உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்க்குலிஸ்/3

விக்கிமூலம் இலிருந்து

3. நிமீ வனத்துச் சிங்கம்


நிமீ வனத்துச் சிங்கம் என்று நாடெங்கும் பயங்கரமானதாகக் கருதப்பெற்று வந்த விலங்கு அவ்வனத்தில் ஒரு குகையிலே வாழ்ந்து வந்தது. கல், இரும்பு, வெண்கலம் ஆகியவற்றில் செய்த கூரிய ஆயுதம் எதுவும் அதன் உடலில் பாய முடியாது; அதன் தோல் அவ்வளவு கடினமுள்ளது. இரவு நேரங்களில் அது தன் குகையை விட்டு வெளியே கிளம்பி, நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளைக் கடித்துக் கொன்றுவிடுவது வழக்கம். சில சமயங்களில் அது பகலிலும், சுற்றியிருந்த கிராமங்களுக்குச் செல்லுவதுண்டு. வழியில் மனிதர்களோ குழந்தைகளோ அதனிட சிக்கிவிட்டால், அவர்கள் உடனே அதற்கு இரையாகிவிடுவார்கள். நிமீ நகரில் சீயஸ் கடவுளின் ஆலயத்தைச் சுற்றியிருந்த வனம் முழுதிலும் அதுவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனவே அவ்வனத்தை ஒட்டியிருந்த கிராமங்களில் மக்கள் அல்லும் பகலும் அச்சிங்கத்தைப்பற்றிக் கிலி பிடித்து மறைந்து வாழ்ந்து வந்தனர். நிமீ நகரிலிந்து இரண்டு மைல் தொலைவில் இப்பொழுதும் ஒரு குகை இருந்து வருகின்றது. அதில்தான் அந்தக் கொடிய சிங்கம் வசித்து வந்தது என்று நகர மக்கள் கூறுகின்றனர்.


மைசீன் நகரை விட்டு வெலியே சென்ற ஹெர்க்குலிஸ், நேராக நிமீ வனத்தை நோக்கி நடந்து சென்றான். நெடுந்தூரம் சென்ற பின், நண்பகலில் வெயிலின் கொடுமை அதிகமாயிருந்ததால், அவன் ஓர் ஆயனின் குடிசையை அடைந்து, அங்கே சற்று நேரம் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பினான். அந்த வீட்டிலிருந்த ஆயன், அவனை அன்புடன் வரவேற்று, குடிப்பதற்கு அவனுக்கு நிறையப் பால் அளித்தான். கொஞ்சம் பலகாரமும் உண்டு, பாலைக் குடித்த பின், ஹெர்க்குலிஸ் குடிசையில் சற்றே தலை சாய்த்திருக்க எண்ணினான். ஆனால், குடிசையின் கூடம் போதிய அளவு நீளமாயில்லாததால், அவன் தன் கால்களை வாயிற்படிக்கு வெளியே நீட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அவனுடைய உடல் அவ்வளவு உயரமாயிருந்தது! குடிசையில் அவன் நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், நிலையைத் தாண்டும் பொழுதும் தலை குனிந்து, உடலையும் வளைத்துக்கொள்ள வேண்டியிருந்தது!


அவன் சிறிது நேரம் தூக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தான். அது அந்தி மாலை. அப்பொழுது குடிசையில் ஆயனும் அவன் தாயும் ஏதோ வருத்தமுற்றுப் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கவனித்த ஹெர்க்குலிஸ், என்ன விஷயம் என்று விசாரித்தான். ஆயனின் தாயான கிழவி, ‘இரண்டு மாதங்களுக் முன்னாள் இவனுடைய மனைவி வனத்திலிருந்து எங்கள் பசுக்கள் இரண்டைப் பற்றிக்கொண்டு வருவதாகப் போனவள் பிறகு மீண்டு வரவேயில்லை!’ என்று சொன்னாள். ஆயன் கண்ணிர் பெருக்கி அழுதுகொண்டிருந்தான். கிழவி தன் மகனையும் சமாதானம் செய்தாள். ‘நீ ஆண் பிள்ளை, இப்படி அழலாமா? நடந்தது நடந்துவிட்டது. காலிஸ்தை போய்விட்டால், அவளைப் போல் வேறொரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் என்று அவள் தேறுதல் சொன்னாள்.

ஆயன் இனி அவள் வரப்போவதேயில்லை! நட்சத்திரங்ளைப் போல் மின்னிக் கொண்டிருந்த அவள் கண்களை நாம் இனிமேல் காணப்போவதேயில்லை! பதினாறு வயது - அதற்குள் அவளுடைய விதி முடிந்து விட்டது! அவளைக் கொன்ற அந்த மிருகம் இன்னும் நாசமாய்ப் போகவில்லையே!’ என்று துக்கத்தோடு பேசினான்.

‘என்ன மிருகம்?’ என்று ஹெர்க்குலிஸ் அவனைப்பார்த்து ஆவலுடன் கேட்டான். ஆயன், ‘நிமீ வனத்துச் சிங்கம், ஐயா! அதன் குகை அங்கேதான் இருக்கிறது. நாள்தோறும் அது பல உயிர்களைப் பழி வங்கிவிடுகின்றது. அதனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இங்கே அஞ்சி நடுங்கிக் கொண்டி ருக்கிறோம். அதன் கர்ச்சனையைக் கேட்டு ஆடு மாடுகள் கூடச் சரியாகத் தீனி தின்பதில்லை. அவை களெல்லாம் மெலிந்து நலிந்து போய்விட்டன! என்று சொன்னான்.


ஹெர்க்குலிஸ் எழுந்து நின்றுகொண்டு, ‘அதை வதைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்!’ என்று கூறினான். அதைக் கேட்டதும், ஆயனும் கிழவியும் வியப்புற்று எழுந்து, அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஹெர்க்குலிஸ் மெதுவாகக் குடிசைக்கு வெளியே இறங்கினான். அவர்களும் அவனைத் தொடர்ந்து சென்று. அவன் குளித்துவிட்டு, திராட்சை ரசம் முதலியவை பருகிச் செல்லலாம் என்று அவனை வேண்டிக்கொண்டனர். ஆனால், அவன் மேற்கொண்டு அங்கே தாமதிக்க விரும்பவில்லை. யூரிஸ்தியஸைலப் பற்றிய நினைவோ, சீயஸ் கடவுளின் கட்டளையோ அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தானாகவே ஒரு பெருஞ்செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆவேசமுண்டாகிவிட்டது. கொடிய விலங்கின் பிடியிலிருந்து மக்களை எப்படியாவது விடுதலை செய்தாக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.


வானமே கருத்துவிட்டது. விண்ணில் மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவன் பல திராட்சைத் தோட்டங்களைக் கடந்து, மலைச்சாரலின் மேலே ஏறி நடந்து நிமீ வனத்தை அடைந்தான். அங்கே சென்றதும். அவன் சிறிது நேரம் அமைதியாக நின்று கவனித்தான். அப்பொழுது வெகு தொலைவில், கடல் அலைகள் கரையிலுள்ள பாறைகளின்மீது மோதுவது போன்ற ஓசை அவன் செவிகளில் ஒலித்தது. சிங்கத்தின் உறுமல்தான் அது என்பதை அறிந்து, அவன் சிரித்தான்.


வனத்தில், சீயஸ் தேவனின் கோயிலருகில், ஒரு பெரிய மரத்தடியில் அவன் நெடுநேரம் காத்திருந்தான். தன்னுடைய வில்லில் நாண் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து, அவன் கையில் ஓர் அம்பினையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்டான். வலத் தோளிலே கயிற்றில் கட்டியிருந்த அவனுடைய கதையும் தொங்கிக்கொண்டிருந்தது. நீண்ட நேரமாக ஓசை எதுவும் கேட்கவில்லை. வானத்தில் சந்திரன் உதயமாவதையும் எதிர்பார்த்துக்கொண்டு, அவன் நின்ற இடத்திலேயே நிலையாக நின்றான்.


சிறிது நேரத்திற்குப்பின் நிலவொளியில் ஒரு நிழல் அசைவதை அவன் கண்டான். நிமீ வனத்துச் சிங்கம் அவன் கண் முன்பு வந்துவிட்டது! பருத்துக் கொழுத்த உடல், கறுப்பும் பழுப்பும் கலந்த நிறம், தரையிலே புரண்டுகொண்டிருந்த வால் ஆகியவற்றுடன் அந்தச் சிங்கம், தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பிப் பார்த்துக்கொண்டும் , மேப்பம், பிடித்துக்கொண்டும் நடந்து வந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸ் உடனே வலிமை மிகுந்த ஒரு பானத்தை வில்லிலே தொடுத்து, அவ்விலங்கின் மீது விடுத்தான். அது சிங்கத்தின் விலாப்புறத்தில் பாய்ந்தது. ஆனால், அதன் தோலில் ஊருவிச் செல்லாமல், நழுவி, ஆடிக்கொண்டே தரையில் விழுந்து விட்டது. சிங்கம் அவன் நின்ற திசையைத் திரும்பிப் பத்துவிட்டுக் தரையில் கிடந்த அம்பை முகர்ந்து பார்த்தது. அதற்குள் ஹெர்க்குலிஸ் இரண்டாவது அம்பு ஒன்றை அதன் மீது ஏவினான். அது ‘விர்ர்ர்’ என்று ரீங்காம் செய்துகொண்டே வேகமாகப் பாய்ந்தது. ஆனால், சிங்கத்தின்மேலே அது தாக்கியதும், இரண்டாக முறிந்து கீழே வீழ்ந்துவிட்டது. அப்பொழுது சிங்கம், காடே அதிரும்படி கர்ச்சனை செய்துகொண்டு, அம்பு வந்த திசையை நோக்கிப் பாய்ந்து சென்றது.


ஹெர்குலிஸுக்கும் போராட வாய்ப்பு வந்து விட்டதென்ற மகிழ்ச்சியுடன் தன் மறைவிடத்திலிருந்து குதித்து, வெளியே சிங்கத்தை எதிர்கொண்டு ஓடினான். மக்களிலே தலைசிறந்த வீரனும், விலங்குகளிலே தலைசிறந்த சிங்கமும் எதிர் எதிராகத் தோன்றியக் காட்சி வியக்கத்தக்கதாயிருந்தது. சில விநாடிகள் சிங்கம் அவனை உற்றுப் பார்த்தது, அவனும் அதைக் கவணித்துக்கொண்டான். அவன்மீது பாய்வதற்காக அது பதி போட்டது. அதற்குள் அவன் தன் கதையை எடுத்து அதன் மண்டைக்கு நேராகக் குறிபார்த்து எறிந்துவிட்டான். ஆயினும், பிடரி மயிர் அடர்ந்திருந்த சிங்கத்தின் தலையில் தாக்கிய கதை அதற்கு ஒரு கேடும் விளைவிக்காமல் கீழே விழுந்துவிட்டது. எனினும், வல்லான் ஒருவன் தன்னை. எதிர்க்க வந்திருக்கிறான் என்பதைச் சிங்கம் உணர்ந்துகொண்டது. அதுவரை எந்த மனிதனும் அந்த அளவுக்கு அதை எதிர்த்து ஆயுதங்களை உபயோகித்ததில்லை. ஆகவே, அது மெதுவாகப் பின்னடைந்து புதர்களிலே பாய்ந்து மறைந்துவிட்டது. ஹெர்க்குலிஸுசும் தன் கதையையும். முரிந்து கிடந்த அம்புகளையும் எடுத்துக்கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்று சென்றான். அன்றிரவு அவன் மேற்கொண்டு சிங்கத்தை நாடிச் செல்லவில்லை.

அவன் இரவுப்பொழுதை ஒரு குடியானவன் விட்டிலேயே கழித்தான். அவன் யார் என்பதையும், அவன் மேற்கொண்டுள்ள பணியையும் தெரிந்து கொண்ட குடியானவன், மிக்க அன்புடன் அவனை உபசரித்தான். அங்கிருந்த பொழுது ஹெர்க்குலிஸ் நிமீ வனத்துச் சிங்கத்தின் கொடுமைகளைப் பற்றி மேலும் பல செய்திகளைக் கேள்விப்பட்டான். மறு நாள் காலை அவன் குடியானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லி, விரைவிலே சிங்கம் விண்ணுலகை அடையுமென்றும் தெரிவித்தான். பிறகு; அவன் வெளியே சென்று, ஆற்றில் நீராடிவிட்டு வந்து உணவருந்தினான்; பிறகு, ஒரு யாழ் கொண்டுவரச் சொல்லி, அதை மீட்டி, அருமையாக வெகுநேரம் பாடிக்கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கும். அவனுடைய இசையைக் கேட்பதற்குமாக மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். இசைக்குப் பின் அவன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான். அவன் ஓடுவதும், சாடுவதும், துள்ளுவதும், தாவுவதும், இரும்புச் சக்கரங்களை வீசுவதும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் கன்னியர்களுக்கும் ஆனந்தக் காட்சியாக இருந்தது.


அன்று நண்பகலுக்குப் பின் சிறிது நேரம் கழிந்து, ஹெர்க்குலிஸ் வனத்தை நோக்கிக் இளம்பினான். வழியிலே அவன் விசாரித்ததில், முந்திய நாள் இரவிலும் சிங்கம் ஒரு மனிதனைக் கொன்று தின்றதாகத் தகவல் தெரிந்தது. ஒரு மைல் தூரத்திற்கு அப்பால், ஒரு குன்றின்மேல், சிங்கம் மனித உயிரைப் பலி வாங்கிய இடத்தைச் சில ஜனங்கள் அவனுக்குக் காட்டினர். அங்கிருந்து அவன் சிங்கத்தைத் தேடிக்கொண்டு தனியாக நடந்து சென்றான். செடிகளும் கொடிகளும் பின்னி அடர்ந்திருந்த வனத்தில் அவைகளை ஊடுருவிக் கொண்டு அவன் வேகமாக மேலேறிச் சென்றான். அன்று மாலை நேரத்தில் அவன் சிங்கத்தின் குகையைக் கண்டுகொண்டான். மலையில் முன்புறமாக நீண்டிருந்த ஒரு பெரும்பாறையின் அடியில் அந்தக் குகை அமைந்திருந்தது. அதற்கு மேலும் கீழும் மரங்கள் அடர்ந்த வனம் பரவியிருந்தது. குகையைச் சுற்றிப் பல எலும்புகள் சிதறிக் கிடந்தன. அந்த இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

சிங்கம் குகையிலிருப்பதைக் கண்ட ஹைர்க்குலிஸ், மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டு, தன் கதையைக் கையிலெடுத்து அதன் நெற்றியை நோக்கிக்கி வீசினான். எழுத்தாணிக் கொண்டைகள் போல முடிச்சுகள் அமைந்திருந்த அந்தக் கதை சிங்கத்தின் புருவங்களை ஒட்டி பலமாகத் தாக்கியது. அதனால் அதிர்சியடைந்த சிங்கம், கடுஞ்சிற்றத்துடன் அவன் மீது பாய்ந்து வந்தது. அதை எதிர்பார்த்துத் தயாராயிருந்த வீரனும் சரேலென்று அதை நோக்கிப் பாய்ந்தான். சிங்கம் கால்களால் தன்னை பற்றிக்கொள்வதற்கு முன்னால் அவன் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக்கொண்டு, அதன் பிடரி மயிருக்குள் செலுத்தி, அதன் குரல் வளையை இறுகப் பிடித்துக்கொண்டான். அம்பும், வாளும் கதையும் வதைக்க முடியாத அந்த மிருகத்தைக் கைகளின் பலத்தாலேயே வதைக்க வேண்டும் என்று அவன் முன்பே திட்டம் செய்திருந்தான். அதன்படியே அப்போது குரல் வளையைப் பற்றிக்கொண்டுவிட்டான். அந்த நேரத்தில் அவனுக்கும் சிங்கத்திற்கும் மிகக் கோரமான யுத்தம் நடந்தது. சிங்கம் கால் பாதங்களால் அவனைத் தாக்கி நகங்களால், பிறாண்டிற்று. அவனுடைய உடலில் பலபகுதிகளிலிலிருந்து உதிரம் உதிரம் வடியத் தொடங்கியது. எனினும். சிங்கத்தின் உறுமலுக்கு ஏற்றபடி ஹெர்குலிஸும் உறுமுனான். வயிரம் பாய்ந்த பனைகளைப் போன்ற அவனுடைய கைகள், சிங்கத்தின் கழுத்தின் பிடியை விடவேயில்லை. இவ்வாறு நெட்நேரம் வனராஜனுக்கும் மானிட திலகத்துக்கும் மற்போர் நடந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸ் நீண்ட பெரு முச்சுவிட்டுக் கொண்டு, மிகவும் பலமாக அழுத்தி மடங்கலின் குரல்வளையை நெரித்துவிட்டான்! சிங்கத்தின் மூச்சு ஒடுங்கி, அதன் அங்கங்கள் சோர்ந்து, விழுதுகள் போல் தொங்கிவிட்டன!


மாண்டுபோன சிங்கத்தை அப்படியே தன் தோள்களின்மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, ஹெக்குலிஸ் வனத்தைக் கடந்து, மலையிலிருந்து இழே இறங்கினான். திராட்சைத் தோட்டங்களின் வழியாக அவன் நடந்து செல்லுகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவனைச் சூழ்ந்துகொண்டனர். ஆடியும், பாடியும், கூக்குரலிட்டும் அவர்கள் மகிழ்ச்சியோடு எழுப்பிய ஒலி செவிடுபடச் செய்வதாயிருந்தது. பெண்கள் ஆனந்தப் பெருக்கினால் அழுதனர்.


பலர் அவனை வழி மறித்து, ‘ஹெர்க்குலிஸ்! எங்களுடன் தங்கியிரு! பாலும், பணிகாரர்களும், திராட்சை மதுவும் ஏராளமாயிருக்கின்றன. அவைகளை அருந்திவிட்டுச் செல்லலாம். உன் உடலிலுள்ள புண்களுக்கும் மருந்து வைத்துக் கட்டுகிறோம்!’ என்று வேண்டினார்கள்.


ஆனால் ஹெர்க்குலிஸ் தன் நடையை நிறுத்தவில்லை. ‘அன்பர்களே! நான் நேராக மைசீனுக்குச் செல்ல வேண்டும்! சீயஸ் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதே இப்பொழுது என் கடமையாயுள்ளது! இடையில் எனக்கு ஒய்வென்பதில்லை!’ என்று அவன் கூறினான்.


எனினும் மக்கள் அவனைப் பிரிய மனமில்லாமல், அவனைத் தொடர்ந்து சென்றனர். அவன் ஒரு நாள் மாலை மைசீன் நகரத்துக் கோட்டை வாயிலை அடைந்தான். உடனே கோட்டைக் காவலன், மேள தாளங்களுடனும் புல்லாங்குழல்கள், எக்காளங்கள் ஊதிக்கொண்டும் பெருந்திரளான ஜனங்கள் வருவதாயும். அவர்களுக்கு நடுவே கோளரி ஒன்றைத் தோள்களிலே சுமந்துகொண்டு ஹெர்க்குலிஸும் நடந்து வருவதாயும் யூரிஸ்தியஸுக்குச் செய்தி அனுப்பினான்.

அவசர அவசரமாக யூரிஸ்தியஸ், தன் படைவீரரை அழைத்துப் பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு, அரியணை மீது அமர்ந்து, வெற்றி வீரனை வரவேற்க ஆயத்தமானான். திறந்திருந்த அரண்மனைக் கதவுகளைத் தாண்டி, ஹெர்க்குலிஸ் உள்ளே நுழைந்து, கொலுமண்டபத்தை அடைந்தான். அவன் தோள்களிலிலும், உடலின் விலாப்புறங்களிலும் சிங்கம் நகங்களால் கிழித்த வடுக்களிலிருந்து உதிரம் பெருகிக் கொண்டிருந்தது. சூட்டினாலும், அவன் எடுத்துக் கொண்ட சிரமத்தினாலும், வழி நடையாலும் அவனுடைய முகம் காய்ந்து சிவந்து போயிருந்தது. அவன் கண்கள் வெறி பிடித்தவை போல உருண்டு கொண்டிருந்தன. இப்படி உக்கிரமான தோற்றத்துடன் விளங்கிய அவனைக்காட்டிலும் அதிக உக்கிரமாக தோன்றிற்று அவன் தோள்களிலே தொங்கிக் கொண்டிருந்த நிமீ வனத்துச் செத்த சிங்கம்.


அரியணையில் அமர்ந்திருந்த யூரிஸ்தியஸ் பயத்தால் நடுங்கினான். அவன் முகம் வெளிறிப் போய்விட்டது. அவன் மெதுவாக எழுந்து, பின்னால் இருந்த படை வீரர்களிடையே சற்று மறைவாக நின்று கொண்டான்.


அந்தக் கோழையின் மனநிலையை அறிந்து, ஹெர்லிலிஸ் இடியிடிப்பது போல் நகைத்தான். சபா மண்டபத்தின் நடுவிலே நின்றுகொண்டு அவன் தன் தன் இரு கைகளிலும் சிங்கத்தின் உடலை மேலே தூக்கிக் கீழே வீசியெரிந்தான்.


எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்! உயிரோடு கர்ச்சனை செய்துகொண்டிருந்த எந்த சிங்கத்தோடு நான் மல்லாடினேனோ, சீவன்ற்ற அதன் உடலைக் கண்டு இனி நீங்கள் அஞ்சிக்கொண்டிருங்கள் என்று அவன் உரக்கக் கூவினான்.

தரையில் தடாலென்று விழுந்த சிங்கத்தைக் கண்டதும், யூரிஸ்தியஸ் சபா மண்டபத்தை விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்.


யூரிதியஸ், ஹெர்குலிஸ்.... இருவரில் நார் அரசன், யார் அடிமை? யூரிஸ்தியஸ் உலக முறைப்படி தலையில் மகுடம் அணிந்து அரசனாக விளங்கிய போதிலும், ஆலன் தன் கோழைத்தனத்தால் அடிமையைவிடக் கேவலமான நிலையை அடைந்தான். ஹெர்க்குலிஸ், தேவ கட்டளையால் அவனுக்குத் தொண்டு செய்ய நேர்ந்திருப்பினும், தன் வீரத்தாலும் பெருந்தன்மையாலும் அரண்மனையிலும், வெளியிலும், நாட்டிலுமே புகழ் பெற்று அரசனுக்கும மேலான பெருமையுடன் விளங்கினான்.


எவராலும் வதைக்க முடியாத சீயத்தை இரு கைகளாலேயே வதைத்துத் துாக்கி வந்த மானுட மடங்கலாகிய ஹெர்க்குலிஸுக்கு யூரிஸ்தியஸ் எப்படி நன்றி செலுத்தினான்? ‘இனிமேல் ஹெர்க்குலிஸ் கோட்டைக்கு வெளியே சென்றுவிட்டுத் திரும்ப வருகையில், அவனைக் கோட்டைக்குள்ளே வர அனுமதிக்க வேண்டாம்!’ என்று அவன் தன் காவலருக்குக் கட்டளையிட்டான்! நினைவிலும் கனவிலும் அவனுக்கு ஹெர்க்குலிஸைப்பற்றியே திகிலாயிருந்தது. அந்த வீரன் கோட்டைக்குள் வந்தாலே தனக்கு என்ன நேருமோ என்று அவன் கதிகலங்க வேண்டியிருந்தது. எக்காரணத்தாலாவது ஹெர்க்குலிஸ் நகருக்குள் புகுந்து கொலு மண்டபத்திற்கு வந்துவிட்டால், தான் ஓடி ஒளிந்து கொள்வதற்காக அவன் பூமிக்குள் பித்தளைத் தகடுகள் பதித்த ஓர் அறையை அமைக்கும்படியும் ஏற்பாடு செய்துகொண்டான். மண்டபத்திலிருந்து அந்தப் பித்தளை அறைக்குச் செல்ல ஒரு சுரங்க வழியும் அமைக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/3&oldid=1032764" இலிருந்து மீள்விக்கப்பட்டது