உள்ளடக்கத்துக்குச் செல்

வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2006

விக்கிமூலம் இலிருந்து

ஆக்கர்: வே. பிரபாகரன்
வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்
காலம்: நவம்பர் 27, 2006
பின்புலம்: 2006 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால், புலிகள் இயக்க போராளிகளின் நினைவு நாளான மாவீரர் நாள் அன்று ஆற்றப் பெற்ற உரை.


எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது.

ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டே மனிதகுலம் விடுதலை வேண்டி வீறுடன் போராடி வருகிறது. வீறுகொண்டெரியும் இந்தப் போராட்டங்களை அடக்கியொடுக்க ஆக்கிரமிப்பாளர்களும் அடக்குமுறையாளர்களும் காலங்காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டுவருகிறார்கள்.

முதலிற் போர் அரக்கனை ஏவுவதும் அது முடியாதுபோக, போராடும் இனங்களின் விடுதலைப் பாதையைத் திசைதிருப்பி, அவர்கள் போகும் வழிகளெல்லாம் பொறிகள் வைத்து, சமாதானச் சதிவலைக்குள் சிக்கவைத்து, காலத்தால் மோசம் செய்து, சமாதான மாயைக்குள் தள்ளிவிட்டு, அமைதியாக அழித்தொழிப்பதுவும் வரலாற்றிலே நீண்ட நெடுங்காலமாக நடந்துவருகிறன.

இந்த உத்தியை எமது சுதந்திர இயக்கத்திற்கெதிராகவும் செயற்படுத்திவிடலாம் எனச் சிங்கள அரசு கனவுகாண்கிறது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுக்கால அமைதி முயற்சியில் இந்த அக்கினிப் பரீட்சையில் நாம் எரிந்துபோய்விடவில்லை அழிந்துபோய்விடவுமில்லை. மாறாக, நாம் இந்த வேள்வித்தீயிற் புடம்போடப்பட்டு, புதிய புலிகளாகப் புதுப்பொலிவுடன் எழுந்துநிற்கிறோம். தமிழரின் பலமும் வளமும் ஒன்றுகுவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கிறோம். இந்த இமாலயச் சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள் என்பதை இந்நாளில் நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

எமது வீரவிடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டுநிற்கிறோம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு போரையும் பேச்சையும் சமகாலத்திலே சந்தித்துநிற்கிறோம்.

போருக்கு ஓய்வுகொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடிவிட்டன. நாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டுக்காலத்தில் இந்த நீண்ட காலவிரிப்பில் தணியாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டதா?

தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா? ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம்மக்களை நாளாந்தம் அழுத்திவரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள்தானும் தீர்த்துவைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை.

மாறாக, எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கிறன. சோதனைமேற் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்கமுடியாத துயரச்சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் இந்த அமைதிக் காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத்தம் தோய்ந்த இருண்டகாலமாக மாறியிருக்கிறது. அமைதி போதித்த உலகநாடுகள் மௌனத்திற்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகிறது. பிரதான வழங்கற் பாதைக்கு மூடுவிழா நடாத்திய சிங்கள அரசு, தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறைவைத்திருக்கிறது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது சமூக வாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்துவைத்து, அவர்களது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொடுமைப்படுத்துகிறது. தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.

இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என இருமுனைகளில் எமது மக்கள் மீது சிங்கள அரசு யுத்தத்தை ஏவிவிட்டிருக்கிறது. வகைதொகையற்ற கைதுகள், சிறைவைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், காணாமற்போதல்கள், எறிகணை வீச்சுக்கள், விமானக்குண்டு வீச்சுக்கள், தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் என எம்மக்கள் மீது இராணுவ அழுத்தம் என்றுமில்லாதவாறு இறுக்கமாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் வாழிடங்கள் இராணுவ அரண்களாலும் படைநிலைகளாலும் நிரப்பப்படுகின்றன. மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகிறார்கள்.

போர்நிறுத்தம் செய்து, சமாதானப் பேச்சுக்கள் நடாத்தி, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தபோதும் எம்மக்களுக்குச் சமாதானத்தின் பலாபலன்கள் எவையுமே கிட்டவில்லை. அவர்களது வாழ்வு இருண்டுபோய் நரகமாக மாறியிருக்கிறது. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எம்மக்களை வாட்டி வதைக்கிறது, தொடரும் போரினால் எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுநிற்கிறார்கள்.

பல்லாயிரம் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்க்கப்பட்டு, நோயும் பிணியும் பசியும் பட்டினியும் வாட்ட அகதிமுகாங்களில் அல்லற்படுகிறார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து, பாதையைப் பூட்டி, பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணைகாட்டி, காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமே அன்றி வேறொன்றுமன்று.

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. ஆனால், சிங்களத் தேசத்திலே அதன் சிந்தனை உலகிலும் சரி, அதன் சமூக உலகிலும் சரி எதுவித மாற்றமும் நிகழவில்லை. சிங்களத் தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது.

பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளாற் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்துகிடக்கிறது. இதனால், சிங்களப் பௌத்தப் பேரினவாதம் இன்றொரு தேசியச் சித்தாந்தமாகச் சிங்களத் தேசத்தில் மேலாதிக்கம் செலுத்திவருகிறது. இந்தக் கருத்தாதிக்கம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களிலிருந்து பத்திரிகைத்துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ புத்திஜீவிகளோ எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்கமுடியாதவாறு சிங்கள மூளையத்தை இந்தக் கருத்தாதிக்கம் சிறைப்பிடித்துவைத்திருக்கிறது.

பௌத்தப் பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மனவமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாகப் பொறித்துவிடப்பட்டிருக்கிறன. இதனால், சிங்களத் தேசம் போர்வெறிபிடித்துச் சன்னதமாடுகிறது போர்முரசு கொட்டுகிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நாகரீகமாக அமைதி வழியில் தீர்க்க அது முயற்சிக்கவில்லை. உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தித் தமிழரைப் பட்டினிபோட்டு அழித்தொழிக்கவே அது விரும்புகிறது. வன்முறைகளைத் தூண்டி, போரைத் தீவிரப்படுத்தி, தமிழரை அடிமைகொண்டு ஆழவே அது கங்கணங்கட்டி நிற்கிறது.

காலியில் தமிழர் தாக்கப்பட்டமையும் இதனையே எடுத்துக்காட்டுகிறது. எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும் விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதான வழிமுறை தழுவி, அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதுமில்லை. இதனால்தான் திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களிற் பல்வேறு நாடுகளிற் பேச்சுக்களை நடாத்தியிருக்கிறோம். நோர்வேயின் அனுசரணையோடும் சர்வதேசச் சமூகத்தின் ஆசீர்வாதத்தோடும் உலக நாடுகளின் தலைநகரங்களில் நடந்துவரும் தற்போதைய சமாதான முயற்சி அடிப்படையில் வித்தியாசமானது.

இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவராக இருந்த திரு. எரிக் சொல்கெய்ம் ஐப்பசி 31, 2000 ஆம் ஆண்டு வன்னிக்கு அமைதிப் பயணம் மேற்கொண்டு எம்மைச் சந்தித்ததோடு இந்தச் சமாதானப் பயணம் ஆரம்பமாகியது. இது வித்தியாசமான காலத்தில் வித்தியாசமான வரலாற்றுச்சூழலில் வித்தியாசமான வடிவத்தில் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது. அமைதிக்கான முன்னெடுப்புக்கள் ஒருபுறமாகவும் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் போர்நடவடிக்கை மறுபுறமுமாகவும் இரு தளங்களிலே நகர்கிறது. தமிழரின் குருதியைக் குடித்து, தமிழரின் எண்ணற்ற உயிர்களைக் காவுகொண்டு, காலத்தால் உப்பிப்பெருத்து வெடிப்பதற்குத் தயாராகத் தருணம் பார்த்து நிற்கிறது.

நாம் அமைதி காத்த ஆறு ஆண்டுக் காலத்திலே சமாதான நடவடிக்கைகளில் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டோம். சமாதானத்திற்கான முன்னெடுப்புக்களையும் முன்முயற்சிகளையும் நாமே முதலில் மேற்கொண்டோம். முதன்முதலாகப் போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தி, நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு ஆக்கபூர்வமான நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாதானத்திற்கான உறுதியான அத்திவாரத்தை அமைத்தோம். பேச்சுக்களில் நியாயமற்ற நிபந்தனைகளையோ நிர்ப்பந்தங்களையோ போடாது வரம்புகளையோ வரையறைகளையோ விதிக்காது காலக்கட்டுப்பாடுகளைத் திணிக்காது அமைதி முயற்சிகளை முன்னெடுத்தோம். இவற்றை நாம் பலவீனமான நிலையில் நின்று மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பையும் இயக்கச்சி- ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்கள இராணுவத்தின் "அக்கினிகீல" முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தோம். உலகின் போரியல் வரலாற்றில் மகத்தான சாதனைகளைப் புரிந்து, இராணுவ மேல்நிலையில் நின்றுகொண்டே இத்தனையையும் மேற்கொண்டோம்.

தென்னிலங்கையிலோ நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. தோல்வி மேல் தோல்வியைப் பெற்று, போரிடும் மனோநிலை குலைந்து, இராணுவத்தின் முதுகெலும்பு உடைந்து, நாட்டின் பொருளாதாரம் படுத்துத் தள்ளாடிய நிலையிலேயே சிங்களத் தேசம் சமாதானப் பேச்சிற்குச் சம்மதித்தது. இந்தச் சமாதான முயற்சி ஆரம்பித்ததிலிருந்து இற்றைவரையான ஐந்து ஆண்டுக் காலத்தில் ரணில், சந்திரிகா, மகிந்த என மூன்று அரசுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாறமாற சமாதான முயற்சிகளும் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டு இன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டன. சமாதானப் புறாவும் கூடுவிட்டுக் கூடுதாவியதே தவிர அதனால் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்கமுடியவில்லை. கூட்டுப்பறவையாகிக் கூட்டுக்குள்ளேயே குத்தப்பட்டு இன்று குற்றுயிராகக் கிடக்கிறது.

முதலில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டு ஆறு மாதங்கள் அமைதிப் பேச்சு நடாத்தினோம். கடந்த அரசுகளைப் போலவே ரணில் அரசும் வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது, ஏற்றுக்கொண்ட ஒப்பந்த விதிகளையும் கடப்பாடுகளையும் செயற்படுத்தாது காலத்தை இழுத்தடித்தது. ஒப்பந்த விதிகளுக்கமைய மக்களது வாழிடங்கள், வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து தமது படைகளை விலக்கிக்கொள்ளாது, அவற்றை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, மக்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரமாகத் தடைபோட்டது. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கான உபகுழுவும் முழுமையாகச் செயலிழந்தது. இதேபோன்று எம்மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உபகுழுவும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளாற் செயலிழந்து செத்துப்போனது.

எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி, ஓரம்கட்டுகின்ற வேலையையும் இரகசியமாக மேற்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஒரு முறையான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளைக் கூட்டி, உதவிப் பணத்தைப் பெற்று, தென்னிலங்கையைக் கட்டியெழுப்பவும் திட்டம்போட்டது. இலங்கைக்கு உதவி வழங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட வா~pங்ரன் மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யாது எம்மை உலக நாடுகளின் மத்தியில் அந்நியப்படுத்தி, அவமானப்படுத்தியது. இதனால், ரோக்கியோ மாநாட்டை நாம் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இத்தோடு நின்றுவிடாது, சில உலக நாடுகளின் உதவியோடு எமக்கு எதிரான பாதுகாப்பு வலையைக் கட்டியெழுப்பி, அதற்குள் எமது சுதந்திர இயக்கத்தைச் சிக்கவைத்து அழித்தொழிக்கவும் ரணில் அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிச்செயற்பட்டது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை நாம் முன்வைத்தபோது தென்னிலங்கையிலே அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தது. எமது வரைபின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க மறுத்ததோடு ஒட்டுக்குழுக்களை அரங்கேற்றி புதிய வடிவிற் புலிகளுக்கு எதிரான நிழற்போரை அவர் தீவிரப்படுத்தினார். இந்த ஆயுதக்குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம் வன்முறைக் களமாக மாறியது. அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், போராளிகள், அப்பாவிப் பொதுமக்கள் எனப் பலரும் கொல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கமைய அரசக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எமது போராளிகள் ஆற்றிய அரசியற்பணிகளையும் இடைநடுவில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.

இதனால், எமது மக்கள் இராணுவத்தின் பிடியில் தனித்துவிடப்பட்டார்கள். இறுதியாகச் சுனாமியாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கெனக் கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பையும் சந்திரிகா அரசு செயற்படுத்தவில்லை. முழுக்கமுழுக்க மனிதாபிமான நோக்கங்கொண்ட இந்தப் பொதுக்கட்டமைப்பை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் வரையறைகளைக் காட்டிச் சிங்களப் பேரினவாத நீதிமன்றம் நிராகரித்தது. இதனால், ஆழிப்பேரலை தாக்கிய மக்களின் வாழ்வுநிலைதான் மோசமடைந்துநிற்கிறது. இதன்மூலம் சிங்களப் பேரினவாதம் எத்துணை மோசமானது என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தச் சூழமைவில்தான் கடந்த ஆண்டு நடந்த அரசுத் தலைவர் தேர்தலிற் சிங்களத் தேசம் தமது புதிய தலைவராக மகிந்த ராஜபக்சவைத் தேர்வுசெய்தது. அவரும் கடந்தகாலச் சிங்களத் தலைமைகளைப் போன்று இராணுவப் பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலுமே நம்பிக்கைகொண்டு செயற்படுகிறார். தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு கடந்த ஆண்டு மாவீரர் நினைவுரையில் நான் விடுத்த இறுதியான உறுதியான அவசர வேண்டுகோளையும் நிராகரித்துக் கடும்போக்கைக் கடைப்பிடித்துக் காலத்தை இழுத்தடித்து வருகிறார். புலிகளை அழிக்கும் இலக்குடன் ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வு பற்றிப் பேசுகிறார். போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமோ அந்தப் போராட்டடச் சக்தியை அந்நியப்படுத்தி அழித்துவிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப்போவதில்லை. இது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

மகிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன்மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டிவிட எண்ணுகிறது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டாற் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்துபோய்க் கிடக்கிறது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மகிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடாத்தி முடித்திருக்கிறது.

மகிந்தவின் போர்த்திட்டம் தரைப்போருடன் நிற்காது வான், கடல் என மும்முனைகளிலும் நீண்டு விரிந்திருக்கிறது. இதன்மூலம் மகிந்த அரசு தமிழின அழிப்புப் போருக்கு முழுவடிவம் கொடுத்திருக்கிறது. தமிழர் தாயகமெங்கும் எறிகணைகளையும் விமானக்குண்டுகளையும் வீசி இனக்கொலை புரிகிறது. ஆயுதக்குழுக்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்து பெரும் கொலைக் கலாச்சாரத்தை அரங்கேற்றியிருக்கிறது. போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டு மாவிலாறையும் சம்பூரையும் ஆக்கிரமித்து நிற்கிறது. தூரநோக்குடைய எதிர்காலப் போரியல் திட்டங்களுக்கு அமைவாக மாவிலாற்றிலும் சம்பூரிலும் நாம் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலைச் சிங்களப் படைத்துறை தவறாக எடைபோட்டது. பாரிய படைக்கலச் சக்தியையும் சுடுகலச் சக்தியையும் ஒன்றுகுவித்து, தமிழரின் தாயக நிலங்களைச் சிங்கள அரசாட்சியின் கீழ்க் கொண்டுவரப் புதியபுதிய படையெடுப்புக்களை முடுக்கிவிட்டது. இதனால், தமிழர் மண் ரணகளமாக மாறியது.

இந்நிலையில்தான் நாம் சிங்களத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதென முடிவெடுத்தோம். கிளாலியிலும் முகமாலையிலும் முன்னேறிவந்த இராணுவத்தை எமது படையணிகள் மின்னல் வேகத்தில் தாக்கியழித்தன. எதிரி என்றுமில்லாதவாறு இரத்தம் சிந்தினான். எதிரி இராணுவத்திற் பெருமளவானோர் உயிரிழந்து, ஊனமடைந்தனர். சிங்களத்தின் இராணுவ இயந்திரம் ஓரிரு மணித்தியாலங்களில் வேரறுந்துவிழுந்த விருட்சமாகச் சரிந்துகிடந்தது. சிறப்புப் படையணிகள் சிதைவுற்று முகமாலையில் முன்னேற முடியாது முடக்கப்பட்டபோதும், சிங்கள அரசு தனது போர்த்திட்டத்தைக் கைவிடவில்லை.

தொடர்ந்தும் இராணுவ வழியையே நாடிநிற்கிறது. மகிந்தவின் அரசு தமிழ்மக்களை இன அழிப்புச் செய்கின்ற அதேநேரம் அதன் இனஅழிப்புப் போரிலிருந்து தமிழ்மக்களைக் காக்கப் புலிகள் நடாத்துகின்ற ஆயுதப் போராட்டத்தை அர்த்தமற்ற பயங்கரவாதமாகச் சித்தரித்தும் வருகிறது. தமிழரின் நீதியான போராட்டத்தைத் திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விசமப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது. எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இலங்கை அரசின் இராஜரீக அழுத்தங்களுக்குப் பணிந்து, அதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. உலக அரங்கில் எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராகத் தனிமைப்படுத்தி, ஒதுக்கி, ஓரங்கட்டின.

நீதி நியாயங்களைச் சீர்தூக்கிப் பாராது, அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசோடு பேச்சுக்களில் எமக்கிருந்த சமநிலையையும் சமபங்காளி என்ற தகைமையையும் இது ஆழமாகப் பாதித்தது. விட்டுக்கொடாத கடும்போக்கைக் கைக்கொள்ளச் சிங்கள அரசை ஊக்கப்படுத்தியது. கண்காணிப்புக்குழுவைப் பலவீனப்படுத்தி, சிங்கள அரசு தனது போர்த்திட்டத்தைத் தடையின்றித் தொடர வழிவகுத்தது. அத்தோடு அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின் இன அழிப்புப் போரைக் கண்டிக்காது ஆயுத, நிதி உதவிகளை வழங்கி, அதன் போர்த்திட்டத்திற்கு முண்டுகொடுத்து நிற்கின்றன. இப்படியான புறநிலையில்தான் மகிந்த அரசினால் தனது இராணுவப் படையெடுப்புக்களை துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தமிழர் மண்ணில் தொடரமுடிகிறது.

மகிந்த அரசாங்கம் நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையிற் செயற்படவில்லை. அது பலாத்காரப் பிரயோகத்திலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கை கொண்டிருப்பதாற் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஜெனீவாவில் நடந்த இரண்டு கட்டப் பேச்சுக்களும் எதுவித பயனுமின்றி முற்றுப்பெற்றன.

முதலாம் கட்டப் பேச்சுக்களில் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் ஒன்றோடொன்று கூட்டுச்சேர்ந்து கூட்டுச்செயற்றிட்டத்தில் செயற்படுவதை ஆதாரங்களோடும் அத்தாட்சிப் பத்திரங்களோடும் புள்ளிவிபரச் சான்றுகளோடும் சம்பவக் கோவைகளோடும் பேச்சு மேசையிலே முன்வைத்தோம். அவற்றை மறுக்கவோ மாற்றுக் காரணங்களைக் கூறவோ முடியாத இக்கட்டில், ஒட்டுக்குழுக்களைத் தமிழர் தாயகத்திலிருந்து அகற்றி, போர்நிறுத்தத்தைச் செம்மையாக அமுற்படுத்துவதாக அரசு ஒப்புதலளித்தது. அந்தப் பேச்சுக்களின் பின்னர், அரச வன்முறையும் அரசப் பயங்கரவாதமும் புதிய வேகத்தோடு - புதிய வீச்சோடு தமிழர் தாயகத்தைச் சுட்டெரித்ததே தவிர வேறெதுவும் நடக்கவில்லை.

இதேபோன்றுதான் ஜெனீவாவில் நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் முற்றுமுழுதாகத் தோல்வியில் முடிந்தன. எமது மக்கள் அனுபவித்து வருகின்ற மாபெரும் மனிதாபிமானப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்திப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமைவாக யாழ்.-கண்டி நெடுஞ்சாலையை மீளத்திறந்து கண்காணிப்புக்குழுவை முழுமையாகச் செயற்படவிடுமாறு நாம் அரசைக் கோரினோம். எமது மக்களது மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மேலாகத் தனது இராணுவ நலன்களை முன்னிலைப்படுத்தி எமது இரு கோரிக்கைகளையும் அரசு அடியோடு நிராகரித்தது. இயற்கையாக ஏற்பட்ட பேரவலத்திற்கே இரங்க மறுத்து, பொதுக்கட்டமைப்பை நிராகரித்த சிங்களத் தேசம் தானே செயற்கையாகத் திட்டமிட்டு உருவாக்கிய மனிதப் பேரவலத்திற்குக் கருணைகாட்டி ஒருபோதும் நியாயம் செய்யப்போவதில்லை.

புலிகளுக்கு எதிராக ஒரு பொய்யான நீண்ட குற்றப்பத்திரிகையை வாசித்து, பேச்சு மேசையை விவாத மேடையாக்கி, போர்க்களமாக மாற்றிய அரசப் பேச்சுக்குழுத் தலைவரும், போரும் செய்வோம் பேச்சும் நடத்துவோம் எனக் குதர்க்கம் பேசும் அரசப் பேச்சாளர்களும் இருக்கும் வரை பேச்சுக்கள் எப்படி ஆக்கபூர்வமாக முன்னகரும்? எப்படி நல்லெண்ணமும் நம்பிக்கையும் பிறக்கும்? எப்படிச் சமாதானம் வரும்?

மகிந்த உள்நாட்டில் தமிழின அழிப்புப் போரை நடாத்திக்கொண்டு, உலக நாடுகளுக்கு சமாதானம் விரும்பும் ஓர் அமைதிப் புறாவாகத் தன்னை இனங்காட்ட முனைகிறார். தனது ஏமாற்று நாடகத்திற்குத் பக்கத்துணையாக அனைத்துக்கட்சி மாநாட்டை கூட்டியிருக்கிறார். எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிசனையோ ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ ஒரு வட்டமேசை மாநாட்டையோ நடத்தி அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியற் பாரம்பரியம். இதனைத்தான் மகிந்தவும் செய்கிறார். பற்றியெரியும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு நாம் வழங்கிய வாய்ப்புக்களையும் உதாசீனம் செய்து உதறித்தள்ளிவிட்டு, இந்த அனைத்துக்கட்சி மாநாட்டிற்குள் மகிந்த பதுங்கிக்கிடக்கிறார். அந்த அனைத்துக்கட்சிக் குழுவும் கடந்த பத்து மாதக் காலமாக இருட்டுக்குள் கறுப்புப் பூனையைத் தேடியலைபவன்போலத் தமிழர் பிரச்சினையைத் தேடியலைந்து கொண்டிருக்கிறது.

அனைத்துக்கட்சி மாநாடு பிசுபிசுத்துப்போக, மகிந்த உலகத்தை ஏமாற்ற மீளவும் ஒரு புதிய துருப்புச்சீட்டை கையில் எடுத்திருக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதானச் சிங்களக் கட்சிகளும் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க மேற்கொண்ட முயற்சிகளைப் புறநோக்காக ஆராய்ந்து பார்த்தால், இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இரு கட்சி இணக்கப்பாடு என்பது உலகத்தை ஏமாற்றுவதற்கான வெறும் கண்கட்டுவித்தையே தவிர வேறன்று என்பது புலப்படும்.

தென்னிலங்கையின் அரசியலை ஆட்டிப்படைத்துவரும் இரு பிரதானச் சிங்களக் கட்சிகளும் சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. இவை சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சகதிக்குள்ளிருந்து பிறப்பெடுத்த இரு பெரும் பூதங்கள். ஒன்றோடொன்று போட்டிபோட்டு, பலப்பரீட்சை நடாத்தி, தமிழரின் உரிமையைப் பறித்து, தமிழரைக் கொன்றுகுவித்து, கொடுமை இழைத்துவருபவையும் இந்த இரு கட்சிகளும்தான். எதிரும் புதிருமாக நின்று, இனக்கொலை புரிந்த இரு கட்சிகளும் இன்று ஒன்றாகக்கூடி, ஒன்றுக்கொன்று சேவகம் செய்து, அதிகாரக் கூட்டமைத்திருப்பது தமிழரை அழித்தொழிப்பதற்கேயன்றி வேறொன்றிற்குமன்று.

அமைதித் தீர்வுகாணுமாறு நெருக்கும் சர்வதேச அழுத்தம் ஒருபுறமும் சரிந்துசெல்லும் பொருளாதாரம் மறுபுறமும் பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு அரசியல் இன்னொரு புறமுமாக பல்வேறு தளங்களில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துநிற்கும் மகிந்த, இந்த நெருக்கடிகளிலிருந்து தன்னைத் தற்காலிகமாக விடுவித்துக்கொள்வதற்காக அமைத்த சந்தர்ப்பவாதக்கூட்டே இந்த இருகட்சி இணக்கப்பாடு. மற்றும்படி இதிற் புனிதமான நோக்கம் எதுவும் கிடையாது. சிங்களப் பௌத்தப் பேரினவாதத்திற்கு மண்டியிட்டுக்கிடந்து, அதன் தாளங்களுக்குப் பொம்மலாட்டம் போடும் இந்த இரு கட்சிகளும் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வை முன்வைக்கப்போவதில்லை. அனைத்துக்கட்சி மாநாட்டைச் சாகாது வைத்திருப்பதிலும் தமிழருக்கெதிரான இனஅழிப்புப் போரைத் தொடர்வதிலுமே மகிந்த அக்கறை காட்டுவார்.

எனது அன்பான மக்களே,

நோர்வேயின் அனுசரணையுடன் அமைதிப் பயணம் ஆரம்பமாகி, இன்று நீண்டகாலம் ஆகிவிட்டது. நீண்டு செல்கின்ற இந்தக் கால விரிப்பில் போரை நிறுத்தி, வன்முறைகளைத் துறந்து, எம்மால் முடிந்தளவிற்கு நாம் சமாதான முன்னெடுப்புக்களைச் செய்திருக்கிறோம். சமாதானச் சூழ்நிலைக்கும் சமரசத் தீர்விற்கும் எம்மால் இயன்றளவு முயற்சித்திருக்கிறோம். சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியைத் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறோம். போதுமான அளவிற்குமேல் பொறுமைகாத்திருக்கிறோம். அமைதிவழித் தீர்விற்கு எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம். அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக் காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும் மகிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும்.

கடந்த ஆண்டு எனது மாவீரர் நாளுரையில் எமது மக்களது அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்திற்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும் உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை நிராகரித்துப் புறமொதுக்கிவிட்டு, கடந்தகாலச் சிங்களத் தலைமைகள் போன்று மகிந்தவும் தமிழின அழிப்புப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கிறார்.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது. எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென றுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"