உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக சிந்தாமணி (மூலம்)

விக்கிமூலம் இலிருந்து
விவேக சிந்தாமணி
83221விவேக சிந்தாமணி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

விவேக சிந்தாமணி

பாடல்கள்

நூல்
விவேக சிந்தாமணி
மூலமும் உரையும்

ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம்
159, போர்ச்சுகீஸ் சர்ச் சாலை
(ஸ்டான்லி மருத்துவ மனை அருகில்)
சென்னை 600 001

பதிப்பு ஆண்டு குறிப்பிடப்படவில்லை

கடவுள் வாழ்த்து.

(சில பிரதிகளில் மட்டும் காணப்படுகிறது.)

(Source: Project Madurai)

அல்லல்போம்; அருவினைபோம்; அன்னைவயிற் றில்பிறந்த தொல்லைபோம்; போகாத் துயரம்போம்; - நல்ல குணமதிக மாம்;அருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின்சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தா லுலகனார்பண் டிதரைத் தேடார் (3)

குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணஞ் செய்தாலும் தான்
அக்குலம் வேற தாமோ வதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்க லல்லாற் குலந்தனில் பெரியதாமோ. (4)

ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழி ட்டாலு முண்பதே யமிர்த மாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவ ராயின்
கப்பிய பசியி னோடு கடும்பசி யாகுந் தானே.. (5)

கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலங் கண்டு சென்று
கொதிதிரைக் கடலிற் பெய்யும் கொள்கைபோல் குவல யத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலையிலார்க் கீய மாட்டார். (6)

ஆலிலை பூவுங் காயு மணிதரு பழமு முண்டேல்
சாலவே பட்சி யெல்லாந் தன்குடி யென்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திருப்பர் கோடா கோடி
ஆலிலை யாதி போனா லங்குவந் திருப்பா ருண்டோ?(7)

பொருட்பாலை விரும்புவார் காமப்பா லிடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
யருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன் றில்லார்
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடிசெம்பொன் சேவித் தீவார். (7அ)

தண்டா மரையி னுடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டுகம்
வண்டோ கானத் திடையிருந்து வந்து கமல மதுவுண்ணும்
பண்டே பழகி யிருந்தாலு மறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்தங் குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே. (8)

வானரம் மழைதனில் நனைய தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமுங் கல்வியு நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடி லிடற தாகுமே.(9)

வண்டுமொய்த் தனைய கூந்தல் மதனபண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள் கிளிமொழி வாயி னூறல்
கண்டுசர்க் கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர்மா முனிவர்க் கெல்லாம் அமுதமென் றளிக்க லாமோ. (10)

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுத முண்ணும்
விற்பன விவேக முள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னி லென்றும் இலவுகாத் திடுங்கி ளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வ தரிதரி தாகு மம்மா. (11)

ஆல கால விஷத்தையும் நம்பலா மாற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
கால னார்விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாஞ்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே. (12)

சங்குவெண் டாம ரைக்குத் தந்தையா யிரவி தண்ணீர்
அங்கதைக் கொய்து விட்டா லழுகச்செய் தந்நீர் கொல்லும்
துங்கவெண் கரையிற் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டா லிப்படித் தயங்கு வாரே. (13)

நாய்வாலை யளவெடுத்து பெருக்கித் தீட்டின் நற்றமிழை யெழுதவெழுத் தாணி யாமோ
பேய்வாழுஞ் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரியவிளக் கேற்றிவைத்தால் வீட தாமோ
தாய்வார்த்தை கேளாத சகசண் டிக்கென் சாற்றிடினு முலுத்தகுணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈயவொட்டா னிவனு மீயா னெழுபிறப்பி னுங்கடையாம் யிவன்பி றப்பே. (14)

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல்விழுந் தழுவாள் பொய்யே
தம்பலந் தின்பாள் பொய்யே சாகிறே னென்பாள் பொய்யே
அம்பிலுங் கொடிய கண்ணா ளாயிரஞ் சிந்தை யாளை
நம்பின பேர்க ளெல்லாம் நாயினுங் கடையா வாரே. (15)

கெற்பத்தால் மங்கையர்க் கழகு குன்றும் கேள்வியில்லா வரசனா லுலகம் பாழாம்
துற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ் சொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தா லற்பர் கேளார் நன்மைசெய்யத் தீமையுட நயந்து செய்வார்
அற்பரோ டிணங்கிவிடிற் பெருமை தாழு மரியதவங் கோபத்தா லழிந்து போமே. (16)

தன்னுடன் பிறவா தம்பி தனைபெறாத் தாயார் தந்தை
அன்னிய ரிடத்துச் செல்வ மரும்பொருள் வேசி யாசை
மன்னிய வேட்டின் கல்வி மறுமனை யாட்டி வாழ்க்கை
இன்னவாங் கரும மெட்டு மிருக்கத்துக் குதவா தன்றே. (17)

ஒருநான்கு மீரரையு மொன்றே கேளா யுண்மையா யையரையு மரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே யொன்றுஞ் சொல்லா யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினியென் சகியே மானே. (18)

தேனுகர் வண்டு மதுதனை யுண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்பு வின்கனி யென்று தடங்கையி லெடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான் புதுமையோ விதுமெனப் புகன்றாள். (19)

கருதியநூல் கல்லாதான் மூட னாகும் கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்
ஒருதொழிலு மில்லாதான் முகடி யாகும் ஒன்றுக்கு முதவாதான் சோம்ப னாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும் பேசாம லிருப்பவனே பேய னாகும்
பரிவுசொலித் தழுவினவன் பசப்ப னாகும் பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே. (20)

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கைபோல் வீரங் குன்றும் விருந்தினர்க் காண நாணும்
பூங்கொடி மனையாட் கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றி யுலகமெல்லாம் பழிக்குந் தானே. (21)

அரும்பு கோணிடி லதுமணங் குன்றுமோ
கரும்பு கோணிடிற் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வோம். (22)

அன்னையே யனைய தோழி யறந்தனை வளர்க்கும் மாதே
உன்னையோ ருண்மை கேட்பே னுரைதெளிந் துரைத்தல் வேண்டும்
என்னையே வுணரு வோர்க ளெனக்குமோ ரின்பம் நல்கி
பொன்னையுங் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வ தேனோ. (23)

பொம்மெனப் பணைத்து விம்மி போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையி னாளே கூறுவே னொன்று கேண்மோ
செம்மையி லறஞ்செய் யாதார் திரவியஞ் சிதற வேண்டி
உம்மையுங் கள்ளுஞ் சூதும் நான்முகன் படைத்த வாறே. (24)

பொன்னொடு மணியுண் டானால் புலைஞனும் கிளைஞ னென்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமுஞ் செய்வர்
மன்னரா யிருந்த பேர்கள் வகைகெட்டுப் போவா ராகில்
பின்னையு மாரோ வென்று பேசுவா ரேசு வாரே. (25)

வேத மோதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே. (26)

அரிசி விற்றிடு மந்தணர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே. (27)

திருப்பதி மிதியாப் பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக் கைக ளினியசொற் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென் காட்டி லெரிப்பினு மில்லை தானே. (28)

தன்னுட லினுக்கொன் றிருந்தால் தக்கதோர் பலமதாகும்
மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யிலே வியாதி யாகும்
மன்னிய வுறவுக் கீந்தால் வருவது மயக்க மாகும்
அன்னிய பரந்துக் கீந்தா லாருயிர்க் குதவி யாமே. (29)

படியினப்பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்

பழிநமக்கென வழிமறித்திடும் பழைய நீலியை நம்பலாம்

கொடுமதக்குவ டெனவளர்ந்திடு குஞ்சரத்தையு நம்பலாம்

குலுங்கபேசி நகைத்திடுஞ்சிறு குமரர் தம்மையும் நம்பலாம்

கடையிலக்கமு மெழுதிவிட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம்

காக்கைப்போல்விழி பார்த்திடுங்குடி காணியாளரை நம்பலாம்

நடைகுலுக்கியும் முகமினுக்கியு நகைநகைத் திடும் மாதரை

நம்பொணாதுமெய் நம்பொணாதுமெய் நம்பொணாதுமெய் காணுமே. (30)

வண்டுக ளிருந்திடின் மதுவை யுண்டிடும்
தண்டமி ழிருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி யிருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுக ளிருந்திடின் பெரிய சண்டையே. (31)

கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கை யின்றோல் வீரன்கை வெய்ய கூர்வாள்
அற்பர்தம் பொருள்க டாமு மவரவ ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே. (32)

வீணர்பூண் டாலுந் தங்கம் வெறும்பொய்யாம் மேற்பூச் சென்பார்
பூணுவார் தராப்பூண் டாலும் பொருந்திய தங்க மென்பார்
காணவே பனைக்கீ ழாய்ப்பாற் குடிப்பினும் கள்ளே யென்பார்
மாணுல கத்தோர் புல்லர் வழங்குரை மெய்யென் பாரே. (33)

ஓரியே மீனுவந் தூணி ழந்தையோ
நாரியே கண்பிழை நாட்டி லில்லையோ
பாரியே கணவனைப் பழுது செய்துநீ
நீரிலே யிருப்பது நிலைமை யல்லவே. (34)

சம்புவே யென்ன புத்தி சலத்தினில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்ப தேனோ
அம்புவி மாதே கேளா யரசனை யகல விட்டு
வம்பனைக் கைப்பி டித்த வாறுபோ லாயிற் றன்றே. (35)

மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா வரசன் வீரங்
காப்பிலா விளைந்த பூமி கரையிலா திருந்த வேரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருவிலான் கொண்ட ஞானம்
ஆப்பிலாச் சகடு போலே யழியுமென் றுரைக்க லாமே. (36)

பொன்னின்மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னுமணி மேகலைகள் மெல்லென வொலிப்பச்
சின்னமலர் கொண்டுசில சேடியர்கள் சூழ
அன்னமென வல்லவென வாவெனவு ரைத்தார். (37)

கானலை நீரென் றெண்ணிக் காடுவெளி திரியு மான்போல்
வானுறு மிலவு காத்த மதியிலாக் கிள்ளை யேபோல்
தேனினை யுண்டு தும்பி தியங்கிய தகைமை யேபோல்
நானுனை யரசனென் றெண்ணி நாளையும் போக்கி னேனே. (38)

சங்கு முழங்கும் தமிழ்நாடன் றன்னை நினைத்த போதெல்லாம்
பொங்கு கடலு முறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்க ளுறங்கும் புள்ளுறங்குந் தென்ற லுறங்கும் சிலகாலம்
எங்கு முறங்கு மிராக்கால மென்கண் ணிரண்டு முறங்காதே. (39)

அரவினை யாட்டு வாரு மருங்களி றூட்டு வாரும்
இரவினிற் றனிப்போ வாரு மேரிநீர் நீந்து வாரும்
விரைசெறி குழலி யான வேசையை விரும்பு வாரும்
அரசனைப் பகைத்திட் டாரு மாருயி ரிழப்பர் தாமே. (40)

வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்த தானாற் றளர்வரோ தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ. (41)

பருப்ப தங்கள்போ னிறைந்திடு நவமணிப் பதங்களைக் கொடுத்தாலும்
விருப்ப நீங்கிய கணவரைத் தழுவுதல் வீணதாம் விரையார்த்த
குருக்கு சந்தனக் குழம்பினை யன்பொடு குளிர்தர வணிந்தாலும்
செருக்கு மிஞ்சிய வற்பர்தம் தோழமை செப்பவு மாகாதே. (42)

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில்
உருத்தெரி யாமலே வொளிம ழுங்கிடும்
மருந்துள தோவெனில் வாக டத்திலை
தரித்திர மென்னுமோர் மருந்திற் றீருமே. (43)

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கை தானும்
பித்தர்தம் மனமும் நீரிற் பிறந்தமீன் பாதம் தானும்
அத்தன்மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலுஞ்
சித்திர விழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லை கண்டீர். (44)

சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை யிகழ்வார்
நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொல்கேட்டு {புல்லர்
வல்லியம் பசுவுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம். (45)

கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயிற் குழவிகள் வையினும்
மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமு றச்செவிக் கின்பம் விளையுமே. (46)

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தே தீரும்
மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றிற் சாயல் காட்டிய வுவமை போலே, (47)

மானமுள் ளோர்க டங்கள் மயிரறி னுயிர்வா ழாத
கானுறு கவரி மான்போற் கனம்பெறு புகழே பூண்பார்
மானமொன் றில்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்க ளாகி
ஈனமாங் கழுதைக் கொப்பா யிருப்பரென் றுரைக்க லாமே. (48)

கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை
தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்
பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர்கொண் டாடிய முறைபோல். (49)

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்
ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார். (50)

செல்வம்வந் துற்ற போது தெய்வமுஞ் சிறிது பேணார்
சொல்வதை யறிந்து சொல்லார் சுற்றமுந் துணையும் பேணார்
வெல்வதே கரும மல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார்
வல்வினை விளையும் பாரார் மண்ணின் மேல் வாழு மாந்தர். (51)

யானையைச் சலந்தனி லிழுத்த வக்கரா
பூனையைக் கரைதனிற் பிடிக்கப் போகுமோ
தானையுந் தலைவரும் தலம்விட் டேகினால்
சேனையுஞ் செல்வமுந் தியங்கு வார்களே. (52)

கொண்டநற் கலைக ளோடுங் குணமிலாக் கோதை மாரை
கண்டுவிண் டிருப்ப தல்லாற் கனவிலும் புல்ல வொண்ணா
துண்டென மதுவை யுண்ண வோவியப் பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே. (53)

மயில்குயில் செங்கா லன்னம் வண்டுகண் ணாடி பன்றி
அயிலெயிற் றரவு திங்க ளாதவ ணாழி கொக்கோ
டுயரும்விண் கமலப் பன்முன் றுறுகுண முடையோ நன்மை
இயலுறு புவியோர் போற்று மீசனென் றெண்ண லாமே. (54)

தெருளிலாக் கலையினாற் செருக்கு மாண்மையும்
பொருளிலா வறிஞர்தம் பொறிய டக்கமும்
அருளிலா வறிஞர்தம் மௌன நாசமும்
கருவிலா மங்கையர் கற்பு மொக்குமாம். (55)

மங்கு லம்பதி னாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும்
தங்கு மாதவன் நூறாயிரம் யோசனை தாமரை முகம்விள்ளும்
திங்க ளாதவற் கிரட்டியோ சனைபுறச் சிறந்திடு மரக்காம்பல்
எங்க ணாயினு மன்பரா யிருப்பவ ரிதயம்விட் டகலாரே. (56)

சந்திர னில்லா வானந் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
சுந்தரப் புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் லாவாழ்வு
தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம். (57)

குறைகடல் வறுமையுங் குறத்தி யுண்மையும்
நரையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
விரைசெறி குழலினாள் வேசி யாசையும்
அரையரன் பமைவது மைந்து மில்லையே. (58)

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்
தடவரை முலைமா தேயித் தரணியி லுள்ளோர்க் கெல்லாம்
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய். (59)

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்று
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை
கருதிய கரும மில்லை கதிபெற வழியு மில்லை
பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே. (60)

தூம்பினிற் புதைத்த கல்லும் துகளின்றிச் சுடர்கொ டாது
பாம்புக்குப் பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல்கற் றாலுந் துர்ச்சனர் தக்கோ ராகார். (61)

கல்லாத மாந்தரையும் கடுங்கோபத் துரைகளையும் சாலந் தேர்ந்து
சொல்லாத வமைச்சரையுந் துயர்க்குதவாத் தேவரையும் சுருதி நூலில்
வல்லாவந் தணர்தமையுங் கொண்டவனோ டெந்நாளும் வலது பேசி
நல்லார்போ லருகிருக்கும் மனைவியையு மொருநாளும் நம்பொ ணாதே. (62)

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடா தெடுத்த பேரை
மீளவே கொடுக்கி னாலே வெய்துறக் கொட்ட லேபோல்
ஏளனம் பேசித் தீங்குற் றிருப்பதை யெதிர்கண் டாலும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே. (63)

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியி லுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்
அறிவுளோர் தமக்கு யாதோ ரசடது வருமே யாகில்
வெறியரென் றிகழா ரென்றும் மேதினி யுள்ளோர் தாமே. (64)

குருவுப தேச மாதர் கூடிய வின்பந் தன்பால்
மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தர்மம்
அரியமந் திரம்வி சார மாண்மையிங் கிவைக ளெல்லாம்
ஒருவருந் தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே. (65)

இடுக்கினால் வறுமை யாகி யேற்றவர்க் கிசைந்த செல்வங்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே யின்றி வாழ்வார்
தடுத்ததை விலக்கி னோர்க்குத் தக்கநோய் பிணிக ளாகி
உடுக்கவே யுடையு மின்றி யுண்சோறும் வெல்ல மாமே. (66)

மெய்யதைச் சொல்வ ராகில் விளங்கிடு மேலும் நன்மை
வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவ ராவார்
பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடா ரறிவுள் ளாரே. (67)

தந்தையுரை தட்டினவன் றாயுரை யிகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர்த மாணையை மறந்தோன்
சந்தமுறு வேதநெறி தாண்டினவிந் நால்வர்
செந்தழலின் வாயிடை சேர்வதுமெய் கண்டீர். (68)

நாரிகள் வழக்க தாயி னடுவறிந் துரைப்பார் சுத்தர்
ஏரிபோல் பெருகி மண்மே லிருகணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வா ராகி லோங்கிய கிளையு மாண்டு
தீரவே கண்ணி ரண்டும் தெரியாது போவார் தாமே. (69)

துப்புறச் சிவந்த வாயா டூயபஞ் சணையின் மீதே
ஒப்புறக் கணவ னோடே யோர்லீலை செய்யும் போது
கற்பகஞ் சேர்ந்த மார்பில் கனதன மிரண்டுந் தைத்தே
அப்புற முருவிற் றென்றே யங்கையாற் றடவிப் பார்த்தாள். (70)

ஏரிநீர் நிறைந்த போதங் கிருந்தன பட்சி யெல்லாம்
மாரிநீர் மறுத்த போதப் பறவையங் கிருப்ப துண்டோ
பாரினை யாளும் வேந்தன் பட்சமு மறந்த போதே
யாருமே நிலையில் லாம லவரவ ரேகு வாரே. (71)

மண்ணார் சட்டி கரத்தேந்தி மரநாய் கௌவுங் காலினராய்
அண்ணார்ந் தேங்கி யிருப்பாரை யறிந்தோ மறிந்தோ மம்மம்மா
பண்ணார் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்தூட்ட
உண்ணா நின்ற போதொருவர்க் குதவா மாந்த ரிவர்தாமே.. (72)

மண்டலத் தோர்கள் செய்த பாவமன் னவரைச் சேருந்
திண்டிரள் மன்னர் செய்த தீங்குமந் திரியைச் சேருந்
தொண்டர்கள் செய்த தோஷந் தொடர்ந்துதங் குருவைச் சேருங்
கண்டன மொழியாள் செய்த கள்ளமுங் கணவர்க் காமே. (73)

நற்குண முடைய வேந்தை நயந்துசே வித்த லொன்று
பொற்புடை மகளி ரோடு பொருந்தியே வாழ்த லொன்று
பற்பல ரோடு நன்னூல் பகர்ந்துவா சித்த லொன்று
சொற்பெறு மிவைகள் மூன்று மிம்மையிற் சொர்க்கந் தாமே. (74)

நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் றாளைக்
கிட்டையிலே தொடுத்துமுத்தி பெருமளவும் பெரியசுகம் கிடைக்குங் காம
வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்துநடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே. (75)

அன்னம் பழித்தநடை யாலம் பழித்தவிழி யமுதம் பழித்த மொழிகள்
பென்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல் சின்னஞ் சிறுத்த விடைபெண்
என்னஞ் சுறுக்கவடன் நெஞ்சு கற்றகலை யென்னென் றுரைப்ப தினிநான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங் கமிட்டபடி தெய்வங் களுக்க பயமே. (76)

ஆவீன மழைபொழிய வில்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ வடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே. (77)

தாய்பகை பிறர்நட் பாகில் தந்தைகடன் காரனாகில்
மாய்பகை மனைவி யாகும் மாவழ குற்ற போது
பேய்பகை பிள்ளை தானும் பெருமைநூல் கல்லா விட்டால்
சேய்பகை யொருவர்க் காகு மென்றனர் தெளிந்த நூலோர். (78)

நிலைதளர்ந் திட்ட போது நீணிலத் துறவு மில்லை
சலமிருந் தகன்ற போது தாமரைக் கருக்கன் கூற்றம்
பலவன மெரியும் போது பற்றுதீக் குறவாங் காற்று
மெலிவது விளக்கே யாகில் மீண்டுமக் காற்றே கூற்றாம். (79)

மடுத்தபா வாணர் தக்கோர் மறையவ ரிரப்போர்க் கெல்லாம்
கொடுத்துயார் வறுமை யுற்றார் கொடாதுவாழ்ந் தவரார் மண்மேல்
எடுத்துநா டுண்ட நீரு மெடாதகாட் டகத்து நீரு
மடுத்தகோ டையிலே வற்றி யல்லநிற் பெருகுந் தானே. (80)

உணங்கி யொருகால் முடமாகி யொருகண் ணின்றிச் செவியிழந்து
வணங்கு நெடுவா லறுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி
அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வா யோடு கழுத்தேந்திச்
சுணங்கன் முடுவல் பின்சென்றால் யாரைக் காமன் துயர்செய்யான். (81)

கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை யென்செயப் படைத்தாய்?
துன்மதி வணிகர் தங்களைப் படைத்துச் சோரரை யென்செயப் படைத்தாய்?
வன்மன வடுகர் தங்களைப் படைத்து வானர மென்செயப் படைத்தாய்?
நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தனையோ! (82)

உண்ணல்பூச் சூடனெஞ் சுவத்த லொப்பனை
பண்ணலெல் லாமவர் பார்க்கவே யன்றோ
அண்ணல்தம் பிரிவினை யறிந்துந் தோழிநீ
மண்ணவந் தனையிது மடமை யாகுமால். (83)

கோளரி யடர்ந்த காட்டிற் குறங்கில்வைத் தமுத மூட்டித்
தோளினிற் றூக்கி வைத்துச் சுமந்துபே றாவ ளர்ந்த
ஆளனைக் கிணற்றிற் றள்ளி யழகிலா முடவற் சேர்ந்தாள்
காளநேர்க் கண்ணி னாரைக் கனவிலும் நம்பொ ணாதே. (84)

சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப்
பாய்கொண்டா ரும்பணியும் பட்டீச்சு ரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாங் பெண்கொள்ள லாகாதே. (85)

நான மென்பது மணங்கமழ் பொருளது நாவிலுண் பதுவோசொல்
ஊனு ணங்குவோய் மடந்தைய ரணிவதே யுயர்முலைத் தலைக்கோட்டில்
ஆன தங்கது பூசினால் வீங்குவ தமையுமோ வெனக்கேட்க
கான வேட்டுவச் சேரிவிட் டகன்றனர் கடிகமழ் விலைவாணர். (86)

கொண்டு விண்படர் கருடன்வாய் கொடுவரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்டவன் தேரை
மண்டு தேரையின் வாயினி லகப்படு வண்டு
வண்டு தேனுக ரின்பமே மானிட ரின்பம். (87)

கற்பூரப் பாத்திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற்பேதை யருக்கறிவிங் கினிதாக வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராதங் கவர்குணமே மேலாக நடக்குந் தானே. (88)

தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரைமு கத்தரு கேந்தினாள்
கெண்டை கெண்டையெ னக்கரை யேறினாள்
கெண்டை காண்கிலள் நின்றுத யங்கினாள். (89)

மருவு சந்தனக் குழம்பொடு நறுஞ்சுவை நலம்பெற வணிந்தாலும்
சருவ சந்தேக மனமுள மாதரைத் தழுவலு மாகாதே
பருவ தங்கள்போற் பலபல நவமணிப் பைம்பொனை யீந்தாலும்
கெருவ மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலு மாகாதே. (90)

நிலைத்தலை நீரின் மூழ்கி நின்றவ டன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூவெனக் காவிவேக
முலைத்தலை யதனைக் கண்டு மும்மதக் கரிவந் துற்ற
தலைத்தலைச் சிங்க மென்றக் களிறுகண் டேகிற் றம்மா. (91)

கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளும்
இரிதலைப் புற்றில் நாக மின்றுணு மிரையீ தென்று
விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்ட பாடு நாளையே படுவர் தாமே. (92)

பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பதரி தென ப்புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின் மறை யருள்கீர்த்தி யாந்தலங்க ளன்பாய்ச் சென்று
நீதிவழு வாதவகை வழக்குரைத்து நல்லோரை நேசங் கொண்டு
காதவழி பேரில்லார் கழுதையெனப் பாரிலுள்ளோர் கருது வாரே. (93)

ஆரம் பூண்ட மணிமார்பா அயோத்திக் கரசே அண்ணாகேள்
ஈர மிருக்க மரமிருக்க இலைக ளுதிர்ந்த வாறேது
வாரங் கொண்டு வழக்குரைத்து மண்மே னின்று வலிபேசி
ஓரஞ் சொன்ன குடியதுபோ லுதிர்ந்து கிடக்குந் தம்பியரே. (94)

வல்லியந் தனைக்கண் டஞ்சி மரந்தனி லேறும் வேடன்
கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
நல்லவன் றனக்குச் செய்த நலமது மிக்க தாகும்
புல்லர்க டமக்குச் செய்தா லுயிர்தனைப் போக்கு வாரே. (95)

தன்மானங் குலமானந் தன்னைவந் தடைந்தவுயிர் தங்கண் மானம்
என்மான மாகிலென்ன வெல்லவரும் சரியெனவே யெண்ணும் போது
நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

தன்னைத்தான் புகழ்வோருந் தன்குலமே பெரிதெனவே தான்சொல்வோரும்
பொன்னைத்தான் தேடியறம் புரியாம லவைகாத்துப் பொன்றினோரும்
மின்னலைப்போல் மனையாளை வீட்டில்வைத்து வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு மறிவிலாக் கசடராமே. (97)

பெண்டுகள் சொல் கேட்கிற பேயரெனும் குணமுடிப் பேடிலோபர்
முண்டைகளுக கிணையில்லா முனைவீரர் புருடரென மொழியொணாதே
உண்டுலக முதிர்பாருள் கீர்த்தியற மின்னதென்ன உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக்கெடுப்பா ரழிவழக்கே செய்தவ ரறிவுதானே. (98)

பொல்லார்க்குக் கல்விவரில் கெருவமுண்டா மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க் கிம்மூன்றுகுண முண்டாகி லருளதிக ஞான முண்டாய்
எல்லார்க்கு முபகார ராயிருந்து பரகதியை யெய்து வாரே. (99)

உந்தியின் சுழியின் கீழ்சே ருரோமமாங் கரிய நாகஞ்
சந்திர னெனவே யெண்ணித் தையலாள் முகத்தை நோக்க
மந்திர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு
சிந்துரக் கயற்க ணோடிச் செவிதனக் குரைத்த தம்மா. (100)

மாகமா மேடை மீதில் மங்கைநின் றுலாவக் கண்டு
ஏகமா மதியென் றெண்ணி யிராகுவந் துற்ற போது
பாகுசேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகைமா மயிலென் றெண்ணித் தொடர்ந்தரா மீண்டதன்றே. (101)

சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தாற்
குலமென்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்த துண்டோ
புலவர்கள் சபையில்கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம். (102)

காரெனுங் குழல்க டப்பிக் கடுஞ்சிலை வாளி தப்பி
மேரென வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பித்
தாருறு கரிய ரோமச் சங்கிலி வழியே சென்று
சீரிய னெனவ ளர்ந்த செல்வனல் குலிற்கை வைத்தான். (103)

உண்டதை யொழிக்கும்வாச லுவரி நீரொழித்து மேலே
வண்டலு மழுக்குஞ் சேறு முதிரமு மாறா வாசல்
உண்டத னிருப்பைக் கண்டு பெருங்களி யுள்ளங்கொண்டு
கண்டன ரிளைஞ ரெல்லாங் கதியெனக் கருது வாரே. (104)

கரத்தொருவன் கணைதொடுக்க மேற்பறக்கும் ராசாளி கருத்துங் கண்டே
உரைந்துசிறு கானகத்தி லுயிர்ப்புறா பேடுதனக் குரைக்குங் காலை
விரைந்துவிடத் தீண்டவுயிர் விடும்வேடன் கணையால்வல் லூறும் வீழ்ந்த
தான் செயலே யாவதல்லாற் றன்செயலால் ஆவதுண்டோ வறிவுள் ளோரே. (105)

கொல்லுலை வேற்க யற்கண் கொவ்வையங் கனிவாய் மாதே
நல்லணி மெய்யிற் பூண்டு நாசிகா பரண மீதிற்
சொல்லதிற் குன்றி தேடிச் சூடிய தென்னா தென்றான்
மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண்முத் தென்றாள். (106)

அருகிலிவ ளருகிலிவ ளருகில்வர வுருகுங்
கரியகுழல் மேனியிவள் கானமயில் சாயல்
பெரிதன மிடைசிறிது பேதையிவ ளையோ
தெருவிலிவ னின்றநிலை தெய்வமென லாமே. (107)

அழகு வாள்விழி யாயிழை நன்னுதற்
றிலகங் கொண்டெதிர் செஞ்சிலை மாரனுங்
கலக மேசெயுங் கண்ணிது வாமென
மலரம் பைந்தையும் வைத்து வணங்கினான். (108 பொருள் தமிழில்)

==109==
<poem>குரங்கு நின்றுகூத் தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்புநாய் யாடிக்கொண்டாடி யதுபோல்
கரங்க ணீட்டியே பேசிய கசடரைக் கண்டு
சிரங்க ளாட்டியே மெச்சிடு மறிவிலார் செய்கை. (109)

வில்லது வளைந்த தென்றும் வேழம துறங்கிற் றென்றும்
வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும்
புல்லர்தம் சொல்லுக் கஞ்சி பொறுத்தனர் பெரியோ ரென்றும்
நல்லதென் றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே. (110)

சலந்தனில் கிடக்கு மாமை சலத்தைவிட் டகன்றபோது
கொலைபுரி வேடன் கண்டு கூரையிற் கொண்டு செல்ல
வலுவினா லவனை வெல்ல வகையொன்று மில்லை யென்று
கலையெலி காகஞ் செய்த கதையென விளம்பு வோமே. (111)

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்
நலமிலாக் கயவன் றோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யுங் கோடரிக் காம்பு நேராம். (112)

உயிரனை யானுடன் கலந்த வுளவறிந் தீண் டெனை மணந்தோ னுடன்றிச் செய்கை
செயலென வென்றிலை மறைகா யெனத் தணவாதவ் விருவகையுந் தீதென்
றயிலவிழியாய் மயிற்பொது வூழ்வலித்தினும் பெண்மதி யெனது வூழின்
இயலென வள்ளுவ ருரைத்தார் சான்று நீயெனப் புகன்றே னின்புற் றாளே. (113)

நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை நலத்தைச் சேர்வார்
கட்புடை காமத் தீயார் கன்னியை விலக்கி னோரும்
அட்டுட னஞ்சுகின்றோ ராயுளங் கொண்டு நின்று
குட்டநோய் நரகில் வீழ்ந்து குளிப்பவ ரிவர்கள் கண்டாம். (114)

மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கை யாமே
ருதுவது காலந் தன்னில் தோஷமென் றுரைத்தே யாற்றில்
புதுமையா யெடுத்த போது பெட்டியில் புலிவா யாலே
அதிருடன் தடியுண் டன்றே யருநர கடைந்தான் மாதோ. (115)

மையது வல்லியம் வாழ் மலைக்குகை தனிற் புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி யடவியிற் றுரத்துங் காலை
பையவே நரிக்கோ ளாலே படுபொரு ளுணரப் பட்ட
வெய்யவம் மிருகத் தானே கொன்றிட வீழ்ந்த தன்றே. (116)

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்
தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)

ஆதியா மிருவர் நட்புக் கவமதிர் புற்ற வர்க்குள்
சூதினால் கபடஞ் செய்து துணைபிரிந் திடுவ ரென்றால்
வேதியன் பவன வாயில் வேசைதாய் பச்சை நாவி
யூதிய கதைபோ லாகி உறுநர கெய்து வாரே. (118)

அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்
இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

ஒருவனே யிரண்டு யாக்கை யூன்பொதி யானநாற்றம்
உருவமும் புகழு மாகு மதற்குள் நீயின்ப முற்று
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடு மற்றி யாக்கை
திறமதா யுலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே. (120)

வேலி யானது பயிர்தனை மேய்ந்திட விதித்தாற்
கால னானவ னுயிரதனைக் கவர்ந்திட நினைந்தால்
ஆல கன்னையர் பாலகர்க் கருத்துவ ரானால்
மேலி தோர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே. (121)

அறங்கெடும் நிதியுங் குன்று மாயுங் காலன்
நிறங்கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகிற் சேர்க்கும்
மறங்கெடும் மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

அரவிந்த நண்பன் சுதன்றம்பி மாத்துனன் அண்ணன்காயில்
வரமுந்தி யாயுதம் பூண்டவன் காணுமற் றங்கவனே
பரமன் றிகிரியை யேந்திய மாந்தன் பகைவன் வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான்றன் சேவக னொண்டொடியே. (123)

சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
அங்கவ ளேறிய வாகனங் காணிவள்மற் றங்கவளோ
கொங்க்க ளீரைத் தடையவ ளாய்க் குவலயத்தில்
எங்குத் திரியும் வயிரவ மூர்த்தியென் றளனிலையே. (124)

இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கள் மாறு
மந்தர நிலைகள் பேர மறுகயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயுந் தரணிற் றேசு மாளும்
அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில். (125)

என்னனைக் கன்று முத்தனைக் குளிக்கு மிறைவனை யனைக்குமே யன்று
மன்னனைக் கன்று பின்னனைக் குதவா வன்பினால் வந்திடுவா டுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த முதுபகை லன்பிதா வுறாமல்
கன்னனைக் கொன்று விசயனைக் காத்த *கவத்துவ ராமகீருஷ் ணனே. (126)

பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கா னாற்காலி … திண்புவியை
ஆள்வார் மதுரை யழகியசொக் கர்க் * கரவம்
நீள்வா கனநன் னிலம். (127)

சிறுவன்னை பயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி வண்டு மணிநூற் … பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாளம் பூவே கறி. (128)

சிரம்பார்த்தா னீசனயன் றேவி தனைப்பார்த்தான்
கரம்பார்த்தான் செங்கமலக் கண்ணன் உரஞ்சேர்
சிலைவளைத்த திண்புயத்து வண்ணான் ஸ்ரீராமன்
கலைவெளுத்த நேர்த்திதனைக் கண்டு. (129)

கரியொன்று *பொன்மிகும்பையேறக் கற்றவர் சூழ்ந்துதொழ
எரியென்னும் செல்வன் துலாத்தினி லேற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினி லேறித் தொடர்ந்துவர
நரியொன்று சொந்தக் கனலேறி வந்தது நங்களத்தே. (130)

ஒருபாதி மால்கொள மற்றொரு பாதி யுமையவள்கொள
இருபாதி யாலு மிறந்தான் புராரி யிருநிதியோ
பெருவாரி தியிற்பிறை வானிற் சர்ப்பம் பிலத்திற் கற்ப
தருவான போஜ கொடையுன்கை ஓடென்கை தந்தன்னே.. (131)

கம்பமத கடகளிற்றான் தில்லை வாழும் கணபதிதன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பரெலாம் விழிந்திருந்தா ரயில்வேல் செங்கை யுடையவறு முகவனுங் கண்ணீ ரானான்
பம்புசுடர் கண்ணனுமோ நஞ்சுண் டான்மால் பயமடைந்தா னுமையுமுடல் பாதி யானாள்
அம்புவியைப் படைத்திடுதல் அவம தேயென் றயனுமன்ன மிறங்காம லலைகின் றானே. (132)

காம்மே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காம்மே தரித்திரங்க ளனைத்தையும் புகட்டி வைக்குங் கடாரங்
காம்மே பரகதிக்குச் செல்லாமல் வழிய டைக்குங் கபாடங்
காம்மே யனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியுங் கத்தி தானே. (133)

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை
கடாக மெங்கணு மதிர்ந்திட ஒலித்திடக் காணல்
விடாத நாணகன் றன்னிய புருடனை விழைந்தே
அடாது செய்தமங் கையர்வசை யொலித்தல்போ லாமே. (134)

தண்டுல மிளகின் றூள்புளி யுப்பு தாளிதம் பாத்திர மெதேஷ்டம் தாம்புநீர் தோற்ற மூன்றுகோ லாடை சக்கி முக்கிக் கைராந்தல் கண்டகங் காண்பான் பூசை முஸ்திபூ கற்குடை யேவல்சிற் றுண்டி

கம்பளி ஊசி நூலெழுத் தாணி கரண்டகங் கண்டமேற் றங்கி

துண்டமூ றியகாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி

சொல்லிய வெல்லாம் குறைவறத் திருத்தித் தொகுத்துப்பல் வகையினி தமைத்துப்

பெண்டுக டுணையோ டெய்துவா கனனாய்ப் பெருநிலை நீர்நிழல் விறகு

பிரஜையுந் தங்கு மிடஞ்சமைத் துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே. (135)
  • விவேக சிந்தாமணி நூல் முற்றும்

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikisource.org/w/index.php?title=விவேக_சிந்தாமணி_(மூலம்)&oldid=1494852" இலிருந்து மீள்விக்கப்பட்டது