1806/2. சுடரும் சோதியும்

விக்கிமூலம் இலிருந்து



சுடரும் சோதியும்


முன்னுரை :

இந்திய அரசாங்கத்தின் ஆதரவில் டாக்டர் சுரேந்திரநாத்துசென் அவர்களால் வரையப்பெற்று, மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாதின் முன்னுரையுடன் தில்லியிலிருந்து அண்மையில் வெளி வந்துள்ள '1857' என்ற ஆராய்ச்சிப் பெருநூல், 'சிப்பாய் புரட்சிக்கு வித்திட்டது வேலூர்ப் புரட்சியே,’ என்று சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறே இலண்டன் மாநகரிலிருந்து புறப்பட்டு உலகெங்கும் சுற்றும் தி லிசனர்' (The Listener) என்ற அரிய வார இதழின் 1957-ஆம் ஆண்டு மே மாத 28-ஆம் நாள் வெளியீடு, ஒரு நூற்றாண்டிற்கு முன் நடைபெற்ற வட விந்தியசிப்பாய் புரட்சியின் அடிப்படை அப்புரட்சி நடைபெறுவதற்கு ஐம்பத்தோர் ஆண்டுகட்குமுன்பே தமிழகத்தில் நடைபெற்ற வேலூர் புரட்சியில் புதைந்து கிடப்பதைப் புலப்படுத்துகிறது. வேலூர்ப் புரட்சியின் தனிச் சிறப்பைப் புலப்படுத்தும் வகையில், டாக்டர் சென் அவர்களின் ஆராய்ச்சி நூல் எடுத்த எடுப்பிலேயே-முதல் இயலிலேயே-'காரணங்கள்' என்ற தலைப்பில் வேலூர்ப் புரட்சியைப்பற்றி,

இரண்டு பக்கங்களில் இயம்புகிறது. அவ்வாறே தி லிசனர் பத்திரிகை 1806ல் தமிழகத்தின் வடவெல்லையில் வெடித்தெழுந்த புரட்சியின் சரித்திரச் சிறப்பை வலியுறுத்தும் வகையில், வேலூர்க் கோட்டையின் படத்தையும் அக்கோட்டையிலே எழுந்த எரிமலைக் குமுறலை ஆயுத பலத்தால் அடக்கிய ஆங்கிலத் துரைமகன் கில்லெஸ்பியின் (Gilespie) படத்தையும் சேர வெளியிட்டுள்ளதைச் சிந்திக்கச் சிந்தை குளிர்கிறது! ஆம் ஒருபுறம் ஆராய்ச்சி வேட்கையும் இன்னொரு புறம் கடந்த கால சாதனைகளை இன்றும் எண்ணி அடையும் இன்பமும் இறுமாப்பும் எழுகின்றன. ஆனால், ஒன்று : ஆங்கில ஆட்சி கலகலத்துப் போகும் வகையில், பேர் ஊர் தெரியாத எண்ணற்ற சிப்பாய்கள் வேலூரில் நிகழ்த்திய புரட்சியை நாமும் மறந்தோம்; நம் அரசாங்கமும் மறந்தது; மறந்து, வேலூரில் வெற்றித்தூண் எழுப்பி நன்றி பாராட்டும் கடமையையும் நழுவவிட்டு விட்டது. ஆனால், இலண்டன் பத்திரிகையாகிய 'தி லிசனர்' தன் ஆங்கிலச் சாதியின் ஆட்சியை நிலைநாட்ட அரும்பாடுபட்ட கில்லெஸ்பியின் உருவத்தை வேலூர்க் கோட்டையோடு இணைத்து வைத்துப் பார்ப்பதில், சாம்ராஜ்யத்தை இழந்த இன்றைய நிலைமையிலும் பெருமை கொள்கிறது! ஆளும் சாதிக்கும் அடிமைப்பட்ட சாதிக்கும் உள்ள வேறுபாடு இதுதான் போலும்!.

ஏன்?' பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்தின் தெற்கெல்லையில் தனது முழு மூச்சுடன் கொடுங்கோலாட்சி நடத்தியது; வீரத்தலைவர் பூலித்தேவரையும் வீரபாண்டியக் கட்டபொம்மனையும், அவன் அருமைத் தம்பியும் மாவீரனுமாகிய ஊமைத்துரையையும், சிவகங்கைச் சிங்கங்களாகிய சின்ன மருது, பெரிய மருது பாண்டியர்களையும் பலி கொண்டது. இச்சான்றோர்களின் தலைமையில் சுதந்தரப் போருக்கு வாளுருவி, வேலேந்தி, வளரி வீசி எழுந்த பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கொன்று குவித்து நாசமாக்கியது சுருங்கச் சொன்னால், சுதந்தர வீரர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணை - தென்பாண்டித் திருநாட்டைச் - சுடுகாடாக்கியது எனலாம். இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்தி, 1801ல் ஏகாதிபத்தியமே இறுதி வெற்றி கண்டது. ஆங்கிலப் பேரரசு நடுக்கமின்றி வேர் கொள்ளத் தொடங்கியது. அந்நிலையில் தமிழகத்தின் வடவெல்லையில் குறுநில மன்னர் பலர் செங்கோலோச்சி வந்தனர். எவர்க்கும் கைகட்டி வாழாது வாழ்ந்த அவர்கள் நோக்கையும் போக்கையும் கண்டு அஞ்சிய வெள்ளை ஆட்சி, அவர்களையும் அவர்கள் உடைமைகளையும் பட்டாள பலத்தால் பாழாக்கியது. தெற்கெல்லையில் தலைநிமிர்ந்து நின்ற சுதந்தர

வீரர்களின் கோட்டைகளைக் குப்பை மேடுகளாக்கியது போலவே தமிழகத்தின் வடவெல்லையில் வானளாவி நின்ற பாளையக்காரர்களின் கோட்டைகளெல்லாம் தரை மட்டமாக்கப்பட்டன. பேய்கள் போலப் பாய்ந்து நாட்டைப் பிடித்து அலைக்கழித்துச் சூறையாடிய வெள்ளையரைக் கண்டு வடவெல்லையிலே வாழ்ந்த தமிழர் நெஞ்சம், கொல்லன் உலைபோலக் கொதித்தது. சுற்றுச் சூழ்நிலை இவ்வாறு அமைய, வேலூர்க் கோட்டைக்குள்ளே தங்கள் பிறவிக் குணமாய் அமைந்த போர்ப்பண்பு காரணமாகவும் வயிற்றுக் கொடுமை காரணமாகவும் கும்பினிப்பட்டாளத்தில் சேர்ந்திருந்த கணக்கற்ற தமிழ் வீரர்கள் அயல் ஆட்சியை அதன் அடியும் அடிசார்ந்த மண்ணும் இல்லாதவாறு அழிக்கத் திட்டமிடுவதற்கான சூழ்நிலைகள் பல தோன்றின. அவசியமற்ற, அறிவற்ற ஆணைகளை எல்லாம் பிறப்பித்தார்கள் வெள்ளையதிகாரிகள். இந்துக்கள் இராணுவப் பயிற்சிக்கு வரும் பொழுது சமயச் சின்னங்களை அணிந்திருக்கக் கூடாதெனக் கட்டளையிட்டார்கள்; முகம்மதியர்கள் தங்கள் தாடிகளை முற்றிலும் களைந்துவிட வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மீசையைக் கத்தரித்து விட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்கள்; பசுவின் தோலாற் செய்யப்பட்ட குல்லாய்ச் செண்டுகளை அணிந்து கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்;

மேலும், சிப்பாய்கள் மார்பிலே சிலுவை போன்ற ஒரு சின்னத்தைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள். இவ்வுத்தரவுகளைக் கேட்டு முணுமுணுத்தார்கள்-முறையிட்டார்கள்-வெறுப்புக்காட்டினார்கள்-தமிழ்ச்சிப்பாய்கள். தங்கள் சமயப்பற்றையும் சுயமரியாதை உணர்ச்சியையும் ஏலம் கூற விரும்பாத அவர்கள் இதயம், எத்தனையோ முறை பணிந்து வேண்டியும், அறிவற்ற உத்தரவுகளை அகற்ற மறுத்ததுமன்றி, அறம் பிறழா வகையில் உள்ளக் கருத்துக்களே ஒளியாமல் கூறிய வீரர்களை அவமானப்படுத்தியும், கசையடி தந்தும் சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்திய வெள்ளை ஆட்சியைப் பழி வாங்கத் துடித்தது அதன் பயனே வேலூர்ப் புரட்சி.

எவ்வாறு? வேலூர்க் கோட்டையில் பெரிய தொரு புரட்சி மூளப்போகின்றது என்பதற்கான அறிகுறிகள் பல வகையிலும் விளங்கிய வண்ணம் இருந்தன. ஆம்! எரிமலை ஏற்கெனவே புகையத் தொடங்கிவிட்டது. ஆயினும், வெள்ளை அதிகாரிகள் அதை அறியத் தவறிவிட்டார்கள். 1806-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 10-ஆம் நாள் அதிகாலையில் சுதேசி சிப்பாய்கள் போர்க்கோலம் பூண்டார்கள்; துப்பாக்கிகளை இயக்கினார்கள். கண்ணாடியும் சீப்பும் விற்க வந்து, நயவஞ்சகத்தால் கர்நாடகத்தின் அரசியல் உரிமைகள் அனைத்தையும் கைப்பற்றிக்

கொள்ளையடிப்பதற்கென்றே கொடியுயர்த்திய கூட்டத்தைச் சின்னபின்னமாக்கின,வேலூர்ப் புரட்சி வீரர்கள் வீசிய வெடிகுண்டுகள். அம்மட்டோ! கோட்டைக்கொடி மரத்திலே பறந்துகொண்டிருந்த யூனியன் ஜாக்கும் இறக்கப்பட்டது; அயற்கொடி பறந்த இடத்தில், அவ்வமயம் வேலூர்க் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் திப்புச் சுல்தான் மைந்தர்களின் துணையால் கிடைத்த இந்தியக் கொடி ஆடிப்பறந்தது. புரட்சி தொடங்கியவுடனே கோட்டை முழுவதையும் தமிழ் வீரர்கள் தங்கள் வசமாக்கினார்கள்; ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த கோட்டையில், பறங்கியரால் சேர்த்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத்தளவாடங்களையும் மருந்துக் கிடங்குகளையும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் தங்கள் உடைமைகளாக்கிக்கொண்டார்கள் புரட்சி வீரர்கள். இந்திய மண்ணில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலூர்க் கோட்டையில் ஆரம்பமாகிய இராணுவப்புரட்சியின் சார்பில் வெடிக்கப்பட்ட குண்டுகளின் பேரொலி எழுந்த நான்கு மணி நேரத்திற்குள், வேலூர்க்கோட்டையிலிருந்த வெள்ளைத் துரைமார் அனைவரும் குற்றுயிராகக்கப்பட்டனர். அந்நிலையில் அது சமயம் வேலூரிலிருந்து பதினாறு மைல் தொலைவிலுள்ள ஆற்காட்டில் முகாமடித்திருந்த கர்னல் கில்லெஸ்பிக்கு செய்தி பறந்தது. அவன் தன் கீழிருந்த

சுதேசிப் பட்டாளத்தின் துணைகொண்டும், வேலூரில் மலைமேலுள்ள கோட்டையில் ஓடி ஒளிந்திருந்த வெள்ளைச் சிப்பாய்களின் துணை கொண்டும், பேய்வாய்ப் பீரங்கிகளின் துணை கொண்டும் பெருமுயற்சி செய்து, புரட்சி வீரர்களால் அடைக்கப்பட்டிருந்த வேலூர்க் கோட்டைக்கதவுகளைப் பிளந்து எறிந்து, உள்ளே நுழைந்தான். காலைப் பத்து மணிக்கெல்லாம் வேலூர்க் கோட்டை கொலைக்களமாயிற்று! ஏகாதிபத்திய வெறியர்கட்கும் சுதந்தர வேட்கையினர்க்குமிடையே நேருக்கு நேர் போர் நடைபெற்றது. அந்தோ! அப்பொழுது நிகழ்ந்த பயங்கரக் காட்சிகளை யாரால் சித்திரித்துக் காட்ட இயலும்? சுதந்தர வீரர்கள், இராணுவ பலம் மிக்க வெள்ளைப் படைகளாலும் அவர்களுக்குத் துணையாக ஆர்க்காட்டிலிருந்து வந்த சுதந்தர உணர்ச்சியற்ற சுதேசிப் பட்டாளத்தாலும் சுட்டுப் பொசுக்கப்பட்டார்கள். அதன் விளைவாக வேலூர்க் கோட்டை வீர மாந்தரின் தியாக இரத்தத்தால் நனைக்கப்பட்டுப் புனித பூமியாயிற்று. வேலூர்க் கோட்டையில் நடைபெற்ற புரட்சி நெடுங்காலமாகத் திட்டமிடப்பட்ட புரட்சிதான் ; அக்கோட்டையிலே காவலில் வைக்கப்பட்டிருந்த மைசூர் மன்னர் பரம்பரையினராலும், கோட்டைக்கு வெளியே இருந்த பேட்டை மக்களாலும் ஆதரவளித்து உருவாக்கப் பெற்றதுதான். என்றாலும், அப்புரட்சி தோற்றதற்குக் காரணம் எதிர்ப்பாராத இடையூறுகளும், ஆர்க்காட்டிலிருந்து வந்த சுதேசிப்பட்டாளத்தின் தேசத் துரோகச் செயலும், பலம் வாய்ந்த ஆங்கிலேய பீரங்கிகளின் ஆற்றலுமேயாகும். ஆனால், வேலூரில் 1806ல் நிகழ்ந்த இச்செயல் மறைந்தாலும், இச்செயலுக்குக் காரணமான சிந்தனை மறையவில்லை. அதன் மலர்ச்சியே 1857ல் நடைபெற்ற வடவிந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சி. வேலுர்ப் புரட்சி சுடர்; வடவிந்தியச் சிப்பாய்களின் புரட்சி சோதி. இவ்வுண்மையை 1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வெளியிடப்பட்ட 'மாடர்ன் ரிவ்யூப்' பத்திரிகையில் ஹரிபாத செளத்திரி எழுதியுள்ள புலமை சான்ற வரலாற்றுக் கட்டுரை அழகாக ஆராய்ந்து விளக்குகிறது. அவர் ஆராய்ச்சியின் முடிவு வருமாறு:

"1857ல் நடைபெற்ற பெரும்புரட்சியைப் போலவே வேலூர்ப் புரட்சியும் கொதிப்படைந்திருந்த மக்களின் ஆத்திரத்தாலேயே மூண்டது. ஆனால், தீர்க்க தரிசனம் நிறைந்த-நெறியான-தலைமையில்லாததாலும், சரியான ஒத்துழைப்பும் திறமையான திட்டமும் இல்லாமையாலும் பீரிட்டெழுந்த மக்களின் ஆத்திரம்-சிதறிக் குலைந்தது. 1806ல் வேலூர்ப்புரட்சியின் போது 'மாவீரன் திப்புவின் மைந்தர்க்கு அரசுரிமை அளிப்போம்!' என்ற கூக்குரல் வானளாவ எழுந்தது. அவ்வாறே 1857ல் பாராளும் உரிமையிழந்த கடைசி முகலாய

அரசன் 'பகதூர் ஷாவை அரியணையில் அமர்த்துவோம்' என்பதே புரட்சியாளரின் ஆவேச முழக்கமாய் விளங்கியது. கொழுப்புத் தடவிய தோட்டாக்களைப்பற்றிய மத சம்பந்தமான உணர்ச்சி, 1857ல் நடைபெற்ற புரட்சியை ஆட்கொண்டது; புரட்சிக்கு இறுதித் தூண்டுகோலாய் அமைந்தது. அவ்வாறே வேலூர்ப் புரட்சியும், தோலாலாகிய குல்லாய்ச் செண்டுகள் தரிப்பதைப்பற்றிய பிரச்சினையிலேயே இறுதியாக வெடித்தெழுந்தது. ஆனால் இவ்விரு பெரும்புரட்சிக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளையும் நாம் உணர வேண்டும். வேலூர்ப் புரட்சி பின்னாளில் மூண்ட பெரும்புரட்சியைப் போல நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பரவி இலட்சக்கணக்கான மக்களைச் சுதந்தரப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லும் போராக உருக்கொள்ளவில்லை. மேலும், அப்புரட்சியின் பெருமை வெள்ளைச் சரித்திர ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் ஏதோ ஒரு சின்னஞ்சிறு உதிரிச் சம்பவமாக-மத உணர்ச்சிகள் காரணமாகத் தோன்றி மறைந்த சிறு நிகழ்ச்சியாக-ஒதுக்கி ஒளிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகிய ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், வடவிந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சி நடைபெற்றபோது, இங்கு ஒரு பெருந்தொழிற்புரட்சியைக் கண்ட திருநாடாய்த் திகழ்ந்ததே. வெள்ளையர் வாணிபத்தில் அந்நாட்டில் உற்பத்தியான பொருள்

களை ஏற்றுமதி செய்வது ஒரு முக்கிய கூறுபாடாய் இருந்தது. ஆனால், வேலூர்ப்புரட்சி நடைபெற்ற காலத்தில் இந்த நிலை சிறிதும் இல்லை; மேலும், வடவிந்தியப் பெரும்புரட்சி நடைபெற்ற காலத்தில் நாட்டில் அமைக்கப்பட்டிருந்த பலம் பொருந்திய போக்குவரவு சாதனங்களாகிய இரயில்வே, தந்தி, தபால் முதலியன இல்லை. எனவே, இந்தியச்சிப்பாய்களின் பெரும்புரட்சிக் காலத்தில் அப்புரட்சி நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பரவி, பெரியதொரு தேசிய எழுச்சியாக உருக்கொண்ட இந்தச் சூழ்நிலை வேலூர்ப் புரட்சி தோன்றிய காலத்தில் சிறிதும் இல்லை.”

இவ்வாறு பாரதத்தின் தெற்கேயும் வடக்கேயும் நடைபெற்ற இருபெரும்புரட்சிகளைப் பற்றியும் ஒப்பு நோக்கி ஆராயும் வரலாற்று அறிஞர் ஹரிபாத செளதிரி அவர்கள், தம் கட்டுரையின் முதலிலும் முடிவிலும் ஐயந்திரிபின்றிக் கூறும் உண்மை ஒன்று உண்டு. அது 1857க்கு வித்திட்டது 1806ல் நடைபெற்ற வேலூர்ப்புரட்சி என்பதே.

முடிவுரை இவ்வாண்டு ஆகஷ்டு 15ல், வடவிந்தியாவில் நடைபெற்ற இந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அப்புரட்சி விழாவிலே பாரத மக்கள் என்ற முறையில் மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளும் நாம், அப்புரட்சிக்கு

வித்திட்ட பெருமை தமிழினத்திற்கு உண்டு என்று பெருமை கொள்வோமாக! உள்ளத்தளவில் பெருமை கொள்வதோடு ஓய்வு கொள்ளாது, முதல் இந்திய இராணுவப் புரட்சி நடைபெற்ற வேலூரில்-நூற்றுக்கணக்கான வெள்ளைக் கொடுங்கோலர்களுக்குக் கல்லறையாகவும் பல நூறு சுதந்தர வீரர்களுக்குப் பலி பீடமாகவும் விளங்கிய வேலூர்க்கோட்டையில் 1806ல் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டு மாண்டு மடிந்த பேர் ஊர் தெரியாத பெருமை மிக்க தமிழ் வீரர்கட்கு நன்றி உணர்ச்சியுடன் நினைவுத்தூண்-வெற்றித்தூண் எழுப்பிப் புகழெய்துவோமாக! 'பாரதமே, நின் விடுதலைக்காக வடவிந்தியாவில் எழுந்த புரட்சிப் பெருஞ்சோதித்கு உணர்வும் ஒளியும் உயிரும் கொடுத்த சுடர்க் கொடியாள், நீ பெற்ற நங்கையருள் தலை மகளாகிய தமிழணங்கு , 'என்று கூறி, விடுதலை பெற்ற இந்தியா ஊழியையும் வென்று வாழ வாழ்த்தி வணங்குவோமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=1806/2._சுடரும்_சோதியும்&oldid=1066999" இலிருந்து மீள்விக்கப்பட்டது