வி.ஜே.பிரேமலதா சிறுகதைகள்
சிறுகதை -1 மானுடர்க்கென்று........
[தொகு]சிறுகதை -2 வண்ணானின் நாக்கா அழுக்கு?
[தொகு]சிறுகதை -3 காரைக்கால் பேய்
[தொகு]சிறுகதை -1
மானுடர்க்கென்று........ கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருக்க, அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர். தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த மலர் ஓடி வருவதைப்போல வந்த மகளிடம் சோகத்தை மறைக்க, புன்சிரிப்பை வலிய வரவழைக்க முயன்றார். ஏனோ அது வரவில்லை. கோதையின் முகம் சிறுத்தது. தன்னால் தான் தந்தை சிரிப்பையே தொலைத்துவிட்டார் என்ற எண்ணம் அவளை நிலைகுலைய வைத்தது. அன்றொரு நாள் சிறுமியாயிருந்த போது கண்ணனுக்காகக் கட்டிய மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு ‘ நானே கண்ணன்` எனத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டும் கூட கோபத்திலும் அவர் முகத்தில் புன்னகை மாறாமலிருந்ததே. கண்டிப்பிலும்கூட அவரையும் மீறி சொற்களில் அன்பு கனிந்திருந்ததே. இப்போது அவை எங்குப் போய் ஒளிந்து கொண்டன? வலிய புன்னகைக்க முயன்று ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறார்? எனினும் முன்னை விட அவர் கண்களில் மிகுதியாய் அவளைப் பார்க்குந் தோறும் கனிவு பெருகிக்கொண்டிருக்கிறதே?
கோதை தாயைப் பார்க்க உள்ளறைக்குச் சென்றாள். அவளின் தாய் தள்ளாத வயதிலும் உடல் சோர்வைப் பொருட்படுத்தாது அடுப்படியில் சுறுசுறுப்பாக இயங்கிகிக்கொண்டிருந்தாள். கோதையின் வரவறிந்து சொம்பு நீரை எடுத்து நீட்டினாள். தந்தையின் வருகையைத் தெரிவிக்குமுன்னரே எப்படி அவர் வருகையை அறிந்தாள்? நெருப்பின் சிவப்போடு போட்டிப் போடும் அவள் மேனியிலிருந்து பெருகி வழியும் வியர்வை தனலின் ஒளி பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.கண்கள் உள்ளடங்கிச் சிறுத்திருந்தன. அவளுடைய மை தீட்டிய பெரிய கண்கள் இந்த இரண்டு வருடங்களுக்குள் யாரைக் காண விரும்பாமல் இப்படிச் சிறுத்தன? யாருமறியாமல் அழுது அழுது தன் குடும்பத்தைத் தவிர இனி எவரையும் பார்ப்பதில்லை என வைராக்கியம் கொண்டதனால் இப்படிச் சிறுத்து விட்டனவோ? எல்லாம் தனக்காக.. தன் மீது கொண்ட பாசத்திற்காக...கோதை மறுகினாள்.
தந்தையும் தாயும் மாறி மாறி எதையும் சொல்லாமல், பேசிக் கொள்ளாமல் கோதைக்குத் தெரியாமல் பாதுகாத்தாலும்,அவர்கள் மனதில் மூண்டு எழுந்து உக்கிரமாகி கொண்டிருக்கும் அக்னியின் தகிப்பு அவளையும் சூழ்ந்து கொண்டுதான் இருந்தது. இதற்கு முன் தந்தை வெளியில் சென்று திரும்பும் பொழுது வீடு இப்படியா இருக்கும்? தந்தை உள்ளே நுழைவதை எங்கிருந்தாலும், எந்த வேலையிலிருந்தாலும் உண்ர்ந்து கொண்டு ஓடிவராத குறையாக நடந்து வந்து, நீராகாரம் கொடுத்து அவருடன் சிறிது நேரம் மலர்ந்த முகத்துடன் பேசி, கோதையின் அன்றைய குறும்புகளையோ, அவள் கற்றுக் கொண்ட புதிய பாடத்தையோ பற்றிப் பேசி, அவரைச் சிரிக்க வைத்த பின்னர் தானே விட்டு வந்த வேலையை நினைத்து ஓடுவாள்.இப்போதெல்லாம் தந்தை வந்ததை அறிந்த பின்னரும்,இல்லாத வேலையை இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு அவள் வெளியே வர மறுக்கும் காரணம் கோதைக்குப் புரியாமலா இருக்கிறது? தந்தை சென்ற வேலையின் பலனை அவர் சொல்லாமலே அவர் முகத்தைப் பார்க்காமலே தெரிந்து கொண்டு விட்டதைத் போலத்தானே அவளுடைய இச்செயல் காட்டுகிறது?
தந்தையிடமிருந்து மட்டுமா, தன்னிடமிருந்தும்தான் தள்ளி நிற்கிறாள். இதைச்செய், இப்படிச்செய், புக்ககம் சென்றால் எல்லாரும் பாராட்டும்படி செய்யவேண்டும். அப்புறம் என்னைத்தான் தூற்றுவார்கள் என்று நொடிக்கொருதரம் கோதைக்கு வேலைகளைத் திருத்தமாகச் செய்யக் கற்றுக் கொடுக்கும் தாய் இப்போது ஏன் எதையும் கண்டு கொள்வதில்லை? கோதையின் தாய்க்கு தெரியாதது எதுவுமில்லை. எத்தனை விதமான கோலங்கள்? சமையல்கள்? கண்ணனுக்கு அவள் கட்டித்தரும் மாலைகள் தான் எத்தனை விதங்கள்? கண்ணன் நின்ற கோலத்திலிருக்கும் பொழுது அவன் கழுத்திலிருந்து கால் பெருவிரலைத் தொடும்வரை அணிவிக்கப்படும் நீண்ட மாலையைக் கட்டிஅதன் பெயர் தெரியல் என்பாள்.
கண்ணனின் தோளில் தொடங்கி இடுப்புவரை மட்டும் வரும் வகையில் பூக்களைக் கோர்த்து இரு பக்கத்தையும் சேர்த்துக் கட்டி அதன் பெயர் மாலை என்பாள். அதன் கீழ்ப்பகுதியில் பந்து போலப் பூவை கட்டி தொங்க விட்டால் அதன் பெயர் தொங்கல் என்பாள்..கொண்டையில் சூட சிறிய அளவில் சிறு வளையம் போல வட்டமாகக் கட்டினால் அதன் பெயர் கோதை என்பாள். தலைஅலங்காரத்தில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் மகளுக்குப் போட்டுப் பார்த்து ஆனந்தம் அடைவாள். மகளின் அடர்ந்த கூந்தலைப் பாதியாக்கி தலை உச்சியின் இடதுபுறம் கொண்டை போட்டு அதைச்சுற்றி கோதை எனப்படும் சிறு வளையம் போன்ற மாலையைச் சூட்டி அழகு பார்ப்பாள்.அதுதான் மகளுக்கு அழகாக இருக்கிறது என்று அடிக்கடி போட்டு அழகு பார்த்ததால் தானே தோழியர் தன்னைக் கோதை என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். தனக்கும் அதுவே பெயராகிப் போனது. மழலை மாறா சிறிய வயதில் அவளைப் படுத்திய பாட்டையெல்லாம் வளர்நத நிலையில் சொல்லி பூரித்துப் போவாளே. ஓயாமல் பேசுபவளே பேசுவதை மறந்ததைப் போல மௌனமாகிப் போனதென்ன?
பதினைந்து வருடத்திற்கு முன் தோட்டத்தில் துளசி செடி அருகே தான் கண்டெடுக்கப்பட்டதாகத் தந்தை எப்போதோ கூறியது இப்போது ஏன் அடிக்கடி நினைவிற்கு வருகிறது.பிறந்த அன்றே தன்னைத் துளசிச் செடியருகில் போட்டது யாரோ?‘கண்ணனே துளசிச்செடியருகில் தனக்காகக் குழந்தையாக மாறிக் கிடந்ததாக நினைத்து மனமகிழ்ந்து வாரியணைத்துக் கொண்டதாகத் தந்தை கூறும் பொழுது அவர்தான் எப்படிக் கிறங்கி்ப் போவார்? குழந்தையற்ற தம்பதிகளுக்குக் கண்ணனையே குழந்தையாகப் பாவித்துப் பாவனையில் கொஞ்சி மகிழ்ந்தவர்களுக்கு, மோகினி வடிவம் எடுத்து சிவனையே மயக்கிய கண்ணன் அவ்வடிவெடுத்தே குழந்தையாகக் கிடைத்திருக்கிறான்.
தூணிலும் துரும்பிலும் இக்குழந்தையிலும் அவன்.சிரிக்கும் பூப்பந்து. அவர்கள் வீட்டில் துள்ளி விளையாட ஒரு சின்னக்குழந்தை.சிலைவடிவ கண்ணனுக்குச் செய்ததெல்லாம் நிஜத்தில் செய்திட வாய்ப்பு தந்திட்ட குட்டிப் பொக்கிசம் என்று பூரித்தவர்கள் அல்லவோ அவர்கள்? கோதை வளர வளர அவள் கேள்விகளும் அதிகமாயின. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் தம் உறவுகள் அளித்த பரிசுகளைப் பற்றிக் கூறும் பொழுது தன் உறவுகள் பற்றிக் கேள்விகளால் பெரியாழ்வாரைக் குடைவாள்.
பெரியாழ்வார் குறும்புச் சிரிப்புடன் கோதையை மடியிலமர்த்தி, அவள் பிறந்தபொழுது தேவர்களின் தலைவனான இந்திரன் வைரம் மற்றும் மாணிக்கம் பதித்த தங்கத் தொட்டிலைப் பரிசளித்தாகவும், சிவன் தங்க மாதுளம்பூ தொங்கவிடப்பட்ட இடைஞாணும்,பிரமன் பொன் சலங்கையும் பரிசளித்ததாகவும், தேவாதிதேவரெல்லாம் வந்திருந்து விலைமதிப்பில்லா பல பரிசுகளை அளித்ததோடு பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்திச் சென்றதையும் மிகப் பெருமையுடன் கூறியது இன்றும் கோதையின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. பெரியாழ்வார் சொல்லச் சொல்ல விழிகள் விரிய அக்காட்சியை நினைத்துப் பார்த்துப் பூரித்துப் போவாள் கோதை.இப்போது ஏன் வருவதில்லை என்று அவள் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு ‘உன் திருமணத்திற்கு வருவார்கள்‘ எனக் கூறி அவள் வாயை அடைத்து விடுவார் பெரியாழ்வார்.தோழியரிடம் சென்று தந்தை சொல்லியதைச் சொல்லி திக்கு முக்காட வைப்பாள்.
அவளுடைய அழகும், அறிவும், பணிவும் அனைத்திற்கும் மேலாக அவள் கற்பனை கலந்து கூறும் கண்ணனின் கதைகளும், தோழியர் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தன. அவளோடு சேர்ந்திருக்க ஆசை கொள்ளாத பெண்களில்லை.தாயிடம் பூமாலையும் தந்தையிடம் பாமாலையும் கற்றதினால், எளிதில் உடன் ஒத்த தோழியரை வழி நடத்தும் தலைமை பெற்றாள். மார்கழி வந்து விட்டால் போதும். விடியற்காலமே தோழியரை எழுப்பிக் கையில் விளக்குடன் கண்ணனின் திருக்கோயிலுக்குச் செல்வதை ஒரு திருவிழா போலவே மாற்றிக் கொண்டிருந்தாள். முப்பது நாளும் சலிக்காமல் கோதையைத் தவிர யார் இப்படி வழி நடத்தியிருக்க முடியும்? கண்ணனின் கோயிலை கோயிலாகவா காட்டினாள்?
வாயிற்காப்போன், நந்தகோபன், பலதேவன், யசோதை, நப்பின்னை அனைவரும் குடியிருக்கும் கண்ணனின் வீடாக அல்லவா காட்டினாள். அதுமட்டுமா?நெய் பால் உண்ணக்கூடாது. கண்ணில் மை எழுதக்கூடாது. எளிய ஆடையில்தான் கோயிலுக்கு வரவேண்டும்.கோதையின் சொல்லுக்கு மாற்று உண்டோ?அதிகாலையில் எழாமல் அடம்பிடிப்பவர்கள் கூடக் கோதைக்காக, நோன்பு முடியம் நாளில் அவள் தரும் இனிப்பு பாற்சோற்றின் சுவைக்காக நோன்பிருந்தனர். இளம்பெண்களையெல்லாம் திரட்டி கண்ணனுக்காக நோன்பிருக்க வைத்து பெரும் புரட்சி செய்து கொண்டிருந்த கோதையை நினைத்து நெஞ்சு கொள்ளாத பெருமிதத்தில் பூரித்துப் போயிருந்தார் பெரியாழ்வார்.அதனால்தான் திருமாலுக்கு அணிய வைத்திருந்த மாலையைக் கோதை எடுத்து அணிந்து கொண்டபோது பெரியாழ்வாரால் வன்மையாகக் கண்டிக்கமுடியவில்லை. அவர் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றதை அறிந்த கோதை அவர் வீடு திரும்பியதும், வாசலிலேயே எதிர்கொண்டு ‘தூணிலும் துரும்பிலும் அவன் என்பது உண்மையானால் என்னில் அவன் இல்லையா? ஏன் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றீர்கள்? எனக் கேட்டு திகைக்க வைத்தாளே?அவளுடைய துடுக்குத்தனம் இப்போதெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டது?
இப்போதெல்லாம் தன் வேலையைச் செய்துவிட்டுத் தோட்டத்திற்குச் சென்று விடுகிறாள்.ஒவ்வொரு செடியாகப் பார்த்துக் கொண்டு வந்தவள், வெள்ளிய ஒளிப் புள்ளிகளைக் கொண்டு அவளையே பார்ப்பது போலத் தோற்றமளித்த துளசி்ச்செடியருகே தன்னையறியாமல் நின்றுவிட்டாள்.இதுவரை இல்லாத ஏக்கம் அவளுள் சூழ்ந்தது. மற்ற செடிகளுடன் வளர்ந்திருந்த துளசிச்செடிக்கு மட்டும் மண்ணால் ஒரு மாடம் கட்டினாள்.
செடிகளுக்குக் கூடக் கிளை பரப்ப வழியிருக்க மானிட சாதியான தனக்கு அது ஏன் மறுக்கப்பட்டது? தன் சாதி .....அதுதானே தாய் தந்தையரின் பெருந்துயருக்குக் காரணம். தன்னோடொத்த தோழியரெல்லாம் மணமுடித்துச் சென்று விடத் தான் மட்டும் இன்னும்.....அழகும், அறிவும், பணிவும், ஆளுமையும் புறந்தள்ளப் பட்டு சாதியே முன் நிற்கிறது. கோதையின் திறமையின் பெருமையில் பூரித்து நின்றவர்களைச் சாதி சுழற்காற்றாய் மாறி சூறையாடிக் கொண்டிருக்கிறது..பெரியாழ்வார் இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இப்போதுகூட அயலூரிலிருக்கும் பால்யகால நண்பனை கோதையின் திருமணம் தொடர்பாகச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். சிங்கமெனப் பறப்பட்டுப் போனவர் சிறுபுல்லென மிதிபட்டு வந்திருக்கிறார்.
‘சாதிக்கச் சாதி தேவையில்லை.சாத்திரத்திற்குச் சாதி தேவை.எண்பது வயது கிழவனும் சாதியற்ற பெண்ணைக் கை பிடிக்கமாட்டான்‘ என அவர் நாடியைப் பொடித்து அனுப்பியிருக்கிறார் அவர் நண்பர்..இவர்கள் வணங்கும் கண்ணனே இடைசாதி.கீழ்சாதி.இவர்கள் மட்டும் மேல் சாதியா? என்ன முரண்பாடு? இதை யாரிடம் சொல்வது? சாதியைக் கடந்த தாய் தந்தையரிடம் யார் சொல்வது அதன் விசுவரூபத்தை? ‘தாய்க்குப் புரிந்து விட்டது.அதனால்தான் உள்ளொடுங்கிப் போய்த் தன்னிடம் முன்பை விட உயிராயிருக்கிறாள்.நான் தூங்கும்பொழுது என் முகம் பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு உடல் சுருங்கிப் போய்விட்டாள்.நானறியாமல் எனக்காக அழும் இவளல்லவோ உண்மைத்தாய்‘.
பெரியாழ்வார் மனைவியின் உள்ளிருப்பை வேறுவிதமாகப் புரிந்து கொண்டார்.தன் சோகமுகத்தை அது தரும் துயரச் செய்தியை கேட்கப் பிடிக்காமல் உள்ளிருப்பதாகப் புரிந்து கொண்டார்.ஆனால் கணவனிடம் பேசுவதைக் கண்டு வளர்ந்த பெண்ணாகிய கோதையின் மனம் ஏக்கம் கொண்டு விடக் கூடாதென்றே பெரியாழ்வாரிடம் பேசுவதை அவள் தவிர்க்கிறாள் என்ற உண்மையை கோதை புரிந்து கொண்டாள்.
“கண்ணா உன்னை வளர்த்த யசோதை போலத்தானே என் தாயும்? பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா? நீயும் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தாய். நானும் அப்படியே. உன்னை வதைத்த கம்சன் போல் என்னை வதைக்கச் சாதி என்னும் அரக்கன். கண்ணனுக்காகக் கம்சனை வெறுத்தவர்கள் சாதி எனும் கம்சர்களாக மாறி எங்களை வதைப்பது வேடிக்கைதான். தன் மகளாக என்னைக் கொண்டாடும் இவர்களுக்கு ஒரு மகளாக நான் செய்ய வேண்டியது என்ன? சாதியறியாத எனக்கு ஆதியறியாத நீயே கதி.. நீயே என் மணவாளன்.‘ கோதை அன்றுமுதல் கண்ணனின் காதலியானாள்.அவனிடம் மனதிற்குள் பேசத்தொடங்கி விட்டாள்.“ நீயே கதி எனக் கிடக்கும் என்னை வதைப்பதுதான் உனக்கு அழகா? உன் ஆடையை என் வீட்டில் ஒளித்து வைத்தாலென்ன? அப்போதாவது என்னைத் தேடி வருவாயல்லவா? இதோ கண்ணன் வந்து விட்டான்.சுருண்டகுழலும் அந்தக் கண்ணும்... செம்பவள வாயும்...அவனேதான். கோதைக்குள் மின்னல் ஓடியது.என் உறவு..என் வாழ்வு எல்லாம் அவன் அவனே. இன்றைக்கும் எழேழ்பிறவிக்கும்.....
கோதை...கோதை...தாயார் அழைப்பதைக் கேட்டதும் பதறியெழுந்தாள். கண்ணனை எங்கு ஒளித்து வைப்பது? நல்லவேளை கண்ணனே மாயமாகி விட்டான்.தாய்பூசைக்கு மலர் பறித்து வரச்சொன்னாள். சிட்டெனப் பறந்தாள்.பூக்களைப் பறிக்கும்பொழுது பச்சைக் கற்பூர வாசனை. கண்ணன் வந்துவிட்டான். . அவள் குடலையிலிருந்து மலர்கள் கீழே சிதறின. அதைப் பொறுக்கக் குனிந்தாள். அம்மலர்களின் உள்ளே கோவிந்தனாகக் கண்ணன். அம்மலர்களை வைத்தே அவன் பெயரெழுதினாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள். கண்ணன் மறைந்து விட்டான். மீண்டும் கண்ணன் ஏன் வரவில்லை? இப்போது கோவிந்தா கோவிந்தா என அவன் பெயரைத் தோட்டத்து மணலிலெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டாள். இதோ தையும் நெருங்கி வருகிறது. அவளுள் அச்சம் கண்ணனோடு தான் கொண்ட காதல் நிறைவேறுமா.....சிறுவயதில் தோழிகளோடு விளையாடிய கூடல் விளையாட்டு நினைவிற்கு வந்தது. கடைசி தோழிக்கும் திருமணம் முடிந்து விட்டது.தனித்தே அதை விளையாடத் தொடங்கினாள். கண்ணை மூடிக் கொண்டு மணலில் ஆட்காட்டி விரலால் வட்டம் அதைத் தொடர்ந்து விரலை எடுக்காமலே மற்றொரு வட்டம். இப்படி வட்டங்களின் தொடர் அணிவகுப்பு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வட்டத்தை முடிக்க வேண்டும்.‘கண்ணன் எனக்குக் கிடைப்பானாகி்ல் கூடலே நீ கூடிடு‘. வட்டம் தொடங்கிய இடத்தில் முடியவில்லை.‘கண்ணன் கை என்னோடு பற்றுமாகில் கூடலே நீ கூடிடு.‘ வட்டமாக முடியாமல் எங்கோ முடிந்திருந்தது. ‘சாதியென்னும் காளியன் தலைமேல் நடனமாடிய கூத்தனை நான் சேர்ந்திடுமாகில் கூடலே நீ கூடிடு‘.கோணப்புளியங்காபோல் சேராமல் விரிந்திருந்தது.‘என்னைக் கொண்டு போக அக்கோபாலன் வருவானாகில் கூடலே நீ கூடிடு‘.அவள் எண்ணங்களின் தொடர்ச்சியும் முடிவும் அவனே.கூடலிழைத்தல் விளையாட்டை ஒரு தவம் போலத் தோட்டத்து மணல் முழுதும் விளையாடினாள்.
தனிமைத்துயர் அவளைத் தீண்டவேயில்லை. எனினும் இன்னும் கூடல் கூடவில்லை. ‘கோதை தோட்டத்தில் விளையாடியது போதும் வா....‘ தாயின் குரல். .அவள் தன்னை நிழல் போல் தொடர்வதை நினைத்து உள்ளுக்குள் வேதனையோடு சிரித்தாள் கோதை...தாய் அளித்த உணவை உண்டபின் படிக்க அமர்ந்தாள். நாளை மார்கழி முடியப்போகிறது. தாய் வீட்டை தூய்மை செய்யத் தொடங்கிவிட்டாள்.தந்தை பூசைக்குரிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். வருகிற தை மாதத்திற்குள் கோதையின் திருமணத்தை முடித்துவிடவேண்டுமென்ற எண்ணம் அவரைச் சுறுசுறுப்பாக்கியிருந்தது.நாளை விடியலில் அயலூருக்கு கோதையின் வரன் தொடர்பாக அவர் புறப்படவேண்டும்.கோதை தாய் தந்தையர் இருவரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதயம் கசிந்தது. அன்றிரவு தலையணை நனைந்தது. காலையில் கோதை எழாததைக் கண்ட தாய் பதறிப்போனாள். கோதையின் உடல் அனலாய் சுட்டது.‘நாளெல்லாம் தோட்டத்து வெயிலில் விளையாடிக் கொண்டிருந்தால் இப்படித்தான்...‘ புலம்பியபடி மருந்தரைத்துத் தந்தாள். பெரியாழ்வார் கோதைக்கு மாப்பிள்ளைத் தேட அதிகாலையிலேயே கிளம்பிவிட்டிருந்தார். கோதை தாய் தந்த மருந்தை உட்கொண்டாள். அவள் மனம் சிந்தனையிலாழ்ந்தது.
பிருந்தாவனத்தில் கண்டெடுக்கப்படட இந்த விட்டுணு சித்தனின் மகளுக்குக் கண்ணனின் திருநாமமே மருந்து என்பதைத் தாய் அறியாதவளா? சிலருக்கு மருந்தில் உயிர் இருக்கிறது. எனக்கு அவன் தான் மருந்து. தாயிடம் எதுவும் சொல்லாமல் அவள் கொடுத்த மருந்தை உண்டு வந்தாள்.அப்படியே உறங்கிப்போனாள். கண்விழித்த போது தாய் அவளுடைய காலருகே பாதிச் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சிறிதுநேரம் தோட்டத்தில் உலவிட விரும்பினாள். தாயறியாமல் மெல்ல நடந்தாள். அங்குக் கண்ணில் பட்ட குயிலிடம் கண்ணனிடம் தூது சென்று வருமாறு மனதிற்குள் கெஞ்சினாள்.நடை தளர ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள்.அவள் விரல் அவளறியாமலே கூடலிழைத்தது.
கூடலே நீ கூடிடு. கூடலே நீ கூடிடு. . கூடலே நீ கூடிடு. இதோ கூடிவிட்டது.அதோ அங்கு வருவது யார்? கண்ணன்தான். யானை மீதமர்ந்து ஒரு சிங்கம் போலல்லவா வருகிறான். அவனோடு தேவர்களும் அல்லவா வருகிறார்கள். ஐயோ எனக்குப் படபடப்பாக வருகிறதே. அதோ தந்தை யானையின் ஓசை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறாரே. எப்போது ஊரிலிருந்து அவர் வந்தார்? கண்ணன் யானையிலிருந்து இறங்கிச் சென்று தந்தையிடம் என்ன சொல்கிறான்?
‘கோவிந்தனாகிய எனக்கும் கோதையாகிய என்னை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டாளுக்கும் நாளை வதுவை என்று சொல்வது என் காதில் விழுகிறதே.... ‘ என்னை ஆள்பவள் ...என்னை ஆள்பவள்..அந்தச் சொல் என் நெஞ்சத்தில் பூ பூக்க வைக்கிறதே. நானா அவரை ஆண்டேன். நான் ஆண்டாளா? இது கனவா? இந்திரன் உள்ளிட்ட தேவரெல்லாம் பாளை கமுகை போன்ற மரங்களை என் வாசலில் நடத் தொடங்கி விட்டனரே.இது உண்மைதான்.
‘அம்மா அம்மா...‘கோதை தாயை அழைத்தாள். ‘எங்கே போனாள். அம்மா நீ எதிர்பார்த்த நன்னாளும் வந்து விட்டதம்மா‘.குரல் கேட்டதும் அதோ சின்னப்பிள்ளை போல ஓடி வந்து வந்தவர்களை உபசரிக்கத் தொடங்கிவிட்டாள். இனி அவளுக்கு ஓய்வேது? என்னை யார் அலங்கரிப்பது? என் நிலையறிந்து எனக்கு நாத்தனாராகப் போகும் துர்க்கை கூறைப் புடவையை எனக்கு அணிய உதவிசெய்து மாலையைக் கழுத்தில் சூட்டுகிறாளே.மங்கல மகளிர் என் கையையையும் கண்ணன் கையையும் சேர்த்துக் காப்பு நாண் கட்டுவதை நிமிர்ந்து பார்க்க விடாமல் நாண் என்னைத் தடுக்கிறதே. ஊர்வலம் தொடங்கி, மத்தள மேகம் முழங்க, வரிசங்கம் நின்றூத, மந்திரம் ஒதுவதில் வல்லவர்கள் வேதம் ஓதுகின்றனரே. இதோ கண்ணன் உரிமையுடன் என் கையைப் பற்றுகிறானே.எவ்வளவு துரிதமாக செயல்கள் நடக்கின்றன. அக்னியை வலம் வருவதற்குள் படபடப்பில் என் உடலிலிருந்த நீரெல்லாம் வியர்வையாகிப் போனதே. என் கால்விரல்களைப் பிடித்து அம்மி மீது வைத்து, எரிமுகம் காட்டி, அதில் பொரியைப் போட செய்து,ஊஞ்சலில் அமரவைத்து, ஓமநெருப்பின் சூடு தணிய சந்தனத்தைப் பூசிக, குளிப்பாட்டி, அலங்கரித்து யானை மீதமர்த்திக் கண்ணனின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் வரையில் தான் எத்தனை சடங்குகள்.எத்தனை சடங்குகள்? அப்பப்பா.....அப்பா அப்பா எங்கே? அதோ தூரத்தில் நெஞ்சு கொள்ளாத பூரிப்புடன் தன் சொந்தங்களிடம் கண்களிலே பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
தாய் எங்கே.. இதோ அழைக்கிறாளே...கோதை...கோதை... ஐயோ தாயின் குரலில் ஏனிந்த பதற்றம். திகில்! என்னவாயிற்று .கண் இமைகள் ஏன் இப்படிக் கனக்கின்றன? தாய் தன்னைத் தூக்க முயற்சித்து நிற்க வைத்து நடத்திச் செல்கிறாளே. திருமணக் களைப்பில் யானையின் மீதிருந்து விழுந்து விட்டேனா...கண்ணனின் உறவுகளெல்லாம் என்ன நினைத்திருக்கும்....அந்த நினைப்பே அவளின் பதட்டத்தை மிகுதிப்படுத்தி அவளை மீண்டும் மயங்கச் செய்துவிட்டது. கண் விழித்துப் பார்த்த போது தாயும் தந்தையும் அவளருகே கவலையோடு அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்கள்தான் எப்படி மெலிந்து போய் விட்டார்கள். கண்ணன் எங்கே ..எப்படி தாயிடம் கேட்பது? எல்லாம் கனவா...கண்ணனுக்காக நோன்பு நோற்றதும் கண்ணனே
அவளை மணமுடித்ததும் உண்மையில்லையா? தந்தை வைத்தியரை அழைத்து வரச் சென்றுவிட்டார். தாய் தானறிந்த மருந்தை தயாரித்துக் கொண்டிருந்தாள்.எத்தனை நாட்கள் கழிந்தன? இது என்ன மாதம் ? யாரறிவார்? மெல்ல எழுந்து மாடத்திலிருந்த பெரியாழ்வாரின் ஓலைச் சுவடிகளை எடுத்தாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்று விட ஆண்டாளுக்கு உற்சாகம் பிறந்தது. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்......தன் உயிரையே உருக்கி உருக்கி கண்ணனையே நினைந்து நினைந்து பாவனையில் நனைந்து நனைந்து அவள் எழுதி வைத்த ஓலைச் சுவடிகள்.. கண்ணனையே நான் மணமுடித்துக் கொண்டேன் என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?அவள் உடல் தேறியதாகக் கருதிய பெரியாழ்வார் மீண்டும் வரன் தேடத் தொடங்கியிருந்தார்.
தனக்காகப் பெரியாழ்வாரையும் உத்தமியான தாயையும் புறக்கணித்த இம் மானுடக் கூட்டத்திடமா இவர்கள் மன்றாடுவது? தன் இருப்பே இவர்களுக்குப் பெருந்துயரம் என்பதை உணர்ந்தளவில் சிறகு விரித்த உயிர்ப்பறவை ஆண்டாள் அவனன்றி எதுவும் வேண்டாள் என்பதை எழுத்தில் வெளிப்படுத்திப் பறந்து போனது.
கோதை மறைந்த எட்டாம் நாள்.பெரியாழ்வார் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தோட்டத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தார்.துளசிச் செடிக்கென்று தனிமாடம் கட்டி வைத்திருக்கிறாளே. அவள் மனம் எதையெல்லாம் நினைத்து ஏங்கியதோ. எங்கும் கோதை நடந்து வந்து செடிகளை வருடிக் கொடுத்தபடி நிற்பது போலவே இருக்கிறது. ‘போதும்மா கோதை உச்சி வெயிலில் நிற்காதே உள்ளே வா..‘என்று குரல் கொடுத்தார். கோதையின் தாய், ‘யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க? உள்ள வாங்க உங்க தலைதான் வெயிலில் பொளக்கப்போறது‘ என்றாள். எப்போதும் போல அவள் வேலைகளில் மூழ்கி விட்டிருந்தாள். கோதை இறந்ததை உணராததுபோலவே அவளின் செய்கைகள் இருந்தன. தன்னைப் போல அவளும் எங்கும் கோதையே நிறைந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறாளோ?
ஆனால் இப்போது யாரிடம் பேகசிக்கிட்டிருக்கீங்க என்றாளே. அப்படியானால் தான் காட்டிய பாசம் அவளிடம் இல்லையோ? அதனால்தான் கோதைக்காக வரன் தேடியலைந்த போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாளா? கோதையின்பால் உண்மையான அன்பில்லாமல் எனக்காகத்தான் வளர்த்தாளா? அந்தக் குழந்தை அதைப் புரிந்துதான் உயிரை விட்டதோ? ஆத்திரம் அவர் அறிவை மறைத்தது. நேரே சமையல் கட்டிற்குச் சென்றார். அவள் மோர் கடைந்து கொண்டிருந்தாள். கோதைக்கு மோர் கடையும் ஓசை பிடிக்குமே. அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதை விட்டு வி்ட்டு இந்த மத்தின் ஓசைகேட்க ஓடிவிடுவாளே? கண்ணில் நீர் வழிய அப்படியே நிலைப்படியில் நின்றுவிட்டார். ஏதோ உணர்வில் திரும்பியவள் ‘இதோ ஆச்சு உட்காருங்கோ வந்திடறேன்‘ என்றாள்.
கூடத்துத் திண்ணையில் கோதை வழக்கமாகப் பூ கட்டும் இடத்தில் சென்று அமர்ந்து விட்டார். அங்கிருந்த மாடத்தில்தான் கோதையின் சுவடிகளை அவள் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.அதைப் பற்றி அவரிடம் சொல்ல மறந்து விட்டாள். அவரின் கண்ணில் அது தற்செயலாய்ப் படச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினார். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்.....‘ அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.முப்பது முத்துகள். திருமொழியைப் படிக்கும்போது ஒருவித நடுக்கத்தை அவர் உணர்ந்தார். படிக்கப் படிக்க நா உலர்ந்தது. திருப்பாவையில் சிறுமியாய் இருந்த கோதை திருமொழியில் வேறு பரிணாமம் எடுத்திருந்தாள். அதில் அவள் குழந்தையல்ல. பருவப் பெண். பருவக் கனவுகள். இளமைத்தாகங்கள்...பெரியாழ்வார் விதிர்த்துப் போனார். கோதையை நினைத்து நினைத்து அவர் மனம் உருகியது. தன் செல்ல மகளின் அவலநிலை அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அவளின் நிலையறிந்ததால்தான் அவள் தாய் அவளின் மறைவை இயல்பாய் ஏற்றுக்கொண்டாளோ?
‘மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்‘. சாட்டையாய் மனித குலத்தின் மீது விழுந்த அவ்வரிகள்...கோதை எப்பேர்பட்ட பெண்.அந்த வைராக்கியம். துணிச்சல். தன் கூரிய அறிவினால் மனித குலத்தை மிகுந்த உயரத்திலிருந்து பார்த்திருக்கிறாள்.ஹஇவளுடைய சிந்தனைக்கு நிகரான ஒருவரை மனித குலத்தில் தேடமுடியமா? இவளைப் போய்க் கேவலம் மனிதகுலத்திற்கு மணமுடிக்கப் பார்த்தேனே.அவர் நெஞ்சு குற்ற உணர்வினால் தவித்தது.
கோதையின் தாய் சாப்பிட அழைத்தாள். ‘உன்னால் எப்படி முடிகிறது? தெரிந்துதான் இதைப் பத்திரப்படுத்தினாயா? நம் கோதை மகா கவி. .அவளின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லையே. உன்னால் எப்படி முடிகிறது. உனக்குப் பாசமே இல்லையா? கோதை அழைப்பது போலவே இருக்கிறதே? இந்த சின்ன வயதில் எத்தனை துயரங்கள்? எத்தனை புரிதல்கள்? அதை அறியாத பாவியாகிப் போனேனே? புலம்பித் தவித்தார். ‘நாம எதுக்கு அழணும். நம் மகள் கண்ணனை விரும்பினாள்.அவனோடு வாழச் சென்றிருக்கிறாள்.அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைத்திருக்கிறது.நல்ல இடத்தில் மகளை வாழ அனுப்பியபின் நாம் வாடுவது அழகா? கண்ணன் அவளை நம் மகளாக வளர அனுப்பி வைத்தான். நம் மீது அவன் வைத்த நம்பிக்கை, அவன் நம் மகளைச் சிறப்பாகப் பார்த்துக் கொள்வான் என்று நமக்கும் இருக்க வேண்டுமல்லவா?‘ அத் தாய் நிதானமாகக் கேட்டாள். பெரியாழ்வார் திகைத்துப் போய்விட்டார்.
சிறுகதை -2
வண்ணானின் நாக்கா அழுக்கு?
அரண்மனையே பேச்சற்று உறைந்து கிடந்தது.தீயின் நாக்கு நீருபித்தத் தூய்மையை வண்ணானின் நாக்கு அழுக்காக்கி விட்டதாக எங்கும் பேச்சு. செய்தியறிந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்தனர். ஊர் வாயை மூட வழி தேடியறிந்தவர்கள் தாமே ஊர் வாயானார்கள்.
செவிலிப் பெண்கள் சீதையும் இராமனும் வந்த பிறகு திரும்பப் பெற்ற இளமையை மீண்டும் தொலைத்துவிட்டார்கள்.இலையுதிர்கால மரங்களைப் போல, வீரர்கள் களையிழந்து போனார்கள். இராமராஜ்ஜியக் கனவுகள் கண்முன் சிதைந்து போவதைக் கையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் வசிட்டர்.தேரோட்டி சுமந்திரனோ இராமனின் கண்களில் பட்டுவிடாமலிருக்க எங்கோ பதுங்கி விட்டான்.நாழிகை மணி கூட நாவசைக்க மறந்து விட்டது.
அகலிகையின் சாபம் இராமன் காலில் ஒட்டிக்கொண்டு வந்து இங்கே உள்ளவர்களைப் பற்றிக்கொண்டதோ?கல்லாய் இறுகிப்போய் விட்டார்களோ அனைவரும்? தேனினும் இனிய சொற்களுக்காகக் காத்திருந்தவர் செவியில் தீயின் கங்குகள் அல்லவா விழுந்திருக்கிறது.இன்றோ நாளையோ என இளவரசனின் பிறப்புச் செய்தி வந்து சேரும் நாள் எந்நாளோ என ஏங்கிக் கிடந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.அக்னி சுடும் வேளையில் காலில் செருப்பின்றி நடப்பவர்கள் விரைவாக நடந்து கடப்பதைப்போல இச்செய்தியும் விரைவாகக் கடந்துவிட ஏதாவது வழியண்டோ என ஏங்கித் தவித்தார்கள்.
வண்ணானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?அவனை சிரச்சேதம் செய்துவிட இராமன் ஏன் இன்னும் ஆணையிடவில்லை?சம்புகனைக் கொன்ற இராமனுக்கு அவன் தம்பியைக் கொல்ல என்ன தயக்கம்?சம்புகனின் தாய் அவன் இறந்தசெய்தி கேட்ட அக்கணமே இறந்தாளே?அந்த வண்ணான் குடும்பம் பட்ட துயரை யார் அறிவார்?இராமன் இராவணவதம் முடிந்து அயோத்தி திரும்பும் செய்தி கேட்டு நாடே மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது, அந்த வண்ணானின் இளவல் தாயும் அண்ணனும் புதைக்கப்பட்ட இடத்தில் சுடுநெருப்பு வெயிலையும் பொருட்படுத்தாது விழுந்துகிடந்தானே அதை யாரறிவார்?அதிகாரம் படைத்தவரின் வாள் செய்ததை, அதிகாரமில்லா ஒரு நாவும் இப்போது செய்து கொண்டிருக்கிறது.
கோசலை கோயில் தூணில் தலைசாய்த்து கண்ணீர்த் துடைக்க மறந்து மயங்கிக் கிடந்தாள்.சுமத்திரை, சீதையிடம் யாரும் எதுவும் சொல்லிவிடாதபடி கண்காணித்துக் கொண்டிருந்தாள்.சொன்னது வண்ணானா அல்லது கைகேயியா என்று யாரும் கேட்டுவிடப்போகிறார்களோ எனப் பயந்து அறையையே சிறையாக்கிக் கொண்டாள் அன்னை கைகேயி.
அரண்மனையில் தனது அறையில் சன்னலில் கைப்பதித்து நெடுங்தூரம் வரை தெரியும் நாட்டின் பரப்பை பார்த்துக் கொண்டிருந்தான் இராமன். இல்லையில்லை அவன் கண்கள் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தன. மனதின் அக்னி அலைகள் அவன் மேனியில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.நெற்றியிலிருந்து கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வை நதியைக் கூட அவன் உணரவில்லை.அவன் கவனமெல்லாம் சீதை இச்செய்தியறிந்த பின் என்ன செய்வாள்? இது நாட்டிற்கு நேர்ந்த அவமானமா? தன் குடும்பத்திற்கா? தனக்கா?அடே வசிட்டா... நீ குறித்துக் கொடுக்கும் நல்ல நாட்களெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் கெட்ட நாளாகி உன் கணிப்புகள் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனவே.இனி உன்னை நம்பி எப்படி ஆலோசனைக் கேட்பேன்? அந்த வண்ணானுக்கு என்ன தைரியம்? தீயின் நாக்குகள் நிரூபித்ததே அது போதாதா?தந்தை போலின்றி சீதைதான் வாழ்வின் முதலும் முடிவும் என வாழ்ந்து வரும் எனக்கு இத்தனை சோதனைகளா?
முன்பு கைகேயி,இடையில் இராவணன்,இப்போது வண்ணான்......போதுமப்பா....போதும். எத்தனை இராவணன்களை வேண்டுமானாலும் வென்றழி்க்கத் தயாராகி தினவெடுக்கும் தோள்கள் இந்த வதந்தியால் துவண்டு போய்க் கிடக்கின்றனவே? சீதையுடன் நான் வாழ விரும்பும் வாழ்வு பாடாய்ப்படுத்துகிறதே. பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இனிய வாழ்வு இதோ ஓராண்டு கூட நிறைவேறவில்லை.....குழந்தைப் பிறப்பிற்காகக் காத்திருக்கைகையில் இது என்ன பேரிடி..... நெடுநேரம் நின்றிருந்ததால் அவன் கால்கள் மரத்துப் போய்விட்டன.
பதினான்கு ஆண்டுகள்.காட்டிலும் மேட்டிலும் மலைகளிலும் கரடுமுரடான பாதைகளிலும் நடந்து நடந்து சலித்துப் போயிருந்தன அவன் பாதங்கள்.இதோ இப்போதுதான் ஒன்பது மாதங்களாகப் பட்டு விரிப்பில் பழகி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தன. இராமனின் கட்டைச் செருப்புகள் பரதனிடமே தங்கிவிட்டன. அதை அவன் வணங்கிக் கொண்டிருந்ததால், இராமனுக்காகச் சிறப்பாகச் செய்யப்பட்டப் பட்டினாலும், பஞ்சினாலும் செய்யப்பட்டப் புதிய செருப்பினை அணிந்து கொண்டிருந்தான்.
காட்டில் பழங்கள் பறிக்கவும், தேனெடுக்கவும் இலக்குவன் மரத்தில் ஏறி இறங்கும் வரையிலும், கால் கடுக்க பல மணிநேரம் நின்றிருந்த போதெல்லாம் மரத்துப் போகாத கால்கள் இப்போதெல்லாம் சில மணித்துளிகளிலேயே மரத்துப் போய்விடுவதன் காரணம் என்ன?பதினான்கு ஆண்டுகள். நீண்ட நாள்கள்....நெடிய ஆண்டுகள்....சீதைக்காகப் பட்ட துயரங்கள்......இராமன் நினைவின் தனலில் பெருமூச்சு விட்டான். மெல்ல நகர்ந்து கட்டிலில் அமர்ந்தான்.பஞ்சு மெத்தை உள் வாங்கிக்கொண்டது. தரையிலும் கற்பாறைகளிலும் அமர்ந்த காட்டு வாழ்க்கை ஏனோ நினைவிற்கு வந்தது.யாரோடும் பகை வேண்டாம்.போரொடுங்கும்,புகழொடுங்காது என்றானே வசிட்டன்.தீராப் பழியல்லவோ வந்தது.
ஓசையெழுப்பி சீதையை அழைத்து வரச் சொன்னான். பேறுகால பூரி்ப்பில் இன்றோ நாளையோ என புது வரவிற்காகக் காத்திருந்த சீதை,சரிந்த வயிறோடு நடந்து வந்தாள். நாடறிந்த செய்தி நாயகி அறியவில்லை.அரண்மனை அறிந்த செய்தி அவளின்னும் அறியவில்லை.யாருக்குத் தைரியம் இருக்கிறது? செம்முதுபெண்டிர் தம்முகமே காட்டிக் கொடுத்துவிடுமோ எனப் பயந்து தொலைவில் நின்று விட்டனர்.இராமனின் அழைப்பைக்கேட்டளவில் அகமகிழ்ந்து சீதை யாரையும் உதவிக்கு அழைக்காமல் தானே இராமனின் அறை நோக்கி மெல்லச் சென்றாள். இராமனின் அறை தடாகத்தைப் பார்த்தவாறுஅமைந்திருந்ததால்,அருகில் செல்லச் செல்ல குளிர்ச்சியான இதமான காற்று அவளைத் தழுவிச் சென்றது.
பரதன் பார்த்துப் பார்த்து அந்த அறையை வடிவமைத்திருந்தான். பேறுகாலத் தேவைக்காக தற்காலிகமாக சீதை அந்த அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டிருந்ததால் .இராமனே சீதையைப் பார்க்க அங்கு சென்றுவிடுவான்.மீண்டும் இராமனின் அறையில் இராமனைச் சந்திக்கும் நாளை ஆவலோடு அவள் எதிர்பாபார்த்திருக்க இடையி்ல் இப்படி ஒரு வாய்ப்பு.
பதினான்கு ஆண்டுகள் கழித்து அவர்களின் காதலுக்குப் பரிசாக பிறக்க இருக்கும் குழந்தை.சீதையின் மேலுள்ள காதலினால் அவளைத் தனிமையில் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறான்.சீதை பெருமிதமும் காதலும் மேலோங்க இராமனின் முகம் நோக்கினாள்.இராமனின் கனிந்த மொழிகளைக் கேட்க காதுகள் கூர்மையாகின.
நெடுநேர அமைதி...இராமன் வாயே திறக்கவில்லை.இராமனின் கடுமையான முகம் கண்டு திடுக்கிட்டாள்.கசந்த பார்வை.அலட்சிய முகம். இது இராமனா?இராமன்தானா? நா உலர்ந்து போனது.ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துவிட்டதா, தன் தந்தை சனகனுக்கு ஏதாவது நடந்திருக்குமா? அவளால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. இராமன் பீடிகையின்றி வறண்ட குரலி்ல் மெல்ல இடியை அவள் காதில் இறக்கினான். வண்ணானின் நாக்கு அவள் மீது சேற்றை வாரி இறைத்திருப்பதை முகத்தில் சலனமின்றி சொன்னான். குரலில் ஏகத்திற்கும் வெறுப்பு. சீதை திகைத்தாள். வெறுப்பு வண்ணான் மீதா? தன் மீதா ?காட்டில் எந்நிலையிலும் அவனிடமிருந்து வெளிப்படாத வெறுப்பு இப்போது முதன்முதலாய்...இராமனின் அகன்ற தோள்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் படுக்கையில் உட்கார்ந்திருந்ததும் நெடுநேரம் தான் நின்று கொண்டிருந்ததையும் கூட அவள் உணரவில்லை.
“அதுதான் தீயின் நாக்கு நிரூபித்துவிட்டதே?அதை வண்ணான் அறியானா? சீதை சிறுகுழந்தை போல் கேட்டாள்.
“அறியாதார் யார்? எனினும் ...” இராமன் தொடரமுடியாமல் தவித்தான்.
“எனினும்.........” சீதை தொடர்ந்தாள்.“சமூகநியதிக்கு மன்னன் கட்டுப்பட்டவன்” இராமன் ஒருவழியாய் சொல்ல வந்ததை சொல்லிவிட்டான். “இன்னொருமுறை இப்போது இங்கு அக்னிப்பிரவேசம் செய்யவா?”சீதை கேட்டாள். “தேவையில்லை மீண்டும் காட்டிற்குப் போகவேண்டியதுதான்”.
சீதை சிரித்து விட்டாள். இதற்காகவா இத்தனை துயரம் நாட்டு வாழ்வைவிட காட்டு வாழ்வே மேல் என்ற முடிவிற்கு இராமன் வந்துவிட்டானா? அதைச் சொல்லவா இத்தனைப் பீடிகை?தன் காதல் மனைவியின் மேல் களங்கம் சுமத்தும் இந்த நாட்டு வாழ்வே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்ததைச் சொல்வதற்கா இத்தனை தயக்கம்?அதற்காகவா வருத்தம்? நான் எந்த நிலையில் இருந்தாலென்ன?காடு எனக்குப் புதியதா?பதினான்கு ஆண்டுகாலப் பழக்கம். மீண்டும் இயற்கையின் மடியில் வாழ ஒரு சந்தர்ப்பம்.
“என்னை இந்த நிலையில் எப்படி அழைத்துச் செல்வது என்றா கவலைப் படுகிறீ்ர்கள்? நீங்கள் அருகிருக்கையில் எனக்கு எல்லாம் சுகமாகவே அமையும்.மனம் தளரவேண்டாம். இம்முறை இலட்சுமணன் வேண்டாம். பாவம் ஊர்மிளை. நாம் மட்டும் சில வயதான சேடிப் பெண்டிரை அழைத்துக் கொண்டு செல்வோம்.நான் ஏற்பாடுகளை செய்கிறேன்.”சீதை மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சொல்லி முடித்தாள். இராமன் திடுக்கிட்டுப் போனான். “நானா?நானா மீண்டும் காட்டிற்கு? நான் இல்லை. நீ மட்டும்தான் போகிறாய். என்றான். சீதை நம்பமுடியாமல், “நான் மட்டுமா ஏன் நீங்கள்...” என்றாள்.இராமன் விளையாடுகிறானா? “நான் நாட்டை ஆள வேண்டும். இது என் தந்தையின் விருப்பம். இராமராஜ்ஜியம் காலத்தின் தேவை”இராமன் அழுத்தமாகப் பதிலிருத்தான். அவன் குரலில் விளையாட்டில்லை. அவன் “இதுவரை பரதன் இராமராஜ்ஜியத்தைத்தானே நடத்தினார். எக்குறையுமில்லையே” சீதை திருப்பிப் கேட்டாள். “எனினும் அது என் பாதுகைகளின் ஆட்சி. என் ஆட்சியில்லை. என் நேரிடையான ஆட்சி போல வருமா?”இராமன் தடுமாறினான்.
“நாட்டிற்கு ஆயிரம் இராமர் கிடைப்பார்கள். எனக்கு நீங்கள் மட்டும் தானே? ” சீதையின் கேள்விக்கு இராமன் பதில் தரவில்லை.
“ நீங்கள் காட்டிற்குச் சென்றபோது நானும் வந்தேனே” சீதை கனை தொடுத்தாள். “அது மனைவியின் கடமை.நீயாகத்தான் வந்தாய். நான் அழைக்கவில்லை”. அவன் பதிலைக் கேட்டு அதிர்ந்தாள். திருப்பிக் கேட்டாள்.“கணவனுக்குக் கடமையில்லையா?. “கணவனா அரசனா என்ற சிக்கல் வரும்பொழுது நாட்டைக் காக்க அரசனாக இருப்பதே முதல் கடமை.” இராமன் பதில் தந்தான். “மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க முடியாதவன் எப்படி நாட்டைக் காக்கும் நல்ல மன்னனாக முடியும்?”சீதை எதிர்கனை வீசினாள். “நான் நாடாள்வது தந்தையின் விருப்பம். அதை நிறைவேற்றுவது மகனின் கடமை.” “உங்கள் தந்தையின் கனவு நீங்கள் உங்கள் மனைவியை காட்டிற்கு அனுப்பிவிட்டு நாடாளவேண்டும் என்பதா?மனைவியின் வாக்கைக் காப்பாற்ற பெற்ற மகனையே காட்டிற்கு அனுப்பியவர் உங்கள் தந்தை. அறுபதினாயிரம் மனைவியர் இருந்தும் அவர் நல்ல கணவராக நடந்து கொண்டார்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டினை உலகிற்கு உணர்த்துவேன் என்று வாழும் தாங்கள் அந்த மனைவிக்காக நாட்டைத் துறந்து காட்டிற்கு வர இயலாதா?” இராமன் ஒருமுறை கண்மூடித் திறந்தான்.காட்டு வாழ்க்கை கண்ணில் விரிந்தது. மரவுரியும்,பச்சைக் காய் கனிகளைத் தேடிய நாட்களும், கட்டாந்தரையும் கல்படுக்கையும்.....கண் திறந்தளவில் ஒளிவிளக்குகளும் திரைச்சீலைகளும்......இராமனின் கனத்த மௌனம் சீதைக்கு எல்லாவற்றையும் புரிய வைத்துவிட்டது. “உங்களுக்காக எல்லாம் துறந்து வந்தேன். ஆனால் எனக்காக...வேண்டாம். நம் குழந்தைக்காக......சரி.நீங்கள் எதையும் துறக்க வேண்டாம். நான் வருகிறேன்”சீதை திரும்பிப் பார்க்காமல் விரைந்து நடந்தாள்.மரவுரியைத் தேடி அணிந்தாள். யாரிடமும் எதுவும் சொல்லாமல் கம்பீரம் சிறிதும் குறையாமல் தலைநிமிர்ந்து நடந்தாள். ஆனால் அவள் வயிறு இன்னும் இறங்கியிருந்தது.
வாசலில் தயாராக தேர். தேரோட்டியாக இலட்சுமணன். எல்லாம் இராமனின் முன்னேற்பாடுகள். ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இராமன் நிற்கிறானா? அங்கு யாருமில்லை. சொன்னது வண்ணானா? இல்லை இராமனா? தீக்குளிக்கச் சொன்னது ஊருக்காகத்தானா? தன்னைக் காப்பாற்றியதுகூட அவனின் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தானா?வண்ணானின் நாக்கு இராமனை வெளுத்துவிட்டது. இலட்சுமணன் கேட்டான்.“ தந்தை ஜனகனிடா? இல்லை காட்டிற்கா? எங்கு தேரைச் செலுத்த?“அவளின் விருப்பம் முதன்முதலாய் கேட்கப் பட்டது. “என் தந்தையும் ஒரு மன்னர்தானே.இராமனின்றி தனித்து இப்படி நான் வருவதை விரும்பமாட்டார்.மன்னர்க்கெல்லாம் மானம்தான் பெரிது. காட்டிற்கே தேரைச்செலுத்து“.சீதை இகழ்ச்சியாகச் சிரித்தாள். சீதை இறங்கியதும் இலட்சுமணன்,“ தாயே மன்னிக்க வேண்டும். உங்களுக்குப் பணி புரிய ஆசை.ஆனால்....”தயங்கினான். வார்த்தை வரவில்லை.
“தேவையில்லை இலட்சுமணா.பதினான்கு ஆண்டுகள் நீ உறங்காமல் இராமனுக்குப் பணிவிடை செய்தாய்.உன் மனைவியைப் பிரிந்து நீ ஆற்றிய தொண்டு மகத்தானது. ஊர்மிளைக்காகவும் உனக்காகவும் இராமன் சிறிதாவது மனங்கசிந்தானா? ஊர்மிளைக்காக நீ உள் அழுது வெளியே வீரம் காட்டினாயே. போதும். அக்னியை வலம் வந்து இம்மையிலும் மறுமையிலும் உன்னைப் பிரிய மாட்டேன் என என் கைத்தலம் பற்றிய இராமன்தான் என்னைத் தனித்துக் காட்டிற்கு இப்போது அனுப்பியுள்ளான். நீ உடனே நாடு செல். இராமனின் நாக்கு உன்னையும் அழுக்காக்கிவிடும்.” சீதை காட்டை நோக்கி நடந்தாள்.
சிறுகதை -3
காரைக்கால் பேய்
புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில் முன்பின்னாய் உழன்று கொண்டிருந்தன. பரமதத்தன் குளித்துவிட்டு வந்தான். கறி அமுதும் தயாராகிவிட்டது. இப்போதெல்லாம் அவன் முன்போல் இல்லை என்ற எண்ணம் அவளை செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது. இப்போது கூட குளித்து முடித்து வந்தபின் திருநீற்றுப் பொடியைக் கையில் எடுத்தபடி, நெற்றியில் பூசத் தடுமாறியபடி நின்று கொண்டிருந்தான். பின் ஏதோ நினைத்தவனாய், நெற்றியிலும், கைகளிலும், மார்பிலும் பூசிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
புனிதவதி கவனிப்பதாய் உணர்ந்தானோ என்னவோ, தயக்கத்திற்குப் பின் திருநீறு பூசியது, அவளுக்காகப் பூசியது பேல இருந்தது. புனிதவதி அவனைக் கவனிக்காதது போல காட்டிக் கொண்டாலும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அவன் வணிகன். வணிகத் தொடர்பாய் பலபேரைச் சந்திக்கிறான். பல கருத்துக்களைக் கேட்கிறான். இப்பொழுது சமண சமயமே ஊர் பின்பற்றும் மதமாகிக் கொண்டிருந்தது. சமணவாதிகள் கூறும் சைவத்திற்கு எதிரான கருத்துக்களை பரமதத்தனும் கேட்டுத் தடுமாறத் தொடங்கியிருக்கிறான். சமணம் மட்டுமா பௌத்தம், வைதீகம், உலகாயுதம், ஆசீவகம், வைசோடிகம், பிரமவாதம் என அவளும்தான் பலவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். மன்னனே சமணனாகவும், பிறமொழி பேசுபவனாகவும் அமைந்துவிட்ட சூழலில்... புனிதவதி பெருமூச்சு விட்டாள். சோழனும், பாண்டியனும் எங்கு ஓடி ஒளிந்தார்களோ? யார் ஆண்டால் என்ன? வயிற்றுக்குச் சோறும், வாழ்வதற்குத் தொழிலும், போரற்ற அமைதிச் சூழலும் ஒவ்வொருவரின் ஏக்கமாக இருந்தது. தமிழ் மன்னர்கள் எங்கிருந்தோ படைதிரட்டி வந்து சிறுசிறு போர்களை நிகழ்த்தித் தொடர்ந்து தோற்றோடிக் கொண்டிருக்கும் சூழலில், எளிய மக்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது?
நிறைய சலுகைகள். முடிவெட்ட வரிச்சலுகை, சமணனாக மாறினால் வணிகச் சலுகை, சமணனாக மாறினால் வாழ்வதற்குச் சலுகை, வாய்திறக்கச் சலுகை, ஒன்றா? இரண்டா? இன்னும் எத்தனை எத்தனையோ! பரமதத்தன் நாட்டு நடப்பை அவளிடம் ஏக்கதோடு எடுத்துரைத்திருந்தான். ஆனால், புறச்சூழலின் நெருக்கடி அவனிடமும் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. வணிகத்திற்காக மட்டுமல்ல. சுய மரியாதைக்காகவும்தான். சமண சமயத்தைப் பரப்ப, சமணர்கள் பரப்பிய சைவ சமயத்தின் மீதான அவதூறுகள் அவனை மாற்றத் தொடங்கியிருந்தன. அவற்றைக் காது கொண்டு அவளால் கேட்க முடியவில்லை. சைவர்கள் அற்பர்களாம் ; பெண்ணடிமை வாதிகளாம், பிள்ளைக்கறி உண்ணும் சிவன் ஒரு பித்தனாம் ; அவனைப் பின்பற்றுபவர்கள் அறிவிலிகளாம் ; சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய அனைவரையும் சிவனாகக் கண்டு வழிபடுவதோடு, அவர்களுக்காக எதையும் செய்யத்துணியும் வெறியர்களாம். அது மட்டுமா? குலமானம் கருதாமல், மனைவியைத் தானமாகச் சிவனடியாருக்குத் தாரைவார்த்த இயற்பகை. சிவன்கோவிலுக்கு விளக்கெரிக்க பணமின்றி, மனைவியை விற்ற கலிய நாயன், சுடுகாட்டில் பிணந்தின்று வாழும் மாவிரதனுக்கு மணமகளான தன் மகளின் கூந்தலை அறுத்துக் கொடுத்த மானக்கஞ்சாறன், சிவன் அடியவருக்கு உணவிட பணமின்றி விதைநெல் வாங்க மனைவியரின் தாலியை விற்ற ஒருசிவனடியான், பின் விதை நெல்லையே உணவாக்கி சிவனடியாருக்கு அமுது படைத்தவன்... இப்படி புதிய கோணத்தில் சிவனடியவர்களைப் பரமதத்தன் பார்க்கத் தொடங்கியிருந்தான். எல்லாம் சிவமயம் என அனைவரையும் கைக்கூப்பி வணங்கிக் கொண்டிருந்தவனின் கைகள் இப்போதெல்லாம் வணங்க மறுத்துக் கொண்டிருந்தன.
ஒருகாலத்தில் இதே கதைகளை வியந்து போற்றியவன், இப்போது சிவனடியவர் குணக்கேடர்களாய் பார்க்கத் தொடங்கியிருந்தான். பன்னெடுங்காலமாக பல தலைமுறைகளுக்குப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு சமயத்தை மற்றொரு சமயம், அதைப் பற்றிய அவதூறான கதைகளைத் திரும்ப திரும்ப மக்கள் மனதில் எழுப்பி, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதை புனிதவதி கண் கூடாகக் கண்டுகொண்டிருந்தாள். பரமதத்தனைப் புறச்சூழல் அலைகழிக்கத் தொடங்கியிருந்ததால், தன்னை ஒரு சைவன் என காட்டிக் கொள்வதற்குத் தயங்கியதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சைவர்கள் வெறியர்களாம், பெண்ணடிமைவாதிகளாம், அறபர்களாம். திரும்பத்திரும்ப பரமதத்தன் கூறிக்கொண்டு இருந்தான். புனிதவதி சிலசமயம் காதடைத்துக் கொள்வாள். பரமதத்தன் ஒரு தூய சைவன். அவனே இதைக் கூசாமல் சொல்கிறானே. அவன் என்ன செய்வான் பாவம். அவனைச் சுற்றி இதுதானே பேசப்படுகிறது? சைவன் என்று தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கூட அவன் விரும்பவில்லை என்பதைத்தான் திருநீறு பூசும்போது அவன் தயங்கிய நிலை காட்டியது. புனிதவதி கற்றுத் தேர்ந்தவள்தான். இசையில் அவளுக்கு ஆழ்ந்த புலமையிருந்தது. பல இசைக்கருவிகளை இசைக்கவும் தெரிந்திருந்தாள். பாமாலைப் புனையும் ஆற்றலும் அவளுக்கிருந்தது. பிறந்த சில வருடங்களிலேயே தாயிழந்த அவளைத் தந்தை தனதத்தன் உயிர் போலக் கருதி வளர்த்து வந்தார். தாயிழந்த சோகத்தை மறைக்க கல்வியிலும் இசையிலும் அவளைப் பழக்கினார். பெரும் வணிகருக்கு ஒரே மகளாகப் பிறந்த புனிதவதிக்கு அனைத்தும் வீட்டிற்குள்ளேயே கிடைத்தது.
தலைசிறந்த ஆசிரியர்கள் இல்லத்திற்கே வந்து கல்வி புகட்டினார்கள். தனதத்தன் வைதீக மரபினர். சிவனும் திருமாலும் ஒன்றே. தூணிலும் துரும்பிலும் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் இவர்களே என்ற உணர்வுடையவர். எனினும், சிவன் மீது தனிப்பற்றுடையவர். அனைத்திலும் சிவனையே காண்பவர். எல்லாம் சிவன்செயல். அன்புள்ள நெஞ்சங்களை எல்லாம் சிவன் இடமாகக் கொள்கிறான். அவரைப் பொறுத்தவரையில் நடமாடும் அன்புடைய ஒவ்வொருவரும் சிவன்தான். அதுதானே கைகூப்பி ஒருவரை மற்றொருவர் தொழுவதற்கு ஆதாரமாக உள்ளது. புனிதவதிக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் அனைத்தும் அவளது தந்தையே. தந்தையே அவள் தொழும் கடவுள் அவர் கொள்கையே அவள் கொள்கை. பரமதத்தன் நல்ல வணிகன் என்ற முறையில் மட்டுமின்றிச் சைவன் என்ற முறையாலும் அவர் மருமகனாகத் தேர்ந்தெடுத்தார். எனினும் திருமணம் முடிந்து கணவனுடன் தனிக்குடும்பம் அமைத்திட்ட நிலையில் அவளிடம், இனி உன் கணவன் தான் நீ தொழும் கடவுள். அவன் கருத்துக்கு மாறாக செயல்படாதே. தாயில்லாப் பிள்ளை தந்தை வளர்த்ததால் தான் இப்படி என்ற பழிச்சொல் எனக்கு ஏற்படாமல் வாழ் அம்மா என்று கண்ணீர் மல்க வழியனுப்பினாரே. அதை இப்பொழுது நினைத்தாலும் புனிதவதிக்குக் கண்ணில் நீர் நிறையும்.
பனிரெண்டில் அவளுக்குத் திருமணம். இப்பொழுது மூன்று வருடம் முடியப் போகிறது. அவள் அவனுக்கேற்றாற் போல் மாறிவிட்டாள். அவனே அவள் உயிர். ஆனால் அவனோ மாறத் """"தொடங்கி""விட்டான். புறச்சூழலுக்கேற்ப சைவத்திற்கு எதிரான கருத்துக்களை அவன் மனது நம்பத் தொடங்கியிருந்தது. சிவம் என்பதின் பொருள் உணராதவர்கள்தான் சிவனை அவன் தோற்றம் கண்டு இகழ்வார்கள், நூலறிவு பேசித் திரிவார்கள் என்ற அடிப்படை உண்மையைக் கூட அறியாதவனாக இருந்தான். திருமணமான சில நாட்களிலேயே புனிதவதி புரிந்து கொண்டாள். அவன் பிறப்பால் சைவன்தான். ஆனால் அவன் வாழ்வால் வணிகன். எதையும் வணிக நோக்கிலேயே பார்க்கத் தொடங்கும் அவன் போக்கு, ‘எல்லாம் சிவன்’ என்பதை ஏற்றுக் கொண்டாலும் பின்பற்ற முடியாமலிருந்தது. அதிலும், புனிதவதியின் ஆழ்ந்த கல்வியறிவும் இசைப்புலமையும், இசைக்கருவிகளின் தேர்ச்சியும், எதிலும் வெளிப்படும் கலைநயமும் அவனைக் குற்ற உணர்வில் ஆழ்த்தத்தொடங்கியிருந்தது. சிறுவயதிலேயே வணிகத்திற்குப் பழக்கப்படுத்தப்பட்ட அவன் மனம் சதா சர்வகாலமும் வணிகத்தில் மேன்மையுறுவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. திருமணமான புதிதில் புனிதவதியின் அழகும் அறிவும் கண்டு அவன் பெருமை கொண்டிருந்தான். தன்னைப்போல் ஒரு வணிகன் மகளாக இருந்தும், கலைமகள் போன்ற கலையறிவைக் கொண்டிருந்த அவளின் அறிவு தன் குடும்பத்திற்குச் சிறப்பு எனக் கருதியிருந்தான். ஆனால், நாளாக நாளாக அவளின் அறிவு அவனை பிரமிக்க வைத்திருந்த நிலைமாறி ஒருவிதத் தாழ்வுமனப்பான்மை அவனைப் பிடித்துக் கொண்டது. புனிதவதி எதையும் சரியாக மட்டுமின்றி, ஆழமாகவும், நுட்பமாகவும் சிந்தித்து, உட்பொருளை உணரும் தன்மையைக் கொண்டிருந்தாள்.
வணிகனின் மகளானதால், வணிக நுணுக்கமும் அவளிடம் பொதிந்திருந்தது. எனினும், எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், நடுகடலின் அமைதியைப் போலிருந்தாள். அவள் முன் தான் வெறும் சலசலக்கும் நீரோடை என்று பரமதத்தன் உணர்ந்தான். ஒருவிதக் குற்ற உணர்வு அவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. சமண, பௌத்த மதங்களுக்கு மாற்றப்பட்ட சைவ குலத்துப் பெண்கள் துறவிகளாகிச் சமயவாதங்கள் நிகழ்த்தி ஆணுக்கு நிகரென வாழத்தொடங்கியிருந்தனர். புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். கணவன் தன் தந்தையைப் போல மிகுதியான இலாபமுமின்றி, குறைவான நட்டமுமின்றி நடுநிலையோடு தொழில் செய்யவேண்டும் என அவள் உள்ளூர விரும்பினாள். நேர்மையான வழியே அறவழி என்று உணர்ந்து, கணவன் வணிகம் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தாள். ஆனால், பரமதத்தனால் அது இயலவில்லை. களப்பிரர்களின் ஆட்சியில் அது சாத்தியமாகவில்லை. தமிழர்கள் அல்லாத வணிகர்கள், இலாப நோக்கையே முதன்மையாகக் கருதிச் செயல்பட்டனர். மாமனார் தனதத்தனைப் போல, உறுதியாக நின்று நேர்வழியில் வணிகம் செய்ய பரமதத்தனால் இயலவில்லை. இளரத்தம் வணிகத்தில் சாதிக் நினைத்தது. வழியைப் பற்றி அக்கறை இல்லாமல் புதியபுதிய வணிகர்களுடன் தொடர்பு கொண்டான். வணிகத்தை விருத்தி செய்தான். வீட்டில் செல்வம் குவிந்தது. பல சமயக் கருத்துடைய வணிகர்கள் அவனுடன் பெருவணிகத் தொடர்பு கொண்டனர். அவர்களுடனே பெரும்பொழுதுகளைக் கழித்தான். வணிகத் தொடர்பிற்காக சைவத்திற்கு எதிராக பேச்சுவாக்கில் அவர்கள் சொல்லிய கதைகளைக் கேட்டுக்கொண்டான். முதலில் அவன் அதை பெரிதுபடுத்தவில்லை. இது தன்னை பாதிக்காது எனத் தள்ளிவிட்டான்.
களப்பிரரால் ஏற்பட்ட அரசியல் புரட்சி தமிழர் வாழ்வைச் சீர்குலைத்துக்கொண்டிருந்ததை அவன் உணரவில்லை. ஆனால், புனிதவதிக்கு முன் அவள் கூரிய கருவிழிகளுக்குமுன் ஒருவிதக் குற்ற உணர்வை உணர்ந்தான். அவள் வாய்திறந்து எதுவும் சொல்லவில்லை. எனினும், அவள் இயல்பான பார்வை கூட இம்சையாகத் தோன்றியது. சைவ சமயத்திற்கு முரணான வாழ்க்கை, குற்ற உணர்வு இவற்றால் தூய்மையான சிந்தனையுடைய அவள் முன் நிற்க அஞ்சினான். பின், தமக்கு விருப்பமான சமயத்தைப் பின்பற்ற தனக்கு உரிமையுண்டு என நினைத்தான். அன்றைய சூழல் அது. திடீரென்று வணிகத்தின் மூலம் கிடைத்த பெருஞ்செல்வச் சேர்க்கை அவன் வழிமாறிப் போவதற்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்தது.
புனிதவதி அவனைக் கேட்க நினைத்தாலும், தந்தை கண்ணீர் மல்கக் கூறிய வார்த்தைகள் அவளைக் கட்டிப் போட்டிருந்தது. அவள் வாய் திறந்து கேட்டிருந்தால் கூட, அவனுக்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், எதைச் சொல்வான்? சிறிது நாட்கள் மௌனத்தில் உறைந்து போனது. அவன் வணிகத்தில் நெடுநேரம் செலவிடுவதைப் போல, அவளைத் தவிர்த்தான். அவளோ, எப்போதும் போலவே அவனிடம் அன்புடன் பணிவிடை செய்து, தன் கடமையைச் சரிவர ஆற்றிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அமைதியும் பெருமையும் அவனை இம்சித்தது. அவளைவிடத் தான் கூடுதலாக அறிந்தவன் என்பதை வெளிப்படுத்த, சைவத்திற்கு எதிராகத் தான் கேட்ட கதைகளைக் கூறத் தொடங்கியிருந்தான். அவள் கண்களில் ஏற்பட்ட சிறு அதிர்ச்சிகளை அவன் கண்டு கொண்டிருந்தான். மேலும் மேலும் சிவனடியார்களின் மீதான இழிவுபடுத்தும் கதைகளைக் கூறி, சைவன் என்பதையும் மறந்து அவளை ஆதிக்கம் செலுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டான். ஒரே குடும்பத்திலேயே செங்குட்டுவன் சைவனாகவும், இளவல் இளங்கோ சமணனாகவும் வாழ்ந்த காலச்சூழல் அது. எனவே, அவள் மாறாத புன்னகையுடன் எப்போதும் போல் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த கட்டத்திற்குச் சென்று சிவனடியார்களுக்கு அமுதிடக் கூடாது எனக் கட்டளையிட்டான். புனிதவதி திகைத்துப் போனாள். சிவனடியாருக்கு அமுதிடுவது சிவனுக்கே அமுதிடுவது போல் அல்லவா? பசித்து வரும் அடியவர்க்கு அன்னமிட முடியாது என எப்படி மறுக்கமுடியும்? தன் தந்தையை நினைத்துக் கொண்டாள். கற்பொழுக்கம் நிறைந்த பெண்ணுக்கு கணவன் சொல்லே மந்திரம். தன்னைக் கல்லாக்கிக் கொண்டாள். நாட்கள் மாதங்களாயின. சமயப் பூசலின்றி சமணர், பௌத்தர், வைதீகர் ஒரே குடும்பத்து உறவுகளில் இணைந்தே வாழும்போது தான் வாழ இயலாதா? பரமதத்தன் வெளியூரிலிருந்த வணிகன் ஒருவன் கொடுத்ததாக, இரு மாங்கனிகளை அனுப்பியிருந்தான். அதை அலமாரியில் வைத்துவிட்டு கறி அமுது ஆக்கச் சென்றாள். சோறு அமுது ஆக்கியாயிற்று.
யாரோ திண்ணையில் ‘தாயே’ என அழைக்கும் குரல் கேட்டு வெளியில் வந்து பார்த்தாள். வயதான ஒரு சிவனடியார் நடை தளர்ந்து, வாய் உலர்ந்து நீண்டு நெடிய தாடியுடன் இடையில் புலித்தோல் கட்டி, மண்டையோடு ஏந்தி சிவனே நிற்பது போல நின்று கொண்டிருந்தார்.புனிதவதி அதிர்ந்து போனாள். இந்த வயதான கிழவன் வாய் திறந்து பிச்சைக்கேட்டு வாசலில் நிற்கையில் அமுது இல்லை என எப்படி தன் வாயால் சொல்வது? புனிதவதி நெருப்பில் நிற்பது போல் உணர்ந்தாள்.
கணவன் சிவனைப் புறம் பேசினாலும், அவளின் உள்ளத்திலே சிவனே நிறைந்திருந்தான். சிவனன்றி வேறு தெய்வத்தை வணங்காதத் தகைமையுடன் வளர்க்கப் பெற்றிருந்தாள். கணவனே தெய்வம் எனினும், அவனுக்கும் மேலான தெய்வம் சிவனேயன்றோ? யாரும் காணமுடியாத அரனாகிய சிவனை அன்பு என்னும் போர்வையினாலே மனதிற்குள் மறைத்து வைத்திருந்தாள். தாய்வழிச் சொத்தாகிய சிவனை, கனிந்த நெஞ்சில் உள் மாயத்தால் அடைத்து வைத்திருந்தாள்.
ஒருநாள் ‘எல்லாம் சிவன்’ என்றால் அவனுக்கு தனி உருவமில்லையா என்றானே பரமதத்தன், அவன் என் சிந்தையில் அன்பென்னும் உருவத்தோடிருப்பதாக என்னால் கூற முடியவில்லையே.
புனிதவதியின் நுண்ணுணர்வில் ஒரு வழி தோன்றியது. அமுதுதானே படைக்கக்கூடாது. கனி கொடுக்கலாம் இல்லையா? துள்ளிக் குதித்தோடினாள். உள்ளேயிருந்து கணவன் அனுப்பிய மாங்கனியில் ஒன்றைக் கொண்டுவந்து சிவனடியாரின் மண்டையோட்டில் இட்டாள்.
சிவனடியார் கடகடவென்று சிரித்தார். புனிதவதி திகைத்து அவரை ஏறிட்டாள். ‘தாயே சோறமுது செய்யவில்லையா? நான் வாழும் சுடுகாட்டில் மாங்கனிக்குப் பஞ்சமில்லை. குழந்தைப் பேறற்ற உனக்கு நான் தருகிறேன் கனி இரண்டு’ என தன் தோளில் சாத்தியிருந்த பையிலிருந்து இரு மாங்கனிகளை அவளிடம் நீட்டினார். மக்கட்பேறு என்றவுடன் தன்னையறியாமல் மடியில் வாங்கிக் கொண்டாள். அவர் அவளை வாழ்த்தி விட்டு அவ்விடமகன்று தளர்ந்து சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் பரமதத்தன் உணவுண்ண வந்தான். அமுது உண்டு ஓய்வெடுக்கத் திண்ணைக்குச் சென்றான். ஏதோ நினைவு வர புனிதவதியை அழைத்து, அவன் அனுப்பிய மாங்கனியை எடுத்துவரச் சொன்னான். புது நகரத்திலிருந்து வணிகர்கள் கொண்டு வந்த அரிய பழம். புதுவகை மாம்பழம் அதைச் சுவைத்துப் பார்த்தால் தெரியும் அதன் அருமை. நம் ஊர் மாங்கனிக்கு அது ஈடாகுமா என அறிய விரும்பினான். நம் ஊர் மாங்கனியை விட சுவையுடையதாக இருந்தால் அதை வாங்கி வணிகம் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்கிருந்தது. புனிதவதி அவன் அனுப்பிய மாங்கனியைக் கொண்டு வந்தாள். ஆவலோடு பருகியவன் அதன் சுவையை இரசித்து உண்டான். மற்றொரு மாங்கனியும் அதே சுவையுடையதா என ஆராய விரும்பினான்.
""""அந்த மாங்கனியையும் கொண்டு வா"" என்றான். புனிதவதி திகைத்துப் போனாள். மனதில் மாசு இல்லாத பேதைப்பெண், ‘தான் உண்டு விட்டதாகக் கூட பொய் சொல்லியிருக்கலாம்’ அவளால் அப்படி கூறமுடியாது. சிவனாகவே வந்த சிவனடியவரிடம் பெற்ற கனியில் ஒன்றை எடுத்து வந்தாள். பரமதத்தன் அதை வாங்கிய உடனே கண்டு கொண்டான். அது வேறு பழம். முந்தைய பழம் போன்றது இல்லை. உறுதியாக அவன் அனுப்பிய பழம் இது இல்லை. அப்படியானால் புனிதவதிக்கு இது எப்படி கிடைத்தது? எங்கிருந்து பெற்றாள். இதை வாங்கிக்கூட வணிகம் செய்யலாமே என எண்ணினான்.
‘இதை எங்கு பெற்றாய்’ என்றான். புனிதவதி பொய் சொல்லத் தெரியாத பேதை. எதையாவது சொல்லியிருக்கலாம். ஆனால்... அவன் ஆணையை மீறி ஒரு சிவனடியவருக்குக் கனியைப் படைத்திருக்கிறாள். அதுவுமின்றி சிவனடியாரிமிருந்து இருகனிகளையும் பெற்றிருக்கிறாள். அதை பரமதத்தன் சுவைக்கும்படியும் செய்திருக்கிறாள். எப்படி சொல்வாள்? ஒரு கணம் தடுமாற்றம், தயக்கம். சிவனிடம் தன்னை ஒப்புவித்துவிட்டு வாய் திறந்தாள். இது இறைவன் தந்தது.பரமதத்தன் அவளை உற்றுப்பார்த்தான். அவள் தடுமாற்றம் கண்டு அவனுக்கு எதையோ அவள் மறைக்கிறாள் என்பதாகப்பட்டது. அது இப்பொழுது வெளிப்பட்டுவிட்டது. அவன் ஆணையை மீறி அவள் சிவனடியாருக்கு கனி படைத்திருக்கிறாள். அவனை மீறி அவள் செயல்பட்டிருக்கிறாள். இது தானா இன்னும் உள்ளதா? புனிதவதி பேதைப்பெண்தான். ‘இன்னொன்று உள்ளது இதோ எடுத்து வருகிறேன்’ ஓடிச் சென்று எடுத்து வந்தாள். பரமதத்தனின் நீட்டிய கைகளில் வைத்தாள்.
அடுத்த விநாடி அவன் கையிலிருந்து அது மறைந்து போனது. புனிதவதி ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தாள். எங்கு போயிற்று பழம். அவன் சின விழிகள் அவள் மேல் அனலைக் கக்கிக் கொண்டிருந்தன. என்ன நடந்தது? புனிதவதி தடுமாறினாள். அவன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். சிறிது நேரம் புனிதவதி ஒன்றும் புரியாமல் அசைவற்று நின்றுவிட்டாள். கணவனின் திடீர் கோபத்திற்கு என்ன காரணம்? ஏன் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டான்! கண்கள் ஏன் இருளுகின்றன. என்ன நடந்தது? அப்படியே திண்ணையில் அமர்ந்து விட்டாள். சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தாள். அவள் விழிகளில் தென்பட்டது வாசலில் வீசியெறியப்பட்டிருந்த சிதைந்து உருகுலைந்த மாங்கனி! ஐயோ! பரமதத்தன் இதை தூக்கி எறிந்து விட்டானா? மக்கட்பேற்றிற்காக இது சிவனடியான் தந்த மாம்பழமாயிற்றே. அதைச் சொல்லித்தானே ஆவலுடன் அவனுக்காகக் காத்திருந்தாள். அந்தச் சிவனடியான் அவளுக்குப் புரிபடத் தொடங்கிவிட்டது. பரமதத்தனின் பேச்சை மீறியிருக்கிறேன் என்று தானே கோபம் கொண்டு தூக்கி எறிந்துவிட்டான். தன் மக்கட்பேற்றின் ஏக்கத்தை அவனும் அறிவான்.
எந்நிலையில் இது வாங்கப்பட்டது என அவனிடம் கோபம் தணிந்த நிலையில் கூறினால் புரிந்து கொள்வான். சிவனடியாரின் பரிதாப நிலையைக் கண்டுதான் கனி கொடுத்தேன் என்பதை அவனுக்குப் புரியவைக்க வேண்டும்.பசித்தவர் கண்களைக் கண்டால் அவன் சமணனா, சைவனா, பௌத்தனா எனப் பார்த்தா உணவிடுவது? அதுவா பெண்ணுக்கு அழகு? அதுவா இல்லறத்தார் வழி? அவனிடம் பேசி நியாயத்தை, தன் தரப்பின் சூழலை உணர வைக்கலாம் என நம்பிக்கையோடு காத்திருந்தாள்.
அன்று இரவுமட்டுமல்ல. அவன் அதற்குப் பின்னும் வரவே இல்லை. ஒவ்வொரு நாளும் நம்பிக்கையும் அவன் மேல் கொண்ட காதலின் எதிர்பார்ப்புமாய் அமுதாக்கிக் காத்திருந்தாள். ஒரு வாரம்... ஒரு மாதம் என நாட்கள் நீண்டன. எனினும் ஒவ்வொரு நாளும் ஒரு விநாடியாய்க் கழிந்தன போல் தோன்றி அடுத்த நொடி அவன் வந்துவிடுவான் என நம்பிக் கொண்டிருந்தாள். மூன்று மாதம் முதல் ஆறுமாதம் வரைகூட வணிகர்கள் வணிகத்திற்காக இல்லறத்தை விட்டுப்பிரிந்து செல்வது இயல்பு என்பதால் வணிக குல உறவுகள் அதை பெரிதாகக் கருதவில்லை.
ஆனால் புனிதவதியைக் கணவனின் பிரிவு நாளாக நாளாகப் பாதிக்கத் தொடங்கியிருந்தது. சரியான உணவு, உறக்கமின்மையாலும் ஒடுங்கிப்போய்க் கொண்டிருந்தாள். உடல் இளைத்து பிரிவுத் துன்பத்தால் சருகாகியிருந்தாள். அவனுடன் கழித்த இன்பநாட்கள் நினைவிற்கு வந்து வந்து, நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அவள் மீதான அவன் காதலைவிட, அவன் மீதான அவளுடைய காதல் மிகப் பெரியது என அவனறிவான் என நம்பிக்கைக் கொண்டிருந்தாள். மாதங்கள் வருடங்களாயின. எத்தனை வருடங்களாயின? புனிதவதியைக் கேட்டால் நேற்று தானே கணவன் கோபித்துக் கொண்டு போனான்? நாளை வந்திடுவான் என்றிடுவாள். மனிதர்கள் கணித்துள்ள காலக்கணக்குகள் பொய் என்பாள். கணவனின் மீதான நம்பிக்கையே மெய் என்பாள். ஒரு யுகம் கழிந்திருந்தாலும் ஒரு நாழிகையே கழிந்திருப்பதாக கூறிக் கணவனைக்காப்பாற்றுவாள்.
தந்தை தனதத்தன், பேதைப்பெண் புனிதவதி பேதை போலவே பிதற்றுவதைக் கண்டு, பரமதத்தனைக் கண்டறிய ஆட்களை அனுப்பி வைத்தார். மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் பரமதத்தன் வேறொரு நாட்டில் வேறொரு பெண்ணை மணந்து, குழந்தையுடன் வேறு பெயரில் வாழ்வதை அறிந்து கொண்டார்.
அவன்தான் என்பதை உறுதி செய்து கொண்டான். அயலார் ஊரில் அவன் மிகப்பெரும் வணிகனாகி மிகுந்த செல்வந்தனாக வாழ்வதை தெளிவாக்கிக் கொண்டு புனிதவதியிடம். அவன் புது இல்லற வாழ்வு பற்றி கூறாமல் பரமதத்தனைக் கண்டறிந்து விட்டதாக மட்டும் கூறினார்.
புனிதவதி புதையலை இழந்தாள். அதை மீண்டும் பெற்றதைப் போல அகமகிழ்ந்தாள். தனதத்தன் தான் மட்டும் சென்று பரமதத்தனை அழைத்து வருவதாகக் கூறியதை அவள் கேட்கவில்லை. இனியும் பொறுக்க அவள் சித்தம் இடம் கொடுக்கவில்லை. சில உறவினர் துணையோடு அவளும் பயணமானாள். அவனுக்குப் பிடித்த அணிகலன்களை அணிந்து கொண்டாள். ஆடை அலங்காரம் மேற்கொண்டாள். வளையல் கையை விட்டு ஓடியது. பசலை என வெட்கம் கொண்டாள். எதுவும் பொருந்தவில்லை. விரலில் அணிந்த சிறுமோதிரம் குச்சியில் சொருகினாற் போலவே காட்சியளித்தது. மூக்குத்தி மூக்கைவிட பெரிதாக வளர்ந்திருந்தது. மாட்டு வண்டியிலமர்ந்திருந்த தனதத்தன் மகளின் கோலத்தைக் கண்டு துணியால் வாய்பொத்தி அவளறியாமல் அழுது தீர்த்தார். எத்தனை பகல்? எத்தனை இரவு? மிக நீண்ட பயணம். புனிதவதி வண்டியைவிட்டு இறங்கவில்லை. வேறுவழியின்றி இரவு பகலாக பயணம் தொடர்ந்தது. சத்திரத்தில் தங்கி பரமதத்தனுக்கு ஓர் உறவினர் மூலம் சொல்லி அனுப்பினார்.
பரமதத்தன் பரிதவிப்பான கள்ளனைப்போல் ஓடி ஒளிவான் என நினைத்ததற்கு மாறாக, மனைவி மற்றும் மகளோடு அவர்களைப் பார்க்க வந்திருந்தான். பரமதத்தனோ, கணவன் விருப்பத்திற்கு மாறாக நடந்ததால்தான், புனிதவதியை விட்டு நீங்கினேன் என அவளை அவள் உறவுகளுக்கு முன்பாகவே நிறுத்தி தன் தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நினைத்தான். அவளோடு தன்னை அவர்கள் மீண்டும் சேர்க்க இயலாதபடி, தன் புது மனைவியையும் சிறு குழந்தையையும் அழைத்து வந்து அவர்களை செயலற்றுப் போகும்படி செய்ய நினைத்தான். ஆனால், புனிதவதியைப் பார்த்த அவன் கண்கள் அப்படியே குத்திட்டு நின்றுவிட்டன. அவள் கண்களிலிருந்த அன்பு மட்டும் மாறவில்லை. ஆனால், அவள் அவளா? அந்த உடல் அவளா? இதுவா புனிதவதி? உடல் குறுகி பொலிவிழந்து வற்றிப்போய் ஒரு எலும்புக்கூடாக நிற்பவளை நம்ப முடியாமல் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவனருகில் நின்ற பெண்ணையும் சிறுகுழந்தையையும் பார்த்தாள்.
பரமதத்தனுக்கு உண்மைக் காதலின் மகத்தான வடிவம் புனிதவதி வடிவில் நிற்பது போலப் புலப்பட்டது. தான் அவளுக்கு இழைத்த அநீதி நினைவிற்கு வந்தது. வழிமேல் விழிவைத்து நம்பிக்கையோடு காத்திருந்த கண்களில் தேக்கி வைத்திருந்த காதலின் சக்தியைக் களங்கமற்ற பார்வையால் தரிசித்தான். குற்றவுணர்வு பெருக்கெடுக்க ஓடிவந்து புனிதவதியின் காலில் விழுந்தான்.
கைப்பிடிக்க வேண்டிய கணவன் காலில் விழுந்த அதிர்ச்சியினால் ஓரடி பின் நகர்ந்தாள். அக்கணத்தில் புனிதவதி அவனைவிட்டும் நகர்ந்து விட்டாள். அவன் பிரிந்த இந்த மூன்றாண்டுகளாய் அவன் அருகில்லாத போதும் அருகிலிருப்பதாய் உணர்ந்தும் இப்போது அருகிலிருந்தும் விலகிக் கொண்டதும் தன்னிச்சையான செயலா?
தனதத்தன் பரமதத்தனோடு புனிதவதியை சேர்த்துவிட வேண்டும் என்றே அழைத்து வந்தார். ஒரு கணவன், இரு மனைவியரோடு வாழ்வது நடைமுறையில் உள்ளதுதானே. புனிதவதி எந்தளவு காதல் கொண்டிருந்தால், பரமதத்தனை நினைத்து வெறும் கூடாகியிருப்பாள்? அவளை அவனோடு சேர்த்துவிட வேண்டும் என்றே, தந்தை மனம் நினைத்தது. அதனால்தான், பரமதத்தனைத் தன்னிடத்திற்கு வரவழைக்காமல் புனிதவதியை அவனிடத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஆனால், பரமதத்தன் ஏன் காலில் விழுந்தான்? அவர்கள் பிரிவிற்குத் தன் மகள் மீது தான் ஏதோ தவறு என்றே நம்பியிருந்தார். இது மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. உறவுகளும் அதிர்ச்சியோடு இதைப் பார்த்துக் கொண்டிருந்தன.
பரமதத்தன் தன் தவறை ஒப்புக் கொண்டான். நடந்ததைக் கூறி, அவளை சந்தேகித்துவிட்ட பாவி நான். உண்மையில் சைவ சமயத்திற்கு மாறாகச் சிந்தித்தன் விளைவே அவளை தவறாக நினைக்கக் காரணமாகிவிட்டது. ஆனால், தன் தூய அன்பினால் என்னை இக்கணம் வென்று விட்டாள். அவள் தெய்வம். நான் பாவி என்று மாறிமாறிக் கூறிக்கொண்டிருந்தான்.
அவன் புது மனைவியோ, அவன் கதறலைக் கேட்டு புரியாமல் விழித்தாள். யாரோ துறவி அதனால் தான் கணவன் அவள் காலில் விழுகிறான் என நினைத்தாள். பின் இவள் அவன் மனைவியா? முதல் திருமணம் பற்றி எதுவுமே கூறவில்லையே? என்றுமேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினாள். உடன்வந்த உறவினர் அவளிடம் ‘அம்மா இவள் தான் புனிதவதி. பரமதத்தன் முறைப்படி மணந்த மனைவி. இதோ, இவர் தனதத்தர். பரமதத்தனின் மாமனார் ’ என கூறியபோது, ‘புனிதவதியா? புனிதவதியா? என் மகளுக்கு இந்தப் பெயரை நான் சூட்டலாம் எனக் கூறியபொழுது என் கணவர் அதை மறுக்கவில்லையே. முதல் திருமணத்தை மறைக்கத்தான் சரி என்று ஒப்புக்கொண்டு மகளுக்கு இப்பெயரை சூட்டினாரோ?’
பரமதத்தன் அவள் பார்வையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தான். புனிதவதி பரமதத்தனின் குடும்பத்தையே சிறிதுநேரம் பார்த்தாள். பின் ஏதும் சொல்லாமல் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
பரமதத்தன் தலைகுனிந்து நின்றிருந்தான். புனிதவதி யாரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வண்டியில் ஏறி அமர்ந்தாள். தனதத்தர் அவளுடன் வந்து அமர்ந்து கொண்டார். சொந்தங்களும் மீண்டும் நீண்ட பயணம் தொடங்கியது.
இரண்டு நாட்கள் கழித்து மாடுகளுக்காகவாவது இரவில் தங்க வேண்டும் என வேறுவழியின்றி, ஒரு மலையடிவாரத்தில் தங்கினார்கள். உறவுகள் உறங்கிவிட்டன. காலையில் கிளம்ப நினைத்து எழுந்தபோதுதான், புனிதவதியைக் காணவில்லை என உணர்ந்து பதறிப் போனார்கள். எங்கு போய்த்தேடுவார்கள்? ஏதாவது காட்டு மிருகம் இழுத்துச் சென்றுவிட்டதா? நாலா பக்கமும் உறவுகள் தேடிச் சலித்தன. இரவு வரை தேடியலைந்து தொடங்கிய இடத்தில் வந்து சேர்ந்தனர். புனிதவதி உண்மையிலேயே காணவில்லை.
புனிதவதியைக் காற்று தான் தள்ளிக்கொண்டு போனதா அல்லது கால்கள் தான் சக்கரங்களாக மாறினவோ யார் அறிவார்? மனமென்னும் சூறைக்காற்றுதான் அவளை இந்த ஆலமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். எத்தனை பகல்… எத்தனை இரவு… யார் அறிவார்?
தான் கணவனால் புறக்கணிக்கப்பட்டு விட்டதை உணர்ந்தளவில், மீண்டும் தன் ஊர் செல்ல அவள் மனம் உடன்படவில்லை. காற்றாய் மாறி , காணாமல் போய்விட விரும்பினாள். அவளுடைய எண்ணத்தை அவள் கால்கள் செயல்படுத்தி விட்டன. நூறு வருடங்களுக்கு மேலாக வளர்ந்து அடர்ந்து பெருத்திருந்த ஆலமரக் காட்டிற்குள் நுழைந்து சென்று கொண்டேயிருந்தாள். பகலா இரவா காலமறியாமல் நீண்ட பெருவெளியில் தடையற்று நடந்து கொண்டேயிருந்தாள். ஆலமரக் கிளைகளை மீறி வரும் ஒளிப் புள்ளிகள் தான் துணை. விழுதுகள் தாங்கிய ஆலமரங்கள் ஒவ்வொன்றும் கண்களுக்குள் அடங்க மறுத்தன.
கால்கள் துவண்ட நிலையில்தான், தளர்ந்து மரத்தடியில் அமர்ந்தாள். பசியும் களைப்பும் அழுத்த மயக்கமடைந்தாள். யாரோ நீர் முகத்தில் தெளிப்பதாக உணர்ந்து, கண் திறந்தாள். ஐயோ. . . இதென்ன. . . அவள் கண்ட காட்சி, கழுத்தில் பாம்பை மாலையாக அணிந்த ஒரு கருத்த பெரிய உருவம் நின்றிருந்தது. கையில் வழியும் நீருடன் அவளை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தது. புனிதவதிக்குக் குரல் வெளியே வரவில்லை. இது என்ன சிவபெருமானா? இடையில் புலித்தோலுடையுடன், உடலெங்கும் திருநீறு பூசி திடகாத்திரமான தோற்றத்துடன். . . புனிதவதிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.. . மீண்டும் மயக்கமானாள். அவளை யாரோ பலகை மீது வைத்து இழுத்துச் சென்றாற் போல உணர்ந்து கண் விழித்தாள். அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே நின்றிருந்தது. ஒவ்வொருவரும் தலைவிரி கோலத்துடன், சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியபடி எலும்புக் கூடு போல் நின்று கொண்டிருந்தனர்.
அவள் கண் விழித்ததை அறிந்ததும் ஒருவித வினோத ஒலி எழுப்பினர். பேயின் அலறலைப் போல், கூகையின் கூக்குரல் போல் அது இருந்ததால், புனிதவதிக்கு குலை நடுங்கியது. அப்போது அவள் மீது நீர்த் தெளித்த அந்த திடகாத்திரமான உருவம், அவளருகே வந்து ‘பயப்படாதே அம்மா, இதோ இதைச் சாப்பிடு’ என இரு வாழைப் பழங்களை நீட்டியது. கழுத்தில் இருந்த பாம்பு எங்கே? இப்போது கழுத்தில் பாம்பு இல்லை. உற்றுப் பார்த்தால் அது வெறும் கயிறுதான். பசி மயக்கத்தில் அது பாம்பாகத் தோன்றியிருக்கிறது. புனிதவதி தயங்கினாள். ‘பயப்படாதே அம்மா, சாப்பிடு’ என கனிவோடு அந்த உருவம் கூறியது. அதனோடு இருந்தவர்கள் ஆவலோடு அந்த வாழைப் பழத்தையே நோக்கினர். புனிதவதி அந்த உருவத்தின் கனிவான குரலில் இருந்த அன்பினால் கட்டுப்பட்டு பழத்தை வாங்கி உண்டாள். ஓரளவு பசி நீங்கியது. இவர்கள் யார்? இந்தக் காட்டில் என்ன செய்கிறார்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மனது குழம்பித் தவித்தது. பயத்தில் நா எழவில்லை. இது நடுக்காடா? அல்லது சுடுகாடா? புனிதவதி அன்புக் கட்டளையை ஏற்று வேறு வழியின்றி சில நாட்கள் இருந்தாள். உடல் தேறியதும் அவள் செல்ல வேண்டிய இடம் குறித்து வினவினார்கள். புனிதவதி தலையசைத்து மறுத்தாள். ‘சரி வா அம்மா நம்ம இடத்திற்குப் போகலாம்’ என்றவர்களுடன் புனிதவதி நடந்தாள். ஆலங்காட்டிற்குள் வாழிடமா? இதுதான் இவர்களின் இருப்பிடமா? இவர்கள் காட்டுவாசிகளா? களைப்பில் சிந்திக்கக் கூட முடியவில்லை. அவர்கள் நடந்து கொண்டேயிருக்க புனிதவதி மேற்கொண்டு நடக்க முடியாமல் நின்றுவிட்டாள். தொலைவில் ஏதோ எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒளியைச் சுற்றி சிறு கூட்டம். என்ன செய்கிறார்கள்? நீளமாக அடுக்கப்பட்ட விறகின் மீது எரிவது என்ன? புனிதவதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அது ஒரு பிணம். அதைச் சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டம், எரிந்த பிணத்தை எடுத்து எடுத்து உண்டு கொண்டிருந்தது. அதில் சிலர் மண்ணை வாரியிறைத்து நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தனர்.
ஆந்தைகளும், கூகைகளும் திடீரென்று அலறின. நரிகளும் பெருங்குரலால் அலறின. நரிகள் கூவும் திசையெல்லாம் புனிதவதி பார்வையைத் திருப்பினாள். ஆங்காங்கே நிறைய ஒளிவிளக்கு போல் பிணங்கள் தொலைவில் எரிந்து கொண்டிருந்தன. ஈட்டி, இலவம், ஈகை, கூரை, காரை போன்ற அடந்த பாலை நிலத்து மரங்கள் அந்த ஒளி வெளிச்சத்தில் தென்பட்டன. இது ஒரு பாலை நிலப்பகுதி. முள் மரங்கள் கருகி, கள்ளிகள் வற்றிக் காணப்படுகின்றன. இது ஒரு வெங்காடு. பிணந்தின்று வாழும் இப்பகுதி மனிதர்கள், பேய்கள் என வெளி உலகத்தாரால் அழைக்கப்படுவதைப் புனிவதி கேள்விப்பட்டிருக்கிறாள். பிணம் எரியும் நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது.
பிணங்களின் உடலிலிருந்த நிணம் உருகி நிலம் நனைந்துள்ளது. அது தவிர வேறு நீரை அறியாத வறட்டு நிலச் சுடுகாட்டுப் பகுதி அது. அப்பிணம் எரிந்த இடத்தைத் தாண்டி அவளை அழைத்து வந்த கூட்டம் முன்னேறியது. பசியா? களைப்பா? உடல் சோர்வா? அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
அவளுக்கு உதவிய அக்கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி அவள் நிலை புரிந்து மெதுவாக அவளுடன் நடந்து வருவதாகக் கூறி மற்றவர்களை முன் செல்லுமாறு கூறினாள். புனிதவதி அப்பொழுது தான் அவர்களை முழுமையாகக் கவனித்தாள். எண்ணெய் கொண்டு நீவப்படாத தலை முடி தேங்காய் நாரைப் போல குத்திட்டு நின்றிருந்தது. குழி விழுந்த கண்கள், கன்னங்களுக்குப் பதில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. கைகளும் கால்களும் குச்சியாய் நீண்டிருந்தன. நகங்கள் நீண்டு வளர்ந்திருந்தன. பற்களா அவை, கறை பிடித்து கூர் கூராய். . . சேலை என்று ஒன்றை சுற்றிக் கட்டியிருந்ததால் பெண் என அடையாளப்படுத்த முடிந்தது. அவள் கண்களில் தெரிந்த கனிவுதான் புனிதவதிக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்து கொண்டிருந்தது.
உடன் வந்த ஆண்களின் தோற்றமும் இப்படித்தான் இருந்தது. இவர்கள் யார்? காட்டுவாசிகளா? இல்லை. . . . . பேய்களா? புனிதவதிக்குள் தொடர்ச்சியாக கேள்விகள் மனதில் எழுந்த வண்ணமிருந்தன. அவள் பேச சக்தியற்று அமர்ந்திருந்தாள். ‘எழுந்திரு அம்மா, கொஞ்ச தூரத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது. அங்கு சென்றால் ஏதாவது கிடைக்கும். மாலை மங்கும் நேரம். ஓநாய்களும் நரிகளும் வரும் இடம் இது. நம்மை அவர்கள் அங்கு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்’ என்று அந்தப் பெண் எழுந்து சொல்லியபடியே திரும்பிப் பார்க்காமல் விரைவாக நடந்தாள். புனிதவதியும் வேறு வழியின்றி அவளைப் பின் தொடர்ந்தாள். இன்னும் எவ்வளவு தூரமோ? புனிதவதிக்குக் குழப்பமாக இருந்தது. நான் ஏன் இவர்களுடன் சென்று கொண்டிருக்கிறேன்? பின் எங்கு செல்வது? என் ஊருக்கு திரும்பிச் செல்ல பிடிக்காமல் தானே யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டேன். புனிதவதிக்கு தந்தையின் நினைவும் பரமதத்தனின் நினைவும் வந்தது. அதைத் தவிர்க்க முயற்சித்தாள். அந்தப்பெண் அவளுக்காக முன்னே எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவளது கையைப் பற்றியபடி விரைவாக நடந்தாள். அந்தப் பெண்போல விரைவாக நடக்க முடியவில்லை. அந்தப் பெண் அவளை இழுத்தபடி காட்டில் முன்னேறிக் கொண்டேயிருந்தாள். அதிர்ச்சியினால் புனிதவதி வாய் திறக்கவில்லை. பாழுங்கிணறு அருகே அவர்கள் காத்திருந்தார்கள். அந்தப் பெண் அவள் கையைப் பற்றிய படியே பாழுங்கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டிற்குள் இறங்கத் தொடங்கினாள். அந்தப் பெண் கையை விடுவதாக இல்லை. கடைசிப் படிக்கட்டில் போய் நின்ற பின்தான் பற்றிய கையை விடுவித்தாள். கிணற்றில் நீர் குறைவாகத்தான் இருந்தது. இலைகளும், சருகுகளும் நிறைந்து கிடந்தன. அந்தப்பெண் குனிந்து நீரை முகந்து குடித்தாள். ஆசை தீரக் குடித்த பின், புனிதவதியை குடிக்கச் சொன்னாள். புனிதவதிக்கு அருவருப்பாக இருந்தது. எனினும், தாகம் வாட்டியதால் நீரைப் பருகக் குனிந்தாள். அவள் உருவம் அதில் தெரிந்தது. அதிர்ந்து போனாள். அவளா அது? அவளேவா? இல்லை அந்தப் பெண்ணின் உருவமா? நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். கண்கள் பெரிதாகி, கன்னங்கள் குழிவிழுந்து, தோள்களில் நரம்பு புடைத்து, வெண் பற்கள் நீண்டு, குழிந்த வயிற்றுடன் கொங்கைகள் இறங்கி. . . . ‘சீக்கிரம் வா அம்மா. . . ? அந்தப் பெண், அவளின் நிலை உணர்ந்து கனிவாக அழைத்தாள். புனிதவதி நீரைப் பருகிக் கிணற்றை விட்டு வெளியே வந்தாள். அவளுக்கு அவர்கள் எதையோ உண்ணக் கொடுத்தார்கள். மீண்டும் நடை தொடர்ந்தது. இம்முறை சிறிது தூரத்திலேயே சிறுசிறு குடிசைகள் தென்படத் தொடங்கி விட்டன. அருகில் சென்றதும் ஒருவித ஒலியை எழுப்பினர். குடிசைகளிலிருந்து எலும்பும் தோலுமாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வெளிவந்தனர். ஒருவரைப் பார்த்தார் போலவே அனைவரும் பற்கள் நீண்டு, கண்கள் குழி விழுந்து, குச்சியாய் கை கால்களுடன். . .
அப்போதுதான் கவனித்தாள் அவர்களின் மையத்தில் தான் மயங்கி விழக் காரணமாயிருந்த திடகாத்திர உருவம் நின்றிருந்தது, எல்லோரையும் விட உயரமாக ஆனால் உறுதியாக ஒரு போர் வீரனின் கம்பீரத்துடன் நின்ற அந்த உருவம் தான் தலைவன் போலிருக்கிறது. ஆனால், கருணை பொங்கும் அக்கண்கள் அவள் தந்தையைப் போல் அவளை நோக்கியது. புனிதவதிக்குத் தன் தந்தையின் நினைவு வந்தது. அவரை விட்டு வர எப்படித் துணிந்தேன். ஆனால் எந்த முகத்தோடு இனி என் ஊரில் நான் வாழ்வேன்? பரமதத்தன் ஏன் அப்படிச் செய்தான்? ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டாள். ஏதோ நிழலாடியது. அந்த கம்பீர உருவம் அவளை நோக்கி வந்தது. ‘வா அம்மா, இதோ இந்த வீட்டிற்குள் இருந்து கொள். உனக்கு மீளி அனைத்து உதவிகளையும் செய்வாள்’ என புனிதவதியின் உடன் வந்த பெண்ணை நோக்கிக் கூறினார்.
மீளி, புனிதவதியை அழைத்துக் கொண்டு குடிசைக்குள் சென்றாள். இரண்டு பேர் மட்டுமே தங்கக் கூடிய ஒரு பழைய குடிசை அது. ஒரு பானையைத் தவிர குடிசையில் வேறொன்றுமில்லை. மீளி, ‘நீ உட்கார் அம்மா, தண்ணீர் எடுத்து வருகிறேன்’ என்ற படி பானையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மீளி திரும்பி வரும்போது உண்பதற்குச் சோற்றை எடுத்து வந்தாள். குழம்பு எதுவுமில்லை. அவளுக்கு ஒரு சட்டியில் போட்டு நீட்டினாள். ‘இந்தாம்மா சாப்பிடு, இன்னைக்கு சோறு கிடைச்சிறுக்கு நாளைக்கு என்ன கிடைக்குதோ?’ என்றபடி அவளை எதிர்பார்க்காமல் அந்த பழைய சோற்றை அள்ளி அள்ளி உண்டாள். புனிதவதி அவள் சாப்பிடும் வேகத்தையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மீளி, அவளை எதிர்பார்க்காமல் குடிசையின் ஒரு பகுதியில் நீட்டிப் படுத்து விட்டாள். வெளியில் வெகு அமைதி. புனிதவதி வெகுநேரம் அந்த அமைதியை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
எங்கோ கூகைகளின் குரலும் நரிகளின் குரலும் கேட்டாற் போலிருந்தது. பின் நீண்ட அமைதி. புனிதவதி வேறு வழியின்றி வெறும் சோற்றை உண்டு விட்டு தானும் படுத்துக்கொண்டாள். மறுநாள் மீளி எழுப்பி, தலைவர் அழைப்பதாகக் கூறினாள். புனிதவதி அரக்கப்பரக்க எழுந்தாள். மீளியுடன் சென்று தலைவரைச் சந்தித்தாள். அவர் கல்லினால் ஆன ஒரு பலகையில் அமர்ந்திருந்தார். ‘வா அம்மா என்றார். இங்கே நீ விரும்பினால் தங்கலாம். மறுபடி உன் ஊருக்குப் போக விரும்பினாலும் போகலாம். நீயாக சொல்லும் வரை உன் வாழ்க்கை குறித்து இங்கு பேசமாட்டார்கள். ஆனால் இது இடுகாடு. நாட்டில் கிடைப்பதெல்லாம் இங்கு கிடைக்காது. இங்கிருப்பதனால் இதைப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும். போகப்போக நீயே அறிந்து கொள்வாய்’ என்றார்.
‘நீ போகலாம் அம்மா’ என்றவர், மீளியின் காதில் ஏதோ சொன்னார். புனிதவதி குடிசைக்குத் திரும்பினாள். மற்ற குடிசைகளிலிருந்தவர்கள் எங்கே மாயமாய்ப் போனார்கள்? நேற்று அத்தனை பேரும் இருந்தார்களே! இப்போது எங்கு போனார்கள்? புனிதவதி அந்த வெறுமையைக் கண்டு பயந்து போனாள். குடிசைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள். கதவென்ற பெயரில் ஒரு தட்டி இருந்தது.
சிறிது நேரத்தில் மீளி வந்தாள். அவளை நோக்கி, ஒரு ஆடையை நீட்டினாள். புனிதவதிக்கான மாற்று உடை. யாரோ பயன்படுத்திய உடை போலிருந்தது. சிறிது நேரத்தில் மீளி வருவதாகச் சொல்லி கிளம்பி விட்டாள். புனிதவதிக்கு அங்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. நீண்ட நேரம் கழித்தே மீளி வந்தாள். கையில் இரு வாழைப்பழங்கள், அவ்வளவே. அவளிடம் நீட்டிவிட்டு மீண்டு கிளம்பி விட்டாள். புனிதவதி பழைய நினைவுகளில் தவித்தாள். பரமதத்தனை அவளால் மறக்க முடியவில்லை. அவன் ஏன் அப்படிச் செய்தான்? அவனுக்காகத் தானே வாழ்ந்தேன். அவன் விரும்பிய வண்ணமெல்லாம் என்னை மாற்றிக் கொண்டேனே! அவன் விரும்பிய எல்லாம் எனக்கும் விருப்பம் ஆயிற்றே. அவன் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொன்னதில்லையே. அவனுக்காகப் பார்த்துப் பார்த்து அனைத்தும் செய்தேனே. பலநாள் சிவனடியார்களைக் கூடத் தவிர்த்தேனே. அவனுக்கும் சிவனுக்கும் என்ன பகை? சைவ மரபினனான அவன் சிவத்தின் பொருள் தெரியாமல் போனது ஏனோ? சிவம் என்றால் அன்பு தானே. அன்புடையார் நெஞ்சமெல்லாம் சிவன் உறையும் திருக்கோவில் அன்றோ? அன்பில்லாமல் வாழ் என்றால் அது சாத்தியமா? அது வாழ்க்கையா? பிற சமயத் தாக்கத்திலிருந்து சிறிது நாளில் விடுபட்டு விடுவான், வணிக மோகத்தில் தவறான பாதையில் செல்பவன் சிவத்தின் தத்துவத்தை உணர்ந்து நேர்வழிக்குத் திரும்பி விடுவான், தன்னுடைய அன்பு அவனை சரிபடுத்தி விடும் என்றெல்லாம் நினைத்தது பொய்யாகப் போயிற்றே. பசித்து வந்தவர் யாராக இருந்தால் என்ன? உணவிடுவது தானே இல்லறத்தோர் கடமை. அக்கடமையை சிவனடியாருக்கு மட்டும் மறுத்துவிடு என்பது எப்படி சரியாகும். ஐயோ! இப்படி கூட நான் இல்லறத்திலிருக்கும்போது சிந்தித்ததில்லையே, அவன் வாக்கை மீறக் கூடாது என்று தானே கட்டுப்பாடாக இருந்தேன். வயதான ஒரு கிழவர் வாய் திறந்து ‘பசி’ யென்று உணவு கேட்ட பின்னும் தடுமாறினேனே. வேறு வழியின்றி தானே கனியைக் கொடுத்தேன். அதற்கா இந்தத் தண்டனை? இது தர்மத்திற்கே கிடைத்த தண்டனை போலல்லவா இருக்கிறது?
என் நிலையை விளக்கக்கூட அவகாசம் தரப்படவில்லையே. இதுதானா பெண்ணின் நிலை? புனிதவதிக்கு சிந்திக்கச் சிந்திக்க துக்கம் பெருகிக் கண்ணில் நீர் பெருகியது. தந்தை வளர்த்த பெண் என்பதால் தான் ‘வளர்ப்பு சரியில்லை’ என கணவன் யாரிடமும் சொல்லாமல் வேறொரு பெண்ணை மணந்து கொண்டான் என ஊர் தூற்றிக் கொண்டிருக்குமே! தந்தை இதைக் கேட்டு எப்படி துடிப்பாரோ?
ஒரு சில சமயம், ‘தன் மீது தான் தவறோ?’ என்று கூட புனிதவதி நினைத்து மறுகினாள். பரமதத்தனுடன் வாழ்ந்த இனிய நாட்கள் நினைவிற்கு வந்தன. எப்படியெல்லாம் மகிழ்ந்திருந்தார்கள். ஊரார் பெருமை பேசும் வகையில் அவர்களது வாழ்க்கை இருந்ததே. புனிதவதி வந்த நேரம் தான் பரமதத்தனின் வாணிபம் மேலோங்கத் தொடங்கியது என அக்கம் பக்கத்தார் கூறியபோது பரமதத்தனே பூரித்து மகிழ்ந்தானே. அவளின் இசைத்திறமை கண்டு வியந்து பாரட்டியதெல்லாம் நினைவிற்கு வந்தது. அதே சமயம் அவன் முகத்தில் தோன்றிய தாழ்வு மனப்பான்மையும் குற்றவுணர்வும் நினைவிற்கு வராமல் இல்லை. சிவனடியாருக்கு கனி கொடுத்ததற்காக மட்டுமா பரமதத்தன் கோபித்துக் கொண்டான். இல்லையில்லை. அவளின் அறிவு ஒளியைக் கண்டு சில நாட்களிலேயே விலகிச் சென்றதும், அவளை விடத்தான் அதிகமாகத் தெரிந்தவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக சைவம் பற்றிய தவறான கதைகளை எடுத்துக் கூறியதும் நினைவிற்கு வந்தது. அவள் கண்மூடி எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ தெரியாது. வயதான தந்தையை விடுத்து வந்தது சரியா? அவர் மனம் என்ன பாடுபடும். ஆனால், நான் கணவனில்லாமல் தந்தை வீட்டில் எப்படி வாழ்வnன்.
விதவையாகவும், மணமுடிக்காத கன்னியுமாக இருந்திருந்தால் தந்தைக்காகவாவது வாழ்ந்திருக்கலாம். வாழாவெட்டியாக வாழ்வது தான் மிகக் கொடுமையானது. கண்ணகி போல தவறிழைத்த பின்னும் திரும்பி வந்த நிலையில் கணவனை ஏற்றுக் கொண்டதைப் போல என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. அப்படி வாழ்வதினும் இச் சுடுகாட்டில் வெந்து மடிவதே மேல். மீளி அவளை ‘அம்மா, அம்மா!’ என்று உலுக்கிய போது தான் நிலைக்கு வந்தாள். அவள் எதிரே சிறிய துணியில் கலவையான உணவு சோறு நிறைந்திருந்தது. மீளியும் எதிரே அமர்ந்து கொண்டாள். ‘சாப்பிடு அம்மா. இன்றைக்கு நல்ல விருந்து. இன்னைக்கு இரவு சிவபூஜை தவறாமல் கலந்துக்கணும். உள்ளயே இருக்காதே. என்னோடு வா’ என்ற படி துணியில் விரிக்கப்பட்டிருந்த உணவை பாதியாக்கி ஒரு பாதியை உண்ணத் தொடங்கினாள். புனிதவதிக்கு வியப்பாக இருந்தது. புனிதவதி அழுததைப் பார்த்த பின்னும் ‘ஏன் அழுதாள்?’ எனக் கேட்காத அவளது நாகரிகம் அவள் மீது மதிப்பை ஏற்படுத்தியது. நடு இரவு வரும் வரை காத்திருந்து, மீளி அவளை அழைத்துச் சென்றாள். முழு நிலாவில் காட்டிலிருந்த எட்டி, இலவம், பாலை மரங்கள் தலைவிரித்து பேய்கள் நிற்பதைப் போல அச்சுறுத்திக் கொண்டிருந்தன. சிறிது தூரத்திலேயே ஒரு பெருங்கூட்டம் அமர்ந்திருப்பதை அவள் கண்டு கொண்டாள். கல்லினால் செய்யப்பட்ட இலிங்கம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மஞ்சள், குங்குமம், திருநீறு அதற்குப் பூசப்பட்டிருந்தது. ஒரு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிலர் செய்து கொண்டிருக்க, சிறு அரவம் கூட எழாமல் அனைவரும் மந்திரத்தால் கட்டுப்பட்டதைப் போல அமர்ந்திருந்தனர். மீளியோடு புனிதவதியும் சென்று அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் பூசை தொடங்கியது. புனிதவதி உடன் இருந்தவர்களைக் கவனித்தாள். அப்பப்பா என்ன பயங்கரம். பல பேர் இரு கால்களில்லாமல் இருந்தனர். சிலபேர் இரு கையோ, ஒரு கையோ இல்லாமல் . . ஒரு உருவத்திற்கு கைகளுமில்லை, கால்களுமில்லை. சிலபேருக்கு உடல் முழுதும் வெட்டுக் காயங்கள். ஒருவனுக்கு ஒரு கண் குழியாக இருந்தது. யார் இவர்கள்?
பெண்களின் தோற்றமோ. . . ? சிலபேர் பித்துப் பிடித்தாற் போன்று இருந்தார்கள். உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள், வயது முதிர்ந்த தளர் நடையினர். . . . சிறுவர்களிலும் ஊனமுற்றவர்கள். . . நோயளிகள். . . அனைவரும் சொல்லி வைத்தாற் போல் வரிசையாக அமர்ந்து கொண்டனர். மீளி அவளிடம் ஒரு சோற்று மூட்டையைக் கொடுத்தாள். அனைவருக்கும் கொடுக்கும்படி கூறியதோடு தானும் இரு கைகளால் அள்ளி அமர்ந்திருந்தவர்களின் பாத்திரத்திலும் அவர்கள் தூக்கிப் பிடித்த ஆடையிலும் அள்ளிப் போட்டபடி முன்னேறினாள்.புனிதவதியும் அப்படியே செய்தாள். விருந்து முடிந்து அனைவரும் கலைந்தனர். பின் குடிசைக்கு மீண்டனர்.
புனிதவதி வாய் திறந்து கேட்குமுன் மீளி, ‘ஊரில் திருவிழா அதுதான் உணவு நிறைய கிடைத்தது’ என்றபடி படுத்து உறங்கிப் போய்விட்டாள், என்ன களைப்போ. . . பாவம். . . புனிதவதிக்குள் பல கேள்விகள். குடிசையை விட்டு வெளியே வந்தாள். பூசை நடந்த இடத்திற்கு அவள் கால்கள் இழுத்துச் சென்றன. அங்கு யாருமில்லை. மயான அமைதி நிலவியது. அந்த சிவ லிங்கத்தின் முன் அப்படியே தியான நிலையில் அமர்ந்து விட்டாள். அவளுடைய முந்தைய வாழ்வும் இந்த வாழ்வும் மாறி மாறி அவள் நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தன. பரமதத்தனும், அவனுடைய மனைவியும், மகளும், ஊராரும், அவளுடைய தந்தையும் மாறி மாறி அவளுக்குள் தோன்றிக் கொண்டேயிருந்தனர். அவள் மனதை ஒரு நிலைப்படுத்த முயன்றாள்.
அவளுக்கு முன் யாரோ நின்று அவளையே பார்ப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு கண் விழித்தாள். ஒரு வயதான மூதாட்டி கனிவுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இந்த நேரத்தில் இங்க இருக்கக் கூடாதும்மா. சின்னப் பொண்ணா இருக்க. வாம்மா எங்கூட’ என்றாள். வெகு அருகிலேயே அவள் குடிசை இருந்தது. உள்ளே நுழைந்து அமரச் சொன்னாள். தானும் பக்கத்தில் அமர்ந்தாள். சன்னல் வழியாகத் தெரிந்த நிலவு மட்டுமே இருவருக்கும் சாட்சி போலக் காட்சியளித்தது. ‘யாரம்மா நீ? இங்க எப்படி வந்தே?’ என வினவினாள். புனிதவதி தயங்கினாள். அந்த மூதாட்டி, ‘சரிம்மா உன்னை எதுவும் கேட்கலை யாரோட தங்கியிருக்க’ என்றாள். ‘மீளி என்ற பொண்ணோடு’ என்றாள். ‘மீளியா. . . நல்ல பெண்.. . சோழ வம்சத்து வாரிசு இங்க வந்து பேயா அலையுது எல்லாம் விதி’ என்றதும் புனிதவதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அந்த மூதாட்டி சொல்லிக் கொண்டேயிருந்தாள். அதில் தான் அந்தக் காட்டின் இரகசியமே புலப்படத் தொடங்கியது.
களப்பிரர்களுடன் ஏற்பட்ட போரில் தோற்ற சோழ, பாண்டியர்களும் அவர்களின் வீரர்களும் கொல்லப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் இருந்த சூழலில் தப்பிப் பிழைத்தவர்கள் தஞ்சமடைந்த சுடுகாடு அது. போரில் உடல் உறுப்பு குலைந்தவர்களின் புகலிடமாக மாறியிருந்தது. போரில் தந்தையும், கணவனும், மகனும் இறக்க எதிரி மன்னர்களின் ஆட்சியில் அனாதைகளாகப் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் மானம் காத்த தாய்வீடு அது. பிறக்கும்போது ஊனமுடனும், மூளை வளர்ச்சி குன்றியும், இடையில் நோயினால் முடமானவர்களுமாக, புறக்கணிக்கப்பட்டவர்களின் புகலிடம் அது.
அப்பாலை நிலக் காட்டில் உணவுப் பஞ்சத்தினைப் போக்க வழியறியாது, பகலெல்லாம் காட்டிலிருந்து கிளம்பி ஊருக்குள் நுழைந்து பிச்சையெடுத்து உண்டும், உணவு கிடைக்காதபோது சுடுகாட்டில் பிணத்தையும், பிணத்திற்காக இடப்பட்ட வாயரிசியையும் நம்பி வாழும் கூட்டம் அது. அவர்களையெல்லாம் அன்பும் ஆதரவும் காட்டி ஒருங்கிணைத்துப் பாதுகாத்து வருபவர் அந்தத் தலைவர்தான். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் புகலிடமற்றவர்களின் புகலிடமாக அக்காட்டை மாற்றியவர் அவரே. அவரின் அன்பிற்குக் கட்டுப்படாத ஜீவராசிகளே இல்லை. பாம்பும், புலியும் ,நரியும், ஓநாயும் இக்குடிசைப் பகுதிகளுக்கு வராமலிருப்பதே அவரின் ஆற்றலால்தான். அவர் மகா யோகி. ஆடற்கலையில் எவ்வளவு வல்லவரோ வீரத்திலும் அதற்கு நிகரானவர். ஆனால் அவர் மனதில் பொங்கியெழும் தாயன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. அவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கெண்ட அவரால்தான், ஒரு வேளை உணவாவது அவர்களுக்கு இந்த வெங்காட்டில் கிடைக்கிறது. அவர்களுக்காக இக்காட்டைத் தாண்டிச் சென்று எங்கெங்கோ சுற்றியலைந்து உணவு தேடிக் கொண்டு வருபவர் அவரே. அவர் தோற்றத்தில் எளியர். அதே சமயம் இங்கு வாழும் மக்களுக்குப் புறத்தாhரால் தீங்கென்றால் கடும் அனலாய் மாறி அவர்களைத் தீக்கிரையாக்கிடுவார். அவர்தான் அவர்களைக் காக்கும் கடவுள். அன்பே உருவான அவரையே சிவனாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். மூதாட்டி விழிகளில் நன்றிப் பெருக்கெடுக்க சொல்லிக் கொண்டே இருந்தாள்.
அன்புடையார் நெஞ்சமெல்லாம் சிவனே நிறைந்திருப்பதால், அன்புடையார் எவரோ! அவரே சிவம் என்று தான் நினைத்ததையே அம்மூதாட்டியும் கூறியதைக் கேட்டு புனிதவதிக்கு உடல் சிலிர்த்தது. ‘சிவன் உருவம் எது என்று கேட்பவர்களே உண்மையான அன்பு பூண்டு துன்பப்படுவோர் துன்பத்தைத் தீர்ப்பவரின் தோற்றமெல்லாம் அச்சிவனின் வடிவமே, இதை நெற்றியில் ஞானக் கண் உடையவர்களே அறிய முடியும்’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
புனிதவதி தெளிந்தாள். சிவனின் கழுத்திலுள்ள பாம்பு, அவன் கழுத்தில் அணிந்திருந்த பிறை வடிவ பன்றிக் கொம்மையும், அவன் தலையில் சூடியுள்ள பிறையையும் பார்த்து அறிவு மயங்கி நின்றதைப் போல, தானும் கீழான உலக இன்பங்களை உண்மையென்று வாழ்ந்து வந்ததை நினைத்து வெட்கினாள். உண்மையான மேலான பிறை என்பது இறையடியன்றோ. துன்பப்படும் உயிர்களிடத்தில் இரக்கம் காட்டும் தயாபரனின் இறையடியைத் தவிர பற்றுவதற்கு வேறொன்று உண்டோ?
நான் பிறந்தது முதல் சிவன் ஒருவனையே நினைத்து இருந்தேன். இனியும் அவனே எனத் துணிந்து விட்டேன். அதனால் பிறவிப் பிணி ஒழிந்தேன். அவனையே உள்ளத்தில் அடைத்து வைப்பேன், அவன் இரங்கவில்லையாயினும், அவனுக்கே ஆட்படுவேன். என் பிறவிப் பிணியை நீக்கா விட்டாலும், அவனை வணங்குவதை நான் விட மாட்டேன். என் மனத்தையே அவன் வாழும் கோயிலாக்குவேன். புனிதவதி தன் மனம் நேர்பாதையில் செல்வதை உணர்ந்தாள். தெளிந்தாள். முந்தைய நினைவுகளும் தற்போதைய வாழ்க்கையுமான இருமை நிலையில் தான் மயங்கிக் கிடந்ததை நினைத்துத் தனக்குள்சிரித்துக் கொண்டாள். இல்லற வாழ்வின் அந்தம், அன்பு நிறைந்த துறவற வாழ்வின் தொடக்கமாக ஆதியாக அமைந்து விட்டது. சிவத்தின் பொருளை அனுபவத்தின் வாயிலாக கண்கூடாகக் காண்பதற்காகவும், உணர்வதற்காகவும் தான் இந்நிலை தனக்கு சேர்ந்ததோ?
புனிதவதிக்கு இறையின் தத்துவம் புரியத் தொடங்கியது. சிவமாவது எளிதல்ல. ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலக் கோட்டையை மனத்திற்குள் எரித்து அழித்து குண்டலியெனும் அரிய பாம்பை அடக்கி, அதை வசப்படுத்தி, துன்பப்படுவோரின் துயரை நடுநெற்றி ஞானக் கண்ணால் உணர்ந்து, அவர்களோடே வாழ்ந்து, அவர்களின் துயர் நீக்கப் பாடுபடுவோரே உண்மையான சிவனாக முடியும். வெறும் நுhலறிவு மட்டும் உடையவர்கள் இந்த உண்மையை உணராமல் வீணே பேசித்திரிகிறார்கள். இறைவன் துன்பப்படுவோரின் துயரம் நீங்கும் வகையில் அவர் விரும்புகிற வண்ணம் , எக்கோலத்திலும், எவ்வுருவிலும் காட்சியளிப்பான். இந்த அற்புதத் தத்துவத்தை உணர்வதற்காகவே, இந்நிலை தனக்கு ஏற்பட்டுள்ளது. இறைவனின் கருணைத்திறம் உண்மையிலேயே அளப்பரியது. சமுதாயத் தொண்டென்னும் உயரிய தத்துவத்தை எனக்கு உணர்த்தி விட்டான். புனிதவதியின் நெஞ்சு விம்மியது.
இல்லற வாழ்வே உயர்வென்று நினைத்த மட நெஞ்சே, துன்புறுவோர் உரையாலும் உடலாலும் தொழுது நிற்கும், பிறை சூடிய பெருமானின் திருக் கூட்டத்தைச் சேர்ந்ததன் மூலம் பிறவிப்பிணி ஒழிந்து விட்டாய். சிவனின் இடப்பாகத்தில் இருப்பவன் திருமால் என்கிறார்கள். காத்தலும் அழித்தலும் சிவன் தொழில் என்பதால், திருமால் ஒரு பாதி சிவன் ஒரு பாதி கொண்ட தோற்றத்தை மகேசுவரன் என்பார்கள். உண்மையில் காத்தல் தொழில் பெண்களுடையதன்றோ? குழந்தைகளையும் இல்லறத்தாரையும் சுற்றத்தாரையும் கருணை பொங்கும் தாயன்பினால் காப்பது பெண்மையின் இயல்பன்றோ? எனவே சிவனின் இடப்பாகம் காத்தல் தொழிலுக்குரிய உமைக்குரியது.
வீரமும் தாய்மையும் நிறைந்தவன் சிவன். சிவனும் சக்தியும் இணைந்த தோற்றமே சிவனுக்குப் பொருத்தமானது. அத்தோற்றமே உலகை வாழ்விப்பது. இந்த அற்புதத்தை உலகம் உணரும்படி செய்வேன். புனிதவதி தன் இல்லற வாழ்வின் அந்தம், ஆதியாகிய சிவனின் அற்புத கோலத்தை உணர கிடைத்த ஆனந்த உணர்வை மனதிற்குள் கவிதையாக்கினாள். அற்புதத் திருவந்தாதி யாக்கினாள்.
புனிதவதி பேச்சற்று சிந்தனையிலாழ்ந்து விட்டதை அறிந்த மூதாட்டி, அவளை மெல்லத் தொட்டு சுயநிலைக்குக் கொண்டு வந்தாள். புனிதவதி பொருள் பொதிந்த பார்வையை மூதாட்டியின் மீது வீசினாள். அம்மா எனக்கு ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வேண்டும். இக்காட்டில் எங்கு கிடைக்கும் என வினவினாள்.மூதாட்டி ‘மீளியிடம் சொன்னால் எப்படியாவது கிடைத்து விடும் அம்மா. இப்போது குடிசைக்குச் செல்லலாம் வா’ என்றாள்.
ஒரு திங்கள் ஆயிற்று. புனிதவதி தனித்துச் செல்லவும், கிடைத்ததை உண்ணவும், கிடைக்காத நேரத்தில் தியானத்தில் ஆழவும் கற்றுக் கொண்டாள். சிவனோடு மனத்திற்குள் உரையாடினாள். நீலமணி மிடற்றினான சிவனே, பிற உயிர்களைக் காக்க ஆலமுண்டதால் கருத்த கண்டத்தைப் பெற்றாயே. அதை இருட்டின் வடிவம் என்பதா? இல்லை உன் கருணைக்கு அடையாளமாக நின்ற கருமுகில் என்பதா? உன் கழுத்தில் அணிந்துள்ள பாம்பை நீக்கிவிட்டு, நீ பிச்சையெடுக்கச் செல். உனக்கு உணவிட விரும்பும் பெண்கள் இதனால் அஞ்சியோட மாட்டார்கள். அவர்களுக்கும் அருள் செய். உமையவளின் மீதுள்ள பேரன்பினால் அவள் தனித்திருக்க அஞ்சவாளென்று இடப்பாகத்தே அவளையும் சுமந்து கொண்டு அலைகிறாய். உன்னைத் தேடி பாதாளமெங்கும் அலைபவர்கள் என்னைப் போன்ற ஏழைகளின் சிந்தையிலும் நீ உள்ளாய் என்ற உண்மையை அறியாதவர்கள். இப்படியாகச் சிவனோடு உரையாடத் தொடங்கிவிடுவாள்,
சிவன் அவள் மனத்திற்குள் தோழனானான். அவனுடன் உரையாடுவதில் அவனை கேலி செய்வதில் மன நிறைவு கண்டாள். புனிதவதியின் ஓலைச் சுவடிகளைப் படித்த மீளி அவள் சிவனை நோக்கி எழுப்பியுள்ள சிறுபிள்ளைத்தனமான வினாக்களையும், அவனோடு கொண்ட உரையாடல்களையும் இரசித்துப் படித்தாள். பின் அவளைஅருகே அழைத்து அவளை ஆசன நிலையில் அமரச் செய்தாள். அவளின் நடு உச்சந்தலையில் கைவைத்து தீக்கைக் கொடுத்தாள். நாளை, ‘ஆலங்காட்டுச் சுடுகாட்டிற்கு பிணையூபம் காண என்னுடன் வா’ என்றாள். பிணையூபமா புனிதவதியின் கேள்வி மீளி காதில் விழுவதற்குள் மீளி கிளம்பி விட்டாள். மறுநாள் இரவில் பிணையூபம் காண மீளியுடன் சென்றாள். அவள் கண்ட காட்சிகள் . . . . அப்பப்பா. . . அங்கே எழுந்து புடைத்த நரம்புகள், குழி விழுந்த கண்கள், நீண்ட வெண்பற்கள், உள்வாங்கிய வயிறு, காய்ந்த செடியைப் போன்று கிளை பிரிந்த தலைமுடியுடன் கூடிய பெண்கள் பலர், தலை விரித்து பேய் போல் எரியும் பிணங்களைச் சுற்றி சுற்றி ஆடிக்கொண்டிருந்தனர்.
ஒரு பேய்க்கோலம் கொண்ட பெண், பிணத்தில் எரிகின்ற கட்டையை எடுத்து தீயை அணைத்து தன் விழிக்கு மையைத் தீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் அவள் நடனப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். சிலர் எரிகின்ற பிணத்தின் மீதிருந்து விழும் சாம்பலை அள்ளி பூசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு நின்றிருந்த சிலரோ எரியும் பிணத்தின் வயிற்றிலிருந்து கொழுப்பை எடுத்து விழுங்கினர். சுற்றிச் சுற்றி ஆடிய பேய்கள் பிணத்தினை விண்டு விண்டு உண்டு கொண்டிருந்தன.
அப்பேய்கள் ஆடுவதற்கேற்ற வகையில் சுற்றிலும் சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, குடமுழா, தமருகம் முதலான கருவிகளைச் சிலர் இசைத்துக் கொண்டிருந்தனர். இவ்விசைக்கேற்ப துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்னும் பண்களை இனிய குரலில் சிலர் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு ஒருவராக பிணங்களின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் கழுத்தில் அணிந்து, பாம்புகளை உடலில் சூடியும் ஒரு சிவனைப் போல் தலைவரும் ஆடிக் கொண்டிருந்தார். அரச மண்டபத்தில் நிகழ்த்தப்படும் அரச கூத்தினை ஒத்த ஆலங்காட்டின் கூத்து புனிதவதியை வியப்பில் ஆழ்த்தி விட்டது. முதலில் பேய் மகளிர் மற்றும் பேய் கணங்களின் செயல்களைக் கண்டு அருவருப்பு தோன்றியிருந்தது. ஆனால் முறையான இசையும் பண்ணும் அந்த இசைக்கு ஏற்றவாறு அவர்கள் ஆடிய நடனமும் அவர்களின் ஆவேசமும் பிணங்களைத் தின்று பசியைப் போக்க பிணங்களைத் தின்று பசியைப் போக்க வேண்டிய அவலமும், அவர்கள்பால் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி விட்டன. நிலையான அரசாட்சியின் கீழ் வாழ்ந்த அவர்களின் அரும்பெரும் கலைகள், மாற்றான் ஆட்சியினால் சுடுகாட்டுப் பிணங்களுக்கு முன் அரங்கேற்ற வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டது.
மீளியின் தயவினால் பிணங்களுக்கு வைக்கப்பட்ட வாய்க்கரிசியையும், பிச்சையெடுப்பதால் கிடைக்கும் உணவையும் உண்டு வாழும் தன் நிலைக்கும், வெங்காட்டில் பசியை அடக்க இயலாமல் பிணங்களைத் தின்று வாழும் அவர்கள் நிலைக்கும் வேறுபாடில்லை என உணர்ந்தாள் .
எரியும் பிணம் அணைவதற்குள் பசி பொறுக்காத ஒரு பேய்க்கோலம் கொண்ட பெண், விரலை வைத்துப் பார்த்து அனலின் வெம்மையை தாங்க முடியாமல் அலறி ஓடி மற்றொரு பேய் மீது மோதி விழுந்ததையும், அவ்விரண்டின் அலறல் கேட்டு மற்ற பேய்கள் பயந்து ஓடியதையும் கண்டாள். தன் குழந்தைக்கு ‘காளி’ எனப் பெயரிட்ட ஒரு பெண் பேய், பாலூட்டி முடிப்பதற்குள் தான் உண்பதற்கு எந்த பிணமும் கிடைக்காது எனக் குழந்தையை விடுத்து பிணம் தின்ன ஓடிச் செல்வதையும் கண்டாள். நரிகளோடும் ஓநாயோடும் போட்டி போட்டு அத்தனை பேரும் பிணந்தின்ன அலைவதைக் கண்டாள். பசியின் கொடுமையைக் கண்ணாரக் கண்டாள். முதலில் தோன்றிய அருவருப்பு இப்போது இல்லை.
பரமதத்தனால் பெற்ற அவமானத்தை விட இந்த அருவருப்பு மேலானது என உணர்ந்தாள். தற்கொலை என்னும் காலனை வென்றோம், ஆதிக்கம் என்னும் கடுநரகம் கை கழன்றோம் என ஊழிக்காலத்தில் உலகை அழிக்க சிவன் ஆடிய திருத்தாண்டவத்தை இங்கே ஒவ்வொருவரின் ஆடலிலும் கண்டாள். ஒவ்வொருவருமே சிவனாக மாறி ஆடும் திருநடனக் காட்சியைக் கண்டு இரசித்தாள். இதுவரை அறியாமையால் ஆழ்ந்திருந்தேன். இப்போதே தெளிந்தேன். இப்பேய் மக்களே இனி என் மக்கள். இம்மக்களின் தோற்றத்தில் சிவனைக் காணுகையில் உள்ளத்தில் ஒளி தோன்றுகிறதே. புனிதவதி எழுந்தாள். இசைக்கருவிகளை நோக்கி நடந்தாள். தாளத்தைக் கையில் எடுத்தாள். அவர்களோடு இணைந்து இசைக்கத் தொடங்கினாள்.