விவேகசிந்தாமணி 41-60
Appearance
விவேகசிந்தாமணி
[தொகு]பாடல்: 41 (கொண்டநற்)
[தொகு]- கொண்டநற் கனவுக ளோடு குணமிலாக் கோதை மாரைக் ??
- கண்டுவிண் டிருப்ப தல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது
- உண்டென மதுவை யுண்ண வோவியப் பூவில் வீழ்ந்த
- வண்டினம் பட்ட பாடு வருந்திடப் படுவர் தானே.
பாடல்: 42 (மயில்குயில்)
[தொகு]- மயில்குயில் செங்கா லன்னம் வண்டுகண் ணாடி பன்றி
- அயிலெயிற் றரவு திங்க ளாதவ னாழி கொக்கோடு
- உயர்விண் கமலம் பன்மூன் றுறுகுண முடையோர் தம்மை
- யியலுறு புவியோர் போற்று மீசனென் றெண்ண லாமே.
பாடல்: 43 (தெருளிலாக்)
[தொகு]- தெருளிலாக் கலைஞர்தம் தேர்விலாத் தன்மையும்
- பொருளிலிலா வறிஞர்தம் பொறியெலா மடக்கமும்
- அருளிலா வறிஞர்தம் அசைவிலா மௌனமும்
- கருவிலா மங்கையின் கற்பொ டொக்குமே.
பாடல்: 44 (சந்திரனில்லா)
[தொகு]- சந்திர னில்லா வானம் தாமரை யில்லாப் பொய்கை
- மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
- பண்டித ரில்லாச் சங்கம் பாலக ரில்லா வாழ்வு
- தந்திக ளில்லா வீணை தனமிலா மங்கை போலாம்.
பாடல்: 45 (குரைகடல்)
[தொகு]- குரைகடல் வறுமையும் குறத்தி உண்மையும்
- நரையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
- விரைசெறி குழலிவேசி ஒருவனை யெண்ணலும்
- அரைசரின் அன்பறா வாக்கமு மரியதே.
பாடல்: 46 (பொருளில்லார்க்)
[தொகு]- பொருளில்லார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்றும்
- மருவிய கீர்த்தி யில்லை மைந்தரின் பெருமை யில்லை
- கருதிய கரும மில்லை கதிபெறு வழியு மில்லை
- பெருநிலந் தனில்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.
பாடல்: 47 (தூம்பினில்)
[தொகு]- தூம்பினில் புதைந்த கல்லும் துகளின்றிச் சுடர்கொ டாது
- பாம்புக்குப் பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
- வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வீணதாம் கசப்பு மாறா
- ஆம்பல நூல்கற் றாலு மற்பர்தான் மேலோ ராகார்.
பாடல்: 48 (தேளதுதீயில்)
[தொகு]- தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடா தெடுத்த பேரை
- மீளவே கொடுக்கி னாலே மீண்டுமே கொட்டல் போலே
- ஏளனம் பேசித் தீங்கை யென்றுமே செய்து வாட்டும்
- கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.
பாடல்: 49 (அறிவுளோர்)
[தொகு]- அறிவுளோர் தம்மை நாளு மரசருந் தொழுது வாழ்வார்
- நிறையொடு புவியி லுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்
- நெறியுளோ ரவர்க்கி யாதோர் நலிவுதான் வருமே யாகில்
- சிறியரென் றிகழ மாட்டார் குறுமதி யற்றோர் தானே.
பாடல்: 50 (குருவுபதேச)
[தொகு]- குருவுப தேச மாதர் கூடிய வின்பந் தன்பால்
- மருவிய நியாயங் கல்வி வயது தான்செய்த தர்மம்
- அரிய மந்திர விசார மாண்மை யிவைக ளெல்லாம்
- ஒருவருந் தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே.
பாடல்: 51 (இடுக்குற)
[தொகு]- இடுக்குற வறுமை யாகி யேற்பவர்க் கிசைந்த செல்வங்
- கொடுப்பதே மிகவு நன்று குற்றமே யின்றி வாழ்வார்
- தடுத்ததை விலக்கி னோர்க்குத் தக்கநோய் பிணிக ளாகி
- உடுக்கவே உடையு மின்றி யுண்ணவு மருமை யாமே.
பாடல்: 52 (மெய்யதைச்)
[தொகு]- மெய்யதைச் சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை
- வையக மதனைக் கொள்ளும் வானுளத் தேவ ராவார்
- பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
- நொய்யவ ரிவர்க ளென்று நோக்கிடா ரறிவுள்ளோரே.
பாடல்: 53 (தந்தையுரை)
[தொகு]- தந்தையுரை தட்டினவன் தாயுரை யிகழ்ந்தவன்
- அந்தமுறு தேசிகர்தம் மாணையை மறந்தவன்
- சந்தமுறு வேதநெறி தாண்டின இந்நால்வர்
- செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்யாமே.
பாடல்: 54 (நாரிகள்வழக்கா)
[தொகு]- நாரிகள் வழக்கா னாலும் நடுவறிந் துரைப்பார் சுத்தர்
- ஏரிபோல் பெருகி மண்மே லிருகண்ணும் விளங்கி வாழ்வார்
- ஓரமே சொல்வா ராகி லோங்கிய கிளையு மாண்டு
- தீரவே கண்ணி ரண்டுந் தெரியாது போவர் தாமே.
பாடல்: 55(ஏரிநீர்நிறைந்த)
[தொகு]- ஏரிநீர் நிறைந்த போதிருந் திட்ட பட்சி யெல்லாம்
- மாரிநீர் வறண்ட போது மற்றவை யிருப்ப துண்டோ
- பாரினை யாளும் வேந்தன் பரிவுற மறந்தா னானால்
- யாருமே நிலையில் லாம லவரவ ரேகு வாரே.
பாடல்: 56 (மண்ணார்சட்டி)
[தொகு]- மண்ணார் சட்டி கரத்தேந்தி மரநாய் கௌவும் காலினராய்
- அண்ணாந் தேகி யிரப்பாரை யறிந்தோ மறிந்தோ மம்மம்மா
- பண்ணார் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்தூட்ட
- உண்ணா நின்றபோ தொருவா யுதவா மாந்த ரிவர்தாமே.
பாடல்: 57 (மண்ணுள்மாந்தர்)
[தொகு]- மண்ணுள் மாந்தர் பாவம் மன்னரைச் சென்று சேருந்
- திண்டிரள் மன்னர் பாவத் தீங்குமந் திரியைச் சேருந்
- தொண்டர்கள் செய்த பாவந் தொடர்ந்துதம் குருவைச் சேருங்
- கண்டன மொழியாள் பாவங் கணவர்க்குச் சேருந் தானே.
பாடல்: 58 (நற்குணமுள்ள)
[தொகு]- நற்குண முள்ள வேந்தை நயந்து சேவித்த லொன்று
- பொற்புடை மகளி ரோடு பொருந்தி யேவாழ்த லொன்று
- பற்பல ரோடு நன்னூல் பகர்ந்து வாசித்த லொன்று
- சொற்பெறு மிவைகள் மூன்று மிம்மையிற் சொர்க்க மாமே.
பாடல்: 59 (நிட்டையிலே)
[தொகு]- நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் றாளைக்
- கிட்டையிலே யடுத்துமுத்தி பெறுமளவும் பெரியசுகங் கிடைக்கும் காம
- வெட்டையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
- கட்டையிலே தொடுத்துசுடு காட்டினிலே கிடத்துமட்டுங் கவலை தானே.
பாடல்: 60 (ஆவீனமழை)
[தொகு]- ஆவீன மழைபொழிய வில்லம் வீழ வகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
- மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
- கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
- பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே.
- விவேகசிந்தாமணி01-20
- விவேகசிந்தாமணி 21-40
- விவேகசிந்தாமணி 81-100
- விவேகசிந்தாமணி
- விவேகசிந்தாமணி
- [[]] [[]] [[]] [[]]