வைணவ புராணங்கள்/(3) திருக்குருகை மான்மியம்.

விக்கிமூலம் இலிருந்து

(3) திருக்குருகை மான்மியம்

ஆசிரியர்: இதன் ஆசிரியர் திருக்குருகைப் பெருமான் கவிராயர் என்பவர். இவர் நம்மாழ்வார்பிறந்த ஆழ்வார்திருநகரி என்ற திருக்குருகையில் வேளாள மரபில் பிறந்த ஒரு பெரும் புலவர். இலக்கணத்தில் மிகவும் வல்லவர். இவர் யாப்பு, பொருள், அணி என்ற மூன்றுக்கும் உரிய இலக்கணங்களும் அவற்றுக்கு உதாரணச் செய்யுட்களும் பாடிப் பெருமை பெற்றவர். இவற்றையெல்லாம் நம்மாழ்வார் பெயரிலேயே பாடியுள்ளார். யாப்புக்கு இவர் பாடிய இலக்கணம் மாறன்பா-பாவினம்’ என்பது பொருளுக்கு மாறன் அகப்பொருள் ஆகும். அதற்கு எடுத்துக்காட்டாகத் 'திருப்பதிகக் கோவை' அணி இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக மாறன் அலங்காரம்'. இவை யாவும் அச்சு வாகனம் ஏறியவை. இவர் திருக்குருகை மான்மியம் என்ற பெயரில் ஒரு புராணம் செய்தார்.இது நம்மாழ்வாரின் அவதாரத்தலமாகிய திருக்குருகூருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.

நூலுக்கு முன்னுரையாக சில சொற்கள். பெருங்காவியமாகிய இது முழுமையாகக் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்து, பதிகம் என்ற உறுப்புகளுக்குப் பின் 28 சருக்கங்கள் இருந்தன என்று உ.வே.சா. ஐயரவர்களின் ஏட்டுப்படியொன்றில் குறிப்பிடப்பெற்றுள்ளது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்ப் பத்திரிகைப் பிரசுரமாக இதன் பகுதி 1938 வரை பல ஆண்டுகள் வெளிவந்து 574 பக்கங்களில் முடிவடைந்தது. ஐயரவர்கள் உதவிய ஒரு கைப்படியில் 26-ஆம் சருக்கம் 33-ஆம் செய்யுள் வரையிருந்தது. பின் மாமணவாள ரங்காச்சாரியார் 83-88 பாடல்களைப் படியெடுத்துத் தொடுத்து அச்சருக்கம் முழுமை அடைந்தது. அடுத்த இரு சருக்கங்கள் மாறன் திருவவதாரச் சருக்கம், மவுன நீங்கு சருக்கங்கள் என்றும், மொத்தம் 3030 பாடல்கள் என்றும், ஐயரவர்களின் ஏட்டுப்பட்டியின் முகப்பேட்டில் கூறப்பெற்றுள்ளது. ஆனால் 26 வரம் பெறு சருக்கம் வரை பாடல்கள் 2621 மட்டுமே அச்சாயின. பின்னால் மாறன் திருஅவதாரச் சருக்கம் என்ற தலைப்பில் 48 பாடல்கள் அச்சாயின. ஆனால் இப்பகுதி மட்டும் தனியாக மாறன் திருவவதாரச் சரிதை' என்ற பெயரில் தனி வரலாறாகவும் ஏடுகளில் காணப் பெறுகின்றது.

அவையடக்கமாகக் கூறும்போது தமிழின் ஐந்திலக் கணங்களையும் குறிப்பிடுகின்றார். சிறப்பான அகப்பொருள் நூலும் மாறன் அலங்காரமாகிய அலங்காரங்களுக்கும் இவர் செய்துள்ளமையும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைத்தே
வழுத்தும் அஞ்சதி காரமும் ஆசறுத் தறியேன்
பழுத்த பாவலர் பாதக மலமென் முடிமேல்
அழுத்துநன்னெறி யாசறக் கற்றதே அறிவேன்

இம்மான்மியத்தைப் பராசர முனிவர் தம் புதல்வர் வியாச முனிவருக்குக் கூற அவர் சுகருக்குச் சொன்னார். இவ்வாறு அந்த வடமொழி நூலை, தமக்கு ஆதிநாத பட்டர் மொழிபெயர்த்துக் கூற, அதனைக் கொண்டு தாம் தமிழில் பாடியதாக இவர் கூறுகிறார் (11) இதைத் தமிழில் கூறிய புலமையால், சடையன் என்ற பெயருடைய தாம் திருக் 'குருகைப் பெருமாள் கவிராயர்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

இருக்குமுதற் பனுவலினால் இயற்றமிழ்தேர்
நாவீறன் என்னும் மேன்மை
அருட்புயலைப் புகழ்புலமைத் திருக்குருகைப்
பெருமாள்பே ரன்பு கூறும்
தருக்குலவும் பொழிற்குருகா புரிவணிகன்
சடையனிதைத் தமிழாற் சாற்றித்
திருக்குருகைப் பெருமாள்வண் கவிராசன்
எனப்புனைபேர் சிறந்த தன்றே

என்றது காண்க. அடுத்த பாடல் அரங்கேற்றிய காலம் கொல்லம் 723 (கி.பி. 1548) என்று கூறும்.

அறந்திகழாண் டவைஎழுநூற் றிருபான் மூன்றில்
அணிகிளர்காரத் திகைமாத மெட்டில் வாழ்வு

சிறந்திடுதிங் களினாளுத் தரத்தில் ஏகா
தெசிமகா முகுந்தமிவை திருத்த முற்றத்
துறந்தவரெண் மகிழ்மாறர் திருமுன் னாதிச்
சுருதியுடன் மிகுதியுஞ்சொற் றமிழின் வாய்மை
பிறந்தபெருங் காப்பியமும் தெரிந்தோர் கேட்கும்
பெற்றியுடன் அரங்கேற்றப் பெற்ற தன்றே.

என்றது காண்க.

பதிகம் எனத்தக்க ஏழு பாடல்களும் இதன்பின் உள்ளன. பொதுவாய் எல்லாப்புராணங்களும், பின்னால் உள்ள சருக்கங்களின் பெயரை ஒன்று விடாமல் நிரலே பதிகத்தில் கூறும் மரபு உண்டு. ஆனால் இப்பதிகம் அவ்வாறு அமையவில்லை. சருக்கங்கள் பல சொல்லப் பெறவில்லை. சொன்னவையும் முறையாக அமையவில்லை. இறுதிஇரு பாடல்களில் நாம் காரியார் சேயாய், நம்மை நாம் புகழ்வான் வருகுவம் என நவின்று, எம்மையாண்டவன் புகழ்ச் சடகோபனாகி, வேதம் நாலையும் நால்வகைப் பனுவலாய் விரித்தவாய டையும் புகல்வாம்’ என்கின்றார்.

நூல்: நூல் வாழ்த்தோடு தொடங்குகின்றது. வாழ்த்து’ என்ற பாடல் கடவுள் வணக்கத்துக்குப் புறம்பாகத் தொடக்கத்தில் காணப் பெறுகின்றது.

வாழி வாழிகா னிலமும்மும்
மாரியின் வளனும்
வாழி வாழிஇல் லாமும்நல்
லாற்பெரு வனப்பும்
வாழி வாழிநா லாயிரப்
பனுவல்நான் மறைநூல்
வாழி வாழிசீ பராங்குச
ஆணை வைகலுமே.

கடவுள் வாழ்த்துப் பகுதி இரண்டே பாடல்கள். முதற் பாடல் திருமால் காப்பு.’ இரண்டாம் பாடல் குரு வணக்கம். காப்புச் செய்யுளில் முத்தொழில் செய்யும் மூவரையும் குறிப்பிடுகின்றார். 

பூத்தா தாமரையயன் படைக்கப் பொற்புடைக்
கூத்த னாகியசிவன் துடைக்கும் கொள்கைசேர்
ஏத்துநற் கரியபல் லுலகை இன்புறக்
காத்தமால் குருகைமான் மியத்தைக் காக்கவே

இவ்வாறு மூவரையும் குறிப்பிடுதல் இவரது சமரச மனப்பான்மையைக் காட்டுகிற ஒரு நல்லியல்பு, பின்னரும் 'பரகபாணியனும் அயனுமாம் சொரூபம் பயின்ற கேசவன்' (293) என்று கூறுவர். தம் குருநாதரை 'ஆரியனென எதிர்த்து அரிய பேதைமையும் நீக்கியோன்' (3) என்று குறிப்பிடுவர். பதிகம் என்ற பகுதி கடவுள் வாழ்த்தின் பின் 17 பாடல்கள் கொண்டது. எனினும் இதன் முதல் 10 பாடல்கள் காப்புடன் சேர்ந்து பாயிரம் என்னத் தக்கவை. இப்பகுதியின் முதல் பாடலில் இவர் சொல்லும் கருத்து, சைவ சமயத்தில் எங்கும் சொல்லப் பெறும் கருத்தையொத்துள்ளது.

பூவாகிநறு மணமாய்ப் பொன்னாகி யும்ஒளியாய்ப்
பாவாகியும் இசையாய்ப் பாலாகி யுஞ்சுவையாய்
மேவா ருயிர்க்குயிராய் வேறுவே றாகிநின்ற
மூவா முழுமுதலின் மூத ரறிவாரே

இதனை, பின்வரும் சிவகாம சுந்தரி துதியுடன் ஒப்புநோக்கி உணர்க (வேறு புராணப் பாடல்):

சொற்பொருளும் உடலுயிரும் சுடரொளியும்
விரைமலரும் சுவையும் பாலும்
நிற்கும் நிலை எனத்தெளிந்து சிவத்தில்
அனன்னிய மாகி.

இவர்கூறும் அடியார் வணக்கம் சிறப்பானது.

கடியார் பசுந்துளவக் கார்மேனிச் செங்கண்
நெடியானை எட்டெழுத்தாய் நின்றானைப் புள்ளின்
கொடியானை என்னுளத்துட் கொண்டானை ஏத்தும்
அடியார் அடியார் அடியார் அடியேனே.

என்பது காண்க. இப்பகுதியில் பல பாடல்கள் குருகையில் உள்ள பொருநைத் துறையான சங்கணித் துறையை வருணிக்கின்றன. இவ்வாசிரியருடைய வருணனைகளில், ஒரே அமைப்புடைய எளிய தொடரை வைத்துப் பல பாடல்களை அடுக்கி முடிப்பது ஒரு வழக்கம். 'விரசைமேற் கொள்வதுந் திடனாமே என்ற முடிவுடைய பாடல்கள் ஆறு பின் வருவது ஒன்று (120);

பூவின் மேற்கொளும் திருமகள்
கலந்தமெய்ப் பொருணாமம்
நாவின் மேற்கொளும் நாவலர்
நால்வகைத் தெனலாகும்
பாவின் மேற்கொளச் சங்கணித்
துறையெனப் பகர்ந்தாலத்
தேவு மேற்கொளும் விரசைமேற்
கொள்வதுந் திடனாமே.

என்பதில் இப்பண்பைக் காணலாம்.

'புறநகர் வாழ்த்து' என்ற அடுத்த சருக்கத்தில் உலகரயதன் வாமன், அருகன், புத்தன், நானே பிரமம் என்பான்’ ஆகிய சமயத்தாரைப் பல பாடல்களால் கண்டிக்கின்றார். 'நானே பிரமம்' என்பாரைக்கண்டிக்கும் பாடல்கள் நூலுள் பல உள்ளன.14 பாடல்களில் தசாவதாரங்களையும் போற்றியுள்ளார். மீனம், கமடம், கேழல், நாரசிங்கம், குறள், பரசுராமன், வென்றித் தனுராமன், பெலதேவன், கோபாலக்குழந்தை, துரகதமாந் தனிமுதல்வன் என கோபாலனுக்கு மட்டிலும் 5 பாடல்கள்; இப்படியே நூலுள் பிற இடங்களிலும் அவதாரங்களைச் சந்தர்ப்பம் நேர்ந்தபோதெல்லாம் போற்றியுரைப்பர். வானரங்களின் செயல்கள் மிகவும் அதிகமான பாடல்களில் (224-256) கூறப் பெறுகின்றன. பெண்களின் தன்மையை உரைக்கும்போது பெருங்காப்பியத் தன்மைக்கேற்ப, அவர்களின் கற்பிலக்கணம் அடுத்த சருக்கத்தில் 11 பாடல்களில் பகரப்பெறுகின்றது. வேளாளர், வணிகர், மள்ளர், வேதியர் தன்மைகள் முறையாகத் தொடர்ந்து பல பாடல்களில், முன்னுள்ள பேரிலக்கியங்களின் பொருளைத் தழுவியே எங்கும் பாடுவார்; கிள்ளைகள் வேதமும் தமிழும் பாடுகின்றனவாம். 

போத மேதகப் பூரணன் பூமகள்
நாத வானெனக் கண்டவர் மாளிகை
வேத வாய்மையும் மெய்த்தமிழ் வாய்மையும்
கீத வாய்மையும் கிள்ளை மிழற்றுமே (462)

அடுத்து, கோயில் வருணனை' என்ற சருக்கத்தில் ஒலியின் பிறப்பு என்று தொடங்கி, வாக்கு, எழுத்து, சொல், பொருள், அகம், புறம், வெண்பாமாலை, படலம், ஈராறு, யாப்பு,அலங்காரம், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பது முடியக் கூறி திருப்புளி வருணனையோடு நிறைவு செய்கின்றார். அடுத்த சருக்கத்தில் சந்தப் பாடல்களும் மடக்கும் அதிகமாக அமைத்துள்ளார்; நூலெங்குமே சந்திப் பாடல்களைக் காணலாம். பரமபத வருணனையில் பரமபதநாதன் அமைந்துள்ள தோற்றம் பத்துப் பாடல்களால் பாங்குற வருணிக்கப் பெறுகின்றது. அங்குள்ள மரங்களைக் கூறும்போது நான்கு பாடல்களில் அடைமொழி இல்லாமலே கூறுவது சுவைபட உள்ளது (719-722).

தில்லியம் பரிசாதம் தேவதாரம் மந்தாரம்
சல்லிய கரணிசாலி சந்தகில் ஒமைகாட
வல்லிமல் விகைஅசோகு வலம்புரி மாழை வாழை
நெல்லிவெண் நாவல்பூவை ஞாழல்ஏலந் தற்கோலம்,

மாதவி சூரல்வேரல் மராமரம் பலவுகொன்றை
சூதம்.ஆம் பிரம்பலாக தோன்றிலா தளைஇருப்பை
தாதகி நாளிகோந் தணக்கில வங்கங்கன்னல
கேதகை குல்லைமுல்லை கிஞ்சுக மால்லம்வில்வம்.


வன்னிகுற் குறுக்கொ ழுந்து
மகிழிரு வேரி வெள்ளில்
கன்னிகா ரங்கு ருந்து
கடுகநீ தகிசெ ருந்தில்



பன்னிபுன் னாகம் பூகம்
பாதிரி நமைவெட் பாலை
சன்மலி பகன்றை பூல்வேற்
காமரா விரைமஞ் சட்டி

கடம்புகா ரத்துத் தாலங்
களங்கருங் காலி சீந்தி
அடம்பர சாச்சா வெட்சி
அழிஞ்சில்சீ ரகம்உ ழிஞ்சில்
வடந்தரா எலுமிச் சிஞ்சி
அரிசன மாஞ்சி யென்றே
இடம்பயின் றனவா யேனை
யவற்றோடு மெண்ணின் றாயே.

அண்ட உற்பத்திச் சருக்கம், புராண லட்சணம் என்பதற்கேற்ப உலகத் தோற்றத்தை உரைக்கின்றது. நரகத்தைக் கூறுமிடத்து என்னென்ன பாவம் செய்தோர் நரகில் உழல்வார் என்பது 40 பாடல்களால் கூறப்பெறுகின்றது. அகம்பிரமம் என்பவரும் இத்தீவினையால் நரகத்தில் உள்ளனர்.

மிக முயன்று எழுதி வைத்த ஏடுகளைத் திருடுவோர், கற்றிடாததையும் கற்றதாய் மேற்கொண்டு உரைப்பவர், குருத்துரோகிகள், வயிற்றுக்காகக் கவிபாடி பின் கவிஞர்கள் என்று பெயர் வாங்கினோர் - இவர்கள் போன்றவரும் நரகில் உள்ளனர்.

கடவுளா மெனவே குரவரை மதித்துக்
களைகணாக் கற்றநூல் பனைமா
மடல்களிற் கரமு மெருத்தமும் பாடும்
வழுந்தவே கங்குலும் பகலும்
சுடர்நுதி வயிர ஆசியாற் பொறித்துத்
தொகுத்தபொத் தகங்களைக் கரவிற்
படரிரு ளிடைக்கன் னுவிற்கவர் பவராய்ப்
படுவழி படைத்தபா தகத்தோர் (987)


கற்றிடா ததையும் கற்றதாய் மேற்கொள்
கரவொடும் கவிசிறிதுரைப்பத்

துற்றுளார் முழுதுடை யம்யாம் அவற்றிற்

கொண்மையோம் எனஅவை அடக்கப்

பெற்றுளான் கழகத் துரைத்திடாப் படுபின்

பேணியே அவர்கள்பா லவற்றைத்

தெற்றென வுணர்ந்து கற்றிடா திடரே

செயத் துணிந் துழல்படி றுடையோர் (988)


கன்ன பரம்பரை முறையேஇ லக்கணமும்
இலக்கிய மும்கற் பிப்போர்கள்

சொன்ன வரும்பதங் களினைச்சிறைப் புறத்தும்

துன்னின ராய்த்துணிந்தா ராய்ந்த

பின்ன ரவைக்களத் தெரிந்துயி ணங்கினராய்

வாதுசெயப் பெற்ற காலை

இன்ன திதுவென விஃதென் றிறுமாந்தி

குருத்து ரோகிகளா மீனர் (990)


பொற்புடைச் செந்தமிழ் தெரிந்துசொன் னலமும்
பொருணல மும்புணர் வதாகச்

சிற்பரன் மேலுயிர்க் காக்கங் குறித்தறிஞர்

அணிபெறவே செறிந்த யாப்பை

அற்ப ரெனத்திரி நரர்தம் பேரினொடும்

ஊரினை வைத்தவி ழுக்காகத்

தற்கரப் புன்கவிக ளெனப்பிறர் சிரிப்பக்

கொடுந்துயிர்க் குத்தவறு பூண்டோர் (99)

என்ற நான்கு பாடல்களிலும் இச்செய்தியைக் காணலாம்.

'பிரமன் தோத்திரச் சருக்கம் என்ற அத்தியாயத்தில் பல துதிப்பாடல்கள் உறுப்புகள் பெற்ற பயன் இறைவனுக்கு ஆட்செய்வதே என்று பல உறுப்புகளையும் சுட்டிக் கூறுகின்றார். ஒரு பாடல்;

நாவார வேபுகழ்ந்து
நாராயணா நமவென்று
ஒவா உரையினொடுங்
கண்ணீ ரெம்நனைப்ப
காவார் மலர்பறித்துக்
கண்ணாகிநின் காற்கமலந்
துர்வாதார் கையினையும்
கையென்று சொல்வாரோ?[1]

அடுத்து இங்கு சித்திரகவிகள் பலவற்றையும் அமைத்துள்ளார். கொம்பும் காலும் ஒன்றும் இன்றி வந்த நிரோட்டகம், அதில் பிற வகைகள், மடக்குகள், வல்லினம், இடையினம், மெல்லினத்தால் வந்த பாடல்கள் முதலியன இங்குக் காணப்பெறும். திருவாராதனச் சருக்கம் திருமாலின் பூசைக் கிரியைகளை விரிவாகக் கூறுகின்றது. துணைப்படை வதைப்படு சருக்கம் என்பது போரின் வருணனை. மக்கள் செல்வம் பற்றிப் பெருங்கவிஞர் அனைவருமே பாடுகின்றனர். இவரும் பாடுகிறார் (2550);

மைந்தர் மூரல்வாய் முத்த
முண்ணாவாய் வாயோ
மைந்தர் சொற்கொளாச் செவிகளுஞ்
செவிகளோ, மழலை
மைந்தர் சீரடிச் சுவடுழா
மார்புமோர் மார்போ,
மைந்தர் காட்சி கண்டின்புறாக்
கண்களும் கண்மலரோ

நூலெங்கும் சந்தப் பாடல்கள் நிரம்ப அமைத்துள்ளார். இவர் அருணகிரியார் திருப்புகழை அதிகம் பயின்றவர் போலும். அதே அமைப்பில் பல இடத்தும் பாடல்களை அமைத்துள்ளார். 

பூதவிநோத நம்பி கோதமனார் மடந்தை

பூதல மேல்விழுந்த துயரேதீர்

பாதவிநோத நம்பிபூமகன் மேவுநம்பி

பார்மகண் மேவு நம்பி னுறவோர்சோ

வேதவிநோத நம்பி யாடகனி வாயுண்ட

வீரவிநோத நம்பி குழல்வாய்வேய்

நாதவிநோத நம்பிசீர் புகழ்வாய் மையன்பர்

நானில மீது வந்து பிறவாரே

(2600)


நீதிப்புராணமறை போதில் போதமவை

நேசித்த கேள்வியவை வழியாயே

சோதி சொருப ரூபத்த ராகியொளிர்

சோபைப் பொன் வீடுதனி . . . . .

னாதிப் பிரானெனவு மாழிப் பிரானெனவும்

ஆசைப் படாமலுன தடிபேணார்

சாதித்த தேவரடி பூசிப்பதா லுறுதி

சாதிப்ப தேதிவர்கள் அறியேனே

(2619)

என்பன காண்க.


  1. 27 சிலப்பதிகாரத்திலுள்ள நாவென்ன நாவே, செவியென்ன செவியே’
    என்று முடியும் பாடல்களை நினைக்கச் செய்கின்றது.