வேட்டை நாய்/அபூர்வ நண்பர்கள்

விக்கிமூலம் இலிருந்து

அபூர்வ நண்பர்கள்

அவன் ஒரு கைதி!

ஆம், கைதிதான்! ஆனால், அவன் எதற்காகக் கைது செய்யப்பட்டான்?

கொள்ளை அடித்ததற்காகவா?

இல்லை.

கொலை செய்ததற்காகவா?

அதுவும் இல்லை.

அப்படியானால் அவன் யாரையாவது கொலை செய்ய முயன்றானோ?

அதெல்லாம் ஒன்றுமில்லை.

அப்படியானால், எதற்காக அவனைக் கைது செய்தார்கள்?

அவனுக்கு அரசரின் போக்கு பிடிக்க வில்லை. அரசன் செய்துவரும் கொடுமைகளை அவன் பகிரங்கமாகப் பேசினான். கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினான்.

இதனால்தன் அவன் இப்போது கைதியாக நிற்கிறான். ‘ராஜத் துரோகி’ என்று அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அரசன் முன் அவனைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அரசன் அவனைப் பார்த்தான். 

“ஏ ராஜத்துரோகி! நீ எம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசினாயாமே உண்மையா?”

“உங்களைப் பற்றி நான் கேவலமாகப் பேசவில்லை. உங்களுடைய அரசாட்சியைப் பற்றித்தான் கேவலமாகப் பேசினேன்!”

“என்ன! எம்மைப் பற்றிப் பேசினால் என்ன? எம்முடைய ஆட்சியைப் பற்றிப் பேசினால் என்ன? இது ஒரு பெருங் குற்றம் என்பது உனக்குத் தெரியுமா?”

“கொடுங்கோல் ஆட்சியை நான் எதிர்த்தேன். அதைக் குற்றம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்! நாட்டுக்காக நான் பாடுபட்டேன். அதை நாச வேலை என்று நீங்கள் கருதுகிறீர்கள். தேசத்திற்காக நான் உழைத்தேன். அது மிகவும் தீமையானது என்று நீங்கள் தீர்மானம் செய்கிறீர்கள்...”

“சட்...நிறுத்து! உனக்கு என்ன திமிர்! நீ செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா? தூக்குத் தண்டனை தான்!”

“அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சாவதற்குத் தயாராகவே வந்திருக்கிறேன்.”

“உனக்கு என்ன துணிச்சல்!... சரி, உன்னுடன் நாம் பேசவிரும்ப வில்லை. உனக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறோம்” என்று அரசன் ஆத்திரத்துடன் கூறிவிட்டு, “இவனைக் கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவிட்டான்.

அதே சமயம் ஒரு காவற்காரன் அங்கு வந்து “அரசே, வணக்கம். யாரோ ஒருவர் வாயிலில்

காத்திருக்கிறார். தங்களைக் காணவேண்டுமாம்” என்று கூறினான்.

“யாரது?... சரி, உள்ளே வரச்சொல்” என்று உத்தரவிட்டான் அரசன்.

உள்ளே வந்தான், ஒரு வாலிபன். அவனைக் கண்டதும், கைதியாக இருந்தவன், “நண்பா!” என்று ஆனந்தத்துடன் வரவேற்றான்.

“ஆ! உன்னைத் தேடி......” சரியாக வாக்கியத்தை முடிக்கவில்லை வந்தவன்.

அதற்குள், அரசன் வந்தவனைப் பார்த்து, “நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? என்ன விஷயம்? உடனே சொல். உம்!......” என்று மட மடவென்று கேட்டான்.

“அரசே, இதோ கைதியாக நிற்பவன் என்னுடைய நண்பன்; மிகவும் உத்தமன். உங்களை மிகவும் வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து இவனை விடுதலை செய்யுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து...... ”

“போதும், நிறுத்து. இது அரச சபை, தயவு தாட்சண்யத்திற்கெல்லாம் இங்கு இடமே கிடையாது. அவனை விடுதலை செய்ய முடியாது. அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தாயிற்று.”

“என்ன தூக்குத் தண்டனையா! என் அருமை நண்பனுக்கா ஐயோ! அவனைப் போன்ற ஓர் உத்தமனை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாதே அரசே, அவனுக்குத் தூக்குத் தண்டனை வேண்டாம். கருணை காட்டுங்கள்.”  “தண்டனை விதித்தது விதித்ததுதான்! கடவுளே நேரில் வந்தாலும் மாற்ற முடியாது. ஆனால் , ஒன்று மட்டும் செய்யலாம். இறப்பதற்கு முன்னால் உன் நண்பனுக்கு விருப்பமானதைக் கேட்கச் சொல். முடியுமானல் தருகிறேன்.”

இதைக் கேட்டதும் கைதி அரசனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்

“எனக்கு இப்போது ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. சாவதற்கு நான் பயப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னால் ஊருக்குச் சென்று ஒரு தடவையாவது என் அருமைத் தாயையும், அன்புத் தந்தையையும் பார்த்துவிட்டு வரவேண்டும்.”

இதைக் கேட்டதும் அரசன் உரக்கச் சிரிக்க ஆரம்பித்தான்.

“விட்டுக்குப் போகிறானாம்! அப்புறம் திரும்பி வங்து உயிரைக் கொடுக்கிறானாம்! என்னே ஏமாளி என்று நினைத்து விட்டாயா? உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டுப் பிடித்து வந்தது எதற்காக? திரும்பவும் உன் இஷ்டம்போல் விடுவதற்காகவா?”

“இல்லை, இல்லை. என் பேச்சை நம்புங்கள் அரசே, நிச்சயம் வந்துவிடுவேன்.”

“என்ன! எதிரியை நம்புவதா ஒரு நாளும் முடியாது.”

அரசன் இப்படிக் கூறியதும், கைதியின் நண்பன், “அரசே, அவனை நம்புங்கள். இந்த வேண்டுகோளையாவது பூர்த்தி செய்யுங்கள். என் நண்பன் பொய் சொல்ல மாட்டான். சொன்ன சொல்லை நிச்சயம் காப்பாற்றுவான்.”

“காப்பாற்றுவானா! எப்படிக் காப்பாற்ற முடியும்? அவன் ஊர் என்ன சமீபத்திலா இருக்கிறது; ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும்; கடலைக் கடந்து செல்ல வேண்டும்; பெரிய காடுகளை எல்லாம் கடந்து செல்ல வேண்டும். இவற்றை எல்லாம் கடந்து செல்லுகிறவன் திரும்பி வரவா போகிறான்?” “அரசே, என் நண்பனை நீங்கள் நம்பலாம். நிச்சயம் திரும்பி வந்துவிடுவான்."

“வந்துவிடுவான், வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டால் போதுமா? அவன் திரும்பி வராவிட்டால்...? அவனுக்குப் பதிலாக நீ உயிரைக் கொடுக்கத் தயாரா?”

"ஓ! நான் தயார்! என்னைத் தூக்கிலிடுங்கள். அருமை நண்பனுக்காக இந்த அற்ப உயிரை விட நான் என்றும் தயாராயிருக்கிறேன்.”

“சும்மா சொல்லிவிட்டால் போதுமா? நான் உன் நண்பனுக்கு 21 நாள் தவணை கொடுக்கிறேன். அந்த 21 நாட்களும் அவனுக்குப் பதிலாக நீ சிறையில் இருக்க வேண்டும். இருபத்து ஒராவது நாள் காலை சூரிய உதயத்திற்குள் உன் நண்பன் திரும்பி வராவிட்டால், நீ தூக்குமேடையில் தொங்க வேண்டியதுதான். சம்மதமா?”

இதைக் கேட்டதும், வந்தவன் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தோன்றியது.

“அரசே, சம்மதம். என்னைக் கைது செய்யுங்கள். என் நண்பனுக்கு அனுமதி கொடுங்கள்.”

இதைக் கேட்டதும், அரசன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். சிறிதுநேரம் அப்படியே அசையாமல் இருந்தான்.

பிறகு, “உம்......சரி, அப்படியே ஆகட்டும்” என்று உத்தரவிட்டான்.

அப்போது கைதி தன் நண்டனை நன்றியுடன் பார்த்தான். 

“நண்பா, நல்ல சமயத்தில் வந்து உதவினாய். உனக்கு எந்தவித ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. எவ்வளவு சீக்கிரத்தில் திரும்பிவர, முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திரும்பி வந்துவிடுவேன். போய் வாட்டுமா?’’

”சரி, போய் வா. என்னைப் பற்றிக் கவலைப் படாதே' என்று கூறி விடைகொடுத்தான் நண்பன். கைதி ஊரை நோக்கிப் புறப்பட்டான்.

ஒருநாள், இரண்டு நாள்,மூன்று நாள்-இப்படியே பத்தொன்பது நாட்களும் ஓடி விட்டன. இருபதாம் நாள் இரவு நேரம். அரசன் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் சிறைச் சாலைக்கு வந்தான்.

“என்ன, அவன் வந்துவிட்டானா?” என்று காவற்காரர்களைப் பார்த்துக் கேட்டான் அரசன்.

“இல்லை அரசே, இன்னும் வரவில்லை” என்றனர் காவற்காரர்கள்.

“சரி” என்று கூறிவிட்டு, சிறைக்குள்ளே இருக்கும் கைதியின் நண்பனிடம் சென்றான், அரசன். அவனைப் பார்த்துக் கேலியாக ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு பேச ஆரம்பித்தான்.

“என்னப்பா, என் நண்பன் பெரிய உத்தமன்; சொன்ன சொல் தவற மாட்டான்; சத்தியவந்தன், கட்டாயம் வந்துவிடுவான்’ என்றெல்லாம் சொன்னாயே! பார்த்தாயா, காலை வாரிவிட்டு விட்டான்.”  “அரசே, அவனைப் பற்றி அப்படியொன்றும் தவறாக நினைக்காதீர்கள். ஏதேனும் எதிர்பாராமல் நேர்ந்திருக்கலாம். அதனால்தான் இன்னும் வரவில்லை. நிச்சயம் அவன் வந்து விடுவான்.”

“இன்னுமா உனக்கு அவன்.மேல் நம்பிக்கை? எவனாவது உயிரைக் கொடுப்பதற்குத் திரும்பி வருவானா? அவன் திரும்பி வருவான் என்று நான் நம்பவே இல்லை. சரி, எனக்கென்ன? அவன் வந்தால் நீ பிழைத்தாய்! இல்லாவிட்டால், நாளை உன் உடல் தூக்கு மரத்தில் தொங்கும்; உயிர் எமலோகம் போகும். இது நிச்சயம்.”

”அதற்காக நான் கலங்கவில்லை!"

* * *

மறுநாள் காலை. சூரியன் உதயமாக இன்னும் அரைமணி நேரமே இருக்கிறது.

இன்னும் ஊர் சென்றவன் திரும்பி வரவில்லை!

அவனுக்குப் பதிலாகச் சிறையில் இருப்பவனை அழைத்துக்கொண்டு வரும்படி, அரசன் உத்தரவிட்டான்.

உடனே சேவகர்கள் அவனைக் கொண்டு வந்து அரசன் முன் நிறுத்தினர்கள்.

“இன்னும் அரைமணி நேரமே இருக்கிறது. மனத்தைத் தைரியப்படுத்திக்கொள். தூக்கு மேடைக்கு நீ பலியாகப் போகிறாய். உன் நண்பன் உயிர் பிழைக்கப் போகிறான்.”  “அரசே, என் நண்பன் பிழைக்கட்டும். அவனுக்காக நான் உயிர் விடுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன். அவன் உத்தமன்; உண்மையே உரைப்பவன்; வீரன், தேச பக்தன். இந்த அற்பனின் உயிரைக் காட்டிலும் அவனு டைய உயிர் ஆயிரம் மடங்கு மேலானது. மகிழ்ச்சியோடு நான் தூக்கு மேடைக்குச் செல்கிறேன்.”

“செல்ல வேண்டியதுதான்! இனிமேல் அவன் வரப்போவதே இல்லை.”

“இல்லை, வந்துவிட்டேன்!” என்று அப்போது ஒரு குரல் கேட்டது.

அரசன் நிமிர்ந்து பார்த்தான். நண்பன் திரும்பிப் பார்த்தான். ஊருக்குச் சென்ற கைதி திரும்பி வந்துவிட்டான்! அவனைக் கண்டதும் அரசன் ஆச்சரியப்பட்டான்.

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த அவன், நண்பனை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டான்.

“நண்பா, நல்லவேளை! கடவுள் கருணை வைத்தார்; சமயத்திற்கு வந்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினான்.

“இப்பொழுது நீ ஏன் வந்தாய்? இன்னும் அரைமணி நேரம் கழித்து வரக்கூடாதா? ஐயோ! உன்னைத் தூக்கில் போட்டுவிடுவார்களே! அருமை நண்பா! ஏன் வங்தாய்?”

“ஏன் வந்தேனா? என் சொல்லைக் காப்பாற்ற வந்தேன்; உன் உயிரைக் காப்பாற்ற வந்தேன். நண்பா, எனக்குப் பதிலாக நீ சிறையிலே இருபத்

தோரு நாட்கள் இருந்தாயே! எவ்வளவு துன்பப் பட்டாயோ! உனக்கு வீண் சிரமம் கொடுத்து விட்டேன். எனக்குப் பதிலாக உன்னை வைத்து விட்டுப் போனதே பெரிய தவறு. இதை ஊருக்குப் போன பிறகுதான் உணர்ந்தேன்.”

“நண்பா......” அதற்கு மேல் பேச முடிய வில்லை, அந்த நண்பனால்!

“நண்பா, நான் வரும்போது பெரிய புயல் அடித்தது. நான் வந்த படகு புயலில் சிக்கிக் கொண்டு கவிழ்ந்தது. கடவுள் அருள் புரிந்தார் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு கட்டையின் உதவியால் கரை சேர்ந்துவிட்டேன். அதனால்தான் தாமதம். நல்லவேளை; கடலிலே நான் மூழ்கி இறக்க வேண்டியவன்; தப்பிவிட்டேன். இல்லாவிட்டால் அங்கு நான் இறந்திருப்பேன். எனக்குப் பதிலாக இங்கு நீயும் இறந்திருப்பாய்...”

அவர்களுடைய நட்பின் பெருமையை அப்போதுதான் உணர்ந்தான், அரசன். உடனே, அவன் மனம் இளகிவிட்டது! இருந்தாற்போலிருந்து திடீரென்று எழுந்தான்.

நண்பர்கள் இருவரிடமும் ஓடிவந்தான். அவர்களை அப்படியே அணைத்துக் கொண்டான்.

“ஆஹா! உங்களைப் போன்ற நண்பர்களை நான் பார்த்ததே இல்லை! சரித்திரத்திலே படித்தது. கூட இல்லை! யாரும் சொல்லக் கேட்டது கூடக் கிடையாது! உங்களுடைய நட்புக்கு மரியாதை செலுத்துகிறேன். இனிமேல் நீங்கள் இருவரும் கைதிகளல்ல; நானும் முன்போல் கொடுங்கோல் அரசனல்ல. நீங்கள் போய்வரலாம்' என்றான். “என்ன, உண்மையாகவா!” என்று இருவரும் அரசனைப் பார்த்துக் கேட்டார்கள

“ஆம், உண்மைதான்!” என்றான் அரசன்.

உடனே, இருவரும் அரசனுக்கு வணக்கம் செலுத்தினர். ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டுக்கொண்டு வெளியேறினர்.

அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான், அரசன். “ஆகா! இவர்கள் இருவரும் அபூர்வ நண்பர்களே!” என்று அப்போது அவன் வாய் முணுமுணுத்தது.


கிரேக்கக் கதை