உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்க்குலிஸ்/அசுரன் ஜிரியனின் ஆடுமாடுகள்

விக்கிமூலம் இலிருந்து

12. அசுரன் ஜிரியனின் ஆடுமாடுகள்


ஸ்பெயின் தேசத்தில் டார்ட்டசஸ் என்ற பிரதேசத்தை ஆண்டுவந்த ஜிரியன் என்பவன் ஓர் அசுரன். அவனுக்கு மூன்று தலைகள், ஆறு கைகள், இடுப்புவரை மூன்று உடல்கள் இருந்தன. ஆனால், இடுப்புக்குக் கீழே இரண்டு கால்கள் மட்டும் இருந்தன. சில வரலாறுகளில் அவனுக்கு இரண்டு சிறகுகளும் இருந்தனவாகக் கூறப்பட்டிருக்கிறது. வல்லமையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அவனுக்கு நிகரானவரேயில்லை என்று அவன் புகழ் பெற்றிருந்தான். அவனிடம் ஏராளமான ஆடுகளும் மாடுகளும இருந்தன. அவை யாவும் எளிதியா என்ற ஒரு தீவில் மேய்ந்துகொண்டிருந்தன. அவைகளிடம் என்ன விசேடம் என்றால், அவை யாவும் ஒரே சிவப்பு நிறமானவை, அழகில் அவைகளுக்கு ஈடான பிராணிகள் வேறில்லை. அவைகளை மைசீனுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது ஹெர்க்குலிஸுக்கு யூரிஸ்தியஸ் அளித்த பத்தாவது பணி.


ஹெர்க்குலிஸ் இந்தத் தடவை நெடுந்தூரம் கடலில் யாத்திரை செய்ய வேண்டி இருந்தது; அத்துடன் ஏராளமான கால்நடைகளையும் கொண்டு வர வேண்டியிருந்தது. ஆகவே, அதற்கேற்ற பெரிய கப்பலை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, அவன் ஹீலியஸ் என்று அழைக்கப்பெறும் சூரிய பகவானிடம் இருந்த பொற்கிண்னம் ஒன்றை இரவலாக வாங்கிக் கொண்டு. அதைக் கடலில் மிதக்க விட்டு, அதிலேயே பயனம் செய்யத் தீர்மானித்தான். அந்தக் கிண்ணம் மகிமை மிகுந்தது. அதில் ஒருவர் ஏறிக்கொண்டால், அந்த அளவுக்கு அது பெரிதாகும்; பலர் ஏறிக்கொண்டால், அத்தனை பேர்களுக்கும் போதிய அளவு அது விரிந்து கொடுக்கும். அதில் எத்தனை கால்நடைகளாயினும் கொண்டுவர முடியும், ஹெர்க்குலிஸ் தன் நண்பர்கள், சீடர்கள் பலரையும் அதிலேயே ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.

வழியில் பற்பல கஷ்டநஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டன. ஒரு சமயம், புயலால் பொற்கிண்ணம் மலை போன்ற அலைகளின் மீது தத்தளிக்க நேர்ந்தது. அப்பொழுது கடலரசன் மீதே அம்பு தொடுக்க முற்பட்டான் ஹெர்க்குலிஸ், அவ்வரசன் சிரித்துக்கொண்டே, அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பினான்.

ஆப்பிரிக்கவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலுள்ள ஒடுக்கமான கடல்வழியாகச் செல்லுகையில் ஹெர்க்குலிஸ் இரு கண்டங்களின் எல்லைகளிலும் இரண்டு கல் தாண்களைத் தன் நினைவுச் சின்னங்களாக நட்டுவிட்டுச் சென்றான்.

அவன் அபாஸ் மலையைக் கண்டதும், கரையில் இறங்கி அம்மலையில் ஏறிப் பார்த்தான். ஜிரியனுடைய ஆடுமாடுகள் எங்கெங்கு மேய்கின்றன என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கையில், அவ்வசுரனுடைய இரண்டு தலைகளுள்ள ஆர்திரஸ் என்ற முரட்டு நாய் அவன் மீது பாய்வதற்காக ஓடி வந்தது. அவன் உடனே தன் கதையை அதன் தலைகளைக் குறி வைத்து வீசினான். நாய் நசுங்கி வீழ்ந்துவிட்டது. அடுத்தாற்போல், அசுரனுடைய காவற்காரன் ஓடி வந்தான். அவனும் கதைக்கு இரையானான். பிறகு, ஹெர்க்குலிஸ், புல் தரைகளில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு மாடுகளை ஒன்றுசேர்த்து ஓட்டிக் கொண்டு வரச் சென்றான். அவனுடைய தோழர்கள் சிலரும் பல பக்கங்களுக்குச் சென்று. அவனுக்கு உதவியாகப் பணி செய்து வந்தனர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, ஜிரியன் கோபாவேசத்துடன், தன் ஆறு கைகளிலும் ஆறு பெரிய கதைகளைத் துக்கிக்கொண்டு, ஹெர்க்குலிஸைத் தாக்க முன்வந்தான். அவனுடைய கண்களில் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாசிகளிலிருந்து புகை வந்தது. அவன் கிரேக்க மாவீரனைக் கண்டதும், அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான். ஒரே சமயத்தில் ஆறு கதைகளுக்குத் தனியே நின்று பதில் சொல்ல வேண்டுமே என்று யோசித்து, ஹெர்க்குலிஸ் அவனுக்கு எதிராகப் பாயாமல், அவனுக்கு விலாப்புறத்தில் ஓடி நின்றுகொண்டு, தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்புகளில் ஒன்றை வில்லிலே மாட்டி, அவனுடைய மூன்று உடல்களையும் ஒரே சமயத்தில் துளைக்கும்படியாக அதைச் செலுத்தினான். ஒரு கணத்திற்குள், என்ன நடந்த

தென்று அசுரன் உணர்ந்துகொள்ளுமுன்பே, பாணம் அவன் உடல்களை ஊடுருவிப் பாய்ந்துவிட்டது! விஷம் அவனுடைய மூன்று தலைகளுக்கும் ஏறிவிட்டதால், அவன் தரையிலே உருண்டு விழுந்துவிட்டான்.

ஹெர்க்குலிஸும், நண்பர்களும் அசுரனுடைய ஆடுகளையும் மாடுகளையும் ஓட்டிக்கொண்டு, ஹீலியஸின் கிண்ணத்தில் முன் போல் ஏறித் தங்கள் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியிலே அவர்கள் பல நாடுகளைக் கடந்து சென்றனர். சில அரசர்கள் ஹெர்க்குலிஸின் உதவியை நாடியதால், அவன் அவர்களுக்காக அவர்களுடைய எதிரிகளை அடக்கி வெற்றி பெற்றான். இத்தாலியிலிருந்து ஒரு சமயம் அவன் வழி தவறி, வேறு திசையிலே சென்று விட்டான். வெகுதூரம் சென்ற பிறகுதான், அவன் அதைத் தெரிந்துகொண்டான்; பிறகு, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று, சரியான பாதையை அறிந்து அவ்வழியே சென்றான்.

மந்தை மந்தையாகச் சிவப்பு நிறமுள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு அவனும் அவன் தோழர்களும் மைசீனை அடைந்ததும் , மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஹெர்க்குலிஸ் அதுவரை நிறைவேற்றிய பணிகளையெல்லாம் நாடு முழுதுமே மக்கள் தெரிந்துகொண்டு பாராட்டிப் புகழ்ந்தார்கள். அவனுடைய ஆணைக்குப் பணிந்து தொண்டு புரிய ஆயிரக்கணக்கான வாலிப வீரர்கள் எப்பொழுதும் தயாராயிருந்தனர். மக்கள் அனைவரும் அவனைத் தேவனாகப் போற்றத் தொடங்கினர். அந்நிலையில் யூரிஸ்தியஸினால் எந்த நேரத்திலும் தனக்கு ஆபத்து விளையுமென்று அஞ்சி நடுங்கினான்.