வைகையும் வால்காவும்/யுகப்புரட்சி

விக்கிமூலம் இலிருந்து

யுகப்புரட்சி


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை; ஆமாம்-தீக்கண்
கொடுங்கோன்மை கொன்றான் குளிர்சால் பொதுமைத்
தடங்காவைக் கண்டான் லெனின். 57

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்; என்று-இடித்தேதான்
ஒவ்வொருவர் தேவை திறமைக் குகந்தபடி
செய்தொழிலைச் சேர்த்தான் லெனின். 58

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்; எனத்-தோழமையால்
பாட்டாளி மக்களுடன் பாரில் பொதுயுறக்
கூட்டுடைமை கொண்டான் லெனின். 59

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்; எனத்- தன்பால்
அகப்பகையும் வந்த புறப்பகையும் எள்ளி
யுகப்புரட்சி ஊர்ந்தான் லெனின். 60