வ. வே. சு. ஐயர்/சுதந்திரத்திற்காக பட்டத்தைக் கைவிட்டார்!

விக்கிமூலம் இலிருந்து

சுதந்திரத்திற்காக பட்டத்தைக் கைவிட்டார்!

லண்டன் நகரம் சென்ற ஐயர் அங்கே உள்ள லிங்கன் சட்டக் கல்லூரியிலே சேர்ந்து படித்தார். அதற்கான தேர்வும் வந்தது. அதை எழுதிய ஐயர் வெற்றியும் பெற்று பாரிஸ்டரானார். ஆனால், அவரால் அந்தப் பாரிஸ்டர் பட்டத்தைப் பெற முடியவில்லை ஏன்?

பாரிஸ்டர் பட்டம் பெறுவோர் யாராக இருந்தாலும், அவர் பிரிட்டிஷ் அரசுக்குரிய ராஜவிசுவாசப் பிரமாணம் அதாவது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் பாரிஸ்டர் என்ற அந்த அடையாளப் பட்டமே வழங்கப்படும்.

ஆனால், வ.வே.சு. ஐயர் ஆங்கிலேயர் அரசுகுப் பரம விரோதி! பிரிட்டிஷ் மன்னரைத் தமது அரசராக ஏற்றுக் கொள்ள மறுப்பவர் மட்டுமன்று, வெள்ளையரின் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆணிவேரை இந்தியாவிலே அறுத்தெறிய அரும்பாடுபட்டு வருபவர்.

அத்தகைய அரசியல் பகையைத் தனது மனதிலே ஆழப் பதித்துக் கொண்டவர்; எப்படிப் பிரிட்டிஷ் அரசுக்கு ராஜ விசுவாசமாக நடப்பேன் என்று சொல்லுவார்? அதனால் வெள்ளையரிடம் விசுவாசமாக நடக்க முடியாது என்று அவர் பிரமாணம் எடுக்க மறுத்து விட்டார். பாரிஸ்டர் என்ற வயிற்றுப் பிழைப்புக்குரிய பட்டத்தை விட எனது நாட்டின் சுதந்திர மானம்தான் பெரியது என்று மதித்தார். அதனால், பட்டம் பெறுவதை விட எனது தாய் நாடே பெரியது என்று ஐயர் தீர்மானம் செய்தார். அதனால், பாரிஸ்டர் தேர்வில் அவர் வெற்றி பெற்றுவிட்ட பிறகும் கூட, அதற்குரிய பாரிஸ்டர் என்ற பட்டத்தைப் பெறும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக தேசத் தொண்டில் ஈடுபட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு அரச விசுவாச உறுதி மொழி எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார் ஐயர்; என்பதைக் கேள்விப்பட்ட லண்டன் நகர் ரகசியப் போலீஸ் துறை அவர்மீது சந்தேகப்பட ஆரம்பித்து விட்டது. சந்தேகம் மட்டுமன்று, ஐயருக்குத் தொடர்ந்து தீராத துன்பங்களைக் கொடுக்கத் துவங்கியது. அதனால் ஐயர் போகுமிடங்களிலே எல்லாம் போலீஸ் நிழல் பின் தொடர்ந்தது. ஆனால், ஐயர் இதையெல்லாம் பெருட்படுத்தவில்லை.

வழக்கம் போல சாவர்கரின் அபிநவபாரத் சங்கத் தோடு தொடர்பு வைத்துக் கொண்டு, வ.வே.சு.ஐயர், அவர்களது பணிக்குரிய ஆதரவுகளையும், ஒத்துழைப்புக்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். லண்டன் நகரிலே இருந்து கொண்டு இந்தியாவில் இருந்த பத்திரிகைகளுக்கும், குறிப்பாகத் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும் கட்டுரை, கதை, கவிதைகளை எழுதி அதன்மூலம் சுதந்திரக் கருத்துக்களுக்கு உணர்ச்சி உருக் கொடுத்து வந்தார் ஐயர்! அவரது கருத்துக்களைப் படித்தவர்கள் நாட்டுப் பற்றுடையவர்கள் ஆனார்கள். மற்ற நாடுகளில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி, சுதந்திரம் பெற்ற வரலாறுகளையும் அறிந்தார்கள். அதனால், தமிழ் மக்கள் இடையே சுதந்திர விழிப்புணர்ச்சியையும், மக்களிடையே ஒரு மன எழுச்சியையும் அவரது எழுத்துக்கள் உருவாக்கின. இதையெல்லாம் கூர்ந்து நோக்கி வந்த பிரிட்டிஷ் அரசு ஐயர் மீது கோபாவேசம் கொண்டது.

இந்தியாவிலே அரசப் பிரதிநிதியாக இருந்த கர்சான் பிரபு பற்றிய வெறித்தனச் செயல்களை இதற்கு முன் படித்தீர்கள். இந்தியாவில் அவர் வைசியராயாக இருந்தபோது; அவருக்கு ஆலோசகர்களாக கர்சன் வைலி, லால் காக்கா என்ற இரண்டு வெள்ளையர்கள் இருந்தார்கள்.

அவர்கள் இருவரும் லண்டனில் இருந்த போது, மதன்லால் திங்க்ரா என்ற ஒரு தேசபக்தன் அவர்களை ஒரு பார்க்கிலே சுட்டுக் கொன்றார். அதனால், திங்க்ராவைக் கைது செய்து சிறையிலே அடைத்தது பிரிட்டிஷ் அரசு அவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, லண்டனிலே வழக்கும் நடைபெற்று வந்தது.

மதன் திங்க்ராவுக்கும்-சுடப்பட்ட வெள்ளையர்களுக்கும் தனிப்பட்டமுறையில் எந்தவிதமான விரோதமோ, முன் பகையோ இல்லை. இந்தியாவிலே அவர்கள் இருவரும் கர்சான் பிரபுக்கு துர் ஆலோசகர்களாக இருந்து கொண்டு இந்திய மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். திங்க்ரா கர்சன் பிரபுவையே சுட்டுக் கொல்லத் திட்டமிடடார். கர்சான் திங்க்ராவிடம் சிக்காமல் மறைந்து கொண்டான். அதனால், அவனது கைக் கூலிகளாகச் செயல்பட்ட அந்த இரண்டு பேரும் கொலையாகிவிட்டார்கள். மொத்தத்தில் இந்தக் கொலை அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்ட கொலையாகும்.

இக் கொலைகள் அரசியல் கொலைகள் என்று வெளியே சொன்னால் மற்ற நாடுகள் எல்லாம் சிரிக்குமே, அதுவும் லண்டனுக்கு வந்து இந்தியன் கொலை செய்துள்ளானே என்ற அவமானம் வந்து விடுமே என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தக் கொலைக்கு வேறு காரணத்தைக் கூறி, வழக்கையும் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது.

அந்த நேரத்தில் லண்டனில் சுரேந்திரநாத் பானர்ஜி, பவநகரி, பிபின் சந்திர பால்காபர்டே போன்ற இந்தியத் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் திங்க்ராவின் கொலை வெறியைப் பலமாகக் கண்டித்தார்கள். பலாத்காரத்தை அவர்கள் எதிர்ப்பதாகவும் அறிக்கை விட்டார்கள்.

கண்டனக் கூட்டம் நடத்தி, லண்டன் நகரிலே பகிரங்கமாகத் திங்க்ராவைக் கண்டித்து வாய்கு வந்தவாறு ஏசினார்கள். அக் கூட்டத்திற்கு ஆங்கிலேயர்கள், தங்களது குடும்பப் பெண்களுடன் திரண்டு வந்திருந்தார்கள். அதே நேரத்தில், லண்டனுக்குப் பாரிஸ்டர் படிப்புப் படிக்கவந்த சாவர்கர், வ.வே.சு. ஐயர், அவர்களது நண்பர்கள் கூட்டத்தினர், டாக்டர் ராஜன் திருமலாச்சாரியார் போன்ற தேசபக்த வாலிபர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.

மதன்லால் திங்க்ராவைக் கண்டித்துக் கண்டனக் கூட்டத்தை நடத்தியவர்கள் பேசிய பேச்சின் காரசார சொற்களைக் கேட்டு, குடும்பத்தோடு அக் கூட்டத்துக்கு வந்த வெள்ளையர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ந்தார்கள். இறுதியாக, திங்க்ரா கொலை வெறிச் செயலைக் கண்டித்துக் கண்டனத் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேறியது என்ற ஒரு குரல் மேடையிலே கேட்டது.

உடனே, ஓர் எதிர்ப்புக் குரல் இடிபோல கூட்டத்தின் மத்தியிலே எழுந்தது கூட்டம் குழம்பியது. யார் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியது என்று எல்லாரும் குரல் வந்த பக்கமே திரும்பினார்கள்!

"நிறைவேற்றப்பட்ட தாக நீங்கள் கூறிய அந்தத் தீர்மானம், ஒருமனதாக நிறைவேறவில்லை. அதை நான் பலமாக எதிர்க்கிறேன்" என்றார் சாவர்கர்!

கூட்டத்தில் பரபரப்போடு எழுந்த சிலர், ‘அவனை அடக்கி உட்கார வை! யாரவன்?’ என்று கத்தினர். தலைவர் சுரேந்திர நாத் பானர்ஜி, அவனைப் பிடித்து உட்காரவை, என்றார்! சாவர்கரை அமரவைக்கச் செய்த முயற்சிகள் வீணாயிற்று; உட்கார வைக்க முடியவில்லை-தலைவராலும்

அந்த நேரத்தில் மேடையிலே உட்கார்ந்திருந்த பவநகரி, சாவர்கருக்கு அருகிருந்த பால்மர் என்ற கலப்பின வெள்ளையனுக்குக் கண் ஜாடை காட்டினார்.

எழுந்தான் அந்த நீக்ரோ-வெள்ளைக் கலப்பினன்! விட்டான் ஒரு குத்து சாவர்கர் முகத்தில் மூக்குக் கண்ணாடி நொறுங்கியது! நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள் அவர் முகத்தைக் கிழித்தன. அதனால் ரத்தம் சிந்தியபடியே இருந்தது!

அஞ்சினாரா சாவர்கர்? அதுதான் இல்லை. அந்த இடத்தை விட்டு அசையவுமில்லை. மலை போல நிலை குலையாமல் நின்றார். இழந்தாரா அவர் நிதான்த்தையாவது? அதுவுமில்லை! நின்று கொண்டே தனது எதிர்ப்புக் குரலை இடிபோல் முழக்கமிட்டார். அதுவும் அமைதியாகவே எதிர்த்தார்!

பால்மர் கலப்பினன் விட்ட குத்தைக் கண்ட வ.வே.சு. ஐயர் கொதித்தார்! இடுப்பிலே செருகி வைத்திருந்த துப்பாக்கியை உருவினார் கலப்பினனைச் சுட குறிவைத்தார்! ஐயர் எப்போதும் அவசர உணர்ச்சி வயப்படுபவர் என்பது தெரிந்தவர் சாவர்கர்! அதனால் சாவர்கர் ஐயரின் துப்பாக்கிக் குறியைத் தடுத்துவிட்டார்!

திருமலாச்சாரி என்பவர் சாவர்கள் மீது அளவிலா அன்பு வைத்திருப்பவர். கலப்பினன் சாவர்கரைத் தாக்கியதைக் கண்ட ஆச்சாரியாரும், ஐயரைப் போலவே கொதித்து எழுந்தார். அவர், தான் வைத்திருந்த குறுந்தடியால் அந்தக் கலப்பின பால்மரின் தலையில் ஓங்கி, பலம் கொண்டவரை தாக்கினார்! விழுந்தான்! சுருண்டான்!

இந்த காட்சியைக் கண்ட கூட்டம், பரப்பரப்பான ஆரவாரத்தால் குழம்பியது. சாவர்கரும், அவரது நண்பர்களும் வெடி குண்டுகளை வீசினாலும் வீசுவார்கள், என்ற பீதியால், கூட்டத்திலே இருந்த ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் முண்டியடித்து விழுந்து எழுந்து கூட்டத்தை விட்டு வெளியே ஓடினார்கள்!

போலீஸ் சாவர்கரைப் பிடித்துச் சென்றது; தீர விசாரித்தது; குற்றமேதும் சாவர்கர் மீது இல்லையெனத் தெரிந்து விடுதலை செய்துவிட்டது.

மறுநாள் சாவர்கர், பத்திரிக்கையிலே, நடந்த விவரத்தை எழுதியபோது; “வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போது, அது பற்றிப் பேசுவதும், குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே குற்றவாளி என்பதும், கண்டனம் தெரிவிப்பதும் தவறு. அதற்குத்தான் நான் அந்தத் தீர்மானத்தைப் பகிரங்கமாக எதிர்த்தேன்" என்று குறிப்பிட்டார். எல்லாரும் இது உண்மைதானே என்று ஏற்றுக் கொண்டு அவரைப் பாராட்டினார்கள்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்பு, இந்தியா விடுதி மீது பிரிட்டின் அரசின் கண்காணிப்பு அதிகமானது. சாவர்கரையும், அவரது நண்பர்களையும் குற்றவாளிகள் என்று நீதி மன்றத்தில் நிறுத்திக் கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்று அரசு பகீரத முயற்சி செய்து வந்தது. அதற்கான நடவடிக்கைகள் முயல் வேகத்தில் நடந்தன.

வ.வே.சு. ஐயரும், மற்ற நண்பர்களும் சாவர்கர் இனி லண்டனில் இருந்தால் எல்லோருக்குமே ஆபத்துதான் என்று அறிந்து சாவர்கரை பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரீஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள் மற்றவர்கள். அபிநவபாரத் சங்கப் பணிகளை ரகசியமாகச் செய்து வந்தார்கள்.

இந்தியாவிலுள்ள நாசிக் நகரத்தில் ஜாக்சன் துரை என்ற வெள்ளைக்கார அதிகாரி அப்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட துப்பாக்கியை அனுப்பியவர் சாவர்கர் தான் என்றும், அவர் லண்டனில் இருந்தால் கைது செய்து எச்சரிக்கையுடன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்திய அரசு ஓர் ரகசியக் குறிப்பை லண்டனுக்கு அனுப்பி வைத்தது. இந்தச் செய்தி யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தது.

ஆனால், இந்த ரகசியம் மூன்று மாதங்களாகப் பாரீசில் இருந்து வரும் சாவர்கருக்குத் தெரியாது. எல்லா நண்பர்களும் லண்டனிலே இருக்கும்போது நாம் மட்டும் இங்கே இருப்பது எந்த வகையில் நியாயம் என்று எண்ணிய சாவர்கர், லண்டனுக்குப் போக ஆயத்தமானார்.

சாவர்கரிடம் சில செய்திகளைக் கலந்து யோசிக்க வேண்டும் என்று வ.வே.சு. ஐயரும், மற்ற நண்பர்களும் விரும்பியதால், உடனே லண்டனுக்குப் புறப்பட்டு வருமாறு சாவர்கருக்கு தந்தி அனுப்பினார் வ.வே.சு.ஐயர்.

தந்தியைப் படித்த பின்பு சாவர்கருக்கு லண்டன் போகும் எண்ணம் வலுத்தது. உடனே புறப்பட்டார். லண்டன் நகர் மண்ணிலே சாவர்கர் காலடிபட்டதும், போலீஸ் அவரைக் கைது செய்தது. அவ்வளவு எச்சரிக்கையோடு லண்டன் போலீஸ் பாரீஸ் நகரிலும் சாவர்கரைப் பின் தொடர்ந்து துப்புத் துலக்கியபடியே இருந்துள்ளது. சாவர்கரைக் கைதுசெய்தது ஏன் என்ற காரணத்தைச் சுதந்திர இந்தியச் சங்கத்தினர் போலீசிடம் கேட்டபோது, ஜாக்சன் கொலைவழக்கு சம்பந்தமாகவே அவர்கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் ஆணவத்துடன் பதிலளித்தது.

அந்த சமயத்தில்தான், வ.வே.சு.ஐயர் சிறைக்கு அடிக்கடி சென்று சாவர்கரைப் பார்த்து விட்டு வருவார். இவ்வாறு அடிக்கடி சிறைக்குச் சென்று பார்த்து வரும் இந்த வாலிபன் யார்? என்ற சந்தேகம் லண்டன் போலீசுக்கு அதுமுதல் தான் ஏற்பட்டது.

ஜாக்சன் கொலை வழக்குச் சம்பந்தமாக சாவர்கரை விசாரிக்க எப்படியும் இந்தியாவுக்கு அனுப்பத்தான் வேண்டும்; அப்போது அவரை எப்படியாவது தப்பிக்க வைத்து மீண்டும் பாரீசுக்குக் கொண்டு போய் விடலாம் என்ற ரகசியத் திட்டத்தை வ.வே.சு. ஐயர் சாவர்கரைப் பார்க்கப் போகும் போது சொன்னார்.

இவ்வாறு அடிக்கடி வந்து போகும் போதுதான், ‘யார் இந்தத் தாடிக்காரன்?’ என்ற சந்தேகம் லண்டன் போலீசுக்கே வந்தது. அது முதல், அந்தத் தாடிக்காரன் நடமாட்டத்தைப் போலீஸ் பின் தொடர்ந்து கண்காணித்து வந்தது. தாடிக்காரனையும் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்ற முடிவுக்கு அரசு வந்தது. ஐயரைக் கைது செய்யுமாறு போலீசுக்கு அரசாணை வந்தது.

அந்தப் பிடியாணையின் படி லண்டன் போலீஸார் இந்தியா விடுதிக்குச் சென்றனர். அதற்கு முன்பே அதனைத் தனது ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட வ.வே.சு.ஐயர், ஒரு சூட்கேஸ் பெட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு விடுதியை விட்டு வெளியே வந்த போது, ரகசியப் போலீஸ் அதிகாரி, விடுதியின் நாற்பக்கமும் போலீஸார்களைக் காவலுக்காக நிறுத்தி வைத்து விட்டு, வெளியே வந்த வ.வே.சு. ஐயரைத் தடுத்து நிறுத்தி வைத்துப் பேசி விவரங்களை அறிந்தார்.

போலீஸ் அதிகாரி தாம் கொண்டு வந்திருந்த உறையை ஐயரிடம் காட்டி, அந்தக் கவர் உமக்குத்தானா என்று கேட்டார்? அதற்கு ஐயர், அந்தக் கவர் தனக்கு அல்ல என்று சற்றும் தயக்கமற்றுக் கூறினார். அதிகாரி, ஐயர் பெட்டி மேலே வி.வி.எஸ். என்று எழுதியுள்ளதைச் சுட்டிக் காட்டி, இந்தக் கவர்மீது எழுதப்பட்டிருக்கும் முழுப் பெயரின் சுருக்கமோ இந்த வி.வி.எஸ். எழுத்துக்கள் என்று கேட்டார்.

சற்றும் எதிர்பாராத இக் கேள்வி அதிகாரியிடமிருந்து வந்ததைக் கண்ட ஐயர், கொஞ்சமும் தயங்காமல், திணறாமல், முகரேகைகள் ஏதும் சுருங்காமல், "எனது பெயர் வி. விக்ரம் சிங், அதையே சுருக்கி நான் பெட்டியின் மேலே வி.வி.எஸ். என்று எழுதி இருக்கிறேன்" என்று கூறிவிட்டு, விடை பெற்று விரரென்று விரைந்து சென்றார் அப்போது லண்டன் நகரை விட்டு வெளியேறியவர் தான் அதற்குப் பிறகு அவர் சாகும் வரை லண்டன் மண்ணை மிதிக்கவே இல்லை.

போலீஸ் எனறால் சாதாரணப போலீசல்ல; ஸ்காட் லாண்டு யார்டு ரகசியப் போலீஸ் உலகப் புகழ்பெற்ற திறமையுள்ள, தந்திரமுள்ள போலீஸ்! அந்தப் போலீஸ் அதிகாரியை ஏமாறவைத்து விட்டுப் புறப்பட்ட வ.வே.சு. ஐயர் எப்படிப்பட்ட திறமையாளராக, தந்திரவாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது நமக்கு உடல், உணர்ச்சிப் புல்லரிப்பால் சிலிர்த்தெழுகின்றது.

அதற்குப் பிறகு வ.வே.சு.ஐயர் நேராகப் பாரீஸ்நகர் சென்றார்! அங்கே காமா அம்மையாரைச் சந்தித்தார். இருவரும் கலந்து பேசியே சாவர்கரைத் தப்ப வைக்கும் திட்டத்தைப் போட்டார்கள். இந்திய தேச பக்தர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் தந்தது பிரெஞ்சு நாட்டின் ஆட்சியிலே இருந்த புதுச்சேரி நகரமாகும். அதுபோல லண்டனிலே தங்கியிருந்த தேசபக்தர்களுக்கு பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகர் அடைக்கலம் கொடுத்த நகரமாகும்.

பாரீசும் புதுச்சேரியும் இந்திய தேசியச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீடுபேறு போலப் பயன்பட்டது. அந்த நகரங்கள் இல்லையென்றால் எண்ணற்ற சுதந்திரப் போர்வீரர்களை, பிரிட்டிஷ் ஆட்சி அந்தமான் தீவுக்கு அனுப்பி சாகடித்து மண்டோக்கி இருக்கும். எனவே, இந்திய சுதந்திரப் போர் வீரர்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தேசியவாதிகள் புதுச்சேரியை ஒரு போதும் மறக்க முடியாது. அதற்காக நாம், பிரெஞ்சுப் பேரரசுக்கு எப்போதும் வரலாற்று நன்றியைக் கூறாமல் இருக்க முடியாது.

சாவர்கர் சிறைப்பட்ட பிறகு பிரிட்டிஷ் அரசு இந்திய தேசிய வீரர்களின் பாசறை போல விளங்கிய, லண்டன் இந்தியா விடுதியைக் கலைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது. சாவர்க்கரைப் பின்பற்றிய தேசபக்தர்களுக்கெல்லாம் தொல்லைகளைக் கொடுப்பதிலும் அக்கறை காட்டியது. எப்படியும் லண்டன் விடுதியிலே உள்ள இந்திய வாலிபர்களின், தீவிரவாதிகளின் பணிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுத் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததால், அங்கே இருந்த தேச பக்தர்கள் லண்டன் நகரைக் கைவிட்டு, பிரெஞ்சு நாட்டின் பாரீஸ் நகருக்குச் சென்று குடியேறினார்கள்.

இவ்வாறு குடியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர் காமா அம்மையார் இவர் ஒரு பார்சி பெண். புகழ்பெற்ற பெரும் பணக்காரர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டவர் பாரீஸ் நகரில் குடியேறுவதற்கு முன்பு அம்மையார் லண்டனிலே இருந்ததால், அங்கு இந்திய தேசியவாதிகளது வரலாற்றையும் உணர்வையும் நன்கு மதித்தவர். அதனால், இந்தியா சுதந்திரம் அடைவதில் அவர் பெருமைப்பட்டுக் கொண்டு, ஓர் இலட்சிய ஆர்வலராக இருந்தார். இந்திய சுதந்திரத்திற்காக யார்யார் அரும்பாடுபட்டாலும், அவர்களுக்குரிய பொருளாதாரத் தட்டுப்பாடுகளைப் போக்கி உதவும் கருணை உள்ளம், சுதந்திர மனம் அவருக்கு இருந்தது. அதனால், இந்தியப் புரட்சி வாதிகளுக்குக்குரிய பணஉதவிகளைத் தவறாது, மறுக்காது அவர் உதவிபுரிந்து வந்தார். பாரீஸ் சென்று அதையே புகலிடமாகக் கொண்ட வ.வே.சு.ஐயர், சாவர்கர் போன்றவர்களுக்குரிய பொருள் வசதிகளை அந்த அம்மையாரே செய்து வந்தார்.

அத்தகைய காமா அம்மையாருடன் கலந்து பேசிய பிறகுதான், சாவர்கரை பிரிட்டிஷ்காரர்களின் கப்பல் காவலிலே இருந்து காப்பாற்றிடும் திட்டத்தை வ.வே.சு. ஐயர் தீட்டினார். சாவர்கரை கட்டாயமாக இந்தியாவுக்குக் கொண்டு சென்றுதான் அந்தக் கொலை வழக்கை விசாரிக்க முடியும். அவரைக் கப்பலில் தான் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். லண்டனிலே இருந்து இந்தியா செல்லும் கப்பல் பிரெஞ்சுத் துறைமுகமான மார்சேல்ஸ் வழியாகத்தான் போயாக வேண்டும். அதனால், எந்தக் கப்பலில், என்றைக்குச் சாவர்க்கரை இந்தியாவுக்கு பிரிட்டிஷ் போலீசார் அழைத்தச் செல்வார்கள் என்பதை அறிந்து கொண்டு அவரைத் தப்பிக்குமாறு ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும் என்பதே வ.வே.சு. ஐயரும், காமா அம்மையாரும் கலந்து போட்ட திட்டமாகும். இதற்குரிய வழிகள் என்ன என்பதைக் காமா அம்மையாரும் வ.வே.சு. ஐயரும் மற்ற பிரான்ஸ் நண்பர்களும் கலந்து பேசினார்கள்.

இலண்டனிலே இருந்து வரும் கப்பல் மார்சேல்ஸ் துறை முகத்திற்கு இரவில் வரும், அன்றிரவு அங்கே தங்கும். விடியற்காலை துறைமுகத்தை விட்டுப் புறப்படும். துறை முகத்தை விட்டுப் புறப்பட்டுக் கப்பல் சிறிது தூரம் சென்ற பின்பு, சாவர்கர் கப்பலிலே இருந்து குதித்துக் கரையை நோக்கி நீந்தி வரவேண்டும். அங்கே ஐயரும், காமா அம்மையாரும் மற்றும் சில பிரான்ஸ், நண்பர்களும் கார் ஒன்றை நிறுத்தி வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். கப்பலில் நீந்திக்கரை சேரும் சாவர்கரைக்காரில் ஏற்றிக் கொண்டு பாரீஸ் நகருக்குப் போய் விட வேண்டும். இதுதான் வ.வே.சு. ஐயரும் காமா அம்மையாரும் போட்ட திட்டமாகும்.

சாவர்கருக்கும் இத்திட்டம் ரகசியமாக அறிவிக்கப்பட்டது. அவரும் அந்தத் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்து ஐயருக்குச் செய்தி அனுப்பிவிட்டார். இந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. என்று புறப்படப்போகிறார் சாவர்கர் என்ற நாளை எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். அந்த நாள் வந்தது. கப்பலில் சாவர்கருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட திட்டத்தின்படி கப்பல் மார்சேல்ஸ் துறைமுகத்தை வந்தடைந்து விடியற்காலை புறப்பட்டது.

போலீசாரிடம் அனுமதி பெற்று சாவர்கர் காலை மலஜலம் கழிக்கக் கழிப்பறைக்குச் சென்றார். போலீசார் துப்பாக்கியுடன் கதவுக்கு வெளியே காத்திருந்தார்கள். அங்கிருந்து கண்ணாடிக் கதவு வழியாகச் சாவர்கர் செயலைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். கழிப்பறைக்குள் சென்ற சாவர்கர் தனது உடைகளைக் கழற்றி கண்ணாடிக் கதவின் மேல் போட்டு மூடினார். அதனால்; அவர் உள்ளே என்ன செய்கிறார் என்பது தெரியாது கண்ணாடியை மறைத்தவுடனே ஜன்னல் வழியாகக் கடலில் குதித்தார். நீரிலே அவர் விழுந்த ஓசையைக் கேட்ட போலீசார் இரண்டுபேர் சாவர்கரைப் பிடிக்கக் கடலிலே குதித்து நீந்தி விரட்டினார்கள்!

கப்பல் நின்றது! சாவர்கர் வெகுவேகமாக மூச்சு வாங்கவாங்கக் கடற்கரையை அடைந்தார். வ.வே.சு.ஐயரும், காமாட்சி அம்மையாரும் அவர்களது நண்பர்களுடன் காரை வைத்துக் காத்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி அவர் ஓடினார். பிரிட்டிஷ் போலீசாரும் கடலின் கரை ஏறி விரட்டிக் கொண்டே சாவர்கர் பின்னால் ஓடி வந்தார்கள்.

அப்போது ஒரு பிரெஞ்சுப் போலீஸ்காரன் ஓடிவந்து சாவர்கரைத் தடுத்து நிறுத்தினான்! அதற்குள் பிரிட்டிஷ் போலீசார் ஓடிவந்து பிரெஞ்சுப் போலீசாருடன் ஏதோ பேசி, ஒரு பவுன்தங்க நாணயத்தை அவனுக்குக் கொடுக்கவே, அவனும் பிரிட்டிஷ் போலீசாரிடம் சாவர்கரை ஒப்படைத்துவிட்டான்.

வ.வே.சு. ஐயர் பிரெஞ்சுப் போலீஸ் காரனைக் கண்டித்து, 'இது பிரெஞ்சு நாட்டு எல்லை அல்லவா? இங்கே ஓடி வந்தவரை நீ பிடித்து எப்படி பிரிட்டிஷ் போலீசிடம் ஒப்படைக்கலாம்?' என்று பலமாகக் கண்டித்தார் ஆனால் அதனால், பயனேதும் இல்லை!

பிரிட்டிஷ் போலீஸ்காரர்கள் சாவர்கரைப் பரபரவென்று இழுத்துக் கொண்டே போனார்கள். நமக்கு அரசியல் குருவாக இருந்த பல்துறை ஞானியான சாவர்கரை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே பரபரவென்று அவரை இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும் போனார்களே! என்று மனம் நொந்து வருந்தி வேதனையடைந்தார் ஐயர்!

கப்பலில் இந்தியா கொண்டு வரப்பட்ட சாவர்கரை நீதி மன்றத்தில் விசாரணை செய்தார்கள். அவருக்கு ஐம்பதாண்டு காலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரை அந்தமானுக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு! அங்கே சாவர்கர் அனுபவிக்க முடியாத துன்பங்களை எல்லாம் அனுபவித்தார்! அதே நேரத்தில் சிறைக் கைதிகளின் மனத்திலே இடம் பெற்று அவர்களைச் சீர்திருத்தி ஒழுக்கக் சீலராக மேம்படுத்தினார் சாவர்கர்! அவர்பட்ட சித்தரவதைகளுக்கு எல்லாம் ஒரு சிறப்பு கிடைத்தது. அது அவருடைய வரலாற்றிலே படிக்கக் கூடிய சிறப்புச் சம்பவங்களாகும்.