விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/நடையும், நடைப்பழக்கம்
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பாள் ஒளவைப்பாட்டி, அதுபோலவே நடையும் நடைப்பழக்கம் என்று நாம் கூறலாம்.
வசதியுள்ளவர்கள் உடலை அடிமையாக்கி ஏவல்விட்டுக் கொண்டிருப்பார்கள். நோய்க்கு அவர்கள் அடிமையாகி அவதிப்படும் பொழுது, மருத்துவர்கள் கொஞ்சமாவது நடந்தால்தான் உடல் தேறும் என்று அபாய அறிவிப்புக் கொடுத்தவுடன், அவர்கள் காலையும் மாலையும் கடலோரப் பகுதிகளில் அவதிப்பட்டுக்கொண்டு நடப்பதைப் பார்த்தால், நமக்கு சிரிக்கத்தான் தோன்றும்.
நடக்கக் காசு கேட்பவர்களுக்கு நலம் எப்படிவரும்! இயற்கையாக வாழ்ந்து உடலை உழைப்புக்கு உட்படுத்தி வாழ்பவர்களே நோயற்ற வாழ்வு வாழ முடியும். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் கூட தினமும் காலாற ஒருமைல் தூரமாவது நடந்து சென்ற பிறகுதான், தனது ஆராய்ச்சிச் சாலைக்குள் நுழைவாராம்.
நடை எவ்வளவு நலன்களை நல்குகிறது தெரியுமா? இங்கே பாருங்கள். ஒரு 92 வயது இளைஞரை! இந்த வயதில் எந்த மூலையில் படுக்கலாம். எப்படி இருமலாம் என்று கூனிக் கிடக்கின்ற நிலைமையல்லவா இருக்கும்!
இந்த 92 வயது இளைஞர், ஜார்ஜ் காவோ என்பது அவர் பெயர். ஒரு உலக சாதனை செய்து வைத்திருக்கிறார். அதாவது அவர் 504 மைல் தூரத்தை நடந்து ஒரு நீண்ட பயணம் செய்திருக்கிறார், இந்த நீண்டதுரத்தை அவர் நடந்து முடிக்க எடுத்துக் கொண்ட நாட்கள் 60.
43 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
60 நாட்கள் நடந்து 504 மைல் தூரத்தை முடித்து ஒரு உலகசாதனை செய்த அவருக்கு உடல் நலம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்க வேண்டும்! நமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்ற வேண்டாமா!
அற்ப ஆசைகளுக்கு அடிமையாகி, அரட்டைக்கும், குறட்டைக்கும், அசட்டைக்கும் ஆளாகி, வீணாக வாலிப சக்தியை வீண்செய்கின்ற இளைஞர்கள், உலகப் புகழ்பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், அவர்கள் வாழ்வு எவ்வளவு ஒளிமயமாகத் துலங்கும் தெரியுமா! தன்னை அறிந்தவன் தலைவன்! எவ்வளவு உண்மை பார்த்தீர்களா!