வைணவ புராணங்கள்/புராண இலக்கியம் - விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து

2. புராண இலக்கியம் - விளக்கம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் புராண இலக்கியம் பெரும் பகுதி. இது அளவாலும் மிக விரிந்தது; பொருளாலும் மிக்க ஆழமானது. பெரும்பாலும் இப்புராண இலக்கியம் வடமொழியைத் தழுவியே வளர்ந்தது. பெரும் புராணங்கள் யாவும் வடமொழியிலிருந்து தமிழாக்கம் பெற்றவை.

புராணம் - பழங்கதை, 'புராணம்' என்ற வடசொல் 'பழமை’ என்று பொருள்படும். திருவாசகத்தின் முதல் அகவல் சிவபுராணம் என்றே பெயர் பெற்றுள்ளது.

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான்[1]

என்பது மணிவாசகரின் வாக்கு. திருவாசகப் பதிகங்களுக்குக் கருத்து எழுதினோர் இத்தொடருக்கு 'சிவனது அநாதி முறையான பழமை' என்று எழுதியுள்ளனர். புராணன் - பழமையானவன்; முன்னைப் பழம் பொருட்டு முன்னைப் பழம் பொருளாயுள்ள இறைவன்.

'போற்றி போற்றி புராண காரண’ என்பது திருவாசகம் (போற்றித் திருவகவல் 224) புராண சிந்தாமணி என்பது சேந்தனார் திருவிசைப்பா. 'ஆதிபுராணன்' என்பது திருமந்திரம் (1557). 'பூரணன் காண். புண்ணியன் காண், புராணன் தன்காண்’ என்பது திருக்காளத்தி பற்றிய தேவாரத்தில் அப்பர் வாக்கு (6.8:3) 'பூமி புகலூர் மேய புராணன் போலும், பூதங்களாகிய புராணன் தானேயாகி’ என்பதும் அவர் வாக்கே. புராணன் என்ற பெயரைச் சம்பந்தர் பலமுறை குறிப்பிடுவார். 'பாசுபதம் புரிந்தளித்த புராணர் கோயில்’ (சம். தேவா. 1.131:2), 'உள்ள புண்டரிகத்துள்ளிருக்கும் புராணர் கோயில்' (மேலது 1.132:6), 'கூவினர்... சடையிற் பொலிந்த புராணனார்', (மேலது 27:1), 'அர்ச்சிக்க இருந்த புராணன்' (மேலது 2.10:1 என்பன காண்க இளங்கோ அடிகள் அருகன் பெயரை புராணன் என்ற சொல்லால் குறிப்பிடுவர். அடியார்க்கு நல்லார் புராணன் என்ற சொல்லுக்குப் பழையவன்' என்று பொருள் கூறுவர். இராமன் சீதையோடு கானகம் சென்று கடுந்துயர் உழந்தான் என்பதை இளங்கோ அடிகள் நெடுமொழி என்று குறிப்பிடுவர். அடியார்க்கு நல்லார் நெடுமொழி - புராணக்கதை’ என்று விளக்குவர்.

புராணம் வடமொழி இலக்கியத்தில் போற்றத்தக்க ஒரு சிறந்த பிரிவு. ‘வேதாகம புராண இதிகாசம்’ என்பது ஒரு வடமொழி வழக்கு. ஏனைய யாவும் இவற்றினுள் அடக்கம் என்பது கருத்து. வடமொழி மட்டுமன்றி இந்திய மொழிகள் அனைத்திலுமே புராண இலக்கியம் ஒரு சிறப்பான பகுதி. புராணம் என்ற சொல் உபநிடதங்களிலும் காணப் பெறுகின்றது. புராண நூல்கள் அதர்வண வேதம் தோன்றிய காலத்திலேயே ஒரு சிறந்த இலக்கியமாகக் கொள்ளப் பெற்றன என்பர். மகாபாரதம் புராணப் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. வேத காலத்திற்கு முன் ஆதிபுராணங்கள் கதைகளாக வழங்கின என்றும், புத்தர் காலத்திற்கு முன் ஆதிபுராணங்கள் எழுதப் பெற்றன என்றும், ஏனையவை அவர் காலத்திற்குப் பின் எழுதப் பெற்றன என்றும் ஆன்றோர் கருதுவர்.

விஷ்ணுவே வேத வியாசராக அவதரித்தார் என்பது வடநூல் மரபு. ஒன்றாகக் கலந்து கிடந்த வேதங்களை அவர் இருக்கு, யகர், சாமம், அதர்வனம் என நான்காகப் பிரித்து அமைத்தமையால் அவர் வேதவியாசர் என வழங்கப்பெற்றார்.

புராணம்'’ என்கிற வடசொல் புரா-நவ’ என்ற இரு வேர்களிலிருந்து பிறந்தது; இதன் பொருள் பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய் உள்ளது என்பர். இதுவே நாம் கருதும் புராணம். பழமையான எந்த வரலாறுகள் இன்னும்கூட மக்களிடையே சொல்லப் பெற்று வழங்குகின்றனவோ அவையே புராணம் என்பதாகும்.

வடமொழியில் ஒரு நண்பன் புத்தி சொல்லி நல்லொழுக்க உணர்ச்சியை ஊட்டுவது போல பழைய கதைகளைச் சொல்லிநீதியை உணர்த்துகின்றவை புராண இதிகாசங்கள் என்று பகரப் பெறும். எனவே, புராணங்களில் கதைகளே சிறந்திருப்பினும் அவை காவியங்களாகிச் சுவைகளையும் ஏற்று, தெய்வபக்தி,நல்லொழுக்கம் போன்ற நற்பண்புகளை வளர்த்து வருகின்றன.

தமிழில் புராணம் பற்றிய குறிப்பு: புராணம்’ என்பது பழமை சார்ந்த வரலாறு என்ற வழக்கு தமிழில் இருந்தது என்பதை அப்பர் தேவாரத்துள் இரு பதிகப் பெயர்களாலும் அறியலாம். நாலாம் திருமுறையில் ஒரு பதிகம் (4.14) தச புராணம் என்ற பெயர் பெறுகின்றது. இதன் பாடல்கள் சிவபிரான் ஆலகால விஷம் உண்டது (, முடியோடு பாதம் அறியாமல் நின்றது (2) முதலான பராக்கிரமச் செயல்களைச் சொல்லித் துதிக்கின்றன. மற்றது இலிங்க புராணக் குறுந்தொகை என்பது ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகம் (5.96). செங்கணானும் பிரமனும் தேடச் சுடர் வடிவாய் சிவபெருமான் நின்ற நிலையை மட்டுமே கூறுவது. இவ்விரு பதிகங்களும் பழங்கதைகளை மட்டுமே எடுத்துக் கூறுவதால் இப்பதிகங்கள் புராணம்’ என்று சிறப்பாய்ப் பெயர் அமைக்கப் பெற்றன என்பதாக அறிய முடிகின்றது.

திருமூலர் 'இலிங்க புராணம்’ என்ற ஒரு பகுதியை அமைத்துள்ளார்[2]. இங்கு சிவபராக்கிரமங்கள் ஐந்தினைக் குறிப்பிடுகின்றார். மலைமகனார் மகளாகி அர்ச்சித்து பக்தி செய்தல் {1, சிவபெருமான் திருமாலுக்கு ஆழியையும் நான்முகனுக்கு வாளும் கொடுத்தமை (2), கைலாய மலையைத் தூக்கிய இராவணனை நெரித்து பின் ஆட்கொள்ளல் (3), தண்டிக்கு அருளியது (4), தேவர்கட்கு அருளியது (5) என்பவை காண்க

'இலிங்க புராணக் குறுந்தொகை என்ற பெயரைக் கொண்டு அப்பர் காலத்தில் வடமொழி இலிங்க புராணம்[3] தமிழில் நல்ல ஆட்சி பெற்றிருந்ததென்றும் கருதலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து,

இலிங்கத்து இட்ட புராணத்திரும்,
சமணரும், சாக்கியரும்,
வலிந்து வாதுசெய்வீர்களும், மற்றும்நும்
தெய்வமும் ஆகிநின்றான் (திருவாய் 410:5)

என்று நம்மாழ்வார் அருளிச் செய்வதாலும் இப்புராணத்தின் ஆட்சி இருந்தமை நன்கு அறியலாம். மேலும், பதினெண் புராணங்களையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டுப் பாடுவதும் ஈண்டு அறியத்தக்கது.

எங்கு மாகி நின்றானும்
இயல்பறி யப்படா
மங்கை பாகம் கொண்டானும்
மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு
நான்குக் குணர்வுமாய்
அங்க மாறும் சொன்னானும்
ஐயாறுடை ஐயனே (26:6)

என்பது சம்பந்தர் தேவாரம். 'பங்கமில் பதினெட்டு’ என்பது பதினெண் புராணமாகும். நான்கு வேதம்; அங்கமாறு - வேதாங்கம் ஆறு.

காலத்தால் இன்னும் முன்னதான மணிமேகலை என்னும் நூலில் புராணக் குறிப்பு வருகிறது. 'சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை'யில் வைணவவாதியைக் குறிப்பிடும்போது காதல் கொண்டு கடல்வண்ணன் புராணம் ஒதினன்' என்று குறிப்பிடுகின்றார். இங்கு ஆசிரியர் விஷ்ணு புராணத்தைக் குறிப்பிடுகின்றார் என்பது வெளிப்படை (கடல்வண்ணன் - திருமால், விஷ்ணு,

பழங்கதையை உயர்த்திச் சொல்லி அதை சமயத்துறையில் காக்க வேண்டிய பெருமையைத் தந்தவர் சைனர். ஆதியில் இவர்கள் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்களாதலாலும், தமிழுக்குப் புறம்பான ஒரு சமயத்தையும் நாகரிகத்தையும் தமிழகத்தில் புகுத்த முற்பட்டவர்களாதலாலும் இவர்கள் இவ்வாறு தங்களுக்கென்று ஒரு பாதையை மேற்கொண்டது இயற்கையே. சீவக சிந்தாமணியே ஒரு புராணம் என்பது நினைவுகூரத்தக்கது. புராணம் என்ற பெயரோடு நாம் அறிவன புராண சாகரமும், சாந்தி புராணமும் ஆகும்.முன்னது பஃறொடை வெண்பாவாலானது (காலம் 9ஆம் நூற்றாண்டு - யாப்பருங்கல விருத்தியால் அறியப்பெறுவது). சாந்தி புராணம் சாந்தி நாதர் என்ற பதினாறாவது சைன தீர்த்தங்கரரின் வரலாற்றைக் கூறும் ஒரு விரிந்த புராணம் போலும். இதன் பாடல்கள் சில புறத்திரட்டில் தொகுக்கப்பெற்றுள்ளன (காலம் எட்டாம் நூற்றாண்டாகலாம்). இவ்விரு நூல்களும் இன்று இல்லை.

புராணம் என்ற பெயர் கொண்டு புராணமில்லாத நூல்களும் உண்டு. எடுத்துக்காட்டாக 'அரிச்சந்திர புராணம்.' இது புராணம் அன்று மாபாரதத்தின் கிளைக் கதைகளில் இதுவும் ஒன்று. வீரன் என்ற பெயருடைய ஆசு கவிராசர் இதைக் காப்பியச் சுவைபட ஒரு சிறு காப்பியமாகப் பாடினார். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்காவியம் 'அரிச்சந்திரன் சரித்திரம்’ என்றே அச்சிடப் பெற்றிருந்தது. பின்னர் அச்சிட்டவர்கள் 'புராணம்’ என்ற பெயர் இருந்தால் மக்கள் விரும்பிப் படிப்பார்கள் என்ற எண்ணத்தால் 'அரிச்சந்திர புராணம்’ என்று பெயர் மாற்றம் செய்தார்கள் போலும். இதுபோலவே சிறு காவியமாகப் பாடப்பெற்ற கிளைக் கதைதான் நைடதம், புரூரவன் பற்றிய சரிதமாகிய 'புரூரவன் சரிதம்'. இவை மூன்றுமே (15-ஆம் நூற்றாண்டில் எழுந்தவை. (நளன் கதையைக் கூறும் நளவெண்பா 13-ஆம் நூற்றாண்டில் எழுந்தது.)

முன்பிருந்தே தமிழ் இலக்கியங்கள் கவிதையில்தான் தோன்றின.அம்மரபையொட்டி புராண இலக்கியமும் செய்யுளில்தான் செய்யப்பெற்றுவந்துள்ளது.முதல் புராணம் தொடங்கிஇந்த இருபதாம் நூற்றாண்டிலும்கூட, புராணம் என்றால் செய்யுள்தான். எனினும், புராணம் பாடிய எல்லா ஆசிரியர்களும் சந்தப் பாடல்கள் அமைப்பதிலும், சித்திரகவிகள் அமைப்பதிலும் தங்கள் திறன் முழுவதையும் காட்டியுள்ளனர். யமகம், திரிபு, மடக்கு என்பவற்றை நூல்தோறும் காணலாம். இங்கு, தோத்திரப் பாடல்களும் அதிகம் பயின்று வரக் காணலாம்.

இந்நிலையில் உரைநடையில் செய்யப்பெற்ற புராணங்களும் அண்மைக் காலத்தில் தோன்றியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டில் பல புராணங்கள் வடமொழியிலிருந்து நேரே தமிழில் உரைநடையாக மொழிபெயர்க்கப் பெற்றன. எடுத்துக்காட்டு: சிவமகாபுராணம். மணிப்பிரவாள நடை இன்னும் பழமையானது. சைனருடைய ஶ்ரீபுராணம் (15-ஆம் நூற்றாண்டு) மணிப்பிரவாள நடையில் அமைந்தது. வைணவ மரபில் பின்பழகிய பெருமாள் ஜீயர் (13-ஆம் நூற்) செய்த ஆறாயிரப்படி குருபரம்பரா பிரபாவமும் பிள்ளை லோகஞ் ஜியர் (15-ஆம் நூற்) செய்த இராமாநுச திவ்வியாசார்ய சரிதையும் ஆசாரிய வரலாறு கூறும் புராணங்களென்றே கருதத் தக்கவை. இவை மணிப்பிரவாள உரைநடையில் அமைந்தவை. பின்னர் எழுந்த குருபரம்பரா பிரபாவங்கள் யாவும் உரைநடையிலேயே அமைந்தன.

தல புராணங்களின் தோற்றம்: ஒரு தலத்திலுள்ள சிவ அல்லது விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அல்லது திருமால் புகழை விரித்துச் சொல்வது தல புராணம். இது தலத்தின் பெருமையையும் அங்குள்ள மூர்த்தியின் பெருமையையும், தீர்த்தத்தின் பெருமையையும் கூறி இந்த மூர்த்தியைப் பூசித்து நற்பேறு பெற்றவர்களின் வரலாற்றையும், கடைபிடிக்க வேண்டிய தர்மங்களையும், விலக்கத்தக்கனவாகிய அதர்மங்களையும், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு முதலியவற்றோடு காவிய நயம்பட விரித்துரைப்பது ஒரு வகையில் மக்களுக்கு வாழ்க்கையில் மன நிறைவையும், பூர்ணமான சாந்தியையும். இறைவன் அருள் உண்டு என்ற நம்பிக்கையையும் அளித்து, அவர்களை நன்னெறிப்படுத்தி வந்துள்ளன. திருவாரூரில் பிறந்தால் முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, அருணையை நினைக்க முக்தி என்று எல்லாப் புராணங்களும் பெருஞ் சிறப்போடு எடுத்துச் சொல்கின்றன. ஆனால் எல்லாத் தல புராணங்களிலும் அந்தந்த தலத்தைத் தெரிசிக்கவும் நினைக்கவும் முக்தி என்று உறுதியாய்ச் சொல்லியிருத்தலையும் காண்கின்றோம். இதில் முரண் இல்லை. இவ்வாறு கூறியமையால் அவ்வவ்வூர் மக்களுக்குத் தங்களுர் வாழ்க்கையில் மகிழ்ச்சியுண்டாகி நாட்டுப் பற்றைத் தோற்றுவிக்கும் வித்தாயும் இருந்து வருகின்றன. இவ்வாறு எழுந்த தல புராணங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

தல புராணம் என்று எண்ணும்போது ஒரு நிலையை மனத்தில் கொள்ள வேண்டும். 12-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சமய அநுட்டானம் தமிழகத்தில் மூன்று பிரிவாக இருந்தது. ஒரு பிரிவு அநாதி காலமாக இருந்து வந்த சைவ சமயம்; இது சிவாலய வழிபாடு, திருமுறை ஒதுதல் என்ற நெறியில் சென்றது.இரண்டாவது வைணவ சமயம்; இது திருமால் வழிபாடு; நாலாயிரம் ஒதுதல், பூர்வாசாரிய வியாக்கியானங்களைப் படித்தல் என்ற நெறியில் சென்றது. இச்சமயத்தார் அனைவரும் வைஷ்ணவர்கள்ஶ்ரீ. பார்ப்பனர்கள், சாத்தின முதலிகள். இவர்களிடையே சாத்தாத முதலிகளான பார்ப்பனரல்லாதார்க்கு எந்த இடமும் இல்லை. மூன்றாவது நெறி சங்க அத்வைத நெறி. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் தோன்றி அத்வைதம் நிரூபணம் செய்த பின்னர் முன்பு சிவ வேதியராயிருந்த தமிழ்ப் பார்ப்பனர் அனைவரும் ஸ்மார்த்த அத்வைதிகளாயினர். இவர்களுக்கு ஆலய வழிபாடு முக்கியமல்ல. ஆகவே கோயில் வழிபாடு என்று பேசும்போது பார்ப்பனரல்லாத மக்கள், சைவர்கள், கோயில் வழிபாடு கொண்டவர்களாய், தல புராணம் பாடினார்கள். ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் சங்கர பாஷ்யங்களையே பற்றிக் கொண்டவர்களாய்க் கோயில் நெறியினின்றும் விலகி நின்றார்கள். ஶ்ரீ வைஷ்ணவர்களும் தங்கள் வடமொழி நூல்களையே பற்றிக்கொண்டு நாலாயிரம் தவிர வேறு வேறு தமிழ் சம்பந்தம் இல்லாதவர்களாய் வாழ்ந்தார்கள். ஆகவே தலபுராணம் செய்யும் சூழ்நிலை வந்தபோது சைவர்கள் பெருவாரியாக நூல் செய்தார்கள், பார்ப்பனர் செய்யவில்லை. ஆகவே சைவத் தலபுராணங்கள் அதிகமாகத் தோன்றின. பார்ப்பனமே ஆதிக்கம் வகித்த வைணவத்தில் தல புராணங்கள் தோன்றவில்லை. பார்ப்பனர்கள் செய்யமாட்டார்கள். செய்யவல்ல பார்ப்பனரல்லாத வைணவர் மிகக் குறைவு.

சைவத் தல புராணங்கள் மிகுதியாகவும் வைணவத் தல புராணங்கள் குறைவாகவும் இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சிவாலயங்கள் தமிழ் நாட்டில் பல்லாயிரம்; திருமால் ஆலயங்கள் இருநூற்றுக்கும் குறைவு. இலக்கிய வரலாறு முழுமையிலும் வைணவத்தில் ஒரு பத்துத் தல புராணங்கள்தானும் காண்டல் அரிது.

ஆதியில் தமிழகத்தில் இருந்தது ஒரே சமயம். ஒரே தெய்வ வழிபாடு. அதுவே சைவ சமயம், சிவ வழிபாடு. இவற்றிலிருந்து கிளைத்தனவே பிற யாவும். குறிஞ்சி தெய்வமான முருகனும், முல்லைத் தெய்வமான திருமாலும் அனைவராலும் வணங்கப் பெற்றனர். காலப்போக்கில் முருக வழிபாடு சிவ வழிபாட்டோடு ஒன்றிடவே, தனித்து நின்ற திருமால் வழிபாடு தனிச் சமயமாக ஆயிற்று. தனியே திருமால் ஆலயங்கள் தோன்றலாயின. இதுதவிர, தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த பல்வேறு சமயங்களைத் தழுவியவர்கள் அனைவருமே சைவத்திலிருந்து சென்றவர்களே. சம்பந்தர் வரலாறும் இராமாநுசர் வரலாறும் இந்த நிலையை நன்கு விளக்கும். பண்டை நாளில் பெளத்தமும்,பிற்காலத்தில் கிறித்தவமும் இஸ்லாமும், நாத்திக வாதமும் யாவும் சைவத்திலிருந்து கிளைத்தனவே. சைவத்திலிருந்து பிறமதம் புகுந்தார்களேயன்றி, பிற மதத்திலிருந்து சைவத்திற்கு வந்தார்கள் என்பதில்லை.

இதனை உணர்ந்தால் வைணவத் திருக்கோயில்கள், புராணங்கள் குறைவாக இருப்பதை உணரலாம்; உணர முடியும். அப்படியே பிறவும். சைனத்தில் புராணப் பெயரால் உள்ளவை காந்தி புராணம், மேருமந்தர புராணம், ரீபுராணம். பெளத்தத்தில் புராணம் இல்லை. கிறித்தவத்தில் தேம்பாவணியும் ஒரு புராணமே. இஸ்லாம் சமயத்தில் சீறாப்புராணமும், முகையதீன் புராணமும் புராணங்களே. இவை அடியார் வரலாறு உரைக்கும் புராணங்களாகும்.

மரபுகள்: புராணங்கள் முனிவர் மரபு, அரசர் மரபு இவற்றை விரிவாகக் கூறுவன. மக்கள் தொகை குறைவாய் இருந்த காலத்தில் வாழ்க்கைத் தேவைகள் குறைவாயும் வசதிகள் பெருகியும் இருந்த அக்காலத்தில் மக்கள் இரண்டு பண்புகளையே போற்றி ஒழுகுவர். ஒன்று அறிவு, மற்றது வீரம். அறிவை வளர்த்து அதன் எல்லை கண்டோர் முனிவர். வீரத்தை வளர்த்து அதன் எல்லை கண்டு, முனிவர் உள்ளிட்ட பிற மக்கள் கவலையின்றி வாழ உதவினோர் அரசர். எனவே, புராணங்கள் முனிவர் மரபையும் மன்னர் மரபையும் மிக நீளமாக விரித்துச் சொல்லுகின்றன. இரண்டுமே வீர வழிபாட்டின் (Hero-worship) சின்னங்கள். மக்களுடைய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் இவ்வீர வழிபாடு தேவையாய் இருந்தது. ஆகவே இந்தக் கண்கொண்டு மரபுச் செய்திகளை நாம் காண வேண்டும்.

புராணப் பொருள்: புராணம் இம்மை, மறுமை ஆகிய இரண்டுக்கும் துணைபுரியக்கூடிய பொருள்களை நவில்கின்றன. புராணத்தில் குறிப்பிடப் பெறாத பொருளே இல்லை. வேதங்களில் கூறப்பெற்ற பொருளை விளக்கிக் கூறுவதே புராணம். வேள்விகள், உயிர்களின் படைப்பு, உலக அமைப்பு, யோகம், நோன்பு, நவக்கிரக மண்டலம், அவற்றின் போக்கு, சுவர்க்க நரகம், வழிபாடு, உலக அமைப்பு, மருத்துவம், நாடிவிசாரணை, மந்திரம், தோத்திரம், சகுனம் முதலான பொருள்கள் இங்கு சொல்லப் பெற்றுள்ளன. இவை பற்றிக் கவச தோத்திரங்களும் ஆங்காங்கு விரித்துச்சொல்லப் பெற்றுள்ளன. (எ-டு). சக்தி கவசம். அதிவீரராமர் பாடிய காசி கண்டம். அத்தியாயம் 72, 13 பாடல்கள். துர்க்கம் என்னும் அசுரனை வதைத்த உமா தேவியைத் தேவர்கள் துதித்தது. இலக்குமி கவசம். காசி கண்டம். அத்தியாயம் 5, ஏழு பாடல்கள். அகத்திய முனிவர் துதித்தது. நாராயண கவசம். செவ்வைச் சூடுவார் பாகவதம். கந்தம் 6. அத்தியாயம் 4, 25 பாடல்கள்; விசுவரூபன் இந்திரனுக்கு உரைத்தது. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்நாடெங்கும் போர்கள் மலிந்து விட்டன. முதலில் இஸ்லாமியர் படையெடுப்பால் நேர்ந்த இன்னல்கள். மேலை நாட்டினர் வாணிகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்கள், இப்போர்களில் சாமானிய மக்களேயன்றி சிறந்த சமய வாழ்க்கை நடத்த வசதியான நிலையிலிருந்த மக்களும்கூட ஈடுபட நேர்ந்தது. இவர்கள் கையிலேந்திய படைக்கலங்களால் தங்களைக் காத்துக் கொண்டதுடன் காப்பாக ஒரு தெய்வ கவசமும் தேடினார்கள்[4]. இவர்கள் சக்தியுணர்வே இக்கவசம் அமைக்கும் தோட்டமாகும். இந்த நிலையில் எழுந்தனவே இக்கவசங்கள் எனக் கருதலாம். இவை முதலில் வடமொழியில் எழுந்தன; பின்னர் அந்த மரபையொட்டித் தமிழிலும் தோன்றலாயின.

புராணத்தால் விளைந்த பயன் புராணங்கள் பொதுவாக வேத ஆகமங்கள் விதித்தவற்றையும் விலக்கியவற்றையும் கதைகள் மூலமாக மக்களுக்கு உணர்த்தி நன்னெறி புகட்டுவதற்காக எழுந்தவை, கதைகளோடு விதிகளும் விளக்கமாகச் சொல்லப் பெற்றிருக்கும். புராணங்களில் எண்ணற்ற விரதங்கள் சொல்லப் பெற்றிருக்கும். ஒவ்வொரு விரதம் சம்பந்தமாகவும் அதன் இலக்கணம் யாது, அதைக் கைக்கொண்டு பெறத்தக்க பலன் யாது, அதை முற்காலத்தில் அனுட்டித்துப் பயன் பெற்றவர் யாவர், அவர் சரிதம் எத்தகையது என்ற பொருளை எல்லாம் விளக்கிக் கூறுவதே புராணத்தின் இயல்பு.தமிழ்ப் புராணங்கள் செய்யுள் நடையில் எழுதப் பெற்றிருப்பினும், அவை சாமானியக் கல்வியுள்ளவர்கட்கும் எளிதில் பொருள் விளங்கக்கூடியவை. அன்றியும் மக்களை நல்வழிப்படுத்துதலே புராணத்தின் நோக்கமாதலால் மக்கள் மனத்தைக் கவரும் பொருட்டு அவை ஒன்பது சுவைகளும் அமையும்படிச் செய்யப் பெற்றுள்ளன. ஆனால் புராணச் சொற்பொழிவு கேட்பவர்கட்கு அண்மைக் காலம் வரையில் அவற்றில் ஆராய்ச்சி உணர்வு தோன்றியதில்லை. அனைத்தையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர். இதனை மூட நம்பிக்கை என்று கொள்வது சரியன்று. புராணப்பொழிவு ஆற்றுவோரிடத்துள்ள சொல்லாற்றலாலும், கேட்போர் மனம் பக்குவப்பட்டுச் செல்லும் நெறியினாலும் எல்லாமே மெய் என்று நம்ப முடிகின்றது.இதனால் புராணச் சொற்பொழிவாளர் தாம் எடுத்த போதனையில் வெற்றி அடைகின்றார். பாவச் செயலில் அச்சமும் வெறுப்பும் நிகழ வேண்டும் என்ற உணர்வோடு அவர் பொழிவு நிகழ்த்துகையில் மக்கள் மனத்தில் அச்சமும் வெறுப்பும் தோன்றுகின்றன. புண்ணியச் செயலால் மகிழ்ச்சியும் எழுச்சியும் விளைய வேண்டுமென்று அவர் திட்டமிட்டால் மக்கள் மனத்தில் அதே மகிழ்ச்சியும் அப்புண்ணியச் செயல் புரிகையில் ஊக்கமும் பிறக்கின்றன. எனவே, புராணக் கதைகள் மக்களை ஊக்குவிப்பதில் சிறந்த போக்குடையவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. புராணக் கதைகள் பொய்யுடையவை என்று இகழ்வதாலும் பயனொன்றும் விளைவதுமில்லை.திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு இல்லாத ஒரு சைவ சமயத்தையும், பாகவதக் கதைகள், இராமாயண பாரதக் கதைகள் இல்லாத ஒரு வைணவ சமயத்தையும் நாம் எண்ணிப் பார்க்க முடியுமா ? அரும் பாசுரங்கள் மக்களை ஆட்கொண்டன என்பது முற்றிலும் உண்மை. சாத்திர உணர்ச்சி சிலருக்கு மட்டுமே அறிவு விருந்தாக அமைய முடியும்.

இன்று புராணப் பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், சாத்திர நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களைக் கவனித்தால் புராணப் பொழிவுகள் நடைபெறும் இடங்களில்தான் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதைக் காணும்போது மக்களுக்குப் புராணங்களில் இருக்கும் ஈடுபாட்டை விளக்க இஃதொன்றே போதுமானது.

தல புராணங்களால் விளைந்த பயன்: தமிழ் நாட்டில் ஊர்தோறும் கோயில் உண்டு. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழஞ்சொல்லுக்கேற்ப ஆதிகாலத்தில் மக்கள் கோயில் என்று தாங்கள் கருதிய இடங்களில் வாழ்ந்தார்கள். வாழ்ந்த இடங்களில் புதிதாகக் கோயில்களை அமைத்துக் கொண்டனர். நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய தலங்கட்குச் சென்றுவரத் தொடங்கினர். இவற்றால் ஒரு கோயிலைச் சுற்றிப் பல கதைகள் தோன்றலாயின. புலமை படைத்தவர்கள் அக்கதைகளையெல்லாம் தொகுத்துப் புராணங்களாகப் பாடினர்.

ஊர்தோறும் உள்ள இறைவன் திருவுருவத்தைப் பாடத் தொடங்கினர். பலர் தலபுராணம் பாடினர். 'பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள், இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமால்' (7.34:1) என்ற தம்பிரான் தோழரின் வாக்கு அவர்கட்கு ஊக்கம் அளித்தது. தல புராணங்கள் கோயிலைப் பாடுகின்றமையால் கோயில் பற்றிய செய்திகளும் பெரிதும் விளக்கமாகின்றன.

நாயன்மார்கள் பல தலங்கட்கும் சென்று பதிகம் பாடினமையாலும், ஆழ்வார் பெருமக்கள் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்தமையாலும் பக்திமான்கள் திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்தத் தரிசன உணர்ச்சியைத் தல புராணம் பின்னும் பெருக்கியது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை எழுந்துள்ள தலங்கள் அனைத்திலும் சிறந்துள்ள சில தலங்களையேனும் சேவிக்க வேண்டும் என்று மக்கள் விரதம் பூண்டனர்.[5]

தலப்பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தில்லைக்கோ, ஆரூருக்கோ, அண்ணாமலைக்கோ செல்ல இயலுவதில்லை.அந்தந்த ஊரிலும் ஆங்காங்கு உறைகின்ற அப்பனும் அம்மையும் அங்குள்ளோருக்கு நடராசராகவும் உமாபாகராகவும் காட்சியளித்து முக்தியளித்தனர் என்று தலபுராணங்கள் கூறுகின்றன. ஆகவே வசதியற்ற மக்கள் தங்கள் கோயிலிலேயே தாம் விரும்பும் காசி விசுவநாதரையும், அண்ணாமலையாரையும், பிற மூர்த்திகளையும் கண்டு மனநிறைவு பெறுகின்றனர். ஒரு சிற்றுாரில் உள்ள மக்கள் அனைவரும் இவ்வாறு வாழ்ந்த காலத்தில் தாயுமான அடிகள் கூறியவாறு'எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே’ (கருணாகரம்-3) என்ற நினைவு உண்டான காலத்தில் உண்மையான ஒருமைப்பாடும் நிலைத்தது.

தல புராணங்கள் தரும் ஒரே செய்தி கடையருக்கும் இங்குக் கடைத்தேற்றம் என்பது. ஒருவன் எவ்வளவுதான் பாவம் செய்திருப்பினும், அவன் தான் செய்த பிழைக்கு அகங்குழைந்து, இந்தத் தலத்தில் இந்தப் பொய்கையில் நீராடி இந்த இறைவனை வழிபட்டால், இறையருளுக்குப் பாத்திரமாகி, பாவம் நீங்கப் பெறுகின்றான் என்றே எல்லாப் புராணங்களும் உறுதியாய்ச் செப்புகின்றன. பிற்காலத்தில் நாம செபம் என்பது ஒருதனிப்பெருஞ் சடங்காகத் தமிழகமெங்கும் வளர்ந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்துள்ள எல்லாத் தல புராணங்களும் சாத்திரங்களும் நாம செபத்தின் மகிமையைப் பெருக்கியுரைக்கின்றன.

நம்முடைய புராண மரபில் மக்களுக்கும் பிராணிகளுக்கும் தாவரங்களுக்கும் வேறுபாடு இல்லை. மதுரையில் இறைவன் பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுக்கிறான், நரிக்குருவி முதலியன முக்தி பெறுகின்றன. தில்லையில் உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முக்தி நல்குகிறார். திருவோத்துாரில் இருந்த ஆண் பனைகள் ஞானசம்பந்தரால் பெண் பனையாக்கப் பெறுகின்றன.இந்தப்புராணக் கூற்றுகள் மனிதகுலத்திற்கும் உய்தி உண்டு என்று உணர்த்தத்தடை இல்லை.இந்த நம்பிக்கையினால் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்து விடாமல் ஊக்கத்துடன் செயல்படுகின்றனர்.

சிவபெருமான் இறையனார் என்ற புலவர் வடிவில் சங்கத்தில் அமர்ந்திருந்தார். கந்தர பாண்டியனாக உருவந்தாங்கி வந்து தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் ஆட்சி புரிந்தார் என்பன போன்ற கதைகளும் சேர்ந்து தமிழுக்கும் இறைவனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணின. காஞ்சியில் திருவெஃகா என்ற தலத்தில் நகரைவிட்டு நீங்கிய 'கணிகண்ணன்' என்ற புலவன் பின்னே பச்சைப் பசுங்கொண்டலான திருமால் தம் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொண்டு செல்லுகின்றார். திருப்பரங்குன்றில் முருகன் திருமுருகாற்றுப் படைக்கு மகிழ்ந்து நக்கீரருக்கு சிறை வீடு செய்கின்றார்.இவ்வாறெல்லாம் தல வரலாற்றுச்செய்திகள் இறைவன் தமிழுக்கும் பக்திக்கும் ஒளி தந்த நிலைகளையுணர்த்தி மக்களுக்கு இறையருளில் நம்பிக்கையை ஊட்டியுள்ளன.

இவையே புராணங்களின் நிலை. இவை பிற்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் பெரும் பகுதியாய் அமைந்துள்ளன. தமிழ் வளர்ச்சியில் எத்தனையோ நிலைகள். அவற்றுள் புராணம் மிக்க சிறப்புடையது.


  1. 1 திருவா. சிவபுரா, அடி 19-20
  2. 2 திருமத் இரண். தத்திரம் இலிங்க புராணம் 347-52
  3. 3 இலிங்க புராணம் என்ற பெயரில் வரகுணராம பாண்டியன் என்பாரால் பாடப்பெற்ற ஒரு தனி நூலும் உண்டு (16ஆம் நூற்றாண்டு.
  4. உடலைப் பாதுகாப்பதற்காகப் போருக்குச் சென்ற வீரர்கள் இரும்புக் கவசம் அணிந்தார்கள். அதுபோல இறைவன் புகழைப் பகர்ந்து அவன் இன்ன இன்ன உறுப்புகளைக் காப்பானாக என்று அவன் பெயர்களையே சொற்கவசமாக அமைத்துக் கொள்ளுதல் தோத்திரக் கவசமாகும். திருவாய்மொழி பன்னிரு திருநாமப்பதிகம் (திருவாய் 2.7) ஈண்டு நினைவு கூரத்தக்கது.
  5. 5. என்னுடைய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பற்றிய ஆய்வினை முன்னிட்டு வைணவ திவ்விய தேசங்கள் 108-ல் 102 திவ்விய தேசங்களைச் சேவித்து ஆறு திருத்தலப் பயண நூல்கள் எழுதி வெளியிட வாய்ப்பு ஏற்பட்டது. தற்சமயம் 108 திவ்விய தேசங்கள் - ஓர் ஆய்வு என்ற தலைப்பில் பிஎச்டி பட்டத்திற்கு ஆய்வு செய்யும் மாணாக்கர் ஒருவருக்கு வழிகாட்டியாக அமையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.