விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/லட்சியம் தோற்பதில்லை

விக்கிமூலம் இலிருந்து

13. லட்சியம் தோற்பதில்லை!

இங்கிலாந்து நாட்டிலே ஒரு கிரிக்கெட் ஆட்டக் காரர். வேகமும் விறுவிறுப்பும், மதியூகமும் மட்டற்ற ஆர்வமும் நிறைந்த ஆட்டக்காரர். ட.செஸ்டர் (Chester) என்பது அவர் பெயர்.

சிறப்பாக அவர் ஆடிக்கொண்டுவந்த திறமையைக் கண்டு, அவரது மாநிலத்தின் பிரதிநிதியாக ஆடுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். 1912ம் ஆண்டு அது. ஒர்செஸ்டர்ஷயர் எனும் குழுவில் ஒரு ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரபலமாக விளையாடிக் கொண்டிருந்தார் செஸ்டர்.

இந்த மாநில அளவு பிரதிநிதியாக விளையாடும் ஆட்டத்தோடு அவரது ஆசையும் லட்சியமும் நின்றுவிடவில்லை. இன்னும் அதிகத்திறமையை வளர்த்துக் கொண்டு, இங்கிலாந்து நாட்டின் சார்பாக ஆடக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஓர் இனிய லட்சியத்துடன் விளையாடிவரும் நாட்களிலேதான், எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று அவர் வாழ்க்கையிலே நடைபெற்றது.

இராணுவ வீரராகப் பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். அப்பொழுது மத்தியகிழக்குப் பகுதியிலே போர் ஏற்பட்டதால், போர்க்களத்திலே பணியாற்றவும் செஸ்டர் போகவேண்டியிருந்தது. போர்க்களத்திலே போரிடும் பொழுது, செஸ்டரின் லட்சியமே புதையுண்டுபோகும் வகையிலே, மீண்டும் ஒரு பயங்கரசோதனைபோன்ற நிகழ்ச்சி நடந்துவிட்டது.

ஆமாம். செஸ்டரின் வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை இழக்கவேண்டிய கொடுமையான நிலைமைக்கு ஆளானார். வலது கையில் பாதி போனபிறகு, எப்படி கிரிக்கெட் விளையாடமுடியும்? கிரிக்கெட்ஆட்டத்தில் சிறந்த புகழ்பெற்றுத் திகழவேண்டும் என்ற லட்சியம் மட்டும் பாழாகவில்லையே! கிரிக்கெட்டே ஆடமுடியாது என்ற அவல நிலையல்லவா ஏற்பட்டு விட்டது!

வெற்றிவாகை சூடித்தரவேண்டிய வலதுகை போனதால், செஸ்டர் வாடி வருந்தி, வேதனையில் படுத்துவிடவில்லை. ``என்னுடைய பெயர் கிரிக்கெட் ஆட்டத்தில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதுதானே எனது இலட்சியம். விளையாடித்தான் புகழ்பெற வேண்டுமா என்ன? வேறு வழியிலும் புகழ்பெற முடியுமே” என்று வருந்திய அவரது உற்றார்க்கும் உறவினர்க்கும், நண்பர்களுக்கும்,நல்ல மனதுடன் ஆறுதல் சொல்ல வந்தவர்களுக்கும் செஸ்டர் பதில் கூறினார். பதட்டம் நீக்கினார்.

சொல்லிச் சொல்லி சுகம் கண்டு சோம்பித் திரியும் கூட்டத்தில் ஒருவராக செஸ்டர் விளங்கவில்லை. எல்லோரும் வாழ்த்தி வரவேற்கும்படியான நிலைமையில் பெயர்பெற்றுத் நிகழ்ந்தார்! எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா உங்களுக்கு!

1912ம் ஆண்டிலே அவர் கையிழந்தவராக ஆனார். அதன்பின், பத்தாண்டுகள் கிரிக்கெட் விதிகளையும். முறைகளையும், தவறு நேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் கசடறக் கற்றார். ஆட்டத்தை பிழையற நடத்திக் கொடுக்கும் நடுவராகத் தேர்வு பெற்றார். ஆமாம்! ஆட்டக்காரரைவிட மிகவும் பொறுப்பு வாய்ந்த இடத்திலல்லவா இடம் பிடித்துக்கொண்டார்.

1922ம் ஆண்டு அவர் கிரிக்கெட் நடுவராகத் தன் பயியைத் தொடங்கினார். ஏறத்தாழ 1000 முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக விளங்கினார். 48 டெஸ்ட் மேட்சுகளுக்கும் நடுவராகப் பணியாற்றினார்.

இவ்வாறு 30 ஆண்டுகள் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றி, கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத்திலும் 'சிறந்த நடுவர். மரியாதைக்குரிய நடுவர், திறமையான நடுவர் 'என்ற புகழுடன்1955ம் ஆண்டு, நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

புகழ்பெற்ற நடுவராகப் பேறுபெற்ற செஸ்டர், கிரிக்கெட் ஆட்டத்துடன் இணைக்கப்பெற்ற புகழாளராகவே இன்றும் விளங்குகிறார் உள்ளத்தில் உறுதியும் உண்மையான உழைப்பும் இருந்தால், இலட்சியம் என்றும் தோற்பதில்லை என்ற சொல்லுக்கு சான்றாகத் திகழும் செஸ்டரை, நாமும் பாராட்டுவோம்.