விநோதரசமஞ்சரி/16.ஔவையார் சரித்திரம்

விக்கிமூலம் இலிருந்து

விநோத ரச மஞ்சரி[தொகு]

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்[தொகு]

ஔவையார் சரித்திரம்[தொகு]

தென்னாட்டிலே, பாண்டியர்கள் செங்கோல் நடாத்திய மதுரை மாநகரிலே, கடைச்சங்கம் இருந்த காலத்திலே, ஔவையார் என்னும் மாது சிரோமணியார், சோழதேசத்திலே, உறையூர் என்னும் பட்டணத்தின் ஒரு சாவடியிலே, ஆதி என்பவளுக்கும், பகவன் என்னும் ஓர் அந்தணனுக்கும் ஜேஷ்ட புத்திரியாராய்ப் பிறந்தனர். அப்போது ஆதி பகவன் என்னும் தாய் தந்தையருக்குள் ஏற்பட்டிருந்த உறுதிமொழிப்படி, பிறந்த குழந்தையை விட்டு நீங்க மனமெழாது தாய் வருந்தியபோது, அக்குழந்தை சொல்லியதாவது:

இட்டமுடன் என்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ? - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ

இதுகேட்டுத் தாய் வருத்தம் நீங்கிக் குழந்தையை விட்டேகினள். பின்பு அடுத்த சேரியிலிருந்த பாணர்கள் அக்குழந்தையாகிய ஔவையாரை எடுத்து வளர்க்க வளர்ந்து, அவர் இயல்பாகவே சகலகலைகளையும் அறிந்து, தமிழ்நாட்டிலே கல்வியிற்சிறந்த பெண்களுள் முதன்மை பெற்றிருந்தனர்.

ஔவையார் ஜீவந்தராயிருந்த காலத்திற் கம்பர், ஓட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் ஆகிய வித்துவ சிரோமணிகளிருந்தார்கள். அக்காலத்திற் கம்பர் ஒரு பாட்டிற்கு ஆயிரம் பொன் பெற்றாலன்றி, ஒருவர் மீதும் பாடுவதில்லை. ஔவையாரோ, பசிக்கு ஒரு கை கூழ் பெற்றால் ஒரு பாட்டுப் பாடுவார். இதனால் ஔவையாருக்குக் கூழுக்குப்பாடி என ஒருபெயர் வழங்கும்.

ஒருகாற் சோழநாட்டிலே அம்பர் என்னும் ஊரிலே, சிலம்பி என்னும் ஒரு தாசி, ‘கம்பருடைய வாக்கினாலே பாடல் பெற்றவர் அதிக சம்பத்தடைகின்றனர்,’ எனக் கேள்வியுற்றுக் கம்பரை நாடி, ‘என்மேல் ஒரு பாட்டுப்பாட வேண்டும்,’ என்று வேண்டினள். அதற்குக் கம்பர், ‘ஆயிரம் பொன் தந்தாலொழிய நாம் கவி பாடுவதில்லை,’ என்று மறுத்துச் சொல்லினர். அதைக்கேட்டுத் தாசி தான் வருந்தித் தேடி வைத்திருந்த ஆபரணம் முதலிய சகல ஆஸ்திகளையும் விற்றுப் பொன்னாக்கி, அஃது ஐந்நூறு பொன்னாகக்கண்டு, அதனைக் கொண்டு போய்க் கம்பர் கையிற் கொடுத்து, அவரை நோக்கிப், ‘புலவர் பெருமானே, இந்த ஐந்நூறு பொன்னையும் பெற்றுக்கொண்டு ஏழைமீது அன்புகூர்ந்து ஒரு பாட்டுப்பாடித் தரும்படி வேண்டுகிறேன்’ என்றனள். கம்பர், ‘நான்பாடுவது ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டாகையால், நீ தந்த ஐந்நூறு பொன்னுக்கு அரைப்பாட்டுதான் பாடுவேன்,’ என்று சொல்லி,

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணா வதுஞ்சோழ மண்டலமே

என இந்த இரண்டடியைப் பாடி, அவள் வீட்டுத் தெருவாயிலின் மேற்சுவரில் எழுதிவிட்டுப் போயினர். அது கண்ட தாசி, ‘ஐயோ! தெய்வமே! புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக்கொண்டு போனது போலவும், வயிற்றுப்பிள்ளையை நம்பிக் கைப்பிள்ளையை ஆற்றில் நழுவ விட்டது போலவும், நான் கையிலிருந்த காசையெல்லாம் போக்கி, வறுமையை வாங்கிக்கொண்டேனே!’ என்று பரிதபித்துக் கட்டக் கந்தைக்கும் உண்ணச் சோற்றுக்குமில்லாமல் துயருழந்திருந்தனள்.

அப்போது ஒரு நாள் ஔவையார் அதிக பசியால் வருந்தி, அத்தாசியின் வீட்டுத்தெருவே வரும்போது தாசியின் ஊழ் கூட்டுவித்ததால், அவள் வீட்டுத் தெருத்திண்ணையின்மேல் உட்கார்ந்து அங்கிருந்த தாசியை நோக்கி, ‘மெத்தப் பசியாயிருக்கிறேன்! கொஞ்சங்கூழேனுங் கொடுப்பாயா!’ என்றனர். அதுகேட்டுத் தாசி சரேலென்று உள்ளே நுழைந்து, தான் குடிப்பதற்காகக் கரைத்து வைத்திருந்த கூழைக்கொண்டு வந்து வார்த்து, ஔவையாருக்கு இளைப்புத் தீரும்படி உபசரித்தாள். ஔவையார் கஞ்சி குடித்துக் களைதீர்ந்து உட்கார்ந்திருக்கையில், சுவரிலே எழுதியிருந்த இரண்டடியை வாசித்துப் பார்த்து, அருகேயிருந்த அத்தாசியை நோக்கி, ‘அம்மே, ஈதென்னை?’ என, தாசி அதன் விருத்தாந்தத்தைச் சொல்லக்கேட்டு, உடனே

.... .... .... - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என அதனைத் தொடர்ந்தே மற்ற இரண்டடியையும் எழுதி அவ்வெண்பாவை முடித்தருளினர். இச்செய்யுளை எழுதி முடித்தவுடனே, தாசி காலிற் செம்பொற் சிலம்பணியும்படியான செல்வவதியாயினள்.

தாம் ஐந்நூறு பொன் பெற்றுப் பாடி ஏழையாகச் செய்த தாசியை ஔவையார் மாவமுது பெற்றுப் பாடித்திரண்ட ஐஸ்வரியமுடையவளாகச் செய்தார் எனக் கேள்வியுற்ற கம்பர், ஔவையார்மேல் அசூயை கொண்டு, சிற்சில சந்தர்ப்பங்களில் வாதங்கள் செய்தனர்.

ஒருகாலத்தில் ஔவையாரைக் கம்பர், ‘அடீ’ என்று அழைக்க விரும்பி, ஆரைக்கீரைக்கும் ஔவையாருக்கும் சிலேஷையாக,

ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ!

என்று சொல்லுப் பொருள் கேட்டபோது, ஔவையார் உத்தரமாக,

எட்டேகால் லட்சணமே! எமனே றும்பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே! - முட்டமேற்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரையடா சொன்னா யது.

என்று பாடிக் கம்பர் வெட்கமுறும்படி செய்தனர்.

[இதன் பொருள்: எட்டேகால் லட்சணம்= அவலட்சணம்; எமனேறும் பரி= எருமைமாடு; பெரியம்மை வாகனம்= கழுதை; குலராமன் தூதுவன்= குரங்கு]

ஒருகாற் சோழராஜன் தன்சபையில் இராமாயணத்திற் சிற்சில பாடல்களைக் கம்பர் பிரசங்கிக்கேட்டு, சந்தோஷமடைந்தவனாய்ப் ‘பாரகாவியம் பாடுவதிற் கம்பருக்கு நிகராவர் ஒருவருமில்லை’ என்றும், ‘அவரை யார் வெல்ல வல்லவர்?’ என்றுஞ் சொல்லி, அவர் பாடலை வியந்து பேசினன். அப்பொழுது அச்சபையில் வந்திருந்த ஔவையார், அதனைப் பொறாராகி, கம்பருக்கு இயல்பாகவே அக்கருத்துண்டு என்று அறிந்தவராதலால், அவரை எவ்விதத்திலாவது ... இறக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு பின் வரும் பாடல்களைப் பாடினார்.

‘கம்பரைப்போலப் பாரகாவியம் பாடுகிறவரில்லை’ என்றதற்கு விடையாக,

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - ‘யாம்பெரிதும்
வல்லோமே!’ என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது.

சித்திரமு கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம், நட்புந் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

என்னும் கவிகளையும், ‘கம்பரை யார் வெல்வார்?’ என்றதற்கு விடையாக,

காணாமல் வேணவெல்லாங் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமற்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற்
கீச்சுக்கீச் சென்னுங் கிளி

என்னுங் கவியையும், கம்பர் பாட்டை வியந்ததற்கு மறுப்பாக,

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

என்னும் பாடலையும் பாடினர்.

இப்பாடல்களைக் கேட்டுச் சோழன் அதிசயித்து, ஔவையாரை இன்னார் என்று அறியாதவனாய், ‘அம்மே, நீ எந்தவூர்?’ என்ன, ஔவையார்,

கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று? - கூனன்
கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே யிடம்.

என்று ஒரு பாட்டுப் பாடினர். அப்போது அவன் ஔவை கையிலிருந்த ஒரு சிறுமூட்டையைப் பார்த்து, ‘அம்மூட்டை என்னை?’ என, ஔவையார்,

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்
மூழை யுழக்குத் தினைதந்தாள் - சோழாகேள்
உப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை
ஒப்பிக்கு மென்ற னுளம்

என்று சொல்லி,

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நூற்சீலை
நாற்றிங்க ணாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப் போர்வே லகளங்கா!
என்றுங் கிழியாதென் பாட்டு

என்று தம் பாடலைச் சிறப்பித்துப் பாடினார். அதுகேட்டுச் சோழன், ‘மனிதர்களுக்கு அழகாவது என்னை?’ என்றும், ‘பொருளை எவ்வாறு செலவிட வேண்டும்?’ என்றும் கேட்ட கேள்விகளுக்கு விடைகளாக,

சுரதந் தனிலிளைத்த தோகை சுகிர்த
விரதந் தனிலிளைத்த மேனி - நிரதம்
கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்தொளைத்த கல்லபிரா மம்

என்றும்,

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காந் தீக்காகுங் காண்.

என்றும் பாடியருளினார். [பம்பு= சூனியம்]

இவைகளைக் கேட்டுச் சோழன் மகிழ்ந்தனன்.

உக்கிரப்பெருவழுதி என்னும்...[தொகு]

உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டியன், மதுரையில் அரசு செய்து கொண்டிருக்குங் காலத்திலும், திருவள்ளுவர், இடைக்காடர், ஔவையார் முதலாயினாருடன் மதுரைக்குச் சென்று, தங்களை ஒப்பார் உயர்ந்தார் ஒருவருமில்லை என்று, இறுமாப்புக்கொண்டிருந்த சங்கப்புலவர்களை நோக்கித் தம்முடை ஐந்து விரல்களையும் குவித்தும், மூடியும், கொஞ்சந் திறந்தும், சுட்டுவிரலொன்றை மாத்திரம் நீட்டியும், ஐந்து விரல்களையும் அகலத் திறந்தும், இவ்வாறான சில குறிகளைக் காட்டி, ‘இவற்றிற்குப் பொருளென்னை?’ என்று வினவினர். அவருள் ஒருவர் அவர் கருத்தறியாதவராய்ச் சிற்றின்ப விஷயமாக,

இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற இளமுலையாள் - இவ்வளவா
நைந்த உடலாள் நலமேவு மன்மதன்றன்
ஐந்துகணை யால்வாடி னாள்

என ஒரு வெண்பாப் பாடினர். அதுகேட்டு ஔவையார், ‘நீர் சொல்வது சரியன்று’ என்று அவர் மனம் புழுங்கி வெட்கமுறும்படி,

ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவே னும்மன்னம் இட்டுண்மின் - தெய்வம்
ஒருவனே யென்றும் உணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்

என்னும் வெண்பாவால் தாம் காட்டிய குறிகளின் ஞானார்த்தத்தை வெளியிட்டனர்.

ஔவையார் தம் சகோதரரான திருவள்ளுவ நாயனாரினும் புத்தி நுட்பமுள்ளவர்; புருஷார்த்தங்கள் நான்கனுள் தர்மார்த்த காம்மென்னும் மூன்றையும் திருவள்ளுவ நாயனார் 1330 வெண்பாக்களினாற் சொல்லியதைக் கேட்டருளி, மோக்ஷத்தோடு புருஷார்த்தங்கள் நான்கையும் சேர்த்து,

ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள், எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம், பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

என்னும் வெண்பாவினால் விளக்கியருளினார்.

சங்கப்புலவர்கள் அத்திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியபோது அவருள் ஒருவராகிய இடைக்காடர்,

கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்

என்று பாடக்கேட்டு, ஔவையார், ‘அப்படியன்று,

அணுவைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்

என்றிருப்பதே நேர்,’ என்று அக்குறளைப் புகழ்ந்தனர்.

ஒருநாள் ஔவையார் வேற்றூருக்குப் போய்த் திரும்பும் மார்க்கத்திற் பொழுதும் ஆனதால், ‘இன்றைக்கு இங்கே இரவைநீத்துப் போவோம்,’ என்று நினைத்து அவ்வூரிலிருந்தவர்களைப் பார்த்து, ‘ஐயன்மீர், படுத்துக்கொள்ள இங்கு இடங்கிடைக்குமோ?’ என்ன, அவர்களுட்சிலர், ‘அம்மே! இந்தப் பட்டணத்துக்கு மேலண்டை ஒரு திருவாசற்சாவடி இருக்கிறது; அதிற்படுக்க வேண்டிய மட்டும் இடமிருக்கின்றது; ஆனால், ஒரு பைசாசம் அதிலிருந்துகொண்டு படுக்க வருகின்றவர்களையெல்லாம் அறைந்து போடுகின்றது; ஆகையால், எவரும் அதிலே சேரப் பயப்படுகின்றனர்,’ என்றனர். அதைக்கேட்டு ஔவையார், ‘பேயைப் பேயடிக்கப் போகிறதோ!’ என்று சொல்லி, ஆங்கெய்திப் படுத்து நித்திரை போயினர். அந்நேரம் வெளியே போயிருந்த பெண்ணாவேசம் வந்து, ஔவையார் படுத்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, மிகவும் ஆங்காரத்துடனே சாமந்தோறும், ‘எற்றெற்று’ என்று வந்து அறைந்து போகிற வழக்கப்படி முதற்சாமத்தில் தம்மை அறைய வருகிறதைக் கண்டு, ஔவையார் உறக்கம் நீங்கி விழித்துப் பார்த்து,

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளென்
றெற்றோமற் றெற்றோமற் றெற்று.

என்று ஒரு வெண்பாப் பாடினர்.

அதனைக்கேட்ட அப்பேய் கல்வியறிவுடையதாதலால், ‘எழுத்து வாசனையில்லாத மூடனை இச்சித்த நம்முடைய பூர்வோத்திரத்தை அறிந்து சொன்ன இவள் தேவியே! இவளை ஒன்றுஞ் செய்யப் போகாது!’ என்று பயந்து, அவ்விடம் விட்டு ஏகி, இரண்டாஞ் சாமத்தில் மீண்டும் ‘எற்றெற்று’ என்று வந்தது. அப்போது ஔவையார்,

கருங்குளவி சூரத்தூ ரீச்சங் கனிபோல்
வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வரென்
றெற்றோமற் றெற்றோமற் றெற்று

என்று மற்றொரு வெண்பாப் பாடினர். அது கேட்டவுடனே பேய் ஓடிப்போய், மூன்றாஞ் சாமத்தில் திரும்பவும் ‘எற்றெற்று’ என்று வந்தது. அப்போது ஔவையார்,

வான முளதால் மழையுளதால் மண்ணுலகில்
தான முளதாற் றயையுளதால் - ஆனபொழு
தெயத்தோ மிளைத்தோமென் றேமாந் திருப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

என மீண்டுமொரு வெண்பாப் பாடினர். இப்பாடலைக் கேட்டு அலகை ஓடிப்போயிற்று. பின்பு நான்காஞ்சாமத்தில் முந்தியபடியே இரைந்துகொண்டு வர, ஔவையார்,

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோற் - பெண்ணாவார்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

என்று பாடிய வெண்பாவைக் கேட்டு, அந்தப் பெண்ணாவேசம் ஒடுக்கமெய்தி, ஔவையாரை வந்து வணங்க, ஔவையார் அதன்மேல் இரக்கமெய்தி, அப்பேயுருவடைந்திருந்த ராஜ புத்திரியை நோக்கி, ‘உன் வரலாறென்னை?’ என அப்பேய், தான் அவ்வூராள்வோன் புத்திரியாயிருந்ததும், ஒருநாள் உப்பரிகையின்மேல்தட்டிற் பந்தாடிக்கொண்டிருக்கையில், மாளிகையின் அடிவாரத்தில் வழிப்போக்கனாய் வந்து தங்கிய அழகனான ராஜகுமாரனைக் கண்டு மோகமெய்தி, ‘நீர் ஊர்ச்சாவடியில் இன்றிரவில் இன்னவிடத்தில் வந்திருந்தால், நான் அங்குவந்து உம்மைச் சேருவேன்,’ என்று தன் காதோலையில் நகத்தால் எழுதி அவன்முன் போட்டதும், அவன் கல்வியறிவில்லாதவனாதலால், அச்சாவடியிலிருந்து ஒரு குஷ்டரோகிக்கு அதைக்காட்ட, அந்தத் துஷ்டன் அவ்விளவலைப் பயமுறுத்தி ஊரை விட்டோடிப் போகச் செய்து, அவனுக்குக் குறித்தவிடத்தில் தான் இருந்ததும், அதனை அறியாத தான் அவனைத் தழுவி அசங்கியப்பட்டு உயிர் மாய்த்துக்கொண்டதும் விவரமாகச் சொல்லக்கேட்டு, ‘உனக்கு வேண்டிய வரம் என்ன?’ என, ‘நான் மீண்டும் மானுட ஜன்மம் பெற்று இச்சித்த புருஷனை அணைந்து, பின்பு எம்பெருமான் திருவடி சேரும்படி அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்!’ என்று வேண்ட, அப்போது அப்பெண்ணாவேசத்தைப் போலவே, அச்சாவடியில் ராஜபுத்திரி தனக்காக உயிரிழந்தாள் என்று கேள்வியுற்றுத் தானும் வந்து உயிர்நீத்த அவளாற் காதலித்த ராஜபுத்திரனும் ஆவேசமாய்க் கிடந்து நிகழ்ந்தவைகளைக் கேட்டுவந்து வணங்க, ஔவையார் அன்புகூர்ந்து பெண்ணாவேசத்தை நோக்கி, ‘நீ உறையூரிற் சென்று ராஜன் ஆலாத்திற் பெண்களுள் தலைமை பெற்றிருக்கும் மரகதவடிவுக்குப் பெண்ணாகப் பிறந்து, கற்பழியாமல் மேன்மை பெற்றிருந்து, விரும்பிய புருடனையணைந்து சுகமடைவாயாக!’ என்று சொல்லிப் போக்கி, ஆணாவேசத்தை நோக்கி, ‘நீ அவ்வூரிலே விறகு தலையனாகப் பிறந்திருந்து, அவ்விராஜ குமாரத்தியை அடையக்கடவை,’ என்று அருள் புரிந்து போயினர்.

திருக்கோவலூரிலே பெண்ணை நதிக்குத் தென்கரையிற் குடிசை போட்டுக் கொண்டிருந்த பாரி என்னும் இடையன் வீட்டிற்கு ஔவையார் மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டு வர, அவ்வீட்டிலிருந்த கன்னிகைகளான அங்கவை, சங்கவை என்னும் பெண்கள் கண்டு, அவருக்குத் தங்கள் கறுப்புச் சிற்றாடையைக் கொடுத்து, நெருப்பிட்டுக் குளிர்காயச் செய்து, முருங்கைக்கீரையை நெய்விட்டுச் சமைத்துக் கேழ்வரகுக் களியுடன் அவரைச் சாப்பிடச் செய்தனர்.

ஔவையார் உண்டு மகிழ்வெய்தி,

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
நெய்தா னளாவி நிதம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி யமுதத்தை யிட்டார்
கடகஞ் செறிந்தகை யால்.

என்று பாடி, அவ்விடைப் பெண்கள் கொடுத்த நீலச்சிற்றாடையைச் சிறப்பித்து,

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாரா யெனவழைத்த வாய்மையு மிம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்.

என்று ஒரு பாடலும் பாடினர். இப்பாடலைப் பாடினவுடன் பாரி என்னும் இடையனுக்கு ராஜ செல்வத்தினும் மேம்பட்ட செல்வம் பெருகியது.

பின்பு ஔவையார் அக்கன்னிகைகளைத் தக்க வரனுக்கு மணம் பரிவிக்க வேண்டிக் கலியாணத்திற்கு வேண்டியனவெல்லாஞ் சித்தஞ் செய்வித்து, விநாயகக் கடவுளை,

ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியுரிவைக் கங்காளன் காளவாய் - பரிவுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தண்ணாண்மை தீர்ப்பன் சபித்து

என்கிற வெண்பாப் பாடி வருவித்து, அவர் கைப்படத் தாஞ்சொல்லியபடி அடியில் வருமாறு ஓலை எழுதுவித்துச் சேரன், சோழன், பாண்டியன் முதலான சகல அரசர்களுக்கும் அனுப்பினர்.

சேரனுக்குச் சீட்டு:
சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவல்
ஊரளவுந் தான்வருக வுட்காதே - பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசர் மனமிசைந்தார்
சங்கவையை யுங்கூடத் தான்

சோழனுக்குச் சீட்டு:
புகார்மன்னன் பொன்னிப் புனனாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து - நகாதே
கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டா நாள்

பாண்டியனுக்குச் சீட்டு:
வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே - தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியவீ பொன்பானாள்
ஈண்டு வருக விரைந்து

அரசர்கள் இம்மணவோலை கண்டு, கவீஸ்வரியாரான ஔவையாரது வேண்டுகோளைத் தடுக்கவொண்ணாதெனக் கருதி, அதிக வினயத்துடனே சதுரங்க சேனைகளுஞ் சூழக் கலியாணத்திற்கு வந்தார்கள். விவாக முகூர்த்தமானவுடனே ஔவையார் அவர்களுக்கு அதிக பிரிய வசனங்களைச் சொல்லிச் சந்தன புஷ்ப தாம்பூலாதிகளால் தக்கபடி உபசரித்து, ‘அப்பன்மார்களே! நீவிரெல்லீரும் எப்படி இக்கிழவியை அருமை பெருமைப்படுத்தினீர்களோ, அப்படியே இவ்வேழை இடும் அற்ப உணவை உண்டு களிக்கும்படி வேண்டுகின்றேன்’ என்று மிக்க பரிவுடன் கேட்டுக் கொண்டனர்.

அதற்கவர்கள் பரிகாசமாய், ‘நீர் உணவு செய்விப்பது உண்மையேயாயின், இப்போது நுங்கு தருவித்தாற் புசிப்போம்,’ என்றனர். அது நுங்குண்டாவதற்கு அகாலமானபடியால், ஔவையார் அவர்கள் மநோமீஷ்டத்தை நிறைவேற்ற வேண்டி, வெட்டி விறகாயுலர்ந்து கிடந்த சில பனந்துண்டுகளை நோக்கி,

திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.

என்று ஓர் ஐந்தடிக் கலித்துறை பாடினர்.

உடனே கீழே விழுந்திருந்த அப்பனந்துண்டங்கள் குருத்துவிட்டு வளர்ந்து, பச்சோலை சலசலவென்றசைய நுங்குக் குலைகளைத் தாங்கிக்கொண்டு நின்றன.

அதைக்கண்டு அரசர்கள் வெட்கமும் சந்தோஷமும் அடைய, அங்கு வந்திருந்த எல்லாரும் அளவிடற்கரிய ஆச்சரியத்தை அடைந்தார்கள். பின்பு பெண்ணை நதியைப் பால் நெய்யாகப் பெருகி வரும்படி,

முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து
தத்திய நெய்பால் தலைப்பெய்து - குத்திச்
செருமலைதெய் வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவுங் கொண்டோடி வா.

என்றும், வருணனைப் பொன் மாரி பெய்யும்படி,

கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்
வருணனே! மாமலையன் கோவல் - திருமணத்தில்
முன்மாரி பெய்யு முதுவா ரியைமாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.

என்றும், பின்பு திருக்கோவலூரைச் சிறப்பித்து,

பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி யாடையாம்
அந்நாள் வயலரிசி யாடுமூர் - எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஓங்குந் திருக்கோவ லூர்.

என்கிற செய்யுளையும் பாடினர். கலியாணத்தில் மேலே சொன்ன அங்கவை சங்கவை என்னும் பெண்களுக்கு இடையர் மரபின் வழக்கப்படி ஆடு சீதனஞ் சேரனைக் கொடுக்கும்படி கேட்டபோது, அவ்வரசன் பொன் ஆடு கொடுக்க, அதை ஔவையார் வியந்து,

சிரப்பான் மணிமவுலிச் சேரமான் றன்னைச்
 சுரப்பாடி யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்,
 இரப்பவ ரென்பெறினுங் கொள்வர், கொடுப்பவர்
 தாமறிவர் தங்கொடையின் சீர்.

என்று ஒ்ரு வெண்பாப் பாடிப் பின்பு சோழனையும் பாண்டியனையும் நோக்கி, ‘நீவிர் இச்சிறுமியர்களுடன் சுகமாய் வாழக் கடவீர்கள்!’ என்று ஆசீர்வதித்து,

ஆயன் பதியி லரன்பதிவந் துற்றளகம்
 மாயனூ துங்கருவி யானாலும் - தூயமணிக்
 குன்றுபோல் வீறு குவிமுலையார் நம்முடனீர்
 இன்றுபோ லென்று மிரும்.

என்று பாடியருளினார்.

ஒருகால் உறையூரிலே[தொகு]

ஒருகால் உறையூரிலே குலோத்துங்க சோழன் தன் சம்ஸ்தான வித்துவானான ஒட்டக்கூத்தர் தம் பட்டமகிஷியுடன் பாண்டி நாட்டிலிருந்து ஸ்ரீதனமாக வந்த புகழேந்திப்புலவரும் தொடர்ந்துவர பாதசாரியாய் உலாவி வரும்போது வீதிகளொன்றில் ஒரு வீட்டுத் தெருத்திண்ணையில் இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த ஔவையார், சோழனைக் கண்டவுடன் ஒரு காலை மடக்கிக் கொண்டார்; அருகிற் புகழேந்திப்புலவர் இருக்கிறதைப் பார்த்தவுடனே மற்றக் காலையும் மடக்கிக் கொண்டனர்; அவர்களை அடுத்தாற்போல வந்த ஒட்டக்கூத்தரைக் கண்டவுடனே இரண்டு கால்களையும் நீட்டினர். இதனைக் கண்ணுற்ற ஒட்டக்கூத்தர் அவமானமும் சீற்றமும் மூண்டவராய், ஔவையாரை நோக்கி, ‘ஓ கிழவி! இவ்வாறு என்னை அவமதித்தது என்னை?’ என, ஔவையார், ‘அரசர் கிரீடாதிபதியாதலால், அவருக்கு ஒரு காலையும், புகழேந்திப்புலவர் ஒரு மகா வித்துவானாகையால், அவருக்காக இரண்டு காலையும் மடக்கினேன்; நீரோ, கல்வி நிறைவில்லா வீண்புலமை பாராட்டுமொரு மூடராகையால், இரண்டு காலையும் நீட்டினேன்,’ என்று சொல்லி, ‘உண்மையாகவே நீரும் புகழேந்தியாரைப் போல ஒரு சிறந்த வித்துவானாயின், சோழரையும் அவர் நாட்டையுஞ் சிறப்பித்துச் சந்திரனுக்குப் பெயராகும் ஒரு பதத்தை ஒரு பாவினீற்றடியில் மூன்றிடங்களில் பிரயோகப்படுத்திப் பாடும் பார்ப்போம்,’ என்று சொன்னார். ஒட்டக்கூத்தர் அவ்வாறே நம் அரசனாகிய சோழனையே பாட்டுடைத் தலைவனாகக் கருதி, நற்றாய் இரங்கற்றுறையில்,

வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்துமழைத் துளியோ டிறங்குஞ் ்சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா!
பிள்ளை மதிகண் டிப்பேதை பெரிய மதியு மிழந்தாளே!

என்று ஒரு பாட்டுப் பாடினர். இதைக்கேட்ட ஔவையார், ஒட்டக்கூத்தரைநோக்கி ‘உம்பாவில் ஒரு மதி குறைந்ததே!’ என்று சிலேடையாக,

ஒட்டா ஒருமதி கெட்டாய்!

என்று கூறிப் பின்பு புகழேந்தியாரை நோக்கி, ‘நீரும் அவ்வண்ணமாகப் பாடக் கடவீர்,’ என்றார். அவரும் நற்றாய் இரங்கற்றுறையி்லேயே,

பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர் தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா!
கொங்கர்க் கமரா பதியளித்த கோவே! ராச குலதிலகா!
வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே!

(வெங்கட் பிறை= பிறைமதி; கரும்பு இறை=கரும்பிறை= மன்மதன்; அப்பிறைக்கும்=அப்பு+இறைக்கும்= நீர் சொரியும், அப்பு= நீர்/கண்ணீர்)

என்று ஒரு பாவில் மூன்றுபிறை வரும்படியாகப் பாடினர். இதனைக்கேட்டு ஒட்டக்கூத்தர் வெட்கி அன்றுமுதலாகக் கர்வமடங்கியிருந்தனர். தென்னாட்டிலே ஒருநாள் ஔவையார் அதிக பசியால் வருந்து, ஒரு சமுசாரி வீட்டுத் தெருத்திண்ணையில் மிகுந்த இளைப்போடு வந்திருந்தனர். அப்போது வெளியே வந்த வீட்டுக்காரனை ஔவையார் கண்டு, ‘அப்பா, எனக்கு மெத்தப் பசியாயிருப்பதால், உங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் கூழாயினும் வார்த்தால் உண்டு பசியாறிப்போவேன்?’ என்றார். மிகவும் சாதுவான அந்த இல்லோன் அவருடைய பரிதாப வார்த்தைக்கிணங்கி, ‘பெண்ணின் குணமறிவேன்; சம்பந்தி வாயறிவேன்,’ என்பதற்கேற்பத் தன் பெண்சாதி குணத்தைத் தான்றிந்தவனாகையால், ஔவையாரை ்வீட்டிற்குள் அழைத்துப் போகாமல், தெருத்திண்ணையிலேயே இருக்க வைத்துத் தான் மாத்திரம் உள்ளே நுழைந்து பிடாரியைப் பெண்டாகக் கொண்டாற் போன்ற மனையாளிடத்திற்சென்று, அவருடைய உத்தரவின்பேரில் அங்கேயிருந்து, அவளுக்குத் தன்மேல் விசுவாசமுண்டாகும்படி இச்சக வார்த்தைகளைச் சொல்லி, மெல்ல முகந்துடைத்துத் தான் ஒரு பெண்போல அவளுக்குத் தலை சீவி, சிக்கறுத்து, பேன்பார்த்து, ஈருருவி, அதிக பயபத்தியுடனே, ‘எங்கே கோபித்துக் கொள்கிறாளோ!’ என அஞ்சிச் சமயம் பார்த்து மெய்ந் நடுங்கி நாக்குழற, மெல்ல உதட்டோடு உதடு அசைய, ‘ஒரு பழுத்த கிழவி கொஞ்சங்கூழுக்கு வந்திருக்கிறாள்,’ என்ற சங்கதியை அவள் காதிற்போட, உடனே அவள், ‘ஏவாயனைக் கண்டாளாம், ஏணிப்பந்தம் பிடித்தாளாம்,’ என்கிறபடி, தன் புருஷன் மேதைக் குணத்தைப் பார்த்துத் தீயில் விழுந்த நாகம்போலச் சீறிப் பூதம் போல ஆர்ப்பரித்து, ‘உன் பவிஷுக்கு விருந்து ஒரு கேடா? உனக்குத் தொலைக்கிறதுமல்லாமல் ஊருக்குத் தொலைக்கவா?’ என்று பேய்ப் பாட்டுகளைப் பாடி, ஆசையெல்லாம் தீர வட்டித்துக் கழிநீர்ப் பானையை ஏந்திவந்து, அவன் தலையிலே அபிஷேகஞ் செய்து, திருவலகு (துடைப்பக்கட்டு) கொண்டு வெண்சாமரை வீசி, சுளகு (பழமுறம்) எடுத்து ஆ்லவட்டம் பரிமாறி, பரிவேட்டை விடுவதுபோல அவனை வீட்டிற்குந் தெருவுக்குமாகத் துரத்தித் துரத்தி யடித்தாள். அப்போது வீட்டுத்தலைவன் பெண்டாட்டிகொண்டு திண்டாட்டப்படுவதைக் கண்டு, ஔவையார் அதிக இரக்கமுற்று,

இருந்து முகந்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
விருந்துவந்த தென்று விளம்ப - வருந்திழிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா ளோடோடத் தான்.

என்கிற செய்யுளைப் பாடினார்; பிறகு கணவன் மிகவும் வேண்டிக்கொள்ள, அவள் சற்று மனமிரங்கி அன்னமிட்டபோது,

காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே!
மாணொக்க வாய்தி்றக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி யெரிகின்ற தையையோ
அன்பில்லா ளிட்ட வமுது.

என்று பாடினார். பிறகு வந்து வணங்கிய அவள் கணவனை நோக்கி, அவன் இல்வாழ்க்கையை இகழ்ந்து பேசி, அவன் துறவு பூண்டொழுகும்படி வற்புறுத்துமாறு அடியில் வருஞ்செய்யுட்களைப் பாடினார்:

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே! - தொண்டர்
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன? செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுத னேர்!

பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை யுண்டானால்
எத்தாலுங் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
ஏறுமாறாக விருப்பாளே யாமாயில்
கூறாமல் சன்னியாசங் கொள்.

ஏசி யிடலின் யிடாமையே நன்றெதிரிற்
பேசு மனையாளிற் பேய்நன்று - நேசமிலா
வங்கணத்தி னன்று வலியபகை -வாழ்வில்லா
சங்கடத்திற் சாதலே நன்று.

ஒரு நாள் சோழராஜன் தன் சம்ஸ்தான வித்துவான்களை அழைப்பித்து, ‘நீங்கள் நாளையவுதயத்துக்கு நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும்,’ என, ஒன்றுந் தோன்றாது, அதிக வியாகூலத்துடனே அவரவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். ஔவையார் அவ்வழியாக வரும்போது அவர்கள் விசனமுற்றிருப்பதைக் கண்டு, ‘ஏன் முகம் வாடி ஏக்கமுற்றிருக்கின்றீர்கள்?’ என்று கேட்க, அவர்கள், ‘அம்மணி, எங்களைச் சோழன் நாளையவுதயத்திற்குள்ளே நாலு கோடிக்குப் பாடல் பாடி வரும்படி ஆக்கியாபித்திருக்கிறான். இன்னும் ஒரு பாட்டுக்கு வழியில்லை. ஆதலின், இன்றிராத்திரிக்குள் நாலுகோடி எவ்வண்ணம் பாடப்போகிறோமென்று திகைத்திருக்கின்றோம்,’ என்றார்கள். அதைக்கேட்டு, ஔவையார், ‘புலவீர், நீவிர் வருந்துதல் ஒழிமின்! இதோ ஒருநொடியிற் பாடித் தருகிறேன்!’ என்று பின் வரும் பாடல்களைப் பாடிக் கொடுத்தனர்.

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்!

உண்ணீருண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்!

கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்!

இப்பாடல்களைக் கேட்டவுடனே வித்துவான்கள் யாவரும் சூரியனைக் கண்ட தாமரை மலர்போல முகமலர்ந்து, பாடலைப் பெற்றுக்கொண்டு போய் அரசன் முன்வைக்க, அரசன் மகிழ்வடைந்தனன். ஒருநாள் ஔவையார் காடுகளும் மலைகளும் அடர்ந்த மார்க்கமாகப் போய்க்கொண்டிருக்கும்போது சுப்பிரமணியக் கடவுள் ஔவையாரை ஏமாற்றிப் பரிகாசஞ் செய்யவெண்ணி, எருமை மேய்க்குஞ் சிறுவனைப் போல உருவெய்தி, ஒரு நாவல் மரத்தின்மீதேறிப் பழங்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பவர்போலக் காட்டியருளினார். ஔவையார் அந்த மரத்தடியில் வந்து, ஆயாசத்தால் உட்கார்ந்து, மரத்தின்மேல் இருக்கும் மாட்டுக்காரப் பையனைப் பார்த்து, ‘அடா, தம்பீ! எனக்கு மிகவும் ஆயாசமாயிருக்கிறபடியால் கொஞ்சம் நாவற்பழம் பறித்துப் போடு,’ என்று வேண்டினார். அதற்கு அந்தப் பையனாகிய சுவாமி, ‘கிழவியே! உனக்குச் சுடுகின்ற பழங்கள் வேண்டுமா, சுடாத பழங்கள் வேண்டுமா? சொல்’ என்றார். ஔவையார், ஆச்சரியப்பட்டு, ‘நாவற்பழத்திற் சுடுகின்ற பழமுமிருக்குமா?’ என்றாலோசித்து, ஒன்றுந் தோன்றாமையால், ‘அப்பா சுடுகிற பழம் எனக்கு வேண்டுவதில்லை, சுடாத பழமே வேண்டும்,’ என்றார். உடனே பையன் மரக்கிளைகளைக் கையால் பிடித்துக் குலுக்கி விட்டான். அதிலிருந்து கனிந்த பழங்களும் கனியாத பழங்களும் கீழே யுதிர்ந்தன. அப்போது ஔவையார், கனிந்த பழங்களிற் சிலவற்றைப் பொறுக்கிப் பார்த்து, அவைகளில் தரையிலிருந்த மணல் ஒட்டிக்கொண்டிருந்தமையால், அதை வாயினால் ஊதினார். அதைப் பார்த்த மாட்டுக்காரப் பையன், ‘கிழவி, சுடாத பழம் கேட்ட நீ, இப்போது சுடுகிற பழத்தைத் தின்னப் போகிறையே! வாய் வெந்துவிடப் போகிறது! நன்றாகவூதி ஆறினபின்னர்ச் சாப்பிடு,’ என்றான். ஔவையார் அப்போது சுடாதபழம் என்பது காயென்று தெரிந்துகொண்டு, ‘இக்கருத்து, முன்னமே நமக்குத் தெரியாமற் போயிற்றே!’ என்று வெட்கமுற்று,

கருங்காலிக் கட்டைக்கு நாணாதகோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்றோற்ற
தீரிரவு துஞ்சாதென் கண்.

என்று ஒருவெண்பாப் பாடினர். இவ்வெண்பாவைக் கேட்டவுடனே மாட்டுக்காரப் பையனாயிருந்த சுப்பிரமணியக் கடவுளுக்கு ஔவையார்பால் அருள்மிக, மரத்தை விட்டிறங்கித் தம்முடைய நிஜரூபமெய்தி, அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘நான் உம்முடன் விளையாட வந்ததேயன்றி, இகழ்வதற்கன்று; உலகத்தில் உமக்குச் சமானமானவர்கள் யாரிருக்கிறார்கள்? ஆகையால் சந்தோஷமாய் இரும்,’ என்று சொல்லி, ‘உம்முடைய வாக்கால் உலோகோகாரமாக முக்கிய நீதிகளைச் சுருக்கமாக வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறேன், ஆனதனால் அவைகளைச் சொல்லக் கடவீர்,’ என, ஔவையார், ‘அஃதென்னை?’ என்று வினவ, சுப்பிரமணியக் கடவுள், ‘உலகத்தில் கொடியது, இனியது, பெரியது, அரியது இன்னின்னது என்று கூறவேண்டும்,’ என்றனர். ஔவையார் அதுகேட்டு,

கொடியது:

கொடியது கேட்கி னெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது!
அதனினுங் கொடிது இளமையில் வறுமை!
அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்!
அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டே!
அதனினுங் கொடிதிங்
கின்புற அவர்கையி லுண்பது தானே!

இனியது:

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிய தினிய தேகாந்த மினியது
அதனினும் இனியது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனியது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனியது அறிவுள் ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

பெரியது:

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரியது பெரியது புவனம் பெரியது!
புவனமோ, நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமா லுந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல் குறுமுனி அங்கையி லடக்கம்;
குறுமுனி யோகல சத்திற் பிறந்தோன்!
கலசமோ, புவியிற் சிறுமண்;
புவியோ, அரவினுக் கொருதலைப் பாரம்;
அரவோ, உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ, இறைவர் பாகத் தொடுக்கம்;
இறைவரோ, தொண்ட ருள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

அரியது:

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடராத லரிது!
மானுட ராயினுங் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்த லரிது!
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமுங் கல்வியு நயத்த லரிது!
ஞானமுங் கல்வியு நயந்த காலையும்
தானமுந் தவமுந் தான்செய்த லரிது!
தானமுந் தவமுந் தாஞ்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே!

என்று நான்கு அகவல்களைப் பாடக்கேட்டுச் சுப்பிரமணியர் மிகவும் சந்தோஷமடைந்தவராய் ஔவையாரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மறைந்து போயினர். ஒருநாள் ஔவையார் விநாயகக் கடவுளின் பூசையை விரைவாகச் செய்ய, அக்கடவுள், ‘வழக்கபடியன்றி விரைந்து பூசை செய்வது என்னை?’ என்று வினவ, ‘சுவாமி! சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஆதியுலாவும், பொன்வண்ணத்தந்தாதியும் பாடி அவைகளை அரங்கேற்றும்படி கயிலாயத்திற்குச் செல்கின்றார்கள்; என்னையும் அழைத்தார்கள்,’ என, விநாயகர், ‘அவர்கள் சேர்வதற்குமுன் உன்னைக் கயிலாயத்தில் விடுவேன், கிரமப்படி பூசை செய்,’ என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே சாவதானமாகச் சீதக்களப என்று தொடங்கும் அகவல் பாடித் துதித்துப் பூசையை முடித்தார். உடனே விநாயகக் கடவுள் விஸ்வரூபங்கொண்டு, தமது துதிக்கையால் எடுத்துவிட, ஔவையார் கயிலாயத்தை அடைந்தனர். பின்பு வந்து சேர்ந்த அவ்விருவரும் ஔவையாரைக் கண்டு அதிசயப்பட்டுச் சேரமான் வினவியபோது,

மதுர மொழிநல் லுமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போல்முழங்கி
அதிர வருகின்ற யானையுந் தேருமதன் பின்சென்ற
குதிரை யுங்காதங் கிழவி யுங்குல மன்னனே!

என்று பாடி விடை தந்தனர்.

ஓரூரில் ஒரு குறவனுக்கு...[தொகு]

ஓரூரில் ஒரு குறவனுக்கு இரண்டு மனைவியர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையாள் மேல் குறவன் மோகமுடையவனாயிருந்தான். ஒருநாள் குறவன் வேற்றூருக்குப் போய்வரவேண்டி மனைவியர்களை நோக்கி, ‘நான் அன்பாக வளர்க்கும் இப்பலாவை நீங்கள் இருவரும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்,’ என்று சொல்லிப் போயி்னன். அவன் போன பிறகு இளையாள அம்மரத்தை வெட்டிவிட்டுக் குறவன் வந்தபோது மூத்தாள்மேற் பழி சுமத்தினள். நிரபராதியாகிய மூத்தாள், கணவன் என்ன செய்வானோவென்று துக்கித்துக் கொண்டிருந்தாள். ஔவையார் அப்போதங்குத் தற்செய்லாய் வந்து, அவள் குறைகேட்டுப் ‘பயப்படாதே!’ என்று சொல்லிப் பலாத்தழைக்கும்படி,

கூரிய வாளாற் குறைத்திட்ட கூன்பலா
ஓரிதழாய்க் கன்றா யுயர்மரமாய்ச் - சீரியதோர்
வண்டுபோற் கொட்டையாய் வண்காயாய்த் தின்பழமாய்ப்
பண்டுபோ னிற்க படி.

என்று பாடின மாத்திரத்திலே வெட்டுண்ட மரம் தளிர்த்துத் தழைத்தது. மற்றொரு காலத்திற் பாண்டியன் அக்காலத்திலுள்ள சங்கப் புலவர்முதலிய சகல வித்துவான்களுடைய கல்வித் திறத்தினைப் பரீசிலிக்க எண்ணமுடையவனாய், மாற்றுயர்ந்த செம்பொன்னாற் செய்த நான்கு பருத்த கொலுசுகளில் தொங்குகின்ற ஓர் ஊஞ்சற்பலகையை அமைத்து, அதன்மீது திரளாகப் பொற்குவையிட்டு, ‘இந்நான்கு கொலுசுகளும் அற்றுவிடும்படி இன்ன தினத்தில் யாராயினும் பாடுவார்காயின், அவருக்குத் தகுந்த மரியாதையுடன் இப்பொற்குவியலைப் பரிசாகக் கொடுப்போம்,’ எனச் சகல தேசங்களிலும் பறையறைவித்தான். இச்சங்கதி கேள்வியுற்ற வித்துவசிரோமணிகள் யாவரும் முன்னிற்க அஞ்சி வருந்தினர். அத்தருணத்தில் அவ்வழியே வந்து ஔவையார் கேட்டு, உள்ளே நுழைந்து, பின்வருஞ் செய்யுட்களில் ஒவ்வொன்றைச் சொல்ல, ஒவ்வொரு சங்கிலியாக நான்கும் அறுந்து விழுந்தன:

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வாஃரத்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவேய் தாதாகோ டிக்கொருவர்
உண்டாயி னுண்டென் றறு.

தண்டாம லீவது தாளாண்மை, தண்டி
அடுத்தக்கா லீவது வண்மை, அடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூலி, பின்சென்றும்
ஈயானெச் சம்போ லறு.

உள்ள வழக்கிருக்க வூரார் பொதுவிருக்கத்
தள்ளி வழக்கதனைத் தான்பேசி - எள்ளவும்
கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் றன்கிளையுங்
எச்சமறு மென்றா லறு.

வழக்குடைய னிற்ப வலியானைக் கூடி
வழக்கை யழிவழக்குச் செய்தோன் - வழக்கிழந்தோன்
சுற்றமுந் தானுந் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சமறு மென்றா லறு.

பின்பு ஒருநாள் ஸ்திரீகளின் நடவடிக்கைகளைச் சிலர் இகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற ஔவையார், அதனைப் பொறாராகி,

நல்லார்க ளெல்லாரும் நல்லாரே தன்மையால்
வல்லாராற் கேடு படாராயின் - நல்லறி
வாண்மக்கட் பற்பலர்க்கே யுண்டாகும் பெண்டிரின்
மாண்பு கெடுக்கா விடின்.

என்றொரு பாடலைப்பாடி, அவர்கள் வாயடங்கச் செய்தார்.

பின்னும் ஔவையார் பற்பல சமயங்களிற் பாடிய தனிப்பாடல்கள்:

வேளூர்ப் பூதன் விருந்திட்டதைப் புகழ்ந்து பாடியது:

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ
றெல்லா வுலகும் பெறும்.

கோரைக்காலில் இருக்கும் ஆழ்வான் கொடையை நிந்தித்துப் பாடியது

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழுப்புடைவை யாகித் - திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகா லோய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.

ஈகையில்லானைக் குறித்துப் பாடியது

பாடல் பெறானே பலர்மெச்ச வாழானே
நாடறிய நன்மணங்க ணாடானே - சேடன்
இவன்வாழும் வாழ்க்கை யிருங்கடல்சூழ் பாரில்
கவிழ்ந்தென் மலர்ந்தென்னை காண்.

சுற்றுங் கருங்குளவி சூரத்தூ ராரியப்பேய்
எற்றுஞ் சுடுகா டிடிகரையின் - புற்றில்
வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததே னொக்கும்
தளர்ந்தோர்க்கொன் றீயார் தனம்.

முல்லான் என்பவனைப் புகழ்ந்து பாடியது

காலையிலொன் றாவர் கடும்பகலி லொன்றாவர்
மாலையிலொன் றாவர் மனிதரெலாம் - சாலவே
முல்லானைப் போல முகமுமக மும்மலர்ந்த
நல்லானைக் கண்டறியோம் நாம்.

பிரமனை நிந்தித்துப் பாடியது

அற்றதலை போக வறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றும்
மரமனையா னுக்கிந்த மானை வகுத்த
பிரமனையான் காணப் பெறின்.

அரசன், ‘மந்திரியாக யாரை நியமிக்க வேண்டும்?’ என்றபோது பாடியது

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் - வேளாளன்
மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்
அந்த வரசே யரசு.

(நூல்= பூணூல் அணிந்த பிராமண குலத்தான்; நும்தமர்= மன்னராகிய சத்திரிய குலத்தார்; கோல்= தராசு உடைய வணிகனாகிய வைசியர்; வேளாளன் = சூத்திரன் ஆகிய உழவர்குடிப் பெருமகன்.)

சோமன் என்னும் பிரபுவின்மேற் பாடியது

நிழலருமை வெயிலிலே நின்றறிமின், ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய்.

பாண்டியன் கலியாணத்திற் விருந்துண்டபோது பாடியது

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்
துண்ட பெருக்க முரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டே னீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண்டி லேன்!

ஒரு புலவன் மண்ணைக் கையில் வைத்துக்கொண்டு ‘இஃதென்னை?’ என்றபோது பாடியது

கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்
றுற்ற கலைமடந்தை யோதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா, புலவீர்!
எறும்புந்தன் கையாலெண் சாண்.

‘வாதநாடி யடங்கினால் ஒருநாளிலும், சிலேத்தும நாடி அடங்கினால் ஒரு நாழிகையிலும், பித்தநாடி அடங்கினால் ஒரு நிமிஷத்திலும் உயிர்நீங்கும்’ என்று பாடியது

வாதக்கோ னாளை யென்றான் வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதேனு மில்லையென்றான் - ஓதக்கேள்!
வாதக்கோன் சொல்லதினும் வையைக்கோன் சொல்லதினும்
ஏதக்கோன் சொல்லே யினிது.

உலகத்தவரை நோக்கிப் பாடிய செய்யுட்கள்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமலை வேற்கண்ணாய்! கூறுவமை நாடிற்
பலாமாவைப் பாதிரியைப் பார்.

இலக்கணக் கவிஞர் சொல்லின்பந் தேடுவர்
மலக்குசொற் றேடுவர் வண்க ணாளர்கள்
நிலத்துறுங் கமலத்தை நீவும் வண்டது
தலைக்குறை கமலத்தைச் சாருந் தன்மைபோல்

கல்வி யுடையீர்! கருங்கா னகத்திடையே
நெல்லி யிலையுதிர்ந்து நிற்பவெவன்? - வல்லாய்கேள்
வெல்லா வாழ்க்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம்போல் மாண்டு.

மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபமும்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - கூடும்
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல்.

நிட்டூர மாக நிதிதேடு மன்னவனும்
இட்டதனை மெச்சா விரப்போனும் - முட்டவே
கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியுங் கெட்டு விடும்.

நேசனைக் காணாவிடத்து நெஞ்சார வேதுதித்தல்
ஆசானை யெவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்.

ஆலைப் பலாவாக்க லாமோ? அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்க்க வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ? கருணையிலா
மூர்க்கனைச் சீராக்கலா மோ?

காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவிற் பெதும்பைபுலி - ஆசு
வலவற்கு வண்ணம் புலியாம்மற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி.

தாயோ டறுசுவைபோந் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - ஆயவாழ்
வுற்றா ருடன்போ முடன்பிறப்பாற் றோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்.

போந்த வுதாரனுக்குப் பொன்றுரும்பு, சூரனுக்குச்
சேர்ந்த மரணஞ் சிறுதுரும்பாம் - ஆர்ந்த
அறிவோர்க்கு நாரி யருந்துரும்பாம், இல்லத்
துறவோர்க்கு வேந்தன் றுரும்பு.

செம்மான் கரத்தனருள் சேயா! நெடியோனை
அம்மானெனப் பெற்ற வருள்வேலா - இம்மான்
கரும்பிறைக்கும் வெண்பிறைக்குங் கண்ணம் பிறைக்கும்
அரும்பிறைக்குங் கூந்த லணை.

சிவதோத்திரம்:

மேற்பார்க்க மைந்தரு மூவா வெருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச் சலுநன் னிலாவுமுண் டாகியு நின்னிடத்திற்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றாய்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோயி லிறையவனே!

ஔவையார் பந்தன்...[தொகு]

ஔவையார் பந்தன் என்னும் வைசியன்மேல் ஓரந்தாதி பாடி, அப்பிரபு நாகலோகஞ் சென்று அருமையாகப் பெற்று வந்த பொற்படாம் கொடுக்கப்பெற்று, அதை உடம்பிற்றரித்து, முதுமை நீங்கி இளமை பெற்று, அருநெல்லிக்கனியிற் பாதிப்பழம் பெற்று அதனையுண்டு வெகு காலம் ஜீவித்திருந்தனர் என்று சொல்லுகின்றனர். இவ்வாறே அசதி என்னும் கோகுல அரசன்மேல் ஒரு கோவை பாடிப் பல பரிசும்பெற்றனர். அக்கோவை சொன்னயம், பொருணயங்களால் மிகச்சிறந்தது எனச் சிற்சிலர் சொல்லுந் தனிக்கவி்களால் தெரிய வருகிறதே தவிர, அப்பிரபந்தம் முற்றும் பார்த்தவர் இக்காலத்துக் கிடைப்பது அரிது! அரிது!

ஔவையார் கிரகதாச்சிரமஞ் சிறந்ததென்று மற்றவர்களுக்குப் போதித்து வந்ததேயன்றித் தாம் ஆயுள் பரியந்தம் விவாகமில்லாமலேயிருந்தனர். இவர் 240 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருந்ததாகச் சொல்லப்படுகின்றனர். அதனால், இவருடைய இயற்பெயர் மறைந்து, ‘முதியவள்’ என்கிற பொருளைத் தரும் ‘ஔவை’ என்னுஞ் சிறப்புப்பெயர் வழங்கி வந்ததாக நினைக்கப்படுகின்றது.

ஔவையார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நல்லொழுக்கம், விநாயகரகவல், அருந்தமிழ்மாலை, தரிசனப் பத்து, ஞானக்குறள், பந்தனந்தாதி, அசதிக்கோவை, வைத்திய நிகண்டு முதலிய நூல்களைச் செய்தருளினர்.

மேற்கூறிய நூல்களுள், அகரவருக்கமாதியாகச் செய்யப்பட்டுள்ள ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் நீதி நூற்கள் சொல்நடையும், பொருள் விளக்கமும், வாக்கியச் சுருக்கமும் அமைந்திருத்தலால், பிறதேயத்தார்களாலும் தத்தம் பாஷைகளில் மொழி பெயர்க்கப்பட்டுச் சிறப்படைகின்றன.

இந்தக் கவிசாகரமாகிய ஔவையார் திருவாக்கினின்று தோன்றி பல நூல்களும், தனிப்பாடல்களும் நீதி நிறைந்த அருள் வாக்கியங்களென்று யாவராலுஞ் சிரமேற்கொள்ளப் படுகின்றன. ‘கல்வியிற் பெரியவன் கம்பன்,’ என்னப்பட்ட கம்பன் முதலாகிய புலவர்களின் பாடல்கள் ஔவையார் பாக்களோடு ஒப்பு உயர்வு கூறப்படா; ஆகலான், ஔவையார் சாரதா சொரூபமே பூலோக சரஸ்வதியாக வந்து தோன்றினர் என்று சொல்லுகின்றனர்.

வையக மெல்லாங் கழனியா - வையகத்துட்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்துள்
வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின்
சாறேயன் னாட்டின் றலையூர்கள் - சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங் - கட்டியுள்
தானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்.

இச்சரித்திரம் கர்ணபரம்பரையிற் கேட்டறிந்தவாறு இங்குச் சுருக்கி எழுதப்பட்டது.

ஔவையார் சரித்திரம் முற்றும்



பார்க்க:[தொகு]

15.ஏகம்பவாணன் சரித்திரம்

17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை

விநோதரசமஞ்சரி