விநாயகர் அகவல், நக்கீரர்
நக்கீரதேவர் அருளிய
விநாயகர் அகவல்
கணபதி வணக்கம் ஆசிரிய விருத்தம்
சீர்கொண்ட கரிமுகமு மைந்து கையும்
சிறந்தவா பரணமுடன் ஒற்றைக் கொம்பும்
ஏர்கொண்ட விமலர்கடங் கலியைத் தீர்த்து
எழில்குகற்கு முன்பிறந்து அமரர் மெச்சப்
போர்கொண்ட பிரணவமாய்ப்பிரண வத்துள்
பெருமைசிவ லிங்கமென வந்த மூலம்
கார்கொண்ட பிண்ட மெங்குந் தானாய்
காத்திடுங் கணபதியை வணங்குவோமே
அகவல்
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணியமூர்த்தி
சங்கர னருளிய சற்குரு விநாயக
ஏழை யடியேன் இருவிழி காண
வேழ முகமும் வெண்பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலில் திருநீற் றழகும்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுத்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுடநன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்
சிந்தூரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தி னழகும்வீற் றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன்னாபரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்கு பட்டழகும்
உந்திச் சுழியும் உரோமத் தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந்தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சதங்கைப் பலதொளி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்க
தொகுது துந்துமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய் யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காட்சி தந்தருள்
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு
இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜாட் சரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அக்ஷர வடிவும்
இடைபிங் கலைக ளிரண்டி னடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலங்குறித்து
மண்டல மூன்றும் வாயுவோர் பத்தும்
குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையும் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டி
பஞ்சமூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்ச சக்திகளின் பாதமும் காட்டி
நவ்விட மௌவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்
நைவிழிஞான மனோன்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டல மான வெளியையும் காட்டி
ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை
இகபர சக்கர விதிதனைக் காட்டிப்
புருவ நடுவணை பொற்கம லாசான்
திருவிளை யாடலுந் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையும் காட்டித்
தத்துவந் தொண்ணூற் றாரையும் நீக்கிக்
கருவி கரணம் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்க ளிருடிகள் ஒருவரும் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சக்தி பராபரை சதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியார் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
விண் மயமான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவி யிடம்பொரு ளியாவுந்
தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந்தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீஷனுங் கூடிக் கலந்து
இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து
மவுன முத்திரையை மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவென காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென வுணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுள்ளருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூசை நைவேத் தியமும்
பக்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி
ஏத்திய னுதின மெளியேன் பணியக்
கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து
ஆக மதுர வமிர்த மளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவிலும் கனவிலும் நேசம் பொருந்தி
அருண கிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்து கவிமழை பொழிய
வாக்குக் கெட்டாவாழ்வையளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வழ்க்கை யிடையூ றகற்றிப்
புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி யென்ப தகற்றிக்
காப்ப துனக்குக் கடன்கண் டாயே
நல்வினை தீவினைநாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே ஈசனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சக்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே பராந்தகன் நீயே
பக்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேகியும் நீயே
உன்னரு ளன்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதன் கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்று நாடியும் முக்குண மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலா யிரத்து நானூற்று நாற்பத்தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளிய நித்தன்
பஞ்சாட் சரநிலை பாலித் தெனக்கு
செல்வமும் கல்வியுஞ் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயக
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
புத்திரனே தரும் புண்ணிய முதலே
வெண்ணீ ரணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெருகுஞ் சரனை
அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா
கரிமுகவாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயி றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த்தடத் தருகிற்
றான த்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சி தானந்த சற்குருசரணம்
விக்கின விநாயகா தேவே ஓம்
அரகர சண்முக பவனே ஓம்
சிவ சிவ மஹாதேவ சம்போ ஓம்
வஞ்சி விருத்தம்
கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி யென்றிடக் காலனுங் கைதொழும்
கணபதி யென்றிடக் கரும மாதலால்
கணபதி யென்றிடக் கவலை தீருமே
வெண்பா
ஓரானைக் கன்றை யமையாள் திருமகனைப்
பேரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தைவரும் புத்திரசம் பத்து வரும்
சக்திதருஞ் சித்தி தருந்தான்...