரு தொங்கு திரை செய்தார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும் கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.
36 அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார். அவற்றைப் பொன்னால் பொதிந்து பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார். அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.
37 கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்கு திரை செய்தார். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும் பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.
38 ஐந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார். அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும் பொன்னால் பொதிந்தார். ஐந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.

அதிகாரம் 37[தொகு]

உடன்படிக்கைப் பேழை செய்தல்[தொகு]

(விப 25:10-12)
1 பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.
2 அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்; அதைச்சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார்.
3 அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும், இரு வளையங்களை மறு பக்கத்திற்குமாக, அதன் நான்கு கால்களுக்காகவும் நான்கு பொன் வளையங்களை வார்த்தார்.
4 அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
5 அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி, தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் செருகிவிட்டார்.
6 அவர் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கையைச் செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.
7 அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.
8 ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக, அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.
9 கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன. கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.

அப்ப மேசை செய்தல்[தொகு]

(விப 25:23-30)
10 அவர் சித்திம் மரத்தால் மேசையொன்று செய்தார். அதன் நீளம் இரண்டு முழம்; அகலம் ஒரு முழம்; உயரம் ஒன்றரை முழம்.
11 அவர் அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைத்தார்.
12 அவர் கையகல அளவில் அதற்குச் சுற்றுச் சட்டம் அமைத்து அச்சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைத்தார்.
13 அவர் அதற்கு நான்கு பொன்வளையங்கள் செய்து அவ்வளையங்களை நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் பொருத்தினார்.
14 மேசையைத் தூக்கிச்செல்லும் தண்டுகள் தாங்கும் இவ்வளையங்கள் சட்டத்தின் அருகில் இருந்தன.
15 மேசையைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.
16 மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள் ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.

விளக்குத் தண்டு செய்தல்[தொகு]

(விப 25:31-40)
17 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார். அதை அடிப்பு வேலையாகச் செய்தார். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.
18 விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.
19 ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.
20 விளக்குத் தண்டுக்கு நேர் மேலே, வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.
21 முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இருகிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று அதிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.
22 அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தனவாயும், பசும்பொன் அடிப்பு வேலையுடன் செய்யப்பட்டனவாயும் இருந்தன.
23 அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.
24 அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.

தூப பீடம் செய்தல்[தொகு]

(விப 30:1-5)
25 அவர் சித்திம் மரத்தால் தூபபீடம் செய்தார். அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ இரண்டு முழம். அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.
26 அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.
27 அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.
28 சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

திருப்பொழிவு எண்ணெயும் நறுமணத் தூபமும் தயாரித்தல்[தொகு]

(விப 30:22-38)
29 அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும் திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும் கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.

அதிகாரம் 38[தொகு]

எரிபலி பீடம் செய்தல்[தொகு]

(விப 27:1-8)
1 சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார். அது நீளம் ஐந்து முழமும் அகலம் ஐந்து முழமுமாகச் சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ மூன்று முழம்.
2 அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்; கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன; அதை வெண்கலத்தால் மூடினார்.
3 அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்; சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.
4 பலிபீடத்தைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து அதன் பாதிப்பகுதியை எட்டும்படி அதன் விளிம்புகளுக்குக்கீழே அவர் பொருத்தினார்.
5 தண்டுகளைத் தாங்குவதற்காக நான்கு வளையங்களை வார்த்து அதன் வெண்கல வலைப்பின்னலின் நான்கு மூலைகளிலும் அவர் பொருத்தினார்.
6 அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து வெண்கலத்தால் மூடினார்.
7 பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் தண்டுகளை வளையங்களில் அவர் செலுத்தினார். பலகைகளைச் சேர்த்து உள்கூடாக அமைத்தார்.

வெண்கல நீர்த்தொட்டி செய்தல்[தொகு]

(விப 30:18)
8 சந்திப்புக் கூடார நுழைவாயிலில் பணியாற்றும் பெண்கள் கொண்டு வந்த வெண்கலக் கண்ணாடிகளைக் கொண்டு அவர் வெண்கல நீர்த்தொட்டியையும், அதன் வெண்கல ஆதாரத்தையும் செய்தார்.

கூடார முற்றம் செய்தல்[தொகு]

(விப 27:9-19)
9 அவர் முற்றத்தை உருவாக்கினார்; தெற்குப்பக்கம், தென்திசை நோக்கிய முற்றத்திலுள்ள தொங்கு திரைகள் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டால் ஆனவை; நூறு முழம் நீண்டவை.
10 அவற்றிற்கான இருபது தூண்களும் இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
11 அவ்வாறே வட பக்கத்திலும் தொங்கு திரைகள் நூறு முழம் நீண்டவை. அதற்கான இருபது தூண்களும், இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
12 மேற்குப் பக்கத்தில் ஐம்பது முழத் தொங்கு திரைகள் இருந்தன. அவற்றிற்காகப் பத்துத் தூண்கள் பத்துப் பாதப்பொருத்துகள் இருந்தன. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
13 கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கி ஐம்பது முழத் தொங்கு திரைகள் இருந்தன.
14 அதன் ஒரு பகுதியில் பதினைந்து முழத் தொங்கு திரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
15 இதுபோன்றே, முற்றத்தின் நுழைவாயிலுக்கு மறுபகுதியிலும் பதினைந்து முழத் தொங்கு திரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.
16 முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தொங்கு திரைகளும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் ஆனவை.
17 தூண்களின் பாதப் பொருத்துகள் வெண்கலத்தால் ஆனவை. தூண்களின் கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை. அவற்றின் பொதிகைகள் வெள்ளியால் பொதியப்பட்டவை. முற்றத்தின் தூண்கள் அனைத்துமே வெள்ளிப் பூண்கள் கொண்டிருந்தன.
18 முற்றத்து நுழைவாயிலின் தொங்கு திரை நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நூலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டும், பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது. அதன் நீளம் இருபது முழம்; அதன் அகலமும் உயரமும் முற்றத்தின் தொங்கு திரைகளுக்கு இணையாக ஐந்து முழமாம்.
19 அதற்காக நான்கு தூண்களுக்கும் நான்கு வெண்கல பாதப்பொருத்துகள் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பொதிகைகளும், பூண்களும் வெள்ளியால் மூடப்பட்டிருந்தன.
20 திருஉறைவிடத்திலும் சுற்று முற்றத்திலுள்ள முளைகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.

கூடாரத்திற்குப் பயன்பட்ட பொருள்கள்[தொகு]


21 திருஉறைவிடத்தின் அதாவது உடன்படிக்கைத் திருஉறைவிடத்தின் இருப்புக் கணக்கில் இருந்தவை இவையே: மோசேயின் கட்டளைப்படி குரு ஆரோனின் மகன் இத்தாமரின் பொறுப்பில், லேவியர் எடுத்த கணக்கு பின்வருமாறு:
22 யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகன் ஊரியின் புதல்வரான பெட்சலேல் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டது அனைத்தையும் செய்தார்.
23 அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.


24 தூயகத்தின் அனைத்துப் பணிக்கும் பயன்பட்ட தங்கமெல்லாம் ஆரத்திக் காணிக்கைவழி வந்தது. அது தூயகச் செக்கேல் நிறைப்படி ஆயிரத்து நூற்றெழுபது கிலோ கிராம் ஆகும்.[1]
25 மக்கள் கூட்டமைப்பில் எண்ணப்பட்டவர்களிடமிருந்து வந்த வெள்ளி தூயகச் செக்கேல் நிறைப்படி நாலாயிரத்து இருபது கிலோ கிராம் ஆகும்.[2]
26 இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம்[3] அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல். இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தனர்.[4][5]
27 தூயகத்திலுள்ள பாதப்பொருத்துகளையும், திருத்தூயகத் திரைக்கான பாதப்பொருத்துகளையும் வார்க்க, நாலாயிரம் கிலோ கிராம்[6] வெள்ளியாயிற்று. ஒரு பாதப்பொருத்துக்கு நாற்பது கிலோ கிராமாக நூறு பாதப்பொருத்துகளுக்கு நாலாயிரம் கிலோ கிராம் ஆயிற்று.
28 அதிலிருந்து இருபது கிலோ கிராம்[7] எடுத்து, அவர் தூண்களுக்கான கொக்கிகள் செய்தார்; பொதிகைகளைப் பொதிந்தார்; அவற்றிற்குப் பூண்கள் அமைத்தார்.
29 ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஐந்து கிலோ கிராம்[8] ஆகும்.
30 அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதன் வெண்கல வலைப்பின்னலையும், பலிபீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.
31 மேலும் முற்றத்தைச் சுற்றியுள்ள பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலிலுள்ள பாதப்பொருத்துகள், திருஉறைவிடத்தின் முளைகள், முற்றத்தைச் சுற்றியுள்ள முளைகள் ஆகிய அனைத்தையும் செய்தார்.

குறிப்புகள்:[தொகு]


[1] 38:24 'இருபத்தொன்பது தலந்தும் எழுநூற்று முப்பது செக்கேலும்' என்பது எபிரேய பாடம்.
[2] 38:25 'நூறு தாலந்தும் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேலும்' என்பது எபிரேய பாடம்.
[3] 38:26 'பெக்கா' என்பது எபிரேய பாடம்.
[4] 38:25-26 = விப 30:11-16.
[5] 38:26 = மத் 17:24.
[6] 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[7] ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேல் என்பது எபிரேய பாடம்.
[8] 38:29 'எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு செக்கேலும்' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 39[தொகு]

குருக்களுக்கான உடைகள் செய்தல்[தொகு]

(விப 28:1-14)
1 நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன. ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன.
2 பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி ஏப்போதை அவர் செய்தார்.
3 நீலம், கருஞ்சிவப்பு சிவப்புநிற நூல், கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய, பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.
4 ஏப்போதுக்கு இரு தோள்பட்டைகள் செய்து, அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் இணைத்தார்.
5 ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப்போன்றே கலை நுணுக்கத்துடன் பொன்னாலும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தயாரிக்கப்பெற்றது.
6 பன்னிற மணிக்கற்களுக்கு மெருகேற்றி அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்தனர். இஸ்ரயேல் புதல்வரின் பெயர்களை அவற்றின்மேல் முத்திரையாகப் பொறித்துப் பதித்தனர்.
7 ஏப்போதின் தோள்பட்டைமேல் அவற்றை இஸ்ரயேல் புதல்வரின் நினைவுக் கற்களாக ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பொருத்தினர்.

மார்புப் பட்டை செய்தல்[தொகு]

(விப 28:15-30)
8 மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
9 மார்புப்பட்டை ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் என்று சதுர வடிவமானதாயும் இரண்டாக மடிந்ததாயும் அமைந்தது.
10 அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதித்தனர்; முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
11 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
12 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
13 நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல். இவையாவும் பொன்னிழைப் பின்புலத்தில் பதிக்கப்பட்டன.
14 இந்த கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம் பன்னிரண்டு பெயர்களும் முத்திரை பொறிப்பதுபோல் வெட்டப்பட்டன.
15 மார்புப் பட்டைமேல் பொருத்துவதற்காகப் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்தனர்.
16 மேலும் பொன் பதக்கங்கள் இரண்டும் பொன் வளையங்கள் இரண்டும் செய்தனர். பின்னர் அந்த இரு வளையங்களை மார்புப் பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்தி,
17 இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டினர்.
18 சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டினர். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, அதன் முன்புறமாய் பொருத்தினர்.
19 இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில், உட்புற ஓரங்களில், ஏப்போதை அடுத்து இணைத்தனர்.
20 மேலும் இரு பொன் வளையங்கள் செய்து அவற்றை ஏப்போதின் இரு தோள்பட்டைகளில் முன்பக்கம், கீழ்ப்பகுதியில், அது இணையும் இடத்தில் ஏப்போதின் பின்னலழகுடைய இடைக் கச்சைக்கு மேலே கோர்த்துவிட்டனர்.
21 பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களுடன் நீல நாடாவால் இணைத்தனர். இவ்வாறு மார்புப் பட்டை ஏப்போதின் பின்னலழகு இடைக்கச்சையிலிருந்து அகலாமல் ஏப்போதின் மேல் படிந்து நிற்கும். இதுவும் ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

குருக்களுக்கான பிற உடைகள் செய்தல்[தொகு]


22 அவர் ஏப்போதின் அங்கி முழுவதையும் நீல நிறத்தில் நெசவு வேலைப்பாட்டுடன் செய்தார்.
23 அந்த அங்கியின் திறப்பைச் சுற்றிலும், மேலாடைகள் திறப்பில் அமைவது போன்று நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரை அமைக்கப்பட்டது. இதனால் அங்கி கிழியாதிருக்கும்.
24 அங்கியின் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் மாதுளைத் தொங்கல் செய்து விடப்பட்டது.
25 பசும்பொன்னால் மணிகள் செய்து அம் மணிகளை அங்கியின் விளிம்பெங்கும் உள்ள மாதுளைத் தொங்கல்களுக்கு இடையே இட்டனர்.
26 ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல்; பின்னும் ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று திருப்பணி அங்கியின் விளிம்பெங்கும் அமைந்திருந்தன. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.


27 ஆரோனுக்காகவும் அவர் புதல்வருக்காகவும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி தைக்கப்பட்டது.
28 மெல்லிய நார்ப்பட்டால் தலைப்பாகையும் தொப்பிகளும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் குறுங்கால் சட்டைகளும் செய்யப்பட்டன.
29 முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் இடைக்கச்சை செய்யப்பட்டது. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.


30 புனித மணிமுடிக்கான பட்டத்தைப் பசும் பொன்னால் செய்து, அதன் மேல் ""ஆண்டவருக்கு அர்ப்பணம்" என்று முத்திரைபோல் பொறித்து வைத்தனர்.
31 அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது. இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

கூடார வேலை நிறைவுபெறுதல்[தொகு]

(விப 35:10-19)
32 சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தது. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே இஸ்ரயேல் மக்கள் செய்து முடித்திருந்தனர்.
33 மோசேயிடம் கொண்டுவரப்பட்டவை: திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துகள்.
34 செந்நிறமாகப் பதனிட்ட செம்மறிக்கிடாய்த் தோல்விரிப்புகள், வெள்ளாட்டுத் தோல்விரிப்புகள், திருத்தூயகத் தொங்கு திரை,
35 உடன்படிக்கைப் பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை,
36 மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
37 பசும்பொன் விளக்குத்தண்டு, அதில் வரிசையாக அமைந்த அகல்கள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், விளக்குக்கான எண்ணெய்,
38 பொன் பீடம், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார நுழைவாயிலின் தொங்கு திரை,
39 வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
40 முற்றத்தின் தொங்கு திரைகள், அதன் தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலுக்கான தொங்கு திரை, பூண்கள், முளைகள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத் திருப்பணிக்குத் தேவையான அனைத்துத் துணைக்கலன்கள்,
4 தூயகத்தில் பணிபுரிவதற்கான அழகுறப் பின்னப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் குருத்துவப் பணி புரிவதற்கான திருவுடைகள் ஆகியவை.
42 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் நுணுக்கமாகச் செய்து முடித்திருந்தனர்.
43 மோசே எல்லா வேலைகளையும் பார்வையிட்டார். ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே அவை யாவும் செய்யப்பட்டிருந்தன. மோசே அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதிகாரம் 40[தொகு]

கூடாரத்தை எழுப்புதலும் அர்ப்பணமும்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
2 "முதல் மாதத்தில், முதல் நாள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய்.
3 அங்கே உடன்படிக்கைப் பேழையை வைத்து அதனைத் திருத்தூயகத் திரையால் மறைத்துவிடு.
4 பின்னர் மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும் விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.
5 உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை. திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
6 சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலுக்கு முன்புறம் எரிபலி பீடத்தை வை.
7 சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.
8 சுற்றிலும் முற்றம் அமைத்து, முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
9 திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்திற்கும் அதிலுள்ள அனைத்திற்கும் திருப்பொழிவு செய். அதனை அதன் அனைத்துத் துணைக்கலன்களோடுஅர்ப்பணிப்பாய். இவ்வாறு அது புனிதம் பெறும்.
10 எரிபலி பீடத்திற்கும் அதன் அனைத்துத் துணைக்கலன்களுக்கும் திருப்பொழிவு செய்து, அப்பீடத்தை அர்ப்பணிப்பாய். இவ்வாறு பலிபீடம் மிகப் புனிதமானதாக விளங்கும்.
11 தண்ணீர்த் தொட்டிக்கும், அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து, அர்ப்பணிப்பாய்.
12 சந்திப்புக் கூடார நுழைவாயிலின் அருகில் ஆரோனையும் அவன் புதல்வரையும் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.
13 ஆரோன் எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி அவனுக்குத் திருவுடைகள் அணிவித்து, அவனுக்கு அருள்பொழிவு செய்து, அவனைத் திருநிலைப்படுத்து.
14 அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களுக்கும் உடைகள் உடுத்துவிப்பாய்.
15 அவர்களின் தந்தைக்கு அருள்பொழிவு செய்தது போலவே, எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி அவர்களுக்கும் அருள்பொழிவு செய். அவர்களின் அருள்பொழிவு தலைமுறைதோறும் நிலைநிற்கும் குருத்துவமாக விளங்கும்."


16 மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.
17 இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது.
18 மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார். குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார்.
19 திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
20 உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.
21 திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
22 சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் வடபுறம், திருத்தூயகத் திரைக்கு வெளியே அவர் மேசையை வைத்தார்.
23 அதன் மேல் ஆண்டவர்முன் திருமுன்னிலை அப்பத்தை அவர் முறைப்படி வைத்தார்; இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
24 சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் தென்புறம், மேசைக்கு எதிரே, விளக்குத் தண்டை நிறுத்தினார்.
25 ஆண்டவர் திருமுன் அகல்களை ஏற்றினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
26 சந்திப்புக் கூடாரத்தில் திருத்தூயகத் திரைக்கும் முன்னே பொன்பீடத்தை வைத்தார்.
27 அதில் நறுமணத் தூபம் எரித்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
28 திருஉறைவிடத்தின் நுழைவாயிலில் திரை தொங்கவிடப்பட்டது.
29 அவர் சந்திப்புக் கூடாரத்தின் திரு உறைவிட நுழைவாயிலின் முன் எரிபலி பீடத்தை வைத்தார். அதன்மேல் அவர் எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
30 சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. கழுவுவதற்காகத் தண்ணீர் அதில் ஊற்றி வைக்கப்பட்டது.
31 இது மோசேயும், ஆரோனும், அவர் புதல்வரும் கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்வதற்கே.
32 சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போதும், பலிபீடத்தை அணுகும்போதும் அவர்கள் கழுவிக் கொள்வர். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
33 திருஉறைவிடம், பலிபீடம் இவற்றைச் சுற்றி எங்கும் அவர் முற்றம் அமைத்தார். முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிட்டார். இவ்வாறு மோசே தம் பணியை முடித்துக்கொண்டார்.

கூடாரத்தின் மேல் ஆண்டவரின் மாட்சி[தொகு]

(எண் 9:15-23)
34 பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.[*]
35 சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
36 இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள்.
37 மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
38 ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

குறிப்பு:[தொகு]

[*] 40:34 = 1 அர 8:10-11; எசா 6:4; எசே 43:4-5; திவெ 15:8.

(விடுதலைப் பயணம் நிறைவுற்றது)

"https://ta.wikisource.org/w/index.php?title=விடுதலைப்_பயணம்&oldid=14036" இலிருந்து மீள்விக்கப்பட்டது