ஹாஸ்ய வியாசங்கள்/பத்து ரூபாய் டிக்கட்

விக்கிமூலம் இலிருந்து

பத்து ரூபாய் டிக்கட்


இவ்வருஷம் எம்.எஸ்.எம். ரெயில்வே கம்பெனியார் இதுவரை இல்லாதபடி புதிய வழக்கமாய், பத்து ரூபாய்க்கு மூன்றாவது வகுப்பு டிக்கட்டு ஒன்று வாங்கினால், சென்னை முதல் விசாகப்பட்டணம் வரை, ஏறக்குறையத் தொளாயிரம் மைல், டிசம்பர் மாதம் 20-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரையில், எத்தனை முறை வேண்டுமென்றாலும் பிரயாணம் செய்யலாமென்றும், இடையில் எந்த ஸ்டேஷனில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாமென்றும், மெயில் வண்டி, சாதாரண வண்டி முதலிய எந்த வண்டியிலும் போகலாமென்று பிரசுரம் செய்திருந்தனர்.

மற்றவர்களைப் போல நானும் வால்டேரிலிருந்து சென்னை வரையிலும் போய் வரப் பத்து ரூபாய் டிக்கட் ஒன்று வாங்கினேன். இந்த டிக்கட் இருபதாம் தேதி முதல் செலாவணியாகுமாகையால், முதல் இரண்டு தினங்களில் எல்லோரும் புறப்படுவார்கள், மூன்றாவது தினம் புறப்பட்டால் அதிக ஜன நெருக்கம் இராது என்று எண்ணி 23-ந் தேதி ரெயிலேற விசாகப்பட்டணம் ஸ்டேஷனுக்குப் போனேன். அன்று ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுவதும் ஒரே ஜனமயமாயிருந்தது. எனக்குத் தெரிந்தவர்களை விசாரித்தபோது என்னைப் போலவே அவர்களும் முதல் இரண்டு தினங்களில் புறப்பட்டால் அதிக நெருக்கமாயிருக்குமென்று இரண்டு தினங்கள் கழித்துப் புறப்பட்டதாகத் தெரிய வந்தது! ஊரிலுள்ள கோமுட்டிகளெல்லாம் ஒவ்வொருவரும் ஆழாக்குப் பால் கொண்டு வந்து ஒரு பெரிய உயர்ந்த மொடாவில் விட வேண்டுமென்று அரசனால் ஆக்கியாபிக்கப்பட்ட போது, ஒவ்வொரு கோமுட்டியும், “மற்றவர்களெல்லாம் பாலை வார்ப்பார்கள்; நாம் மாத்திரம் தண்ணீரைக் கொண்டு போய் விட்டால் யாருக்குத் தெரியப் போகிறது?” என்று யுக்தி செய்த கதை அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. நமக்குத் தோன்றுகிற. யுக்தி மற்றவர்களுக்கும் தோன்றுமேயென்று சாதாரணமாக நாம் நினைக்கிறதில்லை.

அன்று கல்கத்தா மெயில் வர வேண்டிய மணிப்பிரகாரம் ஏன் வரவில்லையென்று ஸ்டேஷன் மாஸ்டரைப் போய் விசாரித்தேன். அவர் “ஏன் ஸார்! இந்தக் கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்வதற்கு ஆயிரம் நாக்கு உடைய ஆதி சேஷன் போல் இருக்க வேண்டும். இந்தப் பிளாட்பாரத்திலிருக்கும் ஆண் பெண் ஒருவரில்லாமல் இக்கேள்வி கேட்டாயிற்று!” என்று கோபித்தார். அவரைச் சாந்தப்படுத்தி என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டு மெல்ல விசாரித்ததில், “கல்கத்தா மெயில் ஒரு மணி நேரம் பொறுத்துத்தான் வரும். வழியில் இம்மாதிரியான மலிவு டிக்கட்டுகள் வாங்குவோர் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறுவதால் மிகவும் தடைப்பட்டு விடுகிறது” என்றார்.

பதில் பேசாமல் அப்பால் சென்று பிளாட்பாரத்தில் ரெயிலேற என்னைப் போன்ற எத்தனை மேதாவிகள் இருக்கின்றனர் என்று சுமாராக எண்ணிப் பார்த்தேன். குறைந்த பட்சம் 500 ஜனங்களுக்கு மேலிருந்தனர். இவ்வளவு ஜனங்களும் அந்த மெயில் வண்டித் தொடருக்குள் எப்படி ஏறப் போகின்றனர் என்கிற கேள்வி என்னைப் பாதிக்க ஆரம்பித்தது. ஸ்டேஷன் மாஸ்டருக்குக் கிடைத்த தந்தியின்படி விஜய நகரம் வருமுன்னமே மெயில் நிறைந்திருந்ததாம். அந்த ஸ்டேஷனில் இறங்கினவர்கள் இருபது முப்பது பேர் கூட இராதாம். அந்த ஸ்டேஷனிலிருந்த ஐந்தாறு பெயர்களும் எப்படி அந்த மெயிலுக்குள் ஏறினார்கள் என்பதுதான் கேள்வி. பதில் என்னால் கூற முடியாது. அந்த இரகசியம் அந்த மெயில் வண்டித் தொடருக்குத்தான் தெரியும் போலும்! ரெயில் விசாகபட்டணம் ஸ்டேஷனுக்கு வந்த பிறகு அந்த வண்டித் தொடரிலுள்ள ஒவ்வொரு வண்டியிலிருந்தும் ஒன்றிரண்டு பேர் இறங்கினால், அவர்களுக்குப் பதிலாகப் பத்துப் பன்னிரண்டு பேர்கள் ஏறினார்கள்! இது எப்படி சாத்தியம் என்று என்னால் சொல்ல முடியாது. நான் வண்டிக்குள் எப்படி ஏறினேன் என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு ஞாபகமில்லை. கும்பலைத் தாண்டி வண்டியில் நுழைந்தேனோ, அல்லது கும்பல் என்னைத் தள்ளிக் கொண்டு போய் வண்டிக்குள் விட்டதோ என்று எனக்கே சந்தேகமாயிருக்கிறது.

புறப்பட வேண்டிய காலத்திற்கு அரை மணி கழித்து ரெயில் வண்டி புறப்பட்டது. புறப்பட்டவுடன் வெளியில் பிளாட்பாரத்தில் எத்தனை ஜனங்கள் இடம் அகப்படாமல் நின்று போய் விட்டார்களோவென்று பரிதாபப்பட்டு என் தலையை நீட்டிப் பார்த்தால், பிளாட்பாரத்தில் டிக்கெட் கலெக்டரும் போர்டர்களும் தவிர ஒருவரையும் காணவில்லை!

ரெயில் புறப்பட்டவுடன் நான் ஏறிய வண்டியில் யார் யார் இருக்கிறார்களென்று தெரிந்து கொள்வதற்காக நாலா பக்கமும் திரும்பிப் பார்த்தேன். முதலில் கண்ணுக்குத் தென்பட்டதென்ன வென்றால் அந்த வண்டியில் "இதில் பத்து பேர் உட்கார இடமுண்டு" என்று ஆங்கிலத்திலும், தமிழிலும், தெலுங்கிலும், இந்துஸ்தானியிலும் எழுதப்பட்டிருந்ததேயாம். உடனே இந்த வண்டியில் எத்தனை பெயர்கள் ஏறியிருக்கிறார்கள் என்று கணக்கிட, பெரியவர்கள் 32-பேரும் குழந்தைகளில் 15-ம் இருந்தனர். குறித்த தொகைக்குமேல் ஒவ்வொரு வண்டியிலும் இம்மாதிரியாக நாலு மடங்கு ஜனங்களை ஏற்றியதற்காக ரெயில்வேக்காரர்களுக்கு அபராதம் போடுவதானால் இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டு விற்றதினால் அவர்களுக்கு வந்த லாபத்தையெல்லாம் அவர்கள் அபராதமாய்க் கட்ட வேண்டி வரும் என்பதற்கு ஐயமில்லை. (இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டு 40,000 விற்றதாகக் கேள்விப்படுகிறேன்.)

சில நிமிஷங்களுக்கெல்லாம் ரெயில் வேகமாய்ப போக, வண்டிக்குள் கொஞ்சம் காற்று வீச ஆரம்பித்தது. அதனால் சிறிது ஆனந்தமடைந்தவனானேன். “சும்மா காலம் கழிப்பானேன்; நம்மோடு வண்டியிலிருப்பவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டு போனால் கொஞ்சம் கஷ்ட நிவாரணமா யிருக்கும்” என்று எண்ணி, அந்த வண்டியிலிருந்தவர்களை யெல்லாம் ஏறக்குறைய ஒவ்வொருவராக “நீங்கள் எங்கே போகிறீர்கள்?-நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று பிரயாணிகள் வழக்கப்படி கேட்க ஆரம்பித்தேன். இந்த விசாரணையின் முடிவில் பெரும்பாலோர் என்னைப் போல் சென்னைக்குப் போவதாக தெரிவித்தார்கள். பன்னிரண்டு பெயர்கள் மாத்திரம் கூடூரில் இறங்குவதாகச் சொன்னார்கள். சரி, இப்பன்னிரண்டு பெயர்களும் கூடூரில் இறங்கினால் பிறகு நமக்குக் கொஞ்சம் செளகரியமுண்டாகுமென்று நினைத்து, அந்தக் கூடூர் ஸ்டேஷனுக்கு எப்பொழுது ரெயில் போய்ச் சேருகிறது என்று ரெயில்வே கால அட்டவணையை எடுத்துப் பார்க்க, மறுநாள் காலை போய்ச் சேருவதாகத் தெரிய வந்தது. என்னையும் மற்றெல்லோரையும் அது வரையில் காப்பாற்றும்படியாகக் கடவுளைப் பிரார்த்தித்தேன். இந்தப் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்தை எனக்கு ஜன்மத் துவேஷிகள் யாராவது இருந்தால் அவர்களும் அனுபவிக்க வேண்டாமென்று கோருவேன்.

இன்னொரு ஆனந்தம் என்னவென்றால், ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும் பொழுதும் அங்கே பத்து ரூபாய் டிக்கெட்டு வாங்கினவர்கள் வண்டிக்குள் ஏறப் பார்ப்பதும் வண்டியிலுள்ளவர்கள் உள்ளே இடமில்லையென்று அவர்களைப் பிடித்துத் தள்ளுவதுமே. இந்தச் சண்டையின் சங்கீத கோஷம் மனதுக்கு மிகவும் இனிமையாயிருந்தது. இச்சண்டையின் மத்தியில் ஒரு விநோதம் நேரிட்டது. நான் உட்கார்ந்த இடத்திற்கு மேலாகச் சாமான்கள் இடம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த இடம் சிறிதாயிருந்த போதிலும் அதிலாவது கொஞ்சம் படுத்துறங்கலாமென்று மேலே நிமிர்ந்து பார்க்க, எனக்கு முன்பே அங்கொருவர் படுத்திருந்தார். சரி, அவர் அதிர்ஷ்டசாலியென்று நினைத்து அந்த யோசனையை விட்டேன். ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் இராஜமகேந்திரம் வரையில்தானிருந்தது. அந்த ஸ்டேஷனில் வழக்கப்படி, ஸ்டேஷன் பக்கமாக ஏராளமான ஜனங்கள் எங்கள் வண்டியில் ஏறப் பார்க்க, உள்ளே இருந்தவர்கள் அவர்களை ஏறாமலிருக்கும்படி சண்டை போடுகிற தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அச்சமயம் சாமான்கள் வைக்க வேண்டிய இடத்தில் படுத்துக் கொண்டிருந்த மேற்சொன்னவரும் எழுந்து உட்கார்ந்து, வண்டியில் ஏறப் பார்த்தவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த புத்திசாலியான ஒருவர் (அவர் ஒரு முஸ்லிம்) வண்டியின் பின்புறமாக ஏறி, நாங்கள் எல்லாம் ஸ்டேஷன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மேலே உட்கார்ந்திருந்தவர் இடத்தில் படுத்துக் கொண்டார்! வண்டி புறப்பட்டவுடன், முதலில் படுத்திருந்தவர் தன் இடத்தைத் திரும்பிப் பார்க்க, வேறொரு ஆசாமி அங்கே படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்குக் கோபம் பிறந்து, மற்றவரை அதட்டி எழுப்பிப் பார்த்தார். அந்த ஆசாமி எழுந்திருக்கவில்லை. உடனே ஒருவரை யொருவர் அவரவர்கள் பாஷையில் திட்ட ஆரம்பித்தனர். தெலுங்கு பாஷை சாயபுவுக்குத் தெரியாது. இவருக்கோ அவரது இந்துஸ்தானி பாஷை தெரியாது. முடிவில் இருவரும் கைகலப்பார்கள் போலிருந்தது. அச்சமயம் என் வண்டியில் யாருக்காவது இந்துஸ்தானி தெரிந்திருந்தால், அந்த முஸ்லிமிடம் சொல்லி இருவரையும் சமாதானப் படுத்தும்படி கேட்டுக் கொண்டேன். என் எதிரில் உட்கார்ந்திருந்த ஒருவர் தனக்கு இந்துஸ்தானி நன்றாய்த் தெரியுமென்று சொல்லி, அவருடன் பேச ஆரம்பித்தார்

அவரது இந்துஸ்தானி பாண்டித்யம் அடியிற் கண்டவாறு: “சாயபு! தும் எந்துகு ஆ மனுஷி சோடுலொ பண்டு கொண்டிவி” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நமக்கே இந்துஸ்தானி இதை விட நன்றாய்த் தெரியும் போலிருக்கிறதே என்று எண்ணி, என் கொச்சை இந்துஸ்தானியினால் சாயபுவைச் சாந்தப்படுத்தி, அவர் அவ்விடம் உட்காரவும், ஆந்திர தேசத்தார் காலை மடக்கிக் கொண்டு படுக்கவும், ஏற்பாடு செய்தேன்.

இரவெல்லாம் வண்டியிலிருந்தவர்களில் ஒருவராவது தூங்கவில்லை. எனக்கிருந்த வருத்தமெல்லாம் அன்றிரவு முக்கோடி ஏகாதசியாயில்லாமற் போயிற்றே என்றுதான். இருந்தால், வண்டியில் கண் கொட்டாமல் இரவெல்லாம் விழித்திருந்த எங்களுக்கெல்லாம் மிகவும் புண்ணியம் கிடைத்திருக்கும்!

வழியில், ஏதோ ஒரு ஸ்டேஷனில் மேலே உட்கார்ந்திருந்த முஸ்லிம் இறங்க, அவருக்குப் பதிலாக எங்கள் வண்டியில் மூன்று பேர் ஏற ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் இடையர் போலும். அவர் சாயபுவையும் மீறிக் கொண்டு வண்டிக்குள் நழைந்து, தாம் தூக்கிக் கொண்டு வந்த பானையைச் சாமான்கள் வைக்குமிடத்தில் வைத்து விட்டு நின்று கொண்டிருந்தார். அவர்கள் வெளியில் போட்ட சண்டையில் அப்பானை கொஞ்சம் உடைந்து விட்டது போலிருக்கிறது. ரெயில் புறப்பட்டதும், அதிலிருந்த மோர் மெல்ல ஒழுக ஆரம்பித்தது! சொட்டு சொட்டென்று கீழே என் பக்கத்திலிருந்தவர் வாயில் விழ ஆரம்பித்தது. அவர் (பாவம்!) வாயைத் திறந்து கொண்டு தூங்கும் சுபாவமுடையவர் போலிருக்கிறது. "ஏமையா இதி!" என்று கூச்சலிட்டுக் கொண்டு அவர் எழுந்திருக்கையில் தலையை மேலே மோதிக் கொண்டார். . அந்த அதிர்ச்சியில் அங்கிருந்த பானை நன்றாய் உடைந்து மோர் எல்லாம் அவர் தலையில் அபிஷேகம் செய்வது போல் விழுந்தது. அம்மட்டும் அந்த அபிஷேகம் நமக்குக் கிடைக்காமல் தப்பினோமே என்று ஆனந்தப் பட்டேன்.

இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டினால் நான் அடைந்த மற்றொரு ஆனந்தத்தைக் கூறி இதை முடிக்கிறேன். பெஜவாடா ஸ்டேஷனில் அவ்வூர் ஸ்டேஷன் மாஸ்டர் சிபாரிசு செய்ய, ஓர் ஆளை எங்கள் வண்டிக்குள் ஏற விட்டோம். ஓர் ஆள்தானே, போனால் போகிறான் என்று நாங்கள் முன்பிருந்ததை விடக் கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, புதிதாய் வந்த மனிதனுக்கு இடம் விட, அவன் உட்கார்ந்த பின், போர்ட்டர் ஒருவனிடம் சொல்லித் தன் சாமான்களைக் கொண்டு வரச் செய்து, அவைகளை யெல்லாம் வண்டியில், சந்து பொந்திலெல்லாம் நிரப்பினான் ஆளை உள்ளே விட்ட பின் அவன் சாமான்களை எப்படி வேண்டாமென்று சொல்வது? அவன் கறிகாய் வியாபாரியாம். அவன் கொண்டு வந்த மூட்டைகளில் ஒன்று கத்தரிக்காய் மூட்டை. அதை மாத்திரம் மற்றவர்கள் மிதித்து விடப் போகிறார்களேயென்று தன் மடி மீது வைத்துக் கொண்டான். நெல்லூர் ஸ்டேஷனில் அம்மூட்டையைத் தான் உட்கார்ந்திருந்தவிடத்தில் வைத்து விட்டு ஒரு காரியமாகக் கொஞ்சம் வெளியே போக வேண்டுமென்று கூற, நான், “அப்படிச் செய்யாதே; போனால் இடம் போய் விடும்” என்று சொன்னேன். அப்படிச் சொல்லியும் கேட்காமல் இறங்கிப் போனான். அச்சமயம் அந்த இடம் காலியாயிருக்கிறதென்று எண்ணி, ஒரு ஸ்தூல சரீரமுடைய ஆள் வண்டிக்குள் ஏறி அஜாக்கிரதையாக அம்மூட்டையின் மீது உட்காரவே, சுத்தரிக் காய்களெல்லாம் சட்னியாகப் போயின. உடனே மூட்டையின் சொந்தக்காரன் வந்து பார்க்க, தன் இடமும் போய்க் கத்தரிக்காயும் சட்னியாய்ப் போனதைக் கண்டு கூக்குரலிட ஆரம்பித்தான். பிறகு நான் அவனைப் பார்த்து, “போனால் போகிறது, கத்தரிக்காய்த் துகையலாகச் சுலபமாகச் செய்து சாப்பிட்டு விடலாம்; நன்றாக இருக்கும்” என்று சமாதானம் செய்தேன். அதனால் அவன் சமாதானம் அடைந்தானோ என்னவோ, எனக்குத் தெரியாது. மற்றவர்களெல்லாம் இதைக் கேட்டுச் சிரித்து ஆனந்தம் அடைந்தார்கள். எங்கள் ரெயில் அன்று பதினோரு மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தது-அதாவது சரியான நேரத்திற்கு இரண்டரை மணி நேரம் கழித்து. அதை விட்டு இறங்கும் போது, “”பத்து ரூபாய் டிக்கட்டினால் அடைந்த ஆனந்தம் போதும்; இனி மேல் ரெயில்காரர் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தக்கபடி ஏற்பாடு செய்யாவிட்டால் இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டை இனி வாங்குவதில்லை” என்று தீர்மானித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.