ஹெர்க்குலிஸ்/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

10. திரேஸ் நாட்டுக் குதிரைகள்


க்காலத்தில் திரேஸ் நாட்டில் கொடிய மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தயோமிடிஸ். அவனிடம் நான்கு முரட்டுப் பெண் குதிரைகள் இருந்தன. அவை புல்லே தின்பதில்லை. மனித உடல்களைக் கிழித்து நரமாமிசத்தை உண்பதே அவைகளுக்குப் பழக்கம். அரசன் அவைகளை அவ்வாறு பழக்கியிருந்தான். திரேஸ் பிரதேசத்துக் கடற்கரை அருகில், கப்பலுடைந்து உயிர் தப்பி வரும் மாலுமிகளைப் பிடித்து அவைகளுக்கு உணவாக அளிப்பது அவன் வழக்கம் மற்றும் தன்னை நாடிவரும் விவரம் தெரியாத மக்களையும் அவன் அக்குதிரைகளுக்கு இரையாகத் தள்ளி வந்தான். அந்தக் குதிரைகள் நான்கையும் ஹெர்க்குலிஸ் பிடித்து வரவேண்டுமென்பது யூரிஸ்தியஸின் எட்டாவது கட்டளை.


அதன்படி வீரன் ஹெர்க்குலிஸ் கப்பலேறித் திரேஸ் நாட்டை அடைந்தான். அங்கே குதிரைகளைப் பற்றியும், தயோமிடிஸின் கொடுமைகளைப் பற்றியும் அவன் பலரிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டான். குதிரைகளைப் பிடிப்பதுடன், கொடுங்கோலனான அம்மன்னனையும் தீர்த்துக் கட்டிவிட வேண்டு மென்று அவன் முடிவு செய்தான். ஆதலால், தனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவன் கிரேக்க வீரர் சிலருக்குச் செய்தி அனுப்பினான். அவர்கள் அனைவரிலும் அவனே மேலான விரனாயிருந்ததால், அத் தலைவனின் சொற்படி கிரேக்க வாலிபர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுள் ஒருவனாக அயோஸ்ஸும் வந்திருந்தான். வீரர்கள் தேவையான ஆயுதங்களையும் கொண்டு வந்திருந்த னர்.


குதிரைகள் திரிடா என்ற நகரில், ஒரு பெரிய கட்டாந்தரையில், ஒரு கோட்டைக்குள் அடைக்கப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பித்தளையால் அழிகள் அமைக்கப்பட்டிருந்தன. தயோமிடிஸ் அவைகளை இருப்புச் சங்கிலிகளில் கட்டி வைத்திருந்தான்.

ஹெர்க்குலிஸும் அவனுடைய தோழர்களும் கோட்டைக் காவலர்களை எதிர்த்து வென்று. கோட்டைக்குள்ளே சென்று குதிரைகளைக் கண்டார்கள். குதிரைகள் மிகப்பெரியவையாக இருந்தபோதிலும், அவை மெலிந்திருந்தமையால், அவற்றின் எலும்புகள் எல்லாம் வெளியே தெரிந்துகொண்டிருந்தன. ஹெர்க்குலிஸும் வீரர்களும் ஆளுக்கு ஒரு கதையும், சுருக்கிடக் கூடிய நீண்ட கயிறும் வைத்திருந்தனர். அவர்கள் முதலில் குதிரைகளின் சங்கிலிகளைக் கழற்றிவிட்டனர். உடனே அவை அவர்கள்மீதே பாயத் தொடங்கின. ஆயினும், கதைகளின் அடிகளைத் தாங்கமுடியாமல், அவை எளிதில் அடங்கிவிட்டன. வீரர்கள், தாங்கள் தயாராக வைத்திருந்த கயிறுகளைக் கொண்டு, நான்கு குதிரைகளையும் கட்டி வெளியே கொண்டுசென்றனர்.

தயோமிடிஸும். அவனுடைய போர் வீரர் சிலரும், அந்த நேரத்தில் திடீரென்று அங்கே வந்து அவர்களை எதிர்க்க முற்பட்டனர். மன்னன், ஹெர்க்குலிஸின் வல்லமையை உனராமல், முதலில் அவனைப் பிடித்துத் தன் குதிரைகளுக்கு இரையாகப் போட வேண்டுமென்று விரும்பியிருந்தான். ஆனால், கிரேக்க வீரர்கள் அதிகச் சிரமப்படாமலே அவனுடன் வந்த படைவீரர்களை விரட்டியடித்துவிட்டு மன்னனைப் பிடித்துக் கட்டி வைத்தனர்.

தயோமிடிஸ் இளவயதினன் : உடல் வலிமையுள்ளவன்; ஆனால் கொடியவன். கயிறுகளால் கட்டப்பட்டிருந்த நிலையில் ஹெர்க்குலிஸ் அவனைக் கண்டான். அப்பொழுது நகரத்திலிருந்து சில மக்கள் அங்கே வந்து கூடியிருந்தனர். ஹெர்க்குலிஸ், மன்னனைத் தண்டிப்பதற்கு முன்னால், மக்களை பார்த்து, ‘இந்தக் கொடியவனுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று யாராவது விரும்புகிறீர்களா?’ என்று கேட்டான். எவரும் வாய் திறந்து பேசவேயில்லை. எவரும் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டுமென்று கேட்கவும் முன்வரவில்லை.


ஹெர்க்குலிஸ் மேலும் பேசத் தொடங்கினான்: தயோமிடிஸ் மற்ற மனிதர்களுக்கு எப்படி இரக்கம் காட்டி வந்தானோ, அதே முறையில் அவனுக்கும் இரக்கம் காட்ட வேண்டியது அவசியம். இவன் தன் குதிரைகளுக்கு இரையாக மனிதர்களைக் கோட்டைக்குள் தள்ளி வந்தான் என்று நான் இதுவரை கேள்விப்பட்டு வந்தேன். ஆனால், அது உண்மையாயிருக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மைதானா என்பதை நேரில் சோதனை செய்ய இப்பொழுது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவனுடைய குதிரைகளிடம் இவனையே தள்ளிப் பார்ப்போம் ! அவை மனிதத் தசையைத் தின்னுகின்றனவா என்பதை நம் கண்களாலேயே பார்த்துவிடுவோம்!’


அவன் பேசி முடித்தவுடன், கிரேக்க விரர்கள் தியோமிடிஸைக் கட்டவிழ்த்துக் குதிரைகளின் பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். அவனைக் கண்டதும் குதிசைகள் நான்கும் அவனைச் சுற்றி வட்டமாக

ஹெர்க்குலிஸ்.pdf


நின்று நாட்டியமாடுவன போல், துள்ளிக் குதித்தன. உடனே உரக்கக் கனைத்துக்கொண்டு. அவை கால்களின் குளம்புகளால் அவனைக் கீழே தள்ளிச் சவட்டத் தொடங்கின. அன்று தமக்கு நல்ல இரை கிடைத்துவிட்டதென்ற களிப்புடன், அவை தங்கள் பற்களை வெளியே காட்டிக்கொண்டு, அவனைக் கடித்து, அவன் உயிரோடிருக்கும் பொழுதே அவனுடைய தசைகளைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தன. கொடுங்கோலன் வாழ்க்கை அத்துடன் முடிந்தது.

ஹெர்க்குலிஸும், வீரர்களும் குதிரைகளைப் பிடித்துக்கொண்டு, தங்கள் நாட்டை அடைந்தனர். அங்கே மிகுந்த பாதுகாப்புடன் யூரிஸ்தியஸ் வந்து அக்குதிரைகளைப் பார்வையிட்டான். அப்பொழுது ஹெர்க்குலிஸ் அவனைப் பார்த்து, ‘யூரிஸ்தியஸ்! இயற்கைக்கு மாறான இத்தகைய மிருகங்களை உயிருடன் வைத்திருப்பது தகாது. உன் கட்டளைப்படி இவைகளை உயிருடன் கொண்டுவந்தேனே ஒழிய, இவைகளைத் திரேஸ் நாட்டிலேயே சுட்டுச் சாம்பலாக்கியிருப்பேன் இப்பொழுது இவைகளை ஒலிம்பிய மலைக்கு நீ விரட்டிவிட வேண்டும். அங்கே இவை கோரமான விலங்குகளுக்கு இரையாகட்டும் அல்லது தலைகளிலே இடி விழுந்து மடியட்டும்!’ என்று கூறினான்.

யூரிஸ்தியஸ் அவ்வாறே செய்துவிட்டு, அவனுக்கு விதிக்க வேண்டிய அடுத்த பணியைப்பற்றி எண்ணமிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/10&oldid=1032757" இருந்து மீள்விக்கப்பட்டது