உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றிக்கு எட்டு வழிகள்/005-010

விக்கிமூலம் இலிருந்து

அதைக் கைக்கொண்டொழுகுவதில்லை. சில வேளைகளில் அவர்கள் இவ்வாறு செய்துவிடக் காரணம் என்னவெனில் தமக்கு எல்லாம் தெரியுமென அவர்கள் அறியாமையால் எண்ணுகின்றனர்; அவ்வாறு எண்ணுவதால், ஒரு பலகணியைத் துப்புரவு செய்வதோ தரையைத் துடைப்பதோ எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்வதாயினும் கூட அதனை அறிந்து கொள்வது இயலாது போய்விடுகின்ற ஒரு நிலையில் தம்மை வைத்துக் கொள்பவராகின்றனர்.

பொறுமையின்மையும், திறப்பாடின்மையும் மிகவும் பொதுவானதாகும். பொறுமையும், திறப்பாடும் கொண்ட மக்கட்கு உலகில் பெருமளவு வாய்ப்பிருக்கின்றது. சிறந்த வேலைப்பாட்டைப் பெறுவது எத்துணைக் கடினமானது என்பதைத் தொழில் நடத்தும் பணிமுதல்வர்கள் அறிவர். நல்ல தொழிலாளி தன்னுடைய கருவிகளைக் கொண்டோ செயலைக் கொண்டோ தனது திறமையைக் கையாள ஓரிடத்தை எப்போதும் கண்டு பிடித்தே தீருவான்.

வளப்பம் திறப்பாட்டின் விளைவாகும். அது ஆக்கத்தின் ஒரு தன்மை மூலக் கூறாகும்; ஏனெனின், வளப்பமுடைய மனிதன் என்றுமே குழப்பமடைவதில்லை. அவனுக்குப் பல வீழ்ச்சிகள் ஏற்படலாம்; ஆனால், அவன் எப்போதும் வாய்ப்பை ஏற்பவனாகவே இருப்பான். வீழ்ந்த உடனேயே தன் கால்களூன்றி எழுந்து விடுவான். ஆற்றலைப் பேணிக் காப்பதிலேயே வளப்பத்தின் அடியாதாரக் காரணம் அமைந்து கிடக்கின்றது. அது ஆற்றல் உருமாறப் பெற்றதேயாகும். ஒரு மனிதன் தனது ஆற்றலை வெறுமையாக்குகின்ற சில மனத்தூயநெறிகளையோ உடலின் தீயநெறிகளையோ தவிர்த்து விடுகையில், அவ்வாறு பேணிக் காக்கப்படுகின்ற ஆற்றல் என்னவாகின்றது? அது அழிக்கப்படவுமில்லை, இழக்கப்படவுமில்லை. ஏனெனின், ஆற்றல் அழிக்கப்படுவதுமில்லை அன்றி இழக்கப்படுவதுமில்லை. அது உற்பத்தி ஆற்றலாகவே உருமாறுகின்றது. பயனுடைய சிந்தனை எனும் வடிவத்தில் அது திரும்பத் தோன்றுகின்றது.

அறநெறியுள்ள மனிதன் மறநெறியுள்ள மனிதனைவிட மிகுதியான வெற்றி அடையவனாகவே இருக்கின்றான். ஏனெனின், அவனிடம் வளப்பங்கள் கிளைத்து நிற்கின்றன. சேகரிக்கப்பட்ட ஆற்றல் செழித்திருக்க அவனுடைய மனப்பாங்கு முழுவதும் உயிர்ப்புடனும் ஊக்கத்துடனும் இருக்கின்றது. தீயநெறி கொண்ட மனிதன் பயனற்ற நுகர்ச்சிகளில் பாழ்படுத்துவதை நன்னெறிகொண்ட மனிதன் பயனுடைய உழைப்பில் செலவிடுகின்றான்.

விலங்கினத் தீயநெறி எனும் பழைய உலகினின்றும் தன்னைத் தனித்துப் பிரித்து விடுகின்ற மனிதனுக்குக் கண்ணைக் கவரும் நாட்டங்கள், தூய்மையான களிப்புகள் அனைத்தும் செழித்திருக்கின்ற ஒரு புதிய வாழ்வும், புதிய உலகமும் திறக்கப்படுகின்றன. அவனிடம் நல்லுருப் பெற்றுவிடுகின்ற வளப்பங்கள் அவனுக்குரிய இடத்தை உறுதியாக்கிவிடும்.

பயனற்ற விதைகள் மண்ணிலேயே மறைந்து விடுகின்றன; இயற்கையின் பயனுடை முறை அமைப்பில் அதற்கு இடமேயில்லை. பயன்படா மனங்கள் வாழ்வுப்போராட்டத்தில் அமிழ்ந்து விடுகின்றன. மனித சமூகம் நல்லோர்க்கே வாய்ப்பளிக்கின்றது; தீயநெறி தோற்றுவிக்கும் வெறுமைக்கு அங்கு இடமேயில்லை. ஆனால், பயனற்ற மனமும் முடிவின்றி மூழ்கி விடுவதில்லை. அது விருப்பங் கொண்டால் பயனுடையதாக மாறித் தானிழந்ததைத் திரும்பப் பெற்றுவிடலாம். இயற்கையின் இயல்புப்படி, முன்னேற்றத்தின் நிலையான விதியின்படி, தீயநெறி கொண்ட மனிதன் வீழ்ந்தேயாக வேண்டும்; வீழ்ந்த பின்பு அவன் திரும்ப எழுந்துவிடலாம். அவன் மறநெறியிலிருந்து அறநெறிக்கு மாறித் தன்மதிப்புடனும், தற்பாதுகாப்புடனும் தனது வளப்பங்களின் மீது நிலைபேறு கொள்ளலாம்.

கூர் அறிவுள்ள மனிதர் புதியது புனைகின்றனர், கண்டுபிடிக்கின்றனர், தொடங்கி வைக்கின்றனர். அவர்கள் தோல்வியடைய இயலாது. ஏனெனின், அவர்கள் முன்னேற்ற ஓட்டத்தில் இருக்கின்றனர். அவர்கள் புதுத்திட்டங்கள், புது வழிவகைகள், புது நம்பிக்கைகள் நிரம்பியவர்களாயிருக்கின்றனர்; அதன் காரணமாக அவர்கள் வாழ்வு அத்துணையளவு நிறைவும், செழிப்பும் கொண்டதாயிருக்கின்றது. அவர்கள் எளிதில் வளையும் உள்ளம் படைத்த மனிதர். மனிதன் தன் தொழிலைத் தன் உழைப்பை, தன் வழிவகைகளைச் செம்மையானதாக்கத் தவறிவிடுவானெனின், முன்னேற்றக் கோட்டினின்றும் புறம் வீழ்ந்தவனாகி விடுகின்றான்; தோல்வியைத் தொடங்கிவிடுகின்றான். வயது முதிர்ந்த மனிதனின் உடலைப் போன்று அவனுள்ளம் விறைப்பும், மந்தமும், கொண்டதாக மாறிவிடுகின்றது. ஆகவே, வளப்பமுள்ள மனங்களின் கருத்துக்கள, திட்டங்கள் இவற்றுடன் அவன் சமமாக முன்னேறத் தவறிவிடுகின்றான். வளப்பமுள்ள மனம் என்றுமே வற்றாததும், புத்துயிர் தருவதும், வரட்சியான வேளைகளில் புதிய ஊக்கம் ஊட்டுவதுமான நிதியைப் போன்றதாகும். வளப்பம் கொண்ட மனிதர் புதுக்கருத்துகள் கொண்ட மனிதராவர். பிறர் மங்கி மறைந்துபோகின்ற வேளையில் புதுக்கருத்துகள் கொண்ட மனிதர் செழிப்படைகின்றனர்.

வளப்பம் பண்பட்டு நிறைவு நிலையடைதலே விளைவு என்ற உற்பவமாகும். உற்பவம் எங்குளதோ அங்கே தனித்திறமையும் இருக்கின்றது. தனித்திறமை படைத்த மனிதரே உலகின் ஒளிகளாவார். மனிதன் எந்த வேலையைச் செய்வதெனினும் சரியே, அவன் தன் சொந்த வளப்பங்களைக் கொண்டே அதைச் செய்ய வேண்டும். தனது வேலையில் உள்ளார்ந்து ஈடுபட்டு அதைப் புதியதாகவும், உற்பவமானதாகவும் ஆக்கிவிடவேண்டும். விளைவினை உண்டாக்கும் மனிதர் உலகினரின் காதினைக் கவர்ந்துவிடுகின்றனர். அவர்கள் முதன் முதலில் புறக்கணிக்கப் படலாம். ஆனால், இறுதியில் அவர்கள் ஒப்புக் கொண்டு மனித இனத்தின் இலக்குகளாகி விடுகின்றனர். மனிதன் உற்பவத் திறமையை ஒரு முறை பெற்றுவிட்டானெனின் தனது குறிப்பிட்ட துறையின் அறிவிலும், திறமையிலும் மக்களிடையே ஒரு தலைவராகத் தன்னிடத்தைப் பெற்றுவிடுகின்றான். ஆனால், உற்பவத்தைப் புகுத்தவியலாது; அதை வளரச் செய்யவே இயலும்; ஒருவனின் மன ஆற்றல்களை நிறைவாகவும், நேராகவும் பயன் படுத்துவதால் திறமையின் அளவு கோலில் ஏற்றம் பெற்று மேம்பாட்டிலிருந்து மேம்பாட்டிற்குச் செல்லுவதாலேயே அதை வளர்க்க முடியும். மனிதன் தன்னைத் தானே தன் வேலைக்கென ஒப்படைத்துவிடட்டும்; அவ்வாறு ஒப்படைத்த பின்பு அதன்மீது தன் ஆற்றல்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிடட்டும்; உலகம் தன் வலிமை மிக்க மக்களுள் ஒருவனாக அவனை வாழ்த்தும் நாள் வந்தே தீரும். பல ஆண்டுகள் விடா முயற்சியுடன் உழைத்த பின்பு “நான் ஒரு தனித்திறமை படைத்தவனாகப் போகின்றேன்” என்று விதந்துரைத்த பால்ஸாக் போன்று தானும் உற்பவ மனங்கள் குழுவுடன், அதாவது மனித இனத்தைப் புதிய, உயர்ந்த, மிகுநலஞ்சூழ் வழிகளில் நெறிப்படுத்துகின்ற களிப்போடு கடைசியில் கண்டு கொள்வான்.

சால்பு

ஆக்கத்தை மலிவாக விலைபேச முடியாது. கூரிய அறிவு கொண்ட உழைப்பினால் மட்டுமே ஒழுக்க ஆற்றலைக் கொண்டே அதை விலைக்கு வாங்கியாக வேண்டும். நீர்க்குமிழி நீடித்து நிலைபெற முடியாதது போன்று, கபடன் செழிக்கவும் முடியாது. பணத்தைப் பெறுவதற்கு ஆர்வத்துடிப்புடன் அவன் பாய்கின்றான், பின்பு படுத்து விடுகின்றான். ஏமாற்றுவதால் என்றுமே எதையும் பெற முடிந்ததில்லை; என்றுமே பெறவும் முடியாது. அவ்வாறு அடையப் பெற்றவை எதுவாயினும், அது மிகுதியான வட்டியுடன் திரும்பத் தரப்பட வேண்டிய நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிடித்து வைத்துக் கொள்ளப்படுவதே யாகும். ஆனால், ஏமாற்றுதல் தீவினைக்கு அஞ்சாத எத்தனிடம் மட்டுமே அடைபட்டுக் கிடக்கவில்லை. அவர்கள் அறிந்திருப்பினும் சரி, இல்லையெனினும் சரி, சரிசமமான ஒன்றை மாறாகத் தராமல் பணத்தைப் பெறுவோர் அல்லது பெற முயல்வோர் அனைவரும் ஏமாற்றுவதைக் கையாளுபவரே யாவர்.

பெறுதற்கான உழைப்பை மேற்கொள்ளாது பணத்தைய பெறுவது எவ்வாறு என்று பற்றார்வமுடன் திட்டமிடும் மனிதர் எத்தர்களேயாவர். இவர்கள் மனத்தால் திருடனோடும், ஏமாற்றுக்காரனோடும் நெருங்கிய நேயம் கொண்டவராகி விடுகின்றனர். உடனேயோ பின்போ இவர்கள் அவர்களின் வயப்பட்டுத் தம் கை முதலை இழக்கும்படி அவர்கள் செய்து விடுகின்றனர். நேர்மையான கைம்மாறு செய்யாது கவர்ந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தை அதன் எல்லைக்கே எடுத்துச் செல்லுகின்ற மனிதரையன்றி யார் திருடர்? நேர்மையான தொழில் அனைத்திலும் இதுவே பெரிய அடிநிலை முறையாகும். அதே போது ஆன்மீகக் காரியங்களில் இது பிறர் நமக்குச் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதை நாம் பிறர்க்குச் செய்வதாகும்; உலக ஆற்றல்களுடன் பொருத்திப் பார்க்கையில் “செயலும் செயல் விளைவும் சமமேயாகும்” என்னும் வாய்பாடாக அறிவியல் பாங்கில் கூறப்படுகின்றது.

   மனித வாழ்வு பரிமாற்றத்திற் குட்படுவதே அன்றிப் பறித்தெடுத்துக் கொள்ளப்படுவதன்று. பிறர் அனைவரையும் தனது முறைப்படியான இரையாகக் கருதுகின்ற மனிதன், தான் ஆக்கப் பாதையினின்றும் மிகவும் அப்பாற்பட்டு அழிவென்னும் பாலை வனத்தில் முடங்கிக் கிடப்பதை விரைவில் கண்டு கொள்வான். மேலும், நாணயமான மனிதருடன் வெற்றிகரமாகக் கொண்டுசெலுத்த முடியாத அளவில் உள்ளது சிறத்தல் முறையில் மிகவும் பின் தங்கி விடுகின்றான். தகுதியுடையோர், சிறந்தோர் எப்போதும் தொடர்ந்து வாழ்கின்றனர். எனவே, இவன் இருப்பதால் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இவன் காலத்தால் மாறிக் கொள்ளவில்லையெனின், இவனுடைய முடிவு சிறைச்சாலையாகவோ, அருவருப்பான குடிசையாகவோ ஒதுக்கப்பட்ட போக்கிரிகளின் இடமாகவோ இருக்கும். அவனுடைய முயற்சிகள் அழிவுச் சார்புடையன ஆக்கச் சார்புடையனவல்ல; இவன் அதனால் தன்னைத் தான் அழித்துக் கொள்கின்றான்.

கபடன், பொய்யன், ஏமாற்றுக்காரன், நாணயமற்ற மனிதன் எதையும் கட்டவியலாது; ஏனெனின், கட்டுமானத்திற்கு வேண்டிய கருவிகளோ செய்முதற் பொருளோ அவனிடம் கிடையாது. ஒரு சமயத்தைத் தோற்றுவிக்கவோ ஒரு செங்கல் வீட்டைக் கட்டவோ இயலாதவாறு போன்ற ஒரு தொழில், ஒரு குணவியல்பு, ஒரு வாழ்க்கை நெறி, ஒரு வெற்றி எதையுமே அவன் உருவாக்க முடியாது. அவன் உருவாக்க முடிவதில்லை. பிறர் உருவாக்கி இருப்பவனவற்றிற்குத் தீங்கிழைத்து வீழ்த்துவதிலேயே அவனுடைய ஆற்றல்கள் அனைத்தும் திருப்பப்படுகின்றன; ஆனால், அது இயலாதுபோவதால் அவன் தன்னைத்தான் வீழ்ச்சி அடையச் செய்துகொள்கின்றான்.

சால்பின்றேல் ஆற்றலும், சிக்கனமும் இறுதியில் தோல்வியுற்றுவிடும்; ஆனால், சால்பின் சார்பிருப்பின் அவற்றின் வலிமை பெரிதும் பெருகும். ஒழுக்கக் கூறு பங்கெடுத்துக் கொள்ளாத வேளையே வாழ்வில் இல்லை. மிகச் சிறப்பான சால்பு எங்கிருப்பினும் தன்னை உணர்த்தி நிற்பதோடு கொடுக்கல் வாங்கல்கள் அனைத்திலும் தனது முத்திரையைப் பொறித்துவிடும்; வியப்பிற்குரிய அவனுடைய இசைவுச் சீராலும், நிலையமைதியாலும், வெல்ல முடியாத வலிமையாலுமே அது அவ்வாறு செய்கின்றது.

ஏனெனின், சால்புடைய மனிதன் செயல்களின் நிலைபேறுகொண்ட விதிகளின் வழியே நடப்பவனாயிருக்கின்றான். அவ் விதிகளாவன மனித சமூகம் நிலைபேறு கொண்டுள்ள அடிநிலை முறைகள் மட்டுமன்று, இப் பரந்த உலகத்தையே ஒன்றாக இணைத்திருக்கும் விதிகள். இவற்றை யாரே வெறுமையாக்கிவிட முடியும்? அவன் என்றும் ஊற்றுகளால் ஊட்டுவிக்கப்படுகின்ற வேர்களைக் கொண்ட வலிமையான மரத்தைப் போன்றனவாகும்; எந்தச் சூறாவளியும் அதைச் சாய்த்து வீழ்த்திவிட முடியாது.

சால்பு முழுமைநிலை எய்தியதாகவும், வலிமை உடையதாகவும் இருக்க வேண்டுமெனின், அது முழுமனிதனையும் தழுவி நிற்க வேண்டும். அது அவனுடைய வாழ்வின் நுணுக்கங்கள் அனைத்திலும் பரவி நிற்கவேண்டும்; நெறிப் பிறழச்சிக்கு விட்டுக் கொடுக்கத் தூண்டும் ஆர்வ அவா எழுச்சிகள் அனைத்தையும் எதிர்த்துத் தடை செய்யுமளவிற்கு அது அத்துணை ஆழப் பதிந்ததாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் தோல்வியுறுவது என்பது அனைத்திலும் தோல்வியுற்று விடுவதேயாம். எத்துணை தேவையானதாகவும், மிகச் சிறிய காரியமாகவும் தோற்றமளிப்பினும் நெருக்கடியானபோது பொய்ம்மைக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்வது, சால்பு எனும் கேடயத்தை வீசி எறிந்து விட்டுத் தீமையின் தாக்குதல்களுக்குத் தன்னைத் திறந்து காட்டுவதேயாகும்.

சால்பிலே ஆழ்ந்து வேரூன்றாத மனிதன் தனது நல்வாய்ப்புகளுக்காகவும், ஆக்கத்திற்காகவும் ஒரு பொய்யைப் பேசுவதோ நேர்மையிலாத ஒரு செயலைச் செய்வதோ தேவையெனத் தோன்றுகின்ற காலமும் வந்துவிடும்; ஆனால், அவ்வாறு அவா ஊட்டப் பெற்றுவிடுகின்ற ஒருவன் உறுதியற்றதும், திகைப்புற்றதுமான வேளையில் தன்னகத்திருந்தே எழுகின்ற பொய்ம்மையின் நுட்பமான சூழ்ச்சித் திறத்தை உதறியெறிந்து விட முடியவேண்டும். நடத்தைப் பிசகில் அமிழ்ந்து விடுவதைக் காட்டிலும் இழந்துவிடவும், இன்னல்படவும் சித்தமாயிருக்கின்ற வகையில் நியதியின் வழியில் உறுதியாக நிற்கவேண்டும். இந்த ஒழுக்க நெறியினைக் குறித்து இவ் வழியில்தான் ஒருவன் அறிவொளி ஊட்டப் பெற்றவனாகவும், சால்பு ஆதாயத்திற்கும், இன்பத்திற்கும் வழிகாட்டுகின்றதே அன்றி இழப்பிற்கும், துன்பத்திற்கும் அன்று எனும் உண்மையைக் கண்டு கொள்ளவும் முடியும். நாணயமும், இழப்பும் காரண காரியத் தொடர்பு கொண்டன அல்ல, கொள்ளவும் முடியாது.

மெய்ம்மைக்கு மாறாக நடப்பதைக் காட்டிலும் ஈ(தியா)கஞ் செய்ய முடிவாயிருப்பதே வாழ்வின் கடமைகள் அனைத்திலும் அறிவொளியூட்டும் வழி காட்டியாகின்றது. ஏதேனும் தன்னல நோக்கை விட்டுக் கொடுப்பதைவிடப் பொய் மொழியவோ ஏமாற்றவோ துணிகின்ற மனிதன் ஒழுக்கநெறி அறிவைப் பெறும் உரிமையைப் பறிகொடுத்தவனாகின்றான். அவன், வஞ்சகப் பக்தர்களின் நடுவே, இரண்டக நிலையான ஏமாற்றங்கள் செய்பவர்களின் நடுவே, குணவியல்பும், நன்மதிப்புமில்லா மனதர்களின் நடுவே கீழ்வரிசையில் இருப்பவனாகிறான்.

கடுமையான போட்டி நிறைந்த இந்த நாள்களில் நாணயமுடனிருந்து எந்த மனிதனும் செழிப்படையவியலாது என்று பொய்பேசும் ஒருவர் நம்மிடம் கூறக்கூடும். அத்தகைய மனிதன் என்றுமே நாணத்துடனிருக்க முயன்றதில்லை என்றிருக்கையில் அவன் எவ்வாறு இதையறிந்து கொள்ள முடியும். மேலும், அத்தகைய மனிதனுக்கு நாணத்தைப் பொறுத்த அறிவு எதுவும் கிடையாது. எனவே, அவனுடைய மொழி அறியாமையின் கூற்றேயாகும். தன்னைப்போலவே பிறர் அனைவருமே அறியாமையும், பொய்ம்மையும் நிறைந்தவரே என மூடத்தனமாக எண்ணுகின்ற அளவிற்கு அறியாமையும், பொய்ம்மையும் ஒருவனைக் குருடனாக்கிவிடுகின்றன.

ஏறத்தாழ நாணயமாக இருப்பது என்பது நாணயமின்மையைக் குறிக்கும் பிறிதொரு சொல்லேயாகும். நேரான வழியினின்றும் சிறிது விலகுபவன் மேலும் அதிகமாகவே விலகுவான். நேர்மையெனும் நிலையான நியதி அவனுக்குக் கிடையாது. தனது சொந்த நலனையே எண்ணிக் கொண்டிருக்கின்றான். தனது குறிப்பிட்ட நாணயமின்மை வெளிப்படையானதும், கேடு பயக்காததுமான நிலை என்றும், தனது அண்டை வீட்டானைப்போல் தான் அத்துணைத் தீயவனல்லன் என்று தன்னைத்தான் தேற்றிக் கொள்வது, ஒழுக்க முறைகளைக் குறித்து அறியாமை உண்டுபண்ணுகின்ற பலவகையான மயக்கங்களில் ஒன்றேயாகும்.

வாழ்வில் பல்வேறுபட்ட தொடர்புகளிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் மனிதனுக்கு மனத்தின் நேர்மையுடன் நடந்துகொள்வதே சால்பின் உள்ளுயிர். அது நாணத்தைத் தன்னுள் கொள்வதாகின்றது; எனினும் அது நாணயத்தைவிட மேம்பட்டதாகும். அதுவே மனித சமூகத்தின் முதுகெலும்பு. மனித நிறுவனங்களின் அடிப்படையும் அதுவே. அதன்றி நம்பிக்கையிராது. வாணிப உலகம் வீழ்ச்சியடையும் வகையில் தலைகீழாகக் கவிழ்ந்துவிடும்.

பொய்யன், மனிதன் அனைவரையுமே பொய்யர்கள் என்று எண்ணி அவர்களை அவ்வாறே நடத்துவதுபோன்று சால்புடைய மனிதன் பிற மனிதர் அனைவரையுமே நம்பிக்கையுடன் நடத்துகின்றான். இவன் அவர்களை நம்புகின்றான்; அவர்கள் இவனை நம்புகின்றனர். இவனுடைய தெளிவான கண்ணும், திறந்த கைகளும் திருட்டுத்தனமாகச் செல்லும் எத்தன் அவனுடைய எத்துமானத்தைத் தன்னிடம் கையாள முடியாதபடி அவனை அவமானப் படுத்திவிடுகின்றன. எமர்சன் வெகு அழகாகக் கூறியிருக்கின்றார்; “மனிதர்களை நம்பு, அவர்கள் தம் வாணிப விதிகள் அனைத்திலிருந்தும் உன் சார்பாக ஒரு விதி விலக்கைச் செய்வதாயினும், உன்னிடம் உண்மையுடனிருப்பர்”.

வியப்பு, ஊக்கம் இரண்டையும் உண்டு பண்ணுகின்ற தன்னை உணராத சிறப்பைச் சால்புடைய மனிதன் தன்னிடத்தே கொண்டிருக்கின்றான். சிறியவை, இழிந்தவை, தவறானவை இவற்றிற்கு மேம்படத் தன்னை உயர்த்திக் கொண்டபின்பு இக் கோழைமையான நேர்மைக் கேடுகள் அவன் முன்னிலையில் குழப்பத்தால் பதுங்கிச் செல்கின்றன. மிகவுயர்ந்த இந்த ஒழுக்கச் சிறப்புடன் உயர்ந்த ஆய் பண்புத் திறமும் ஒப்புக் காட்ட முடியாது. தனித் திறமை வாய்ந்த மனிதனைவிடச் சால்புடைய மனிதனே மக்கள் நினைவிலும், உலகத்தின் மதிப்பீட்டிலும் உயர்ந்த இடத்தை வகித்து வருகின்றான். “தன்னுரிமையான சால்பின் ஒழுக்கச் சிறப்பே இயற்கையின் விழுமிய பொருளாகும்” என்று பக்மின்ஸ்டர் கூறுகின்றார். அதுவே வீரர்களை உண்டு பண்ணுகின்ற மனிதப் பண்பு. நெறி திறம்பாத நேர்மையுடைய மனிதன் இயல்பாக எப்போதும் ஒரு வீரனாக விளங்குகின்றான். அந்த வீரப் பான்மையை வெளிக்கொணரத் வாய்ப்பே தேவைப்படுகின்றது. மேலும், அவன் எப்போதும் நிலையான மகிழ்ச்சியுடையவனாகவே இருக்கின்றான். தனித்திறமை வாய்ந்த மனிதன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக இருக்கலாம்; ஆனால் சால்புடைய மனிதன் அவ்வாறில்லை. நேர்மையின் உள்ளார்ந்த பண்பாயிருக்கின்ற நிலையான மன நிறைவை நோயோ பேரிழப்போ அன்றி இறப்போ கவர்ந்துவிட முடியாது.

நேர்மை அடுத்தடுத்த நான்கு படிகளில் அவனை ஆக்கத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. முதன் முதலில் நேர்மையான மனிதன் பிறருடைய நம்பிக்கையைப் பெற்றுவிடுகின்றான்.

இரண்டாவதாக அவர்கள் அவன் மீது நம்பிக்கை கொள்கின்றனர்.

மூன்றாவதாக இந்த நம்பிக்கை என்றுமே மீறாத நிலையில் ஒரு நற்பெயரை உண்டு பண்ணுகின்றது; நான்காவதாக, நற்பெயர் மேலும் மேலும் பரவுகின்றது; எனவே, வெற்றியைக் கொணருகின்றது.

நாணயமின்மை நேர்மாறான விளைவை உடையதாக இருக்கின்றது. பிறருடைய நம்பிக்கையை அழித்துவிடுவதால் அது அவர்களிடையே ஐயப்பாட்டையும், நம்பிக்கைக் கேட்டையும் உண்டு பண்ணுகின்றது; இவை தோல்வியில் முடிவு பெறுகின்ற ஒரு மோசமான பெயரை உண்டு பண்ணுகின்றது.

சால்பென்னுந் தூண் வீறியமுள்ள இந்த நான்கு கூறுகளாலும் ஒருமித்து வைக்கப்படுகின்றது.

1. நாணம் 3. இலக்கு
2. அஞ்சாமை 4. வெல்லக் கூடாமை

நாணயம் வெற்றிக்கான உறுதியான வழியாகும். நாணயமற்ற மனிதன் துன்பத்திலும், துயரத்திலும் கழி விரக்கம் கொள்கின்ற நாள் வந்தே தீருகின்றது. ஆனால். நாணயமுடன் இருந்துவிட்டதற்காக எந்த மனிதனும் என்றுமே கழிவிரக்கம் கொள்ளத் தேவையில்லை. நாணயமுள்ள மனிதன் தோல்வியடைந்து விடினும் கூட, நாணயமற்ற மனிதனுக்கு இருப்பதைப் போன்று அத் தோல்வி அவனுக்குத் துக்கந் தருகின்ற காரியமன்று. ஏனெனின், தன்னைப் போன்றோன் ஒருவனை அவன் என்றுமே வஞ்சித்ததில்லை எனும் உண்மையில் அவன் மகிழ்ச்சியடையலாம். அவனுடைய இருண்ட நேரத்திலும் அவன் தெளிவான மனச்சான்றுடன் இளைப்பாறுதல் பெறுகின்றான்.

நாணயமின்மை ஆக்கத்தைப் பெறும் ஒரு குறுக்கு வழியென அறிவற்ற மனிதர் எண்ணுகின்றனர். இது காரணமாகவே அவர்கள் அதைக் கையாளுகின்றனர். நாணயமற்ற மனிதன் ஒழுக்க நெறியைப் பொறுத்த அளவில் அணுக்கப் பார்வைக் கோளாறு கொண்டவனேயாவான். இறுதியில் ஏற்படும் இழிவை எண்ணிப் பார்க்காமல் தனது பழக்கத்தின் உடனடி மகிழ்ச்சியைக் காணுகின்ற குடிகாரனைப் போன்று, அவன் நாணயமற்ற செய்கையின் “பெருத்த ஆக்கம்” போன்ற உடனடி விளைவைக் காணுகிறானேயன்றி அதன் இறுதி விளைவை எண்ணுவதேயில்லை. அத்தகைய செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகும் எண்ணிக்கை தனது குணவியல்பைத் தவிர்க்க முடியாத நிலையில் வீழ்த்தி விடுவதோடு, தன் காதுகளில் ஒலிக்கும் வண்ணம் தனது வாணிபம் அழிவினுள் கவிழ்ந்து வீழும் நிலைக்கும் கொணர்ந்துவிடும் என்பதை அவன் காணுவதில்லை.

தன் கீழ்ப் பணியாற்றுபவர்கள் பொய் மொழிந்து வாடிக்கைக்காரர்களிடம் தனது சரக்கைக் குறித்துத் தவறுதலாக எடுத்துக் கூறவேண்டுமென்று ஒரு வணிகன் வேண்டிக் கொள்வது ஐயப்பாடு, நம்பிக்கையின்மை, வெறுப்பு இவை தன்னைச் சுற்றிக் கைகள் கோத்து நிற்குமாறு செய்து கொள்வதாகும். அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஒழுக்க வலிமையற்றோர்கூட அவனது தூய்மையற்ற வேலையால் தம்மைக் கறைப்படுத்திக் கொள்கின்ற அதே வேளையில் அவனை எள்ளி நகையாடுவர். அத்தகைய நச்சுச் சூழ்நிலையில் வெற்றி நிலைத்து நிற்றல் எவ்வாறு கூடும்? அத்தகைய வாணிபத்தில் அழிவின் சாயல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கின்றது; அதனுடைய வீழ்ச்சியின் நாளும் குறிக்கப்பட்டு விடுகின்றது.