விலங்குக் கதைகள்/பூனைக் குட்டிகள்

விக்கிமூலம் இலிருந்து

பூனைக் குட்டிகள்


சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பூனைக் குட்டி அங்கு வந்தது. அது பசியினால் கத்திக் கொண்டிருந்தது. பல நாள்கள் சாப்பிடாமல் அதன் உடல் மெலிந்து காணப்பட்டது.

அல்யான் என்ற சிறுவன் பூனைக் குட்டியை கையில் எடுத்தான்; "நான் என் வீட்டுக்குக் கொண்டு செல்வேன். ஆனால் என் அம்மா அனுமதிக்க மாட்டாள்" என்றான்.

 எனக்கும் பூனைக் குட்டியை எடுத்துச் செல்ல ஆசை தான். ஆனால், எங்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது என்றான் அல்யானின் நண்பன் சலாஸ்கின். நானாவது எடுத்துச் சென்றிருப்பேன். ஆனால் எனக்கு ஒரு சின்னத் தம்பி இருக்கிறான் என்றான் வலேரிகா.



தம்பிப் பாப்பா இருந்தால் என்ன !

என் தம்பி சிறு குழந்தை. அவன் பூனைக் குட்டியின் வாலைப் பிடித்து இழுத்து விடுவான் என்று விளக்கினான் வலேரிகா.  அப்படியானால் நானே எடுத்துச் செல்கிறேன் இங்கே பாருங்கள் இந்த பூனையோ நடுங்கிக் கொண்டு இருக்கிறது. இதனை இங்கு விட்டு விட்டுச் செல்லமுடியாது. என் அம்மா அனுமதிக்கா விட்டாலும் கூட பரவாயில்லை. இதனை என் அறையில் மறைத்து வைத்திருப்பேன். எங்காவது போனால் என்னோடு எடுத்துச் செல்வேன் என்றான் அல்யான்.

அல்யான் பூனைக் குட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.

"அருமையான பூனைக் குட்டி" என்றார் தந்தை.

"நமக்குப் பூனைக் குட்டி தேவையில்லை" என்றாள் அம்மா.

"ஆனால் பூனைக் குட்டிக்கு நாம் தேவை" என்றான் அல்யான்.

"பாவம், போனால் போகட்டும். தாய்ப் பூனை இல்லாத குட்டியை காப்பாற்றத்தானே வேண்டும்" என்று எண்ணிய அம்மா 'சரி' என்று ஒத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் அல்யான் வேறு நிறமுள்ள மற்றொரு பூனைக் குட்டியைக் கொண்டு வந்தான். அம்மா திட்டுவாள் என்று பயங்த அல்யான், பெற்றோரிடம் கூறாமல் தன் அறையிலேயே அதனை ஒளித்து வைத்துக் கொண்டான். அவற்றிற்கு உணவு, பால் அனைத்தையும் அல்யான் கொடுத்து வந்தான். அல்யான்  மூன்றாவது பூனைக் குட்டியைக் கொண்டு வரும் வரை வீட்டில் யாருக்கும் இரண்டாவது குட்டி இருப்பது தெரியாது.

ஒரு சமயம் தந்தை, அம்மா, அல்யான் மூவரும் தேநீர் அருந்திக் கொண்டனர்.

ஒரு பூனைக் குட்டி மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தன.

"இங்கே பார்; நம்மிடம் வெள்ளை நிற பூனைக் குட்டியல்லவா இருந்தது. இந்த குட்டி பழுப்பாக இருக்கிறதே!"

ஏதோ இதனைப் புரிந்து கொண்டது போல் பழுப்புப் பூனைக் குட்டி ஓடி ஒளிந்து கொண்டது. உடனே கறுப்புப் பூனைக் குட்டி (மூன்றாவது) வெளியே வங்தது. அதனைக் கண்ட தந்தை வியப்பால் கத்தினார்; இது என்ன விந்தை! இந்தக் குட்டி கறுப்பாக அல்லவா இருக்கிறது. இங்கு என்ன நடக்கிறது?

உடனே அல்யான் கறுப்புக் குட்டியை தன் அறைக்குள் விட்டு விட்டு வந்தான்.  அப்பா, உனக்கு நிறப் பார்வைக் கோளாறு ஏற்பட்டு விட்டது போலும் என்றான் அல்யான்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மூன்று குட்டிகளும் வெளியே வந்தன. உடனே தந்தை இருப்பிடத்திலிருந்து குதித்தெழுந்தார்.

இரண்டுக்கு மேல் அல்லவா இருக்கின்றன? வெவ்வேறு நிறமாக இருக்கிறதே! என்று கத்தினார் தந்தை.

வேறு வழியில்லை - என்று எண்ணிய அல்யான் சொன்னான்.

பாவம்; இந்த பூனைக் குட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததால் அவற்றிற்கு பசி எடுக்கத் தொடங்கி விட்டது, பாலாடைக் கட்டியின் வாசனையைக் கண்டதும் அவை வெளியே ஓடி வங்து விட்டன. அம்மா! அவை பெரியதாகும் வரையாவது நம் வீட்டில் இருக்கட்டும் என்று கெஞ்சினான் அல்யான்.  எனக்கு குட்டிகள் இருப்பதில் ஆட்சேபணை இல்லை என்றார் தந்தை.

சரி இப்பொழுது முழுக் கதையையும் சொல். உன்னிடம் எத்தனை குட்டிகள் இருக்கின்றன? நூறா? இருநூறா?

இல்லை, இல்லை. மூன்றே மூன்று தான். வேண்டுமானால் இன்னும் கொண்டு வர முடியும், என்றான் அல்யான்.

அது தான் கேட்டேன். சரி, மூன்று மட்டும் என்றால் இருந்து விட்டு போகட்டும். -

தாங்கள் அதிகார பூர்வமாகத் தங்க முடிவெடுத்தாகி விட்டது என்பதை புரிந்து கொண்டதைப் போல் பூனைக் குட்டிகள் மேசை, நாற்காலி மீது ஏறிக் குதித்து விளையாடத் தொடங்கி விட்டன.

சில நாட்கள் கழிந்தன.

சலாஸ்கின் வீட்டின் நாய் காணாமல் போய் விட்டது. எனவே சலாஸ்கின் அல்யான் வீட்டில் பெரியதாக வளர்ந்து விட்ட ஒரு குட்டியை எடுத்துச் சென்றான்.

 வலேரிகாவின் தம்பியும் வளர்ந்து விட்டதால் அவனும் மற்றொரு குட்டியை எடுத்துச் சென்றான். அல்யான் முதலில் கண்டெடுத்த குட்டியை தனக்காக வைத்துக் கொண்டான்.

மூன்று குட்டிகளுமே எப்பொழுதுமே அல்யானிடம் மிகப் பிரியமாக இருந்தன.