ஹெர்க்குலிஸ்/கலைமான் கொணர்தல்
யூரிஸ்தியஸ் ஹெர்க்குலிஸ்க்கு விதித்த மூன்றாவது பணி பேரழகுள்ள ஒரு கலைமானை உயிருடன் கொண்டு வர வேண்டும் என்பது. அந்த மான் ஆர்க்கேடிய நாட்டுக்கப்பால், மரங்கள் அடர்ந்த ஒரு குன்றின் அடிவாரத்திலிருந்த ஈனோ என்ற கிராமத்தின் அருகில் வனத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது. அதன்
கொம்புகள் பொன்மயமானவை. அதனால் கதிரோளியிலும் நிலவொளியிலும் அவை மின்னிப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அதன் கால்களின் குளம்புகள் பித்தளையினால் ஆனவை. அதன் நிறம் பனிக்கட்டி போன்ற வெண்மை. ஆகவே அதன் அழகு சொல்லும் தரமன்று. கண்டவர் அனைவரும் அதை விட்டுப் பிரிய மனமில்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். ஆனால், அது மனிதர்களுடைய கண்களுக்கு எளிதில் புலப்படுவதில்லை.
அந்த மானைப் பிடிப்பது எவருக்கும் இயலாத காரியம். முதலில் அதைத் தொடர்ந்து ஓட முடியாது. துள்ளி ஒடுவதிலும், புதர்களுக்குள் மறைவதிலும் மலைகளில் ஏறுவதிலும், கடலில் நீந்துவதிலும் அது வல்லமை பெற்றிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆர்ட்டிமிஸ் என்ற தேவதையின் உடமையாகவும் இருந்தது. அதற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அவள் அதற்குக் காரணமானவரைச் சபித்து அழித்துவிடுவாள். ஆர்ட்டிமிஸ் சந்திரனின் ஒளிக்கு அதிதேவதையானவள். அவள்
அந்த மானிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தாள்.
பொற்கொம்புகளும் பித்தளைக் குளம்புகளும் கொண்ட அந்த அற்புத மானைத் தேடி ஹெர்க்குலிஸ் ஈனோ வனத்திற்குச் சென்றான். அங்கே ஆர்ட்டிமிஸ் தேவியின் ஆலயம் ஒன்றிருந்தது. அந்த ஆலயத்தைச் சுற்றியே மான் அலைந்துகொண்டிருக்கும் என்று கேள்வியுற்று, அவன் கோயில் அருகிலேயிருந்த பாதைகளைக் கவனித்துக்கொண்டு காத்திருந்தான். அந்தப்பக்கத்தில் தங்கியிருப்பதே மிகவும் கஷ்டமாயிருந்தது. ஈக்களும் வண்டுகளும் இடைவிடாமல் கடித்துத் துன்புறுத்தின, பருத்துக் கொழுத்திருந்த பல்லிகள் அவன் கால்களின்மேலும், உடலின்மீதும் ஊர்ந்து சென்றன. ஆந்தைகளின் அலறலைக் கேட்கச் சகிக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பின் ஹெர்க்குலிஸ் மானைக் கண்டு கொண்டான். அதன் அழகைக் கண்டதும், அவன் தான் அடைந்த துயரையெல்லாம் மறந்து, அதைத் தொடர்ந்து ஓடலானான்.
மானைப்பற்றிய செய்திகளை முன்னதாகக் கேட்டறிந்திருந்த ஹெர்க்குலிஸ் தானும் தன் கால்களில் பித்தளைத் தகட்டிலே செய்த செருப்புகள் அணிந்திருந்தான். அவை அக்கினி தேவனால் அவனுக்கு முன்பு பரிசாக அளிக்கப் பெற்றவை. அவைகளைப் பாதங்களில் அனிந்துகொண்டு எந்தப் பாறையிலும் வனாந்தரத்திலும் அதிகக் களைப்பில்லாமல் ஓடிச் செல்ல முடியும். மேலும் மானைப் பிடிப்பதற்குப் போராட்டம் எதுவும் தேவையிராது என்பதால், அவன் தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்புகளுக்குப் பதிலாகச் சாதாரண அம்புகளையும் வில்லையுமே எடுத்து வந்திருந்தான்.
இரண்டு நாள்களாக மான் தனக்குப் பழக்கமான ஏரியைச் சுற்றியுள்ள காட்டிலேயே ஓடிச் சென்றது. ஹெர்க்குலிஸும் ஓய்வில்லாமல் அதைப் பின்பற்றி ஓடினான். மானின் வேகத்தையும், தந்திரங்களையும் கண்டு, அவனே வியப்படைந்தான். ஆனால், அது எங்கிருந்தாலும், பொன்னால் முடி செய்து தலையில் வைத்தது போன்ற அதன் கொம்புகளின் ஒளியாலும், உடலின் வெண்மை நிறத்தாலும், அதனைக் கண்டு கொள்வது எளிதாயிருந்தது. அதுவும், தன்னைத் துரத்தி வருபவன் விடாக் கண்டன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன் வனத்தை விட்டு வெளியே பாய்ந்து, மேற்குத் திசையில் ஓடத் தொடங்கிற்று. காற்றுதான் வேகமாக வீசும் என்று சொல்லுவார்கள்; ஆனால், அது காற்றினும் கடிய வேகத்தில் ஓடிச் சென்றது. அதன் பித்தளைக் குளம்புகளும், ஹெர்க்குலிஸ் பித்தளைச் செருப்புகளும் பாறைகளின் மீது மோதும் பொழுதெல்லாம் ‘டனார், டனார்’ என்று ஒலித்துக்
கொண்டிருந்தன. மலைப்பாதைகளிலும், பாறைகளிலும், கழனிகளிலும் ஓடியதில் மான் களைப்படையவில்லை. ஹெர்க்குலிஸும் சளைக்கவில்லை. இரவு நேரத்தில் மட்டும் அவனும் மானும் ஓய்வெடுத்துக் கொண்டனர். மறு நாள் பொழுது புலர்ந்ததும், மான் அவனைத் திரும்பிப் பார்த்தது. அவனும் அதைப் பார்த்து ஓடலானான்.
இவ்வாறு நாள்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி விட்டன; ஆயினும், மான் வேட்டை முடிந்தபாடில்லை. மான் கடலோரமாக ஓடிச் சென்றது. கடலைக் கண்டதும் அது அதிலே பாய்ந்து நீந்திச் சென்றது. வில்வீரனும் அவ்வாறே குதித்து நீந்தத் தொடங்கினான். ஒன்றிலிருந்து மற்றொன்றாகப் பல கடல்களிலே, மானும் மனிதனுமாக நீந்திச் சென்றார்கள். ஓங்கியெழுந்து வீசிய அலைகளும், காற்றும், அவர்களைத் தடை செய்ய முடியவில்லை.
ஐரோப்பாக் கண்டத்தை ஒரு வளையம் சுற்றிவிட்டு, இறுதியில் கலைமான் கிரீஸ் நாட்டுக்கே திரும்பி வந்தது. ஹெர்க்குலிஸும் அங்கேயே வந்து கரையேறினான்.
மான் வேட்டையில் ஓர் ஆண்டு கழிந்துவிட்டது. அதுவும் மீண்டும் ஈனோ வனத்தை அடைந்துவிட்டது. ஹெர்குலிஸ், மேற்கொண்டும் காலத்தை வீனாக்காமல் அதைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, மெல்லிய அம்பு ஒன்றை எடுத்து, மானின் முன்கால்கள் இரண்டையும் தளை செய்யும் முறையில் அதைச் செலுத்தினான். ஆகவே அதனால் மேற்கொண்டு ஓட முடியவில்லை. அது உடனே துள்ளிக் குதித்துக்கொண்ட ஆர்ட்டிமிஸின் கோயிலுக்குள் புகுந்து, தேவியின் சிலையடியில் விழுந்து சரணடைந்தது. அதன் கண்களில் இருந்து முத்துகள் போன்ற கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. அது மிகவும் களைப்புற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஹெர்க்குவிஸ் ஆலயத்திலேயே அதைப் பிடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அந்தப் புனிதமான இடத்தில் அதைத் துரத்திச் செல்ல வேண்டாம் என்று கருதி, அவன் சிறிது நேரம் வெளியே தங்கியிருந்தான்.
அந்த நேரத்தில் திடீரேன்று மேகமண்டலத்திலிருந்து முழு மதி வெளியே வந்ததை அவன் கவனித்தான். கண் மூடித் திறப்பதற்குள் ஆர்ட்டிமிஸ் தேவியே தலையில் இளம்பிறை சுடர்விட, அவன் எதிரில் வந்து நின்றாள். அவள் கோபத்தால் கொதித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய காலடியில் கலைமான் படுத்திருந்தது. அவளுக்குப் பின்னால் வேட்டை நாய்களைப் பற்றிக்கொண்டு அவளுடைய பணிப் பெண்களாகிய மோகினிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர்.
ஆர்ட்டிமிஸ் ஹெர்க்குலிஸைப் பார்த்து, ‘ஆகா, நீதானா என் மானை வேட்டையாட வந்திருக்கிறாய்? வேட்டைக்கு நானே அதிதேவதை என்பதையும் மறந்து, என் அருமை மானையே பிடிக்கத் துணிந்துவிட்டாயா நீ? நான் ஓர் அம்பைக் கையிலெடுத்தாலே போதும், உன் ஆவி பிரிந்துவிடும்!’ என்று படபடப்பாகப் பேசினாள்.
அந்த இடத்தில் வீரத்தைக் காட்டிலும் மதியைப் பயன்படுத்த வேண்டுமென்று உணர்ந்த ஹெர்க்குலிஸ், உடனே தரையில் முழந்தாளிட்டுத் தேவியை வணங்கிப் பேசலானான்: ‘நானாக இந்த மானைப் பிடிக்க வருவேனா? என் அங்கங்களை இழப்பதாயினும், இதைத் துரத்துவதற்குத் துணிவேனா? சீயஸ் கடவுளின் கட்டளைப்படி மன்னன் யூரிஸ்தியவின் பணியை நிறைவேற்றுவது என் கடமையாயிற்று. தெய்வ சாபத்திற்கு அஞ்சி வந்த என்னைத் தாங்களும் வெறுத்துப் பேசினால் எனக்குப் புகலிடம் ஏது?
அதைக் கேட்டதும் தேவி எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டாள். அந்த வீரனிடம் அவள் கொண்டிருந்த கோபம் அருளாக மாறிவிட்டது. ‘சரி, மானை எடுத்துக்கொண்டு போய் யூரிஸ்தியஸிடம் காட்டிவிட்டு, மறுபடி இங்கே எனது ஆலயத்தில் அதைச் சேமமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடு என்று அவள் பரிவுடன் கூறினாள்.
ஹெர்க்குலிஸ் அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மானை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். தேவி யும் மோகினிகளும் ஒரு கனத்தில் மாயமாக மறைந்து விட்டனர். வெள்ளைக் கலைமான் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு வீரனைத் தொடர்ந்து சென்றது.
அவன் மைசீனை அடைந்ததும், யூரிஸ்தியஸ் கோட்டைக்கு வெளியே சென்று, அவனையும் தங்கக் கொம்புடன் விளங்கிய மானையும் பார்த்தான். அந்த மானை திரும்ப விடுவதற்கே அவனுக்கு மனமில்லை. ஆயினும், ஆர்ட்டிமிஸ் தேவியின் ஆணையை அவனால் எதிர்க்க முடியாத நிலையில், அவன் பேசாமல் இருந்துவிட்டான். அடுத்தாற்போல ஹெர்குலிஸுக்கு பயங்கரமான ஒரு பணியை விதிக்க வேண்டும் என்பதில் அவன் மனம் ஈடுபட்டிருந்தது.