உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்பாப் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
                                                             வெண்பா
                                    பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
                                               பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை
                                                             பாடல் 62
                                         தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 138 முதல் 146
                                         பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்


1
சென்னிமலை வேலவர்க்குச் சேர்ந்த கொம்பு இரண்டுண்டு
கன்னிக்குற வள்ளிக்குக் கால் இல்லை – முன்னமே
ஆட்டுக்குக் கொம்பில்லை யானைக்குக் கால் இல்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார். 
2
தார்க்கொன்றை தாவென்றேன் தா ஏழில் ஒன்று என்றான்
ஊர்க்கஞ்சி நான் மூன்றில் ஒன்றென்றேன்- ஆர்க்கும்
பொதுவென்றான் பூவென்றேன் போயினான் தோழி
இதுவோ நம்மீசன் இயல்பு.
3
பறவை நாய் நாகம் பகை விலங்கு பங்கம்
செறியும் இருணாரஞ்சி தடன்- குறிகிழவன்
என்றுரைத்த வீரைந்துமேர் தண்டத்திற் பண்பாய்
ஒன்றுமென உரைப் பரால்.
4
பரியூர்வார் பாலருந்தல் பண்பாம் உடற்கு
கரியூர்வார் பெண்ணின் பங்காணல்- விரியும்
சிவிகை யூர்வார்க் குமைத்தலின் பஞ்சேட் செல்வார்
பசுவீய வுண்டல் பயன்.
5
தக்கசகுனஞ் சபதஞ் சாமுத்திரியஞ் சொன்
மிக்கவசரீரி கனாவென்று அறைந்தும்- இக்கலியில்
கூடினுங் கைகூடி வருங் கூடாதொழிந் தொருகால்
வீடினும் வீடி விடும்.
6
நக்கனார் சோணகிரி நாதனார் வேள்வியிலே
தக்கனாரைத் தகர்த்த தக்கனார்- பொக்கைவாய்
ஆக்கினார் சூரியனை யம்புலியைத் தேய்த்தரியைத்
தாக்கினார் ஓடோடத் தான்.
7
ஓடினான் என்பது உணர்ந்தும் உனக்குச் சரியா
நாடினார்க்கு என்ன நரகமோ-நீடியே
ஆலவிடந் தோன்றிய போதம்பல வாணா நெடிய
மாலவிடஞ் சஞ்சரி யாதே.
8
அசநமிளைப் பகற்றா தன்னையே நம்பால்
வசனமிது தவறா வாய்மை-இசைநாகைச்
சின்னப்பால் வெண்மதியஞ் சேரிமையத்தே பிறந்த
அன்னப் பாலிங்கு வந்தாலாம். 
9
தலையிலிரந் துண்பான் தன்னுடலில் பாதி
மலையின் மடமகளுக் கீவான்- உலையில்
இருப்புவன மேனியனே யென்றாலோ வாமாம்
திருப்புவணத் தீசன் திறம்.
10
ஆச்சரியந் தென்னமரம் அத்தனையுங் குத்துமுலை
காய்ச்சிருக்குந் தென்குடந்தை காவலர்- மாச்சன்
வரக்குப் பையாநீ மருவா நாளெல்லாம்
சரக்குப் பையாமே தனம்.
11
கல்லும் உருத்தாது காலின் முட்டையாது
எல்லை மார்த்தாண்டன் சூடேறாது-தொல்லைவரு
மாலை யிருளில் வழி நடக்கக் கூசாது
காலில் செருப்பிருந்தக் கால்.
12
தந்தைபோய்த் தாய்போய்த் தமர்போயென் சுற்றமும்போய்
வெந்த புரியாகி விட்டேனே- முந்தவே
ஆழாழி நஞ்சுண்ட வாபற்சகாய னெனும்
பாழாவான் கண்ணேறு பட்டு.
13
கைக்குடமும் ரெண்டு கனக்கும்பக் குடமும்
முக்குடமுங் கொண்டான் முறியாதோ- மைக்குழலீர்
வேய்க்காற்றினால் விளங்கும் வீரனந்தி மாநகரில்
ஈக்காற்றுக் காற்றா விடை.
14
வையம் புகழுமலர் ஆயிரம் எடுத்துக்
கையிலொரு மாமலரைக் காடாமல்- வையகத்தில்
செங்கண் மாலீசன் திருவடிக் கெண்ணா யிரமாத்
தங்கண் மலர்சாற்றி னான்றான்.
15
பாம்புசேர் தோளிணையாள் பாளயத்து மாமாரி
சாம்பசிவன் தன்னடியைச் சாராரை-வேம்பின்
இலையை யுடுத்தியவர் ஈனமானம் போக்கித்
தலையில் விளக்கேற்றி வைப்பாடான்.
16
அட்டமியில் ஓதினால் ஆசானுக் காகாது
சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும்-கெட்டவுவா
வித்தைக்கு நாசமாம் வெய்ய பிரதமையில்
பித்தரும் பேசார் பிழை.
17
ஆயிரம் பாக்கன்ன முலை யன்னநடைக் கன்னிபதி
னாயிரம் பாக்கானாளுன் ஆசையினால்- நீயிரங்கி
வந்தாள வேண்டு மலைப் பழனி வேலவனே
சந்தாள வேறில்லைத் தான்
18
பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசஞ் செய்தோன்- அரப்பெரிய
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந் தீர்ந்தோன்
எஞ்சாப் பிதாக்க ளெனவெண்.
19
கானக் கடன்மல்லைக் கார்வண்ணன் தானுமால்
நானக் குழன்மடவீர் நானுமால்- ஆனக்கால்
தன்கையிற் சங்காழி தாமிருக்கப் போவதேன்
என்கையிற் சங்காழி யின்று.
20
கட்டி யடிப்போர்க்குங் கன்மீதில் ஏற்றுவர்க்கும்
எட்டி யடிப்போர்க்கும் ஈவரே- திட்டமுடன்
பாடுவோர்க் கீயாரே பல்லுதிரத் தாடையினிற்
போடுவோர்க் கீவார் பொருள்.
21
செய்யாள் கணவா செகராஜ சேகரா
ஐயா வடகங்கைக் காரியா- துய்யா
குடஞ்சுட்டுப் பின்போன கோபாலா முத்து
வடஞ்சுட்டுக் கண்டுயிலாண் மான்.
22
உன்றன் மகளை யொறுப்பதற்குக் காரணமென்
என்றன் மகடன் இயல்புகேள்- குன்றாச்
சிராப்பளியான் ஏறிவருஞ் சேவின் மணியோசைக்
கிராப்பளியுங் கொள்ளாள் இவள்.
23
நீரூருஞ் செஞ்சடை மேனீரூரும் பாம்பணிந்து
நீரூரிலே வந்த னீதியோ- நேரே
படவரவஞ் சாடப் பலியிடென வந்தால்
இடவரவஞ் சாளோ விவள்.
24
வாலைப் பொருந்துதலால் வல்லரவம் பற்றுதலால்
மாலையடுத்து நெடுவான் உறலால்- சோலைதிகழ்
உம்பர் பூசித்தருளும் ஒற்றியூரன் வரையில்
அம்புலியு நன் கருடனாம்.
25
அம்மையிலே யேறி யடியேன் இடர்தீர
இம்மையிலே வந்தென்னை யீடேற்றி- மும்மையிலே
எந்தப் பாவஞ் செய்தேன் அந்தப் பாவந்தீரக்
கந்தப்பா வந்திப் போகா.
26
எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப்
பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக்
கற்பரிது நற்பயனைக் காணபரிது கண்டக்கால்
நிற்பரிது தானந் நிலை.
27
ஏரேறு நீரேறும் எண்ணில் உயிர்க் குயிராம்
பாறேறுங் காலாற் படியளக்கும்- வீறேறும்
அன்னங் காணீசன் அரியயனுந் தாமன்று
துன்னுபுகழ் மாரியப்பா சொல்.
28
கோடுதிக்குங் கும்பமுலைக் கோதையரைக் கூடவென்றால்
மாடுதின்னி யென்னை மறுத்தானே- மாடுதின்னி
தன்பொழுதும் போச்சுதே தன்னந் தனித்திருந்த
என்பொழுதும் போச்சுதே யென்.
29
நெஞ்சடைந்த வேட்கை யெல்லா நீங்கி யிருவிழியும்
பஞ்சடைந்து உள்ளாவி படுமுன்னே- செஞ்சடையில்
வெள்ளாறா வெந்நாளும் வேள்விப் புகையாறா
நள்ளாறா வென்னா நவில்.
30
மூவர்கவி முன்னுறு முன்சோழ னைந்நூறு
நாவலர் மாணிக்கர் தலநாற்பத்தெட்- டோவறுசீர்
நூதன சிவாலயங்க னூற்றறுபதுங் கூட
ஓதவரும் ஆயிரத் தெட்டோர்.
31
நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
காலுந் தலையுங் கடைச்சாதி- மேலாக
ஒட்டு முதலெழுத்து மோது மூன்றா மெழுத்தும்
விட்டர் பரமனுக்கு வீடு.
32
முனியதட்டு முட்டீக்கு முன்னீ ரளக்கும்
கனியுதிர்க்குங் கவ்வுநாய் காக்கும்- தனிவழிக்குப்
பத்திரம தாக்கும் பயந்தீர்க்கும் பாம்படிக்கும்
கைத்தலத்தில் தண்டிருந்தக் கால்.
33
பகலோன் றெறுங்கிரணம் பாய்பறவை யெச்சம்
மிகமேலுறா தகற்றும் விண்ணின்- முகிலதனால்
பெய்யு மழையைத் தடுக்கும் பேரழகுமா மொருவர்
கையில் குடை யிருந்தக் கால்.
34
வந்தவளைக் கையாது வாய்முத்தந் தந்தருள்வாய்
தொந்தவளைக் கையா துவாரகையா- சந்துவளை
கோசையிடத் தானே குயிலோசைக் கஞ்சியுளத்
தாசையிடத் தானே யறிந்து.
35
அறிந்து தவிப்பாரை யருள்கோசை யான்மால்
செறிந்து தவிப்பாரைத் திருத்தும்- திறந்தழைந்த
வைகுந்தனூர் வாய்மட மன்னே கொவ்வை நிகர்
வைகுந்தனூர் வாய் மடுத்து.
36
மடுக்குஞ் சரமழைக்கும் வான்கோசை மாலே
விடுக்குஞ் சரமழைக்கு மேலாய்- முடுக்கும்
அநங்கனை யஞ்சங்க மடுத்தேனை யாள்வாய்
அநங்கனை யஞ்சங்க மலர்.
37
அலரோதி மத்தா னறைகோச மாலே
அலரோதி மத்தா லடிக்கும்-அலரோதி
நந்தனகத் தாளுறவே நண்ணி நின்றா யானடைந்தேன்
உந்தனகத் தாளுறவே யோர்ந்து.
38
ஓர்ந்தண்டரை யாளும் உத்தமநற் கோசையனே
ஈர்ந்தண்டரை யாளும் இந்திரையும்- சேர்ந்திலகு
தூயத்திருக் கறுப்பா தோற்றி யடியேனுடைய
மாயத்திருக் கறுப்பாய்  வந்து.
39
ஆகும் போதாகும் அனைத்தும் மதிவொழிந்து
போகும் போதெல்லாமும் போகுமே- வேக
நவசரம் பட்டார் போனலிந்து மடநெஞ்சே
அவசரம் பட்டா லாகுமா.
40
சல்லடைக் கண்ணாகித் தளர்ந்தாள் அருள் புரிவாய்
மல்லடையுங் கோசைநகர் வைகுந்தா- கல்லடையும்
பாந்தளிரை தேர்காலான் பாணம் வருத்துதலால்
மாந்தளிரைத் தேர்காலாண் மார்பு.
41
காரங்க மேனிக் கருணைக் கடலான்
சீரங்க நாதரே செல்வரே- நீரங்கே
அள்ளியுண்ட வெண்ணெய்க்கா வம்மை யடிப்பாளென்று
பள்ளிகொண்டால் போமோ பயம்.
42
படைப்பானுங் காப்பானும் பார்க்கில் அருணேசன்
படைப்பான் அயனென்னல் பாவம்- படைக்கிலயன்
ஐந்துதலையில் ஒன்றை யானறுத்த போதிலவன்
தன்றலையைப் பண்ணறி யான்றான்.
43
நாறுங் கடம்பு நடையுடையும் பாவனையும்
வீறும் உனக்கேன் பழனிவேலவா- ஆறுதனில்
வெட்டுண்டானுங் களையன் வெண்ணெய் தனையே திருடிக்
கட்டுண்டானுங் களம்மான் காண்.
44
தூது மதுரை துவரை கடையிடை முன்
ஓதுகின்ற மூவெழுத்தும் ஒக்குமோ- நீதி
செகராஜ சேகரன் வாழ்சிங்கை யெனுஞ்செல்வ
நகரா யிழையார் நகை.
45
பூங்கோதை மாதர் புனைகின்ற முத்தாரம்
வாங்கோங் குடிக்குவடு வென்றே- நாங்கள்
முலைக்கோடு அணிவதெல்லாம் முக்கண்ணான் சென்னித்
தலைக்கோடு பட்ட தழும்பு.
46
இவ்வரையும் ஆவிக்கு இரங்குவோர் தாமில்லை
ஐவரையுங் காத்தவ வனாதலினால்- மைவரைசொல்
வானிரங்கு முத்துகிருஷ்ண மன்னன் நமது தொண்டை
மானிரங்கு வானென்றாண் மான்.
47
வாரிதரளஞ் சொரிய மாமரையின் ஊடுருவிச்
சேரனமர் நாடளவுஞ் சேர்ந்ததே- மூரிமதன்
அம்போடு அலைகின்ற ஆயிழைக்கு நீகுதிரைக்
கொம்போ குலோத்துங்கா கூறு.
48
தேமிருக்கு மாந்தளிரைச் செந்தீவன மென்றும்
பூமுருக்கைத் தீப்பொறி யென்றும்- நாமிருக்கு
மாப்படுமே யென்றெண்ணி வாடிமனந் தளர்ந்து
கூப்பிடுமே அந்தக் குயில்.
49
காமனார் வீட்டினிலே கள்ளன் புகுந்தானே
சோமனாரைப் பாம்பு சூழ்ந்ததோ- மாமரந்தான்
தீப்பட்டு வேகுதோ தியாகேசர் நன்னாட்டில்
கூப்பிட்டதே யக் குயில்.
50
செந்தமிழோர் உய்யவன்பு செய்யவந்த சோழவள்ளல்
சந்ததமும் சேராநாடாழ் குழலே- வந்தனைசெய்
ஐங்கரனை வேலவனை யன்றழற்கண் வந்தவனைச்
சங்கரனை வாசுகியைத் தான்.
51
முக்கணன் வாழ்வெற்பை முறித்துவரி யிட்டகால்
முக்கணனை யப்பில்விழ மோதாதோ- முக்கணன்றன்
வேணிக்காகா மலர்வைத்து ஏகினான் மெல்லியலே
சாணிற் குறைந்தான் தலை.
52
சேலநகரே மதுரைச் சீர்ச்செழியனே செழியன்
சாலவதில் உள்ளோரே சங்கத்தார்- சீலமிகும்
கம்பால தேவன் கடம்ப வனவாசர்
தம்பாரி மீனாடசித் தாய்.
53
மங்கையர்கள் யோனிமிசை வைத்திருக்கும் ஆசைதனைப்
பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்துக்- கங்கைமதி 
வேணியான் பாதார விந்தத்தில் வைத்தக்கால்
காணலாங் காணாக் கதி.
54
துர்ச்சனரும் பொன்னுந் துடியுந் துரகதமும்
அச்சமற முன்னிற்கும் ஆயிழையும்- நச்சரவும்
கண்டித்த வெள்ளும் கரும்பும் இளநீரும்
தண்டித்தார்க் கல்லோ சயம்.
55
புட்டவல் பட்டாணி பொரிதேங் குழலப்பம்
மட்டவிழுந் தோசை வடையுடனே- சட்டமுடன்
ஓயாமல் சோறுகறி யுண்டை யுண்டையாய் அடைக்கும்
வாயா நமச்சி வாயா.
56
குச்சிலிய மாதர் குயமுங் குவலயத்தோர்
மெச்சுதமிழ் மாதர் வியன்முலையும்- சிச்சீ
தெலுங்க மடமாதர் சிங்காரக் கொங்கைக்
கலிங்க மெனவே சொற்கவி.
57
இங்கிருக்க வென்றால் எமனொட்டான் இவ்விடம்விட்
டங்கிருக்க வென்றால் அயனொட்டான்- எங்குவைத்துப்
பேணுவேன் இவ்வுடலைப் பித்தா பிறைசூடும்
தாணுவே சொக்க நாதா. 
58
வெள்ளிமலை பொன்னின்மலை மேவமகிழ் வீடாகி
பிள்ளைகளோ புத்திசொலும் பிள்ளைகளாய்- தெள்ளுமுகம்
வாடாவடி வுடையாண் மாமனையாள் ஆனக்கால்
ஆடாரோ வொற்றி யப்பனார்.
59
அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றம்
குடியார்க் கெழுதிய கைச்சீட்டுப்- படியின்மிசைப்
பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீடசைசெய்து
முத்தி கொடுக்க முறை.
60
பரம ரகசியத்தைப் பாழான வாயால்
இரவு பகலெந் நேரமின்றிக்- கரனெரியக்
கூப்பிட்டுங் காணுமோ கோலமட நெஞ்சேமால்
பூப்பிட்டுங் காணாப் பொருள்.
61
காந்தனுக் கென்றன் கொடியகாம விகாரமெலாம்
போந்தறி வித்தால் உனக்குப் புண்ணியமாம்- சேர்ந்தோடும்
தேளிபட வாடுந் திரைக்கடலே மன்மதன்கை
வாளிபட வாடும் மனம்.
62
கம்பனென்றுங் கும்பனென்றுங் காளியொட்டக் கூத்தனென்றும் 
கும்பமுனி யென்றும்பேர் கொள்வாரோ- அம்புவியில்
மன்னாவலர் புடைசூழ் குடந்தையாரி யப்பன்
அந்நாளிலே யிருந்தக் கால்.
</poem>
"https://ta.wikisource.org/w/index.php?title=வெண்பாப்_பாடல்கள்&oldid=1410926" இலிருந்து மீள்விக்கப்பட்டது