விநோதரசமஞ்சரி/2.கற்பு நிலைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விநோத ரச மஞ்சரி[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]

2. கற்பு நிலைமை[தொகு]

[இது நிறைந்த கல்விப் பயிற்சியுடைய ஐரோப்பிய துரைசானிமார்களுக்காக எழுதப்படாமல் பெரும்பாலும் இந்து தேசத்துப் பெண்களைக் குறித்தே எழுதப்பட்டது.]

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மை யுண்டாகப் பெறின்.”

என்னும் குறளில் ‘ஒருவன் பெறுதற்குரிய பொருள்களுள் மனையாளினும் உயர்வாகிய பொருள் எவை இருக்கின்றன? அவளிடத்தே கற்பென்னும் கலங்கா நிலைமை இருக்கப்பெற்றால்’ என்று திருவள்ளுவ நாயனார் திருவுளம் பற்றினமையால், உலகத்தில் பெண்களாய்ப் பிறந்தவர்கள் தமக்குரிய நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணங்களும் ஏதுவாக, மனதைப் பலவிடத்துஞ் செல்லவிடாது நிறுத்திக் கற்புநிலை கெடாதிருக்க வேண்டும்.
அந்நான்கு குணங்களில் நாண் என்பது நாணம்; மடம் என்பது, எல்லாம் அறிந்திருந்தும் அறியாதுபோல இருத்தல்; அச்சம் என்பது, என்றும் காணாததைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பு என்பது, கணவரல்லாதார் கை மேற்படின் உடம்பு அருவருத்தலாம்.
விவாகம் இல்லாமல் கன்னிகைகளாக யிருக்கும் பருவத்தில் தாய்தந்தையர் ஆதீனத்திலும், விவாகமானபின் கணவர் ஆதீனத்திலும், கணவற்குப் பிற்காலம் புத்திரர் ஆதீனத்திலும், புத்திரர் இல்லாவிட்டால் சகோதரர் ஆதீனத்திலும் இருக்கவேண்டுமே யல்லாமல் ஒருபோதும் பெண்கள் சுவாதீனப்பட்டு இருக்கலாகாது.
கொண்ட கொழுநனை மேன்மேயாகப் பாவித்து அவன் சொல்லைத் தடுக்காமல், அவனுக்குக் கீழ்ப்படிந்து, பக்திவிநயத்துடனே ‘பொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது’ என்பதனால், பொய் பேசாமல், கறந்தபால் கறந்தபடி அவன் விஷயத்தில் உண்மையாய், ஊசியுஞ் சரடும்போல மனைவி அவன் கருத்தின்வழி ஒழுகல் வேண்டும்.

“பெண்ணுதவுங் காலை பிதாவிரும்பும் வித்தையே
எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையில்
கூரிய சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழகு தான்விரும்பும் பெண்.”

-என்றபடி, பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்பொழுது, பிதா வித்தியா சாதுரியமுள்ள பண்டிதனுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், தாயானவள் மகள் ஐச்வரியவானுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்றும், சுற்றத்தார் நல்ல குலத்தான் வந்து வாய்க்கவேண்டுமென்றும், அந்தப்பெண் அழகிற் சிறந்தவனை நாம் வரிக்கவேண்டுமென்றும் நினைக்கிறதுண்டு. ஆயினும் அது அப்படியே வாய்க்குமா? தெய்வச் செயலின்படி யல்லவோ சம்பவிக்கும்.

“குலமகட்(கு) அழகுதன் கொழுநனைப் பேணுதல்”

- என்பதனால், தன் புருஷன் அழகிருந்த ஊரில் குடியிருந்தறியா குரூபியாக யிருந்தாலும் அவனை மன்மதனாகவும், என்றும் அசாத்திய ரோகமுடையவனாயிருந்தாலும் அரோக திடகாத்ரனாகவும், ‘அவன்தம்பி நான்தான் எனக்கொன்றும் வாராது’ என்றவனைப் போல வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் வாரடையுங் கிடையாத நிரட்சரகுட்சியா யிருந்தாலும் கல்விக் களஞ்சியமாகவும், ‘பாண்டவர்களை நான் அறியேனா? கட்டிற்கால்போல மூன்று பேர்’ என்று வாயினாற் சொல்லி, இரண்டு விரல் காட்டி, நிலத்தில் ஒருகோடு கிழித்தவனுக்கு இவன் குறைந்தவனா என்னும்படி, கணக்கறியாத நிர்மூடனாயிருந்தாலும் சேஷசாயி போல நிபுணனாகவும், உண்ணச் சோற்றுக்கும் கட்டக் கந்தைக்கும் கதியற்று, அடுப்பிற் பூனை தூங்க, கையில் அரைக்காசுக்கும் வழியில்லாத அஷ்டதரித்திரனா யிருந்தாலும் குபேர சம்பத்துடையவனாகவும், கொக்குப்போல நரைத்துக் கண்குழிந்து பல்வீழ்ந்து வில்லைப்போல வளைந்த முதுகுடைய கூனற் கிழவானா யிருந்தாலும் நல்ல யௌவனமுடைய விடனாகவும் பாவனைசெய்து, அவனை அவமதியாமல் அனவரதமும் பேணி நடக்கவேண்டும். ‘கல்லென்றாலுங் கணவன் புல்லென்றாலும் புருசன்’ என்கின்றார்களே!

“அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.”

- என்றபடி, மனைவியானவள் கணவனுக்குத் தாதி போலப் பாதப் பணிவிடை செய்பவளும், மந்திரிபோலச் சமயோசிதமறிந்து நல்லாலோசனை சொல்பவளும், ஸ்ரீமகா லட்சுமி போலப் பெண்ணைப் பெண் இச்சிக்கத்தக்க அதிரூப சௌந்திரியத்தையுடையவளும், பூமாதேவி போலச் சலியாத பொறுமையுடையவளும், வேசைபோலப் பர்த்தாவைச் சரச கேளி விநோதத்தாற் பிரியப்படுத்துகின்றவளுமாய் இருப்பதன்றி, அன்புள்ள தாய் போல இனிய உணவுகளால் போஷிக்கின்றவளுமாய் இருக்கவேண்டும். இதனாலல்லவோ, ‘தாய்க்குப்பின் தாரம்’ என்று உலகம் சொல்லுகிறது?

ஒருவேளை கணவன் கோபித்தால் தானுங் கூடக் கோபியாமல் அவன் தனக்கு அநுக்கிரகித்ததாகவும், அவன் வைதால் அவனைத் தானும் வைதிடாமல் தன்னை அவன் வாழ்த்தினதாகவும், அவன் கைச் சேஷ்டை முதலிய தீமைகளைச் செய்தாலும் அவைகளை அப்படி நினையாமல் புருஷன் சரசத்தால் செய்யுந் தாடனங்களாகவும் நினைத்துச் சாந்தத்தோடும் அவனருகில் வந்து, 'கை எப்படி நோகிறதோ! பாதம் எப்படி உளைகின்றதோ! என்று அவனுக்கு இதஞ்சொல்லி, அவன் கோபத்தைத் தணிக்கவேண்டும். அவ்வாறு செய்தால், அவன் பொல்லாத மூர்க்கனானாலும் அவனுடைய கல்லான நெஞ்சுங் கரைந்து பரமசாதுவாவான் அல்லவா?
'வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி,' என்று மாமியுடனே வாது செய்யாமல் அவளைத் தாய்போலக் கருதி, அவள் காலிலே பட்டது தன் கண்ணிலே பட்டதாகக் குடும்ப பாரத்தையெல்லாம் ஏந்திக்கொண்டு, அவளும் 'கண்மணியாகிய என் செல்வ மருமகளைப் போலத் தேடக் கிடைக்குமா!' என்று சொல்லும்படி அந்நியோந்நியமாய் நடந்து, 'மாமியார் மெச்சிய மருமகள் இல்லை,' என்னும் பழமொழியைப் பறக்கச்செய்யவேண்டும்.
'இவள் எங்களுக்கு மருமகளா! அல்ல; எங்கள் குலதெய்வமே இப்படி உருக்கொண்டு வந்தது!' என்று மகிழும்படி மாமனாரைத் தந்தை போலப் பூசிக்கவேண்டும்.
கணவர்களுடைய சகோதரர்களைப் பேதமாய் எண்ணாமல் பரிபாலிப்பதனால் அவர்களில் மூத்தவர்கள், 'இவள்தான் எங்கள் புத்திரி,' என்றும், இளையவர்கள் 'எங்களைப் பெற்றதாய்' என்றும் கொண்டாடும்படி நடக்கவேண்டும்.
அவர்களுடைய மனைவிமார்கள் தன்னுடைய உசித குணத்தைக் கண்டு, இவள் பெண்கள் நாயகம்; பெண் பாத்திரம், பெண்கள் பூஷணம், பெண்கள் மாணிக்கம், பெண்ணாரமுதம், என்று ஸ்துதி செய்யும்படி அவர்களைச் சகோதரிகளைப் போலப்பாவித்து, அவர்களுடனே கலகமில்லாமல் நேசிக்கவேண்டும்.
நாத்திமார்களையும் வரிசை வண்மை தவறாமல் அவர்கள் இந்தப் பாக்கியவதிபோலப் பெண்கள் எங்கும் காணக்கிடையார்கள், என்று சொல்லும்படி நன்றாய் உபசரிக்கவேண்டும்.
அடிக்கடி அண்டைவீடு அயலவீட்டிற்குப் போகலாகாது. எவ்விடத்திற்காவது யாதொரு நிமித்தத்தால் அவசியம் போகவேண்டியிருந்தால், சிறிய பெண்குழந்தையாயினும் வழித்துணையாகக் கூட்டிக்கொண்டு போகவேண்டுமேயல்லது தனிவழி நடந்து தண்டுமாரியாய்த் திரியலாகாது.

★பெண்ணொருத்தி...[தொகு]


பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள் - பெண்மூவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசிலுல(கு) என்னாம் பின்!

-என்றபடி, ஒரு பெண்பேசினால் பூமி அதிரும்; இரண்டு பெண்பேசினால் நட்சத்திரம் உதிரும்; மூன்றுபெண் பேசினால் கடல் சுவறும்; நான்குபெண் பேசினால் உலகம் யாதாகுமோ என்பதனால், யாருடனும் இடியிடித்தது போல உரக்கப் பேசாமல், குயில் கூவுதல் போல இனிய குரலாகக் கிளி கொஞ்சுவதுபோல மிருது பாஷியாய் வசனிக்க வேண்டும். 'பெண்டுகள் இருப்பிடம் பெரிய சண்டையாம்,' என்கிறார்களே!

தாயைப் பார்த்துப் பெண்ணைக்கொள்' என்பதை நினையாமல். நான் வீணே பிண்டமும் துண்டமும் நேர்ந்து, பிடாரியைப் பெண்டு பிடித்துப் பேயனானேனே! இதுவும் என் தலை விதியா? என்று வியசனப்படாமல், பழம் நழுவிப் பாலிலே விழுந்தது' போலவும், சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தது போலவும், ஏதோ பாக்கியவசத்தால் எனது இல்வாழ்க்கைக்கு நல்லபெண் வந்து வாய்ந்தாள்! என்று மகிழ்நன் மகிழும்படி இங்கிதமறிந்து நடக்க வேண்டும். கணவனுடைய தேட்டத்தில் வரும் பொருளளவிற்குத் தக்கபடி மிதமாய்ச் செலவுசெய்யாமல் கண்டபடிக்கெல்லாம் கைகொண்ட மட்டும் செலவழிக்கிறாளே! இவள் இன்னம் சிலநாளில் அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பாள்! என்று பிறரால் இகழப்படாமல், திறமையுடனே சிறுகச் செலவுசெய்ய வேண்டும். உலகத்தார் இராக்காலத்திற்கு உதவியாகப் பகற்காலத்திலும், மழைக்காலத்திற்கு உதவியாகக் கோடைகாலத்திலும், முதுமைக்கு உதவியாக இளமையிலும், மறுமைக்கு உதவியாக இம்மையிலும் வேண்டுபவைகளைத் தேடிவைத்துக் காப்பதுபோல இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களையெல்லாம் தாருணமறிந்து சேகரித்துப் பின்னுக்கு ஆகுமென்று சிக்கெனக் காப்பாற்ற வேண்டுமேயல்லது, வீட்டிலுள்ள பண்டங்களையெல்லாம் அநியாயத்தில் அழிக்கலாகாது.

தந்தை யாயினும் விழைவிற் றன்னுடனே ஒருவயிற்றிற் சார்ந்தா ரேனும்
மைந்த ராயினும் மிகவும் வனப்புடைய ரெனிலவர்மேல் மடநல் லார்தம் சிந்தை நடந்திடும்


ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேளெனினு மாதர்க்(கு)
அயலார்மே லாகும் மனம்.

- (நீதிநெறி விளக்கம்)

-என்றிருக்கின்றனவாதலால், ஆணாய்ப் பிறந்தவர் பிதாவானாலும், சகோதரரானாலும், பெற்ற பிள்ளையானாலும், மற்றும் எவரானாலும் அவர் இருக்குமிடத்தில் அச்சமின்றி இருக்கலாகாது. ஐந்துவயது ஆண்பிள்ளையைக் கண்டால், ஐம்பது வயது பெண்பிள்ளையும் எழுந்திருக்க வேண்டும் என்கிறார்களே!

அன்னம்போலவும், பெண்யானை போலவும் மிருது நடையாகத் தலை இறக்கித் தன்பெருவிரலை அல்லது நிலத்தைப் பார்த்த வண்ணமாய் நடக்கவேண்டுமேயல்லாமல் பூமி அதிரும்படி விசையாய் நடக்கலாகாது. ஆண்மக்களிலாவது பெண்மக்களிலாவது, துஷ்டர்களாய் இருக்கின்றவர்கள் தாரதம்மியம் பாராமல், அக்கிரமமாய்ப் பேசினால் அதென்ன உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா? நாய்குரைத்து நத்தம் பாழாகுமா? என்று நினைத்துச் சாதுவாய்ப் போகவேண்டுமே யல்லாமல், அவர்களை எதிரிட்டுப் பத்திரகாளி போல அஞ்சாது, தெருச்சண்டைக்கு இடுப்புக்கட்டல் ஆகாது. கணவனாவது மற்றவர்களாவது ஏதேனும் ஒன்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தால், 'கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?' என்று தன்பாட்டிற்குத் தானிராமல், அது என்ன சமாசாரமென்று அவர்களை நேரே விசாரிக்கவும், சாடையாய்க் கதவின் சந்தில் அல்லது சுவர்க்கோழி போலச் சுவரின் அருகில் ஒன்றியிருந்து கேட்கவுங் கூடாது. மணஞ்செய்யப்பட்டு மாமி வீட்டிற்கு வந்தவுடனே, 'வந்ததே சிறுக்கி பந்தடித்தாள்; வரவரச் சிறுக்கி கழுதை மேய்க்கிறாள்' என்னும் கதைபோல, ஆரம்ப சூரத்துவமாய்ச் சர்வஜாக்கிரதையுடனே செவ்வையாய் நடந்து, பின்பு வரவரச் சோம்பலை மேற்கொண்டு கபடத்தினால், 'எவனோ செத்தான், அவளேன் அழுதாள்?' என்பதாக எவ்வளவாவது சமுசாரக் கூர்மையில்லாமல் கடனற்றது போல இருக்கலாகாது.

புருஷனுக்குப் பொருள் வரவின்றி அவன் வறுமைப்படுங் காலத்தில், 'ஏருழுகிறவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்,' என்று நினைக்க வேண்டுமேயல்லாமல், அவன் சம்பாதிக்கவில்லையென்று மனஞ்சலிக்கும்படி அவனைச் செல்லரிப்பது போல எந்நேரமும் வருத்தப்படுத்தலாகாது. பரபுருஷருடைய முகத்தைப் பாராமலும், அவர்களுக்கெதிரே பல்லைக்காட்டிச் சிரியாமலும், பரிகாசஞ் செய்யாமலும், பக்குவமாயிருக்க வேண்டும். 'சிரித்தையோ சீரைக் குலைத்தையோ!' என்று பழமொழியும் இருக்கின்றதே! தாமரையில்லாத தடாகமும், சந்திரனில்லாத ஆகாயமும் புலவர்களில்லாத சபையும், அரசனில்லாத நாடும், மந்திரி இல்லாத அரசாட்சியும், படைத்தலைவன் இல்லாத சேனையும், தெய்வஸ்துதி இல்லாத நாவும், நற்சிந்தையில்லாத நெஞ்சும், கிருபையில்லாத கண்ணும், பயனில்லாத சொல்லும், மணமில்லாத மலரும்போலக் கற்புடை மனைவி இல்லாத வீடு சிறப்பின்றி இடுகாட்டுக்கொப்பாகும். கண்டவர்கள் கேட்டவர்கள் எல்லாம், இந்த உத்தமி கல்வியிற் கலைமாதோ! கற்பினில் அருந்ததியோ! கருணையில் பார்வதியோ! பரிசுத்தத்திற் பவானியோ! என்று அதிசயிக்கும்படி விவேகமும், இரக்கமும், கசியும் உள்ளவளாயிருக்கவேண்டும். பெற்ற பிதா முதலானவர்கள் தங்கள் பெண்ணைப் பார்க்கும்படி பெண்வாழும் ஊருக்கு வந்தால், திடீரென்று அந்த வீட்டிற்குள்ளே நுழையாமல், பெண்ணின் நடத்தையை அண்டை அயலில் விசாரிக்க வேண்டும். விசாரிக்கும் அளவில், 'அது கெட்டது மூதேவி1 அவள் ஆருக்கும் அடங்காள்! ஒருவர் பேச்சுங் கேளாள்! தான் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று சாதிக்கிறவள்! அவள் எல்லாருடனும் வில்லங்கமாக வல்லிடி வழக்குத் தொடுக்கின்ற ஜகஜண்டி! அவள் மூன்று லோகமும் பூசைகொண்ட முழுச்சாமியார்! அவள் மானிடவடிவு எடுத்துவந்த யமராட்சசி! அவள் கொண்டவனைத் துரும்பளவாவது மதியாள்! கொஞ்சநாளில் அவன் கழுத்துக்கே கயிறு கொண்டு வருவாள்! அந்தக் கரிகாலி முகத்தில் விழித்தாலும் கஞ்சி கிடைக்காது; அவள் அரைநொடியில் குடும்பத்தைக் கலைத்துக் குடுவை வேறாக்குவாள். அவள் வெல்லச்சதுரி; வல்லாளகண்டி; அவள் எல்லாருடைய தலைப்பாகையையும் தாழ இறக்கி வைப்பாள்; அந்தக் கொள்ளையை என்னென்று சொல்லுகிறது! எண்ணத்தொலையாது; ஏடிடங்கொள்ளாது; ஐயோ! தர்ம தேவதை போலிருக்கிற நீங்கள் ஜன்மாந்திரத்தில் என்ன பாவம் செய்தீர்களோ! இந்தச் சண்டாளி வந்து உங்கள் வயிற்றில் பெண்ணாகப் பிறந்தாளே! செத்தாலும் தோஷம் இல்லை! இவள் பெற்றார் பிறந்தார் பெயரையும் கெடுக்கவந்தவள்; இந்தக் கொடும்பாவி சமாசாரத்தைக் கேட்கிறது புண்ணியமா, புருஷார்த்தமா? பேசிய வாயை நெய்விட்டுச் சுத்திபண்ண வேண்டும், என்று நாராசத்தைக் காய்ச்சிக் காதிலே சொருகுவது போலச் சொல்லக் கேட்டால், அந்த வீட்டில் எடுத்தடி வையாமல், முன்னிட்ட காலைப் பின்னிட்டபடியே திரும்பிப் போய்ச் செத்ததிலே ஒன்றாகப் பாவித்துத் தலைமுழுகிவிட வேண்டுமேயல்லாமல், மறுபடி அந்தத் திசையை எட்டிப் பார்க்கலாமா என்னும்படி துன்மார்க்கியாயிராமல், அம்மம்ம! இந்தப் புண்ணியவதிக்கொப்பாக யாரைச் சொல்லலாம்? இவளுடைய நன்னடக்கை மற்றப் பெண்களுக்குத் தவஞ்செய்தாலும் வருமா? பெண்ணுக்கு மெல்லியென்றும், நல்லாளென்றும் சொல்லப்படும் பெயர் இவளுக்கே தக்கது! இவளோ, மாமியார் மாமனார் முதலிய சகலருக்கும் கண்ணுக்குக் கண்ணாயிருக்கின்றவள். இவள் பத்தரை மாற்றுத் தங்கம்! பதிவிரதா சிரோமணி! இலட்சுமிக்கும் இவளுக்கும் என்ன பேதம்? இவள்மேல் சற்றாவது தோஷஞ்சொல்லலாமா? இவள் தீண்டா நெருப்பு! தோஷஞ் சொன்னால் நா அழுகிப்போம்! இப்படிப்பட்ட பதவிசு நாங்கள் எங்கும் கண்டதில்லை! இவள் மழைபெய்யென்றால் பெய்யும்; வெயில் காயென்றால் காயும்; பொழுது விடியென்றால் விடியுமே! இவளைப் பெறும்படி நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம்! என்று, செவியில் அமிர்தத்தைச் சொரிவது போலச் சொல்லக்கேட்டால் அப்பொழுது புத்ரா: சதகுணம் புத்திரீ என்றுநினைத்துச் சந்தோஷித்து அவர்கள் பெண்ணுக்கு மாமி வீட்டில் தாராளமாய்ப் பிரவேசிக்கும்படி அவள் நன்முறை தவறாது ஒழுகவேண்டும்.

★★இல்லாளகத்திருக்க[தொகு]


இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

-என்பதனால், ஒருவனுடைய மனைவியிடத்தில் நற்குண நற்செய்கைகள் உண்டாயிருந்தால், அம்மனையிடத்தில் ஒன்றும் இல்லாதிருந்தாலும் எல்லாம் உள்ளனவேயாம்! அவளிடத்தில் அவை இல்லாதிருந்தால் அங்கெல்லாம் இருப்பினும் ஒன்றுமில்லது போலாம்.

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.

- என்பதனால், இம்மையிலே கணவனைப் பூசித்த பெண்டிர் மறுமையில் சுவர்க்கத்தில் தேவர்களால் பூசிக்கத்தக்க பெருஞ்சிறப்பு உடையவராவர். மேலும்,

'சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.'

- என்றிருத்தலால், பெண்கள் தங்கள் கற்பினால் காக்கும் காவலே காவலாவதன்றி, அவர்களைக் கணவர் சிறையினால் காக்குங் காவல் என்ன பயனைச்செய்யும்? 'அறைகாத்தான் பெண்டிழந்தான்' என்றுஞ் சொல்லப்படுகின்றது.

விலைமகட்கு அழகுதன் மேனி மினுக்குதல்

- என்பதனால், குலமகட்கு விரோதமென்று நினையாமல், ஜன்மாந்தர சுகிர்தமுண்டாயிருந்தால், தன் கணவன் கண்டுகளிக்கும்படி தன்னை விலையுயர்ந்த வஸ்திர பூஷணங்களால் அலங்கரித்துக் கொள்ளலாம். அவை இல்லாவிடில், 'இல்லையே!' என்று ஏங்கிச் சுமங்கலி தன் முகம் பாழடையவிடாமல், மஞ்சள் குங்குமமாவது முகத்தில் அணிய வேண்டும்.

"மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம்' என்பதாகத் தாறுமாறாய்ச் செய்யாமல், காலமறிந்து கிரமமாகப் புருஷனுக்கு ஸ்நானானுஷ்டானுங்களுக்கு இடம்பண்ணி, வேளைக்கேற்ற பக்குவமான போஜன தாம்பூல வஸ்திராபூஷணாதிகளும் தடையில்லாது அமைக்க வேண்டும். மனைவியானவள் சகலவித பூஷணங்களையும் துறந்திருந்தாலும், மங்கல சூத்திரத்தை மாத்திரம் துறக்கக் கூடாதது போல, தந்தை தாய் முதலிய பந்துக்களையெல்லாம் விட்டுப் பிரிந்தாலும் கணவனை மாத்திரம் பிரிந்திருக்கலாகாது. அற்பமாகிய பறவைகளில் அன்றிற் பெடையுமல்லவோ தன்சேவலைப் பிரிந்திருக்கச் சகியாது உயிர் விடுகின்றது! 'பாத்திரமறிந்து பிச்சையிடு; கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு,' என்பதனால், அறிவொழுக்கங்களில் சிறந்த சான்றோர்களே தானபாத்திரர்களாயினும், 'பெரிய வீடென்று பிச்சைக்குப் போனால் கரியைவழித்து முகத்திலே தடவினார்கள்' என்று< எளியவர்கள் ஏளனஞ்செய்யாது, அவர்கள் தேகி யென்று வந்தால் நாஸ்தி என்று சொல்லாமல், சிரார்த்தாதிகளில் ராட்சதர்களுக்குப் பிரீதியாகச் செய்யும் பூரிதானம் போலவாவது, அவர்களுக்குத் தம்மால் இயன்ற மாத்திரம் பிச்சையிட வேண்டும். 'இல்லையென்ற இடத்தில் பல்லியுஞ் சேராது' என்கிறார்களல்லவா? தாய்வீடு அருகிலிருக்கிறதென்று ஆருடனுஞ் சொல்லாமல் நினைத்த நேரமெல்லாம் அவ்விடத்திற்கு ஓடி, 'இவள் ஓடுகாலி,' என்று பெயரெடுக்கலாகாது. 'அடிக்கடி தாய் வீடோடிய பெண்ணும் பேயோடாடிய கூத்தும் ஒக்குமல்லவோ? மாமியார் மாமனார் பெருவயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்திற்கு நாள்வைத்துக் கொள்வது போலத், தெரியாமல் இந்தப் பெண்ணைக் கொண்டால் சுகப்படலாமே என்று நினைத்துப் பகீரதப் பிரயத்தனப்பட்டுத் தேடினதற்குத் தகுதியாய் வாய்க்காமல், 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த்து போல வந்து லபித்ததே! நம்முடைய துர்ப்பாக்கியம் என்ன என்று அவர்கள் விசனப்படும்படி ஏடாகூடஞ் செய்யலாகாது.

சமுத்திரம்போல வற்றாத செல்வத்தில் பிறந்தாலும் வறியவனுக்கு வாழ்க்கைப்பட்டால், அந்தச் செல்வப் பெருக்கையே பாராட்டிச் செருக்கினால் அவனை அசட்டை பண்ணாமல், 'மலையிலே விளைந்ததானாலும், உரலிலே வந்துதானே மசியவேண்டும்?' என்பதற்கிசைய, அடங்கி நடக்கவேண்டும்.

நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.

- என்பதனால், தன் பேதைமை காரணமாக உலகத்தில் அந்நியராகிய செல்வரின் படாடோபங்கண்டு, நெய்க்குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல, 'நாம் இந்தச் சீமான் பக்ஷஞ் சேர்ந்தால் யாதொரு வருத்தமுமின்றி, எக்காலமும் வேளை தவறாது, பால் பழங்களுடனே நெய்யாரக் கையார நல்ல போஜனம் உண்டு சுகித்து, வாசனைத் திரவியங்களால் நலங்கிட்டுக்கொண்டு, பனிநீரில் ஸ்நானஞ்செய்து, இருபக்கத்துமுள்ள கரைக்கும் முன்தானைக்கும் விலையுயர்ந்த முத்து பச்சை கெம்பு வயிரங்கள் வரிசை வரிசையாகக் கோத்து இடையிடையே நெருங்க மல்லிகை தாமரை குமுதம் போல விசித்திரமான பூச்சமைத்து, பிடித்தால் பிடிக்குள் அடங்கும்படி அதிக நாணயமாகிய இழையால் ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டென்னும் பொற்சரிகைச் சேலையுடுத்து, முத்துக் கச்சுப் பூண்டு, மேகம்போலக் கறுத்துத் தழைத்து நெய்ந்து நெறிந்து சுரிந்து நீண்டு சுருண்டு கடை குழன்ற கூந்தலை வாசனை சேர்ந்த மயிர்ச்சாந்து பூசி, தங்கச்சீப்புச் சிக்கங்கோல் கொண்டு சீவிச்சிக்கறுத்து வாரிவகிர்ந்து, திவ்விய பரிமள புஷ்பமாலைகளை வைத்துமுடித்து, நெற்றியில் ஜவ்வாது திலகமிட்டுக் கண்ணுக்கு மையெழுதிக் கழுத்துக்குக் கஸ்தூரி பூசி, மார்புக்குச் சந்தனத்தால் தொய்யில் வரைந்து, தோளுக்கு விற்கோலம் தீட்டிக் காலுக்குச் செம்பஞ்சூட்டிக் கன்னத்திற்குக் கறுப்பெழுதி, உலகமெல்லாம் விலை மதிக்கத்தக்க நவரத்தின கசிதமாகிய தலைப்பணி செவிப்பணி நுதற்பணிகளும் ஆரகேயூரங்களும் ஜாஜ்வல்லியமாய்ப் பிரகாசிக்க, கைகளில் பொற்சரி பொற்கடகங்கள் விளங்க, கால்களில் ரத்தினச்சதங்கை ரத்தினச் சிலம்புகள் கலீர்கலீரென்று ஒலிக்க, நாசியில் வச்சிர நத்து வச்சிர மூக்கணிகள் கண்கூசும்படி தகதகவென்று ஜொலிக்க, கேசாதி பரியந்தம் பொன்காய்த்தாற் போலத் தோன்ற, மெய்யிற் பூசிய சந்தன குங்கும கற்பூர கதம்பாதி பரிமளவர்க்கம் காததூரம் கமகமவென்று மணக்க, வல முன்கையிற் பற்றிய பூங்கொத்தில் பஞ்சவர்ணக்கிளி கொஞ்ச, அண்ட கோளத்தை அளாவப் பளிங்கினால்கட்டப்பட்ட மலைபோலும் பெரிய ஏழடுக்கு உப்பரிகையில் மாணிக்கமயமான சித்திரமேடை மீது, தாதிமார் காம்பரிந்து பரப்பிய மெல்லிய புஷ்பத்தின்மேல் வடிவிற் சிறந்த சில பெண்கள் சாமரைபோட, சிலபெண்கள் ஆலவட்டம் அசைக்க, சில பெண்கள் தாம்பூலமடித்து நீட்ட, சில பெண்கள் பவளக்காளாஞ்சி ஏந்த, சில பெண்கள் ஆரத்தி எடுக்க, சில பெண்கள் கைலாகு கொடுக்க, சிலபெண்கள் நிலப்பாவாடை விரிக்க, சில பெண்கள் பிடித்துவரும் ஆணிமுத்துப் பந்தரின்கீழ்ப் பூங்கொடி போல இடையசைய, அன்னம்போல் அடிபெயர்த்து, மதாத்திபோலக் கைவீசி, கலாபத்தை விரித்து மயில் உலாவி தடிக்கிறது போல உடல் கொலுங்கச் சொகுசாகச் சாரியுலாவி, நாம் வைப்பாட்டியானாலும் கொண்ட பெண்டாட்டியாகிய கண்ணாட்டி போலிருந்து, சம்பிரமத்துடனே சகல போகமும் அனுபவித்துக்கொண்டு நல்ல சீமாட்டியாய் வாழலாமே! இதைவிட்டு இந்தத் தரித்திரம் பிடித்த காமாட்டி படுவானைக் கட்டிக்கொண்டு அழுவானேன்?" என்று வீண்எண்ணங்கொண்டு, கற்பழியத் தன்னைக் கைப்பிடித்த வறியவனாகிய கணவனைக் கைவிடக் கருதி, அவன் மனம் வெறுக்கக் கொள்ளிகொண்டு சுடுவது போலக் கடுஞ்சொற் சொல்லிச் சீறுமாறு பண்ணலாகாது. அப்படிச் செய்தால், 'அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டவள்' கதையாய் முடியும்.

அன்றியும், அது 'வாய்த்தவிடும் போய் அடுப்பு நெருப்பும் அவிந்தாற்போல' ஆகும்; மேலும், வியபிசாரப் பட்டமும் பழியும் விளையும்; மறுமையில் ரௌரவ நரகத்தில் வீழ்ந்து அளவிறந்த காலம் கொடிய வேதனையும் அனுபவிக்க வேண்டிவரும். அல்லாமலும், கணவனோடே எதிர்த்து நிற்பவள் யமன்; அவனுக்குக் காலமறிந்து உண்டி சமையாதவள் தீரா நோய்; சமைத்த உணவை அவனுக்குப் பரிமாறி அவன் உண்ணச் சகியாதவள் இல்வாழ் பேய்; அன்றியும், இம்மூவருங் கொண்டவன் கழுத்தை அறுக்கவந்த கூரரிவாளாவார்கள்.

எறியென்(று) எதிர்நிற்பாள் கூற்றம், சிறுகாலை
அட்டிற் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

மேலும், கணவனைக் கோபித்து உக்கிரமாய்ப் பார்த்தவள் வேங்கைப் புலியாவாள்; அவனை வரம்பு கடந்து வைதவள் கொள்ளிவாய்ப் பிசாசாவாள்; அவனைக்கண்டு எழுந்திராமற் கிடந்தவள் மலைப்பாம்பாவாள்.

★★★சோழநாட்டில்...[தொகு]

சோழநாட்டில் ஒரு வேளாளன் ஒரு நாள் தன் பெண்சாதியுடனே 'இன்றைக்குப் பெரியவர் ஒருவருக்கு அமுது படைக்கவேண்டும்,' என்று சொல்ல, ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள், தம்பி கும்பகோணத்திலே கோதானம் பண்ணுகிறான்,' என்பதுபோல, வீட்டிருப்பு அறியாத ஆண் பிள்ளையைக் குறித்து என்ன சொல்லுகிறது? 'அஞ்சு மூன்றும் அடுக்காய் இருந்தால் அல்லவோ அறியாத பெண்ணும் கறியாக்குவாள்?' அமுது படைக்கிறதற்கு அரிசி வேண்டுமே! பதார்த்தம் வேண்டுமே1 வெறுங்கையைக் கொண்டு முழம்போடுவது எப்படி?' என்று சொல்ல, அவள் சொற்படி சகலமுஞ் சேகரித்துக் கொடுக்க, 'வேண்டுமென்றால் வெண்ணெய் மொத்தை போல நூற்காலாகாதா?' என்கிறபடி அவளுக்குச் சம்மதியில்லாமையால் பின்னும் அவள்,'அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்' அல்லவோ? பானை சட்டி முதலாகிய ஏனமில்லாமல் எவ்விதத்தில் சமையலாய்விடும்?' என்ன, அவைகளையுந் தருவித்துச் 'சீக்கிரத்தில் சமை' என்ன, அவள், 'நீ போ! உனக்கு என்ன! எனக்குத் தள்ளாது; என்னாலே முடியாது; தலைநோகிறது!' என்று போக்குச் சொல்ல, அவன், 'அடி, செக்குலக்கை போல இருக்கிற உனக்கு வந்த கேடு என்ன?' என்று கேட்க, 'எருது நோய் காக்கைகுத் தெரியுமா? தலைநோயுங் காய்ச்சலுந் தனக்கு வந்தாலல்லவோ தெரியும்?' என்று பாயை விரித்து நெடுமுக்காடிட்டுப் படுத்துக்கொள்ள, அவன் 'இவள் என்ன சண்டியாய் இருக்கிறாள்!' என்று கோபத்தினால் மெல்லென ஓரடி அடிக்க, 'ஆ ஆ! அட சண்டாளா! என்னை அடித்துக் கொல்லவா ஏற்பட்டாய்! உரலிலே தலையை நுழைத்துக் கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டதனாலே விடுமா? சும்மா கொல்லு! இனி நான் உயிரோடு இருக்கிற தில்லை1 ஊமத்தங்காயைத் தின்று பழி போடுகிறேன்!' என்று, தெருவிலே வந்து பெருங்கூச்சலிட்டுப் புருஷனைத் தூற்றினாள். இப்படிப்பட்டவளைக் குறித்துத்தானே,

தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்

- என்று சொல்லுகிறது. இந்தச் சரித்திரம் மணவாள நாராயண சதகத்தில் 'ஐயருக்கமுதுபடை' என்னும் அடியில்வரும் பாட்டினால் விளங்கும்.

ஐயருக் கமுதுபடை யென்றுவந் தாய்நீயும் ஆண்பிள்ளை யென்றெண்ணியோ?
அரிசியெங் கேபானை சட்டியெங் கேயென்பள், அவள்சொன்ன வகைகளெல்லாம்
பையவே கொண்டுவந் தாலுஞ் சமைக்கப் படாதுதலை நோகுதென்று
பாயிற் கிடப்பள்,சின மாயொன்று பேசினால் 'பாருனக் கேற்றபுத்தி
செய்யவல் லேன்,என்பள், சற்றடித் தால்'நஞ்சு தின்கிறேன், கூகூ'எனத்
தெருவீடு தோறுமுறை யிடுபெண்டி ருண்டெனில் தீயநமன் வேறுமுண்டோ?
வையகம் புகழ்சோலை மலையலங் காரனே! மணவாள நாராயணன்
மனதிலுறை யலர்மேலு மங்கைமண வாளனே! வரதவேங் கடராயனே!

தென்னாட்டிலே சாதுவான ஒருவனுக்கு வாய்ப் பட்டியாகிய ஒரு படுநீலி வந்து பெண்டு வாய்த்தமையால், அவன் அவளுடைய மூர்க்கத்துக்கு அஞ்சிச் சுயேச்சையாய் ஒன்றும் செய்யக்கூடாமல், அவள் இட்டது சட்டமாக வருத்தத்தோடு காலங் கழிந்துவருகையில், ஒருநாள் அவனுக்குக் கிரகசாரம் போதாமல், ஔவை என்பவள் அவனிடத்திற்கு வந்து உணவுகேட்க, நல்லது' என்று சொல்லி, 'பெண்ணின் குணமறிவேன், சம்பந்தி வாயறிவேன்' என்பதற்கு ஏற்க தன்பெண்சாதி குணத்தைத் தான் அறிந்தவன் ஆகையால், ஔவையை வீட்டிற்குள் அழைத்துப்போகாமல், தெருத்ததிண்ணையிலே இருக்க வைத்துத் தான் மாத்திரம் உள்ளே நுழைந்து, பெண்சாதிக்கு இதமுண்டாக இச்சக வார்த்தைகள் பேசி, தான் ஒரு பெண்போல அவளுக்குப் பேன்பார்த்து, ஈர் உருவிச் சமயம் நோக்கி, மெள்ள வந்த செய்தியை அவள்காதிலே போகவிட, 'ஏன வாயனைக் கண்டாளாம், ஏணிப்பந்தம் பிடித்தாளாம்,' என்பது போல, அவள் தன் புருஷன் மேதகு குணத்தைப் பார்த்துப் பூதம்போல ஆர்ப்பரித்து, உன் பவிஷுக்கு விருந்து ஒரு கேடா? உனக்குத் தொலைக்கிறது அல்லாமல், ஊர்க்குந் தொலைக்கவா?' என்று வாயில் வந்தபடி பேய்ப்பாட்டாகப் பேசி ஏசிக் கழுநீர்ப் பானையை ஏந்திவந்து, அவன் தலையில் அபிஷேகம் செய்து, திருவலகு (துடைப்பக்கட்டு) கொண்டு வெண்சாமரை வீசி, சுளகு (முறம்) எடுத்து ஆலவட்டம் பரிமாறி, பரிவேட்டை விடுவதுபோலத் தெருமுழுதும் அவனைத் துரத்தித் துரத்தி அடித்தாள். அதுகண்டு, ஔவை, இந்தச்சரித்திரத்தை அவ்வாறு நடக்கும் பெண்களுக்குப் புத்திவரும்படி,

இருந்தங் கிதம்பேசி யீருரீஇப் பேன்பார்த்து
விருந்துவந்த தன்பன் விளம்பத் - திருந்தடியாள்
பாடினாள் பேய்ப்பாட்டைப் பாரச் சுளகெடுத்துச்
சாடினாள் ஓடோடத் தான்.

- என்று ஒரு பாடலைப் பாடிப்போனாள். இவளும் பெண்பிறப்பிலே சம்பந்தப்பட்டாள் அல்லவா? கற்புடையவர்கள் இத்தன்மையாகிய துஷ்டைகள் முகத்தையும் பார்ப்பார்களா? இவர்களுடனும் பேசுவார்களா? நேசிப்பார்களா?

வித்துவ சிரேஷ்டராகிய பொய்யாமொழிப் புலவர், பூர்வம் மதுரையில் முழுகிப்போன தமிழ்ச்சங்கத்தைப் பரிபாலனம் பண்ணும்படி அக்காலத்தில் அரசாண்டிருந்த வணங்காமுடி மாறன் என்னும் பாண்டியனிடத்தில் பேசுவதற்கு அவனைத் தேடிப் போனபொழுது, அவன் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யப் போயிருக்கிறதாகக் கேள்வியுற்று, அவர் சொக்கநாதர் சந்நிதிக்குப் போனவிடத்தில், அவ்வரசன் சுவாமியைச் சாஷ்டாங்கமாகச் சேவித்துக் கொண்டிருக்கக்கண்டு புலவர் சிகாமணியவர்கள்,

குழற்கா லரவிந்தங் கூம்பக் குமுதம் முகையவிழ்ப்ப
நிழற்கான் மதியமன் றோநின் றிருக்குலம் நீயவன்றன்
அழற்கா லவிர்சடை மீதே யிருந்துமவ் வந்திவண்ணன்
கழற்கால் வணங்குதி யோவணங் காமுடிக் கைதவனே.

-என்னும் பாடலைப் பாடக்கேட்டு, அரசன் அவரை 'நீரார்?' என்ன, அவர் பொய்யாமொழி என்னும் தமது காரணப்பெயர் முதலிய பூர்வோத்தரத்தையும் தாம் கொண்ட கருத்தையும் வெளியிட, பாண்டியன், 'இவரோ சங்கத்தைப் பரிபாலிப்பவர்!' என்று எளிதாக நினைத்து, அங்குச் சங்கத்தார்க்குப் பிரதியாகச் சிலையினால் செய்து வைக்கப்படிருக்கின்ற விம்பங்களைக் காட்டி, 'நீர் பொய்யாமொழி என்றது மெய்யாகுமாயின், இந்த விக்கிரக ரூபமாயிருக்கும் சங்கப் புலவர் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்யப் பாடுக,' என, அவர்,

உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ

திங்கட் குலன்றியச் செப்புங்கள் - சங்கத்தீர்!
பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழு மொக்குமோ
ஏடெழுதா ரேயெழுவீ ரின்று.

- என்று பாட, அந்த விம்பங்கள் அக்கணமே சிரக்கம்பம் கரக்கம்பம் செய்தன. பின்பு பொற்றாமரை என்னும் தீர்த்தத்தருகில் அவர அழைத்துப் போய், 'இதில் முழுகிப் போயிருக்கின்ற சங்கப்பலகை மிதக்கப்பாடும், பார்ப்போம்!' என, அவர்,

பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையெனினும்

பாவேந்த ருண்டென்னும் பான்மையாற் - காவேந்தன்
மாற னறிய மதுரா புரித்தமிழோர்
வீறணையே! சற்றே மித.'

-என்று பாடின மாத்திரத்தில் அது மிதந்தது. இப்படிப்பட்ட பல சாதுரியங்களால் அவரது கல்வியின் அருமையும் பெருமையும் பெரும்பாலுங் கண்டு தெளிந்தும், இறுமாப்பினால் அவருக்குச் சம்மானஞ் செய்யாமையால், 'இவன் தக்கோனல்லன்,' என்று, அவர் அங்கிருந்து திரும்பித் தமது சுதேசத்திற்கு வருகையில், இந்தச் செய்தியைப் பாண்டியன் மனைவி அறிந்து, அவர் பொய்யாமொழியர் ஆதலால், அவர் சொல்வது நன்றாயினும் தீதாயினும் பொய்யாது பலிக்குமேயென்று நடுநடுங்கிப் புலவர்பெருமான் கோபத்தை ஆற்றவேண்டும் என்று, தான் சிவிகை சுமப்பவரைப் போல வேடம் பூண்டுவந்து, அவரது சிவிகையைச் சிறிது தூரம் சுமந்து செல்ல, அவர் அதுகண்டு, அவளை நோக்கிக் 'கற்புக்குத் தாயகம் போல்வாளே, நீயேன் இப்படிச் செய்தாய்? என அவள், 'சுவாமீ, ராஜா தேவரீர் விஷயத்தில் அபசாரப் பட்டதை மனங்கொள்ளாது, தாம் கருணை கூர்ந்து அவரை வாழ்த்துதல் செய்யவேண்டும் என்னும் நோக்கத்தால் இங்ஙனம் புரிந்தேன்,' என, அவர் 'நன்று!' என்று ராஜ பத்தினியை முன்னிட்டு,

உமையாளும் நீயு மொருங்கொப்பே யொப்பே
உமையாளுக் கங்குண்டோ ரூனம் - உமையாடன்
பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழந்தான், பாண்டியனின்
ஆகந்தோய்ந் தாண்டா னரசு.'

- என்னும் பாடலைப் பாடினார். அவ்வரசன் தேவி போல மனைவி புருஷனுடைய குற்றத்தால் அவனுக்கு வரும் தீங்கினை ஆய்ந்துணர்ந்து வாராமற் காப்பதல்லவோ விசேஷம்?

****தெய்வப்புலமைத் திருவள்ளுவர்....[தொகு]

தெய்வப்புலமைத் திருவள்ளுவர் தம் தேசுயர் இல்லாள் வாசுகி என்னும் மாசற்றொளிரும் மணிவிளக்கொத்தவள் பொற்பு விளங்கிக் கற்பு வழுவாதில்லறம் நடாத்தி இன்புற்று வாழ்ந்து, மாண்ட பின்பு மயானத்திற் கொண்டுபோய்த் தகன சம்ஸ்காரம் தான் செயப்படுகையில், நெடுநாள் நகமுஞ் சதையும் போலவும், உடலும் உயிரும் போலவும் மனமொத்தும் பிரிவற்றிருந்த அருமை மனைவியைப் பிரிய வேண்டி வந்தமைபற்றி, அவர் துக்கசாகரத்தில் ஆழ்ந்து கண்ணீர்விட்டு, அவளை நோக்கி, வேழமுண்ட விளங்கனியாகி, 'சிற்பரால் எழுதரும் பொற்பாவை போல்வாளே, என் நாவிற்கினிய அறுசுவை உணவும் அமைத்து, என்னருகிலிருந்து என்னை உபசரித்து உண்பித்துப் போஷிக்கின்றவளே, என்னிடத்தில் அநவரதமும் மாறாத உள்ளன்புடையவளே, தெருவாயிற்படி கடவாதவளே, என் வாய்ச்சொல்லை எதிர்மறுத்துரையாது கடவுள் வாக்காகிய வேதம்போல உண்மையெனக் கொண்டு நடப்பவளே, இரவில் என் பாதத்தை நெடுநேரமாக வருடிக் கொண்டிருந்து, நான் நித்திரை செய்தபின்பு என்கால் மாட்டிலேயே சிறிது நேரம் நித்திரை செய்து, நான் விழிப்பதற்குமுன் விழித்து எழுந்திருப்பவளே, நீ இப்பொழுது என்னைவிட்டுப் பிரிந்து போய்விடுகின்றையே! இனி நான் எப்படிக் கண்ணுறக்கம் கொள்வேன்!' என்னும் கருத்தை உள்ளிட்டு,

அடிசிற் கினியாளே! அன்புடை யாளே!

படிசொற் கடவாத பாவாய்! - அடிவருடிப்
பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே! போதியோ!
என்றூங்கு மென்க ணிரா?'

- என்பது முதலாகிய சில செய்யுட்களைப் பாடி வியசனப் பட்டார். யோசிக்குமிடத்தில் தாமரையிலை நீரும் புளியம்பழ ஓடும்போல மனைவாழ்க்கையில் ஒட்டியும் ஒட்டாத மகாத்துமாவாகிய அவரும் அந்த மாதர்க்கரசியின் நற்குண நற்செய்கைகளினால் அல்லவோ சிலேஷ்டுமத்தில் அகப்பட்ட ஈயைப்போல அப்படிப் பரிதவிக்கும்படி வந்தது? 'மனையாலன்றோ தலை வெடித்ததாம்?' என்றும் சொல்லப்படுகின்றதே!

பதிவிரதைகள் கணவனது பாதம் விளங்கிய நீரைக் கங்காதீர்த்தமாகவும், அவன் உண்ட மிச்சிலைத் தேவதா பிரசாதமாகவும், அவன் பாதசேவையைப் பரமார்ந்த தரிசனமாகவம், அவன் வாய்ச்சொல்லைக் குரூபதேசமாகவும் கொள்வதேயன்றி, வேறே தீர்த்தம் பிரசாதம், தரிசனம் மந்திரோபதேசம் உண்டென்று மதிப்பதில்லை.
தங்கணவன், மற்ற புருஷர் அவனைக் கண்டு 'நாம் பெண்ணாய்ப் பிறந்தால், இந்த மகாபுருஷனைத் தழுவலாமே!' என்று விரும்பத்தக்க பேரழகுடையவனானாலும், இளங்காளை போலும் அதிக யௌவனமுடையவனானாலும், சுரபேத லயைபேதம் தெரிந்து நரம்போசையும் குரலோசையும் வேறுபடாது நயமாகப் பாடுகின்ற சங்கீத சாமர்த்தியனானாலும், தன்னை நோக்கிய பெண்களின் பார்வைகளையெல்லாம் கவர்கின்ற விசாலமாகிய கமலதளம் போன்ற அழகிய பார்வையுடையவனானாலும், ஆண் சிங்கம் போலும் பெருமித நடையுடையவனானாலும், மலைபோல அளவில்லாத பெருஞ்செல்வமுடையவனானாலும், தமக்கு அவன் சாட்சாத் அத்தை மகனானாலும், தாம் அவனுக்கு அம்மான் புத்திரிகளானாலும் பெண்களுக்குப் பெரும்பாலும் அந்நிய புருஷர்மேல் மணஞ்செல்லு மென்பதனால், சபலசித்தங்கொண்டு கற்பழியாது, அதனை உறுதிப்படுத்தி, நல்லொழுக்கத்தில் நீங்காது நிற்க வேண்டும்.

வேதம் ஓதுகின்றவர்களுக்கு ஒரு மழையும், செங்கோல் செலுத்துகின்றவர்களுக்கு ஒரு மழையும், கற்புடையவர்களுக்கு ஒரு மழையுமாக அல்லவோ மாதம் மும்மாரி பொழிகின்றது.

வேத மோதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாத மூன்று மழையெனப் பெய்யுமே'

கிரமந்தப்பிய வேதியர்களுக்கு ஒரு மழையும், கொடுங்கோல் மன்னவர்க்கு ஒருமழையும், புருஷனைக் கொலை செய்யும் பெண்களுக்கு ஒரு மழையுமாக அல்லவோ வருஷம் மூன்று மழை தூறுகின்றது?

அரிசி விற்றிடு மந்தணர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வருஷ மூன்று மழையெனப் பெய்யுமே'

முற்காலத்தில் கற்புடையவர்களில் சந்திரமதி, காட்டுத்தீயைக் குளிரச் செய்தாள். தமயந்தி, தன்னை இச்சித்த வனவேடனை எரித்தாள். அனசூயை, தன் கற்பைச் சோதிக்கவந்த திரிமூர்த்திகளைக் குழந்தைகளாக்கி ஸ்தன்ய பானம் பண்ணுவித்தாள். சாவித்திரி, தன்நாயகன் யமன் கொண்டுபோகிற தருணத்தில் அவனுடனே வாதாடி மீட்டாள். நளாயனி, ஆணிமாண்டவியர் சாபத்தால் தனக்கு வைதவியம் வாராது பொழுது விடியாதிருக்கப் பிரதி சாபமிட்டுத் தேவர் வேண்ட விடிய அநுக்கிரகித்தாள். திருவள்ளுவ நாயனார் மனைவி, கணவரது பணிவிடையில் இருக்கையில், ஒரு தவசி வந்து பிட்சை கேட்கப் பிச்சையிடக் காலதாமதப்பட்டமையால், அவன் கோபங்கொண்டு அம்மாதை எரிக்கும்படி உறுக்கிப் பார்க்க, அம்மாது அந்நினைவை யறிந்து, 'கொக்கென்ற நினைத்தனையோ கொங்கணவா?' என்றாள். இப்படியெல்லாம் இருப்பதனாலல்லவோ, கற்புடையவர்களின் மகிமை தேவர்கள் முனிவர்களாலும் அளவிடற் கரிதென்று சொல்லப்படுகின்றது? மரக்கலத்தை ஆதரவாகக்கொண்டு கடற்கரை ஏறுகின்றவர்களைப் போல, புருஷன் இல்வாழ்க்கைக்குத் துணையாகக் கற்புடை மனைவியைக் கொண்டு, பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி முதலியோரை உபசரித்தல் ஆதியாகிய அறங்களைச் செய்து மோட்சக்கரை ஏறுதற்கு அவனுக்கு அவள் அநுகூலமாயிருந்து தெய்வ கடாட்சத்தால் நல்ல புத்திரர்களைப் பெற்றுப் புகழ்பெற வாழ வேண்டும்.

இரண்டாவது 'கற்பு நிலைமை' முற்றிற்று.[தொகு]

பார்க்க:[தொகு]

விநோதரசமஞ்சரி

1.தெய்வங் கொள்கை

3.கீதவாத்திய விநோதம்