விநோதரசமஞ்சரி/18.சிறுகூனன் கதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விநோதரச மஞ்சரி[தொகு]

அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்[தொகு]

18. சிறு கூனன் கதை[தொகு]

பூர்வத்திலே தார்த்தார நாட்டின் எல்லைக் கோடியிலே காஸ்கார் என்றொரு பட்டணமிருந்தது. அப்பட்டணத்திலே சுந்தரராவ் என்னும் ஒரு தையற்காரன் சந்திராபாய் என்னும் ஒரு கட்டழகியான காதல் மனைவியுடன் கூடி, மிகவுமந்நியோநியமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். ஒருநாள் மாலை வேளையில் அச்சுந்தரன் தன் கடையிலுட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கும்போது குறுகிய அவயவங்களோடு கூடிய ஒரு சிறு கூனன் முச்சட்டையாய் உடுத்திய உடையோடு கரத்திலே சல்லரி என்னுஞ் சிறுபறை ஒன்று தாங்கி, வெகு விநோதமாக ஆடிக்கொண்டும் மிக இனிமையாகப் பாடிக்கொண்டும் உல்லாசமாய் வந்து, பற்பல அதிசயங்களும் ஜாலங்களும் வேடிக்கைகளும் காட்டினான். அவை அவனுக்கு மிக்க சந்தோஷத்தை உண்டாக்கின. ஆதலால், அவன், ‘நாம் இக்கூனனை இல்லங்கூட்டிச் செல்வோமானால், நாமும் மனைவியும் இராத்திரியை இவனொடு உல்லாசமாகப் போக்கலாம்,’ என்று சிந்தித்துக் கூ்னனைத் தனி வீட்டிற்கழைத்துக்கொண்டுபோய், இல்லாளை நோக்கி, ‘அடி பெண்ணே இதோ பார்! இக்கூனன் நம்மை எப்படி உற்சாகப்படுத்தப் போகிறான்! இவன் ஆடல் பாடல்களைக் கண்டுங் கேட்டும் இன்றிரவே வெகு ஆனந்தமாகக் கழிக்கலாம்! இவனுக்கு நல்ல விருந்தளிப்பாய்!’ என்றனன். அது கேட்ட மனைவி முகமலர்ந்து புருஷன் சொற்கடவாது பல சிற்றுண்டிகளுடன் புலால் சமைத்து, உண்கலம் பரப்பி, அன்னம் முதலிய பரிமாறி, தானும் புருஷனுமாகக் கூனனுடனிருந்து, அவன் இடை இடையே குசோத்தியமாய்ப் பேசுவதைக் கேட்டும், நவநவமாய் அகசியஞ் செய்வதையுஞ் ஜகலங் காட்டுவதையுங் கண்டும் ஆனந்தம் பெருகவுண்டு களிப்படைகையிலே கூனன் தன் முன்னே இட்ட உணவுகளை இன்னதினிய தென்றோராது, மிக்க ஆவலோடு கைகொண்ட மட்டும் வாரி வாரி யுண்டான். அப்படி யுண்ணும் அவசரத்திலே ஊனோடூனாயிருந்த ஒரு வலிய மாமிசத்துண்டும் அவன் தொண்டையில் அடைத்துக்கொண்டது. அதனால் கூனன் மாரடைத்து மூச்சடங்கி அறிவிழந்து பிணம்போலத் தரையிற் சாய்ந்தான். இதைக் கண்ணுற்ற தம்பதிகளிருவரும் மதிமயங்கித் திடுக்கிட்டு, ‘ஐயோ! தெய்வமே! இஃதென்னை விபரீதம்! நமது வீட்டில் இவனுக் கிப்படி நேர்ந்ததே! இவன் செத்துக் கிடப்பதை யாரேனுங் கண்ணுறின், நாமேதோ இக்கூனனைச் சதிசெய்து கொலை புரிந்ததாக எண்ணுவார்களல்லவோ? அதிகாரிகள் கண்டால் நம்மை வதைப்பார்களே! என்ன செய்வோம்!’ என்று அதிக திகலடைந்து தங்களாற் செய்யக்கூடிய பரிகாரங்களையெல்லாஞ் செய்தும், யாதும் பயன்படாமை கண்டு, பிரேதத்தை எவ்வாறாவது வீட்டை விட்டு அப்புறப்படுத்துவதே கருமமெனத் தேர்ந்து, தையற்காரனும் பெண்டாட்டியும் தலைப்பக்கம் ஒருவரும் காற்பக்கமொருவருமாக அச்சவத்தை அடுத நாலைந்து வீட்டிற்கப்புறமிருந்த ஒரு வைத்தியன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அவன் வீட்டின் தெருக்கதவைத் தட்டினார்கள். அது கேட்டு ஒரு வேலைக்காரி வந்து கதவைத் திறந்து, ‘சேதி என்ன?’ என,சுந்தரன் அவள் கையில் ஒரு வெள்ளியைக் கொடுத்து, அம்மா, இதைப் பண்டிதர் கையில் கொடுத்து, ஒரு நோயாளியை அழைத்து வந்திருக்கின்றோம் என்று சொல்,’ என்றனன். அப்பணிப்பெண் வைத்தியன் முன் சேதி சொல்லும்படிக்குப் போகும்போது அவள் பின்னரே மெல்லெனத் தம்பதிகளிருவருஞ் சவத்தையெடுத்துச் சென்று மேல் மாடிப் படிச்சுவரில் சார்த்திவிட்டு, மீண்டு விரைந்து இல்லம் போய்ச் சேர்ந்தார்கள்.

பணிப்பெண்ணோ, பரிகாரியிடஞ் சென்று, ‘நோயாளி ஒருவனைக்கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்,’ என்று சொல்லி, அவர்கள் கொடுத்த வெள்ளியை அவன் கையிற்றந்தனள். பண்டிதன் வேலைக்காரியைத் ‘தீபங்கொண்டு வா,’ என்று கட்டளையிட்டு, வியாதியஸ்தனைக் காண வேண்டித் தானிருந்த அறையை விட்டு விரைந்து வரும்போது, அவன் கால் தடுக்கி மேற்படிக்கடுத்தாற் போல வைக்கப்பட்டிருந்த பிணம் மளமளவென்று புரண்டு கீழே போய் விழுந்தது. வைத்தியன், ‘இஃது என்னை!’ என்று தீபங்கொண்டு பார்க்கக் கூனன் விழுந்து செத்துக் கிடக்கக் கண்டான். ‘ஓஓ! நாம் என்ன காரியஞ் செய்தோம்! ஐயோ! இவனைக் கூட்டிக்கொண்டு வந்தவர் எங்குற்றனர்? நமது அவசரத்தால் இவனிக்கதியானாற் போலக் காண்கிறதே! யாது செய்வோம்!’ என்று திகிலடைந்து, சற்றுத் தெளிந்து, தானும் தன் மனைவியுமாய் ஒருவித ஆலோசனை செய்துகொண்டு, நல்ல நிசி வேளையில் அண்டையிலிருந்த ஒரு வர்த்தகன் வீட்டின் இறப்பின் மேலேறி இருந்துகொண்டு, அவ்வீட்டின் புகைக்கூண்டின் வழியாய் அக் கூனற் சவத்தின் கைகளிற் கயிறு தொடுத்து மெல்லக் கீழே இறக்கிவிட்டுக் கயிற்றை மேலாகவே வாங்கிக் கொண்டார்கள். சதிர் கச்சேரிக்குப் போயிருந்து அப்போதுதான் வீட்டுக்குவந்த வர்த்தகன், புகை போக்கியின் வழியாய் ஒரு சிறு குள்ளன் இறங்கி நிற்பதாகக் கையிலிருந்த தீபத்தாற் கண்டு, ‘ஓகோ! திருடனிதோ அகப்பட்டான்! அகப்பட்டான்!’ என்று கூச்சலிட்டு, ‘ஆ! எலியும் மூஞ்சூறுமல்லவோ என் வெண்ணெயை யெல்லாந் தின்று போகின்றனவென்று நினைத்தேன்! நீ தானா இதுவரையிலும் என் சொத்தைக் கொள்ளை கொண்டாய்? நல்லது! ஓடிப்போகப் போகிறாய்! நில்லு நில்லு,’ என்று அதட்டிக்கொண்டே ஒரு நீண்ட தடியோடு வந்து சவத்தைப் புடைத்தான். அடியுண்ட பிணம் கீழே விழ, அதன்மேல் தான் வீழ்ந்து நன்றாய்ப் புடைத்தான். அப்போது கள்ளன் அசைவின்றிச் சத்தமிடாதிருக்கக்கண்டு வர்த்தகன் தீபங்கொண்டு சோதித்து, அடி பொறுக்கமாட்டாமல் அவன் செத்து வீழ்ந்து பிணமாயினானென்று நினைத்து, அவன்மேற் கொண்ட கோபம் போயொளிக்க, ‘ஐயையோ! நமது மூர்க்கத்தனத்தால் திருடன் மாண்டானே! கொலைபாதகனானோமே! தண்டனைக் குள்ளாக வேண்டி வருமே! ஐயோ! தெய்வம் இப்படியும் நம்மைப் பழிக்காளாக்குமா!’ என்று பலவாறு எண்ணியெண்ணி முகம் வாடி, இடிவிழுந்த மரம் போலே நின்று பிரமித்து, சித்தங்கலங்கி, ஒன்றுந் தோன்றாமல் ஏங்கி, ‘அடா பாவி! சண்டாளா! என் பொருளைக் கொள்ளை கொண்டதுமல்லாமல், என் குலத்தையுமழிக்க வந்தாயே! காலா!’ என்று பிணத்தைப் பலவாய் வைது, பின்பு அந்தக் கோணற் சவத்தைத் தோளின்மேலெடுத்துச் சென்று, தன் வீட்டுத் தெருக்கோடியிலுள்ள ஒரு கடைவீட்டின் சுவரோடு சுவராய் நிற்கும்படி நிறுத்திவிட்டுத் திரும்பிப் பாராமலே ஒருவருமறியாதபடி மிகப் பரபரப்பாய் வீடு வந்து சேர்ந்தான்.

பின்பு சுக்கிரனுதித்துக்கீழ்த்திசை வெளுத்துப் பொழுது புலருந் தருணத்தில் மிக்க செல்வந்தனும், பெருமை பெற வாழ்பவனும், ராஜமாளிகைக்கு வேண்டிய சாமான்கள் கொடுத்து வருபவனுமான மிலேச்ச வர்த்தகனொருவன், அன்றிரவைச் சிற்றின்ப நுகர்ச்சியிலேயும், வெறியாடலிலேயும் போக்கி, நேரப்பட விழித்தெழுந்து, நித்திரை மயக்கந் தெளிந்துந் தெளியாதவனாய்ப் படுக்கை விட்டு வெளிப்பட்டு, காலைக்கடன் கழித்து நீராடி மீள விரும்பி இராத்திரி யுண்ட மது மயக்கத்தால் தள்ளாடிக்கொண்டே செல்லுகையில், நிலந்தெளித்தால் ஜனங்கள் நிலையைக் கண்டு நகைப்பார்களே என்கிற அச்சத்தாற் சற்று விசையாய் நடந்துசென்றான். அப்படிச் செல்லு காலடி அதிர்ச்சியாற் சந்தின் மூலையோடு மூலையாய் நிறுத்தப்பட்டிருந்த சவம் அவன் சந்துதிரும்புகையில் அவன் முதுகின்மேல் திடீரெனச் சாய்ந்தது. சாயவே, அதைப் பிணமென்றோராது, பதுங்கியிருந்து ஆளைப் போகவிட்டு மேல் வீழ்ந்து குரல்வளையைப் பிடித்து வழிபறிக்குங் கள்வனென்று நினைத்து, திரும்பி விரைவிற் சவத்தைப் பற்றி முகத்தில் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான். அக்குத்தினால் சவங் கீழே விழ, அதன்மேல் தான் வீழ்ந்து, ‘திருடன்! திருடன்!’ என்று கூக்குரலிட்டுக் கொண்டே நன்றாய்புடைத்தான். அவன் கூச்சல் வழிப்போக்கர்களை அங்குக் கூட்டியது; நகரத்துச் சேவகர்களும் வந்து சேர்ந்தார்கள். காவற்காரர் சங்கதி விசாரித்து, வர்த்தகனை, ‘ஐயா! அடித்தது போதும் நிறுத்து! நிறுத்து!’ என்று விலக்கி, கள்வனெழுந்திருக்கும்படி கைலாகு கொடுத்துத் தூக்க முயன்றனர். கள்வனெழுந்திராமல், அசைவின்றிப் பிணமாயிருக்கக் கண்டு வர்த்தகனைப் பிடித்துக் கட்டிப்போய், நியாயாதிபதியினுடைய காவற் கூடஞ் சேர்த்தனர். மிலேச்சவர்த்தகன், அப்போது மது மயக்கம் நீங்கித்தெளிந்து, தான் முன் பின் யோசியாது செய்த செய்கையைக் குறித்துச் செய்வதின்னது தவிர்வதின்னதென ஒன்றுந் தோன்றாதவனாய்த் தியங்கித் துன்புற்றிருந்து, நியாயாதிபதி கச்சேரிக்கு வந்தவுடன் அவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்பட்டான். நீதிமான் காவலர் சொன்ன பிரியாதைக் கவனமாய்க் கேட்டு, கைதியுடனெடுப்பித்து வந்த சவத்தை நன்றாய்ப் பார்வையிட்டு, வர்த்தகனை நோக்கி, ‘நீ செய்ததாய் ருஜுவாகிற இக்கொடிய செய்கைக்கு என்ன சொல்லுகிறாய்?’ என்றான். வர்த்தகன், ‘ஐயா! இவன் எனது கைகளாற் கொலயுண்டான் என்பதில் ஐயமில்லை, ஆதலினால், நான் குற்றவாளியல்லன் என்று சொல்வதற்கு வழியொன்றுமில்லை,’ என்றான்.

நியாயாதிபதி, அந்தக் குறிய கூன் சவத்தைக் கண்டபோதே ஊராள்வோனுக்குச் சந்தோஷம் விளைக்கும் அகசியக் காரருள் அக் கூனனுமொருவனென்றறிந்தவனாதலாலும், வர்த்தகனும் அரண்மனையைச் சார்ந்தவனாதலாலும், அரசன் அனுமதி பெற வெண்டி, இவ்வர்த்தகன் சூழாது புரிந்த கொலையைக் குறித்தும், அவனதைத் தடையின்றி ஏற்றுக் கொண்டதைக் குறித்தும், தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்து, அவன் கட்டளை பெற்று, மிலேச்ச வர்த்தகனைக் கழுவிலேற்றும்படி தீர்மானித்து, வர்த்தகனைக் கொலைக்களத்திற்குக் கொண்டுபோம்படி கட்டளையிட்டான். கொலைபுரிவோர், கழுமரத்தடியில் அவனை நிறுத்தித் தூக்க எத்தனிக்குந் தருணத்தில், வேடிக்கை பார்க்க வந்து அங்குக்குழுமிய கூட்டத்தினின்று, ‘ஐயா, அவரைக் கழுவேற்றாதே! ஏற்றாதே! கூனனைக் கொன்றவன் நானே!’ என்று உரத்துக் கூவிக்கொண்டு ஒரு சுதேசவர்த்தகன் சரேலென்றெதிரே வந்து, நியாயாதிபதியை நோக்கி, தன் வீட்டின்புகைக் கூண்டின் வழியாய் அக்கள்வன் இறங்கினதும், அவனைத் தானடித்ததும், அதனாலவனிறந்து போனதும், தெருவிலேயவன் சவத்தைக் கொண்டுபோய் நிறுத்தினதும் இவை முதலான தன் கதையைச் சொன்னான்.

நியாயாதிபதி கேட்டு, ‘இவ்வர்த்தகன் சுயேச்சையாய் ஓடி வந்து நானே கொலை புரிந்தேனென்று குற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிறானே! இஃது என்னை ஆச்சரியம்!’ என்று சற்று யோசித்து நின்று, பின்பு, ‘நன்று! அம்மிலேச்ச வியாபாரியை விட்டு இவ்வர்த்தகனைப் பிடித்துக் கட்டும்போது, யூத வைத்தியன் ஒருவன் கும்பலினின்று வெளிப்பட்டு, ‘ஐயா, நியாயாதிபதியே பொறும்! பொறும்! இக்கொலைக்குக் காரணமிவ்வர்த்தகனல்லன்; நான் சொல்வதற்குச் சற்றுச் செவி சாய்க்கக் கடவீர்,’ என்று சொல்லி, சென்ற இராத்திரி நல்ல தூக்கவேளையில் இருவர் இக்கூனனைக் கொண்டுவந்து தன் வீட்டுத் தெருக்கதவைத் தட்டினதும், வேலைக்காரி தீபமில்லாமற் கதவைத் திறந்ததும், அவர்கள் அவள் கையில் ஒரு வெள்ளியைக் கொடுத்து அதைத் தன்னிடம் கொடுத்து அவர்கள் கூட்டி வந்த வியாதியஸ்தனை உடனே வந்து பார்க்கும்படி வேண்டினதும், அவர்கள் வேண்டுகோளைத் தன்னிடம் வந்து அவள் சொல்லுகையில், இக்கூனனை வீட்டின் மேல் மாடிப்படியண்டை அவர்கள் விட்டுப் போனதையும், தீபமில்லாமல் நோயாளியைப் பார்க்க வேண்டித் தான் அவசரமாய் வருகையிற் கால் பட்டுக் கூனன் படியிற் புரண்டு கீழே விழுந்து செத்துக் கிடந்ததையும், தானும் தன் பெண்சாதியுமாய்ச் சவத்தையெடுத்துப்போய் அடுத்த வர்த்தகன் வீட்டு இறப்பின் புகைக்கூண்டின் வழியாய் வீட்டினுள் இறக்கிவிட்டதையும் விவரமாய்ச் சொல்லி, ‘இக்குறியனை உண்மையாகக் கொன்றவன் நானே, ஆதலால் கழுவேற்றப்பட வேண்டியவன் நானாகவேயிருக்கிறேன்; இவ்வர்த்தகன் குற்றவாளி அல்லன், அல்லன்,’ என்றான்.

அதைக்கேட்டு நியாயாதிபதி, ‘இஃதென்னை புதுமை! முற்றுஞ் சோதித்தறிவோம்,’ என்று, ‘நல்லது! இவ்வர்த்தகனை விட்டு வயித்தியனைப் பிடித்துத் தண்டிக்கக் கடவீர்,’ என்று கட்டளையிட்டான். அப்போது சுந்தரனென்னுந் தையற்காரன் கூட்டத்தினின்றும், ‘நான்தான் குள்ளனைக் கொன்றேன்! கொன்றேன்! வயித்தியனைக் கொல்லாதேயுங்கள்! கொல்லாதேயுங்கள்!’ என்று கூவிக்கொண்டு நியாயாதிபதி முன் சரேலென ஓடிவந்து, அக்கூனனைத்தான் கடையிற் கண்டு வீட்டிற்கழைத்துப் போய் விருந்தளித்தபோது அவன் முள்ளடைத்துக் கொண்டு செத்து வீழ்ந்ததனால், அவனைத் தானும் மனைவியுமாய்த் தூக்கிக்கொண்டு சென்று வைத்தியன் வீட்டின் மேல்மாடிப்படியிலே விட்டு வந்தது முதல் எல்லாச் செய்தியையும் விளங்கச் சொல்லி, ‘கூனன் செத்தது நானிட்ட சோறுண்டதனாலாகையால், நானே கழுவேற வேண்டியவனாயிருக்கின்றேன்,’ என்று பிடிவாதஞ் செய்தான்.

நியாயாதிபதி இம்மூவர் செய்தியையுங் கேட்டு மேலே நடத்த வேண்டியதைப் பற்றி ஆலோசியாநிற்கையில் வேடிக்கை பார்க்க வந்தவர்களுள் ஆங்கு நிகழ்ந்தனவெல்லாம் மிக்க ஆவலோடு கேட்டுக்கொண்டு நின்றிருந்த குழிந்தாழ்ந்த சிறு கண்களோடு கூடியவனும், வெள்ளிக்கம்பி காய்த்துத் தொங்குவது போலத் தேகமெங்கும் நீண்ட நரை பொருந்திய உரோமங்கள் குறைவறப்பெற்றுள்ளவனும், உச்சி முதற் பாதம் வரையிலும் தளர்த்து மடிப்படைந்து கறுத்து நீண்ட தேகத்தோடு கூடினவனுமாகிய ஒரு கிழ அம்பட்ட இரண வைத்தியன் சடுதியில் நியாயாதிபதி முன் வந்து நின்று, ‘ஐயா, இந்தக் கூனன் இன்னும் செத்தானில்லை, உத்தரவானால் சில நிமிஷத்திற்குள் இவனை உயிர்ப்பிக்கமாட்டுவேன்,’ என்று சொல்லிக்கொண்டே பிணத்தண்டை சென்று, அவன் தலையைப் பிடித்துப் பலமாயசைத்துப் பார்த்துத் தன்னிடமிருந்த ஓராயுதத்தினால், அக்கூனன் தொண்டையிலடைத்துக் கொண்டிருந்த எலும்போடு கூடிய ஒரு பெரிய மாமிசத் துண்டத்தை யாவருங்காண எடுத்துக்காட்டி, கூனன் சகஜமாய் நித்திரையினின்றெழுந்திருப்பவன் போல ஆயாசமின்றி எழுந்து ஆடிப் பாடும்படி செய்து, ஆங்கெய்திய எல்லோரையுஞ் சந்தோஷசாகரத்தில் முழுகச் செய்தனன்.

சிறு கூனன் கதை முற்றியது.


பார்க்க:[தொகு]

17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை

19.ஒரு பதிவிரதை சரித்திரம்

விநோதரசமஞ்சரி