வைணவ புராணங்கள்/(1) இதிகாச பாகவதம்

விக்கிமூலம் இலிருந்து

(1) இதிகாச பாகவதம்
பகவானுடைய வரலாற்றுக் கதைகளைக் கூறுவது பாகவதம். பகவான் என்றால் வைணவத்தில் சிறப்பாய்க் குறிப்பது கண்ணபிரானை. வியாசர் செய்ததாய் வழங்கும் வடமொழிப் பதினெண் புராணங்களில் திருமால் புகழ்கூறும் புராணங்கள் பாகவதம், விஷ்ணு புராணம், நாரதீயம், காருடம் என்னும் நான்கு இவற்றுள் முதலாவது பாகவதம். வடமொழியில் கண்ணபிரான் கதைகளைக் கூறும் பாகவத புராணம் ஏழு - இதிகாசம், புராணம், சங்கிதை, உபசங்கிதை, விஷ்ணு ரகசியம், விஷ்னுயாமனம், கெளதம சங்கிதை என்றும், அவற்றுள் முதல் இரண்டுமே தமிழில் செய்யப் பெற்றன என்றும் ஆன்றோர் கூறுவர். இதிகாச பாகவதம் வடமொழியில் 18,000 சுலோகங்களில் வியாசரால் செய்யப்பெற்றது.

தமிழில் செவ்வைச் சூடுவார் செய்த பாகவத புராணம் இந்த இதிகாச பாகவதத்தின் மொழிபெயர்ப்பாகும். இதுவும் மூலத்தைப் போலவே ஸ்கந்தம் 12 கந்த (ஸ்கந்த)ப் பாகுபாட்டைக் கொண்டது. பாயிரம் பின் மொத்த அத்தியாயங்கள் 155, பாடல் தொகை 4973, இந்நூல் பாகவத புராணம், இதிகாச பாகவதம், விண்டு பாகவதம் என்ற பெயர்களாலும் வழங்கும். நூல் முகப்பில் உள்ள கடவுள் வாழ்த்துப் பகுதி ஐந்தே பாடல்களைக் கொண்டது. முதலாவதான ’திருமால் வணக்கம்’ எண் இடாமல் தனிக்காப்புச் செய்யுளாகவே ஏட்டுப்படியில் உள்ளது. பின்னர் தொடர்வன சக முனிவர் வணக்கம், நூற்பெருமை, கலைமகள் வணக்கம், அவையடக்கம் என்பனவாகும். “இந்நூல் முழுவதும் கலைமகள் என் நாவிலிருந்து பாடிய காரணத்தால், அத்தேவியைப் போற்றி நான் ஒருதுதி சொன்னாலும் அஃது அவளே தன்னைப் பாடிக்கொண்டதாக முடியும்”[1] என்கின்றார்.

பூம டந்தை புணர்ந்தவன் மாக்கதை
நாம டந்தை நவின்றன ளாகலான்,
காம டந்தையென் றோர்கவி யான்சொலின்
பாம டந்தைதற் பாடிய தாகுமே

என்பது பாடல்.

நூற்பாகுபாட்டைத் தொகுத்துக் கூறும் பகுதியாகிய பதிகம் என்பது அடுத்து இருத்தற்குரியது. இஃது இந்நூலின் இறுதியில் உள்ளது. இதை இவர் பாயிரம் உரைத்தது என்று 33 பாடல்களுடைய தனி அத்தியாயமாக்கி அதன்பின் ’புராண அளவை உரைத்த அத்தியாயம்’ என்ற தலைப்பில் புராணங்கள் 18 என்றும் அவற்றின் சங்கியை இன்னதென்றும் கூறி,

இந்த நூலின் இசைத்ததென் காரணம் என்னில்
அந்தமாதி மற்று இடையிலும் ஞானமாம் அதனால்
சிந்தை சேரும் வெந்துயர் தவிர்த்திட இதுதெரிந்தான்

என்று சொல்லி புராண படனப் புண்ணியப் பயன் சொல்லி முடிக்கின்றார்.

இக்காலத்தில் எழுந்த பெரும் புராணங்களில் உள்ளது போல இவரும் காலஅளவு, உலகளவு (நாவலந்தீவு, ஏழு தீவு, சூரிய மண்டலம், மேலுலகு கீழுலகு, நரகம்) வருணாசிரமம் முதலான பொருள்களைப் பெருக்கிக் கூறுகிறார். பகவானுடைய வரலாறுகள் நிகழ்ந்த இடங்கள் பலவாதலால் நாட்டுப்படலம்,நகரப்படலம் என்ற பகுதிகளைத் தனியே விரிக்கவில்லை. வழக்கிழந்து போன பாக்களான காப்பியத்துறையும் வஞ்சித்துறை முதலாயினவும் இதனுள் பயில்கின்றன. பாகவத புராணம் வியாச முனிவரால் அவருடைய புதல்வரான சுக முனிவருக்குச் சொல்லப்பெற்றது. இவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொன்னார். இதைப் பிற்காலத்தில் சூத முனிவர் நைமிசாரண்ய முனிவர்களுக்குச் சொன்னார் என்பது வரலாறு.

நூற்பொருள்

இதனைக் கந்த வாரியாக விளக்கம் பெறுவதைக் காட்டுவோம். இதில் 12 கந்தம் அடக்கம்.

முதல் கந்தம்: இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. 'மாயவன் அம்சாவதாரம் உரைத்தது' என்பது முதல் அத்தியாயம். இதில் 22 அவதாரங்கள் கூறப்பெற்றுள்ளன. கவுமாரம், ஏனமாய் இருநிலம் எடுத்தான், 'மறைசொல் நாரதனாய் பாஞ்சராத்திரம் வகுத்தான், நரன்-நாராயணனாய் தவம் விரித்தான், கபிலனாய்த் தவம் உரைத்தான், தத்தாத்திரியனாய் பிரகலாதனுக்குத் தத்துவம் உரைத்தான், மகப்புருடன், விடபன், மீனுரு, கபடம், தன்வந்திரி, மோகினி,நரமடங்கல், வாமனன், பரசுராமன், வியாசன், தசரதராமன், பால்வண்ணராமன், கண்ணன், புத்தன், துரகமாய் எழுவான், புராண வரலாறு, தருமபுத்திரன் அரசு பெறுதல், கண்ணன் துவாரகை அடைதல், கண்ணன் துவரை கடைந்த அத்தியாயத்தில் கண்ணனைக் கண்ட ஆயமங்கையர் நிலை 40க்கு மேற்பட்ட பாடல்களால் விரிக்கப்பெறுதல் ஆகியவை அடங்கும். மேலும் 'ஆடவர் பெண்மையை அவாவும் தோள்’ என்பன போன்ற கம்பராமாயணத் தொடர்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கலிவிருத்தம் போன்ற சீர்குறைந்த பாடல்கள் காணப்பெறுகின்றன. பரீட்சித்து பிறத்தல், தருமன் முதலானோர் வீடுபேறு பெறுதல், பரீட்சித்து ஆட்சி, சாபம் ஏற்றல் ஆகியவையும் அடங்கும். இவன் சிறப்பை ஆசிரியர் உணர்த்தும் முறை கவனிக்கத்தக்கது.

தள்ளரும் கொடையினால் சார்ந்த அஞ்சிறைப்
புள்ளினுக்கு உயர்துலைப் புக்க வேந்துஇவன்;
எள்ளவில் அன்பினால் எறிந்த துரணெழும்
வள்ளுகிர் மடங்கலை வழுத்து தோன்றலே.
[வேந்து - சிபி, தோன்றல் - பிரகலாதன்]

மேதகு தயரத ராமன் மெய்ம்மையால்;
தீதகல் விசயன் வெஞ்சிலை யினால்இவன்;
ஏதமில் பொறுமையால் இனிய பார்மகள்;
ஒதிய தாய்உல குயிர்பு ரத்தலால்
[விசயன் - அர்ச்சுனன் பார்மகள் - பூமாதேவி]

இரண்டாம் கந்தம்: இது 3 அத்தியாயங்களைக் கொண்டது. சுகர் திருவாயினின்றும் தத்துவ அமுதம் சுரக்கின்றது. மாயவனிடத்து ஈடுபடாத கண், மூக்கு, கைகள், நா, தலை, உளம், கால், செவி என்பன பயனற்றவை என்று காட்டப் பெறுகின்றன.[2] இக்கந்தத்தின் முதற்பாடல் இது.

இறந்தொழிந் ததுவெங் கூற்றம்
என்றுளத் துணர்ந்தார் போலும்

அறந்தலை மணந்த செங்கோல்
ஐவர்பால் ஏழும் காப்ப
நறுந்துழாய் பகவன் தூது
நடந்ததாட் கமலப் போது
மறந்தனர் மாக்கள் வாளா
வருபகல் கழிகின் றாரே.

கையும் நாவும் பற்றி விளக்கும் பாடல்:

இடிகுரல் யானை வெண்கோடு
இறுத்தவன் இணைப்பெற் றாளின்
கடித்துனர் புனையாக் கைகள்
கையது கைக ளாமால்;
பொடித்தசெங் கதிர்போற் காந்தி
பொழிமணிச் சூட்ட ராவின்
நடித்தவன் நாமம் பாடா
நாவழங் காத நாவே.

என்பதாகும்.

மூன்றாம் கந்தம்: இது 9 அத்தியாயங்கள் கொண்டது. விதுரனுக்கு உத்தவர் கண்ணன் சரித்திரம் கூறுதல், மைத்திரேயர் விதுரனுக்குத் தத்துவம் உரைத்தல், பிரமன் தோற்றம், காள அளவு, சனகாதியர் தோற்றம், வராக அவதாரம், தேவர் தோற்றம், கபிலர் பிறப்பு. கபிலர் தத்துவம் உரைத்தது (சாங்கிய நூல்), சுகமுனிதத்துவம் உரைத்தது (9:3), விதுரர்க்குத் தத்துவம் உரைத்தது (3:2) போன்ற அத்தியாயங்கள் தத்துவங்களின் தோற்றம், இயல்பு முதலியன கூறும் சமயப் பகுதிகளாகும்.

நான்காம் கந்தம்: இதில் 6 அத்தியாயங்கள் உள்ளன. மரீசி முதலியோர் படைப்பு, தக்கயாக சங்காரம்; தக்கயாக சங்காரத்தில் போர் வருணனையைக் காணலாம். இங்கு சிவபெருமானின் சிறப்புகள் மிகஅழகாகவும் சுவைபடவும் நுவலப்பெற்றுள்ளன. அதனுள் முருகன் அவதாரமும் அழகாக அமைந்துள்ளது. துருவன், பிருது மன்னன் முதலியோர் வரலாற்றில் இரண்டு பாடல்கள்: துருவன் திருமாலைக் காண்கின்றான்.

மண்டலம் நிறைந்த திங்கள்
வதனமும் கமலக் கண்ணும்
குண்டலம் சுடரும் காதும்
குறுநகைப் பவள வாயும்
தண்துழாய் அலங்கல் மார்பும்
தடக்கையோர் நான்கு மாகக்
காண்டனன் மறையும் காணாக்
கரியவன் உருவம் அம்மா.
வானே, வளியே, வயங்கொளியே,
வனமே, மண்ணே, இவ்வைந்தின்
ஊனே, உயிரே, உயிர்க்குயிரே,
உன்னும் உறுவர் உளத்தூறும்
தேனே, நங்கள் பெருவாழ்வே,
சிவனே, அயனே, இருவருக்கும்
கோனே, நின்னைக் குணமில்லேன்
குறித்தேன் சொல்லிப் பழிச்சுக்கோ?

ஐந்தாம் கந்தம்: இது 8 அத்தியாயங்கள் கொண்டது. பிரியவிரதன் மரபு, பரதன் வரலாறு, நாவலந்தீவு, கங்கையில் பிதிர்க்கடன் செய்வதால் வரும் நற்பயனைக் கூறும் பாடல் (1233);

புலங்கொள் சங்கம்வை கங்கதம்
பொருந்திய நாகம்
நலங்கொ ணாரத முதலிய
நல்வரைக் குலங்கள்
துலங்கு மேருவின் சுற்றிலும்
கமழுமால், துகள்தீர்த்து
இலங்கு நற்பொருட் டருகுசூழ்
கேசர மெனவே

பிற தீவுகள், கடல், சூரிய மண்டலம், மேலுலகு, கீழுலகு, நரக இயல்புகள் இவை பற்றிய செய்திகளும் காணலாம்.

ஆறாம் கந்தம்: 9 அத்தியாயங்கள் கொண்டது. அசாமிளன், தக்கன், விசுவரூபன் வரலாறுகள் விவரிக்கப் பெற்றுள்ளன. அசாமிளன் கதையில் 'நாராயண'என்ற நாலெழுத்தின் பெருமையைப் பல பாடல்கள் பகர்கின்றன. அவற்றுள்,

பத்திசெய் தாயினும் பகைசெய் தாயினும் வித்தக னொருவன்பேர் விளம்பற் காயினும் ஒத்துநா ராயணா எனஉ ரைப்பரேல் கொத்துவெம் பாதகங் குலைந்து நீங்குமே.

தும்மினும் இருமினும் துயர மிக்குளம் விம்மினும் வீழினும் வினைசெய் போதிலும் அம்மஇன் நாலெழுத் தறைவ ரேல்,அவர்

செம்மலர் மால்பதம் சேர்தல் திண்ணமே.

இவை இரண்டு பாடல்கள். இந்திரன், விசுவரூபன் உபதேசித்த 'நாராயண கவசம்’ தாங்கியமையால் (செயித்தமையால்) அவுணரோடு செய்த போரில் வெற்றி பெற்றான். நாராயண கவசம் ஒரு தனி அத்தியாயம்; கவசம் மட்டும் 26 பாடல்கள். நாராயணனுடைய வடிவங்கள், உறுப்புகள் ஒவ்வொன்றும் காக்க என்று சொல்வது; அடியிற்கண்ட இரண்டு பாடல்கள் எடுத்துக் காட்டுகள்.

புகழ்பெறு மீனுரு வெடுத்த புங்கவன் அகமகிழ் தந்துநீ ரடைந்து காக்க;இச் சகமிசை வாமனன் சார்ந்து காக்க;வேர்

மிகுநிலம் அளந்தமால் விகம்பிற் காக்கவே.

பன்னிய வரைமுதற் பலஅ ரண்களில்
துன்னுவெம் சமத்திடைத் தோன்ற லுற்றுமுன்
மன்னுவெம் கனகனை மாய்த்த மைந்துடை
நன்னலம் சேர்தர மடங்கல் காக்கவே.

பின்னர் இந்திரன், விருத்திரன் முதலியோரை அழித்தல், அந்த பிரமகத்தியைப் போக்கியது, சித்திரகேது, மருத்துகள் ஆகிய வரலாறுகள் தொடர்கின்றன.

ஏழாம் கந்தம்: 4அத்தியாயங்கள் கொண்டது.இது. சிசுபாலன் வீடுபேறு, இரணிய வதம், இரணிய வதத்தின் பின்னர் பிரகலாதன் துதி 10 பாடல்கள் அமைகின்றன. அவற்றுள்,

விழைவற வெறிந்தார் நாடும்
விழுப்பெருஞ் சுடரே, தூய
பழமறைக் கொழுந்தே, பச்சைப்
பசும்புயல் வண்ணா, நின்னை
வழிபடு மன்பே யன்றி
வரமெவன் பெறுவ தென்னாத்
தொழுதனன் வழுத்த லுற்றான்,
தூயபே ரறிஞ னம்மா.
பூவுறை மணம்போ லெல்லாப்
பொருளிது முறைவாய், நின்பொன்
சேவடி தொழுது போற்றார்
தேவரே யேனும் நீசர்
ஆவர்;பொல் லாத நீச
ராயினும் வணங்கி நின்சீர்
நாவினால் வழுத்தில் தேவ
நாயகர் நாத ராவார்.

என்பவை இரண்டு பாடல்கள். தொடர்ந்து வருணாசிரமம், இல்லற இயல்பு இயம்பப் பெறுகின்றன.


25

எட்டாம் கந்தம்: இது 8 அத்தியாயங்கள் கொண்டது. மனுகசேந்திரன் பற்றிய வரலாறுகள் தொடங்குகின்றன. கசேந்திரன் வரலாற்றில் யமகம், திரிபு அமைந்த பாடல்கள் அதிகம். பாற்கடல் கடைந்தது, தேவாசுரப் போர், மோகினி உருக்காட்டியது, வைவச்சுதன், வாமனாவதார வரலாறுகள் தொடர்கின்றன. வாமனாவதாரப் பாடல்களின் யாப்பு கம்ப ராமாயணத்தில் இதே பகுதியை நினைவூட்டும். அடுத்து வருவது மச்சாவதார வரலாறு. இதில் மோகினியைப் பற்றிக் கூறியவிடத்து கனலுமிழ் கணிச்சியான் கூறியபடி புருடோத்தமன் மோகினி வடிவம் எடுப்பதை 12 பாடல்கள் விவரிக்கின்றன. மோகினியைக் கண்டு பிஞ்ஞகன் மயங்குகின்றான் என்பதையும் சுவைபட அமைக்கின்றார் ஆசிரியர். மாயோன் பிழிந்து கொள்வனைய சொல்லிப் பெண்ணுருவெடுத்து நின்றான்';

பிறையும் வில்லுமொத் திலகிய
திருநுதற் பேதை
அறையும் வண்டிமிர் அணிமலர்த்
தடஞ்சினை தோலும்
நிறையு மாற்றரு மாதர்மீ
தூரமுக் கண்ணன்,
இறையும் நாணிலன்; பின்செலும்
இருங்களி றேய்ப்ப,
நெறிந்து நெய்கனி குழலுமை
நகுவது நினையான்
பொறுத்த கங்கையாள் புன்னகை
காட்டலும் கருதான்,
அறற்க ருங்குழல் பற்றினன்
அங்கையாற் றழுவ,
எறிக்கும் சேயிழை மின்னெனக்
கைப்படா திலகும்,

இவற்றை அடுத்து வருவது கவிஞர் கூற்று:

கொன்றை சூடும் குழகனும் இவ்வகை
ஒன்று காமம் உழந்தனன் என்னின்,யார்
வென்றி வேல்விழி யார்மயில் வெல்பவர்?

என்று வேந்துக் கிருந்தவன் ஓதினான்

என்பது காண்க.

ஒன்பதாம் கந்தம்: இதில் அடங்கியவை 18 அத்தியாயங்கள். சிவன், சையாதி, அம்பரீடன், இக்குவாகு, அரிச்சந்திரன், சகரன், பகீரதன், கன்மாடயாதன் இவர்களின் வரலாறுகள் வருகின்றன. அடுத்து இராமாவதாரமும், இராமன் தன்னுடைய அடிச்சோதிக்கெழுந்தருளிய வரலாறும், இராமாயணம் முழுமையும் 137 பாடல்களால் அமைகின்றன; தொடர்ந்து 16 பாடல்களில் உத்தர காண்டம் அமைகின்றது. நூல் கண்ணன் வரலாற்றை விரிப்பதாக அமைவதால் பிறவற்றின் விரிவுக்கு இவண் இடம் இல்லை. பின்னர் நிமி, சந்திரன், பரசுராம விசுவாமித்திரர், யயாதி, பூரு, சந்தனு, அனுமரபு, எதுமரபு ஆகியவை அமைகின்றன.

பத்தாம் கந்தம்: 54 அத்தியாயங்கள் கொண்டது. அனைத்துக் கந்தங்களிலும் பெரியது இது; 1682 பாடல்களைக் கொண்டது. இப்பகுதி கண்ணன் திருவவதாரம் முதல் கண்ணனுடைய இறுதிக் காலத்தில் துருவாசர் சாபத்தினால் யாதவர்கள் தங்கள் முடிவுக்குக் காரணமான இருப்புலக்கை பெறுகிற வரையில் உள்ள கிருட்டிணாவதாரக் கதையை விரித்துச் சொல்கிறது.கண்ணனுடைய பால விளையாட்டுகள் யாவும் தனித்தனி அத்தியாயமாக விரித்துப் பேசப்பெறுகின்றன. நூலுக்கு அமைந்த 'பாகவதம்' என்ற பெயரே இந்தக் கந்தத்தை வைத்தே வந்ததாகும். தேவகி கருவில் திருமால் தங்குகிறான். தேவகி திருவயிறு அந்த ஆலிலை போலும் உள்ளதாக நினைத்து வந்தனன் போலும். பூதனையின் பாலை அருந்த அவள் வீடுபேறு அடைகின்றாள். சகடத்தை உதைத்து சாக அடிக்கிறான். மண் அருந்தின கண்ணனை யசோதை வந்து பார்க்க, அவள் காண்பது என்ன? :'நங்காய்மண் அருந்தினன்நின் மதலை' என

'இல்லை'என நவின்றா னாக
கொங்கார்ந்த செழுங்கமலக் கோற்றொடிகை
பற்றினள்,வாய் காட்டு கென்ன,
அங்காந்த மணிவண்ணன் அம்பவளத்
துவர்வாயி னழகு காணும்
செங்காந்தள் முகிழ்விரலந் தீங்கிளவி
உலகனைத்தும் தெரியக் கண்டாள்
விண்கண்டாள் விண்வளைக்கும் வெங்கதிருந்
தண்கடரும் விளங்கக் கண்டாள்;
மண்கண்டாள், மண்வளைந்த மாகடலும்
மேருயர்மால் வரையும் கண்டாள்;
தண்கொண்ட வெண்கோட்டுத் தவளநெடு
வளங்கண்டாள், தளையும் கண்டாள்;
பண்கொண்ட வண்டரற்றும் பழந்துளவோன்
இவன்எனவே பரவி னாளால்,
முருகொழுகு முகிழ்விரியும் மொய்துளவோன்
மாயையினான் மறைத்த லோடும்
பருகுவனள் போனோக்கிப் பழுத்தொழுகும்
அன்பினளாய்ப் பராவி அன்னை
பொருகளிறு வருக,வளர் போரேறு
வருக,எழிற் பூவை வண்ண!
வருகவெனத் துகரில்விளை மணிமுத்தங்
கொண்டனள்,உண் மகிழ்வு பூத்தாள்

அற்புதமான பாடல்கள். பாலகிருட்டிணனின் காட்சி உள்ளத்தைத் தொடுகின்றது.[3] இன்னும் பல காட்சிகள்;மருதிடைத் தவழ்கின்றான். மலரவன் கவர்ந்த சிறார்களையும் கன்றுகளையும் மீட்கின்றான். காளிங்கன் மீது நடனம் ஆடுகின்றான். வேய்ங்குழல் இசைக்கின்றான்.[4] கோவர்த்தனகிரி எடுக்கின்றான்.[5] கோபியரை மணிக்கின்றான். ஆசிரியரான சாந்தீபினி முனிவரின் மைந்தனை மீட்டுத் தருகின்றான்.[6] சத்தவனைக் கோகுலத்திலும் அக்ரூரனை அத்தினாபுரத்திலும் விடுத்து, சராசந்தனை வதைக்கின்றான். முசுகுந்தனுக்கு அருள் புரிகின்றான். உருக்குமினி திருமணம் நடைபெறுகின்றது. பிரத்யும்நன் பிறக்கின்றான். சத்தியபாமை திருமணமும் நடைபெறுகின்றது. சததன்னு வதம், காளிந்தி மணம், பின்னும் பலர் மணங்கள், நரகாசுர வதம், பிரத்யும்நன், அநிருத்தன் மணங்கள்,நிருதனுக்கு அருள் புரிதல், பலராமன் கோகுலம் அடைதல், பவுண்ட்ரன் வதம், சாம்பன் மணம், பதினாயிரம் கோபியரோடு விளையாடல், தருமபுத்திரன் செய்த இராசசூய யாக முடிவில் அக்கிர பூசை யாருக்குச் செய்வதென சிந்திக்கும்போது கண்ணனே அக்கிர பூசைக்குரியவன் என்று சகதேவன் துணிந்துரைத்தல்:

பூப்பவன் றானும் பூவாப்
பொழிலெலாம் பூத்து நின்ற
காப்பவன் றானும் ஊழிக்
கடையினிற் கனலும் தீயால்
தீப்பவன் றானும் ஆயர்
தேமொழி மாதர் கொங்கை
கூப்பிடத் தூசு வாரிக்
குளிர்மரத் திவர்ந்த கோவே

உடலெலாம் கண்ண னன்றி
யொன்றிலை உணருங் காலை
கவலமா மயிலெ ருத்திற்
கவின்கனிந் தொழுகு மேனி
மலர்துழாய் அலங்கல் மாலை
மாயனுக் காற்று பூசை
அலர்தலை யுலகுக் கெல்லாம்
ஆற்றிய பூசை யாமால்

என்ற பாடல்களால் சகாதேவனின் துணிவினைக் காணலாம்.

சகாதேவன் உரைத்த மாற்றத்தைப் பொறாது போருக்கெழுந்த சிசுபாலனைக் கண்ணன் கொல்லுகிறான். சாலுவன் வதம், தந்தவக்கிரன் வதம் ஆகியவை தொடர்கின்றன.

பலராமன் தீர்த்த யாத்திரை பகரப் பெறுகின்றது.[7] இங்கு இவர் பல இடங்களைச் சுட்டியுரைக்கின்றார்.

தெண்டிரை நிலத்தொரு
திலக மாகிய
தண்டமிழ் நாட்டகம்
சார்ந்திட் டானரோ

என்பதால் இது பெறப்படும். பெண்ணை, பம்பை இவற்றில் தீர்த்தமாடிய பிறகு முருக வழிபாடு கூறப் பெறுகின்றது. சயிலம் பணிந்த பிறகு, தமிழ்நாடு, வேங்கடமலை, காஞ்சி, துளவப் படலை தாழ்மார்பன் கண்வளர் கோயில் (திருவரங்கம்), காவிரி, சிலம்பாரொழுது பூஞ்சோலை (திருமாலிருஞ்சோலை மலை), மதுரை வளநகர், வடித்த தீந்தமிழ் தண்துறைதொறும் மணக்கும் வையை, சேது, குலாசலம், (பொதியில்), பொருநை, கன்னியந்துறை (குமரி), திருவனந்தபுரம், யதுகிரி[8] கோகன்னம் ஆகிய தலங்களும் நதிகளும் குறிப்பிடப் பெறுகின்றன. குசேலருக்கு அருள் புரிகின்றான்.இருபது பாடல்களில் மிகச் சுருக்கமாக குசேலருடைய பக்திப்பெருக்கு காட்டப் பெற்றுள்ளது.[9] குசேலன் நம்மைப்போல் செல்வ நாட்டம் உடையவன் அல்லன். இல்லக்கிழத்தி ஏவக் கண்ணனை நாடி வந்தான் எனக் கருதிய கண்ணன் அவன் அன்புடன் கொணர்ந்த 'அவலை' எடுத்து வாயில் இட்டுக் கொள்கின்றான். ஒருமுறை எடுத்தவுடன் குசேலரின் இல்லத்தில் இந்திரச் செல்வம் நிறைகின்றது; இரண்டாம் முறை எடுக்கும்போது உருக்குமினணி தடுத்து விடுகின்றார். கையில் செல்வம் எதுவும் தராமையால், 'பொருள் கொடுப்பின் இவன் தன்னை மறந்துவிடுவதற்கு ஏதுவாகுமென்று கண்ணன் தரவில்லை போலும் என்று குசேலன் கருதி அமைதியுடன் வெறுங்கையுடன் திரும்புகின்றான்.

அம்ம உய்ந்தனம் உய்ந்தனம்
அரும்பொருள் எய்தின்
மம்மர் கூர்தர மறக்குவன்
நமையென மதித்தே
மும்மை சாலுல களித்தருள்
முளரியஞ் செங்கட்
செம்மல் நல்கலன் செல்வமென்
றுவந்தனன் சென்றான்

என்ற பாடல் இதனைக் காட்டுகின்றது.

சமந்த பஞ்சகம் செல்லல், இறந்த குழந்தைகளை மீட்டல், சுபத்திரையை அர்ச்சுனன் மணத்தல், சனந்தனர் சனகாதி முனிவர்க்குச் சுருதி கீதையுரைத்தல் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

சுருதி கீதையின் சாரம்:

பகைத்து நாடுநர் பற்றுமாறு அற்றுணை
அகத்து நாடுத ராய விருவரும்
நிகர்த்துன் சேவடி நீள்வந் துற்றனர்
மிகுந்த நின்னிலை உள்ளவல் லேகொலோ.

என்பது. விருத்திராகரன் வதம், பிருகு முனி சென்றது, மறைந்த குழந்தைகளை அந்தணனுக்கு மீட்டுத் தந்தது, புனல் விளையாட்டு என்ற பகுதிகளோடு பத்தாம் கந்தம் முடிகின்றது. புனல் விளையாட்டு சண்டையில் முடிந்து யாதவர் மடிவது பின்னர் விரிக்கப்பெறும். {அடுத்த கந்தத்தில்

பதினோராம் கந்தம்: 18 அத்தியாயங்கள் கொண்டது. யாதவன் சாம்பன் உலக்கை பெறுதல், வசுதேவர்க்கு நாரதர் உலக நிலையாமையையும், கண்ணனின் தத்துவமும் உரைத்தல் பகுதிகள் அமைகின்றன.பின் பல அத்தியாயங்கள் ஞானப்பகுதி வருணாசிரமம், இயமநியமம், பூசனை என்பன அமைகின்றன.கண்ணன் தன்னுடைய அடிச்சோதிக்கு எழுந்தருளிய செய்தியுடன் இந்தக் கந்தம் நிறைவு பெறுகின்றது. கண்ணன் போனபின் துவாரகையைக் கடல் கொண்டது.

கருமுகி வனையஅக் கண்ணன் பின்தொடர்ந்து
இருவிகம் பேகிய விசையும் மெய்ம்மையும்
தருமமும் பொறுமையும் தவமும் தானமும்
மருவின. தவணியின் மறஞ்செய் வெங்கலி,

காலமும் பிறிவொரு கலப்பு மற்றுயர்
சீலமு மானவன் செய்கை இந்திர
சாலமும் அவைக்களஞ் சான்ற கூத்தினர்
கோலமும் அல்லதென் கூறல் வேண்டுமால்.

பன்னிரண்டாம் கந்தம் 10 அத்தியாயங்கள் கொண்டது. கலி தன்மம் உரைத்தல், கற்கியவதாரம், பிரளயம், பரீட்சித்து வீடுபேறு அடைதல், சனமேசயன் சர்ப்பவேள்வி செய்தல்,வேதம் நான்கு என்ற பகுப்பு - ஆகியவை அடக்கம். மார்க்கண்டேயர் தவம் செய்து திருமாலை வேண்ட சிவபிரான் தோன்றி மாயனும் நாமும் வேறல்ல என்று வரங்கொடுக்கிறார். பின் சூரிய துதி வருகிறது. இறுதியில் தொடக்கத்தில் சொல்லியவாறு பாயிரம் உரைத்தது என்னும் பதிகப் பகுதியும் புராணங்களின் அளவும் கூறப்பெறுகின்றன. நூலின் இறுதிப் பாடலில் ஆசிரியர்நூல் கற்போருக்கு வாழ்த்து கூறுகின்றார்.

கனைத்துவண் டிமிர்துழாய்க்
கண்ணன் மாக்கதை
மனத்துற வழங்குநர்
மகிழ்ந்து கேட்குநர்
வினைத்திருக் கற்றுறு
மெய்ம்மை யாதியா
நினைத்தன பெற்றிவண்
நீடு வாழியே.

என்பது காண்க

செவ்வைச் சூடுவார் சிறந்த பக்தியோடும் புலமையோடும் புராணத்தை நடத்திக்கொண்டு செல்கிறார். அலங்காரங்களிலோ வருணனைகளிலோ, காவியச் சுவை வேண்டும் என்பதிலோ இவர் தம் கருத்தைச் செலுத்தவில்லை. இவர் கூறும் கதைகளும் வரலாற்று முறையில் இல்லை. ஆங்காங்கு முனிவர்கள் வினாவ, சூதர் சொல்லுவதாகக் கதைகளை அமைத்துள்ளார். அவதாரங்கள் வைப்பு முறையைப் பார்த்தால் இது விளங்கும். முதல் அவதாரமாகிய மச்சாவதாரம் இறுதியில் வருகிறது. பிற யாவுமே இதற்கு முன்னர் சொல்லப் பெறுகின்றன.

திருமால் பக்தி இவரிடம் அழகாக விரிந்த சமயப் பொது நோக்காக அமைந்துள்ளது. நெறியாக அமையவில்லை.இந்த இயல்பை நூல் முழுதும் காணலாம். மோகினியுரு எடுத்த கதை இத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் தக்க யாகத்தின் அழிவு கூறிய இடத்தில் சிவ பரம்பொருள் என்ற தன்மைக்கு மாறுபடாமல் பாடுகிறார். பின்வரும் இரு பாடல்களிலும் காணத்தக்கது.

விரிசினை யால நீழல்
மெய்த்தவச் சனக னாதி
அருமறைக் கிழவர் சூழ
அமர்ந்தவா னந்த ரூபத்
தொருமுத லவனைக் காணா
உவந்தனர் அமரர் தாழ்ந்தார்
மரைமலர்ப் பொருட்டு வாழும்
மறையவன் வழுத்தி னானால்,

ஆவயி னாரன் மீனோர்
அறுவர்வத் தன்பு முற்றித்
தீவிய முலைப்பா லூட்டத்
திருமுகம் ஆறு கொண்டு
மேவிய மடவார் கொம்மை
வெம்முலை யொருங்கு மாந்தி
மூவிரு முகனென் றெல்லா
உலகமும் மொழிய நின்றான்.

மார்க்கண்டேயன் தவம் உரைத்த இடத்தும் சிவபிரான் தமக்கும் மாயனுக்கும் வேறுபாடு இல்லை என்று கூறுவதாக இவர் பாடுவதும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

காலம்: 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் (1500-1525)


  1. நம்மாழ்வாரும்,
    என்சொல்லால் யான்சொன்ன
    இன்கவி என்பித்துத்
    தன்சொல்லால் தான்தன்னைக்
    கீர்த்தித்த மாயன் (திருவாய் 7.9.2)
    என்று கூறியுள்ளதை ஈண்டு நினைத்தல் தகும்.

  2. 3 அப்பர் அடிகளின் திருஅங்கமாலை (4.9) ஈண்டு நினைவு கூர்ந்து மகிழத்தக்கது.உடலுறுப்புகள் யாவும் இறைவனைத் தொழுவதற்காகவே என்ற கருத்து எல்லா அருளாளர்களிடமும் காணப்படுகிறது.
  3. 4 குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி'யிலுள்ளதேவகி புலம்பல் (7)என்பதிலுள்ள பாசுரங்களை ஒப்புநோக்கி மகிழ்தல் தகும்.
  4. 5 பெரியாழ்வார் திருமொழி - 'கண்ணன் குழல் ஊதல்'(3.6) நினைவிற்கு வருகின்றது.
  5. 6 மேலது. 'கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை' (3.5) நினைந்து மகிழ்த்தக்கது.
  6. 7 பெரியாழ்வார் திருமொழி 4.81-ல் வரும் கதை
  7. 8 வில்லிபாரதத்தில் பார்த்தனின் தீர்த்த யாத்திரைபகரப் பெறுவதுபோல, இங்கும் தமிழகத்தின் சுற்றுலா போல் காட்டப் பெறுகின்றது. பல்வேறு இடங்கள் சுட்டி விளக்கப் பெறுகின்றன.
  8. 9. யதுகிரி - திருநாராயணபுரம். இதுபற்றிய பாடல் (4102) ஏட்டில் இல்லை என்பது பதிப்பாளர் குறிப்பு.
  9. 10 இந்த இருபது பாடல்களே பின்னால் 'குசேலாபாக்கியானம்' பாடுவதற்கு கைகொடுத்து உதவியுள்ளன.