விநோதரசமஞ்சரி/4.கற்றாய்ந் தொழுகல்

விக்கிமூலம் இலிருந்து

விநோத ரச மஞ்சரி[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]

4. கற்று ஆய்ந்து ஒழுகல்[தொகு]

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”

- என்னும் குறளில், ஒருவன் கற்கவேண்டும் நூல்களைப் பழுதறக் கற்கக்கடவன்; என்று திருவள்ளுவநாயனார் அருளிச்செய்தமையால், உலகத்தில் அருமையும் பெருமையும் ஆனதாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பயனையும் அடைதற்குரிய மக்கட்பிறப்பிற் பிறந்தவர்கள், பிறவாதவராய், விவேக சூனியத்தால் தர்மாதர்மங்களை அறியாத வேடர் போலவும்; மிருகம் பறவை முதலிய உயிருள்ளவைகளும், மண், கல் முதலிய உயிரில்லாதவைகளுமாகிய அஃறிணைபோலவும், நன்முயற்சி யின்றி வறிதிருந்து வாழ்நாள் கழியாமல், பிரதானமாகிய கல்விப்பொருள் செல்வப்பொருள் என்னும் இரண்டில் கல்விப்பொருளைத் தேடல் வேண்டும்.

கல்விப்பொருளாவது, செல்வப் பொருள் போல வெள்ளங்கொண்டு போகாததும், நெருப்பிலே வேகாததும், கள்வர் அபகரிக்காததும், காவல்செய்ய வேண்டாததும், அரசர்களால் வவ்வப்படாததும், தாயத்தாரால் பங்கிட்டுக் கொள்ள முடியாததும், விரும்பினவர்கட்கு எல்லாம் தடையின்றி வழங்கினாலும் மேன்மேலும் வளர்வதன்றிக் குறைவுபடாததுமாய், அஞ்ஞானமாகிய பிணிக்கு மருந்துமாயிருப்பதனால், அதனைச் செல்வப்பொருளினும் சிறந்ததாகக்கருதி, ‘இளமையிற்கல்’ என்று ஔவை சொன்ன வண்ணம் இளமைப்பருவத்திற்றானே உறுதியாக அவசியம் தேடல் வேண்டும். தேடுங்கால், கல்வி வரையறைப் படாததனால், அதனை முற்றக்கற்பதற்கு ஆயுள் நீடித்திராமையாலும், கற்பவர் சரீரமோ பிணிக்கெல்லாம் பிறப்பிடம் ஆகையாலும், முடியாமையால் கைவிட்டுவிடாமலும், அல்லது ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என்பதொரு சாமானிய வாசகத்தை நம்பி, கண்டவெல்லாமாகிய மூடர்களுக்கேற்ற தந்தனப்பாட்டும், ரஞ்சனக்கூத்தும் உள்ளிட்ட புன்கல்வி கற்றுப் பொழுதுபோக்காமல், நீரைப் பிரித்துப் பாலைப் பருகும் அன்னப்பறவை போலச் சாஸ்திரங்களில் விசேஷ சாமானியங்களை யூகித்துச் சாராமிசந்தெரிந்து, இகபர சாதனமாய் எவற்றிலும் விழுமிதாகிய மெய்ம்மைக் கல்வி யையே உயிர்போலப் பெரும்பொருளாக விரும்பி, இலக்கிய இலக்கண சம்பிரதாயந் தெரிந்த நல்லாசிரியரைத் தேடி அடைந்து, அவரது சந்நிதானத்திற் செல்வர்முன் வறியர் ஏக்கற்றிருப்பது போல இருந்து, குறிப்பறிந்து ஒழுகி, அவர் கருணை கூர்ந்து கற்பிக்க, முறை வழுவாமலும், நெறி பிறழாமலும், பேய் போலப் பேருண்டியை இச்சியாமலும், பெரியம்மை பிரசன்னமானாற் போலப் பெருந்தூக்கம் தூங்காமலும், ‘அம்பலம் தீப்பட்டது!’ என்றாலும், ‘அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன்?’ என்று கெட்டொழிந்த முழுச்சோம்பரைப் போலச் சோம்பியிராமலும், அனைவரும் தன்னைத் ‘தம்பி பள்ளிக்கூடத்தான்’ என்று சொன்னால் போதுமென்று நினைத்துப் பிரதிஷ்டைக்காகக் குழப்புவான் போல விளையாட்டினால் குழப்பி விடாமலும், பலகாலும் மிக முயன்று ஐயந்திரிபற அமையக் கற்கவேண்டும். அதன்மேலும், ‘கேள்வி முயல்’ என்றமையால், உசிதமான பற்பல நற்கேள்வி கேட்க வேண்டும். அன்றியும், நுண்ணறிவுடையோர் நூல்கள் யாவையும் இனிதின் ஆராய வேண்டும். இவ்வாறு கற்றும் கேட்டும் ஆராய்ந்தும் பயின்றபின்னர்க் குப்பையைச் சீத்து விலையுயர்ந்த மாணிக்கத்தை ஆய்ந்தெடுப்பது போல, உண்மை துணிந்து, விலக்கத்தக்கவைகளை விலக்கிக் கொள்ளத்தக்கவைகளைக் கொண்டு அனுஷ்டிக்க வேண்டும்.

அனுஷ்டித்தலாவது, 'பார்மினோ! பார்மினோ!' என்று தாயுமானவர் உரைத்தவாறு யாவரும் 'ஆ! ஆ!' இவனைப் பாருங்கள்! பாருங்கள்! இவன் பாடிப்படித்துப் பிரசங்கிப்பது முக்கனியும், சர்க்கரையும், பாலும் தேனும் கலந்து ஊட்டுவது போல மிக இனிதாயும், அற்புதமாயும், விநோதசாதுரியமாயும், பகைவரும் வெறுக்கத் தக்கதன்றி வியக்கத்தக்கதாயுமிருக்கின்றதே! இவன் என்ன சாரதா பீடமோ! கல்விக்கடலோ! கற்பனைக் களஞ்சியமோ! ஞானமணி விளக்கோ! அவதார புருஷனோ! உற்பாத பிண்டமோ! அம்மம்ம! ஆச்சரியம்! இவன் நிபுண சிரோமணியாயிருக்கிறான்!' என்று, தனது வித்தியா சாமர்த்தியத்தை மெச்ச வேண்டுமென்னும் வீண் புகழை விரும்பலாகாது; பின்னும் கல்வியில் தான் பிச்சையிட்டவர்களுக்கு உண்டென்று சொல்லும்படி பூரணமாகக் கற்றுணர்ந்த காலத்தும் பிறரை 'இவர் நமக்கெவ்வளவர் அஜகஜாந்தரம்!' என்று அவமதித்துக் கர்வியாமல், 'எந்தப்புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ!' என்று எண்ணி, தன்னிலும் அதிகமாகக் கற்றவர்களைக் கண்டால் 'நெய்விட்டு விளக்கும் தீபத்தை நீர் விட்டு விளக்குவது போல இதுவரையில் நம்மை நாமே புகழ்ந்து வியந்தோமே!' சகல கலா வல்லவராகிய இவரது கல்விக்கு நமது கல்வி எம்மாத்திரம்? சதாமிசத்தில் ஏகாமிசங் காணுமா? கால்வாய் கடலாமா? அணுமேருவாமா? துரும்பு தூணாமா? எறும்பு யானையாமா? முட்டிக் காற்கழுதை பட்டவர்த்தனப் பரியாமா? என்று அஞ்சிப் பெட்டிப் பாம்பு போல அடங்கியிருக்கவேண்டுமே அல்லாமல், ஒருவருடனும் குதர்க்கஞ் செய்யலாகாது. தன்னிடத்தில் கற்றவர்கள் கேட்டவர்கள் எல்லாம் அக்கல்வி கேள்விகளால் பெரும்பயனடைய, 'குங்குமஞ்சுமந்த கழுதை'போலத் தானொரு பயனுமடையாமல், 'குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொள்வது' போலக் காமாந்தகாரத்தில் மூழ்கி, முறைப்படி கொண்ட மனைவியை உறங்க வைத்துப் பரஸ்திரீகளை எந்நாளும் இச்சித்துக் குலஸ்திரீகளை எக்காலத்திலும் கற்பழிக்கலாகாது. உள்ளங் களிக்கக் கள்ளுண்டு கலங்கலாகாது. பரதிரவியத்தை விஷமென்று நினைக்க வேண்டுவதை விட்டு, ஊராருடைமைக்குப் பேராசை கொண்டு, மிதமில்லாமல் கொள்ளையிட்டுத் 'தம்பி தெள்ளுமணி, திருட்டுக்கு நவமணி' என்று இகழப்படலாகாது. 'தன்னுயிர் போல மன்னுயிரையும் நினைக்கவேண்டும்' என்னும் சீவகாருணியத்தை மறந்து, கொலை செய்து, பிரமகத்தியாதி மகா பாதகங்களைத் தேடி, அநேக கற்பங்கடந்தாலும் கரையேறப்படாத மீளா நரகத்திற்கு ஆளாகலாகாது. 'அப்பா, என் கலியாணப் பந்தலிலிருந்து புளுகாதே!' என்ற பெரும்புளுகனும் இவனுக்கிணையல்ல; இவன்புளுகு அண்ட கோளத்தையும் தூறிப் பாயும். ஆதலால், 'அண்டப்புளுகன்' என்ற சொல்லும்படி பொய்யைப் பொருளாகக்கொண்டு மெய்யைக் கைசோரவிடலாகாது. 'கோபம் சண்டாளம்,' ஆகையால், அது கிருஷ்ண சர்ப்பம் போலச் சீறியெழும்படி அதற்கு இடங்கொடுக்காமல், 'பொறுமை கடலிற் பெரிது' என்பதனால், அதனைப் பூஷணமாகப் பூண்டு கொள்ளவேண்டும். சித்திரவதை செய்வது போல, அடிக்கடி அவர்களென்ன தீங்கு செய்தாலும், எதிர்செய்யாமல், அவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும்.

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.'

.

'எவ்வகை அறங்களை அழித்தவர்க்கும் அப்பாவத்தினின்று நீங்கும் வழியுண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவனுக்கோ அஃதில்லை. ஆதலால், அதனை மறவாது நினைக்கவேண்டும். எளியவர்களைத் திரணமாயெண்ணி அவர்களிடத்திலே வேம்பு போலக் கடுஞ்சொற் சொல்லாமல், தாழ்மையாய், எவர்களிடத்தும் இன்சொல்லே சொல்லவேண்டும். பகைவர், சினேகர், அயலார் என்னும் முத்திறத்தார்களுள் ஒருவர் பட்சஞ் சார்ந்து ஓரஞ்சொல்லமால், துலாக்கோல் போல நடுநிற்க வேண்டும். பறவைகளுக்குள் சண்டாளம் என்று இகழப்படுகின்ற அற்ப ஜந்துவாகிய காக்கைக்கும், காலையெழுந்திருத்தல், காணாமற் புணர்தல், மாலையிற் குளித்தல், அயலிடைப்புகாது மனையிடைப்புகுதல், உறவோடுண்டல், உறவாடல் என்னும் இவ்வறுவகை நற்செய்கைகளிருக்கின்றன.

'காலை யெழுந்திருத்தல் காணாம லேபுணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் - சால
உற்றாரோ டுண்ணல் உறவாட லிவ்வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்'

ஆதலால், அறிவினையுடைய நன் மக்களுக்கு எப்படிப்பட்ட நற்குண நற்செய்கைகளிருக்கவேண்டும்? அவைகள் எவ்வளவு அதிகமாகவும் இருக்கவேண்டும்? பிரபஞ்சத்தில் மூடர் விவேகிகள் போலவும், விவேகிகள் மூடர்கள் போலவும், கீழோர் மேலோர் போலவும், மேலோர் கீழோர் போலவும் இருப்பார்கள். அவர்களைக் கிளிஞ்சலை வெள்ளியென்றும், மாணிக்க்ககல்லைக் கரட்டுக்கல்லென்றும் ஒன்றை மற்றொன்றாக மதிப்பது போலக் காட்சி மாத்திரத்தில் அவ்வாறு நிச்சயிக்கலாகாது. 'கரும்பு கோணியிருந்தாலும் திதிக்கும் அல்லாமல் கசக்காது' என்றும், 'காஞ்சிரங்காய் சிவந்து கனிந்திருந்தாலும் கசக்குமல்லால் திதிக்காது,' என்றும், 'அம்பு வளைவின்றி ஒழுங்காயிருந்தாலும் கெட்ட செய்கையே உடையது,' என்றும், 'வீணை ஒழுங்கின்றி வளைந்திருந்தாலும் நல்ல செய்கையே உடையது,' என்றும் பகுத்தறிவது போல, அவரவர்களுக்கு இயற்கையும் செயற்கையுமாயுள்ள குணங்களையும் செய்கைகளையும் பகுத்தறிய வேண்டும். அங்ஙனம் பகுத்தறிந்து, ஒருவனைக் கொட்டிவிட்டு அவனைப் பதைத்துத் துடித்து வருத்தப்படச்செய்யும் தேள்போல, பிறனுக்குத் துன்பத்தை உண்டாக்கி அதை அவன் சகிக்கமாட்டாமல் வியசனபடச் செய்கின்றவர்களும், ஒருவன் உண்ணுஞ் சோற்றில் விழுந்திறந்து அவனுடைய வயிற்றுக்குள் போய் அவனுண்ட சோற்றை அவனுக்கு உதவாமற்போம்படி செய்யும் ஈயைப் போலப் பிறனது செல்வங்கண்டு பொறாமை கொண்டு, தாம் அவன்பொருட்டு இறந்தாவது அந்தச்சொத்தை அவன் அனுபவிக்கவொட்டாமல் செய்கின்றவர்களும், ஒருவனைக் கடித்து விஷம் தலைக்கேறுதலால் அவன் இறந்துபோம்படி செய்யும் பாம்பு போலப் பிறனைப் பகைத்து அவனுக்குத் தீங்கு விளைத்து அவனை முடித்துவிட்டு மகிழ்கின்றவர்களும் முதலாகிய தீயோரை நேசிக்கலாகாது.

உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு'

'ஆடை சோர்ந்தபோது உதவிசெய்கிற கை போல' நேசனுக்கு ஆபத்து வந்தபோது, தாமே அறிந்து உதவிசெய்கின்றவர்களையும், கொல்லன் உலைக்களத்தில் வேகின்ற இரும்புடனே வேகும் உலையாணிக் கோல்போல, சினேகன் உபத்திரவப்படும் பொழுது, 'நமக்கென்ன!' என்றிராமல், ஆவலுடனே தாமும் அவ்வுபத்திரவத்தை அனுபவிக்கின்றவர்களையும், கண்டியூர்ச் சோழராஜனுடைய மந்திரியாராகிய சீனக்கமுதலியாரை நேசித்து, அவர் இறந்து காஷ்டத்தில் வைக்கப்பட்ட பொழுது, 'என் சினேகரைப் பிரிந்து நான் இருக்கச் சகியேன்!' என்று அவருடனே கூட அந்தக் காஷ்டத்தில் படுத்துக்கொண்டு, சோழன்முதலானவர்கள் விலக்கியும் கேளாமல், நெருப்பில் வெந்து பிராணனை விடுத்துச் சினேக தர்மத்தை நிலைநிறுத்திய பொய்யாமொழிப் புலவர்போல்வாராகிய நல்லோரையுமே நேசிக்கவேண்டும். இன்னும் மனோ வாக்குக் காயங்களை எக்காலும் நல்விஷயத்திலேயே பயிலும்படி செய்யவேண்டு மல்லாமல், துர்விஷயத்தில் பிரவேசிக்க விடலாகாது. இனி, இப்படிக்கன்றி, விபரீதத்தால், 'அடபோ! இதென்ன பைத்தியம்! பாவமேது புண்ணியமேது? நரகமேது சுவர்க்கமேது? நாம் செத்தால், சரீரம் பஞ்சபூத சம்பந்தப்பட்டதாகையால், இது மண்ணோடு மண், நீரோடு நீர், நெருப்போடு நெருப்பு, காற்றோடு காற்று, வெளியோடு வெளியாய்ப் போய்விடுகின்றதே! பின்னர் மோட்சம் நரகம் அடைவதேது? தெய்வம் என்றதுதான் ஏது? முயற்கொம்பும் மலடிமைந்தனும் போலச் சூனியமே யல்லாமல், கண்டவர் ஆர்? இந்தக் கொள்ளைக்கு ஸ்நானமேன்? தியானமேன்? ஞானமேன்? தானதர்மங்களேன்? இவை எல்லாம் வீணாரவாரம்! கண்டதே காட்சி! கொண்டதே கோலம்! மனம் போன போக்கே சரி, என்று நாஸ்திகம் பேசிச் செருக்குற்றுப் பட்டிமாடாய் உழலாமல், 'அண்ட பிண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கின்ற காரணக் கடவுள் ஒருவன் உண்டு' என்று அநுமான உபமான ஆகமப் பிரமாணங்களால் நிச்சயமாக நம்பி, அக்கடவுளை மனமாரச் சிந்தித்து, நாவார வாழ்த்தி, முடியார வணங்கி, ஆராதித்துப் பெரியோரைப் பேணி, அரசராணைக்கமைந்து மாதா பிதா குரு முதலானவர்களைப் பூசித்து, மற்றச் சுற்றத்தாரையும் தழுவி வறியவர்க்கு இரங்கி, வாசா கயிங்கரியமாத்திரமாய்ப் போகவிடாமல், கூடிய அளவும் உபகரித்துச் சம்ரட்சணை செய்வதற்கு ஏதுவாகச் செல்வப்பொருளையுந் தேடல் வேண்டும். அதனைத் தேடுங்கால், தன்னைப் போன்ற பிறரிடத்துச் சென்று அபிமானமாகிய பூஷணத்தைத் துறந்து, எய்த்து நின்று இரத்தலும், பிறரை மோசஞ் செய்தலும், பொய்ச்சாட்சி சொல்லிப் புனைபட்டுக் கைக்கூலி வாங்குதல் முதலாகிய பாவத் தொழிலைச் செய்தலுமின்றித் தேடக்கூடாதே' என்றெண்ணி அப்படிச் செய்யாமல், பழிக்கஞ்சி நிலத்தைத் திருத்தி உழுது பயிரிட்டாவது, நாநாவிதப் பண்டங்களைக் கொண்டு அவைகளை மாறி வியாபாரஞ் செய்தாவது,'அறிவுடையொருவனை அரசனும் விரும்பும்' என்பதனால், சுயபாஷையேயன்றிப் பாஷாந்தரங்களையும் பயின்று, ராஜாங்கத்தைச் சார்ந்து, அரசர்கள் தயை பெற்று, விவேக்கோசாத்தாற் பலவித உத்தியோகங்களைச் செய்தாவது, மற்றுமெவ்வித நன்முயற்சியாலாவது, மெய்வருத்திச் சம்பாதிக்க வேண்டும். அப்படித் தக்கவழியில் சம்பாதித்த கஷ்டார்ச்சிதமாகிய சுயார்ச்சிதத்தையாயினும், அதனோடு பிதிராச்சித்ததையாயினும், அநியாயார்ச்சிதமாம்படி, 'கூத்திக்கிட்டுக் குரங்காகமலும், சூதாடித் தோற்காமலும், துர்வியாச்சியத்தில் அழித்து விடாமலும், வறிதே புதைத்து வைத்துப் பின் இழந்து போகாமலும், இல்வாழ்க்கைக்கு நல்ல துணையாகிய கற்புடை மனையாளோடு கூடி மனமொத்து,

'இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை.


'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை.


'துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கும்
இல்வாழ்வா னென்பான் துணை.'

- என்பனவற்றிற்கிணங்கப் பதின்மருக்கும் பகிர்தலாகிய தான தருமங்களைச் செய்து, தாமுமனுபவித்து, இம்மை இன்பந்துய்த்துப் புகழ்பெற வாழ்ந்து மறுமையின்பம் அடைதற்கேற்பப் பொறிபுலன்களை விஷயாகாரமாம்படி சுயேச்சையாக விட்டுவிடாமல் அடக்கி, வேதாகமங்கள் உரைத்த வண்ணம் நெறிவழாது ஒழுகல் வேண்டும். இங்கிலீஷ்காரர், சிறுபிள்ளைகள் பாஷையின் எழுத்து முதலியவைகளை வருத்தமின்றி எளிதாக விளையாட்டில் தாமே உணர்ந்து கொள்வதற்குப் பலவிதச் சித்திரப்படங்களை வேடிக்கையாகத் தீட்டிக் காட்டுவது போல, உலகத்தில் கல்வி பயிலும் சிறுவர் முதலாயினோர் அருமையின்றி எளிமையாக வாசித்துச் சிறந்த கல்வியைக் கற்பதும், அதனை ஆராய்வதும், கற்ற கல்விக்குத் தக்கவண்ணம் நடப்பதுமாகிய கற்றாய்ந்தொழுகலை இவ்விதமாமென்று படமெழுதிக் காட்டாவிடினும், இதனால் இடர்ப்படாமல் ஒருவாறு உணர்ந்துகொள்ளும் பொருட்டு இது அச்சிறுவர் முதலாயினோர்க்குச் சிரிப்பும் பரிகாசமுமாய்த் தோன்றியே உபாயமாக மேற்குறித்த பெரும்பயனைத் தரும்படி சில பழமொழிமுதலாகிய திருஷ்டாந்தங்களைக் கொண்டு வெளிப்படையாகவும் சுருக்கமாகவும் செய்யப்பட்டமையால், 'இதுயாருக்குத் தெரியாது? இதில் என்ன அருமையிருக்கின்றது? இதுவும் ஓர் அதிசயமா?' என்று வரன்முறையே கற்றுணர்ந்த சான்றோர் ஒருபொழுதும் நினையாரென்னும் துணிவுபற்றி இதனை அச்சிட்டுப் பிரசுரம் செய்யலாயினேன். இதற்குமுன் அச்சிடப்பட்டவைகளுக்கும், இனி அச்சிடப்படுமவைகளுக்கும் இஃது ஒருவாறு ஒக்கும்.

நான்காவது 'கற்றாய்ந்து ஒழுகல்' முற்றும்[தொகு]

பார்க்க:[தொகு]

விநோதரசமஞ்சரி

3.கீதவாத்திய விநோதம்

5.பயனிலுழவு