விநோதரசமஞ்சரி/5.பயனிலுழவு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விநோத ரச மஞ்சரி[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]

5. பயன் இல் உழவு[தொகு]

இதன் பொருள், ‘பயனில்லாத உழுதொழில்’ என்பதாம்.
உலகத்தில் யாவரும் உஜ்ஜீவிக்கும் பொருட்டுக் கடவுளால் கற்பிக்கப்பட்ட நாநா விதத்தொழில்களிலும் உழுது பயிரிடுந் தொழிலே சிறந்த தொழிலாயும், எல்லாச் செல்வங்களிலும் உழவுச்செல்வமே குறையாத செல்வமாயும், ஒருவரிடத்துச் சேவித்துண்ணும் உணவினும் உழுது பயிரிட்டுண்ணும் உணவே இனிய உணவாயும் இருக்கின்றன, என்பதுபண்டித பாமரர்களுக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்கமாய்த் தெரிந்திருக்கின்றது. ஔவையும் இந்த விஷயத்தை, ‘பூமி திருத்தியுண்,’ என்பது முதலாகச் சிலவாக்கியங்களால் விளங்கச் சொல்லியிருக்கின்றாள். திருவள்ளுவரும்,

 “ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”

- என்னும் குறளால், ‘உழுதொழிலைச் செய்து உண்டு வாழ்பவர்களே சுவாதீனர்களாய் வாழ்பவர்கள்,’ என்றும், ‘மற்றவர்களெல்லாம் பிறரைத் தொழுது, அவர் கொடுக்க வாங்கியுண்டு அவர் பின் சென்று, அச்சுவாதீனம் இழந்திருப்பவர்கள்,’ என்றும் சொன்னார். அன்றியும்,

“ஏரும் இரண்டுளதாய் இல்லத்தில் வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே
சென்று வரவெளிதாய்ச் செய்வாருஞ் சொற்கேட்கில்
என்றும் உழவே இனிது.”

-எனவும் சொல்லப்படுகின்றதே!

இப்படி யெல்லாம் இருந்தும், இக்காலத்தில் இந்து தேசத்தில் உத்தியோகஸ்தரல்லாத குடிஜனங்கள் பயிரிட்டுச் சீவனஞ் செய்வதைப் பார்த்தால், மிகவும் பரிதாபமாயிருக்கின்றது! அதை என்னவென்று நாவெழுந்து சொல்லுகின்றது! துணிந்து சொல்லப்புகுந்தால், ‘பன்னியுரைத்திடிலோ பாரதமாம்,’ என்பதாக விரியும்; ஆயினும், அதை இவ்விடத்திற் சுருக்கிச் சொல்லுகின்றேன்.
குடிகள் தங்கள் தேகபோஷணைக்காகப் பயிரிடத் தொடங்கினால், முதல் முதல், இது பள்ளத்தாக்கு, இது மேட்டுப்பாங்கு, இது சமநிலம்,’ என்றும், ‘இது செய்கால், இது கரம்பு, இது புறம்போக்கு,’ என்றும் நிலவளமறிய வேண்டும். ஏரிப்பாய்ச்சல், ஆற்றுக்கால் பாய்ச்சல் முதலான நீர்வளம் பார்க்கவேண்டும். காடழித்துக் கரம்பு திருத்த வேண்டும். காறு, கலப்பை, நுகம், வடம், ஆள், குண்டை முதலிய பலவுந் தேடவேண்டும். ஏர்கட்டி நிலத்தை உழ வேண்டும். அதற்குக் குப்பை, தழை முதலாகிய எருவிடல் வேண்டும். நன்செய் நிலங்களைப் பரம்படித்துச் சேடையாடிப் பண்படுத்த வேண்டும்.

பிறகு அதில் சீரகச் சம்பா, சிறுமணிச் சம்பா, சின்னச் சம்பா, பெரிய சம்பா, சன்னச் சம்பா, ஊசிச் சம்பா, இலுப்பைச் சம்பா, மல்லிகைச் சம்பா, கம்பன் சம்பா, கைவளச் சம்பா, குங்குமச் சம்பா, குண்டைச் சம்பா, கோடைச் சம்பா, ஈர்க்குச் சம்பா, புனுகுச் சம்பா, முத்துச் சம்பா, துய்ய மல்லிகைச் சம்பா, மோரன் சம்பா, மாலன் சம்பா, சீவன் சம்பா, செம்பிலிப் பிரியன், பிசானம், மலைகுலுக்கி, மடுவிழுங்கி, காடைக் கழுத்தன், செம்பாளை, பூம்பாளை, முட்டைக்கார், கடப்புக்கார், மோசனம், மணக்கத்தை, பிச்சவாரி, ஈசற்கோவை, இறங்கு மேட்டான், செந்நெல், வெண்ணெல் முதலான நன்செய்த் தானியங்களும்;

கோதுமை, வாற்கோதுமை, வரகு, கேழ்வரகு, மஞ்சட்சோளம், செஞ்சோளம், முத்துச் சோளம், காக்காய்ச் சோளம், கம்பு, சாமை, தினை முதலாகிய புன்செய்த் தானியங்களும்;

அவரை, துவரை, உழுந்து, கடலை, கறுப்புப்பயறு, பச்சைப் பயறு, கொள்ளு, எள்ளு முதலிய காய்த் தானியங்களும்; அவுரி, ஆமணக்கு முதலியவைகளும் விளைவிக்க விதை சம்பாதிக்க வேண்டும். அவைகளைக் கோட்டை கட்டி முளை கிளம்பச் செய்தாவது; அப்படிச் செய்யாமல், சும்மாவாவது விதைக்க வேண்டும் அல்லது நாற்றங்காலுக்கு நாற்றுவிடவேண்டும். அது வளர்ந்த பின், பிடுங்கி நடவேண்டும். சற்சனரைப் பாலிக்கும்படி துர்ச்சனரைப் பரிகரிப்பது போல, அதற்கு விரோதமில்லாமற் களையெடுக்க வேண்டும். நீர் பாய்ச்ச வேண்டும். பயிர் வளருங்காலத்தில் ஆடு, மாடு, பன்றி முதலிய மிருகங்கள் அழிக்கவொட்டாமல், சுற்றி வேலியிட வேண்டும். பூச்சிகளாற் சேதப்பட்டுப் போகாமல், அடிக்கடி பார்வையிட வேண்டும். 'பாராத உடைமை பாழ்,' அல்லவா? நன்றாய் விளைதற்கு வேண்டிய முயற்சிகளைச் சோம்பலில்லாமல் அடுத்தடுத்துச் செய்ய வேண்டும். கருக்கொண்டு விளைந்து மணிமுற்றிக் கற்புடை மகளிர்போலத் தலைவணங்கி மடியுங் காலத்தில்,

ஏரினும் நன்றா லெருவிடுதல் இட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.'

- என்பதனால், களவு போகாமற் கண்ணை இமை காப்பதுபோலப் பத்திரமாய்க் காக்க வேண்டும். விளைந்து மடிந்தபின் அதை ஒப்படி செய்வதற்குப் பிரயத்தனப்பட்டு, அறுக்கும் பருவமறிந்து அறுக்கவேண்டும். அறுத்த அரிகளைச் சுமைகட்டிக் கொண்டுபோய் மலைபோலப் பெரிய போர் போடவேண்டும். மாடுகளை தாமணியிற் பிணைத்து, அதை மிதிப்பிக்க வேண்டும். மிதிப்பித்தபின், வைக்கோலைப் பிரித்துப் பதரைத்தூற்றி, மணியை உடன்வாரக் கும்பலாகக் கூட்டிக் களத்தில் அம்பாரமாக்கிக் குறிமுத்திரை செய்ய வேண்டும். அதை அளந்து தொகையாக்கு, அதிற்கருமான், தச்சன், தட்டான், கணக்கன், குயவன், வண்ணான், அம்பட்டன், தோட்டி, தலையாரி' வெட்டியான் முதலானவர்க்குரிய களவாசம் போகத் துரைத்தனத்தாருக்குச் சேரவேண்டிய மேல்வாரத்தை யாதோர் ஆடங்கமும் இல்லாமல் சேர்த்துவிட வேண்டும். மற்றக் குடிவாரத்தில் பிள்ளையார் கோயில், சிவன் கோயில், பெருமாள் கோயில், ஐயனார் கோயில், மாரி பிடாரி காளி கோயில்களுக்கும், நம்பியான் குருக்கள், புரோகிதன் ஜோசியன், வைத்தியன், வாத்தியார், ஆண்டி, தாதர்களுக்கும்; களவாசத்துக்கும் இவ்வளவு இவ்வளவு என்று பகுத்துக் கொடுத்துவிட்டு மிகுந்த கொஞ்சந் தானியத்தைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய், அதனாற் பெண்சாதி பிள்ளை, தாய் தந்தை, தமையன், தம்பி முதலாகிய குடும்பத்தாரெல்லாரும் ஜீவனம் பண்ண வேண்டும் என்றால், அது ஆருக்குத் தானாகும்? எத்தனை நாளைக்குக் காணும்? இது, 'கடன் வாங்கியும் பட்டினி; கலியாணம் பண்ணியும் சந்நியாசம்' என்பதாயிருக்கின்றதே!

பின்னும் வீட்டில் நடக்கின்ற கலியாணம், சோபனம், சீமந்தம் முதலாகிய சுபாசுபங்களையும்; வரிசை வண்மை, தான தருமம் முதலானவைகளையும் அந்தச் சொற்பப்பலனைக் கொண்டே நடத்த வேண்டும். அவைகள் எப்படித்தான் நடத்தப்படும்? 'பனி பெய்தோ கடல் நிரம்பும்? பனியிலே கப்பலோட்டலாமா? சமுசாரமோ சாகரமோ? என்கிறார்களே!

ஆற்றுக்காற் பாய்ச்சலில்லாத இடங்களிலே மேற்சொல்லிய பாடுகளெல்லாம் பட்டும், மழை பெய்யாமல் வானங்காய்ந்து போகுங்காலத்தில், ஏரியில் தண்ணீரில்லாமையால், அந்தச் சொற்பப் பலனுங் கிடையாது. உழைப்பெல்லாம் வீணுக்கு உழைத்ததாம். ஆகையால், அது 'கல்லைக் குத்திக் கைநோவதாய் முடியும்,' அல்லவா?

ஏரிகளில்லாத சில இடங்களில் மானவாரிப் பயிர் செய்வதுண்டு. இந்த மானவாரிப் பயிரோ, முழுதும் அநியாயம். ஏனெனில், அங்கே ஏரி நீர் பாய்வதற்கிடமில்லாமையால்,வானத்தையே எதிர் பார்க்க வேண்டியிருக்கின்றது. இக்காரணத்தால், இதை 'வானம் பார்த்த பயிர்' என்றுஞ் சொல்லுவார்கள். இதில் வானம் பெய்தால்தான் சிறிது பலனாவது காணலாம். இல்லாவிட்டால், 'வானஞ்சுருங்கிற் றானஞ்சுருங்கும்,' என்றவாறே சூனியம். ஆதலால், இது, 'முதலே துர்ப்பலை; அதிலுங்கர்ப்பிணி,' என்பது போல ஆகும்!

எங்கும் மண்டல வருஷமாய்க் காலத்தில் மிதமழை பெய்ய வேண்டும். இப்படிப் பெய்யாவிட்டாலும், அகாலத்திற் பெய்தாலும், குறைவாய்ப் பெய்தாலும், அதிகமாய்ப் பெய்தாலும், தக்கபடி முயற்சி செய்யாவிட்டாலும் நஷ்டமேயன்றி நயம் வாராது.

சிலவூர் மிட்டாவும்,சிலவூர் பட்டாவும், சிலவூர் அமானியும், சிலவூர் சுரோத்திரியமும், சிலவூர் சர்வமானுயமுமாயிருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் பட்டாவைப் போலச் சில இடங்களில் குடிகளுக்கு அசௌகரியத்தைக் கொடுப்பது வேறொன்றுமில்லை. நிலத்தை உழுது விதைத்தாலே போதும். விதைத்தது விளைந்தாலும் விளையாமற் சாவியாய்ப் போனாலும், 'ஆர்கெட்டாலென்ன, ஆர்வாழ்ந்தாலென்ன?' எவ்விதத்திலும் சர்க்காருக்குக் கட்டவேண்டிய தீர்வை கட்டியே தீரவேண்டும். இந்நாளிலன்றி, சில நாளுக்கு முன்பு, அது கட்டுதற்குத் தாமசப்பட்டால், எள்ளளவாவது இரக்கமின்றிக் குடிகளை மிகவும் உபத்திரவப் படுத்துவார்கள். அவர்கள் ஆரென்றால், இந்து தேசத்திற்கும் சாட்சாது ஈன்ற தாய்போலத் தோன்றினவர்களாகிய மாட்சிமையுள்ள கவர்ன்மெண்டாரென்று சிலர் சொல்வார்கள். பெற்ற தாயே பிள்ளைக்கு நஞ்சிடுவது போல, நீதிக்கு விரோதமாய்க் கவர்ன்மெண்டார் இரக்கமற்று அப்படிச் செய்வார்களென்று நான் சொல்லமாட்டேன். கலெக்டர்கள் தாம் அநியாயமாய் நடத்துவார்களென்று எப்படி நிச்சயிக்கலாம்? கலெக்டர்கள் அரசிறைப்பணம் சேகரிக்கும்படி, துரைத்தனத்தாரால் நியமித்தனுப்பப்பட்டு வந்திருப்பதனால், அப்பொருளைச் சேகரம் பண்ணுதற்கு ஏற்ற முயற்சிகளைச் செய்வது அவர்களுக்குக் கடமையாதலால், அவர்கள் சட்டத்தின்படி கட்டளையிட, அதுவே வியாஜயமாக அவர்களிடத்தில் உத்தியோகஸ்தராயிருக்கும் சிரெஸ்ததார் சொற்படியோ, அல்லது தாசீல்தார் ஏவுதலினாலோ, தங்கள் சுய சித்தத்தினாலோ ஜில்லாதார் முதலானவர்கள் 'தைநாத்துச்' சேவகர்களை அனுப்ப, அவர்கள் பயிரிடும் குடிகளைத் திருடர்களைப் பிடிக்கிறது போலப் பிடித்து வந்து, கையையும் காலையும் குண்டுக் கட்டாகக் கட்டிக் கிட்டிக்கோல் பாய்ச்சிக் கடுமையாய் வெயிலெறிக்கும் மத்தியான வேளையில் ஆற்று மணலிற் பதைக்கப் பதைக்க உருட்டிவிடுகிறதும், கழுத்துக்கும் கால்பெருவிரலுக்கும் கயிறு மாட்டி அண்ணாந்தாள் போட்டு நெற்றியின் மேற் பெரிய கல்லெடுத்து வைத்து வெயிலிலே நிறுத்திப் பலவிதத்திலும் கஸ்திப்படுத்திக் கிஸ்தி கட்டச் சொல்லுகிறதும், வாய்க்கு வழங்காத சொற்களெல்லாம் சொல்லி ஏசுகிறதுமுண்டு.

அந்த உபத்திரவம் பொறுக்கமாட்டாமற் பயிரிடுபவர்களுள் அனேகர்,கையிருப்பில்லாமையால், ஏர்க்குண்டை முதலானவையும், வீட்டுத் தட்டுமுட்டுகளையும், துணி முதலியவைகளையும் விற்றுக் கொடுத்துவிட்டுக் கொஞ்சநாளில் ஏழைகளாய் விடுவார்கள். அவர்கள் தங்கள் வீடு முதலானவைகளை விற்றுக் கொடுக்கச் சம்மதியில்லாமற் சற்றே முன் பின் பார்ப்பார்களானால், அதிகார புருஷர்களே - தாங்கள் 'நிமிர்ந்து போட்டதென்ன, குனிந்தெடுத்ததென்ன?' அது ஒன்றுமில்லையே! ஆதலால், - மனங்கூசாமல் அந்த வீடுவாசல் முதலானவைகளைத் தாராளமாய்த் தங்களுக்கு நேர்ந்தபடி ஏலம் போட்டுக் குடிச்சனங்கள் கண்ணீர் விட்டழும்படி அவர்களைப் பரதேசிகளாக்கி விடுவார்கள். இதற்குத் திருஷ்டாந்தம் இதனடியிற் காண்க:

★ஒரு கிராமத்தில்...[தொகு]

ஒரு கிராமத்தில் பத்தேர்ச் சமுசாரியொருவன் தீர்வைப் பணங்கட்ட வழியில்லாமையால், தன் காணி பூமி முதலாகிய ஆஸ்திகளையெல்லாம் தோற்று, உடுக்க வஸ்திரமுமில்லாமற் பரதேசம் போய்விடலாமென்று நினைத்திருக்கையில், 'பனையேறி விழுந்தவனைக் கடாவேறித் துவைத்தது' போலப் பழமுதற் பாக்கிக்காகச் சர்க்கார் சேவகர் வருகிற செய்தியறிந்து, அவர்களுக்கென்ன உத்தரம் சொல்லுகிறதென்று ஏக்கமுற்று 'சட்டி சுட்டது, கை விட்டது,' என்பது போல, அதுவே வியாஜமாகப் பெண்சாதி பிள்ளை முதலான குடும்பத்தையெல்லாந் துறந்து, கோவணாண்டியாய் வெளிப்பட்டு வருகையில், நடுவழியில் வேறொரு சேவகனைக் கண்டு, 'காலைச் சுற்றின பாம்பு கடிக்காமற் போகாது,' என்பதாக, 'இந்தச் சனியன் இங்குந் தொடர்ந்து வந்ததே! இனி எப்படி?' என்று நடுநடுங்கி, ஜைனகோயிலிற் போயொளித்தான். ஒளித்தவன்,அந்தக் கோயிலில் நிர்வாணமாயிருந்த ஆள் மட்டமான ஜைன விக்கிரகத்தைப் பார்த்துத் தன்னைப்போலப் பயிரிட்டுக் கெட்டவனென்று நினைத்துக்கொண்டு, 'ஐயோ! நான் பத்தேர் வைத்துக் கெட்டுக் கோவணத்தோடாவது தப்பி வந்தேன்! அப்பா, நீ எத்தனை ஏர் வைத்துக் கெட்டையோ! உனக்கு இந்தக் கோவணமும் இல்லாமற் போய்விட்டதே!' என்று அதைக் கட்டிக்கொண்டு அழுதான்.

சில கிராமங்களில் ஏரிகளிருந்தும், 'பேர் கங்கா பவானி, தாகத்திற்குத் தண்ணீர் கிடையாது,' என்பது போல, அவைகளுக்குத் தண்ணீர் வருவதற்கிடமில்லாமற் புனற்குளமாயிருப்பதனாலும், சில கிராமங்களில் உள்ளவைகளோ, அதிக நீர் கொள்ளாத சிற்றேரிகளாகையினாலும், 'அம்மையார் நூற்ற நூலுக்கும் பையன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி,' என்பதாக முதற்போகத்துக்கேயன்றி, இரண்டாம் போகம், மூன்றாம் போகம் பயிரிடுவதற்கு ஏதுவில்லாமலிருக்கிறது. அந்த முதற்போகத்திலும், அறுபது நாள் எழுபது நாள்,மூன்றுமாதம் விளையும் சொற்பப் பயிருக்குத்தான் உதவியாகும்; ஆறுமாதம், பத்து மாதம், ஒரு வருஷத்தில் விளையும் பயிருக்கு எவ்வளவும் உபயோகமாகாது. 'கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல்' என்றுஞ் சொல்லப்படுகின்றதே!

சில இடங்களில் 'ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுகிறது' என்கிற பழமொழிக் கிசையப் பள்ளமடையிலிருந்து மேட்டு நிலத்திற்குப் பாய்ச்ச வேண்டி ஏரி நீரையே அல்லாமற் குளத்துநீர், கிணற்றுநீரையும் கவலை போட்டும், ஏற்றம் போட்டும், மார்பில் இரத்தம் விழ இடுப்பொடியக் கைசலிக்க இறைத்து வருத்தப்படுகிறார்கள். இது வரவு கொஞ்சமும், வதிப்பதிகமாயிருக்கிறது.

அன்றியும் குடிகளுக்குள் அவரவர் தங்கள் தங்கள் கழனிகளுக்கு ஏரித்தண்ணீரை மடை வழியே மாற்றிக்கொண்டு போய்ப் பாய்ச்சுதற்காக, இராத்திரியில் நஞ்சோடு நஞ்சு கலக்கின்ற நடுச்சாமத்தில், விஷஜந்துவாகிய பாம்பு கடித்தாலும், துஷ்ட மிருகமாகிய புலியடித்தாலும் ஏனென்று கேட்பாரில்லாமல், தனியே போய், நித்திரையுமிழந்து வருத்தப்படுகிறதுமல்லாமல் அந்த விஷயத்தில் ஒருவரோடொருவர் மாளாத பகை கொண்டு பிராணச்சேதமாகிறதையும் பாராமற் பெருஞ்சண்டையிட்டு, மண்டையை உடைத்துக்கொண்டு மாண்டு போகிறதுமுண்டு. இது 'காணி லாபம் கோடி நஷ்ட'மாய் இருக்கிறதே!

சிலவூர்களிற் காணி பூமியில்லாத சுகவாசிகள் 'ஊர்க்காணி யாட்சிகாரராகிய மிராசுதாருடைய நிலத்திற் பயிரிட்டுச் சர்க்கார் தீர்வையும் கிராம மேரையும் கொடுக்கிறதுண்டு. அப்படியானால் இவர்களுக்கென்ன கிடைக்கும்? இது 'பெருமைக்குப் பன்றி வளர்க்கிற'தாக அல்லவோ முடியும்?

அநேக கிராமங்களிற் பட்டி முதலானவைகளாலும் திருடர்களாலும் மாத்திரமல்லாமல் 'பத்துப் பெயர் மருத்துவச்சிகள் கூடிக்கொண்டு குழந்தையின் கையை ஒடித்தார்கள்' என்பதாக, நிலத்தைத் தரவாரி செய்கிறவர்களாலும், நிலத்தரம் ஏற்படுத்துவர்களாலும், அடங்கல் பார்க்கிறவர்களாலும், 'அஜிமாஷு' செய்கிறவரகளாலும், 'தொகம்' போடுகிறவர்களாலும் சில காலங்களில் அதிக நஷ்டம் வருகிறதுண்டு.

முன் ஒரு காலத்தில் மதிப்பாளி ஒருவன் ஒரு கிராமத்தில் வந்து மதிப்புச் செய்யும்பொழுது, கிராமத்தான்மேல் விரோதத்தால் 'இந்த நிலம் ஆனைகட்டுந்தாள்; வானமுட்டும் போர்' என்று மதித்த சமயத்தில், 'மாற்றைக் குறைத்தான் தட்டான்; வாயிலே ஏய்த்தான் செட்டி,' என்பதுபோல, அவனைக் கிராமத்தான் ஏய்க்க நினைத்து, மதிப்பாளிக்குத் தந்திரமாகத் தன் மோதிரக்கையைக் காட்டிச் சைகை பண்ணக்கண்டு, அவன், 'நமக்கு மோதிரம் கிடைக்கும்,' என்னும் பேராசை கொண்டு, முன்பு ஏற்றினதை, 'ஆறுகொண்டது பாதி; தூறுகொண்டது பாதி' என்று பின்பு இறக்கினதாகவும் சொல்லுகின்றார்களே! இது பெரு மோசமல்லவோ? 'மோசம் நாசம், கம்பளி வேஷம்,' என்று உலக வதந்தியும் இருக்கின்றதே!

துரைத்தனத்தைச்சார்ந்த உத்தியோகஸ்தர் முதலானவர்கள் இப்படிப் பயிர் செய்பவர்களையேயன்றி, மற்றவர்களையும் மாச்சரியத்தினால் வஞ்சிக்கிறது அவர்களுக்குச் சுவாப குணமாயிருக்கிறது. அவர்கள், தாம் கெட்டாலும் பிறர்க்குக் கேடு நினைக்கலாகாது' என்பதை அறியார்களோ? ('தான் கெடினும் தக்கார்கே டெண்ணற்க'- நாலடியார்).

கர்னாடகத் துரைத்தனத்தில் ஓராற்றினிடத்தில் ஆயிரம் பொதி மாட்டு வர்த்தகர் வந்திறங்கியிருக்கையில், இரவிலே ஆற்றில் வெள்ளம் வந்து, அங்கு இறங்கியிருந்த பொதிகளையும் மாடுகளையும் வர்த்தகர்களையும் அடித்துக் கொண்டு போக, விடிந்தபொழுது அவர்களுள் தப்பிப் பிழைத்தவர்கள் விசனப்படுவதை ஆற்றுக்கு அடுத்த கிராமத்தில் இருந்த கணக்கன் கண்டு, தனக்குப் பகையாளியாகிய குயவன் குடியைக் கெடுப்பதற்கு அதுதான் சமயமென்றுநினைத்து, வர்த்தகர்களை அந்தக் கிராமதாரிடத்தில் போய் முறையிட்டுக் கொள்ளச் சொல்லி, கிராமத்தார், 'இதற்கு நாங்கள் என்ன செய்கிறது?' என்றால், 'இந்த நஷ்டம் குயவன் கொடுக்க வேண்டியது. ஊர்க்கணக்கனைக் கேட்டால் தெரியவரும்,' என்று வர்த்தகர் சொல்லும்படி செய்வித்துக் கிராமத்தார் தன்னைக் கேட்கையில், அப்படித்தான் வழக்கம்; கணக்கைப் பார்க்க வேண்டும்,'என்று சொல்லி, வீட்டில் இருந்து பின் வருகிறபடி ஓர் ஏட்டில் எழுதி, அது பழமையாகத் தோற்ற, நெல்லுப் பானையில் வைத்து வேவித்து அதை வெகுநாளைக் கணக்குக் கட்டின் நடுவிலே கோத்துக் கட்டிக் கட்டோடே எடுத்துவந்து, கிராமத்தாருக்கு முன் அவிழ்த்து, அதற்குள் தேடி எடுப்பதுபோல அந்த ஏட்டை எடுத்து, 'காட்டெருமுட்டை பொறுக்கி மட்கலஞ் சுட்ட புகைபோய், மேற்கே மேகங்கிளம்பி, மின்னிக்குமுறி மழை பொழிய ஆற்றில் வெள்ளம் அடித்துப் போன பல சரக்கை ஊரார் இழுப்பது வழக்கு; குயவனிறுப்பது கணக்கு,' என்று வாசித்துக் காட்டச் 'சரிதான்' என்று கிராமத்தார் ஒப்புக்கொண்டு, அந்த நஷ்டத்தை ஊர்க்குயவனைக் கொடுக்கச் சொல்லித் தீர்த்தார்கள். குயவன், ஐயையோ! தெய்வமே! இதுவும் தலைவிதியா!' என்று உப்பச்சட்டி வறவோடும் விற்று வர்த்தகருக்குத் தொலைத்தான். இதுவே மேற்சொல்லப்பட்டதற்குத் தகுதியான சாதிருசயம்-

'பூனைக்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம்,' என்பது போலத் தமக்குச் சௌக்கியமும் பிறருக்கு அசௌக்கியமுமாம் என்பதை யோசியாமல், சுஜாதி அபிமானமுமில்லாமல், தாம் தாம் ஜீவனஞ்செய்யும் நிமித்தத்தையே பெரியதாக நினைத்து, கிரமமான இந்த இங்கிலீஷ் துரைத்தனத்திலும் நெறி தவறி, 'குலத்துக்கீனங் கோடரிக்காம்பு,' என்கிறபடி, இந்துக்களே கெடுக்கத் தலைப்படுகிறார்களே! இதைக்குறித்து ராஜாங்கத்தார் செவ்வையாய் ஆராய்ந்தறிந்து, இத்தவறு வராமல் நடத்தவேண்டும் அல்லவோ? அவ்வாறு நடத்தாமல் 'நமக்கென்ன!' என்று கண்சாடையாயிருந்தால், அந்தத் தோஷம் 'ராஜா ராஷ்ட்ர கிருதம் பாபம்' என்றவாறாக,மேற்படி ராஜாங்கத்தாரைத்தானே சாரும்; அவ்விதத் தோஷத்திற்குத் துரைத்தனத்தார் இடங்கொடாமல், குடித்தனத்திற்கு க்ஷேமமுண்டாகும்படி செய்வார்களானால், தங்கள் துரைத்தனம் மேன்மேலும் அபிவிருத்தியாகும் என்பதற்குச் சந்தேகமில்லை.

★★குலோத்துங்க சோழற்கு...[தொகு]

குலோத்துங்க சோழராஜனுக்கு மகுடாபிஷேகமானபொழுது வித்துவஜனர்களெல்லாம் அவன்மேற் கவி பாடி அவனை வாழ்த்தினார்கள். அத்தருணத்தில் ஔவை என்பவள் அவ்விடத்திற்கு வந்தாள். அவளை நோக்கி அங்குள்ள பெரியோர்கள்,'அம்மையீர், நீ அரசனை வாழ்த்துதல் செய்ய வேண்டும்,' என்று பிரார்த்திக்க, அவள், 'வரப்புயர!' என்று சொல்லிப் பேசாமலிருக்க, அவர்கள் அக்கருத்தறியாமல் அவள் வாழ்த்தவில்லையென்றெண்ணி, மறுபடியும் இருமுறை வினாவ, அவள் முதன்முறை சொன்னபடி சொல்லி, 'நான் முக்காலும் வாழ்த்தியும், என்னை நீங்களேன் அலட்டுகிறீர்கள்?' 'வரப்புயர!' என்று வாழ்த்தினேனே! நீங்கள் அறியவில்லையா?' என்ன, அவர்கள், 'அதன் தாற்பரியமென்ன?' என்று உசாவ, ஔவை, 'வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான்,' என வாழ்த்தியதாம்,' என்றாள். இந்தச் சிறிய வாக்கியங்களிலும், குடித்தனஞ் செழித்தால் துரைத்தனஞ் செழிக்கும்,' என்பது விளங்குகின்றதே!

மழைபெய்து ஏரிநிறைந்ததும், சற்றே அஜாக்கிரதையாயிருந்தால் அது உடைபட்டு அதிலுள்ள நீரெல்லாம் வியர்த்தமாய்ப் போய்விடுவதுமல்லாமல், 'செத்துங்கெடுத்தான் சீயபுரத்துக் கிராமணி' என்பது போல ஒரு நொடிப்பொழுதில் அடுத்த கிருக கிராமங்களையும் நாசமாக்கிவிடும். அதனால், கடல்லையிலகப்பட்ட சிறு துரும்பைப்போலக் குடிகள் இங்குமங்குமாய் அவதிப்படுகையில், உடைந்த ஏரியைக் கம்புகழி வைக்கோல் செத்தை முதலானவைகளைத் தீவிரமாய்த் தேடிக்கொண்டு போய் உடைபட்ட வாயில் மரக்கூச்சுகளை நாட்டி, வைக்கோலைத் திரணை திரணையாகக் கட்டிக் குதிரைப்பாய்ச்சல் கொடுத்துத் தடுத்துக் கட்டுகிறதற்கு அக்குடிஜனங்களே துரைத்தனச் சேவகரால் அமிஞ்சி பிடிக்கப்படுகிறார்கள். இப்படி அவர்கள் படும் சங்கடம் ஒருவிதமன்று.

தக்ஷிண திசையிற் பயிர் செய்பவனாகிய ஒரு வேளாளன், தன் வீட்டில்சினையாயிருந்த பசு தலையீற்றுக் கன்று போடுவதற்கு அதிக பிரயாசத்துடன் கதற, அது கண்டு, 'ஐயோ! வாயில்லாத ஜீவனும் சாதுப்பிராணியுமாயிருக்கிற பசு வருத்தப்படுகிறதே! என்ன செய்யலாம்!' என்று ஏங்கி நிற்குந் தருணத்தில், சோனா மாரியாக மழை பெய்ய, அதனால் அவனது இருப்பிடமாகிய வீடு அடியோடே தகர்ந்து இடிந்து விழ, அதை அவன் கட்டுகிறதற்கு வேண்டும் கருவிகளைச் சேகரிக்கும்படி நாலு திக்கிலும் பாவும் குழலும் போல அலைச்சற்படும் வேளையில்,இடிமேல் இடியிடித்தது போல, அவன் மனையாள் பிரசவிக்கக்கூடாமல் சகித்தற்கரிதாகிய கர்ப்ப வேதனைப்பட, 'உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்தாற்போல,' அது ஒரு பக்கத்தில் அவனை வெகுவாய் வாதிக்கிற சமயத்தில், அவனிடத்திற் படி வாங்கிக்கொண்டு சேவிக்கும் அடிமையாள் திடீரென்று இறந்து போக, 'இனி நமக்குப் பயிர்வேலை செய்கிறதற்கு வேறொருவரும் உதவியில்லையே!' என்று அவன் சிறகிழந்த பறவை போலத் திகைக்கும் பொழுது, அவனுடைய உழுது பண்படுத்தப்பட்ட நிலம் வாடிப் போகிறதென்னும் எண்ணம் அவனுக்கு உதித்தமையால், அதில் விதைக்கும்படி எத்தனப்படுத்தி வைத்த தானிய விதைகளை அவசரமாயெடுத்துக் கொண்டோட, அவனோடுகிற வழியிற் பாம்பு குறுக்கிட்டது போல அவனுக்குப் பூர்வம் கடன் கொடுத்திருந்த கடன்காரர்கள், 'எங்களிடத்தில் நீ பட்ட கடனைச் செலுத்தினாலல்லது போகக்கூடாது!' என்று ஆணையிட்டு மறிக்க,

'விடங்கொண்ட மீனைப் போலும் வெந்தழல் மெழுகு போலும்
படங்கொண்ட பாந்தள் வாயிற் பற்றிய தேரை போலும்
திடங்கொண்ட ராம பாணஞ் செருக்களத் துற்ற போழ்து
கடன்கொண்டார் நெஞ்சம்போலும் கலங்கினா னிலங்கைவேந்தன்'

- என்ற வண்ணமாக அவன் சித்தங் கலங்குகையில், 'பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்' என்பற்கேற்கத் துரைத்தனத்தாருடைய தண்டற்சேவகர்கள் வந்து உழுது பயிரிட்டு அனுபவித்ததற்காகச் சேர வேண்டிய இறைப் பொருளைக் கட்டச் சொல்லி உபத்திரவப்படுத்த, அவன், 'இதற்கென்ன உத்தரஞ் சொல்லுகிறது!' என்று ஒன்றுந் தோன்றாமல் ஆந்தை போல விழிக்குமளவில், அவனுடைய ஆசாரியர் வந்து தமக்குக் குருதட்சிணை கொடுக்கவேண்டுமென்று கேட்க, 'இதேது தர்மசங்கடமாயிருக்கிறது! கொடாவிட்டால் அபசாரத்திற்கு இடமாகிறதே!' என்று அவன் பித்துக்கொண்டவன் போல எண்ணாததும் எண்ணுகையில், வித்தவஜனர்கள் அவன்மேல் கவிபாடி வந்து தியாகம் தரச்சொல்லிப் பிடிக்க, 'வித்துவான்களாகையால் இவர்கள் மனம் நோகும்படி செய்யக்கூடாதே!' என்று பலவிதத்திலும் இடர்ப்பட்டு, அவன் இருதலைக் கொள்ளிக்கு நடுவேஅகப்பட்ட எறும்பைப் போல முன்னும் போகாமல் பின்னும் போகாமல் தடுமாறித் தத்தளித்தான். அப்பொழுது அந்த நிர்ப்பாக்கியன் பட்ட சங்கடத்தையெல்லாம் மேற்சொல்லிய புலவர்களுள் ஒருவர்,

'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகமுடையாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழிதனிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள்வந்து தட்சிணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே!'

-என்று ஒரு பாடலாகப் பாடினார்.

உழுதொழிலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளெல்லாம் அழியாத வச்சிரத்தினாலே செய்யப்பட்டிருக்கின்றனவா? காட்டிலுள்ள செத்த மரங்களினாலும் துருப்பிடிக்கும் இரும்பினாலும் செய்யப்பட்டவைகள் தாமே? ஆதலால், அடிக்கடி காறுகள் தேய்ந்துபோம். கலப்பைகள் முறிந்து போம். ஏரிலே கட்டப்பட்ட எருதுகள் கோமாரி மாரடைப்பான் கண்டு திடீரென்று செத்துப் போம். அல்லது கிழமாய்ப் போம். வேலையாட்களுக்கு வியாதி சம்பவிக்கும். அக்காரணங்களால் உழவுக்குத் தடையுண்டாம். அந்தச் சமயத்தில் வேறே கலப்பைகள், காறுகள், எருதுகள், ஆட்கள் ஆகிய இவைகளை நூதனமாகச் சம்பாதிக்க வேண்டிவரும். இவைகளைக் குறித்து அதிகப் பணம் செலவாகிறதும் சொல்லக்கூடாத கஷ்டம் நேருகிறதும் உண்டு. இந்தச் செலவெல்லாம் எவ்விதத்திற் கட்டி வரும்?

இவ்வகைச் செலவுக்கும் சர்க்கார் தீர்வைக்கும் பணம் அவசரமாய் வேண்டியிருக்கிறதே! அதற்காகக் கூட்டிலும் குதிரிலும் சேர்த்து வைத்த உசிதமான பழையநெல் முதலியவைகளைக் காலவிலைக்குத் தக்கபடியன்றி, எட்டு மரக்காலுக்குப் பத்து மரக்காலும், பத்து மரக்காலுக்குப் பன்னிரண்டு மரக்காலுமாக நேர்ந்தவாறு விற்றுக் கொடுத்துவிட்டுத் தாங்கள் அநுசிதமான வரகு, சோளம் முதலானவைகளைச் சமைத்துப் புசித்தும், கம்பு கேழ்வரகுகளைக் காய்ச்சிக் குடித்தும், அவைகளுக்கும் வழியில்லாமல், வடித்த கஞ்சி, புளித்த காடி, பிண்ணாக்குகளினால் வயிற்றை நிரப்பி உடம்பு வளர்த்தும், அவை சரீரத்திற்கு ஏற்றுக்கொள்ளாமல், ஜுரம், குளிர், தலைநோய், வயிற்றுநோய்,காற்பிடிப்பு, கைப்பிடிப்பு, பித்தம், வாயு, மந்தம், பேதி உண்டாகி அவஸ்தைப் படும்பொழுது 'பால ஜோசியம், விருத்த வைத்தியம்' என்பதற்கேற்கச் சாஸ்திர மாத்திரம் அன்றிக் கைம்முறைகளிலும் நெடுநாட்பழகித் தாது முதலிய அஷ்ட பரீக்ஷையும் தெரிந்து நல்ல நிர்வாகத்தோடே 'ஆயிரங்காக்கைக்கு ஒரு கல்' எறிவது போல, பல பிணிக்கும் ஒருமருந்தே கொடுத்துச்சீக்கிரத்தில் சொஸ்தப்படுத்திப் பெரிய பெயர் பெற்ற மாக சமர்த்தனான பிரபல வைத்தியன் இந்த எளியவர்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறான்? அந்நேரத்திற் கண்ணிற்கு எதிர்ப்பட்ட கற்றுக்குட்டியை அழைப்பித்து அவனிடத்திற் கையைக் காட்ட, அவன் பார்த்து, 'அம்மம்ம! இது பொல்லாத அசாத்திய வியாதி! இதற்குத் தகுதியான பரமௌஷதப் பிரயோகம் பண்ணவேண்டும்!' என்று, பையிலிருந்து வீர பூர ரச பாஷாணங்களை எடுத்து, 'இது நாராயணாஸ்திரம், இது பிரமாஸ்திரம், இது பாசுபதாஸ்திரம், இது வச்சிர கண்டன குடாரம், இது பைரவி, இது சிந்தாமணி, இது அமிரத சஞ்சீவி என்று பெயர்களை மாத்திரம் பிரமாண்டமாகச் சொல்லிக் கைகொண்ட மட்டும் இழைத்து, மொத்தை மொத்தையாக வழித்து, நா 'சேத்திமாத்ரா வைகுண்ட யாத்ரா,' என்பதாகக் கூசாமற் கொடுத்துச் சாந்தி பண்ணத் தெரியாமல் உபத்திரவத்தை அதிகப்படுத்தி விட, அப்படியும் சங்கடப்படுவார்கள். இது நிற்க.

★★★முற்காலத்தில்...[தொகு]

முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் முதலான இந்துக்களுள் ஆளுகை செய்த அரசர்களெல்லாம் புஷ்பமானது வாடாமல் அதிலுள்ள தேனை வண்டு மிருதுவாகக் கிரகிப்பது போலக் குடிகளுக்கு வருத்தமில்லாமல் அவர்களிடத்தில் ஆறிலொரு கடமை வாங்கி வந்தார்களென்பது லோகப் பிரசித்தமாயிருக்கின்றது. ஆறிலொன்று என்பதன் விவரமென்ன? எனில், பயிரிடப்பட்டு விளைந்த தானிய மொத்தத்தை ஆறு பங்காகப் பகுத்து, அவைகளில்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங
கைம்புலத்தா றோம்பல் தலை.'

என்றபடி, பிதிரர்க்கு ஒன்றும், தேவர்க்கு ஒன்றும், விருந்தினருக்கு ஒன்றும், சுற்றத்தாருக்கு ஒன்றும், இல்வாழ்வானுக்கு ஒன்றுமாகப் பிரித்து ஐந்து பங்கைக் குடிகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பங்கை அரசர் தமக்குச் சேரவேண்டிய கடமைக்காக எடுத்துக்கொள்வதே. இது எவ்வளவு சகாயம்?

இக்காலத்திலோ அப்படியில்லை. ஆயினும், 'காக்கையின் கழுத்தில் பனங்காயைக் கட்டினது' போலக் குடிகள் பரிக்கக்கூடாமல் அவர்கள்மேல் ஏற்றப்பட்ட அதிக பாரத்தை மனமிரங்கி ஒருவருக்கொருவர் சுலபப்படுத்துவது துரைத்தனத்தாருக்கு அவசியமான கடமைதான்.

இலங்கைத்தீவின் துரைத்தனத்தார் பத்திலொரு கடமை வாங்கி வருகிறார்களே! அது இரகசியமானதா? யாவரும் அறியத்தக்கதாய்த் தானேயிருக்கிறது! இப்படி ஓரரசாட்சியிலேயே ஓரிடத்தில் ஒரு விதமும், மற்றோரிடத்தில் மற்றொரு விதமுமாய் நடந்து வருகிறதே! இதென்ன! ஒன்றை இடுக்கிக் கொண்டு, ஒன்றை நடத்திக்கொண்டு போவதாயிருக்கிறதல்லவோ? இது தர்மமா? தாய்க்குப் பிள்ளைகளிடத்தில் பக்ஷபாதமுண்டா? அவள் தான் பெற்ற பிள்ளைகளையெல்லாம் சீராய் நடத்த வேண்டுமல்லவா?

இந்தப் பிரதேசத்தில் கோதாவரி முதலிய ஆறுகளிற் பிரபலமான அணைக்கட்டுகளையும், பலவிடங்களிற் பெரிய சிறிய அளவிற்கு வாராவதிகளையும், மழை பெய்கின்ற நீரெல்லாம் பாழ்க்கிறைத்ததுபோல வீணாய்ப் போகாமல், 'பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே' என்பதாக ஆற்றின் வழியே கால்களினாலோடி அந்தந்தக் கிராமங்களுக்குப் போய்ப் பாய்ந்து பயன்படும்படி எண்ணத்தொலையாத கிளைக்கால்வாய்களையும், சீக்கிரத்தில் நினைத்தவிடத்திற் சேர்கிறதற்கு இருப்புப் பாதைகளையும், தூரதேச சமாசாரங்களை எளிதிலறிகிறதற்கு ஆச்சரியமான மின் தபாற் கம்பிகளையும், வண்டி, மாடு, குதிரை, மனிதர்கள் போக்கு வரவு செய்வதற்கு விசாலமும், நெடுமையுமாயிருக்கிற பற்பல சாலைகளையும் உண்டாக்கி, அனேக ஜில்லாக்கள் தாலூக்காக்களில் தமிழ் தெலுங்கு முதலாகிய சுதேச பாஷையும் இங்கிலீஷ் பாஷையும் நாநாஜாதிப் பிள்ளைகளும் படிக்கும்படி பாடசாலைகளையும், அவரவர்களுக்கு வரும் வியாதிகளை மருந்து கொடுத்து நிவர்த்திசெய்து சொஸ்தப்படுத்தும்படி அங்கங்கே வைத்திய சாலைகளையும் ஸ்தாபித்து, அப்பாட சாலைகளில் பலநூற் பயிற்சியுள்ள நிபுணர்களாகிய உபாத்தியாயர்களையும், வைத்திய சாலைகளில் தன்வந்தரி போல மிகவும் திறமான வைத்தியர்களையும் ஏற்படுத்தி வைத்து, மோரீசு முதலாகிய தீவுகளுக்குப்போய் வருகிற கூலி ஜனங்கள் அவ்வவ்விடங்களில் தமக்கேற்ற உதவிகளையும் மற்றும் தமது கோலின்கீழ் வாழ்வாரெல்லோரும் எவ்விதமான நன்மைகளையும் பெறும்பொருட்டுப் பொருளைப் பொருள்செய்யாமல் மிதமறச் செலவு பண்ணி, அதற்கு வேண்டிய முயற்சிகளைத் தாமதமில்லாமற் செய்து வருகிறதுமல்லாமல், சிலர் சொல்லுகிறபடி, இனி அங்குள்ள சிரெஸ்ததார், தாசீல்தார் முதலானவர்களுக்குச் சம்பளத்தை அதிகப்படுத்தி, எங்கும் ஒரே சீராகப் பிரஜைகளுக்கு அதிக சௌக்கியத்தை உண்டுபண்ணக் கருத்துக் கொண்டுமிருக்கிற தருமதுரைகளாகிய மாட்சிமை தங்கிய கவர்ன்மெண்டார் அல்லும் பகலும் ஓய்வில்லாமற் புருஷன் பெண்சாதி புத்திரன் புத்திரிகள் முதலாகக் குடும்பத்திலுள்ள ஆண், பெண், பாலர், விருத்தர், படியாள் முதலிய வேலைக்காரரோடும், பள்ளத்திலும், மேட்டிலும், சேற்றிலும், தண்ணீரிலும், மழையிலும், வெயிலிலும், பனியிலும், குளிரிலும், காற்றிலும், மாறாமற் சரீரம் வருந்த உழைத்துப் பாடுபட்டும் செம்மையாய்ப் பலன் அனுபவிக்கப்பெறாமல்,

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா?
இல்லைத்தான் பசியாம லிருக்கத்தான் பதுமத்தா னெழுதி னானா?
பல்லைத்தான் விரித்திரந்தால் நெல்லைத்தான் வரகைத்தான் பரிந்தா ரீவார்?
முல்லைத்தாண் டவராய கங்கைகுலம் விளங்கவந்த முதன்மை யோனே!'

என்ற வண்ணமாக, உதரநிமித்தத்தினால் மிகவும் துக்கிக்கின்ற மேற்படி எளிய குடிஜனங்களை 'நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் பில்லுச்சுமை சுமப்பது போகாது' என்பதாக நினைத்தும் பாராமுகமாய்க் கைவிட்டிராமல், அன்பு கூர்ந்து, தயையுடனே விசாரணை செய்து, இவர்களும் மற்றவர்களைப் போலச்சுகமாய் ஜீவனம் பண்ணும்படி இப்பொழுது தாங்கள் செய்து வருகிறவைகளுடனே இன்னுமேதாவாது சிறிது சகாயமுண்டாகச் செய்தால், அது சகலத்திலும் பிரதானமான லோகோபகாரமாயிருக்கும்.

ஐந்து 'பயனில் உழவு' முற்றிற்று.
[தொகு]

பார்க்க:[தொகு]

விநோதரசமஞ்சரி

4.கற்றாய்ந் தொழுகல்

6.மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது