11.கும்பியெரிச்சல் படலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

11. கும்பியெரிச்சல் படலம்[தொகு]

(வரிகள்: 01-50)[தொகு]

... ... .... ....
.... .... .... .....
தீரா வழக்கும் சென்மப் பகையும் (15)
உற்றா ருக்குள் உண்டாக் கும்வழி
அப்பனைப் பிள்ளை அண்டவொட் டாவழி
பிள்ளையை அப்பன் பேணவொட் டாவழி
புருசனை மனைவி போற்றவொட் டாவழி
மனைவியைப் புருசன் மதிக்கவொட் டாவழி (20)
அண்ணனைத் தம்பி அடுக்கவொட் டாவழி
தம்பியை அண்ணன் தரிக்கவொட் டாவழி
மருமகனை மாமன் வஞ்சித் திடுவழி
மாமனை மருமகன் வதைத்துக் கொல்லும்வழி
குடியை முடிக்கும் கொடிய தீவழி (25)
அடிபிடி சண்டை அகலாப் பெருவழி
மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி;
எண்ணும்படியுடல் என்பெலாந் தெரியக்
கண்ணும் குழிந்து கன்னமும் ஒட்டி
வயிற்றுக் கின்றி வறுமையின் மெலிந்து (30)
என்போல்
நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி
வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி
இருள்வழி செல்பவர் இடறும் கல்வழி
கூகையும் ஆந்தையும் குடிகொளும் குகைவழி (35)
நெருஞ்சில் படர்ந்து நிரம்பிய முள்வழி
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ’மென்(று)
ஔவை சொல்மொழி அறியா மடவழி;
பெற்ற பிதாத்தன் பிள்ளை கட்குப்
பழியும் பாவமும் பற்றிய நோயும் (40)
அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி
ஒருகா சேனும் உதவாச் சதிவழி!
இது,
மக்கள் வழியென மதிக்க வெண்ணாது!
மருமக் கள்வழி யாகவும் மாட்டாது!
இருவழி கட்கும் இடைவழி யாய்வரும்
வழியிது போல்இவ் வையகத்(து) எங்கும்
உண்டோ? அம்மா! உண்டோ? அம்மா!
வீடு விற்று விளைநிலம் விற்று,
ஆடு மாடுகள் அனைத்தும் விற்று, (50)

(வரிகள்: 51-104)[தொகு]

குடிக்கும் செம்பு குழியலும் விற்று
பாத்திரம் பண்டம் பலவும் விற்று
தண்டை பாத சரங்களும் விற்று
காப்புக் காறை கடுக்கனும் விற்று
பதக்கம் சிற்றுருப் பாம்படம் விற்று (55)
தாலியை விற்றுப் பீலியை விற்று,
வக்கீல் சாமி மலரடி களிலும்
குமஸ்தா மாடன் கோவில் களிலும்
காட்சித் தெய்வச் சன்னிதி களிலும்
பழந்தேங் காய்கள் படைப்புகள் வைத்தும் (60)
வேண்டிய புகையிலை வெற்றிலை வைத்தும்
விதம்விதம் வேட்டிகள் முண்டுகள் வைத்தும்
சேலை தாவணி சீட்டிகள் வைத்தும்,
இன்னும் பலவாறு இவர்க ளிடத்து
முன்னம் கொண்ட கடன்களை முற்றும் (65)
குறைகூ றாது கொடுத்தும் முடிவில்
வழக்கை இழந்து வாய்மண் ணாகி
உண்ண உணவும் உடுக்கத் துணியும்
இல்லா தாகி, யாவரும் கைவிட
முற்றத் துறந்த முனிபுங் கவர்போல் (70)
பக்கப் பழுத்த பட்டினத் திடிகள்போல்
“உற்றார் சதமல, ஊரார் சதமல,
பெண்டிர் சதமல, பிள்ளையும் சதமல,
இப்பே ருலகில் யாரும் சதமல”
என்று கூறி இனித்தோ வாளைக் (75)
கஞ்சிப் புரையே கதியெனச் சென்று
பக்க மெங்கும் பரந்து சுற்றிச்
சுவான தேவர் துதித்து நிற்க
அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக்
காக்கைபா டினியர் கானம் பாட, (80)
பழஅடி யார்கள் பலரொடும் கூடி
வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு,
பட்டைச் சோறும் பாற்சோ றாக
ஒட்டுத் திண்ணை உறங்கிட மாக
இருப்பதை நோக்கி இரங்கி இரங்கி (85)
இழந்த்தை எண்ணி ஏங்கி ஏங்கி,
அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம்வழி-
ஐயோ, இவ்வழி ஆகாது ஆகாது!
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி-
மனிதர் செல்லும் வழியா யிடுமோ? (90)
... ... .... .... .... ....
.... ... .... .... .... ....
கற்றவர் உளரோ? கற்றவர் உளரோ?
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ! (95)
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில் (100)
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!!
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும்இந் நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!! (104)


வெண்பா[தொகு]

காரணவன்...தெப் போகல்யாணம் செய்வதெப்போ
வாரமிகு மக்களொடு வாழ்வதெப்போ- தாரணியில்
எல்லா ரையும்போல் இருப்பதெப்போ ....
.... ..... ..... ..... ..... ..... நாம்.


பதினொன்றாவது, கும்பியெரிச்சல் படலம் முற்றும்[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
6.நாகாஸ்திரப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்