விளையாட்டு உலகம்/புத்தாண்டு வாழ்த்துக்கள்!

விக்கிமூலம் இலிருந்து
புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

அதோ! ஒரு 68 வயது இளைஞர் ஓடுவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

ஏதோ தவறு செய்துவிட்டு, தப்பிப் பிழைப்பதற்காக அவர் தன்னை தயார்செய்து கொண்டிருக்கிறாரோ என்னவோ என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!

யாரிடமோ ஒருவரிடம் பேச்சு வாக்கில் சவால் விட்டுவிட்டு, அந்தச் சவாலை நிறைவேற்றுவதற்காக ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!

அவரைச்சுற்றிப் பலர் வியப்போடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அதனால், அவர்கள் மத்தியிலே, சுலபமாகப் புகழ்பெற்று பிரபலமாகி விடலாம் என்பதால், ஓடப்போகிறார் என்று கூட நினைக்கலாம்!

68 வயது ஆளுக்கு ஏன் இந்த ஓட்டவேலை? அதுவும் வேண்டாத வேலை என்றுதானே நினைக்கிறீர்கள்! ஓடுவது பொழுதுபோக்குக்காக என்பதுகூட அல்ல! அவர் ஓட இருப்பது தனது பிறந்த நாளுக்காக! ஆர்சரியமாக இல்லையா!

பிறந்தநாள் என்றால் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை சூடி, அறுசுவை விருந்து உண்டு, ஆனந்தமாகக் கொண்டாடி சுற்றத்தோடும் நண்பர்களோடும் பேசி மகிழ்ந்து, அந்த நாளை சினிமா, டிராமா, பீச், சுற்றுலா என்று கழிக்கின்ற நம்மவர்க்கு, பிறந்த நாள் அன்று ஒருவர் ஓடுகின்றார் என்றால் ஆச்சரியமாகக் தெரியவில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவோ நமக்குத் தோன்றுகிறது!

ஜாய்ராய் (Joie Ray) என்ற அந்த 68வயது இளைஞர், ஒரு மைல் துார ஓட்டத்தைத் தனது பிறந்த நாளன்று ஓடிக் காட்டுகிறார். தனது 20வது வயதில் ஒரு மைல் ஓட்டத்தைத் 4 நிமிடம் 12 வினாடிகளில் ஓடி முடித்து உலக சாதனையை நிகழ்த்திய வீரர் அவர். அதாவது, 4 நிமிடம் 20 வினாடிகளுக்குள் ஒரு மைல் ஓட்டத்தை முதன் முதலாக ஓடி முடித்த வீரர். அந்த சாதனையையும் 46 தடவைகளுக்குமேல் செய்துகாட்டியவர். மாபெரும் வீரர். 15 ஆண்டுகள் தொடர்ந்து ஓட்டப் பந்தயத்தில் வெற்றி கண்டவர். வெகுமதி பெற்றவர்.

தனது பிறந்த நாள் வரும்பொழுதெல்லாம் தனது பிறந்த நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட, ஒரு மைல் தூரம் ஓடி, தனது தேகத்தின் வலிமையைத் தானே சோதனை செய்து பார்த்துக்கொள்வதுடன், வலிமையாக உடலை வைத்திருக்க உதவும் ஆண்டவனுக்கும் நன்றி செலுத்துவதற்காகவும் கூட அவர் செய்தார்.

அவரது பிறந்தநாள் ஏப்ரல் 13ந் தேதி வரும். அன்று ஒரு மைல் துார ஓட்டம் நடக்கும். 20வது வயதில் 4 நிமிடம் 12 வினாடியில் ஓடினார் என்று நமக்குத் தெரியும். தனது 60ஆம் வயது பிறந்த நாளில் ஒரு மைல் துார ஓட்டத்தை 6 நிமிடங்களுக்குள் ஓடினார். தனது 68ஆம் வயது பிறந்த நாளன்று 6 நிமிடம் 18 வினாடிகளில் ஓடினார். 70 வயதிலும் ஓடினார்.

70 வயது இளைஞரின் இனிய சாதனையைப் பாருங்கள்.

ஆங்காரப் பொக்கிஷம், கோபக் களஞ்சியம், ஆணவ அரண்மனை, பொய் வைத்தக் கூடம், பொறாமைப் பெருமதில், காம விலாசம், கந்தல் கடிமனை, காற்றுத் துருத்தி, ஊற்றைச் சடலம், ஓட்டைத் துருத்தி, உடையும் புழுக்கூடு, ஊன் பொதிந்த காயம் என்று நமது உடம்பைப்பற்றி பட்டினத்தார்போன்ற சித்தர்கள் பாடிச்சென்றார்கள். அதுபோல் நாம் ஏன் நினைக்கவேண்டும்? வேறுவிதமாக நினைப்போமே! அழகாக, அருமையாக!

தெய்வம் வாழும் இல்லம் திறமை வளர்க்கும் தேன் நிலம், தென்றல் தவழும் சுந்தரப் பூங்கா, கேட்டதைத்தரும் கற்பகத் தரு, வளமை நிறைந்த வல்லாளர் பூமி,சொர்க்கத்தைக்காட்டும் சுந்தரத் தோழன் என்றெல்லாம் நாம் நினைக்கலாமே!

எந்த உயிர்க்கும் கிடைக்காத அரிய பிறவியாம் மனிதப் பிறவியைப் பெற்றிருக்கிறாேம் நாம். எந்தப் பிறவிக்கும் கிடைக்காத எழிலார்ந்த தேகத்தை மனித இனமாகிய நாம் பெற்றிருக்கிறாேம். அளப்பரிய ஆற்றலை, ஆண்மையை, அறிவினை, அற்புத சக்தியை நமக்கு ஆண்டவன் அளித்திருக்கிறான். தெளித்திருக்கிறான்.

‘வருடம் ஒன்று போனால் வயதொன்று போய் விட்டது. வாலிபம் வழி நடந்து சென்றுவிட்டது.

முதுமை முதுகேறி அமர்ந்துவிட்டது. வரும் நாளெல்லாம் முதுமை—கொடுமை' என்று நினைக்கின்ற நம் மனத்தை சற்று நகர்த்தி வைத்துவிட்டு அருமையான தேகத்தை அறிவுடன் காத்துக் கொண்டாலும், வயதாக ஆக, வலிமையோடுமட்டுமல்ல இளமையோடும் வாழமுடியும் என்றல்லவா வரலாற்றுக் குறிப்புக்கள் வழிகாட்டுகின்றன.

இங்கிலாந்தைச் சேர்ந்த பாஸ்டர் பவல் எனும் ஓட்டக்காரர், 50 மைல் தூரத்தை 7மணி நேரத்தில் ஓடினார் வாலிபத்தில். தனது 39ஆம் வயதில் 402 மைல் தூரத்தை 5 நாட்கள் 18மணி நேரத்தில் ஓடி முடித்தார். தனது 43ஆம் வயதில் 112 மைல் தூரத்தை 24 மணி நேரத்தில் ஓடிக்காட்டினார்.

தன்னுடைய 57ஆம் வயதில் மீண்டும் 402 மைல் தூரத்தை பந்தயம் கட்டிக்கொண்டு 6 நாட்களில் ஓடிக் காட்டினார்.தனது 60 ஆம் வயதில் 402 மைல் தூரத்தை முன்போலவே 5 நாட்கள் 15 1/4 மணி நேரத்தில் ஓடினார் என்று வரலாற்று நிகழ்ச்சியைப் படிக்கும் போது, மனிதனால் முடியும் என்றுதானே நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது.

'வலிமையாக, இளமையாக, இனிமையாக, வாழ் முடியும் என்பது உடலை ஒழுங்காகப் பாதுகாத்தால் பெறலாம்' என்ற ஓர் இனிய கருத்தைப் புத்தாண்டு நினைவாகக் கொள்வோம். வீணே உடலை வாட்டாமல், பொழுதைப் போக்காமல், பலப்பல நினைவுகளுடன் போராடமல், உடலைக் காப்போம், அறிவை வளர்ப்போம், மகிழ்வுடன் இருப்போம் என்று உறுதி எடுப்போம்.

இத்தகைய செம்மாந்த நினைவுகளை சிந்தித்தவாறு, தேகத்தைக் காக்கும் சீராளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.