உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்க்குலிஸ்/15

விக்கிமூலம் இலிருந்து

15. ஹெர்குலிஸ் தெய்வமாதல்


கிரீஸ் தேசத்தில் எல்லா ராஜ்ஜியங்களிலும், ஹெர்க்குலிஸின் புகழ் பரவி நின்றது. இனி அவன் யூரிஸ்தியஸ் மன்னனுக்கும். வேறு எவருக்கும் பணிகள் செய்ய வேண்டிய கடமையில்லை. அவன் சுதந்தரமாக வாழ்ந்து, பல அரசர்களுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த பல வனவிலங்குகளை அவன் வதைத்தான். அரசர்கள் போர்களுக்கும், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்களை அடக்குவதற்கும் அவன் உதவியை அடிக்கடி நாடினார்கள். அவனும் தக்கவர்களுக்கெல்லாம் உதவி செய்து வந்தான். அவனுக்கு ஓய்வென்பதே இல்லை. போராட்டமே அவனுக்கு மூச்சுக் காற்றாக இருந்தது. அக்காலத்தில் அவன் தீப்ஸ் நகரிலே தங்கியிருந்தான்.


அவனுடைய புகழ் பெற்ற பன்னிரண்டு பணிகளுக்குப் பின்னாலும் அவன் மகத்தான வெற்றிகளைப் பெற்று வந்தான் : ஒரு சமயம் படைகளை அழைத்துக் கொண்டு, டிராய் நகரின் மீதுபடையெடுத்து அதைச் சூறையாடினான். ஆசியாவில் லிடியா என்ற நாட்டில் ஓராண்டுக்கு மேலாக அவன் தங்க வேண்டியிருந்தது. அப்பொழுது அந்நாட்டு இராணியான ஒம்பேல் என்பவளுக்கு அவன் பல உதவிகள் செய்து வந்தான். ஈலிஸ் நகரில் ஆஜியஸ் மன்னன் தன்னை முன்பு ஏமாற்றியதற்காக அவன் மீது ஒரு முறை படையெடுத்து, அவனை வதைத்து. அவனுடைய மகன் பைலியஸை ஹெர்க்குலிஸ் அரசனாக்கினான். ஆனால், அந்தப் போராட்டத்தில் அவனுடைய சகோதரன் இலிகிளிஸ் காயமடைந்து, அதனால் பின்பு ஆர்கேடிய நாட்டில் உயிர் துறக்க நேர்ந்தது.


ஹெர்க்குலிஸ் தன் பழைய மனைவி மிகாரை என்பவளை விலக்கிவிட்டு, ஓர் அரச குமாரியான தியனைராவை மணந்துகொள்ள விரும்பினான். அவளுடைய தந்தை அவனைப் பார்த்து, ‘உன்னை மணந்துகொள்வதால் என்மகளுக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்டான். உடனே அவன், ‘சீயஸ் தேவனின் மருமகள் என்ற பட்டம் கிடைக்கும்; உலகெங்கும் பரவியுள்ள என் புகழின் ஒளியில் அவள் வாழலாம்!’ என்று கணீரென்று மறுமொழி கூறினான். அவன், வில்வித்தையில் தன் ஆற்றலைக் காட்டி, போட்டிக்கு வந்த மன்னர்களையும் வீரர்களையும் வென்று, கடைசியில் தியனைராவை அடைந்தான்.


அவன் அவளை அழைத்துக் கொண்டு திரும்பும் வழியில், வெள்ளம் மிகுந்திருந்த ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் சென்டார் ஒருவன் வேகமாகப் பாய்ந்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். சென்டார் வகுப்பினருக்கு தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே நான்கு கால்களும் குதிரையின் உடலும் அமைந்திருக்கும். ஹெர்க்குலிஸைக் கண்ட சென்டார், தான் தியானராவைத் தன் முதுகில் அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதாயும், அவன் தனியே நீந்தி வரலா மென்றும் தெரிவித்தான். வீரனும் அதற்குச் சம்மதித்தான். எல்லோரும் அக்கரையை அடைந்தனர்.


அங்கே சென்றதும் சென்டார், தியனைராவைச் சுமந்து கொண்டே, நாற்கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான், அவனுடைய கபட நோக்கத்தை உணர்ந்துகொண்டான் ஹெர்க்குலிஸ். தியனைராவைக் கடத்திச் செல்லவே அவன் வந்திருந்தான். ஆகவே, நேரத்தை வீணாக்காமல், ஹெர்க்குலிஸ் தன் விஷ பாணங்களில் ஒன்றை அவன் மீது ஏவினான். அந்தக்கணத்திலேயே சென்டார் சுருண்டு வீழ்ந்துவிட்டான். அவன் உடல் முழுதும் லெர்னா வனத்து நாகத்தின் விஷம் பரவிவிட்டது. அவன் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அகதை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உடனே உயிர் துறந்தான். அவளும், அவன் பேச்சை நம்பி, அதை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டாள். உண்மை என்னவென்றால், சென்டார் தன்னைக் கொன்ற விஷத்தைக் கொண்டே ஹெர்க்குலிஸையும் கொல்வதற்காக ஆவளை அவ்வாறு ஏமாற்றி விட்டான்.


புது மணத்தம்பதிகள் வீடு திரும்பியபின் விருந்துகளும் கேளிக்கைகளும் பல நாள்கள் நடந்தன. தியனைரா சென்டாரிடம் பெற்றிருந்த மருந்தை ஒரு சிமிழில் அடைத்துப் பெட்டியில் வைத்திருந்தாள். நாள்கள் செல்வச் செல்ல, அவள் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அதை அடியோடு மறந்திருந்தாள். அவளும் ஹெர்க்குலிஸும் பல்லாண்டுகள் அன்புடன் இல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர். அவளுக்கு நான்கு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர்.


ஒரு சமயம் ஹெர்க்குலிஸ், தான் அடைந்த வெற்றிகளுக்காக, சீயஸ் கடவுளுக்குப் பலிகள் கொடுத்து யாகம் நடத்த வேண்டுமென்று, ஒரு மலை மேல் ஓம குண்டங்களும் பலி பீடங்களும் அமைத்திருந்தான். யாகத்திற்கு வேண்டிய சாமக்கிரியைகள் பலவும் தயாராயிருந்தன. அப்பொழுது ஹெர்க்குலிஸ் யாகத்தில் தான் அணிந்துகொள்ள வேண்டிய பட்டு உடையைத் தியனைராவிடம் போய் உடனே வாங்கி வரும்படி ஒரு தூதனை அனுப்பி வைத்தான்.


தூதன் சென்ற சமயத்தில், தியனரா ஹெர்க்குலிஸைப் பற்றித் திடீரென்று வருத்தமடைந்து புலம்பிக்கொண்டிருந்தாள் நாட்டிலே அழகு மிகுந்த பெண்கள் பலரும் அவனிடம் காதல் கொண்டிருந்தனர். அவனுடைய உடலமைப்பும் அழகும் பெண்களின் கண்களுக்குப் பெருவிருந்தாக இருந்தன. இக்காரணங்களால் அவன் முற்காலத்தைப் போல் அந்தச் சமயத்தில் தன்னிடம் அதிக அன்பு காட்டவில்லை என்பதே அவள் வருத்தத்திற்குக் காரணம்.

தூதன் உடை கேட்டு வந்ததும், அவள் உள்ளே ஓடி பெட்டியைத் திறந்து ஹெர்க்குலிஸ் அணியக்கூடிய புனித உடையை வெளியே எடுத்தாள். அப்பொழுது பெட்டியிலிருந்த மருந்துச் சிமிழை அவள் கண்டுவிட்டாள். உடனேயே சென்டார் சொல்லிய சொற்கள் அளுடைய நினைவுக்கு வந்தன. நாயகனைத் தன்னுடன் இனை பிரியாமலிருக்க வழி செய்துவிட வேண்டும்! என்று அவள் தீர்மானித்தாள். அவள், கையிலே கொஞ்சம் கம்பள ரோமத்தை எடுத்து. அதைச் சிமிழிலிருந்த மருந்தில் தோய்த்து பிறகு அதை நாயகன் அணிந்துகொள்ளக் கூடிய பட்டிலே தேய்த்தாள். அதற்குப்பின், பட்டு உடையை ஒரு பெட்டியிலே வைத்து, அதை அவள் தூதனிடம் கொடுத்தனுப்பினாள்.


தூதன் சென்று சிறிது நேரம் கழிந்ததும், அவள் வீட்டு முற்றத்தில் தான் வீசியெறிந்த கம்பளம் தீப்பற்றி எரிவதைக் கண்டாள். அது எரியும் பொழுது ஒரு விஷ வாடையும் வீசிற்று. உடனே அவளுடைய நெஞ்சில் இடி விழுந்தது போலாயிற்று. அவள் பதைபதைத்தாள், அழுதாள், துடித்தாள். தான் அனுப்பிய உடையால் ஹெர்க்குலிஸுக்கு என்ன நேருமோ என்று அவள் அஞ்சினாள். சென்டார் வேண்டுமென்றே தன்னை மோசம் செய்திருந்தான் என்பதை அவள் அப்பொழுதுதான் உணர்ந்துகொண்டாள்; உடனே ஒரு குதிரை வீரனை அனுப்பி தான் அனுப்பிய உடையை ஹெர்க்குலிஸ் அணிய வேண்டா என்று சொல்லும்படி செய்தாள்.


யாக சாலையில் ஹெர்க்குலிஸ் உடை வரவில்லையே என்று ஆத்திரத்தோடு காத்து நின்றான். தூதன் பெட்டியைக் கொணர்ந்ததும், அவன் அவசர அவசரமாக அதிலிருந்த ஆடையை எடுத்து அணிந்துகொண்டான். யாகம் தொடங்கிற்று. பலிக்குரிய மாடுகள் யாவும் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. ஓம குண்டங்களிலே அக்கினி கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. முதலில் ஹெர்க்குலிஸ் பன்னிரண்டு மாடுகளைப் பலியிட்டான். ஓம குண்டங்களிலே அவன் நிறைய மதுவையும் வார்த்தன். சுற்றிலும் தூப தீபங்களின் நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அப்பொழுது அவன் திடீரென்று உரக்கச் சத்தமிட்டு அலறினான். தியனைரா அவனுடைய உடையிலே தேய்த்திருந் விஷ் மருந்து உடையில் சூடேறியவுடன் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. அந்த விஷம் கொடிய வெர்னா நாகத்தின் விஷமல்லவா! அது அவனுடைய உடல் முழுவதும் பரவி விட்டது! அது அவன் அங்கங்களை அரித்து. எரித்துக் கொண்டிருந்தது. வெற்றி வீரனாகிய ஹெர்க்குலிஸ் அவ்விஷத்தின் கொடுமையையும், வேதனையையும் தாங்க முடியாமல் கதறினான். அவன் பட்டுச் சட்டையைக் கழற்றி எறியமுயன்றான். ஆனால், அதை இழுக்கும் பொழுது அவனுடைய உடலின் சதைகளும் சேர்ந்து வந்தன. உடலில் ஓடிக் கொண்டிருந்த இரத்தம் கொதித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த ஓர் ஓடையிலே குதித்து. நீருள் மூழ்கிப் பார்த்தான். அதனால் உடலின் எரிவு அதிகமானதைத் தவிர வேறு பயனில்லை. ஓடை நீரும் கொதித்து, அதிலிருந்து ஆவி வரத் தொடங்கிவிட்டது!


அவன் எழுந்து சென்று. அங்குமிங்கும் ஓடினான் அப்பலிபீடங்களைத் தகர்த்தெறிந்தான்; வழியிலே தென்பட்ட மரங்களையெல்லாம் வேருடன் பறித்து வீசினான். வழியில் கூடியிருந்த பூசாரிகளும், மக்களும் அவனுடைய அவல நிலையைக் கண்டு துடிதுடித்தனர். ஆனால், யாருக்கும் என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது விளங்கவில்லை.


தியனைரா இரண்டாவதாக அனுப்பிய குதிரை வீரன், யாக சாலைக்கு வந்து பார்க்கையில், காலம் தாழ்ந்துவிட்டது என்பதை உணர்ந்து அங்கு தான் கண்ட காட்சியை அப்படியே போய் அவளிடம் தெரிவித்தான். அவள் தானே தன் கணவனுக்கு யமனாகத் தோன்றியதை எண்ணி வருந்தி, அவனுடைய வாளாலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

ஹெர்க்குலிஸின் படைவீரர்கள் யாகசாலையிலிருந்து சிறிது தூரத்தில் வருந்திக்கொண்டே நின்றார்கள். அந்த நேரத்தில் அவன் அருகில் செல்ல எவரும் துணியவில்லை. ஹெர்க்குவிஸ், தன் மைந்தன் ஹில்லஸைக் கூவி அழைத்து, தன்னை அடிவாரத்தில் அமைதியான ஓரிடத்தில் கொண்டுபோய் விடும்படி கேட்டுக்கொண்டான். அவ்வாறே அவனைப் பல வீரர்கள் சேர்ந்து மலையடிவாரத்திலே கொண்டு போய் வைத்தனர். அப்பொழுது ஹெர்க்குலிஸை அழைத்து தன்னுடைய தாய் அல்க்மினாவையும், தன் குமாரர்கள் அனைவரையும். மகளையும் அங்கே வரவழைத்து, தான் அவர்களுக்குத் தன்னுடைய இறுதிச் செய்தியைக் கூற வேண்டுமென்று ஆசைப்படுவதாகக் கூறினான். ஹில்லஸ் தன் பாட்டியாரான அல்க்மினா டைரின்ஸ் நகரில் தன் சகோதரர்களை வைத்துக்கொண்டு தங்கியிருப்பதாகத் தெரிவித்தான். அத்துடன் தன் தாய் தியனைரா, ஹெர்க்குலிஸுக்கு நேர்ந்த விபத்தை அறிந்து தன் உயிரையும் துறந்துவிட்டாள் என்று செய்தி வந்திருப்பதாயும் அவன் கூறினான். அதுவரை ஹெர்க்குவிஸ் அவளைப் பற்றி நெஞ்சிலே குமுறிக்கொண்டிருந்தான். ஹில்லஸ் கூறிய வார்த்தைகளிலிருந்து அவனுக்ரும் சிறிது ஆறுதல் ஏற்பட்டது.


அப்பொழுது ஹெர்க்குலிஸ், சீயஸ் தேவர் ஆதியிலே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருந்த வாக்கைத் தன் மகனுக்கு எடுத்துச் சொன்னான்: ‘உயிருள்ள எந்த மனிதனும் ஹெர்க்குலிஸை எந்தக் காலத்திலும் கொல்ல முடியாது இறந்து போன பகைவன் ஒருவனே, அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணமாயிருப்பான்!’


பின்னர்த் தன்னுடைய தகனக்கிரியைபற்றியும் அவன் மகனுக்குச் சொல்ல வேண்டிய விவரங்களைச் சொல்லி முடித்தான். அவனுடைய கட்டளைப்படி சிந்தூர மரக்கட்டைகளும், தேவதாரு மரக்கட்டைகளும் அடுக்கப்பட்டன. அயோலஸ் முதலிய உறவினர்கள் காட்டத்திலிருந்து சற்று விலகி நின்றுகொண்டனர். ஹெர்க்குலிஸ் தானாகவே அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு, யாராவது ஒருவர் காட்டத்தின் ஒரு மூலையிலே தீ முட்டும்படி வேண்டினான். அங்கேயிருந்தவர் எவருக்கும் தீ முட்ட மனம் வரவில்லை. அப்பொழுதும் ஹெர்க்குலிஸ், மாலையணிந்து கொண்டு விருந்துக்கு வருபவனைப் போல, இன்பமாகவே விளங்கினான். வீரம் தாண்டவமாடும் அவன் முகங்களை மாறவில்லை.


அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஆயன் ஒருவன், தன் மகனை அழைத்து. ஹெர்க்குவிஸ் விரும்புவது போலச் செய்யும்படி கூறினான். அந்த இளைஞன் அவ்வாறே காட்டத்திற்குத் தீ மூட்டினான் அவனுக்குப் பரிசாக ஹெர்க்குலிஸ் தன் வில்லையும், அம்புகளையும். துணியையும் கொடுத்து, அவனைப் பாட்டினான். பிறகு அவன் சிம்மத் தோலைக் காட்டத்தின்மீது விரித்து தன் கதையைத் தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு, தோலின் மீது படுத்துக்கொண்டான்.


அந்த நேரத்தில் ‘சீயஸ் கடவுளின் ஆணையால், இடிகளும் மின்னல்களும் தோன்றின. காட்டம் ஒரு

கனத்திலே சாம்பலாகக் காணப்பெற்து. பாம்பு சட்டையைக் கழற்றுவது போல ஹெர்க்குலிஸ் தன் பழைய உடலைக் கழிற்றிவிட்டு, தேசோமயமான தெய்வீகச் சரீரத்துடன் மேலே எழுந்து சென்றான். சீயஸ் கடவுளே தன் நான்கு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எதிர்கொண்டு வந்து, அவனை ஏற்றிக் கொண்டு, ஒலிம்பிய மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அதீனா தேவி, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கீழே இறங்கச் செய்து, அவனை மற்றைத் தேவர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அது முதல் மண்ணுலக வீரனான ஹெர்க்குலிஸ் தேவனாக விளங்கிக்கொண்டிருக்கிறான். அன்று போல் என்றும் அவனுடைய புகழும் பூவுலகில் நிலைத் திருக்கின்றது.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/15&oldid=1032752" இலிருந்து மீள்விக்கப்பட்டது