உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவமும் தமிழும்/வைணவ ஆசாரியர்கள்

விக்கிமூலம் இலிருந்து



7. வைணவ ஆசாரியர்கள்

வைணவ சித்தாந்தத்தில் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் இவர்களின் வரலாறுகளே சிறந்த வழிகாட்டிகள். அவை சேதநனுக்கு ஞானத்தையும் காட்டக்கூடியவை. அவர்கள் பரம்பரையை நாளும் சிந்திப்பார் இராமாநுசரின் திருவருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர். ஆழ்வார்கள் வரலாறு இந்நூலில் தனி இயலில் காணலாம். ஈண்டு ஆசாரியர்களின் வரலாற்றைக் காண்போம்.

1. பெரியபெருமாள் : (ஶ்ரீமந்நாராயணன் முதல் ஆசாரியர்) சீடர்கள் : பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், நீளாதேவி. திருநட்சத்திரம் - திருவோணம்.

2. பெரிய பிராட்டியார் : சீடர்கள்: திருவனந்தாழ்வான், (ஆதிசேடன்),பெரியதிருவடி, விஷ்வக்சேநர் (சேனை முதலியர்) ஆகிய நித்திய சூரிகள். திருநட்சத்திரம் - பங்குனி உத்தரம்.

3. விஷ்வக்சேநர் : சீடர்கள் : ஆழ்வார்கள், திருநட்சத்திரம் - ஐப்பசி பூராடம்.

மதுரகவியாழ்வாரின் சீடர் பராங்குசதாசர். இவர் தந்த் குறிப்பினால்தான் நாதமுனிகள் 'கண்ணிநுண் சிறுதாம்பை'ப் பன்னிராயிரம் உரு நியமத்தோடு அநுசந்தித்து அர்ச்சை நிலையைக் கடந்து வந்த நம்மாழ்வார் மூலம் நாலாயிரமும் பெற்றனர் என்பது வரலாறு.[1]

4. நாதமுனிகள் : (கி.பி. 823-903) கஜாவதாரம்சம். இவர் காட்டுமன்னார் கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் (தென்ஆர்க்காடு மாவட்டம்) ஈசுவரபட்டர் என்பாருக்குத் திருமகனாக அவதரித்தார். அரங்கநாதர் என்பது இவரது பிள்ளைத் திருநாமம். வேறு திருப்பெயர்கள் : 'அரங்கநாதமுனிகள், நாதப்பிரம்மர், தேவிகள், அரவிந்தப் பாவை, குமாரர். ஈசுவர முனிகள்[2] மாமியார், வங்கிபுரத்து ஆய்ச்சி. ஆசாரியர் நம்மாழ்வார் (ஆழ்வாரை யோகத்தில் கண்டவர்). சீடர்கள் : உய்யக் கொண்டார், குருகைக் காவலப்பன், திருக்கண்ணமங்கையாண்டான், தெய்வநாயக ஆண்டான், நம்பி கருணாகரதாசர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டுர் ஆச்சான் பிள்ளை,சோகத்துரர் ஆழ்வான்' ஆகிய பதின்மர். திருநட்சத்திரம் - ஆனி அனுஷம். அருளிச் செயல்கள்; நியாச தத்துவம், புருஷநிர்ணயம் முதலியன,

5. உய்யக்கொண்டார்: (கி.பி. 826-931) ஐயத்தேனாம்சம். திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரையில் கார்த்திகைவேறு திருநாமங்கள் பத்மாட்சர், புண்டரீகாட்சர். தேவிகள், ஆண்டாள், ஆசாரியர் நாதமுனிகள் சீடர்கள்: மணக்கால நம்பிகள், திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரதாசர் புண்டரீகதாசர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகப் பெருமாள் நங்கை (நாதமுனிகளின் பேரர்- ஈசுவர முனிவர்களின்

திருக்குமாரர்) நாதமுனிகளால் தம் திருப்பேரர் யமுனைத் துறைவருக்கு எல்லா இரகசியங்களை உபதேசிக்கவும், ஆழ்வார் தமக்குக் காட்டிக் கொடுத்த பவிஷ்யதாசார்ய விக்கிரகத்தைக் காட்டிக்கொடுத்து, இதையும் தாம் விரும்பிய பொருள் எனக் கூறித் தஞ்சமாகக் காட்டிக் கொடுக்கவும் நியமிக்கப்பட்டார்.

6. மணக்கால் நம்பி: (கி.பி.889-994) குமுதாம்சம் திருச்சி மாவட்டம் இலால்குடிக்கருகிலுள்ள (இது வட்டம்). மணக்கால் என்னும் சிற்றூரில் அவதரித்தார். திருநட்சத்திரம் - மாசிமகம். இவருக்கு இராமமிஸ்ரர் என்ற மற்றொரு திருப்பெயரும் உண்டு. ஆசாரியர் உய்யக்கொண்டார். சீடர்கள்: 'யமுனைத் துறைவர் (ஆளவந்தார்), திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சொட்டைநம்பி, சிறு புள்குருடையார் பிள்ளை,திருமாலிருஞ் சோலைதாசர், வங்கிபுரத்து ஆய்ச்சி'. ஆசாரியர் பெண்களைதம் முதுகில் சுமந்து சேற்று வழியைக் கடந்தவர். யமுனைத் துறைவருக்கு தூதுளங்கீரை பரிமாறி ஒருநாள் நிறுத்தி அவருக்கு இரகசியங்களை உபதேசித்தவர்.

7. யமுனைத்துறைவர் : (கி.பி.916-1041) இவர் ஆள வந்தார். சிம்மாசநாசம் அம்சம், இவர் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகளின் திருக்குமாரராகிய ஈசுவரமுனிகட்கு திருக்குமரராய் அவதரித்தார். திருத்தாயார், அரங்க நாயகி அம்மை. திருநட்சத்திரம் - ஆடி உத்திராடம். மாபாடியபட்டர் என்பாரை நாடி இலக்கணம் தருக்கம் முதலிய நூல்களைக் கற்றவர். அரசவைப் புலவர் ஆக்கியாழ்வானை வாதில் வென்றவர். வேறு திருப்பெயர்கள்: 'யாமுனாசாரியர், யாமுநேயர்'. திருக்குமாரர்கள் :சொட்டை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பெரிய திருமலைநம்பி, பின்னை அரசுநம்பி, ஆசாரியர் மணக்கால்நம்பி. சீடர்கள்: ‘பெரிய நம்பி, பெரிய திருமலையாண்டான், திருமோகூரப்பன், மாறனேர் நம்பி, திருக்கச்சிநம்பி, அரசபத்தினி திருவரங்கத்தம்மன், திருவரங்கப் பெருமாளரையர், ஆளவந்தார் ஆழ்வான், வானமாமலை யாண்டான், தெய்வவாரி ஆண்டான், ஈசனாண்டான், சீயராண்டான், திருக்குருகூரப்பன், திருமோகூர் நின்றான்; தெய்வப்பெருமாள், வகுளாபரண சோமாசியார், திருமோகூர்தாசர், திருமாலிருஞ்சோலைதாசர், வடமதுரைப் பிறந்தான், ஆட்கொண்டி அம்மங்கி' ஆக 20 திருநாமங்கள். இவருக்கு உடையவரையும் (இராமாநுசர்) சீடராகச் சொல்வர். இவர்தம் அருளிச் செயல்கள்: ‘சித்தித்திரயம் (ஆகம சித்தி ஸ்ம்வித்சித்தி, மோட்சசித்தி) திரயம் மூன்று, கீதார்த்தசங்கிரகம், ஆகமப்பிரமாண்யம் தோத்திரரத்னம் சதுஸ்லோகி, மகாபுருஷநிர்ணயம்' என்ற ஆறு கிரந்தங்கள் -

'8. பெரியநம்பிகள் : (கி.பி. 997-1102); குமுதாம்சம். திருவரங்கத்தில் அவதரித்தார். திருநட்சத்திரம் - மார்கழி கேட்டை வேறு திருநாமங்கள்; பராங்குசதாசர், மகாபூர்ணர், பூர்வாசாரியர். குமரர் : புண்டரீகாட்சர். குமாரி அத்துழாய் அம்மாள். சீடர்கள் : 'எம்பெருமானார், திருக்கச்சிநம்பி, மலைகுனிய நின்றார். சடகோபதாசர், அணிஅரங்கத்து அமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர்' ஆகிய அறுவர். இவர் எம்பெருமானாரை மதுராந்தகத்தில் கண்டு பஞ்சசம்ஸ்காரம்[3] செய்தவர். இவர் மாறனேர் நம்பிக்கும் பணி விடைகள் செய்து பிரம்ம மேத சமஸ்காரம் பண்ணினார். அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான கந்தாடையண்ணன் முதலானவர்கள் மாறனேர் நம்பிக்கு பிரம்மசமஸ்காரம் செய்ததற்குப் பெரிய நம்பிகளைச் சமூகத்தினின்றும் நீக்கி வைத்தனர். பெருமாள் திருத்தேரில் அணி வீதியில் எழுந்தருளினபோது தேர்நின்றது. “பெரிய நம்பிகளை உனது திருத்தோளின்மேல் எழுந்தருளப் பண்ணி வாரும்” என்று கந்தாடை அண்ணனுக்கு பெருமாள் அர்ச்சகர் மூலமாக அருளிச் செய்ய, அப்படி அநுட்டித்துக் காட்டியபின்தான் திருத்தேர் நகர்ந்ததாம்.

9. இராமாநுசர் : (கி.பி. 1017-1137); சேஷாம்சம். திருப்பெரும்புதுரரில் கேசவ தீட்சிதருக்கும் காந்திமதி அம்மைக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரை-திருவாதிரை குடிஆசூரிகுலம். இவரை பகவதாம்சம், இலக்குமி அம்சம், சேனை முதலியார் அம்சம், பஞ்சாயுத அம்சம் என்றும் சொல்வர். வேறு திருநாமங்கள் 'இளையாழ்வார், உடையவர், யதிராசர், இலட்சுமணமுனி, சடகோபன், பொன்னடி, கோயிலண்ணன், பாஷ்யக்காரர், எம்பெருமானார், பூதபுரீசர், தேசிகேந்திரர், திருப்பாவை ஜீயர்' என்பன. திருத்தமக்கையார் நாச்சியாரம்மாள் தேவிகள், தஞ்சமாம்பாள் திருவேங்கடமுடையானுக்கு இலட்சத்தலத்தில் அலர்மேல் மங்கை நாச்சியாரை எழுந்தருளப்பண்ணி திருவாழி திருச்சங்கு சாதித்தருளினார். இதனால் அவனுக்கு மாமனாரும் ஆசாரியருமானார். திருக்குறுங்குடி நம்பிக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்து ‘இராமாதுசநம்பி' என்ற தாசிய நாமம் சாத்தியருளினார். தில்லி பாட்சாவிடமிருந்த செல்வபிள்ளையை திரு நாராயணபுரத்தில் எழுந்தருளப் பண்ணினார். இவருக்கு ஆசாரியர்கள்: 'பெரிய நம்பி, திருமாலையாண்டான், திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், பெரியதிருமலைநம்பி, திருக்கச்சி நம்பி'[4] சீடர்கள்: எம்பார், முதலியாண்டான், கூரத்தாழ்வான், கந்தாடையாண்டான், புண்டரீகாட்சர், (பெரிய நம்பியின் திருக்குமாரர்), தெற்காழ்வான், (திருக்கோட்டியூர்நம்பியின் திருக்குமாரர்) சொட்டைநம்பி (ஆளவந்தாரின் திருமகனார்), அணியரங்கத் தமுதனார் பிள்ளை, கோவிந்த சீயர் (யாதவப் பிரகாசர்), பிள்ளை உறங்கா வில்லிதாசர், பொன்னாச்சியார் (வில்லிதாசரின் தேவிகள்) இன்னும் பல அம்மையார்கள், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் சீயர், வடுகநம்பி, சுந்தரத் தோளுடையார் (திருமலையாண்டான் குமாரர்), பிள்ளைத் திருமலைநம்பி (பெரியதிருமலை நம்பி குமாரர்), திருக்குருகைப் பிரான் பிள்ளான், இன்னும் ஆயிரம் சீடர்கள், 12000 ஏகாங்கள், 74சிம்மாசனாதிபதிகள், 700கீடர்கள் 300 கொத்தை யம்மைஷியகளும்,சாத்தின.சாத்தாத முதலிகளும்,மகாராசர்களும், திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவரும் மற்றும் பலரும்.

இவருடைய திருமேனிகள் நான்கு (1) நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்தருளிய ‘பவிஷியதாசார்யர் அணிக்கிரகம், (2) உடையவர்தானே திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவர்க்காக ஏறியருளப் பண்ணியது; (3) கந்தாடையாண்டான் திருப்பெரும்புதூரில் நிறுவச் செய்து அதனை உடையவர் ஆலிங்கனம் செய்தது, (4) பின்பு கந்தாடை யாண்டான்நம்பெருமான் நியமனத்தினால் அருளப்பண்ணியது. கந்தாடையாண்டானும், பட்டரும் அவர் திருநட்சத்திரங்கள் தோறும் பெருவிழாவாக நடத்திக் கொண்டிருந்தனர். இவருக்குப் பாலமுதம் காய்ச்சும் கைங்கரிய பரர்கிடாம்பிப் பெருமாளும், வடுக நம்பியும், பிரசாதம் தயாரிக்கும் கிடாம்பியாச்சானும் திருமடைப்பள்ளித் தொண்டர்கள். இவர்தம் அருளிச் செயல்கள்; 'ஸ்ரீபாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்ததீபம்,வேதாந்த சங்கிரகம், கத்தியத்திரயம், நித்தியம், கீதாபாஷியம்' ஆகிய ஒன்பது வயது 120.

இராமாநுசருக்குப் பின் சில ஆசாரியர்கள் சில வட மொழி-தென் மொழி அருளிச் செயல்கட்குப் பொருளுரைப் பதில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிளவுகள் ஏற்பட்டு வடகலை தென்கலை சம்பிரதாயமாகப் பிரிந்தனர். வடகலை ஆசாரிய பரம்பரை, தென்கலை ஆசாரிய பரம்பரை என்று இரு ஆசாரிய பரம்பரைகள் வளர்ந்தன. முன்னவர் வடமொழி நூல்கட்கு முன்னுரிமையும், அருந்தமிழ்நூல்கட்குப் பின்னுரிமை தருவதாகவும்; பின்னவர் ஆழ்வார் அருளிச்செயல்கள் போன்ற தமிழ்நூல்கட்கு முன்னுரிமையும், வடமொழி நூல்கட்குப் பின்னுரிமையும் தருவதாகச் சொல்வர். வெளிப்படையாக வடகலையார் திருமண்காப்பில் பாதம் இல்லை; தென்கலையார் திருமண் காப்பில் பாதம் உண்டு. இல்லத்தில் பிற லெளகிக நிகழ்ச்சிகளிலும் சிலவேறுபாடுகள் உண்டு.

t

(அ) வடகலை ஆசாரிய பரம்பரை

(1). திருக்குருகைப்பிரான் பிள்ளான் : (பிறப்பு. கி.பி. 1068) பிரசண்டாம்சம். திருமலையில் இவர் பெரிய திருமலை நம்பியின் திருமகனாக அவதரித்தவர், 'பிள்ளான்' என்றே வழங்குவர். உடையவருக்கு திருவடிசம்பந்தி, ஞானபுத்திரரும் ஆவார். உடையவரின் நியமனப்படி திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற முதல் வியாக்கியானம் அருளிய அருட் செல்வர். இவர் அருளிச் செய்த மற்றொரு நூல் ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான் பரமரகசியம்’ என்பது.

(2). எங்களாழ்வான் : (பிறப்பு கி.பி.108): விஜயாம்சம். இவர் திருவெள்ளறையில் சோழியர் குடியில் அவதரித்தவர். திருநட்சத்திரம் ஆனி - சுவாதி. எம்பெருமனார் நியமனத்தால் விஷ்ணுபுராணத்திற்கு விசிட்டாத்வைதபரமாக பரிபாவியத்திற்கிணங்க வியாக்கியானம் செய்தருளினார். திருக்குருகைப்பிரான் பிள்ளானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவித்தவர். நாடாதுரம்மாளைச் சுவீகரித்து பாஷ்யம் முதலிய கிரந்தங்களைச் சொல்லி வைத்தவர். ‘சாரார்த்த சதுஷ்டம்’, ‘சங்கதிமாலை இவர்தம் அருளிச் செயல்கள்.

(3). நடாதூரம்மாள் : (பிறப்பு கி.பி.1165), சுபத்திராம்சம். இவர் (பெண் அல்லர்) காஞ்சியில் தேவராசப்பெருமாள் என்பாருக்கு வரதகுரு என்று அவதரித்தார். திருநட்சத்திரம் : சித்திரையில் சித்திரை. இவர் உடையவரின் மருமகனாரான நடாதூர் ஆழ்வானுக்கு திருப்பேரர். வேறு திருநாமம் : வரதாச்சாரியார், ஆசாரியர், எங்காழ்வான். சீடர்கள் : சுருதப் பிரகாசிக பட்டர், வாதி ஹம்சம்பு, தாராசாரியர், கிடாம்பி அப்புள்ளார், 'ஸ்ரீகிருஷ்ணபாதர்' என்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை'. இவர் எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவிக்க விரும்பித் தந்தையாரின் கட்டளைப்படி எங்காழ்வானின் திருமாளிகையில் வாயிற்கதவினைத் திறக்க ஆழ்வான் 'யார்?' என்றனர். வரதகுரு மறுமொழியாக 'நான்தான்' என்றனர். இதைச்செவியுற்ற எங்களாழ்வான் “நான் செத்தபிறகு வருக” என்று கூறி அனுப்பினார். வரதகுரு நடந்ததைத் தந்தையாரிடம் தெரிவிக்க, தந்தையாரும் “ஆசாரியரிடம் நான் என்னும் அகங்காரத்தையொழித்து ‘அடியேன்' என்று கூறிச் செல்க” என்று அறிவுறுத்தித் திரும்பவும் அனுப்பினார். வரதகுரு மீண்டும் சென்று அடியேன் இராமாதுசதாசன் என்று கூறித் தண்டன் சமர்ப்பித்தார். ஆசாரியரும் களிப்பு மிகுதியினால் புத்திரன்மீது கொள்ளும் பாசத்தைப்போல் அன்புடையராய் “எனக்கும் கொள்ளியிட்டு இறுதிச் சடங்கு செய்வதாய் வாக்குறுதி செய்து தருவீராகில் ரீபாஷ்யம் சேவிக்கலாம்” என்று கூறினார். வரதகுருவும் தந்தையாரின் அனுமதி பெற்று ஸ்ரீபாஷ்யம் படியைக் கையில் வைத்துக் கொண்டு வாக்குறுதி செய்து கொடுத்து ஸ்ரீபாஷ்யம் முதலிய கிரந்தங்களை ஐயம் திரிபு அறச் சேவித்தார்.

ஒருநாள் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பிக்கையில் பால் அதிக வெப்பமாய் இருப்பது கண்டு எம்பெருமானிடத்துப் பரிவாலே சாத்திர நியமத்தையும் கடந்து அப்பாலமுதை வாயிட்டு ஊதிப் ஆற்றப்புக பெருமாளும் மகனிடத்து மாதாவுக்கு உண்டான அன்பு தம் விஷமாக இவருக்கு உண்டானது கண்டு"எனக்கு நீர் அம்மாவோ'என்று உகந்தருளினான். அதுமுதல் இவருக்கு “அம்மாள்” என்ற திருநாமம் வந்து "நடாதூரம்மாள்” என வழங்கப்பெற்றார். மற்றொரு நாள் இவர் காட்டுவழியே திருவேங்கடத்தை நோக்கிச் செல்லுகையில் வழியில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கத் தகுந்த இடம் வாய்க்காமல் இருந்தது. இதனால் இவர் பெருமாளுக்குத் திருவாராதானம் செய்ய முடியாமல் உபவாசமாக இருந்தார்.திருவேங்கடமுடையானே ஒரு வேதியன் வடிவில் பிரசாதம் கொணர்ந்து 'இது பெருமாளுக்கு ஆராதனம் செய்தது' என்று சொல்லிக் கொடுக்க அதே அம்மாள் அமுது செய்ததும் வேதியனாக வந்த வேங்கடமுடையான் மறைந்தருளினான்.

(4). கிடாம்பிஅப்புள்ளார்: (பிறப்பு. கி.பி.1221), இவருக்கு ஆத்ரேய இராமாநுசர் என்ற பெயரும் உண்டு இராமாநுசருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் புரிந்து வந்த கிடாம்பி ஆச்சானின் கொள்ளுப் பேரர். வாத்சய வரதாசாரியரின் சீடர். 'நித்தியகுலிசம்' என்ற வாதத்திற்குரிய நூலின் ஆசிரியர். மாற்றுக் கருத்துக் குரியவர்கள் இவரைக் காணவே அஞ்சுவர்.அவ்வளவு வேகமாக வாதிடுவர்.

(5).வேதாந்ததேசிகர்:(பிறப்பு:கிபி.1268.1369)கண்டாம்சம். அவதாரத் தலம் காஞ்சி. துப்புல். திருத்தந்தையார் ஆனந்த சூரியர். திருத்தாயார் தோதாத்திரி அம்மை. திருக்குமாரர் நயினாராசாரியர். வேறு திருநாமங்கள் : 'வேங்கடநாதன், கவிதார்க்கிக கேசரி, சர்வதந்திரசுவதந்திரர், துப்புல் பிள்ளை' முதலியன. ஆசாரியர், நடாதூர் அம்மாளின் சீடரும், தம் மாதுலரும் உடையவர் திருவடி சம்பந்தியும் சுப்பிரதிஷ்டாம்சரான கிடாம்பி அப்புள்ளார். சீடர்கள்: நயினாராசாரியர் (தம் குமாரர்), பிரம்மதந்திரசுவதந்திர சீயர். திருவாராதனப் பெருமாள் : திருவேங்கடமுடையான், திருப்பாணாழ்வார். ஹயக்ரீவ உபாசகர். இவர் திருவடிகளை ஆச்ரயித்தவர்கள் : கந்தாடை எம்பார், குமாண்டுர் அப்பை, குமாண்டுர் பிள்ளை. இவர் திருவடிச் சம்பந்திகள் : கிடாம்பிப்பிள்ளை, குஞ்சம்பூர் இராமாநுசாசாரியர் துப்புல் அப்பை. அருளிச்செயல்கள். தேசிகப்பிரபந்தம் (தமிழ்ப்பிரபந்தங்களின் திரட்டு) இது தவிர மணிப்பிரவாளநடையில் அமைந்த ஸ்ரீமத்ரகசியதிரயசாரம் மிகுபுகழ் வாய்ந்தது. மற்றும் வடமொழியில் ஸ்தோத்ர கிரந்தங்கள் 28; காவிய கிரந்தங்கள் 4; நாடகக்கிரந்தம் 1; வேதாந்த கிரந்தங்கள் 14 வியாக்கியானகிரந்தங்கள் 8: அநுட்டானகிரந்தங்கள்2; இரகசிய கிரந்தங்கள் 32. இவர் அருளிச் செயல்கள் மொத்தம் 121 கிரந்தங்கள்.

(6)நயினாராச்சான்பிள்ளை: (பிறப்புகி.பி. 1316)வேதாந்த தேசிகரின் திருக்குமாரர். திருநட்சத்திரம் - ஆவணி-ரோகிணி. ஆசாரியர், தந்தையார் வேதாந்த தேசிகர். திருநாமங்கள்; குமார வேதாந்தாசாரியர், குமார வரதாசாரியர். சீடர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன். இவரும் தந்தையைப்போல் வாதத்தில் வல்லவர். திருவடி சம்பந்திகள் : எம்பெருமானாரப்பன், குமாண்டுர் ஆச்சான், பேராளிப்பாக்கம் நயனார். அருளிச் செயல்கள்: 'பிள்ளை அந்தாதி, இது தவிர அதிரவச நீயகண்டம், விரோதி பரிகாரம் ஆசாரிய மங்களம்' முதலியன.

இவருடன் வடகலை ஆசாரியர் பரம்பரை முற்றுப் பெறுகின்றது.
(ஆ) தென்கலை ஆசாரிய பரம்பரை

(1). எம்பார் : (பிறப்பு. கி.பி. 1025); இராமாம்சம். திருப் பெரும்புதுரையடுத்த மழலை மங்கலத்தில் கமலநயனபட்டருக்கும், உடையவரின் சிறிய தாயாரான பெரிய பிராட்டியாருக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். தம் தாய்மாமனாகியபெரிய திருமலை நம்பியால் 'கோவிந்தபட்டர்' என்று திருநாமம் சாத்தப் பெற்றார். யாதவப்பிரகாசரிடம் உடையவருடன் வேதாந்தங்களைக் கற்று வந்தார். இவர் கங்கையில் நீராடும்போது ஒர் இலிங்கம் கையில் வந்து சேர ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்' என்று திருநாமம் சாத்திக் காளத்தியில் வழிபாடு செய்து வந்தார். இவரைத் திருமலை நம்பி திருத்திப் பணி கொண்டார். இவரை 'இராமாநுச பாதசாயை' என்றும் சொல்லுவர். ஆசாரியர் ‘எம்பெருமானார்' சீடர்கள் கூரத்தாழ்வான் குமாரர்களாகிய பெரிய பராசரபட்டரும், சீராமப்பிள்ளையும். வயது105.

(2). பட்டர் : (பிறப்பு. கி.பி. 1062); பராசாரம்சம். திருவரங்கத்தில் கூரத்தாழ்வானுக்கும், கூரத்தாண்டாளுக்கும் திருமகனாக அவதரித்தார். திருநட்சத்திரம்: வைகாசி அனுஷம் வேறு திருநாமங்கள் : 'பெரிய பட்டர், பராசாபட்டர், வேதாந்தாசாரியர் பட்டர், திருவரங்கப்பெருமாள் பட்டர்'. ஆசாரியர், எம்பார். கூர்மையான அறிவுடைய இவரைப்பற்றிய குறிப்புகள் வைணவ உரைகளில் வருகின்றன. 'பட்டர் நிர்வாகம்' என்பது மிகுப்புகழ் பெற்றது. எம்பெருமானாரின் கட்டளைப்படி விஷ்ணு சகஸ்ரநாமத்திற்குப் பேருரை வகுத்த பெருமகனார். திருநெடுந்தாண்டகத்தின் ‘மைவண்ண

நறுங்குஞ்சி' (21) என்ற பாசுரத்திற்கு இவர் அருளிய வியாக்கியானம் தனிப்பெருஞ்சிறப்புடையது. ஆசாரியர், எம்பார் சீடர்கள்; 'நஞ்சீயர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், செடியெடுத்த நல்லான், நம்பி கோவர்த்தனதாசர், பிள்ளை விழுப்பரையர், அம்மன் ஆழ்வான், நலந்திகழ் நாராயண சீயர், உத்தண்ட பட்டர் என்னும் நடுவில் திருவீதிப் பிள்ளைபட்டர், கடகத்துப் பிள்ளை, வாக்விசயபட்டர், வீரசிகாமணி வில்லவராயன், அழகிய மணவாளப்பட்டர், அவர் காலத்தவர் அழகிய மணவாளப் பெருமாளரையர், ஆப்பன், ஆப்பன் திருநறையூரரையர், ஆப்பன் திருவழுந்துரரையர், இவர் குமாரர் உத்தண்டபட்டர், இவர் குமாரர் சீரங்கப்பட்டர், இவர் குமாரர் சுதர்சனபட்டர், இவர் குமாரர் சீரங்கராசபட்டர்,இவர் குமாரர் திருவேங்கடபட்டர்'. இவர் திருநெடுந்தாண்டகப் பாசுரம் (21) ஒன்றிற்குப் பொருள் அருளிச் செய்யாநிற்க, அப்போது வைகுந்த நாதன் பெரிய திருவடி மேலே எழுந்தருளக் கண்டு அதைத் தம் திருப்பவளத்தாலே அருளிச் செய்து திருக் கண்களை மலர விழித்து, திருமேனிபுளகாங்கிதமாய் முறுவல் செய்து, திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு கிரக்க பாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். வயது 28. இவர்தம் அருளிச் செயல்கள் : ஸ்ரீ ரங்க ராஜஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோசம், தத்துவதிரயசாரம், பிரவண விவரணம், இலட்சுமி கல்யாணம், விஷ்ணு சகஸ்ரநாம பாஷியம், கிரியாதீபம், அஷ்டசுலோகி, சதுலோகி, துவிசுலோகி, தனிசுலோகி, மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் ஆகியவை.

(3). நஞ்சீயர் (பிறப்பு. கி.பி.173); இவர் திருநாராயண புரத்தில் அவதரித்தவர். திருநட்சத்திரம்-பங்குனி உத்தரம் இவர் வேதாந்தி என்று முதலில் திருநாமம் பெற்றிருக்கையில் வாதபிட்சைக்கு வந்த பட்டரிடம் வாதிட்டுத் தோற்றவர். பின்னர் பட்டரின் திருவடிச் சம்பந்தம் பெற்று அவருடைய சீடரானார். ஒரு நாள் பிச்சைக்கு வந்த வைணவருக்குப் பிச்சையிட மறுத்த தேவியாரை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்து தேவியாருக்கு அளித்து, குருதட்சினை கொண்டு சந்நியாச ஆசிரமத்தை ஏற்றார். தம் ஆசாரியரைக் காணச் செல்லுகையில் பட்டர் நம்சீயர் வந்தார் என்று கூற அன்று முதல் நஞ்சீயர் என்ற பெயர் உண்டாயிற்று. இவருக்குச் 'ஸ்ரீராங்கநாதர்’, வேதாந்த வேதியர் மாதவாசார்யிர் என்ற வேறு திருநாமங்களும் உண்டு. சீடர்கள்; நம்பிள்ளை யூனிசேனாபதிசீயர், குட்டிக்குறி இளையாழ்வார். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி, திருப்பாவைக்கு ‘ஈராயிரப்படி' திருவந்தாதிகள், கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு இவற்றிற்க்கு உரை. இவர் திருவாய்மொழியை நூறு உரு வியாக்கியானம் செய்தபடியால் திருவாய்மொழிக்குச் சதாபிஷேகம் பண்ணினர் என்ற புகழ் இவருக்கு உண்டு. பெற்றி என்பார் இவருக்கு அடிமைப்பட்டுச் சிறப்பான பொருளைக் கேட்டார். வயது 100,

(4).நம்பிள்ளை: (பிறப்பு:கிபி.1471252); இவர் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூரில் அவதரித்தார். இவருடைய பிள்ளைத் திருநாமம் 'வரதராசர்' என்பது. திருநட்சத்திரம் கார்த்திகையில் கார்த்திகை நஞ்சீயரால் நம்பிள்ளை எனத் திருநாமம் பெற்றவர். வேறு திருநாமங்கள் : 'கலி வைரி, திருக்கலிகன்றிதாசர், லோகாசார்யர், பூர் சூக்தி சாகரர், உலகாரியன், அபயப்பிரதாசர். இவர் காலத்தவர் அப்பிள்ளை, அம்மங்கி பெரிய முதலியார், ஏறு திருவுடையதாசர், பெரிய கோயில் வள்ளலார் சீடர்கள். வடக்குத் திருவீதிப்பிள்ளை, கந்தாடை தோழப்பன், பின்பழகிய பெருமாள் சீயர், ஈயுண்ணி மாதவப்பெருமாள், வாதிகேசரி அழகிய மணவாளசீயர், நடுவில் திருவீதிப் பட்டர், வேல்வெட்டிப்பிள்ளை, பெரிய வாச்சான்பிள்ளை, ஏறுதிருவுடையதாசர், சீனிக்கரபிள்ளை இராமாநுசாசார்யர், வானமாமலைதாசர், திருக்குருகூர்தாசர். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படி, திருவிருத்தத்திற்கு ஈடு, கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு ஈடு, திருவாய்மொழிக்கு ‘இருபத்து நாலாயிரப்படி' என்னும் வியாக்கியானம் வரையுமாறு பெரியவாச்சான் பிள்ளைக்குக் கட்டளையிட்டார். நம்பெருமாள் நம்பிள்ளையைக் கடாட்சித்து அவரைத் தம்முடைய திருமுடிப்பக்கத்திலிருந்து திருவாய்மொழியை நிர்வகிக்குமாறு நியமனம் செய்ய, நம்பிள்ளையும் “நாயினேன் தேவரீருடைய நியமனத்தைத் தப்பமுடியாது. ஆகிலும் அவ்விடம் முன்பு துரியோதனன்பற்றிய இடமாலையாலே, அடியார்க்குப் பற்றும் இடம் ஆகாது” என்று விண்ணப்பம் செய்ய பெருமாளும் உகந்து அதை ஆமோதிக்க, அது கண்டு அங்கிருந்தோர் அனைவரும் வியப்பெய்தினர்.

(5).வடக்குத்திருவீதிப்பிள்ளை :(பிறப்பு. கி.பி.167-1285); ஐயாம்சம். திருவரங்கத்தில் பிள்ளை உலக ஆசிரியருக்கு திருமகனாய்த் திருவவதரித்தார். கோயில் வடக்குத் திருவீதியில் இவரது திருமாளிகை இருந்ததால் இப்பெயரால் வழங்கப் பெற்றவர். திருநட்சத்திரம்: ஆனி-சுவாதி. திருநாமங்கள் திராவிடவேதாந்த தேசிகர், ஸ்ரீகிருஷ்ணபாதர் தேவிகள், ஸ்ரீரங்கநாச்சியார். திருக்குமாரர்கள் : பிள்ளை உலக ஆசிரியர், (பாட்டன் பெயரை வைத்தனர் போலும்), அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். சீடர்கள் : தம் குமாரர்கள் இருவரும், ஈயுண்ணிமாதவர், பத்மநாமப் பெருமாள், பராங்குச சீயர், நாயனார் கூரகுலோத்தும் தாசர், வங்கிபுரம் சிரங்காசாரியர் வானமாமலை தாசர், அருளிச் செயல்கள்: திருவாய்மொழிக்கு ஈடு முப்பதாறாயிரப் படி (நம்பிள்ளை அருளியவற்றை மனத்திலிருந்து எழுதியவர்). வயது 97

(6). பிள்ளை உலகஆசிரியர்: (பிறப்பு. கி.பி. 1300); தேவப்பெருமாள் அம்சம். திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், சீரங்க நாச்சியாருக்கும் திருக்குமாரராக அவதரித்தவர். திருநட்சத்திரம்: ஐப்பசி திருவோணம், திருநாமம், உலக ஆசிரியர். துருக்கர் காலத்தில் பெருமாள் நாச்சியாருடன் வெளியேறிய பொழுது அவர் பிரிவற்றாது தாமும் முதலிகளுடன் புறப்பட்டு 'சோதிடக்குடி' என்னும் சிற்றூரில் பெருமாளுடைய எல்லாச் சொத்துகளையும் கள்வர் அபகரித்ததைக் கேட்டுத் தாமும் தம்முடைய அனைத்தையும் பறிகொடுத்தார். சாதிவேறுபாடின்றி,பேதையரும் பெண்களும் உய்யக்கருதி அரிய பெரிய பதினெண்கிரந்தங்களை (அஷ்டதசா இரகசியங்களை; அஷ்டம்-எட்டு தசா-பத்து)வெளியிட்ட ஆசார்யர்களில் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இலர். இவை தவிர, 'தத்துவ விவேகம், நாலுவார்த்தை’ என்பவையும் இவர்தம் அருளிச் செயல்கள். இவர் கருத்தைப் பின்பற்றி மணவாள மாமுனிகள் வரைந்த வியாக்கியானத்தின் பொருளமைப்பும், நடையழகும் ஒருவராலும் அளவிடக்கூடியதல்ல. இவருடைய திருவடிசம்பந்தம் பெற்றவர்கள்: திருவாய்மொழிப் பிள்ளை, வங்கிபுரம் சீரங்காசாரியர், கோட்டுரிலண்ணன், விளாஞ்சோலைப்பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாளசீயர், கிடாம்பி இராமாதுசப்பிள்ளான், மணப்பாகத்தது நம்பி, சடகோப சீயர், நாலூர்பிள்ளையாச்சான் பிள்ளை, திருப்புட்குழி சீயர், நாலூர்பிள்ளை தாசர், கூரகுலோத்துமதாசர், திருவாய்மொழிப் பிள்ளை, தமப்பனாரண்ணர், திருவாய்மொழிப் பிள்ளை, திருத்தாயார், கொல்லிகாவல்தாசர், கோட்டுர் அழகிய மணவாளப்பிள்ளை, திகழக்கிடந்தாரண்ணன் ஈயுண்ணி அழகிய பெருமாள் நாயனார் ஆகியோர். வயது 105.

(7).திருவாய்மொழிப்பிள்ளை :(பிறப்பு:கிபி.1380), குந்தீ நகரத்தில் அவதரித்தார். இவர் தாய், பிள்ளை லோகாசாரியர் கோயிலை விட்டு வெளியேறியதனால், அதனைத் தரியாது. உயிர்விட, சிறிய தாயாரிடம் வளர்ந்தனர். திருநாமங்கள்: திருமலையாழ்வான், ஸ்ரீசைலேசர், சடகோபதாசர், காட்டு வெட்டிஐயன் ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்வித்து சதுர்வேதிமங்கலம் என்னும் ஒர் ஊரை உண்டாக்கி உடையவருக்கு ஒரு கோயிலையும் கட்டிவைத்தார். திருவனந்தபுரத்தில் விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்து இரகசிய விசேடங்களைக் கேட்டு திருவாய்மொழியில் வல்லவராய் திருவாய்மொழிப்பிள்ளை என்ற திருநாமம் பெற்றார். ஆசாரியர்:பிள்ளை உலகஆசிரியர் சீடர்கள்:மணவாள மாமுனிகள், சடகோபசீயர் எம்பெருமானார் சீயர். வயது105

(8). மணவாள மாமுனிகள் : (பிறப்பு. கி.பி. 1371-1443); சேஷாம்சம். திருநட்சத்திரம்: ஐப்பசி-மூலம், பாண்டிநாட்டில் சிக்கில் கிடாரம் என்ற சிற்றூரில்அவதரித்தார்(திருக்குருகூரில் அவதரித்ததாகவும் கொள்வர் சிலர்). திருத்தந்தையார் திகழக்கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாசரண்ணர்; திருத்தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பார்பனமரபினர் அழகிய மணவாளன் என்பது இவர் இயற்பெயர். வேறு திருநாமங்கள்; ‘யதீந்திரப்பிரவனர், திருமலை தந்த பெருமாள், முப்பத்தாறாயிரப் பெருக்கர், செளமிய ஜாமாத்ரு யோகிந்தரர், காந்தேபாயந்தர், வரவரமுனி, வரயோகி, இராமாதுசன் பொன்னடி, ருசிர ஜாமாத்ருயோகீந்தரர், அழகிய மணவாளசீயர், பெரியசியர், துப்பில் குலமுடையார்தாசர், சடகோபசீயர் திருக்குமாரர், சீயர் நாயனார் (இராமாதுசய்யன்). ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை தாம் திருக்குருக்ரில் இராமாநுசருக்கு எடுப்பித்த குன்றம் அனைய திருக்கோயிலின் நிர்வாகத்தையும் தம் சீடராகிய இவரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் வடமொழி கிரந்தங்களில் பலகாலும் கண் வையாமல், ஶ்ரீபாஷ்யத்தை ஒருகால் கேட்டு, தமக்கும் எம்பெருமானார்க்கும் பிரியமான திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களை நாடோறும் ஒதிக்கொண்டு தென்னரங்கர் செல்வமுற்று அத்திருத்தலத்து மாறன் உரை செய்த தமிழ் மறையை வளர்த்து, இந்தலீலாவிபூதியை நித்திய விபூதியாக்கிக்கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்திய வாசம் செய்யும்படி பணித்தார். ஆசாரியரின் ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றினார் அருமைச் சீடர்.

பெரிய பெருமாள் ஆணைப்படி கோயிலின் பெரிய திருமண்டபத்தில் ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரப்படியுடன் ஒராண்டு முழுதும் காலட்சேபம் செய்து 'முப்பத்தாறாயிரப்பெருக்கர்' என்ற விருதையும் பெற்றார். சீடர்கள்: 'வானமாமலை இராமாநுச சீயர், அப்பிள்ளை, அப்பிள்ளான், நம்மையதிராச ராமாநுசன், அழகிய மணவாளன் (நம்பெருமாள்), சிங்கரயர், கோயில் கந்தாடையண்ணன், பரவஸ்து பட்டர்பிரான் சீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், வண்சடகோப சீயர் என்கின்ற திருவேங்கட சீயர், எறும்பியப்பா, மகாராஜாக்களும் சாத்தின சாத்தாத ஶ்ரீவைணவர்கட்குக் கணக்கில்லை.

இவர் திருவடிசம்பந்திவேட்டுர் சிங்கராசாரியார், மதுரை மகாபலிராயனுக்கு இரகசியங்களை உபதேசித்து முத்தரசு என்னும் கிராமம் பெற்று, அதற்கு அழகிய மணவாளபுரம் என்று பெயரிட்டார். இவர் இருந்தவிடத்தைச் சிலர் தீயிட்டுக் கொளுத்தி விட, இவர் பாம்புருக் கொண்டு வெளிவந்ததாக ஒரு வரலாறும் உண்டு. ஆசாரியருக்குத் தமது உண்மை உருவமான சேஷாவதாரத்தைக் காட்டியதாக மற்றொரு வரலாறும் உண்டு. சடகோபக்கொற்றி என்னும் ஒர் அம்மையார் பெரிய சீயர் திருக்காப்புச் சோத்துக் கொண்டு தனியான ஓரிடத்தில் பகவதநுபவத்தில் இருக்கும்போது கதவின்புரையில் இவரைத் திருவனந்தாழ்வானாகக் கண்டதாக இன்னொரு வரலாறும் உண்டு.

மகாபலி வாணராயன் என்னும் அரசன் ஒருநாள் இரவில் பெரிய சீயருக்குத் தெரியாமல் அவருக்குச் சீபாதம் தாங்கிக் கொண்டுசென்றான். மறுநாள் சீயர் இதனை அறிந்து ஆச்சரியப்பட்டருளினார். இவர் நியமித்த அஷ்டதிக் கஜங்களாகிய 'வானமாமலை சீயர், பட்டர்பிரான் சீயர், திருவேங்கட சீயர், கோயில் கந்தாடையண்ணன், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், எறும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளான்' ஆகியோர் இவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்கள். கோயில் கந்தாடையண்ணன், உடையவருக்கு முதலியாண்டானைப் போலே இவருக்குப் பாதுகாவலராயிருப்பவர். எறும்பியப்பா வடுக நம்பியைப் போலே தேவுமற்றியாத அளவுக்கு மீறிய அன்பாயிருப்பவர். பிரதிவாதிபயங்கரம் அண்ணன் ஆழ்வானைப்போலே உசாத் துணையாயிருப்பவர். அப்பிள்ளார் மடத்தில் எல்லா நிகழ்ச்சி கட்கும் பொறுப்பாயிருப்பவர். வானமாமலை சீயர் பிரியாது அடிமை செய்பவர். பட்டர் பிரான் சீயர் எம்பாரைப் போலே பாதச்சாயாப்பன்னராயிருப்பவர். இறுதிக் காலத்தில் ஸ்ரீசடகோபர் சீயர் மூலம் இவர்துறவறத்தை (துரியாசிரமத்தை) மேற்கொண்டு அழகிய மாமுனிகள் என்ற திருப்பெயருடன் திகழ்ந்தார்.

அருளிச் செயல்கள்: தத்துவத்திரயம், இரகசியத்திரயம், பூர்வசனபூஷணம், ஆசாரிய ஹிருதயம், ஞானசாரம், பிரமேயசாரம், சப்தகாதை, ஏழு பாட்டு, பெரியாழ்வார் திருமொழி (401 பாசுரங்கள்), இராமாதுச நூற்றந்தாதி ஆகிய பத்து பிரபந்தங்கட்கு வியாக்கியானம் இட்டருளினார். திருவாய்மொழி, நூற்றந்தாதி, உபதேசரத்னமாலை, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, தத்துவத் திரயத்திற்குப் பிரமானத்திரட்டு, பூர்வசனபூஷணபிரமாணத்திரட்டு, ஆர்த்திப்பிரபந்தம், தேவ ராசமங்களம், எதிராச விம்சதி, திருவாராதானக் கிரமம், இயல் சாத்து முதலியன. மேலும் அவ்வப்பொழுது பாடிய தனிப்பாடல்களும், விடுதிச் சுலோகங்களும் உண்டு. இவர் வாழ்ந்த காலம் 74 ஆண்டுகள். -

இவருடன் தென்கலை ஆசாரியர்கள் வரலாறு முற்றுப் பெறுகின்றது.

குறிப்பு : இந்த வரலாற்றில் பிள்ளை, முதலியார் என்று வருபவர்கள் யாவரும் பார்ப்பனர்களே. வடுகநம்பி (தெலுங்கர்) மாறனேர் நம்பி ( திருக்குலத்தார்) பிள்ளையுறங்காவில்லிதாசர் (வேடர்குலத்தவர்) முதலியோர் மட்டிலும் பார்ப்பன ரல்லாதார். பார்ப்பனர்கள் மட்டிலுமே சிறந்த இலக்கிய, தத்துவ நூல்களில் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  1. இவ்வரலாற்றைப்போலவே சைவ சமயத்தில் நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் மூலம் திருமுறைகளைப் பெற்றதாக வரலாறு.
  2. தந்தையாரை அடுத்து இவர் ஆசாரியராக வரவில்லை என்பது நினைக்கத்தக்கது.
  3. ஐந்து அங்கங்கள் : (1) சங்கமும் சக்கரமுமாகிய இவற்றின் இலச்சினையைத் தோளில் தரித்தல் (2) நெற்றியில் திருமண காப்பு தரித்தல் (3) தாஸ்ய நாமம் தரித்தல். (4) திருமந்திரத்தை உபதேசித்தல் (5) திருமகள் நாதனை ஆராதித்தல் என்பவை.
  4. பார்ப்பனர்கள் எழுதிய நூல்களின் திருக்கச்சி நம்பியைத் தவிர்த்திருப்பது வருந்தத்தக்கது.