உள்ளடக்கத்துக்குச் செல்

விநோதரசமஞ்சரி/13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது

விக்கிமூலம் இலிருந்து

விநோத ரச மஞ்சரி

[தொகு]

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்

[தொகு]

புகழேந்திப் புலவரைச் சிறைநீக்கிப் பரிபாலித்து வருமளவிற் குலோத்துங்க சோழராஜனும் மற்றும் சில பிரபுக்களும் அவர் மகாசாதுரியமுள்ள வித்துவ சிரோமணியாயிருப்பதனால், அவரைக்கொண்டு சம்ஸ்கிருத பாஷையிலுள்ள நளச் சரித்திரத்தைத் தமிழிற் சுருக்கிச் செய்விக்க வேண்டும் என்றெண்ணி, ஒரு நாள் அவருக்கு அச்செய்தியை அறிவிக்க, அவர், ‘நல்லது! அப்படியே செய்கிறோம்!’ என்று ஒப்புக்கொண்டு, சொற்பொலிவு, பொருட்பொலிவு தோன்றி நவரசாலங்காரமுடையதாக, யாவரும், ‘கற்பனைக் களஞ்சியம்’ என்று சொல்லும்படி அச்சரித்திரத்தை நானூறு வெண்பாக்களாற் பாடிமுடித்துச் சோழ ராஜன் சபையில் அரங்கேற்றும்பொழுது, அதில் அந்திக் காலத்தை வருணிக்கத் தொடங்கி, வெண்மையான குடமல்லிகை அரும்பில் வண்டு மொய்த்துச் சங்கநாதஞ்செய்ய, நெடிய கருப்பு வில்லை ஏந்திய மன்மதனானவன் தன்னுருத்தெரியாமல் மறைந்திருந்து ஸ்திரீ புருஷர்கள் மேற் புஷ்பபாணத்தைப் பிரயோகித்து அவர்களுக்குக் காமத்தை விளைக்க, மலரும் பருவத்தையுடைய முல்லை மாலையைத் தோளில் அணிந்து, சிறிதுநேரம் நிகழ்வதாகிய மாலைப்பொழுதை முன்நடத்திக்கொண்டு ‘அந்திப் பொழுதானது மெல்ல நடந்து வந்தது,’ என்னும் பொருளை அடக்கி,

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப - முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்திப் பொழுது.

-என்னும் பாடலைச் சொல்ல, ஒட்டக்கூத்தர் புகழேந்தியாரைக் குறித்துத் தமக்குள் அடிநாளே தோன்றி நாளுக்குநாள் வளர்ந்து முதிர்ந்த பகையினால், அச்செய்யுளின் கற்பனைக்குச் சந்தோஷப்படாமல், காக்கையானது சோலைகளிலிருக்கின்ற மதுரமாகிய கனிகளை விரும்பிப் புசியாமற் கடுங்கசப்பாகிய வேப்பம்பழத்தை விரும்புவது போல, குற்றங்கூற வேண்டும், என்னும் விருப்பத்தைப் பெரிதாகக்கொண்டு, பாட்டில் மல்லிகையரும்பைச் சங்காகவும், வண்டைச் சங்கநாதஞ் செய்வோனாகவும், கற்பித்தது உசிதமே’ ஆயினும், சங்கநாதஞ்செய்வோர், அதன் பின்புறத்தையல்லவோ வாயில் வைத்து ஊதுவார்கள்? அதற்கிசைய, ‘சங்குச்சூத்தும் ஆண்டி வாயும்’ எனப் பழமொழியுமிருக்கின்றதே! அந்தப்படி புஷ்பத்தின் அப்புறத்தில் வண்டு மொய்த்து ஊதுகிறாயிருந்தால், தோஷம் சொல்லக்கூடாது, அவ்வழக்கம் வண்டுகளுக்கில்லையே! அதை நினையாமற் கற்பித்ததனால், இந்தக் கற்பனை குற்றத்துக்கிடமாயிருக்கிறது’ என்றார்.

அத்தருணத்தில் அந்தச் சபையிலிருந்த கம்பர், ‘கட்டின வீட்டுக்குக் கல்வி சொல்கிறவர்களுக்கென்ன? வாய்க்குச் சுளுவுதானே? அப்படிச் சொல்லுகிறவர்கள் தாங்கள் கட்டிப் பார்த்தாலல்லவோ, அந்த வருத்தம் அப்பொழுது தெரியவரும்? அதை நினையாமல், இந்த ஒட்டக்கூத்தர் புகழேந்திப் புலவர் விஷயத்தில் தமக்குள்ள விரோதத்தை முன்னிட்டு ‘அவலை நினைத்து உரலை இடிப்பது போல, நிர்த்தோஷமாயிருக்கிற கற்பனையில் மேல் தோஷாரோபணம் பண்ணவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு, துராக்ஷேபம் பண்ணுகிறார்,’ என்றெண்ணி ‘இப்படிப்பட்டவர் வாயைப் பொட்டென்று மூடும்படி நீர் விநயமாக உத்தரம் சொல்லவேண்டும்,’ என்று புகழேந்திப் புலவர்க்குக் கண் சைகை காட்ட, அஃதறிந்து அவர் ஒட்டக்கூத்தரைப் பார்த்து, ‘சங்குச் சூத்தும், ஆண்டி வாயும் என்று சொல்ல வந்தீரே! அது சகஜந்தான்; ஆனாலும், கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமா? நீர்தான் சொல்லும்!,’என்று சமாதானம் சொல்பவர் போல அவரைப் பரியாசஞ் செய்ய, அது கேட்டு அங்குள்ளவர்களெல்லாம் நகைத்துச் ‘சரி! சரி!’ என்று மிகவுஞ் சந்தோஷப்பட்டார்கள்.

தமயந்தி விரகதாபப்படுகையில் சந்திரன் காய்வது அவளுக்குச் சகிக்கக்கூடாமையால், அவள் தன் தோழிமாரை நோக்கி, ‘பொற்செப்புப் போன்ற இளமையாகிய ஸ்தனபாரத்தையுடைய பெண்களே, ஒரு செய்தி கேளுங்கள்; சந்திரனுடைய அதியுஷ்ணமாகிய சுவாலை பட்டல்லவோ ஆகாயத்தின் உடல்முழுதும் கொப்புளித்திருக்கின்றது! இவ்விதத்தாற் கொப்புளித்த ஆகாயத்தை நீங்கள் கண்ணினாற் கண்டறிந்தும், உங்களுடைய தேன் போன்ற இனிய சொற்கள் நிறைந்த வாயினால், ‘நட்சத்திரங்கள் அடர்ந்திருக்கின்ற வானம் என்று கூசாமற் பிரத்தியக்ஷ விரோதஞ் சொல்லுகின்றீர்களே! இஃது என்னை காரணமோ?’ என்னுங் கருத்தை உள்ளமைத்துப் பாடிய,

செப்பிளங் கொங்கைமீர்! திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை- எப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்போதிந்த வாயாற் றெரிந்து?

-என்ற பாடலைச் சொல்லக்கேட்டு, ஒட்டக்கூத்தர், நீர் நட்சத்திரங்கள் அடர்ந்திருக்கின்ற ஆகாயத்தைத் திங்கட்சுடர்பட்டுக் கொப்புளங்கொண்ட குளிர்வானென்றது அதிசயிக்கத்தக்கதுதான்! கொப்புளித்தால் கொப்புளித்த இடத்திலிருந்து சீயாவது, சிலை நீராவது வடியாதோ?’ என்று குஜோத்தியமாய்க் கேட்க, புகழேந்தியார், ஏற்றப்பாட்டுக்கு எதிர் பாட்டாகா, ‘சீ வடியவில்லை; சிலைநீர் வடிகின்றது, அது இரவில் வானத்தினின்று பெய்யும் பனிதான்’ என்றார்.

பின்னும் அவர் சிற்சில சந்தர்ப்பங்களில் வீண் குற்றஞ் சொல்லி ஆக்ஷேபித்துவர, இவர் அப்போதப்போது அதற்குத் தகுந்த சமாதானஞ் சொல்லி, அவர் நாவை அடக்கி வருகையில், இவர்க்கே ‘இவரென்ன நமக்குப் பொல்லாத சனியனாய் ஏற்பட்டு நம்மை எப்பொழுதும் கை வழித்த மண் போல எளிதாய் எண்ணி, நம்முடைய பாடலையும் அலட்சியம் பண்ணுகிறார்! என்று அவர்மேல் அதிக வெறுப்புப் பிறந்ததனால், ‘இவர் செத்தாலும் சள்ளையற்றிருக்கலாம்!’ என்றும், ‘பாபீசதாயுஸ்’ என்பதனால் ‘இந்த மாபாவிக்கும் மரணம் வருமா? வாராதே!’ என்றும், ‘தன்னைக் கொல்லவந்த பசுவையும் தான் கொல்வது தர்மம்,’ என்பதனால், ‘இவரை நாமே முடித்துவிட்டாலும் தோஷமில்லை!’ என்றும் தமக்குள்ளே யோசித்துக் கிருபைக் கடலாகிய தாம் ஜீவகாருணியத்தையும் கைவிட்டுக் கொலை செய்வதற்குத் துணிந்து, காலம் பார்த்திருந்து, ஒரு நாள் இராத்திரி ஒட்டக்கூத்தருடைய படுக்கை வீட்டில் ஒருவர்க்குந்தெரியாமல் வந்து ஒளிந்திருந்தார்.

அப்பொழுது ஒட்டக்கூத்தர், ‘நாம் ஆயுள்வரையில் தலைகீழாகத் தவஞ்செய்தாலும் நமக்குப் புகழேந்தியைப் போலப் பாடும் சக்தி வரமாட்டாது! நம்முடைய வல்லமை இவ்வளவிலிருந்தும், சும்மா அவரை வாய்மிரட்டு மிரட்டி வருகிறோம்! இதனால் நமக்கென்ன மகிமை உண்டாகப் போகிறது!’ என்று சலிப்புற்று, அந்த விசனத்தினால் ஊக்கமிழந்து, உறக்கம் பிடித்துப் போஜனம் பண்ணாமற் கட்டிலின்மேற் படுத்துக் கொண்டிருந்தார்.

அத்தருணத்தில் அவர் மனைவி வந்து அவரைச் சாப்பிட எழுந்திருக்கச் சொல்லி எழுப்பினாள். அவர், ‘சாதம் சாப்பிடாமற் போனாற் போகிறது; கொஞ்சம் பாலும் சர்க்கரையுமாவது கொண்டு வருகிறேன்; சாப்பிடுங்கள்,’ என்றாள். அதற்கவர், ‘போடி பைத்தியக்காரி! நீ பாலல்ல தேனல்ல, சீனியல்ல, அந்தப் புகழேந்திப் புலவர் பாடிய நளவெண்பா வின்,

கொங்கை யிளநீராற் குளிர்ந்தவிளஞ் சொற்கரும்பாற்
பொங்கு சுழியாம் புனற்றடத்தில் - மங்கைதன்
கொய்தாம வாசக் குழனிழற்கீ ழாறேனோ
வெய்தாமக் காம விடாய்.

-எனவும்,

இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல்
அற்றது மான மழிந்ததுநாண்- மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் நேர்ந்து.

-எனவும்,

காதலியைக் காரிருளிற் கானகத்திற் கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ! ஓடி
ஒளிக்கின்ற தென்னோ வுரை.

-எனவும், மற்றும் பலவகையாகவும் சொல்லப்படும் கவிகளில் நாலைந்தைப் பிழிந்துதான் வார்த்தாலும், நான் சாப்பிடமாட்டேன்,’ என்றார்.

அந்தச் சொல்லைப் புகழேந்தியார் கேட்டு, ‘இஃதென்னை புதுமை! இவர் சுபாவமே, ‘உண்ணவா என்றாற் குத்த வருகிறது, இவருக்கும் நமக்கும் எப்பொழுதும் ஏழு பொருத்தம்; நம்முடைய பாடலோ, இவர் செவிக்கு நாராசம்போல இருக்கிறது! ‘கன்னானுக்கும் குயவனுக்கும் ஜென்மப் பகை’ என்பது போல, நாளது வரையில் நமக்கிவர் ஜன்மப் பகையாளியாய் ஏற்பட்டு, நாம் பாடிய நளவெண்பாவின்மேல், நிர்த்தாட்சணியமாய்ப் பல பெயரும் அறியப் பகிரங்கமாகக் குற்றம் கூறிவந்து இப்பொழுது அந்தரங்கத்தில் அதை வியந்து சிறப்பிக்கின்றாரே! இது யதார்த்தமாயிருக்குமா! நாமிவ்விடத்தில் வந்து ஒளிந்திருக்கிற அரவம் தெரிந்து நம்மைப் பரிகாசந்தான் பண்ணுகிறாரோ!’ என்று சந்தேகித்துக் கொண்டிருக்குமளவில், ஒட்டக்கூத்தர் பெண்சாதி மறுபடி வந்து அவரை, ‘இராப்பட்டினியிருப்பானேன்? உடம்பு சூடுகொண்டு போகாதா? நாளைக்கும் விரத தினமாயிருக்கிறதே! அதிகமாக வேண்டுவதில்லை; ஏதாவது உங்களுக்கு இஷ்டமாயிருக்கிற சிற்றுண்டியில் ஒரு கொட்டைப்பாக்களவானாலும் பக்ஷிக்கலாகாதா? எழுந்திருங்கள்,’ என்றாள். அதற்குமவர் முன்சொன்னபடியே சொல்லி, ‘யுகமுடியுமளவு மழை பெய்தாலும் ஒட்டாங்கிளிஞ்சல் கரையுமா?’ அடி, நீ என்ன சொன்னாலும் எனக்குச் சமாதானமாயிருக்கவில்லை. ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறாய்?’ என்றார். அதைப் புகழேந்திப் புலவர் செவிகுளிரக் கேட்டு, ‘இவர் சொல்லுகிறது அபத்தமன்று; மெய்தான்! நம்முடைய பாடலை, வாயினாலே மாத்திரம் அவமதிப்பாய்ப் பேசினதே ஒழிய மனத்திலே அப்படி நினைக்கவில்லை; சிறப்பாகவே மதித்துக் கொண்டிருக்கிறார். இது தெரியாமல், நாம் அநியாயமாய் இவர் தலைமேலே கல்லைப்போட்டுக் கொல்ல நினைத்துப் பழிக்கும் பாவத்திற்கும் ஆளாக எத்தனித்தோமே! அப்படியே சம்பவித்தால் ஹரி ஹரி! இந்தத் தீவினையை எந்தக் காலத்தில் தொலைக்கப் போகிறோம்? அந்தமட்டில் இவர் மனைவி சர்வோத்தமியாகையால், இவரும் மரணத்திற்குத் தப்பினார்; அவளும் வைதவியத்திற்குத் தப்பினாள். நாமும் கொலை பாதகத்தோடு ராஜதண்டனைக்குத் தப்பினோம்; பகை சாதிக்கவேண்டும் என்னும் எண்ணம் இவருக்குள் இருநாலும் பெரிதன்று; சம்பிரதாய வழுவின்றிச் செவ்வையாய்க் காற்று உணர்ந்தவராகையால், புறத்தில் வியக்காவிடினும், அகத்தில் உள்ளூர நமது கல்வியின் அருமைபெருமைகளைத் தெரிந்து வியந்துகொண்டிருக்கிறார்;

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

-என்றபடி, இவர் மனத்தில் தர்மம் நிலைத்திருக்கிறது,’ என்று மகிழ்ச்சி கூர்ந்து, ஓடிவந்து ஒட்டக்கூத்தரை மார்பிறுகக் கட்டி அணைத்துப் புளகாங்கமானார்.

அவர் புகழேந்திப் புலவரைப் பார்த்து. . .

[தொகு]

அவர் புகழேந்திப்புலவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘இந்நேரத்தில் இவ்விடத்திற்கு நீர் வந்த காரியம் என்ன?’ என, இவர், ‘உமது தலைமேற் கல்லைப்போட்டு உம்மைக் கொல்ல வந்தேன்,’ என்று சொல்லி, அந்தக் கல்லையும் எடுத்துவந்து அவருக்கு முன்வைத்தார். அதுகண்டு அவர், ‘ஏதுக்கு என்னைக் கொல்ல வேண்டியது?’ என்ன, இவர், ‘நீர் எப்போதும் என் கவியைக் குறித்துக் குற்றஞ் சொல்லிக்கொண்டிருப்பது பற்றி எனக்குக் கோபம் ஜனித்தமையால், உம்மைக் கொல்லத் துணிந்தேன்,’ என்ன, ஒட்டக்கூத்தர், ‘அப்படியானால் கொல்லாமல் ஓடிவந்து தழுவிக்கொண்டு நகைத்துச் சந்தோஷிப்பது என்ன நிமித்தத்தால்?’ என, புகழேந்தியார், ‘முன்பு என்னிடத்துச் சற்றும் தயை தாட்சணியமில்லாமல் என்னை அருஞ்சிறையில் வைத்ததையும் நான் யோசிக்கவில்லை; நீர் சொல்லும் சொற்கள் என் மனத்தைக் கொள்ளிகொண்டு சுடுவதுபோலச் சுட்டதனால், எனக்குச் சகிக்கக்கூடாமல், அதிக வெறுப்புத்தோன்றி, அநியாயமாய்க் கொலை செய்ய எத்தனித்தேன்! இப்பொழுது உமது கருத்தை நோக்குமிடத்தில் இஃது அப்படிப்பட்டதன்றென்று ஆடியிற் கண்ட பொருள்போல நன்றாய் விளங்கினதனால் உம்மைக் கொல்லக் கையுமெழவில்லை; மனமும் துணியவில்லை,’ என்றார். அவர் தாம் தம் மனைவியுடனே சொன்னதை மறந்து, இவரை, ‘என் கருத்து உமக்கு எப்படித் தெரிய வந்தது?’ என, இவர், அவர் மனைவி அவரைப் போஜனத்திற்கு எழுப்பினதையும், அவர் அதற்குச்சொன்ன உத்தரத்தையும், அதுகேட்டுத் தமக்கு இரக்கம் பிறந்ததையும், தாம் கொல்லாது விட்டதையும் ஆதியோடந்தமாகச் சொல்லிவிட்டுச் செலவு பெற்றுக்கொண்டு தமதிருப்பிடம் போய்ச் சேர்ந்தார்.

மறுநாள் இந்தச் செய்தியைக் குலோத்துங்க சோழராஜன் அறிந்து, ஒட்டக்கூத்தரையும் புகழேந்தியாரையும் அழைத்து, ‘நீங்கள் சாமானியர்கள் அல்லரே! தமிழில் அகத்தியர், தொல்காப்பியர், அவிநயர் முதலானவர்களாலும் சங்கப்புலவர்களாலும் உண்டாக்கப்பட்டுத் தொன்றுதொட்டு வழங்கிவரும் அரிய பெரிய நூல்களாகிய இலக்கணங்களையும், பாரகாவியமாகிய பாரதராமாயணம் முதலிய இலக்கியங்களையும் வழுவறக் கேட்டும் ஆராய்ந்துமிருக்கின்ற வித்துவ சிரேஷ்டர்களாகையால், நீங்கள் அறியாததொன்றுண்டோ? அதனால் உங்களுக்கு நான் சொல்லத்தக்கது என்ன இருக்கின்றது? ஆயினும், ‘குற்றமற்ற புராதனமாகிய நூற்கேள்வியையும் கூரிய அறிவினையுமுடைய புலவர் சிரோமணிகளுள் பலர் கூடி ஒருவர்க்கொருவர் விரோதமின்றித் தாம் தாம் பயின்ற சாஸ்திரங்களின் நுட்பமாகிய விஷயங்களை எடுத்து உத்தேச லக்ஷண பரீக்ஷைகளால் வாதித்து, அவற்றின் சாரத்தைக் கண்டுணர்ந்து சந்தோஷிக்கின்ற இன்பத்தைப் பார்க்கிலும், வானத்தின்கண் தேவர்கள் வாசஞ்செய்யும் சுவர்க்கத்திற்சென்று அங்கனுபவிக்கும் இன்பமானது என்ன விசேஷம்? அப்படி விசேஷப்பட்டதாயிருக்குமானால், அதை நாம் சுருதி யுத்தி அனுபவங்களாற் காண்போம்,’ என்னுங் கருத்தை அமைத்து, நாலடி நானூற்றில் முனிவர்கள் அருளிச்செய்த,

தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ
நகலி னினிதாயிற் காண்பாம் அகல்வானத்
தும்ப ருறைவார் பதி.

-என்ற செய்யுளின் தாற்பரியமென்ன, நீங்கள் அறியாததோ? அவ்வண்ணம் ஒருவரையொருவர் நேசித்து வித்தியா விஷயத்தைக் குறித்துச் சாம்பாஷித்து ஆனந்திப்பதை விட்டு, வியர்த்தமாய்ப் பகைக்கலாமா?

பகையென்னும் பண்பி லதனை யொருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.

-என்றுஞ் சொல்லப்படுகின்றதே! மேலும், உங்களைப் போன்றவர்கள் கோபத்தைப் பாராட்டலாமா? கோபஞ்சண்டாளமல்லவா? ‘கோபம் வந்தது கிணற்றிலே விழுந்தாற் சந்தோஷம் வந்து எழுந்திருக்கலாமா?’ கூடாதே! ஆதலால் இதுவரையில் நடந்ததெல்லாம் போகட்டும்! இன்று முதல் என்மேல் தயை செய்து நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல், ஒருதாய் வயிற்றிற் பிறந்த சகோதரரைப் போல அந்நியோந்நியமாய் நேசித்து மனமொத்திருப்பதே அழகாம்,’ என்று சொல்லி, இருவரையும் சமாதானப்படுத்திப் பின்பு அவர்களை நோக்கி, ‘நீங்கள் இந்நாட்டிலுள்ள திருவையாற்றை அடுத்த திருநெய்த்தானம் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நெய்யாடியீசரைக் குறித்து, ‘நெய்த்தானத்தானை சேவித்தே’ என்பது மகுடமாய் வரும்படி சந்த விருத்தமாக ஆளுக்கு ஒவ்வொரு பாட்டுப் பாடுங்கள்’ என்றான்.

ஒட்டக்கூத்தர் ‘நல்லது!’ என்று, விக்கல்கண்டு அஞ்சி நடுங்கி உடலைவிட்டு உயிரானது அப்புறப்பட்டுப் போய்விட்டால் அதற்கு முன்பு நகமுஞ்சதையும் போலப் பிரிவில்லாமற் பரிவுற்றிருந்த தாய் தந்தை பெண்டு பிள்ளை முதலிய சுற்றத்தாரெல்லாம் அருமையாச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்த உடம்பைச் சுடலைக்குக் கொண்டுபோய்க் காஷ்டத்திலேற்றிச் சாம்பராக்கிவிட்டு, அங்கொருவரும் தங்காமல் அந்தக்ஷணமே திரும்பித் தாமிந்த ஊருக்குள் வந்து சேர்ந்து, ‘செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு,’ என்பதற்குச் சரியாய் உண்டுடுத்துச் சுகித்திருக்கின்றார்கள்; இப்படிப்பட்ட ஈனஸ்திதியிலிருக்கின்ற இக்காயத்தின்கண் இச்சை வைத்து இதைப் போஷிக்கும் நிமித்தம் பொருளைத் தேடிவந்து அறஞ்செய்யாமல் வீட்டிற் புதைத்து வைக்கின்றவர்களே, சைவசித்தாந்தப்படி ஆத்துமாக்களின் இளைப்பொழித்தற்பொருட்டுச் சங்கார கிருத்தியஞ் செய்து, சகல சராசரங்களும் மாய்ந்தொடுங்கிய மயானத்தின்கண் அஸ்திமாலை அசைந்தாடவும், பேய்கள் கூடியாடவும், ஜடாமகுடத்திலிருக்கும் கங்கை அலையெறிந்தாடவும், வலக்கையிலேந்திய மழுவானது ஜுவாலித்தாடவும், காதிலணிந்த சர்ப்பக் குழைகள் நெகிழ்ந்தாடவும், ஆடுகின்ற திருநெய்த்தானத்துப் பரமசிவனைத் தரிசித்து வணங்கி, நெறிவழாது நிற்கக்கடவீர்கள்,’ என்ற கருத்தை அமைத்து,

விக்கா வுக்கா வித்தா விப்போய் விட்டால் நட்டார் கட்டூர் புக்கார்;
இக்கா யத்தா சைப்பா டுற்றே இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்கா டப்போய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்
நெக்கா டக்கா னத்தா டப்போ நெய்த்தா னத்தா னைச் சேவித்தே.

-என்பதாக ஒரு பாடற் பாடினார்.

புகழேந்திப் புலவர், ‘அகங்கார மமகாரங்களை மேற்கொண்டு பாசத்திரயமாகிய போராட்டத்தில் அகப்பட்டு, ஒருவிதத்திலும் மரணத்தைக் கடக்கும் உபாயத்தைக் காணாமல், யமனுக்கிரையாகும்படி இருப்பவர்களே, ‘பிறகு ஆகட்டும்’ என்றுநினைத்து, உங்கள் வாழ்நாளில் ஒரு கணப்பொழுதாயினும் வீணாகக்கழியும்படி வறிதேயிராமல், முந்தி விரைந்து, மந்திரதந்திரம் வழுவாமற் பூசை புரிந்து, பிரதக்ஷிணம் பண்ணி, கடல் போலும் வற்றாத நெடிய நீரோடைகளிலுள்ள பாரைமீன்கள் விசைகொண்டெழும்பி வரம்பில் மேகமண்டலத்தை அளாவியிருக்கின்ற கமுகமரத்தில் தாவியேறிப் போய்ப் பாக்குக்குலைகளை உதிர்த்து, அங்கிருந்து திரும்பி வயலில் விளைந்த நெல்லின் அடியில் விழுந்து, துள்ளித் துடித்து, அந்நெற்கதிர்களைச் சிதறி, அவ்விடத்தை விட்டெழுந்து அதனருகில் ஆலையாடிக் காய்ச்சப்படும் கரும்பின் இரசப்பாகிற்போய் உழவர்கள் வாய்க்கினிய உணவாம்படி விழுகின்ற வளப்பம் மிகுந்த திருநெய்த்தானத்தின் நெய்யாடிப் பிரானை நெஞ்சுற நினைத்து, தலையுற வணங்கிப் பத்தி சேராமல் நிற்கக்கடவீர்கள்,’ என்னும் பொருளை அடக்கி,

தற்கோ லிப்பூ சற்பா சத்தே தப்பா மற்சா கைக்கே நிற்பீர்!
முற்கோ லிக்கோ லிப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர்!
வற்றா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூ கத்தே றித்தா விப்போய்
நெற்றா ளுற்றா லைப்பா கிற்செர் நெய்த்தா னத்தா னைத்தியா னித்தே!

-என்றொரு பாட்டுப் பாடினார். அவ்விரண்டும் சொல், பொருள், கற்பனை, கருத்துக்களில் ஒன்றற்கொன்று உயர்வு தாழ்வில்லாமற் சிறந்திருக்கக்கண்டு, சோழராஜன் மகிழ்ச்சி கூர்ந்து, அவ்விருவர்க்கும் சம்மானம் பண்ணினான்.

பிறகு ஒரு நாள் சோழ மகாராஜன், ‘முன்பு நாம் சிவபரமாக இரண்டு பாடற் பாடுவித்தோமே! இப்பொழுது விஷ்ணு பரமாகவும் பாடுவிக்க வேண்டும்,’ என்று நினைத்து, ஒட்டக்கூத்தரையும் புகழேந்தியாரையும் நோக்கி, ‘திருக்குறுங்குடியில் நம்பியென்று நாமஞ்சார்த்திக் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெருமாள் பேரில், ‘இன்னார்க்கிடம் இன்னது,’ என வல்லோசையில் தலைக்கு ஒவ்வொரு பாட்டுப் பாடுங்கள்,’ என்றான். என்றவுடனே ஒட்டக்கூத்தர், ஐராவதம், புண்டரிகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சர்வபௌவமம், சுப்பிரதீபம் என்னும் பெயரினையுடைய அஷ்டதிக்கஜங்களும் திடுக்குற்றுத் துக்கித்து அலறி நிலைபெயர்ந்தோடக் கறுத்த கடலில் தைத்துருவும்படி பாணப்பிரயோகஞ் செய்த இராம்பிரானாய் அவதரித்த திருமலுக்கு வாசஸ்தானமாவது பருத்த மதுரமாகிய கரும்பு முதிர்ந்து ‘கணுவெடித்து அதிலிருந்து முத்துத் தெறித்துத் திறந்த வண்ணமாயிருக்கின்ற கொக்கின் வாயில் வந்து விழ, அம்முத்தை அது விழுங்கி அடிக்கடி விக்கிக் கக்காநின்ற சோலை சூழ்ந்த திருக்குறுங்குடி என்ற திவ்விய தேசம்,’ என்னும் பொருளை அமைத்து,

திக்குளெட் டுக்கயந் துக்கமுற் றுத்திடுக் கிட்டலற
மைக்கடற் குட்சரந் தைக்கவிட் டோர்க்கிட மாமதுர
இக்குமுற் றிக்கணுச் சற்றுவிட் டுத்தெறித் திட்ட முத்தைக்
கொக்குமொக் கிக்கக்கி விக்குமச் சோலைக் குறுங்குடியே.

-என்ற செய்யுளைப் பாடினார்.

புகழேந்திப் புலவர், மற்ற மந்திரங்கள் போலன்றிப் பிரணவ சகிதமாய் ஏகாக்ஷரி திரியாக்ஷரி பஞ்சாக்ஷரி முதலியவைகளுமாயிருக்கின்ற அஷ்டாக்ஷரி என்னும் மகிமை தங்கிய மூலமந்திரத்தை ஆசாரியன் அநுக்கிரகிக்கப்பெற்று, அதைத் தத்தம் கருத்திற்பதித்து, அனவரதமும் நியமந் தவறாமல் அனுசந்தித்துத் தொழுது ஸ்தோத்திரஞ் செய்கின்ற பெரியோர்களுக்கு ஈடுமெடுப்புமில்லாத பெருஞ்சிறபுண்டாகத் தன் அழகிய திருவடியைப் பிரசாதிக்கின்ற வட்டமாகிய நெடியசேஷ சயனத்தில் யோகநித்திரை செய்யும் நம்பியெம்பெருமானுக்கு உறைவிடமாவது, சூற்கொண்ட சங்கினங்கள் வயலிலுள்ள தாமரைப் பொகுட்டில் தத்தித் தவழ்ந்தேறி, முத்துகளைப் பெறுகின்றன வளப்பமுடைய திருக்குறுங்குடியாகிய திவ்வியதேசமாம்,’ என்னும் கருத்தையடக்கி,

எட்டெழுத் தைக்கருத் திற்குறித் திட்டுநித் தம்பரவும்
சிட்டர்கட் குத்திருப் பொற்பதத் தைச்சிறக் கத்தருமவ்
வட்டநெட் டைப்பணி மெத்தையத் தர்க்கிடம் வாரிசப்பொ
குட்டினத் துக்குலந் தத்திமுத் தீனுங் குறுங்குடியே.

-என்ற பாடலைப் பாடினார்.

இவற்றைக் கேட்டு அரசன், இருவரும் பாண்டித்தியத்தில் உயர்வு தாழ்வின்றிச் சமானஸ்தாயிருக்கின்றார்கள்! என்று சந்தோஷப்பட்டான்.

13.புகழேந்திப் புலவர் நளவெண்பாப் பாடியது முற்றும்.

[தொகு]

பார்க்க:

[தொகு]

விநோதரசமஞ்சரி


12.ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது

14.காளமேகப்புலவர் சரித்திரம்