வைணவ புராணங்கள்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து
முனைவர் பேராசிரியர் ஜே. பார்த்தசாரதி
அவர்கள் நல்கிய


அணிந்துரை


உலகம் அறிவுபெற, பல பயனுள்ள நூல்களை இயற்றி, அவற்றை மக்களுக்கு வழங்கி, அவர்களைத் தெளியவைப்பதன் மூலம் உலகப் பெருந் தொண்டு ஆற்றி வரும் எழுத்தாளர்கள் பலர். அவர்களில் ஒருவரே, நம் 'தமிழ்ச்செம்மல்', 'கலைமாமணி', ’ஸ்ரீ சடகோபன் பொன்னடி’ பேராசிரியர் முனைவர் சுப்பு ரெட்டியார் அவர்கள்.

இப்பெருந்தகையார் இயற்றிய பல அரியநூல்களில் ஒன்றுதான் இந்த ’வைணவப் புராணங்கள்’ என்னும் நூல். இது வைணவம் சார்ந்த அரிய ஆராய்ச்சி நூல்.

இந்த நூலில் ’இதிகாச பாகவதம்', 'புராண பாகவதம்', ’திருக்குருகை மான்சியம்’, ’கூடற்புராணம்’, ’இரு சமய விளக்கம்’ என்னும் ஐந்து நூல்களைப் பற்றிய ஒருநிலையான ஆய்வுகள் உள்ளன.

இந்த ஐந்து நூல்களைப் பற்றிய செய்திகளை அறிவதற்கு உதவும்படியாய்ப் புராணம் என்றால் என்ன? புராணம் எப்போது தோன்றியது? புராணம் ஆன்மாவுக்கும் சமுதாயத்திற்கும் புரியும் தொண்டு என்ன? புராணங்கள் பல்வேறு மதங்களில் எப்படியெல்லாம் உள்ளன என்பன போன்ற செய்திகளை உடலுக்கு ஒரு முகம் போல விளக்குகின்றார் ஆசிரியர்.

இவர் எடுத்துக்கொண்ட நூல்களின் வரிசையைப் பார்த்தால் எல்லாமே மிகப்பல வைணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத இலக்கியங்களே என்பது புரியும். வரிசை நிரலிலும் அறிமுகம் ஆகாதது, மேலும் அறிமுகம் ஆகாதது என்று ஐந்தும் அமைந்


ஆசிரியர் - வைணவம் இதழ்,
25. பள்ளிக்கூடத் தெரு கோயம்பேடு, சென்னை - 600 107.
திருப்பதைப் பார்க்கும்போது அறிமுகமாகாத இலக்கியங்களை அறிமுகப்படுத்திய தொண்டு புரியும்.

'இதிகாச பாகவதம்’ செவ்வைச் சூடுவாராலே இயற்றப்பட்டது. ‘புராண பாகவதம்’ நெல்லி நகர் அருளாளதாசரால் இயற்றப்பட்டது. இவ்விரண்டுமே ‘கண்ணன் கதை’ கூறும் பாகவதங்களே, எனினும் ‘இதிகாசபாகவதத்தை’விடப் ‘புராண பாகவதம்’ பலர்க்கும் அறிமுகம் ஆகாததால் அதன்பின் வைத்துள்ளார்.

அதற்கடுத்து உள்ளது ‘திருக்குருகை மான்மியம்’. இது திருக்குருகைப் பெருமான் கவிராயரால் எழுதப்பட்டது. நம்மாழ்வார் பற்றிய காவியம் இதுவாகும். நம்மாழ்வாரையே எல்லோரும் அறிவர். ஆனால் நம்மாழ்வார் பெயரோடு இணைந்த ‘மாறன்பா - பாவினம்’, ‘மாறன் அகப்பொருள்', 'மாறன் அலங்காரம்’ போன்ற நூல்களையும் இயற்றிய திருக்குருகைப் பெருமான் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குருகை மான்மியத்தை அறியாதாரே அதிகம். அப்படியான அழகிய நூலினை அறிமுகம் செய்துள்ளார் வைணவ இலக்கிய மாமணியான நமது ரெட்டியார் அவர்கள்.

அதற்கடுத்து ‘கூடற்புராணத்தை’ அறிமுகம் செய்கிறார். கூடல் அழகர் திருக்கோயிலைப்பற்றிய தலபுராணமே இந்நூல்.இதை இயற்றியவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் சிறப்புகளும் தெரியவில்லை. இப்படியான ஒரு அரிய நூலை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

அடுத்தது ‘இரு சமய விளக்கம்’. இது தற்போது ‘நாகலாபுரம்’ என்று வழங்கப்படும் ‘அரிதை’ என்ற ஊரில் பிறந்த அரிதாசரால் இயற்றப்பட்டது. இந்த நூலைப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும் என்ன உள்ளீடு என்று பலருக்குப்புரியாதிருந்தது. அதைப் புரிய வைத்துள்ளார் இந்த நூலாசிரியர்.

இப்படிப் படிப்படியாக மேலும் மேலும் அறிமுகமாகாத நூல்களை அறிமுகப்படுத்தியதே இவருடைய பெருந்தொண்டு எனலாம். இந்த விதத்தில் இவரைப் போற்ற வைணவ உலகம் மிகவும் கடப்பாடு கொண்டுள்ளது.

போாசிரியர் சுப்பு ரெட்டியார் அவர்கள் இந்த ஐந்து நூல்களையும் அறிமுகப்படுத்தும்போது வரன்முறையாக நூலின் பெயர், நூலின் பாங்கு நூலாசிரியரின் பெயர், நூலின் அமைப்பு முறை, அவ்வமைப்பு முறையில் உள்ள புதுமைகள், அந்நூலின் பாடல்கள், கம்பனையும் திவ்வியப் பிரபந்த ஆழ்வார்களின் சாயல்களைக் கொண்டிருக்கும் பாங்குகள் என்பன போன்ற பல செய்திகளையும் கொடுத்துள்ளார்.

ஜந்து நூல்களில் உள்ள அழகான பாடல்களையும் அறிமுகப்படுத்துவதோடு சில பாடல்கள் உரைநடைப் போக்கையே கொண்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டுவது இவர்தம் நடுநிலையான அறிமுகமாகவே உள்ளது.

செவ்வைச் சூடுவார் பாகவதமான 'இதிகாச பாகவதத்திற்கும்', நெல்லி நகர் அருளாளதாசர் இயற்றிய ‘புராண பாகவதத்திற்கும்' உள்ள ஓப்பீடுகள் மிக மிக அருமையாக உள்ளன. இரண்டிற்கும் கருப்பொருள் ஒன்றே எனினும் கட்டமைப்புகளில், கவிதைப் புனைவுகளில் தத்துவ தரிசனப் பாங்குகளில் உள்ள செய்திகளை கவும் அழ்காகச் சுட்டிக் காட்டுகிறார்.

திருக்குருகை மான்யம்', 'கூடற்புராணம்' இரண்டிற்கும் உள்ள குறை நிறைகளையும் தெளிவாக்குகிறார். அடைமொழிகளே இல்லாமல் மரங்களின் பெயர்களைச் சுருக்கிக் கூறும் திருக்குருகைப் பெருமான் கவிராயரின் புலமையை வியந்து போற்றுகிறார்.

'கூடற்புராணத்தில்' வரும் நரசிங்கரைப் பற்றிய செய்தி அரிய செய்தியாகும். நாசிங்கத்தின் உக்கிரம் தணியவில்லை. தேவர்கள் சரப மூர்த்தியை அனுப்பி நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்கச் செய்கிறார்கள். சரபத்தைக் கண்ட நரசிம்மர் அதை வென்று தானே சாந்தம் அடைகிறார் என்பதும் அரிய செய்தி.

'இரு சமய விளக்கமோ' வைணவம், சைவம் என்னும் இரு சமயங்களின் கொள்கைகள் பற்றியது. சைவத்தைவிட வைணவமே சிறந்தது என்று பேசுவது. பட்டி மன்றம் போல் அமைந்தது இரு பெண்களால் பேசப்படுவதாய் அமைந்துள்ளது. சைவ சமயக் கொள்கைகளைக் கண்டிக்கும் ஒரு விசித்திரமான நூல் என்று குறிப்பிட்டுள்ளது சரியான ஆய்வு முடிவாகும்.

வைணவ நங்கையான ஆரண வல்லிக்கும், சைவநங்கையான ஆகம வல்லிக்கும் நிகழ்ந்த உரையாடல்களில் ஆரண வல்லி சிவனிடம் பல பிறப்புகள் உண்டு. திருமாலே பிறப்பிலி என்று நிறுவுகின்றாள். இப்படியான பல செய்திகளைக் கொண்டதே இந்த நூல் என்று அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.

வைணவர்கள் மிகுந்த பண்பாடுள்ளவர்கள் என்பதை இந்த ஐந்து இலக்கியங்களின் வாயிலாக இந்நூலாசிரியர் வெளிப்படுத்துவது வைணவ சமயத்திற்கே ஒரு முடிசூடுவது போல் உள்ளது. இரண்டு பாகவதங்களிலும் திருக்குருகை மான்யத்திலும் கூடற்புராணத்திலும் இந்த நாகரிகம் இருப்பதுகூடப் பெரிதல்ல; இரு சமய விளக்கத்தில் இரு பெண்களுமே ஒருவரை ஒருவர் விளித்துக் கொள்ளும்போது அழகான தொடர்கதையே சொல்லி விளித்துக் கொள்கிறார்களே அந்த அழகை ஆசிரியர் குறித்திருப்பது மிக மிக நயமானது. அதன் மூலம் வைணவர்கள் மிகவும் நாகரிகம் மிக்கவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுவது மிக மிகப் போற்றத்தக்கது.

ஏராளமான செய்திகளை உள்ளடக்கி நடுநிலையோடு வெளிப்படுத்தி, வைணவ மரபு வழிப் பண்பாட்டினை நமக்கெல்லாம் புரிய வைத்து, இந்த நூல்களைத் தேடிக் கண்டறிந்து படிக்க வேண்டும் என்று தூண்டுகிறாரே அதுவே மிகவும் உயிர்ப்பான செய்தியாகும். பதிப்பித்த சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினரும் இந்நூலை வெளியிட்டதன் மூலம் தொண்டு புரிந்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

சென்னைப் பல்கலைக்கழக, தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக உள்ள ஸ்ரீ சடகோபன் பொன்னடியான இப்பெருந்தகை நெடிதுநாள் வாழ்ந்து இப்படியான பல வைணவ நூல்களை அருள வேண்டும் என்று எம்பெருமானை வேண்டிக் கொள்கின்றோம்.

வாழ்க தமிழ் வளர்க மனிதநேய வைணவம்.

அன்புடன்
கோயம்பேடு,
ஜெ. பார்த்தசாரதி
சென்னை - 600 107.
(பேசி: 044-24754819)