உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவமும் தமிழும்/நூல் முகம்

விக்கிமூலம் இலிருந்து
(வைணமும் தமிழும்/நூல் முகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
''நூல் முகம்''

மண்நாடும், விண்நாடும், வானவரும்
தானவரும், மற்றும் எல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட
கண்ணாளன், கண்ணமங்கை நகராளன்
கழல்குடி, அவனை உள்ளத்து,
எண்ணாத மானிடத்தை எண்ணாத
போதுஎல்லாம் இனிய ஆறே!

- திருமங்கையாழ்வார்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்து வரும் தொண்டு ஒரு பல்கலைக் கழகம் செய்து வரும் தொண்டிற்கும் பன்மடங்கு பெரியது. சைவ சமயப் பற்று இருப்பினும் தமிழ் என்று வரும்போது பிற சமயங்கள் தமிழோடு உறவாடும்போது சிறிதும் அவற்றின்மீது காழ்ப்பு இன்றி பிற சமயங்களையும் போற்றி வருவது கழகத்தின் பரந்த நோக்கு என்பது புலனாகின்றது.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 'சமணமும் தமிழும்' ‘கிறித்துவமும் தமிழும் ‘இஸ்லாமும் தமிழும்' என்று வரிசையாக வெளியிட்டு வரும் மரபு அதன் விரிந்த நோக்கத்தைக் காட்டுவதாக அமைகின்றது. இந்த வரிசையில் வெளிவருவது வைணமும் தமிழும் என்ற நூலாகும்.

இந்த நூல் எழுதுமாறு 13-2-1981 லேயே கேட்டுக் கொண்டார்கள், கழக அதிபர் திரு.இரா. முத்துக்குமாரசாமி அவர்கள். அப்போது அடியேன் வேறு திருப்பணியில் ஈடுபட்டிருப்பதால் எழுத முடியவில்லை. அதற்குப் பின்னரும் பல பொறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தமையால் இதில் நாட்டம் செலுத்த முடியவில்லை. சென்ற ஆண்டு (1997) சற்று ஒய்வு கிடைத்தமையால் ஒரே மூச்சில் இந்த நூலை எழுதி முடித்தேன். .

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் என அரிய நண்பரும் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி வழிவந்தவரும் தற்சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வைணவத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவருமான டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருட்டிணன் அவர்கள். அவருக்கு என் நெஞ்சம் கலந்த நன்றி. அணிந்துரையில் சில கருத்துவேறுபாடுகளைக் காட்டியுள்ளமை பற்றி வாசகர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. இவர் தென்கலை வைணவர் . இதற்கு வடகலை வைணவர் ஒருவர் அணிந்துரை வழங்கினால் அது இதற்கு நேர்-மாறான கருத்து வேறுபாடுகட்கு இடம் அளிப்பதாக அமையும். இந்த நூலை அச்சிடுங்கால் பார்வைப் படிவங்களைச் சரி பார்த்த என் அபிமான புத்திரி டாக்டர் M. B. சியாமளா தேவிக்கு என் உளங் கலந்த நன்றி உரியது.

சைவ சமயத்தைச் சார்ந்த அடியேன் கடந்த நாற்பதாண்டுகளாக வைணவ சமயத்திலும் வைணவ இலக்கியங்களிலும் ஆழங்கால்பட்டு அநுபவித்து வருபவன். அடியேனின் டாக்டர் (பிஎச்டி) பட்ட ஆய்வேடு நம்மாழ்வார் தத்துவம்பற்றியது; ஆங்கிலத்தில் ஆயிரம் பக்கம் கொண்டது. திருவேங்கடவன் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. அடியேனின் பார்வை விருப்பு வெறுப்பற்ற நோக்குடையது.

இந்த நூல் வைணவ சமயத்தைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் வைணவத்தைச் சாராத பிறருக்கும் பயன்படக் கூடியது. வைணவத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கட்கும் பெரிதும் பயன்படக்கூடியது. இதனையொட்டி 'சைவமும் தமிழும்' என்ற ஒரு நூலை பிற சமயத்தினருக்கு அறிமுகம் செய்யும் பாங்கில் எழுத எண்ணம் உண்டு. செம்மேனி எம்மான் சிவபெருமான் அருள் இருப்பின் கழகமே அதனையும் வெளியிட்டுப் பெருமை கொள்ளும் என்பது என் அதிராத நம்பிக்கை.

இந்த நூலை வரைவதற்கு என்னுள்ளே நிலையாக உறையும் ‘அகலகில்லேன் இறையும்' என்று அலர்மேல் மங்கை உறைமார்பனின் தோன்றாத்துணையால்தான் என்று கருதி அவன் திருவடிகளை நினைந்து வழுத்தி, வணங்கி அமைகின்றேன்.

நான் உன்னை அன்றிஇலேன்
கண்டாய்; நாரணனே!
நீஎனை அன்றி
இலை.
மெய்ப்பொருள்தான் வேத
முதற்பொருள்தான் விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா
யணன்.[1]

- திருமழிசையாழ்வார் இங்கனம் அடியேன்

ந.சுப்புரெட்டியார்.

(இராமாநுசதாசன்)


வேங்கடம்

AD-13, அண்ணாநகர்

சென்னை-600040.


  1. 'நான் முகன் திருவந்தாதி - 1,12