விநோதரசமஞ்சரி/3.கீதவாத்திய விநோதம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விநோத ரச மஞ்சரி[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]

3.கீத வாத்திய விநோதம்[தொகு]

இது இங்கிலீஷ் வாத்தியம் ஆகையால், இதன் சாரம் எனக்குச் செவ்வையாய்ப் புலப்படாதாயினும், நான் கேட்டபொழுது என் கருத்திற்குத் தோற்றியபடி ஒருவாறு எழுதத் துணிந்தேன்.
சென்னை கெடிஸ்தலத்திற்கு ஆளுகைத் தலைவராகிய மாட்சிமை தங்கிய நம் கவர்னர் துரையவர்கள் வீட்டில் 1856-ஆம் வருசம் சூலை மாதம் 28-ஆம்தேதி இரவில் எட்டரை மணி நேரத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்து இங்கிலீஷ் சங்கீத வித்தியாசாமர்த்தியராகிய கனம் பொருந்திய மார்ட்டின் சீமன்சன்துரையும், அவரைச் சார்ந்த மற்றும் சில துரைகள் துரைசானிகளும் விதம் விதமாக வாசித்த கீத வாத்திய விநோதத்தைக் கேட்கும்படி, அநேக துரைமார் துரைசானிமார்களும், இந்துப் பிரபுக்கள் முதலானவர்களும் அவ்விடத்திற்குப் போனார்கள். அந்தச் சமயத்தில் நானும் என்னைச் சேர்ந்த சில கனவான்களுடனே அவ்விடத்தில் போயிருந்தேன்.
அப்பொழுது முதல்முதல் துரைத்தனத்தைச் சார்ந்த இராணுவ வாத்தியக்காரர்கள் வந்து, வாத்தியங்களைக் கிரமமாக வாசித்தார்கள். அந்த வாத்திய முழக்கம் மேகமுழக்கம் போலவும், அங்குப் பிரகாசித்த நாநாவிதத் தீபங்கள் மேகத்திலிருந்து நிரைநிரையாக மின்னல்மின்னுகிறது போலவும், அந்தத் தீபக் கருவிகளின் சுற்றுப்புறத்தில் அணியணயாகத் தொங்குகின்ற படிகமாலைகள் இடைவிடாது மழைத்துளி துளிக்கிறது போலவுமிருந்தன.
பின்பு மார்ட்டின் துரையவர்கள் வந்து கடவுள் வணக்கஞ்செய்து, தமது கையில் ஒரு வீணையை மெல்லென எடுத்தார். அந்த வீணையோ, அத்தனை விசேஷமானதாக்கஃ காணப்படவில்லை. எங்குமுள்ள சாதாரண வீணைகளைப் போலக் கேவலம் சாதாரணமானதாகவே யிருந்தும், அது அவர் கைக்கு ‘வல்லவனுக்குப் புல்லுமாயுதமாம்,’என்பதாயிருந்தது. அவர் அதன் முறுக்காணியைப் பற்றித் திரித்து, நரம்பைத் தெறித்துப் பிரமாணமாகச் சுதி கூட்டி, யாவரும் ‘சபாஷ்!’ என்று சிரக்கம்பஞ் செய்ய அற்புதமாக வாசித்தார்.
அதிலிருந்து தோன்றிய நாதமோ, அப்படிச் சாதாரணமாயிருக்கவில்லை. ‘வல்லவனாடிய பம்பரம் போலச்’ சாதுரியமும் மாதுரியமும் செவிக்குக் குளிர்ச்சியுமாயிருந்தது. அந்த நாதம் அவ்வீணைக்கே இயல்பாயுள்ளதோ, அல்லது அதை வாசித்த மார்ட்டின் சீமன்சன் துரையின் கைவாசியோ, நம் கவர்னரவர்களுடைய சபாமண்டபக் கட்டுக்கோப்பின் வளமோ, என்னவோ தெரியாது! எனினும், நால்வகை யாழில் ஒன்று தானோ! அல்லது சரசுவதி, சித்திரசேனன், தும்புரு, நாரதர் ஆகிய நால்வருடைய களாவதி, கச்சளா, மகதி, பிருகதி ஆகிய வீணைகளில் ஒன்றுதானோ! அவ்வீணையின் இசை யாழுக்குரிய ஏழ்வகை நரம்பிசையோ! அந்நரம்பிசைக்கு உவமையாகச் சொல்லப்பட்ட குயிலிசை முதலியனவோ! அவ்விசையின் சுவை கரும்பின் சுவையோ! கதலி பலா மா முதலிய கனிகளின் சுவையோ! பால் தேன் பாகு ஆகிய இவைகளின் சுவையோ! யாதென்று நிரூபிக்கிறது! அவர் அந்த வீணையைத் துருவன், மட்டியம், ரூபகன், ஜம்பை, திரிபுடை முதலிய சப்ததாள நவதாளங்களும், காலம், மார்க்கம், கிரியை முதலிய தசதாளப் பிரமாணங்களும். சுரங்களும் பேதியாமல் அந்தந்த ஸ்தானந்தோறும் ஊசலாடுவது போல அவரது கைவிரல்கள் விசையாய்ச் சென்று உலாவ, அதிற் பலவித கானங்களும் நவநவமாய்த் தோன்றும்படி உசிதமாக வாசிக்குமளவில், யோசிக்குமிடத்தில், அந்தக் கானம் இந்துக்களுக்குள் வழங்கும் குறிஞ்சி முதலிய ஐந்திணைக்குரிய ஐவகைப் பண்களிலும், பகற்பண் ஒன்பது, இராப்பண் ஒன்பது, பொதுப்பண் மூன்று ஆகிய இருபத்தொரு பண்களிலும், பயிரவி முதலாகிய முப்பத்திரண்டு ராகங்களிலும் சம்பந்தப்பட்டதாகச் சொல்வது சரியன்று; சொன்னாலும் ரசமாயிராது. பின்னை என்னவெனில், தேவகானமே இதுவென்று மதிக்கத் தக்கதாயிருந்தது.

அவர் வாசித்த பிறகு மிஸ்டர் கோல் துரை என்பவர் வந்து, சிற்சில பண்புகள் இராகங்களை அக்கினிப் பிரளயத்தில் உய்ந்திருந்த மனிதனுடைய சீர் நிர்வாகங்களைக் குறித்த புதுமையான ஒரு பாடலுடனே சம்பந்தப்படுத்தி,

வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்கும்
செயிரது புருவ மேறல் சிரநடுக் குறல்கண் ணாடல்
பயிறரு மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல்
எயிறது காட்ட லின்ன வுடற்றொழிற் குற்ற மென்ப.

என்கிறபடி வயிறு குழிதல், முகம் அழுகின்ற பாவனையாகத் தோன்றல், புருவம் நெளித்தல், தலை நடுக்கல், விழி புரளல், தொண்டை வீங்கல், பை வி்ரித்தாற்போல வாயை ஆவென்று திறத்தல், அடிக்கடி பல்லைக் காட்டல் என்னும் அங்க விகாரங்கள் இல்லாமலும்,

வெள்ளைகா குளிகீ ழோசை வெடிகுர னாசி யின்ன
எள்ளிய எழாலின் குற்றந் தெரிந்துநின் றிரட்ட லெல்லை
தள்ளிய கழிபோக் கோசை இழைத்தனெட் டுயிர்ப்பத் தள்ளித்
துள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவுந் தீர்ந்தே.

என்கிறபடி வெடிப்பாகக் காணுதல், மூக்கினால் ஒலித்தல், இரட்டை ஒலியாய்த் தோன்றல், அளவு கடந்து ஒலித்தல், ஓசை இளைத்தல், பெருமூச்சு எறிதல் முதலாகிய குற்றங்கள் சாராமலும், எடுத்த விஷயத்துக்கேற்ற சில பாவகளை மாத்திரம் காட்டி நயமாகப் பாடினார். அதனை அந்தச் சபையில், இருந்து கேட்டவர் அநேகர், ஒருமிக்கப் பன்முறையும் கைகொட்டிப்புகழ்ந்தார்கள். நான் அதுபற்றி அவர்களிற் சிலர் பஞ்சவர்ணக்கிளி கொஞ்சுகின்றது என்றும், சிலர் இளங்குயில் கூவுகின்றது என்றும், சிலர் கின்னர மிதுனம் பாடுகின்றது என்றும், பலவகையாக நினைத்து ஆனந்தமாகிய ஆவேசத்தால் தங்கள் சரீரத்தைத் தாங்கள் மறந்து அப்படி ஆரவாரித்தார்கள் என்று எண்ணி, அத்தருணத்தில் நான் ‘சத்தியப்பலந்து சங்கீதம்,’ என்னும் பழமொழியை நினைந்து வியந்து சந்தோஷித்தேன்.

பின்னர் ஹேர்.ஏ.சீமான்துரை ஆனவர் நாகசுரம் போன்ற ஒரு தொளைக்கருவியை எடுத்து வாயில் வைத்து, அதன்துவாரங்களைத் தமது விரல்களால் அடைத்தும் திறந்தும் லயை முதலானவை பிறழாமல் குரலை நெருக்கிப் பெருக்கி, லகு, குரு, துரிதம், அனுதுரிதம் ஆகிய மாத்திரை பிசகாமல், ஆரோகண அவரோகணமாகத் தீம்பால் தேம்பாகு முக்கனி சர்க்கரை கற்கண்டுகளும் ஒக்கக் கலந்து ஊட்டுவது போல இன்பமாக வாசித்தார்.

அப்போது நம் கவர்னர் அவர்களுடைய துணைவராகிய காப்டன் ராபர்ட்துரை அவர்கள், கரடி பிடிக்கும் புதுமையான சிரிக்கத்தக்க ஒரு பாடலைப் பாடி, நர்த்தனஞ் செய்வது போலச் சிறிதுநேரம் அழகுடனே அபிநயித்தார். அந்த அபிநயத்தில் அவரது பூர்ண சந்திரன் போன்ற முகநயமும், செங்காந்தள் மலர்போன்ற கரநயமும், தாமரை போன்ற விழிநயமும், மற்ற அவயவ நயமும் மிகு நன்னயமாயிருந்தமையால், அங்குள்ளவர் அனைவரும் தத்தம் கண்ணும் கருத்தும் இதரவிஷயத்தில் செல்லாமல், பிரமித்தாற்போலப் பலகாறும் நோக்கிக் கைபுடைத்து அதிசயித்தார்கள். அவர் பாடும்பொழுது குரல் ‘ஓசையானது’ மணியோசையோ! மகிடிக்குழலோசையோ! சிலம்போசையோ! சங்கோசையோ!’ என்று கருதும்படி இருந்தது.

அதன்பிறகு, மிஸ்ஸர்ஸ் மேயர் துரைசானி ஆனவர், பியானோ என்னும் வாத்தியம் வாசித்தார். அந்தத் துரைசானியின் கைவிரைவையும், வாசிக்கும் சாதுரியத்தையும் கண்டு என் கண் களித்தது. அவ்வாத்திய ஓசையைக் கேட்டுச் செவி களித்தது. அவ்விருதிறத்தையும் ஓர்ந்து மனம் களித்தது, எனது அங்கம் புளகாங்கம் ஆயிற்று ஆதலால் அதை யாது நிர்ணயிக்கிறது!

மறுபடியும் மார்ட்டின் சீமன்சன் துரை வந்து வீணை வாசித்தார். அதுகேட்டு, இது என்ன! புல்லாங்குழல் இசைபோலவும், திருச்சின்னம் போலவும், குடமுழாப் போலவும், எக்காளம் போலவும், மற்றும் பற்பல விதமாகவும் இருக்கின்றதே?’ என்று நினைத்து, நான் ஆனந்தப் பிரவாகத்தில் மூழ்கினேன். மற்றவர்களும் அப்படியே சந்தோஷ சாகரத்தில் குளித்தார்கள் என்று நிச்சயிக்கின்றேன். இப்படி இருக்கையில் அவர் ஓரறைக்குள் சடுதியிற்போய் மறைந்திருந்தார். அவர் திரும்பி வரும்படி சபையார் நெடுநேரம் ஓயாது கைகொட்டிச் சைகை செய்தார்கள். அவர்கள் இஷ்டப்படி திரும்பிவந்து வீணை வாசித்தார். இவ்வீணையின் சாரசத்திற்கு ஒவ்வாமையால்தானோ சர்க்கரைப்பாகு இளகித் தோன்றுவது, பால் வெளுத்துக் காண்பது, கரும்பு கரணை கரணையாகக் கண்டிக்கப்படுவது, கனி கிளிகளின் மூக்கினால் கொத்தப்படுவது, வீணையில் வல்லவர்களாகிய கந்தருவர்கள் அந்தரத்தில் பறப்பது?’ என்று நினைத்து மனம் உருகி நான் பரவசமானேன். அதைக்குறித்துச் சொல்வது என் தரமன்று. அம்மட்டில் முதற்பகுதி முடிந்தது.

இரண்டாம் பகுதியின் ஆரம்பத்தில், இராணுவ வாத்தியக்காரர்கள் முன் போலவே வாத்தியம் வாசித்தார்கள். பின்பு மிஸ்டர் ஜி.காட்துரை ஆர்கன் என்னும் சுரமண்டலம் வாசித்தார். அவ்வாத்தியத்திலிருந்து தாளம், மிருதங்கம், வீணை, வேணு, தம்புரு, கின்னரி, சல்லரி, மல்லரி முதலாகிய பற்பல வாத்திய ஓசையும் அற்புதமாகத் தோன்றினமையால், அவ்வாத்தியத்தை, ‘இது வாத்தியக் களஞ்சியமோ!’ என்று நினைத்தேன். ஆயினும், நான் என்னவென்று சொல்லுகிறது! அந்த வாத்தியமோ, சாத்தியமானதல்ல. அதுவே தேவ துந்துபி என்றும், தேவதுந்துபியை நானறியாதிருந்தும் அது இப்படித்தான் இருக்கலாமென்றும் எனக்கு மனமுருகியது.

அதன்பின்பு கோல் துரையானவர் வாழ்த்துதலாகிய மங்கலப்பாட்டுப் பாடினார். அந்தப்பாட்டோ, அதி உசிதமாயும் மிக நயமாயும் சிங்கார முதலிய நவரசாலங்காரமும் உடையதாய் இருந்ததனால், அனைவர்க்கும் கருணானந்தமாயிற்று. அதைக்குறித்துச் சொல்ல ஆராலாகும்!

பிறகு மேயர் துரையும், சீமான் துரையும் குழல் வாசித்தார்கள். அவ்விருவரும் நேர்நேராக வாசித்த வளத்தைக் காணுமளவில் பாவுங்குழலும் இணங்கி நடப்பது போலவும், ஊசியுஞ்சரடும் ஒரு வழிச்செல்வது போலவும், ஒரே இனமாகிய மணிகளை வரிசையாகக் கோத்தது போலவும், ஒன்றுக்கொன்று பேதப்படாமல் ஒற்றுமைப்படிருந்தது கண்டு, ‘இப்படியும் இருக்கிறதல்லவா கல்வித்திறம்!’ என்று நான் சிந்தித்து, அத்தருணத்தில் எனக்குண்டாகிய ஆச்சரியத்திற்கு என்னுள்ளத்தையும் உணர்வையும் திறைகொடுத்துவிட்டேன்.

அப்பால் மிஸ்டர் லவீல் துரை'யானவர் தனியே புல்லாங்குழல் எடுத்து நமது மகிமைப் பிரதாபமுள்ள காருணிய பரையாகிய ராக்கினியவர்கள் வாழ்த்துப் பாடலுக்கிசைய ஊதினார். அதற்கு நான் எங்கிருந்துதான் உபமானம் தேடிச் சொல்வேன்! ஒருவேளை கார்த்திகைப்பிறை காண்பது போலவும், அத்தி பூத்தாற்போலவும், அபூர்வமாகச் சில உவமைகளைப் பிரயாசைப்பட்டுத் தேடி எடுத்தாலும் அவைகளை,

காணாம லேபலவுங் கத்தலாம், கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே,

என்பதனால், கற்றுணர்ந்த பெரியோர்முன் எப்படி வாய்கூசாமல் சொல்லுகிறது? இந்தக் குழலோசைக்கு நாணித்தானோ குயில் மாமரத்தில் ஓடி ஒளிப்பது, கிளி மழலைச் சொல்லாக வாய்வழுக்கிப் பேசுவது! இது நிற்க.

பின்பு நம் கவர்னரவர்களின் துணைவராகிய காப்டன் ராபர்ட் துரையவர்கள் வந்து, சேதப்பட்ட கப்பலில் தப்பிய ராபின்சன் குருசோ என்பவனைப் பற்றிப் பண்டித பாமரர் அனைவரும் நகைத்து மகிழத்தக்க ஒரு பாடலைப் பாடி, அபிநயித்தார். அவர் பாடிய பாடலும், அதற்கிசைய அபிநயித்த அபிநயமும், அதி விற்பன உற்பன விநோத சாதுரியமாயிருந்தன. அந்தச் சபையில், கண்டவர் கேட்டவர்கள் எல்லாம் அப்பாடலுக்காகச் செவிப்புலனையும், அபிநயித்ததற்காக விழிப்புலனையும் ஒப்பித்தார்கள்.

அதன்பிறகு, மார்ட்டின் சீமன்சன் துரையவர்கள் வந்து கரடி, புரவி, பறவை, விருஷபம் முதலியவைகளின் தொனிகளைக் காட்டி வீணை வாத்தியம் செய்தார். செய்யுமளவில், பருந்து பறக்குங்கால் அதன் உடலும் அவ்வுடற் சாயையும் ஒன்றை ஒன்று தொடர்ந்து செல்வதுபோல, யாழிசை குரலிசை இரண்டுந் தொடர்ந்து ஒன்றுபட்டு நடக்கும் பெற்றிமை கண்டு, இசைநூல் முழுவதும் சம்பிரதாயமாகத் தேர்ந்து கானரசமாகிய கடலிற் சதாகாலமும் மூழ்கி விளையாடும் சாதுரியர்களும், வீணை நரம்போசை இதுவென்றும், அவர் குரலோசை இதுவென்றும் வேறுபாடு அறிதற்கு அரிதாயிருந்தது.

நல்லது! ‘இப்படிக்கு எல்லாம் மார்ட்டின் சீமன்சன் துரையைக் குறித்துச் சங்கீத சாகித்தியத்தில் சமானரகிதராகச் சிலாக்கியப்படுத்திப் பேசுவது அவர் கையில் ஏந்திய வாத்திய வளத்தினால் அல்லாமல், அவரது சுயசத்தியினால் அல்ல’ என்று நினைப்பார்கள். ஆனால், அதைப்பற்றி ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், சந்தேகமற இப்பொழுது வேண்டுமானாலும் அதனை நிதரிசனமாய் ஆராய்ந்தறியலாம். திருவள்ளுவர்,

வாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென்
நுண்ணவை யஞ்சு பவர்க்கு.

என்கிறபடி ஒரே வீச்சில் அநேக யானைகள், குதிரைகள்,வீரர்களை வெள்ளரக்காய் போலக் கரணையாகத் துணித்தெறிகின்ற கூரிய வாளானாலும், நல்ல சுத்தவீரன் கையிலன்றிப் பேடி கையில் அகப்பட்டால் என்ன செய்யும்? அதனோடு அவனுக்கு என்ன சம்பந்தமுண்டு? அதுபோல, அவ்வீணை முதலிய கருவிகள் பலவித உறுப்புகளாலும் மிகச் சிறந்தவையாயினும், இசை நூலின் விதிப்படி வாசிக்கத்தெரியாத பேதை கையிலகப்பட்டால் எப்படிப் பயன்படும்?

உள்ளபடியே மார்ட்டின் சீமன்சன் துரையவர்கள் வித்தியா விஷயத்தில் அதிக சாமார்த்தியபரரென்பத்கு எள்ளளவேனுஞ் சந்தேகமேது? அவருக்குச் சபாகம்பமோ, சிறிதுமில்லை. உலகத்திற் சிலர் பூரண பண்டிதர்களாயிருந்தும் நல்ல சமயத்தில் சபைக்கோழைகளாய் விடுகிறார்கள். அதனால், ‘அவர்கள் கற்ற கலை, பெண்டுகள் அரையிற் சுற்றிய கலையே, அவர்கள் போடுந்தாளம், ஏகத்தாளமே, அவர்கள் பாடும் ராகம் அராகமே. அவர்கள் கொள்ளும் மாத்திரை, நேர்வாள மாத்திரையே. அவர்கள் வாசிக்கும் குழல் அடுப்பூதுங் குழலே. அவர்கள் ஊதுங் காளம் ஒக்காளமே. அவர்கள் அடிக்கும் மத்தளம் த்ததளமே,’ என்று சொல்லும்படி இருக்கின்றன. அது நிற்க.

இப்பொழுது நானொன்றை...[தொகு]

இப்பொழுது நானொன்றைச் சொல்ல நினைக்கிறேன். அது சிலர்க்குச் சம்மதியிராது. ஆயினும், எனக்குச் சந்தோஷமேலிட்டதனால், நான் சொல்லாமல் விடேன். அது என்னவெனில், நான் கவர்னர் துரையவர்களுடைய நந்தவனத்தைப் பார்த்தவிடத்தில், அது எனது காட்சிக்கு ஆகமப்பிரமாணமாகச் சொல்லப்பட்ட இந்திரனது சிங்காரவனமாகிய கற்பகச்சோலை போல இருந்தது. அவ்விடத்திலுள்ள பசுக்கள், தெய்வப் பசுவாகய காமதேனுக்கள்போல இருந்தன. அவரது வெள்ளைப்புரவிகள் உச்சைச்சிரவமென்னும் தெய்வப்புரவிபோலிருந்தன. அங்குள்ள தடாகமோ, இந்திர சரசுபோலிருந்தது. கவர்னரவர்களுடைய அதியுன்னதாலங்கார சோபிதமான வீடோ, இந்திரனுடைய வசந்தமென்னும் மாளிகை போலிருந்தது. நமது மகிமைப் பிரதாபராகிய கவர்னரவர்களோ, போகதேவேந்திரனென்றே பாவிக்கும்படியிருந்தார். அந்தச் சபையிலிருந்த துரைசானிமார்களோ, கந்தர்வ ஸ்திரீ போலிருந்தார்கள். ‘கந்தர்வ ஸ்திரீகளுக்குச் சிறகுண்டே! இவர்களுக்கு அது இல்லையே! ஆதலால், அவர்களுக்கு இவர்களை எப்படி ஒப்பிடுகிறது’ என்று சந்தேகப்படவேண்டுவதில்லை. இந்தத் துரைசானி மார்கள் தங்கள் தங்கள் கையில் மெல்லிய இறகு விசிறி பிடித்துச் சொகுசாக அசைத்துக் கொண்டிருந்தார்கள்; அவைகள் இவர்கள் சிறகசைப்பது போலிருந்தன.

மார்ட்டின் சீமன்சன் துரையானவர் வீணை வாசிப்பது கந்தர்வ ராஜனாகிய சித்திர சேனன் இந்திர சந்நிதானத்தில் வந்து வீணை வாசிப்பது போல இருந்தது.

மேயர் துரையும், சீமான்துரையும் எதிர் எதிராக வாத்தயம் வாசிக்கும்பொழுது, ‘சங்கீதப்புலவர்களாகிய ஆகா, ஊகூ என்னும் கந்தருவர்கள்தாம் வந்து வாசிக்கின்றார்களோ! அல்லது தும்புரு நாரதர்களே இப்படி உருவெடுத்து வந்தார்களோ!’ என்று சந்தேகிக்கும்படியிருந்தது.

மேயர் துரைசானியோ, வித்தியா சாமர்த்தியத்தினால் மாத்திரமன்றி, தவள நிறத்தினாலும் வெள்ளை வஸ்திரம் உடுத்தியிருந்ததனாலும், சாக்ஷாத் சரஸ்வதிக்கொப்பாயிருந்தார்கள். அந்தச் சபாமண்டபத்தின் வாசலிலிருந்து அதற்கு வெளிப்புறத்தைப் பார்த்தபொழுது கவர்னவர்கள் தோட்டதிற்கு உட்பட்ட பூமியோ, ஆகாசம் போலவும், பற்பல துரைகள் துரைசானிமார்கள் அங்கேறி வந்து விட்டிருந்த விதம்விதமாகிய வண்டிகளெல்லாம் ஆகாசத்தில் தோற்றும் தெய்வ விமானங்கள் போலவும், அவ்வண்டிகளில் ஏற்றிய பல நிறமாகிய விளக்குகள் எல்லாம் சூரியசந்திராதி நவக்கிரகங்கள் போலவும், அச்சுவினியாதி நட்சத்திரங்கள் போலவும், விளங்கின. நம் கவர்னர் முதலாக அந்தச் சபையில் வந்திருந்தவர்களெல்லாம் மார்ட்டின் சீமன்ஸன் துரையானவர் வாசித்த சங்கீதசாரத்தைக் கேட்டறிதற்கு முன்னமே அவர் இசைநூலில் பெரும்பாலும் பயின்றவர் என்று கேள்வியுற்று அபிமானித்து, அவருக்குப் போதுமான பரிசு தந்தார்கள்.

ஒருநாள் பிரபு இடத்தில் இசைப்புலவர்கள் வந்து இசை பாடினார்கள். அவர்கள் முதல் ஒரு பதம் பாடின மாத்திரத்தில் அப்பிரபு, ‘சபாஷ்!’ என்று மெச்சி, அருகிலிருந்த காரியஸ்தர்களை நோக்கி, ‘இந்த வித்துவான்களுக்குச் சோடு சால்வை வெகுமதி கொடுங்கள்!’ என்றார். அதுகேட்டு இசைபாடுவோர் சால்வை கிடைத்தது என்று சந்தோஷத்தினால் பின்பு உசிதமான ஒரு சிந்து பாடினார்கள். அப்பொழுது பிரபு சிரக்கம்பஞ் செயது, ‘இந்தச் சங்கீதப்புலிகள் கைக்குப் பொற்காப்பும், கொலுசும் கொண்டுவந்து போடுங்கள்!’ என்றார். மறுபடியும் அவர்கள் அதிக மகிழ்ச்சியாய் ஒரு விசித்திரமான வண்ணம் பாடினார்கள். அத்தருணத்தில் பிரபு, ‘பளா! பளா!’ என்று கொண்டாடி, ‘இந்தப்புலவர் சிரோமணிகளுக்குக் கனகாபிஷேகம் பண்ணி விலையுயர்ந்த ரத்தினகண்டி வெகுமானம் செய்யுங்கள்!’ என்றார். அவர்கள் ஆனந்தப்பிரவாகத்தில் அமிழ்ந்தவர்களாய் நயமான ஒரு கீர்த்தனை பாடினார்கள். பிரபு தங்கச்சிவிகை பரிசுகொடுக்கச் சொன்னார். இந்தப்படி அவர் அடிக்கடி யானை, குதிரை, சீமை, பூமி முதலாகிய பல வெகுமதிகளும் ஓயாமல் கர்ணாமிசமாய்க் ‘கொடுங்கள்! கொடுங்கள்!’ என்று சொல்லச் சொல்ல, இவர்களுக்கு அளவில்லாத பிரமானந்தம் மேலிட்டு, ஒப்பனையும் கற்பனையுமாகச் சலிப்பில்லாமல் நெடுநேரம் பாடிப்பாடிக் குரலும் கம்மி, வாய் திறந்து வசனிக்கவும் கூடாமல், இனியில்லாத இளைப்பும் களைப்பும் உண்டான பின்பு பாடுவதை நிறுத்தி, பின்பு, ‘கொடுக்கச் சொன்ன வெகுமதிகள் எல்லாம் நம்முடைய தரித்திரம் அதமாம்படி வரும் வரும்,’ என்று காத்திருந்தார்கள். சும்மா வாயினால் சொன்னதேயொழியக் கையினால் ஒன்றும் கொடுக்கவில்லை. பின்பு பிரபு அவர்களை நோக்கி, ‘ஏன் வீணாகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? செலவு வாங்கிக்கொள்ளுகிறது தானே?’ என்றார். வித்துவான்கள், ‘தாங்கள் அமிதமாகத் தயைசெய்த பரிசு ஒன்றும் எங்களுக்குச் சேரவில்லையே!’ என்றார்கள். அந்தப் பரமலோபி, ‘ஏதுக்குக் காணும் உங்களுக்குப் பரிசு கொடுப்பது?’ என்றார். அவர்கள், ‘நாங்கள் பாடினதற்காக,’ என்றார்கள். அந்தக் கொடாத கிண்டர், ‘நீங்கள் எனக்குச் சந்தோஷம் உண்டாகப் பாடினதற்கு நான் உங்களுக்குச் சந்தோஷமுண்டாகச் சொன்னதே ஒழிய, மற்றப்படியன்று, நீங்கள் கொடுத்ததும் நான் கொடுத்ததும் ஓசைமாத்திரத்தால் ஒக்குமாகையால், போய்வாருங்கள்!’ என்று கையை விரித்தார்.

அவர் தாம் கொடாவிட்டாலும், கொடுக்கத்தக்கவர்களாகிய தம்மைச் சார்ந்தவர்களைக் கொண்டாவது, அவர்களால் இயன்ற மாத்திரம் சிறிது சிறிது உதவும்படியாயினும் செய்யலாகாதா? அப்படிச் செய்தால், அதில் எவ்வளவு பிரயோசனமாம் என்று எளிதாக நினைக்கவேண்டுவதில்லை. ‘குளத்திற்கு மழை குந்தாணி குந்தாணியாகப் பெய்கிறதா? பல துளிக் கூடித் தானே ஓராறாய்ப் பெருகுகின்றது? பல திரணங்கள் கூடியல்லவோ, பெரிய பழுதையாகின்றது? அப்படியில்லாவிட்டாலும், திரித்த மட்டும் பழுதையென்பதாகத் தம்மாற் கிடைத்த மட்டுமாவது வஞ்சனையில்லாமல் செய்யலாம்; அந்த எண்ணமும் அவரிடத்திலில்லை, ‘இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்’ என்பதையும் அவர் தெளியவில்லை.

அப்படிப்பட்ட உலுத்த சிரோமணிகளெல்லாம் நாணித் தலைசாய்க்கும்படி இந்தச் சபையில் வந்திருந்த செல்வர்கள் யாவரும் அபிமானத்துடன் வெகுமான சம்மானஞ் செய்தமையாலும், நம் கவர்னவர்களுடைய தயையினாலும், மேற்படி மார்ட்டின் சீமன்சன் துரைக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் உற்சாகமும் தைரியமுமதிகரிக்கத் தமது வித்தியா சாமர்த்தியத்தைக் குறைவறப் பூரணமாக விளக்கிக் காட்டும்படியிருந்தது.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்,’ அல்லவோ? அப்படி இது வெறுப்பாய்க் காணவில்லை. ‘இன்னும் இவர்கள் வாத்தியம் வாசியார்களா! பாடார்களா! அபிநயிக்கார்களா!’ என்று அபேட்சித்து அவர்கள் ஆடல் பாடல்களை நிறுத்திப் பின்னும் பிரஜைகளுக்கு அவ்விடத்தை விட்டுப் போகக் காலெழாமையால், வெகுநேரம் தியங்கியிருந்து, பிறகு சென்றனர். அப்பொழுது நம் கவர்னரவர்களும் அந்த ஸ்தானத்திலிருந்து புறம் பெயரக் கூடாமல், அச்சபா மண்டபத்தில் ஜனநெருக்கத்தில் மெல்லென ஒதுங்கி நடந்தார். நான் அந்தச்சமயத்தில் அவரைத் தரிசித்து அவரது மிருதுநடையைக் குறித்தும் சாந்த குணத்தைப் பூஷணமாகக் கொண்ட அவரது அடக்கத்தைக் குறித்தும் மிகவும் அதிசயித்து, மனமகிழ்ச்சி கூர்ந்து, ‘எளியவனாகிய எனக்கு இனி என்றைக்கு ஜெகதீஸ்வரனாகிய இவர் தரிசனங் கிடைக்குமோ!’ என்றும், ‘இந்தக் கீதவாத்திய விநோதம் மறுபடி எப்பொழுது கேட்க வாய்க்குமோ!’ என்றும், எண்ணி எண்ணிக் கடவுளை மனத்தில் தியானம் பண்ணிக்கொண்டே அங்கிருந்து என்னுடன் கூடவந்த தோழர்களாகிய கனவான்களுடனே மீள்வதற்கு அரிதாக மீண்டு போய் என்னிருப்பிடஞ் சேர்ந்தேன்.

கீத வாத்திய விநோதம் முற்றியது.

பார்க்க:[தொகு]

விநோதரசமஞ்சரி

2.கற்பு நிலைமை

4.கற்றாய்ந் தொழுகல்