உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கலராசன் கதை

விக்கிமூலம் இலிருந்து

ஆக்கர்: அ. கா. பெருமாள்
வெளியீடு:
காலம்:
பின்புலம்: இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.


சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான நாடு. அங்கு புட்டாபுரம் என்ற ஒரு இடம் உண்டு. அதில் ஏலாகினி என்ற சுனை இருந்தது. அச்சுனையின் கரைப்பகுதியில் வித்தியாதர முனிவர்கள் இருந்தனர். அவர்கள் அருந்தவம் செய்தவர்கள். அச்சுனையில் நீராடி தவம் செய்துவந்தார்கள். அந்நாளில் சப்தகன்னிகைகள் எனப்படும் தெய்வப்பெண்கள் அச்சுனையில் நீராடவந்தனர். அவர்கள் அழகைக்கண்ட வித்தியாதரமுனிவர்கள் காமுற்றனர். அந்த முனிவர்களின் வழி தெய்வப் பெண்களிடம் ஏழு மக்கள் பிறக்கவேண்டும் என்ற சாபமும் ஏற்கனவே உண்டு.


ஒருமுறை தெய்வப்பெண்கள் ஏழுபேரும் ஏலாகினி சுனைக்கு நீராட வந்தனர். ஆடைகளையெல்லாம் அவிழ்த்து ஆலமரத்தில் வைத்துவிட்டு சுனையில் நீராட இறங்கினர். சுனையில் நீராடும் நிர்வாணக் கன்னிகைகளைக் கண்ட முனிவர்களுக்கு ஆசை மிகுந்தது. அந்தப் பெண்களைப் புணர விரும்பினர்.


முனிவர்கள் அந்த நேரத்தில் புயலும் மழையும் வருமாறு எண்ணினர். அவர்கள் தவ வலிமையால் புயலும் மழையும் பெய்தது. தெய்வப் பெண்கள் பெரும் மழையைக் கண்டு சுனையின் கரையில் ஏறினர். கரையில் நின்ற முனிவர்கள் அவர்களை அணைத்தனர். உடனே ஏழு குழந்தைகள் பிறந்தன. சப்த கன்னிகைகள் அக்குழந்தைகளைக் கண்டு அஞ்சினர். இந்தக்குழந்தைகளை எப்படி வானுலகத்துக்குக் கொண்டு செல்லமுடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் கன்னியர்கள். ஆகவே நீங்களே குழந்தைகளை வைத்துக்கொள்ளுங்கள் என்று முனிவர்களிடம் சொன்னார்கள். ஒருசங்கில் முலைப்பாலைப் பீய்ச்சி முனிவர்கள் கையில் கொடுத்தனர். முனிவர்கள் இது காணாது என்றதும் காட்டில் மேய்ந்த பாண்டிய மன்னனின் காராம் பசுக்களின் பாலைக் கறந்து கொடுத்தனர். ஏழு குழந்தைகளுக்கும் செங்கமலன், அழகேசன், விக்கிரமன், சேதுங்கத் தலைவன், காளிநாதன், ஏனாதிநாதன், ஏலாதிநாதன் எனப் பெயரிட்டனர்.


காட்டுப் பசுக்களின் பாலைக் குடித்து குழந்தைகள் வளர்ந்தன. பசுக்களின் பால் குறைவதன் காரணத்தை அறியாத இடையர்கள் திகைத்தனர். பசுக்களின் பின்னே ஒளிந்து சென்று பார்த்தனர். ஏழு பாலகர்களும் காட்டுப் பசுக்களின் பாலைக் குடிப்பதைக் கண்டனர். இதைப் பாண்டிய மன்னனிடம் முறையிட்டனர். பாண்டியன் கானகத்தில் வளரும் பாலகர்களை விரட்டவேண்டும் என எண்ணி பெரும் படையுடன் வந்தான். இதை அறிந்த முனிவர்கள் பாலகர்களைப் பத்திரகாளியிடம் ஒப்படைத்தனர். காளி குழந்தைகளை வளர்க்கக் கொண்டு சென்றாள். அவர்கள் காளியின் வலங்கைப்பக்கம் இருந்தமையால் வலங்கைமக்கள் எனப்பட்டார்கள்.


நாவலந்தீவில் தாருகனின் கொடுமை அளவுக்கு மீறியது. அவன் தேவர்களைத் துன்புறுத்தினான். பிடித்துகொண்டு சென்று சிறையிலடைத்தான். துயரம் தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் காளியை அழைத்தான். உன் மக்களுடன் சென்று தாருகனை வென்றுவா எனப் பணித்தார். காளி தன் வலங்கை மக்கள் ஏழு பேர்களுடனும் இடப்பக்கம் நின்ற பேய்ப்படைகளுடனும் போருக்குப் புறப்பட்டாள். வலங்கையரின் படையைக் கண்ட தாருகன் ஓடி ஒழிந்தான். வலங்கையர் பின்னால் துரத்தி சென்றனர். காளி சீறி நின்றாள். தாருகனை உடைவாளால் வெட்டினாள். அவன் கோட்டை அழிக்கப்பட்டது. தேவர்கள் காக்கப்பட்டனர்.


போரை முடித்துக்கொண்டு காளி காட்டுவழி வரும்போது தன் மக்களிடம் அருகிலே நீர்சுனை இருந்தால் அறிந்து வாருங்கள் என்றாள். எழுவரும் ஒரு மரத்தின் மேலே ஏறி சுற்றுமுற்றும் பார்த்தனர். அங்கு கண்ட காட்சியைக் காளியிடம் சொன்னார்கள். இந்திரன் விண்ணுலக நெறி தவறிய சுவேதாமுனியைக் கீழுலகில் தள்ளுமாறு தேவர்களிடம் ஆணையிட்டான். அம்முனிவரும் அவர் பத்தினியும் பூமியில் தள்ளப்பட்டனர். பூமியில் விழுந்த அவர்கள் ஒரு சுனையை உருவாக்கி அதன் கரையில் மகிழ்வாய் வீற்றிருக்கின்றனர் . அவர்களை நாங்கள் இப்போது கண்டோம் ' என்றனர்.


இதைக்கேட்ட காளி கோபம் கொண்டாள் தங்கள் தவறுக்கு வருந்தாத அந்த முனிவனையும் அவர் மனைவியையும் பிடித்து வாருங்கள் என்றாள். புத்திரர்கள் அவர்களைப் பிடித்து வந்தனர். காளி அவர்களைச் சினந்து சாபமிட்டாள். முனிவனும் அவன் மனைவியும் காளியின் சாபத்தால் பனை மரத்தில் ஏறி அதன் அமுதத்தைக் கபாலத்தில் ஊற்றிக்கொண்டு வந்தனர். அம்மை அந்த அமுதத்தைக் குடித்தாள். அவள் கோபம் தனிந்தது. பின்பு காளி பனையின் கனியை எடுத்துப் பாற்கடலில் போட்டாள். தேவர்கள் பாற்கடலைக் கடையும்போது அவர்கள் கையில் அது கிடைத்தது. இறைவன் அந்தப் பனம்பழத்தை எடுத்து வலங்கையர் கையில் கொடுத்து இக்கனியை நிலத்தில் ஊன்றிப் பயிராக்கி உலகம் புகழ வாழுங்கள் என்றார். காளி தன் மக்களை அழைத்து " என் மக்களே நீங்கள் தாருகளை வென்ற ஜகவீரராஜர்கள். உங்கள் குலம் தழைக்கட்டும் என்று வாழ்த்தினாள்.


தாருகனின் இளைய தம்பி சமிகரன் என்பான் மாகாளியை எதிர்த்து வந்தான். காளியின் துணைக்குப்போன வலங்கையர் அவன் தலையைத் துண்டித்தனர். சில நாட்கள் கழித்து காளி தன் பிள்ளைகள் ஏழு பேருக்கும் ஆஞ்சகாயக் கந்தருவனின் பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துவைத்தாள். அதன் பிறகு அவர்களின் இனம் பெருகியது.


இப்படியிருக்கும் நாளில் சோழ மன்னனை வலங்கையர் எழுவரும் சந்தித்தனர். சோழன் அவர்களை தன்னுடன் இருக்கும்படி வேண்டினான். ஏழு பேரும் சோழனின் நாட்டில் குடிபெயர்ந்தனர். அப்போது சோழநாட்டின் மீது போர்தொடுத்த சம்பரன், கலியாணன், அமந்திகன் ஆகியோரை வலங்கையர் வெற்றி கொண்டனர். இந்தநாளில் இடங்கையர்கள் சோழநாட்டு வணிகர்களுக்குத் துன்பம் கொடுத்தனர். அவர்களை ஒடுக்க மன்னன் வலங்கையரிடம் சொன்னான். இடங்கையரை வலங்கையர் கவுதாரி வடிவெடுத்து அழித்தனர். அதனால் வணிகர்கள் வலங்கையரை வாழ்த்தித் தோளில் தூக்கி பாராட்டினர்.


இவ்வாறு இருக்கின்ற நாளையில் சோழநாட்டில் மழையில்லாமல் பஞ்சம் வந்தது. பெண்கள் கற்பின் வழுவியதே மழையின்மைக்குக் காரணம் என்றனர் அமைச்சர்கள். வலங்கைத் தலைவன் சொன்னான் நான் கடவூர் என்ற ஊருக்குப் போயிருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. கேளுங்கள். கடவூரில் கம்மாளர் சாதியில் ஒரு தச்சன் இருந்தான். அவனுடைய மனைவி மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவள். ஒருநாள் அவள் கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவள் கணவன் அவளை அழைத்தான். அவள் வாளிக்கயிற்றைப் பாதியிலே விட்டுவிட்டு ஓடி வந்தாள். அவள் திரும்பிச் செல்லுமட்டும் கிணற்றின் வாளி அப்படியே இருந்தது. அத்தகைய கற்புடைய பெண் அவள். அவளை அழைத்து வந்து மழை பெய்யுமாறு சொன்னால் நாட்டில் மழை பொழியும் என்றான்


மன்னன் அந்தப் பெண்ணை அழைத்து வரச் செய்தான். அவளிடம் சோழநாட்டில் மழை பொழிய வைக்க வேண்டினான். பெரும் மழை பொழிந்தது. குளங்கள் நிரம்பின. ஆறுகள் உடைத்துப் பெருகின. பெருக்கெடுத்த காவிரியை அடைப்பதற்கு வலிமை உடையவர் யார் எனக் கேட்டான் மன்னன். ஒரு சிறுகுடி வேளாளன் தக்க தருணம் இது என்று கண்டு வலங்கை பரம்பரையின் 700 பேரும் சேர்ந்தால் பெரிய அணையையே கட்டிவிடுவார்கள் மன்னா என்றான். மன்னன் வலங்கையரை அழைத்தான். காவிரியின் அணையைக் கட்டவேண்டும் எனப் பணித்தான். வலங்கையர் மன்னா அது எங்களால் முடியாது என்றனர். மன்னன் இது அரச கட்டளை என்றான். அவர்கள் அசையவில்லை. "எக்காரணத்தாலும் நாங்கள் கூடை தொட்டு மண் சுமக்கமாட்டோம் ' என்றனர்.


மன்னனின் காவலர்கள் வலங்கையரைச் சுற்றி வளைத்தனர். வலங்கையர் நாங்கள் இறந்தாலும் கூடை தொடமாட்டோம் இது உறுதி என்றனர். சோழநாட்டு அமைச்சர்களில் சிலர் மன்னா இவர்கள் காளி புத்திரர்கள் நம்மைப்பல இன்னல்களில் இருந்து காத்தவர்கள், இவர்களைப் பழித்தால் சோழநாடு அழியும் என்றனர்.


ஆனால் கோபம் கொண்ட ஆணவக்காரனாகிய சோழ மன்னன் அமைச்சர்களின் பேச்சைக் கேட்கவில்லை. கொலை யானையை வரவழைத்தான். வலங்கையரில் ஒருவனை யானைக்காலால் இடறச் செய்தான். அதைக் கண்டபிறகும் பிற வலங்கையர்கள் எங்கள் கூட்டத்தை அழித்தாலும் கூடை தொடமாட்டோம் ' என்றனர். மன்னன் அடுத்த வலங்கை வீரனின் தலையையும் இடறச் செய்தான். அந்த வீரனின் தலை தெறித்துப் போகும்போது கண்திறந்து மன்னா எங்கள் தலைகள் தெறித்தாலும் நாங்கள் கூடை தொடமாட்டோம் என்றது.


அப்போது மன்னனின் கண்கள் திறந்தன. அமைச்சனின் பேச்சைக் கேட்காமல் அழிந்தோமே என மனம் வெதும்பினான். மற்ற வலங்கையரிடம் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் . என் நாட்டை விட்டு நீங்குங்கள் என்றான். வலங்கையர் காளியிடம் சென்றனர். காளி சோகத்தை உரைத்தனர். காளி சீறினாள். என் மக்களைச் சோழன் அழிந்தானா? 12 ஆண்டுகள் அவன் தேசத்தில் மழை பெய்யாமல் இருக்கவேண்டும் எனச் சாபமிட்டாள்.


சோழநாடு மழையின்றித் தவித்தது. குடிக்க நீரின்றி மக்கள் வாடினர். மன்னன் சோதிடனை அழைத்து மழையின்மைக்குக் காரணம் கேட்டான். சோதிடன் மன்னரே வலங்கையரைக் கொன்றதற்கு காளியிட்ட சாபம் இது. காளியிடம் சரணடைந்து வேண்டுக என்றான்.சோழன் காளியைப் பணிந்தான். என் தவறுக்குச் சிறுகுடியில் பிறந்த வேளாளன் ஒருவனே காரணம். அவனை உனக்குத் தந்துவிடுவேன் அவன் சொல்படித்தான் வலங்கையரை மண் சுமக்கச் செய்தேன் என்றான். காளி சோழனை மன்னித்தாள். சிறுகுடியினரை இனிமேல் நெசவுத்தொழில் செய்யுமாறு தண்டனை கொடுக்க மன்னனிடம் கூறினர் வலங்கையர். மன்னனும் அவ்வாறே ஆணையிட்டான். வலங்கையருக்குப் பொன்னம் பொருளும் வீரமார்த்தாண்டன் என்ற பட்டமும் கொடுத்தான்.


வலங்கையரில் இறந்தவர் இருவர் போக மீதி ஐந்து பேரில் சோழ நாட்டில் ஒருவன் தங்கினான். மற்ற நான்கு பேரும் கண்டிநாடு, கதிர்கொண்ட நாடு என வேறு இடங்களில் வாழ்ந்தனர். ஒருவன் மட்டும் இலங்கைக்குச் சென்றான். அங்கு பனைமரங்களை நட்டு அதன் அமுதத்தைப் பலருக்கும் கொடுத்து சிறப்போடு வாழ்ந்து வந்தான்.


இவர்கள் இப்படி இருக்க வித்தியாதர முனிவரில் ஒருவன் தன் மகன் ஈழத்தில் இருப்பதை அறிந்து பார்க்கச் சென்றான். ஈழத்தில் வலங்கை மகனின் வீட்டிற்குச் சென்றபோது அவன் இல்லை. அவனது குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் குழந்தைகளே மிகவும் பசிக்கிறது . அமுது இருக்குமா? எனக் கேட்டார். குழந்தைகள் இன்று எங்கள் வீட்டில் சமைக்கவில்லை" என்றனர். முனிவர் காளி அருளிய பனை அமுது இருக்கிறதா?" எனக் கேட்டார். குழந்தைகள் மகிழ்ந்து "இதோ கொண்டு வருகிறோம்" என்றனர். குருத்தோலைப் பட்டையை முனிவர் கையிலே கொடுத்து அமுதைப் பெய்தனர். முனிவர் அமுதை நிரம்பக் குடித்தார். பின் குழந்தைகளிடம் உங்கள் வீட்டில் இரும்புப் பொருட்கள் ஏதாவது இருக்கின்றனவா ?" எனக் கேட்டார். குழந்தைகள் தந்தையின் பாளை அருவாளைக் கொண்டு கொடுத்தன. முனிவன் ஒரு பச்சிலையை அதன்மீது தடவினான். இதை எரியும் அடுப்பில் கொண்டு வைத்துவிடுங்கள் என்றார். முனிவன் மாயமாய் மறைந்துவிட்டான்.


சிறிதுநேரம் கழித்து வலங்கைத் தலைவன் வீட்டிற்கு வந்தான். குழந்தைகள் அடுப்பிலிருந்த அருவாளை எடுத்துக் கொடுத்தன. முனிவர் வந்த வரலாற்றையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கூறின. தலைவன் அரிவாளைப் பார்த்தான். அது பொன்னாக மாறியிருப்பதைக் கண்டான். குழந்தைகளிடம் அந்த முனிவர் தேய்த்த பச்சிலைகள் எங்கே தெரியுமா எனக் கேட்டான். குழந்தைகள் முனிவன் சென்ற வழியைக் காட்டின.


வலங்கைத் தலைவன் முனிவன் சென்ற வழியை அடையாளம் கண்டு போனான். முனிவர் இரும்பில் தேய்த்த பச்சிலை கசக்கப்பட்டு கிடப்பதை இனம் கண்டான். ஈழத்து இரும்புகளை எல்லாம் தொகுத்துப் பச்சிலை தேய்த்து பசம்பொன்னாக்கினான். அதைவைத்து அவன் பெரும் செல்வந்தனானான். அப்பணத்தால் பெரிய வெங்கல கோட்டைக் கட்டினான்.


வலங்கைத் தலைவனுக்கு ஒரு பெண்மகள் இருந்தாள். அவள் பெயர் தங்கப்பொன்னம்மை. அவள் உரிய பருவத்தை அடைந்ததும் அவளுக்கு வீரசோழநாடன் என்பவனை மணமுடித்து வைத்தான். மகளையும் மறுமகனையும் தன் கோட்டையிலேயே வைத்துக்கொண்டான்.


பத்தாம் மாதத்தில் தங்கப்பொன்னம்மை ஒரு ஆண்குழந்தை பெற்றாள். வெண்கலக் கோடையில் பிறந்தமையால் அதற்கு வெங்கலராசன் எனப் பெயரிட்டான். வெங்கலராசன் வலங்கை கோட்டையிலேயே வளர்ந்தான். வாலிப வயதைக் கடந்ததும் வெங்கலராசனுக்கு மேடை அழகி என்பவளை மணம் செய்து வைத்தான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மூத்தவளுக்கு சின்னதம்பி என்றும் இளையவளுக்கு சாலைகுளத்தம்பி என்றும் பெயரிட்டான்.


ஈழத்தில் வெள்ளையர் ஆட்சி வந்தது. வலங்கைத் தலைவன் நம்மிடம் இருக்கும் தங்கபாளங்களை வெள்ளைக்காரன் கண்டால் கவர்ந்துவிடுவான் அதனால் அதை மறைத்துவைக்கவேண்டும் என் எண்ணி பெரிய குழி வெட்டி அதில் எல்லா தங்கப்பாளங்களையும் போட்டு மண்ணால் மூடிவைத்தான். அதில் வாழைகளை நட்டான். வாழைகள் வளர்ந்தன. ஒரு வாழை இரண்டு குலைகள் தள்ளியது. இந்த அதிசயத்தை எல்லோரும் வந்து பார்த்தனர். வெள்ளைக்காரனும் வந்து பார்த்தான். அவனுக்கு சந்தேகம் வந்தது. வாழைகளை வெட்டினான். மண்ணைக் கிளறினான். மண்ணின் அடியில் தங்கப் பாளங்களைக் கண்டான். வலங்கையனைக் கட்டி வைத்தான். இத்தனை தங்கம் எங்கிருந்துவந்தது என்று கேட்டான்.


வலங்கையனுக்கு வேறு வழியில்லை. இரும்பைத் தங்கமாக்கிய மூலிகை பற்றிச் சொன்னான். அப்போது வெள்ளையனிடம் காளி அருளிய அருவாள் பெட்டி முதலான சின்னத்தைத் தங்கக்காசின் ஒரு புறத்தில் அச்சடித்து அதைச் சாணான் காசு என பிரகடனப்படுத்த வேண்டிக்கொண்டான் வலங்கையன்.


வெள்ளைக்காரன் வலங்கையனின் நிபந்தனைக்கு இணங்கியதுபோல் நடித்து வலங்கையனைக் கொன்றுவிட்டான். ஆகவே வெங்கலராசன் இனி நாம் இங்கே இருத்தல் கூடாது என நினைத்தான். சோழ நாட்டிலும் போகமுடியாது வேறு நாட்டிற்குப் போவோம் என முடிவு கட்டினான்.


கோட்டை கொத்தளங்களைப் பிரித்தான். தங்கப்பாளங்களையும் அரிசி, வெஞ்சனப் பொருட்களையும், ஆடைகளையும், அலங்காரப் பொருட்களையும், ஆனை, ஆடு, மாடுகள், கோழிகள் எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றினான். கப்பல் ஈழத்தை விட்டுப் புறப்பட்டது. பாய் விரித்தோடியது.


காவிரிபொழி முகம், பாம்பனாறு, செந்தூர்பதி, குலசேகரப்பட்டினம் ஆகிய பல இடங்களைக் கடந்து மணவைத் துறைமுகத்தில் கப்பல் வந்தது . வெங்கலராசன் கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு கரைக்கு வந்தான். கடற்கரை ஊர்கள் பலவற்றைப் பார்வையிட்டான். அவற்றில் சிறந்த வளங்களுடன் இருந்த சாமிக்காட்டுவிளையில் தங்க முடிவு செய்தான். கப்பலிலிருந்து வெங்கலக்கோட்டையை இறக்கி அங்கேயே பொருத்தினான். மாட மாளிகைகளைக் கட்டினான். தங்கப் பாளங்களை மாளிகையில் கொண்டு அடுக்கினான். மாளிகையில் இனிமையாகக் காலத்தைக் கழித்தான்.


அந்நாளில் வெங்கலராசனின் மகள் சாலைகுளத்தம்பி பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் றாட்டு விழாவைக் கண்டுவரவேண்டும் என தந்தையிடம் கேட்டாள். தந்தை மறுத்தார். அங்கு பல பேர் வருவார்கள். உங்களை யார் எனக் கேட்பார்கள். வினையை விலை கொடுத்து வாங்கவேண்டாம். மகளே சும்மாயிரு என்றான்.


சாலைகுளத்தம்பியோ நான் ஆறாட்டுக்குக் கட்டாயம் போய் வருவேன்" என முரண்டு பிடித்தாள். வேண்டா வெறுப்பாகதத் தந்தை இசைந்தார். மகள் பட்டுடுத்து ஒப்பனை செய்து ஏழு தோழிப் பெண்களுடன் பறக்கைக்குச் சென்றாள்.


பறக்கை ஊரில் நாலுவீதிகளிலும் சுற்றி நின்று விழாக்கோலத்தைக் கண்டாள். அன்று ஆறாட்டு விழாவிற்கு வஞ்சி மன்னனும் வந்திருந்தான். சாலைகுளத்தம்பியின் அழகில் கவரப்பட்ட அமைச்சர்கள், அவளைப் பற்றி அரசனிடம் சொன்னார்கள். வலங்கை குலத்தில் உதித்த அப்பெண்ணைப்போல் மலைநாட்டில் நாம் கண்டதில்லை" என்றனர். மன்னன் அவளை மணக்க விரும்பினான். இந்தச் செய்தியை அறிந்த வலங்கைப் பெண் வேகமாகப் போய் தன் கோட்டையை அடைந்தாள். கோட்டையில் வாய்மூடி மெளனமாக இருந்தாள்.


வஞ்சி மன்னன் ராமவர்மாவுக்கு அந்தப் பெண்ணை மறக்கமுடியவில்லை. அவளை மணப்பது என்று முடிவு கட்டினான். வெங்கலராசனுக்கு ஓலை எழுதினான். ஓலையை ஒட்டன் கையில் கொடுத்து இதை வெங்கலராசனிடம் கொடுத்துப் பதில் கேட்டுவா என்றான்.


ஒட்டன் சாமிக்காட்டுவிளைக்குச் சென்று ஓலையை வெங்கலராசனின் கையில் கொடுத்தான். ஓலையைப் படித்த வலங்கை மன்னன் இழிவான ராமவர்மாவுக்கு என் மகளைக் கொடுக்கவா? என்ன துணிவு இவனுக்கு ? என வஞ்சி மன்னனைப் பழிந்து பேசினான். பெண் தரமுடியாது என மறுத்து அனுப்பினான். செய்தி அறிந்த வஞ்சிகுல மன்னன் வெங்கலராசன் மகளை சிறை எடுத்துத் திரும்புவேன் என வஞ்சினம் பேசினான். படை திரட்டிக்கொண்டு சாமிக்காட்டுவிளைக்கு வந்தான்.


சேரனின் பெரும்படை வருவதை அறிந்த வெங்கலராசன் தன் வெங்கலக்கோட்டையின் வாசலை அடைத்தான். சேரனின் படை கோட்டையை வளைத்தது. வெங்கலராசன் மயங்கி நின்றான். மகளே உன்னால் வந்த துன்பத்தைப் பார்த்தாயா? ஆறாட்டுக்குப் போகாதே என்றேனே! கேட்டாயா? இப்போது எல்லோரும் மாண்டொழியப் போகிறோமே என்ன செய்வது? என்றான்.


சாலைக்குளத்தம்பி தன் தந்தையைப் பார்த்துச் சொன்னாள். வலங்கை குலத்தில் பிறந்த தீரரே! தந்தையே! வாழ்நாள் நிலையில்லாதது. எல்லோரும் சாகத்தான் போகிறோம். என் தலையைக் கொய்து கோட்டைக்கு வெளியே எறிந்துவிடு. உடலற்ற தலையைப் பார்த்த மன்னனின் ஆசை அடங்கிவிடும். திரும்பிவிடுவான் என்றாள். வெங்கலராசனோ உன் தலையை எறிந்து நாங்கள் உயிர் வாழ்வதா? உலகோர் என்ன சொல்லுவார்கள்? என்றான்.


அழகியோ அப்பாவைக் கட்டாயப்படுத்தினாள். என் தலை போகட்டும். வலங்கை குலம் அழியவேண்டாம் என்றான். வலங்கையனும் மகளின் தலையை அறுத்து அப்பால் எறிந்தான்.


கோட்டைக்கு வெளியே விழுந்த தலையைக் கண்ட வஞ்சி மன்னன் நடுங்கிவிட்டான். மனம் நொந்தான். இந்த அழகிக்காக நாம் பட்டபாடு போச்சே என்றான். தலையை எடுத்துக்கொண்டு போய் எரித்தான். தன் படையுடன் தன் தலைநகர் திருவிதாங்கோட்டுக்குப் போனான்.


வெங்கலராசனின் இன்னொரு மகளான சங்குமுத்தழகி சின்னத்தம்பி தந்தையே நம் குலத்தைப் பாதுகாக்க தங்கையின் தலையைக் கொடுத்தோம். இனி வஞ்சி மன்னன் வாளா இருக்கமாட்டான். படை நடத்தி வருவான். தனால் நாம் வேறு நாட்டிற்குச் சென்றுவிடுவோம் என்றாள்.


வெங்கலராசனும் சாமிக்காட்டுவிளையிலிருந்து புறப்பட முடிவு செய்தான். தன் பொருள்களையும் நிறைய தங்கப்பாளங்களையும் கப்பலில் ஏற்றினான். கப்பல் பாய் விரித்தோடியது. திருச்செந்தூர் பதியை அடைந்தது. மணப்பாட்டு பொழிமுகத்திலே கப்பலை நிறுத்தினான். திருச்செந்தூருக்கும் மணப்பாட்டுக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தான். அங்கு காட்டை அழித்து கோட்டை கட்டினான். கப்பலில் உள்ள பொருட்களை அங்கே கொண்டு நிரப்பினான்.


மணப்பாட்டுக் கோட்டையில் வெங்கலராசன் வாழ்ந்துவரும் காலம். வலங்கையனின் மகள் சின்னத்தம்பி ஏழு தோழிகளுடன் சுனையாடச் சென்றாள். சுனையாடிவிட்டு வீட்டுக்கு வந்தவள் தன் கோட்டை வாசலில் நின்று தலை கோதினாள். அவளது தலைமுடி ஒன்று காற்றில் பறந்துபோய் பக்கத்து ஊரில் உள்ள குறும்பூர் கோட்டையின் அருகே விழுந்தது.


சின்னத்தம்பியின் ஒரு முடியைப் பார்த்த குறும்பூர் அமைச்சன் இந்த முடிக்குரியவள் பேரழகியாக இருக்கவேண்டும் என குறும்பூர் அரசன் நளராசனிடம் கூறினான். மன்னன் அவளை எப்படியாவது கண்டுபிடித்து வா என்றான். இளைஞனான அந்த அமைச்சன் சின்னத்தம்பியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டான். நளராசன் அவளைத் திருமணம் புரிய ஆசைப்பட்டான் ஒட்டனிடம் வெங்கலராசனுக்கு ஓலை கொடுத்து அனுப்பினான்.


ஒட்டன் கொடுத்த ஓலையைப் படித்த வெங்கலராசன் கொதித்து எழுந்தான். வலங்கை குலத்தில் பிறந்தவன் மகளைக் குறும்பூரான் எப்படி பெண் கேட்கலாம். ஒட்டனே ஓடிவிடு. ஓலையை உடைப்பில் போடு" என்றான். ஒட்டன் வெங்கலராசன் கூறியதை நளராசனிடம் கூறினான்


நளராசன் நம் நாட்டில் கோட்டை கட்டி வாழும் ஒருவர் நம்மை இகழ்ந்துவிட்டானே. நம்மைவிட அவன் குலம் உயர்ந்ததா? இப்போதே அவன் கோட்டையை அழித்து அவளைச் சிறை எடுப்பேன் என்றான்.


அமைச்சன் நளராசனைத் தடுத்தான். மன்னா பெண்ணைச் சிறை எடுப்பது பாவம். அது நம் குலத்திற்கு இழிவு. அதனால் சூழ்ச்சியால் அவளை நாம் கொண்டுவரவேண்டும். ஆண்டுதோறும் நம் தோட்டத்தில் விளையும் வருஷக்கனியை அவள் நீர்கொண்டு செல்லும் குடத்தில் விழும்படிச் செய்யவேண்டும். இதற்குச் செங்கிடாக்காரனுக்குப் பூசை செய்து ஏவிவிடலாம் என்றான்.


அமைச்சன் சொன்னது மாதிரியே செங்கிடாக்காரன் வருஷக்கனியாக மாறி சங்குமுகத்தழகி சின்னத்தம்பியின் குடத்தில் கிடந்தான். அவளைச் சோதித்த காவலர்கள் அவள் கனியைத் திருடியதாகவும் அவளைக் கைது செய்து நளராசனிடம் கொண்டு சென்றனர்.


சங்குமுகத்தழகியைத் திருடி எனக் காவலர்கள் கைது பண்ணிக் கொண்டு சென்றதும் வெங்கலராசன் திடுக்கிட்டான். மகள் உண்மையில் திருடி ஆகிவிட்டாளோ என வருந்தினான். குலத்துக்கு தீராப்பழி வந்ததே என்று மான்முடைந்தான். அப்பழியை நீக்கவேண்டும் என்று குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டான்.


சங்குமுகத்தழகி நளராசனின் அரண்மனையில் சிறைப்பிடிக்கபட்டு நின்றாள். மன்னன் அவளைப் பல ஆண்களின் முன் திருடி என்று பரிகசித்தான். அவள் பாவி உன் குலம் அழியும். உன் நாடு பாழாகும். உன் நாட்டில் மண்மாரி பொழியட்டும். கூகைகள் அடையட்டும் என சாபமிட்டாள். உடனே அவளும் இறந்தாள்.


அவள் சாபம் பலித்தது. நளராசன் நாட்டில் மண்மாரி விழுந்தது. நாடு அழிந்தது. மன்னரும் பிறகும் வெங்கலராசன் சிறப்பையும் வலங்கைகுலத்தின் மகிமையையும் அறிந்தனர். அவர்களை கோயில்கட்டி வணங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வெங்கலராசன்_கதை&oldid=1254088" இலிருந்து மீள்விக்கப்பட்டது