வெளிநாட்டு விடுகதைகள்/விடுகதை பற்றிய கதைகள்
விடுகதை
பற்றிய
கதைகள்
சன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும்: பள்ளிக்கூடங்களில் 'விடுகதைப் பாடம்' என்று ஒரு பாடம் இருந்துவந்தது. விடுகதைகளை எப்படி விடுவிப்பது, புதிய புதிய விடுகதைகளை எப்படி இட்டுக் கட்டுவது என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்! ரோமாபுரிப் பள்ளிகளில் 'விடுகதைப் பாடம்' கட்டாயப் பாடமாக இருந்து வந்ததாம்!
கிரேக்க நாட்டில் பெரிய விருந்து என்றால் நிச்சயம் அங்கே விடுகதை இருக்கும். விருந்து முடிந்ததும், எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துகொள்வார்கள். ஒரு நிபுணர் விடுகதைகள் போடுவார். மிகமிகச் சிக்கலாக அந்த விடுகதைகள் இருக்கும். யார் அதிகமான விடுகதைகளை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு மாலை போட்டு 'வாழ்க ! வாழ்க !' என்று வாழ்த்துக் கூறுவார்கள்.
***
துருக்கியில் சில பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் விடுகதை போடுவதில் கெட்டிக்காரிகள். அவர்கள் வீட்டுக்குப் பெண் பார்க்க ஒரு பையன் வந்தால், அவன், அந்தப் பெண் போடும் விடுகதைகளுக்குச் சரியாக விடை கூறவேண்டும் அப்போதுதான், அவனை அவள் மணந்து கொள்வாள். இல்லாவிடில், ஏமாற்றத்துடன் திரும்பிப் போகவேண்டியது தான்! விடுகதைக்கு விடை சொல்லத் தெரியாதவர்கள் பிரம்மசாரியாகவே காலம் தள்ள வேண்டியதுதானாம்!
அங்கே மற்றொரு வகை மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பயிர்கள் வளரும் காலத்தில் வயல் கரைகளில் உட்கார்ந்துகொண்டு விடுகதைகள் போடுவார்கலாம். யார் யார் சரியான விடை சொல்லுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நல்ல விளைச்சல் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
***
ஆப்பிரிக்காவில் விடுகதைக்குப் பஞ்சமே இல்லை. அங்கு 'விடுகதை விளையாட்டு' என்று ஒரு வினையாட்டு உண்டு. அந்த விளையாட்டில் சிறுவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து கொள்வார்கள். ஒரு கட்சிக்கு ஐந்து ஆறு பேர் இருப்பார்கள். ஒரு கட்சியிலிருந்து ஒருவன் விடுகதை போடுவான். எதிர்க்கட்சிக்காரர்கள் அதை விடுவிக்க வேண்டும். அல்லது பதில்-விடுகதை போடவேண்டும். இப்படியே மணிக்கணக்கில் இந்த விளையாட்டை அவர்கள் நடத்துவார்கள்.
இவர்களைப் போலவே பிஜித் தீவிலும் இளைஞர்கள் கட்சிகளாகப் பிரிந்து கொண்டு விடுகதை போடுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்குத் தோற்றவர்கள் விருந்து வைக்க வேண்டும்!
***
அங்கே இன்னொரு வகைப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழக்குகளில் தீர்ப்புக் கூற விடு கதையைப் பயன்படுத்துகிறார்கள்! ஒருவனைக் கைது செய்து நீதிபதியின் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், நீதிபதி நடந்தவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்பார். பிறகு சாட்சிகளை விசாரிக்கமாட்டார். குற்றவாளியாக நிற்பவனிடம் சில கடினமான விடுகதைகளைப் போடுவார். சரியான விடை கூறிவிட்டால், அவன் நிரபராதி. விடை தெரியாமல் விழித்தால், குற்றவாளி தண்டனை நிச்சயம் உண்டு.
***
ஹாவாய்த் தீவில் வசிக்கும் கூட்டத் தலைவர்களுக்குள் அடிக்கடி போட்டா போட்டி வந்துவிடும். மலயுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் முதலிய பந்தயங்களெல்லாம் நடத்துவார்கள், அந்தப் பந்தயங்களுடன்! விடுகதைப் பந்தயமும் வைப்பார்கள். இந்தப் பந்தயங்களில் வெற்றி பெற்றவனுக்குத் தோற்றவன் அடிமையாகி விடுவான்!