விளையாட்டு உலகம்/ஒரு தாயார் ஓடத் தயார்!

விக்கிமூலம் இலிருந்து

ஒரு தாயார்
ஓடத் தயார்!


அவள் தாயார்தான். இரண்டு குழந்தைகளுக்கு அன்புத்தாய்தான். டாக்டர் ஒருவரின் இல்லத்தரசி, அன்பு மனைவி. வயதோ முப்பது ஆகிவிட்டது. ஆண்களே முப்பது ஆகிவிட்டால், 'முடிந்துபோய் விட்டது எல்லாம்' என்று முடிவு கட்டுகின்றபோது. பெண்ணுக்குரிய நிலை என்ன? அந்த வயதிலும், ஆகுமா என்ற நிலையிலும், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ள, அந்தத் தாய் தயாராக இருந்தாள்.

ஓயாத உடற் பயிற்சி, உண்மையான உழைப்பு. அயராத ஆர்வம். ஆனந்தமான லட்சியம். ஒழுங்கான உணவு முறை. ஒழுக்கமான வாழ்க்கை. இப்படியாகக் காத்திருந்தாள் அந்தத் தாய் 12 ஆண்டுகள்.

ஆண்டுகள் பனிரெண்டு என்பது நீண்டதோர் காலந்தான் என்றாலும், லட்சியவாதியான அந்தத் தாய்க்கு அது பொருந்தவில்லை போலும். மிகப் பொறுமையாகக் காத்திருந்தாள். காத்திருந்தது என்றவுடன், 'காலமே விரைந்து வா' என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடவில்லை. வீட்டு வேலைகளைக் கவனித்தாள். கோலாகலமாகக் குடும்பத்திலும் ஈடுபட்டாள். அத் துடன் விளையாட்டுப் பயிற்சிகளையும் விடாமல் தொடர்ந்து செய்தாள்.

விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்கள் பெற வேண்டும் என்ற வேகமும் நோக்கமும் என்றும் மாறாமலே இருந்தது. ஆரம் காலத்தில் நீச்சல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையால், ஆர்வமுடன் பயிற்சிகளைத் தொடங்கிய போது, அது வெற்றிகரமாக அமையவில்லை.

பிளாங்கர்சின் இயக்கங்களைக் கண்ட பயிற்சியாளர், ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டால், உறுதியாக வெற்றி பெற முடியும் என்று அறிவுரை கூறினார். அறிவுரையை ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்து, உயரத் தாண்டும் போட்டிக்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டு, 1936ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டாள்.

என்னதான் முயன்றாலும், அவளால் ஆறாவது இடத்தையே அடைய முடிந்தது. அதற்காக அவள் ஓய்ந்துபோய்விட வில்லை. கன்னியான பிளாங்கர்சின் முயற்சி, கன்னி முயற்சியாகவே போய்விட்டது. அதனால் கலங்கிப் போய்விடாமல், பயிற்சியைத் தொடர்ந்தாள் பிளாங்கர்ஸ்.

தொடர்ந்து பயிற்சி செய்த சாதனையானது, எந்தப் பந்தயத்திற்குச் சென்றாலும் இவளே வெற்றி வீராங்கனை என்னும் பட்டத்தைக் கொடுத்தது. உயரத் தாண்டும் போட்டி நீளத்தாண்டும் போட்டி இவற்றில் உலக சாதனைகளைப் பொறித்துவிட்டு, பந்தயத்திற்காகக் காத்திருந்தாள்.

ஆனால், அவள் நினைத்ததுபோல் தான் நடக்க வில்லை. 1936ம் ஆண்டுக்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து நடக்கவிருந்த ஒலிம்பிக் பந்தயம், 1940ம் ஆண்டு நடக்கவில்லை. இரண்டாவது மகா யுத்தம் உலக நாடுகளுக்கிடையே தொடங்கி, 1944ம் ஆண்டு வரை நீடித்தது. அதனால், பிளாங்கர்சின் நோக்கம் நிறைவேறாமலே போனதே தவிர, நிலைத்துப் போய் விடவில்லை.

இதற்கிடையிலே, பிளாங்கர்சுக்குத் திருமணம் நடைபெற்றது. கைபிடித்தக் கணவன் ஒரு டாக்டர். மனைவியின் மனம் அறிந்து, அவள் லட்சியத்திற்குத் துணை புரிந்து லட்சியக் கணவனாக வாழ்ந்தார்.

விளையாட்டுப் பயிற்சிகளுக்கிடையே வீட்டு வேலைகளும் தொடர்ந்தன. வளமான குடும்பத் தலைவியாக பரிணமித்த பிளாங்கர்ஸ் வாழ்க்கையிலும் பரிபூரணத்துவம் அடைந்தது போல, இரண்டு குழந்தைகளுககும் தாயானாள்.

இந்த இடைவெளி பன்னிரெண்டு ஆண்டுகளாக மாறியது. 1948ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெறப் போகின்றது என்ற செய்தியானது அவளுக்கு அமுதமாக ஒலித்தது. தொடர்ந்து இடைவிடாமல் பந்தயங்களுக்காகப் பயிற்சி செய்த பிளாங்கர்ஸ், துரிதமான பயிற்சியில் இறங்கிவிட்டாள். பிறகு, தன் கணவனோடும் குழந்தைகளோடும், லண்டன் மாநகரம் நோக்கிப் புறப்பட்டுவிட்டாள்.

ஏற்கனவே நீளத்தாண்டும் போட்டி, உயரத் தாண்டுப் போட்டி இவற்றில் உலக சாதனைகளைப் பொறித்திருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளை நீக்கிவிட்டு, வேறு பல நிகழ்ச்சிகளில் (Events) பங்கு பெற்று வென்று காட்ட வேண்டும் என்று விரும்பினாள். அவ்வாறே ஒட்டப் பந்தயங்களாக 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 80 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் இவற்றினைத் தேர்ந்தெடுத்தாள்.

பந்தயத்திற்குப் பிளாங்கர்ஸ் கோயன் வருகிறாள் என்றதும், பரிகாசம் பண்ணத் தொடங்கினார்கள் பத்திரிக்கையாளர்கள். '20 வயது கன்னியர்களுடன் போட்டி போட, இரண்டு குழந்தைகளின் தாயார் ஹாலந்து நாட்டிலிருந்து வருகிறாள்' என்று எழுதிய அவர்கள் எழுத்தில், கேலியும் கிண்டலும் கூத்தாடின. கும்மாளம் போட்டன.

'வாலிப நேரத்தில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத வனிதை' என்று அவர்கள் இரக்கப்படவில்லை. மாறாக 'ஏட்டிக்குப் போட்டி' என்ற வகையில் வரவேற்பு இருந்தது. உலக சாதனை பொறித்திருந்த அவளது உண்மையான ஆற்றலை மறைப்பது போல, அவளது வயது 30 என்பதையும் சுட்டிக்காட்டி, முன்போல ஆற்றல் இருக்காது என்பதையும் மறைமுகமாகக் கூறுவது போல, பத்திரிக்கையாளர்கள் செய்திகளைப் பரப்பினர், என்னதான் கூறினாலும், பிளாங்கர்ஸ் கோயனின் இதயம் சற்றும் கலங்கவில்லை.

போட்டிகள் தொடங்கின. 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாகப் பங்கு பெற்று 11.9 வினாடிகளில் ஓடி, உலக சாதனையை நிறுவினாள். அடுத்த போட்டி 200 மீட்டர் ஓட்டம். அதிலும் 24.4 வினாடிகளில் ஓடி, மீண்டும் உலக சாதனையை நிறுவினாள். மூன்றாவது போட்டி 80 மீட்டர் தடை தாண்டி ஓட்டம். அதிலும் 11.2 வினாடிகளில் ஓடி உலக சாதனை. இவ்வாறாக பங்கு பெற்ற மூன்று பந்தயங்களிலும் தங்கப் பதக்கம் பெற்றதோடு அல்லாமல், பார் புகழும் வண்ணம் உலக சாதனை நிகழ்த்தினாள்.

அத்துடன் அமையாது, 4<100 மீட்டர் தொட ரோடடப் போட்டியிலும் கலந்து கொண்டு, ஒரு தங்கப் பதக்கம் பெற்றாள். நல்ல குடும்பத் தலைவி ஒருத்தி நான்கு தங்கப் பதக்கங்களுடன் வெற்றி மேடையில் நின்றதைக் கண்டு வம்பர்கள் வாயடைத்துப் போயினர். 20 வயதுக்குட்பட்ட கன்னியர்கள், பந்தயங்களில் இவளை விரட்டி ஓய்ந்ததைக் கண்டு, தாங்கள் கணித்த 'வெற்றி தோல்வி ஜோதிடம்' சுக்குநூறாகிப் போனதைக் கண்டு, மனம் மாறி, வீராங்கனையைப் புகழத் தொடங்கினர். அரிய சாதனையின் முன்னே தலை குனிந்தனர்: பணிவுடன் வணங்கினர்.

இதுவரை எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஆற்றல் மிகுந்த அற்புத சாதனையைச் செய்ததில்லை என்ற பெரும் புகழை அடைந்தாள். அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்வின் கிரேன்ஸிலின், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பாவோ நர்மி, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜெசி ஒவன்ஸ் எனும்மூன்றுசிறந்தவீரர்கள் போல முதல் பெண்மணியாக நின்றாள் பிளாங்கர்ஸ் கோயன்.

நாடே கூடியிருப்பது போல அவளைச் சுற்றிக் கூட்டம். தன் கணவன், குழந்தைகளுடன் குதிரைகள் பூட்டிய திறந்த வெளி சாரட்டில் பயணத்தைத் தொடங்கினாள்.

விராங்கனை பிரான்சினா பிளாங்கர்ஸ் கோயன் வாழ்க’ என்ற கூட்டத்தினரின் வாழ்த்தொலி விண்ணை முட்டியது.

‘வேகமாக ஓடியதைத் தவிர, வேறெதுவும் நான் செய்யவில்லையே’ என்றாள் அந்தத் தாய். எவ்வளவு தன்னடக்கம் பார்த்தீர்களா! வீரத்தில் பிறந்த விவேகம் அது.

60 கோடி மக்கள் அடங்கிய ஒரு நாடு, ஒரு தங்கப் பதக்கத்திற்கு 80 ஆண்டுகளுக்குமேலாக ஏங்கும்போது, ஒரு தாய் பெற்ற 4 தங்கப்பதக்கங்கள் என்ன கூறுகின்றன? தங்கப் பதக்கங்கள் வாங்க நீங்கள் தயாரா என்பதுதானே!