உள்ளடக்கத்துக்குச் செல்

வைகையும் வால்காவும்/குளிர்முகக் கோமான்

விக்கிமூலம் இலிருந்து

குளிர்முகக் கோமான்


பொருள்கருவி, காலம், வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயற்கே-உருசியம்
புத்தெழுச்சி கொள்ளப் பொருள்கருவி காலம் எலாம்
ஒத்துவர நின்றான் லெனின். 65

தூய்மை துணைமை. துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பதனால்-சேய்மைக்கண்
வெங்கொடுமைக் கோலாட்சி வீழ்த்திக் குடியரசே
எங்களரசு என்றான் லெனின். 66

போற்றல் அரியவை போற்றல், கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது எனும் -ஊற்றுக்கோல்
கொண்டு குடியரசுக் கோட்பாட்டை மக்களுறக்
கண்டறிந்து காத்தான் லெனின். 67

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற; என்னும்-உண்மை
ஒளிரும் இருவிழிகள் ஒட்பம் தெறிக்கும்
குளிர்முகத்துக் கோமான் லெனின். 68